Skip to Content

16. உறுத்தல்

எக்ஸ்கர்ஷன், சுற்றுலா என்ற வார்த்தையை என்னிடம் சொல்லாதே, கடந்த பதினைந்து வருஷமாக இந்தச் சொல்லையே என்னால் கேட்டுக் கொள்ள முடியவில்லை. என்னை எக்ஸ்கர்ஷனுக்கு அனுப்புவதாகச் சொல்லி அப்பா ஏமாற்றியதை இவ்வளவு நாள் கழித்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் இந்தச் சொல்லைக் கேட்டுவிட்டால் எனக்கு இரண்டு நாளாகும் எரிச்சல் அடங்க. இன்றும் அது மனதில் ஒரு உறுத்தலாகவே இருக்கிறது. அரைப் பரீட்சையில் கணக்கில் 75 மார்க் வாங்கினால் எக்ஸ்கர்ஷனுக்கு அனுப்புகிறேன் என்றார் தகப்பனார். உயிரைவிட்டுப் படித்தேன். முழு ஆர்வமும் பலன் கொடுத்தது. 80 மார்க் வாங்கினேன். வீட்டில் வந்து சொன்னவுடன் அனைவரும் கேலி செய்தார்கள், அப்பா சும்மா சொன்னார் என்றார்கள். எனக்கு மக்குப் பட்டம் கட்டினார்கள். அதுவே உண்மை என்று தெரிந்ததும் அளவு கடந்த கோபமும் ஏமாற்றமும் வந்தது. எக்ஸ்கர்ஷனுக்குப் போக முடியவில்லை என்பதே முக்கியமில்லை. என்னை தகப்பனாரே ஏமாற்றிவிட்டார் என்பது மனதை உடைத்துவிட்டது. நாளாக நாளாக நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை விட ஏமாந்துவிட்டேன் என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்னும் அது முடியவில்லை. அன்று பெரிய கோபம் வந்தது. கோபம் வேகமாகி, வேகம் எரிச்சலாகவும் விரக்தியாகவும் மாறி யாரையுமே நம்பக்கூடாது என்று நினைத்து, நம்பிக்கை என்பதே போய், உலகமே சூன்யமாகி விட்டதைப் போல தோன்றி ஒருவாறு அடங்கி, இன்று மனதில் உறுத்தலாக அப்படியே நின்றுவிட்டது என்பது போன்ற அனுபவம் பலருக்குண்டு. அது போன்ற உறுத்தல் நாளாவட்டத்தில் குறைவது வழக்கம். ஒரு சில விஷயத்தில் அதிகரிப்பது வழக்கம். வயதாக வயதாக தாங்கிக்கொள்ள முடியாமலும் போவதுண்டு. மரணப் படுக்கையில் அவை மனக்கண்முன் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு. கரைந்து போய் விலகினால் பிரச்சினையில்லை. அது பொது, உள்ளே மறைந்திருந்து வளர்ந்து மேலே வந்து இரவில் சிம்ம சொப்பனமாகவும், பகல் பின்னணியிலிருந்துகொண்டு செய்யும் காரியங்களை எல்லாம் சிறப்பிழக்கச் செய்து, முக்கியமானவற்றை அடக்கமுடியாத வேகத்தால் கெடுத்து பல சமயம் தன்னிலை இழக்கச் செய்வதுண்டு. அதுபோல் பிரச்சினையாகி மனத்தைப் பொறுத்தவரையிலோ, அல்லது செயலோ, சிரமமாகிவிட்டவர்களுடைய பிரச்சினையை ஆராயும் கட்டுரை இது.

செய்யும் காரியங்கள் நல்ல பலனைத் தவறாது கொடுத்தால் பெரியவர்களானாலும், சிறுவர்களானாலும் அதை achievement சாதனை என்கிறோம். செய்வது சாதாரண வேலையாக இருக்கலாம். ப்யூஸ் போன பின் அதைப் போட முயன்றால் அது வேலை செய்வது திருப்தி அளிக்கும். தினசரி விளையாடும் வாலி பால் ஜெயித்தால் சந்தோஷம். வந்த விருந்தாளி உங்கள் வீட்டுச் சாம்பார் நன்றாக இருக்கிறது என்றாலும், பள்ளிக்கூடத்தில் வகுப்பு டீமில் (team) தன்னைச் சேர்த்துக் கொண்டாலும், நாலு பேர் பேசும்பொழுது நமக்கு அதிக கவனமிருந்தாலும், நண்பர்கள் நினைவாக நமக்குக் கடிதம் எழுதினாலும், தாயார் ஒரு பேச்சில் என் பக்கம் பேசினாலும், நண்பன் மற்றோர் இடத்தில் நம் கண்ணுக்குப் பின்னால் நமக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டதை கேள்விப்பட்டாலும், நம்மைப் போற்றி ஒரு சொல் வருவதைக் கேட்டாலும், மகன் பாசமாக இருப்பதைப் பார்த்தாலும், உறவினர் நம் நலம் கருதி செயல்பட்டாலும், வெற்றி தேவை என்ற பொழுது மற்றவர்கள் நம்மை நாடினாலும், நம் வட்டாரத்தில் புகழ் எனும்படி நல்ல பெயர் பரவுவதைக் கண்ணுற்றாலும், நாணயமாக நாம் நடந்து கொண்டதை மற்றவர் பாராட்டினாலும், நமக்கே நம் நாணயத்தை வெளியிடும் சந்தர்ப்பம் வந்தாலும், போகுமிடங்களில் மற்றவர்கள் நம்மைக் கவனித்தாலும், செய்யும் வேலைகள் வெற்றியாகும் என்ற நம்பிக்கை இருந்தாலும் வாழ்வு சிறப்பாக இருக்கும். இவை வாழ்வின் சிறப்புகள். சிறு விஷயங்களில் இப்படியிருந்தால் மனம் நிறைவு பெறும். பெரிய விஷயங்களில் அது போலிருந்தால் அவை வாழ்வின் நிறைவுகளாகும்.

ஒரு சிலருக்கு சிறப்பும், நிறைவும் அமையும். அவை மட்டும் அமையும், யாரோ ஒருவருக்கு குறை மட்டும் அமையும். அவர்கள் குறைவு. நிறைவும், குறையும் கலந்திருப்பதே பெரும்பாலும் உள்ளது. எத்தனை நிறைவிருந்தாலும், மனம் குறையை மட்டும் நினைத்துக் குறைப்படும். அதில் ஒரு குறை உறுத்தலாக மாறும். உறுத்தல் மறைவதுண்டு. வளர்ந்து பூதாகாரமாக பயமுறுத்துவதுமுண்டு. மேலே சொன்ன சிறப்புகளுக்கெதிரானவைகள் அக்குறைகள். அதிலிருந்து எழுவன அவ்வுறுத்தல்கள். மனத்திற்கு மறதியிருப்பதால் மனிதன் வாழமுடிகிறது. தனக்கு நடந்ததெல்லாம் ஒருவருக்கு நினைவிருந்தால் வாழ்க்கை சாத்தியமாகாது, பாரமாகிவிடும். சில சமயம் பொறுக்க முடியாமல் போய் நரகமாகிவிடும். நாமே மறந்துவிட்டதை, மறக்கப் பிரியப்படுவதை, மனம் மறக்காமலிருந்தால் சாதாரண நிகழ்ச்சியும் உறுத்தலாகும், எவராலும் மறக்க முடியாத நிகழ்ச்சிகளும் உண்டு. அவற்றை மறப்பவரும் உண்டு.

சிறு வயதில் தகப்பனாரை இழந்தவர் அதை மறக்க முடியாது. தாயாரை இழந்தவனுக்கு அனைவரும் அதை நினைவுபடுத்திக் கொண்டிருந்தால், இழப்பைவிட நினைவே அதிக கஷ்டத்தைக் கொடுக்கும். ஒன்பது ரூபாய் சம்பளம் வாங்கும் சேவகன் மகன் பெட்ரூம் லைட்சிம்னியை ஒண்ணே முக்காலணா-10 பைசா-வுக்கு வாங்கி வந்ததை தகப்பனார் ஆட்சேபித்து ஒரு பைசா அதிகமாகக் கொடுத்துவிட்டு ஏமாந்து விட்டான் என்று பிரம்பால் நையப் புடைத்ததை அவரால் 55-ம் வயதிலும் மறக்க முடியவில்லை. கடைக்குப் போய் எது வாங்குவதானாலும் முதல் நினைவு வருவது சிம்னிதான். இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த அதிகாரி வழக்கத்திற்கு மாறாக என் கீழ் வேலை செய்யும் அதிகாரிகள் முன்னிலையில் எனக்குத் திறமையில்லை என்று சொல்லியது தினமும் ஒரு முறையாவது எரிச்சலுடன் நினைவு வருகிறது. மைத்துனர் நிச்சயதார்த்தத்தில் என்னை அலட்சியம் செய்தது எனக்குப் பொறுக்க முடியவில்லை. எழுந்து வந்துவிட்டேன். இந்த 10 ஆண்டுகளாக அவர்கள் வீட்டுப் பக்கம் போனதில்லை. என்றாலும் அந்த அலட்சியத்தை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. நினைத்தால் கோபம் வருகிறது. மைத்துனனுடைய அலட்சியத்திற்காக மனைவியை 25 ஆண்டுகள் தாய் வீட்டிற்கு அனுப்பாமல், "அவர் பிணத்தைத்தான் என் மனைவி பார்த்தாள்'' என்று இறந்த பிறகே அனுப்பினார் ஒரு பெரிய மனிதர்.

வெறுப்பு அநேக காரணங்களால் ஏற்படும். காரணமேயில்லாமலும் ஏற்படும். ஒருவகை செல்வந்தருக்கும், இயல்பான கருமிகளுக்கும், தன்னிடம் பணம் எதிர்பார்க்கிறார் அடுத்தவர் என்பது முதல் பார்வையிலேயே தெரியும். அதனால் வரும் வெறுப்பு நிலைக்கும். தூய்மையான ஆபீசரிடம் பணம் கொடுக்க முனைபவர் மீதும், நல்ல குணமுள்ளவரிடம் நடத்தை குறைவுள்ளவர் தவறான பார்வை படும் பொழுதும் ஏற்படும் வெறுப்பு ஆழ்ந்து நிலை பெறும். அகல மறுக்கும். "கெட்டிக்காரன், எவனையும் ஏமாற்றவிட மாட்டான்'' என்று பொறுமுபவருக்கும் வெறுப்பு ஏற்படும். வெறுப்பு என்ற தலைப்பு அன்பு என்பதற்கு எதிரானது என்பதால் அதைப் போலவே விசாலமானது. இக்கட்டுரையில் மனம் புண்பட்டு அதனால் ஏற்படும் வெறுப்பை மட்டுமே கருதுகிறேன். என் தகப்பனார் இறந்தபின் பெரியப்பா நிர்வாகத்தில் பெரியம்மாவும், அவர் பிள்ளைகளும் எங்கள் சொத்தை அனுபவித்து எங்கள் மேல் அதிகாரம் செலுத்தியதில் நடந்த நிகழ்ச்சிகள் என் மனதில் நிரந்தரமாக வெறுப்பை ஏற்படுத்தி விட்டது என்பது ஒருவகை.

எந்தப் படிப்பை முடித்துவிட்டு வெளியில் வந்தால் உத்தியோகம் கிடைக்காதோ, அப்படிக் கிடைத்தால் 22ரூ. மாத சம்பளம் வருமோ அப்படிப்பில் முதல்வனாக வந்தேன். அதற்குப் பரிசுண்டு. நிர்வாகம் எனக்கு அதைக் கொடுக்கவில்லை. இரண்டாம் ரேங்க் வந்தவனுக்கும் கொடுக்கவில்லை. அவர்கள் இனத்தைச் சார்ந்த பாஸ் பண்ண முடியாத பையனுக்குப் பாஸ் போட்டு பரிசு கொடுத்தார்கள். அவன் வெளியில் 25 ரூ. சம்பளத்திற்குப் போனான். எங்களுக்குச் சொந்த பெரிய ஸ்தாபனமிருந்தது. அதன் தலைவராக என்னைச் சிறுவயதில் நியமித்தார்கள். சொந்த முயற்சியால் B.A. பட்டம் பெற்றேன். 16 மொழிகளைக் கற்றேன். பேரும் புகழும் வந்தது. M.A. யும் பெற்றேன். Ph.D. யும் பெற்றேன். பல்கலைக் கழக பேராசிரியர் பதவிக்கு என்னை அழைத்தார்கள். நான் போட்ட நிபந்தனைகளை ஏற்று இரட்டைச் சம்பளமும் கொடுத்தார்கள். பல்கலைக்கழக சிண்டிகேட்டில் மெம்பரானேன். என் வகுப்புத் தோழன் முதன் மந்திரியானான். பின்பு பல்கலைக் கழகத் துணைவேந்தரானேன். என் பரிசைத் தட்டிக் கொண்டு போனவன் அதே பாணியில் சப்பைக்கட்டால் முன்னுக்கு வந்து பிரபலமாகி பிறகு அவனிருந்த சிறு ஸ்தாபனத்தின் தலைவராகி, அந்த ஸ்தாபனம் திவாலாகி இன்று பெயர் தெரியாது ஒன்றுமில்லாதவனாக இருக்கிறான். என்றாலும், பரிசை இழந்த பொழுது எழுந்த உறுத்தல் இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. என் கையால் ஆயிரம் பரிசுகள் கொடுத்துவிட்டேன். உறுத்தல் மங்கிவிட்டது எனலாம். என்றாலும் ஒரு சமயம் நினைத்தால் இத்தனை ஆண்டுகட்குப் பின்னும் ஆத்திரம் வருகிறது. அதனால் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெறுப்பு நியாயமானது. வாழ்க்கையில் இதை அகற்ற வழியில்லை. ஓரளவு மங்கும். சிலருக்கு மறையும்; முழுவதும் அகலும் நிலையை அளிக்கும் வகை வாழ்வில்லை. இதுபோன்ற வெறுப்பு உற்பத்தியாகும் நிலைகள் நூறு வகையானவை. ஒவ்வொன்றையும் விளக்கினால், விளக்கம் சம்பந்தபட்டவருக்கு ஜீவனுள்ளதாக இருக்கும். வெறுப்பைவிட கடுமையானது துரோகம். பொதுவாக நண்பனுடைய துரோகம், சகோதரனுடைய துரோகம் தாங்க முடியாது. தாயே துரோகம் செய்வதுண்டு. தந்தையும் அதற்கு விலக்கில்லை. உடன்பிறந்தவரும், பெற்றவரும், நாம் பெற்றெடுத்தவரும் திருமணத்தால் கணவன் அல்லது மனைவி என வந்தவரும் இணைபிரியா நண்பரும் துரோகம் செய்வதுண்டு. பலனுக்காகத் துரோகம் செய்வது, பாரபட்சத்தால் நடப்பது, சிறு சௌகரியத்திற்காக நம் பெருவாழ்வைக் கெடுப்பது, கெடுப்பதற்குத் துணையாக இருப்பது, கண்ணை மூடிக்கொண்டு ஒரு காரியம் செய்து நமக்குத் துரோகமாக முடிந்தபின், செய்ததை Prestige மரியாதைக்காக வலியுறுத்தி நம் வாழ்வைக் கெடுப்பது, அதனால் தானும் பின்னால் அழிவோம் என்ற அறிவில்லாதது, உயிரைக் கொடுத்து காப்பாற்றியவருடைய உயிரை எடுத்தால் அது மனதிற்கு இதமாக இருப்பதால் அதைத் தவறாது செய்வது, துரோகம் செய்வதில் ஆசைப்பட்டு அதை தவறாது செய்யும் இயல்பால் செய்வது போன்ற அநேக விதமானவை உண்டு. இவற்றையெல்லாம் அனுபவித்தவர் அதை மறப்பதுண்டு. மீண்டும் அவருடன் ஆதாயத்திற்காகச் சேர்வதுண்டு. அவருடன் மீண்டும் சேர்ந்து அடுத்தவருக்குத் துரோகம் செய்வதுண்டு. அது போன்ற பலவகை விநோதங்கள் மனித வாழ்வில் எல்லா மட்டத்திலும் உண்டு.

அத்துரோகம் மனதில் நின்று, அதை நினைத்தால் எரிச்சலாகவும், அவரைப் பார்த்தால் ஆத்திரமாகவும், பொதுவாக உறுத்தலாகவும் மாறி நம் இன்றைய வாழ்வையும் அதன் செழிப்பையும் நிர்ணயிக்கும் திறன் பெற்றால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதே நம் கரு.

குடும்ப வாழ்வில் உடன்பிறந்தவருக்கு உண்மையில்லாமல் unfaithful இருப்பது, தாம்பத்திய வாழ்வில் அடுத்தவர் நம்ப முடியாத சுபாவமுள்ளவராக அமைவது, பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்படாத செயல்முறை, ஐந்து வயதிலேயே குழந்தைகளுக்கு அப்பா, அம்மாவை நம்பமுடியாது என்ற தெளிவை ஏற்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுபவர் மனதில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நின்று உறுத்தலாக மாறும். அது எளிதில் போகாது.

Insensibility தவறு செய்கிறோம் என்ற உணர்வேயில்லாமலிருப்பது, மற்றவரை உதாசீனம் செய்வது, அந்த அலட்சியத்தால் அவர் உணர்வு கருகுவது, பிறரைக் குறைவாக நினைப்பது, செய்யும் காரியங்களுக்குத் திறமை போதாது, கெட்ட பெயர், ஊரெல்லாம் கெட்டவன் என்று பெயர் வாங்குவது போன்றவையும் மனதில் உறுத்தலை ஏற்படுத்தும்.

8 வயது பையன் முகம், பால் மணம் மாறாதது home work வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று ஆசிரியர் வெய்யில் நிற்கவைத்தார். மயக்கம் போட்டு விழுந்தான். அத்துடன் ஜுரம் வந்தது. இப்படியும் ஓர் ஆசிரியரா? அவரும் மனிதனா? நடந்து பல வருஷங்களாயின. என் பையன் அதை மறந்துவிட்டான். அந்த ஆசிரியருக்குக் கொஞ்சமும் சொரணையில்லை. பாடம் எழுதவில்லை, தண்டித்தேன் என்கிறார். மனிதனா, மிருகமா என்றே தெரியவில்லை. இந்நிகழ்ச்சி என் மனதில் பதிந்துவிட்டது இன்றும் ரணமாக இருக்கிறது, என்பது அடிக்கடி பல இடங்களில் நடப்பது.

வீட்டுக்கு வந்து பத்திரிகை வைத்துவிட்டுப் போனார் அந்த மனிதர். விசேஷத்திற்குப் போனேன். வா என்றும் கூப்பிடவில்லை. அதிலிருந்து யார் அழைத்தாலும் போனால் விசாரிப்பார்களா என்ற ஓர் எண்ணம் மட்டுமே எழுகிறது. வாழ்க்கையில் அந்த அவமானத்தை நான் அனுபவித்ததில்லை.

என் தகப்பனார் அவர் மைத்துனரை இதுவரை 4 அல்லது 5 முறையே சந்தித்திருப்பார். என் தலைவிதி. நான் காலேஜில் சேர இருக்கும் சமயம் எங்கிருந்தோ அந்த மனிதன் வந்தார். பிள்ளைகளைப் படிக்க வைத்தால் பின்னால் மதிக்க மாட்டார்கள் என்று என் காதுபடச் சொன்னார். அதனால் என் தகப்பனார் மனம் மாறி விட்டார். அவரை மாற்ற பெரியபாடாகி விட்டது. நானும் காலேஜில் சேர்ந்தேன். பெரிய உத்தியோகம் செய்து ஓய்வு பெற்றேன். அவர் பெயரைக் கேட்டாலேயே எரிச்சல் வருகிறது. இப்படியும் ஒரு மனுஷன் உண்டா? இன்று புதியதாகக் கோபம் வருகிறது. அவரைத் தேடிப் போய் திட்டலாம் என்று தோன்றுகிறது என்பது ஓர் அனுபவம்.

உற்றவரை மரணத்தால் இழந்தவர், கொடுமைக்காளானவர், ஏமாந்துபோனவர், தொடர்ந்து தோல்வி பெறுபவர், பிறரால் பாதிக்கப்பட்டவர், விரும்பியவரை மணக்க முடியாதவர், விரும்பியவரை மணந்து விரும்பத் தகாததைக் கண்டவர், பரிசை இழந்தவர், ஸ்தானத்தை இழந்தவர், பதவியைப் பறிகொடுத்தவர், தந்திரங்களுக்குப் பலியானவர், சிறுமைக்காக எள்ளி நகையாடப் பட்டவர், கடமைகளை முடிக்க முடியாதவர், உடன்பிறந்தவரால் துரோகம் செய்யப்பட்டவர், அறிவில்லாமல் நம்பி ஏமாந்தவர், ஓய்வு பெற்றபின் பாராட்டு விழாவை ஒரு வருஷம் கழித்துப் பெற்றவர், நம்பிக்கையுடன் நிர்வாகத்தை யாரிடம் கொடுத்தோமோ அவர் கணக் கெழுதாமல், பணத்திற்கு எல்லாம் நாமே பொறுப்பு என்று பேசியதால் ஊரில் கெட்ட பெயர் வாங்கியவர், ஜுரம் உச்ச நிலையிருக்கும்பொழுது குழந்தையைப் பார்க்க வந்தவர், அது அண்ணன் குழந்தை என்று தெரிந்தவுடன் பார்க்காமல் திரும்பிப் போனதால் மனம் புண்பட்ட அண்ணன் குடும்பம், புறக்கணிக்கப்பட்ட தாயார், தாயாரால் புறக்கணிக்கப்பட்ட ஒரு குழந்தை, பிறரிடம் நன்றியைச் செலுத்த மறந்தவர், கடமையில் தவறியவர், வாங்கியதைக் கொடுக்க மறந்து அடுத்த தலைமுறையில் நினைத்தவர், தன் வக்கீலால் துரோகம் செய்யப்பட்டவர் ஆகியவர் மனத்தில் உறுத்தல் ஏற்பட்டு தங்கிவிட்டால், அது பிற்காலத்தில் உயிர்பெற்று அதிகமாக உறுத்தினால் அதற்கு வாழ்க்கையிலும், குடும்பத்திலும், மனோதத்துவ ஆராய்ச்சியிலும், பூஜையிலும், மந்திரத்திலும் முழு பரிகாரம் இல்லை. சிலசமயம் ஓரளவு பரிகாரம் கிடைப்பதுண்டு.

ஓரளவு பரிகாரம் என்பது கால்பகுதி, அரைவாசி, முக்கால் பாகம் என்ற அளவில் கிடைக்கும். அதற்குள்ள பரிகாரத்தை அளிப்பது படிப்பு, அனுபவம், நாட்டுவழக்கம் மாறுவதாகும். படிப்பு புத்தியை விசாலப்படுத்தி பிரச்சினையின் கடுமையைக் குறைக்கும். அனுபவம் விவேகத்தைக் கொடுப்பதுடன் நாம் மட்டும் தனியில்லை, அனைவருக்கும் உள்ளது என்பதால் நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர்த்தி மனத்தைத் தணிக்கும். நாட்டில் பழக்கம் மாறிவிட்டால் எதை அன்று காது கொடுத்துக் கேட்க முடியாதோ அதை இன்று அனைவரும் ஏற்றுக் கொள்வதால் பழக்கமாகி ரணத்தைப் பெரும்பாலும் ஆற்றும். அன்னை முறைகள் இவைகளால் அதிகப் பலன் தரும். என்றாலும், இவற்றைக் கடந்த நிலையில் பிரார்த்தனை, சமர்ப்பணம், திருவுருமாற்றம் பிரச்சினையை முழுவதும் விலக்கும், அல்லது அழிக்கும். ரணம் இருந்ததே சுவடு தெரியாமல் செய்யும், முடிவில் எது பிரச்சினையாயிற்றோ அதுவே நமக்குப் பெரிய ஆயுதமாகும் வகையில் மாறும்.

சரித்திரம், வாழ்க்கை வரலாறு இவற்றைப் படித்தால் அங்கு நம் மனத்தை உறுத்தும் நிகழ்ச்சிகளைக் குறிக்கும் செய்திகளிருக்கும். அதனால் இது நமக்கு மட்டுமல்ல என்று தெரிந்தவுடன், அதுவும் பெரிய மனிதர்கள் வாழ்விலும் இப்படி நடந்துள்ளது என்பது ஓர் ஆறுதலாக இருக்கும். ஓர் இலட்சியவாதி தன் மகனே இலட்சியத்திற்கு எதிராகப் பேசுவதால் புண்பட்டால் மகாத்மா காந்தியின் பிள்ளையைப் பற்றி படித்து அவன் குடியில் மூழ்கியிருந்தான் என்று தெரிந்தவுடன் புண்பட்ட மனம் பாதி தெளிவு பெறும். மகாத்மாவுக்கே அந்நிலை என்றால் நாம் பொறுத்துக் கொள்ளவேண்டியதுதான் என மனம் உணரும். தன் உத்தியோகத்தை ஒரு முறை இழந்து வேறு பெரிய உத்தியோகத்திலிருக்கும் பொழுது "உத்தியோகம் போய்விட்டது'' என்பதை மனம் ஏற்றுக்கொள்ளாமல் தவிப்பவர் மேல் நாட்டு புள்ளி விவரங்களைப் பார்த்து தன் போன்ற படிப்புடையவர் சேர்ந்த உத்தியோகத்திலிருந்து மாறாதவர் 7 சதவீதம் என்று படித்தால், இந்தப் புள்விவரம் அவருக்குப் பெரும் ஆறுதல் அளிக்கும். நிலைமை தெரியாமல் புழுங்கும் மனம், நிலைமையை அறியும்பொழுது தெளிவை ஏற்றுக்கொள்ளும். அதற்குப் படிப்பு உதவும். படிப்பின் வகைகள் பல. இலக்கியம் பெரும் துணை செய்யும். புள்விவரம், வாழ்க்கை அனுபவம், முக்கிய நிகழ்ச்சிகள், பிரயாணக் கட்டுரைகள், தினசரி பத்திரிகை, தொழில் சம்பந்தமான பத்திரிகை போன்று சுமார் 50 வகையான படிப்புண்டு. படிப்புக்குப் பலனுண்டு. படிப்பை விட அதிகப் பலன் தருவது அனுபவம். பிறர் அனுபவம் கேட்டறியலாம். சொந்த அனுபவம் சிறந்தது. படிப்பு புத்தியை விசாலமாக்கும். அனுபவம் உணர்ச்சியை பக்குவப்படுத்தும். ஒரு முறை பரீட்சையில் தவறியதை நினைத்து உருகியவர், தான் யாரை உயர்ந்த அறிஞர் என்று கருதி மெச்சுகிறாரோ அவர் பல முறை தவறியவர் என்று அறிந்ததும், சமாதானம் அடைவார். அது போன்ற பல நிகழ்ச்சிகள், அதுவும் பெரிய மனிதனுடைய வாழ்வில் நடந்தவற்றைக் கேள்விப்பட்டால் மனம் அமைதியுறும்.

தனக்கு பத்து வயதுச் சிறியவன் தன்னைப்பற்றி மற்றொருவரிடம் பேசும் பொழுது பெயரைச் சொல்லிப் பேசியதை கேட்டுக்கொண்டு வந்து, அது மனதில் உறுத்தலாக உள்ளவர், வெளிநாடு சென்று திரும்பியவுடன் பழைய உறுத்தலுக்கு வலுவில்லை என்று காண்பார். அங்கு முதலாளி தகப்பனார், பெரியவர்களை 10 வயது குழந்தையும் பேர் சொல்லிக் கூப்பிடுவதைக் கண்டு நாட்டில் மாறிய முறையைப் பார்த்தபின் அவர் மனம் ஓரளவு சமாதானம் அடைகிறது.

படிப்பாலும், அனுபவத்தாலும், நாட்டில் பழக்கம் மாறுவதாலும் நம் சொந்த உறுத்தல் குறையும். பெரும் அளவும் குறையும். இதே நிலையில் அன்னையை வணங்குபவர்கள் நிலை என்ன? அன்னையை வணங்குபவர் மனதில் உறுத்தலிருந்தால் அது முதல் தானே வலுவிழக்கும். பிறகு அது மனதில் எழும் சந்தர்ப்பங்கள் விலகும், மறந்தே போய் விட்டது போல் தோன்றும். பிறகு அதன் உண்மை தெரிந்து மனம் உறுத்தலை மறக்க முன்வரும். எந்தச் செய்தி உறுத்தலை அளித்ததோ அந்தச் செய்தியே தவறு என்று இன்று அறிந்து உறுத்தலின் அடிப்படையே விலகும். எவர் நம்மை அவமானப்படுத்தினாரோ அவரே நம்மிடம் வணங்கி வரும் நிலை ஏற்படும். அவரே வந்து பழைய நிலைக்கு நேர் எதிராக நடக்கவும் நேரும். இதுபோன்று பல நிலைகளிலும் நல்ல மாற்றங்கள் தானே ஏற்பட்டு அவரைப் பொருத்தவரை அற்புதம் என்று நினைக்கும் வகையில் வாழ்வு தொடர்ந்து மாறும். அவற்றையும் மீறி ஓரளவு உறுத்தல் ஏதோ ஒரு சமயம் இருப்பதுண்டு, கனவில் வருவதுண்டு, அவை பிரார்த்தனையால் அழியும். இடைவிடாத பிரார்த்தனையால் சுத்தமாக அழியும். அதையும் தாண்டி trace ஒரு துளி இருப்பதும் உண்டு. அன்னை சக்தி அதிகமாகப் பலிக்க படிப்பு, அனுபவம் ஏராளமாக உதவும். முடிவாக அன்னை சக்திதான் செயல்படுகிறது, அது முழுமையாகச் செயல்படுகிறது என்பதற்கு ஒரு முத்திரை உண்டு. எந்த நிகழ்ச்சி குறையை ஏற்படுத்தியதோ, அதே நிகழ்ச்சி புகழ்ச்சிக்குக் காரணமாகி நிலைமை தலைகீழாக மாறுவது திருவுருமாற்றமாகும். அதுவே அன்னை நமக்கு முடிவாக அளிப்பது. வாழ்வுக்கு அந்தத் திறன் பொதுவாக இல்லை. இல்லவேயில்லை என்று சொல்ல முடியாது. வாழ்வில் லட்சத்திலொருவருக்கு நடப்பது அன்னையைப் பூரணமாக ஏற்றுக் கொள்பவர் அனைவருக்கும் முழுவதும் உண்டு.

சுதந்திரம் வந்தவுடன் ஓர் எளிய தொண்டருக்கு மந்திரிபதவி வந்தது. அவரைச் சொந்த ஊருக்கு அழைத்து உள்ளூர் பெரிய மனிதர் வீட்டில் விருந்து வைத்தார்கள். நடு வீட்டில் அவர் முதன்மையாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தவுடன், அவரை மீறி வருத்தம் வந்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். இதே வீட்டில் எத்தனைமுறை என்னை திண்ணையில் உட்கார வைத்துச் சாப்பிடச் சொல்லியிருக்கிறார்கள். இன்று எனக்கு விருந்து என்று சொன்னார். பதவியோ, செல்வமோ வந்து வாழ்வில் இது போன்ற பெரிய மாற்றம் ஏற்படுவதுண்டு.

அன்னையிடம் நடப்பவை ஓரளவு வாழ்க்கையை ஒட்டியிருக்கும். பெரும்பாலும் மாறியிருக்கும். மார்வாரி ஒருவர் பக்தருக்குக் கூட்டாளியானார். தொழிலில் ஒரு மெஷின் விஷயமாக மார்வாரி சிறிய மெஷினை வாங்கவேண்டும் என்று தொழிலைப்பற்றி அறியாமல், தன் பணபலத்தால் பேசிய பொழுது பக்தர் அந்தச் சிறிய மெஷினால் போட்ட முதலை எடுக்க முடியாது என்றார். பம்பாயிலிருந்து ஒரு தொழில் அதிபர் வந்திருந்தார். மார்வாரியை அழைத்துக்கொண்டு தொழில் அதிபர் பக்தரைப் பார்க்க வந்தார். அடுத்த 5 வருஷத்தில் என்ன வியாபாரம் ஆகும் என்று guarantee திட்டவட்டமாகச் சொன்னால் பெரிய மிஷினை வாங்கலாம் என்றார் தொழில் அதிபர். பக்தர் எளியவர். அதிபர் செல்வந்தர். மறுத்துப்பேசும் நிலையில்லை என்பதால் 5 வருஷம் கழித்து நடப்பதற்கு இப்பொழுது உத்தரவாதம் கேட்டார். ஓராண்டாயிற்று. பக்தருக்கு நடந்த விஷயம் உறுத்தலாயிற்று. நிலைமை மாறி பெரிய மெஷினே வாங்கிய பொழுதும் பக்தர் மனம் அடங்கவில்லை. ஓராண்டு கழித்து தொழில் அதிபர் பக்தரை தேடிவந்தார். பக்தருக்கு அடையாளம் தெரிந்தது. அதிபருக்கு தெரியவில்லை. தன்தொழில் பிரச்சினைக்கு ஆலோசனை கேட்டு வணக்கமாகப் பேசி 2000 ரூ. காணிக்கை கொடுத்துச் சென்றார். இது அன்னை பக்தர்களுக்கு அன்னை செய்வதாகும்.

என்ஜினீயர் பக்தரை 50 நடை நடக்க வைத்தார். வீட்டில் பார்க்க மறுத்தார். தூரத்திலுள்ள ஆபீஸுக்கு வரச்சொன்னார். காரியம் இரண்டாண்டாகத் தடையாக இருந்தது. ஒரு சமயம் ஸ்ரீ அன்னையைப்பற்றி என்ஜினீயர் கேள்விப்பட்டார். மாறினார். எந்தப் பக்தரை நடக்கவிட்டாரோ அவரிடம் இப்பொழுது அவசியமில்லாமல் 50 நடை நடந்தார். அன்னை, விஷயத்தை தலைகீழாக மாற்றுவார்கள். உறுத்தலுக்கு இடம் இருக்காது.

படிப்பால் நாம் அறிவது அதிகம். அனுபவத்தால் அறிவது அதைவிட அதிகம். மந்திரத்தால் பல விஷயங்களை அறியலாம். இவையெல்லாம் உறுத்தலைக் குறைக்கும். ஜாதகப்படி, சுபாவப்படி, சமூக நியதிப்படி, ஒரு காரியம் இப்படித்தான் நடக்க வேண்டுமானால், அதை அறிந்தபின் உறுத்தல் குறையும்.

கூட வேலை செய்பவர் நெருங்கிய நண்பராக இருந்தவர் எதிரியாகி ஆபத்தை தனக்கு உற்பத்தி செய்வதை அறிந்த பக்தர் மனம் வேதனைப்பட்டார். எதிரியின் கொடுமைக்காளானார். நிலைமையை சமாளித்து தன்பக்கம் முழுவெற்றி பெற்ற பின்னும் உறுத்தல் ஓரளவிருந்தது. கடந்த வாழ்வை சமர்ப்பணம் செய்தபொழுது பழைய நிகழ்ச்சிகளின் கோர்வை மனதில் பட்டது. அப்பொழுது தனக்கு குழந்தை பிறந்தபொழுது எதிரி வாழ்த்துத் தந்தி அனுப்பியது நினைவுக்கு வந்தது. தந்தி அது ஒன்றுதான் வந்தது. தந்தி அடிக்கும் சந்தர்ப்பமில்லாதபொழுது ஏன் தந்தி அனுப்பினார் என்று இன்று யோசனை செய்ததில் அவர் குழந்தையில்லாதவர் என்பதும் நினைவு வந்தது. உடன் வேலை செய்யும் மற்றவர்கள் பார்த்து விசாரித்தபொழுது அவர் மட்டும் தந்தி அடித்ததின் விசேஷம் அவருக்கு குழந்தையில்லை என்பதே. பிறருக்குக் குழந்தை பிறப்பது வழக்கமான செய்தி. பிள்ளையில்லாதவனுக்கு அது பொறாமையைக் கிளப்புவது. தன் பொறாமையை மறைக்க அதிகப்படியாகப் பாராட்டுகிறான் என்று தெரிந்தது, அத்துடன் நண்பர் எதிரியானதும் அதேசமயம் என்று புரிந்தவுடன் பல ஆண்டுகளாக மனதிலிருந்த உறுத்தல் பெரும்பாலும் அடங்கியது. பிள்ளையில்லாதவனுக்கு பிள்ளையிருப்பவனெல்லாம் எதிரி என்பது சட்டம்.

எதிரியின் வாயால் கூட என்னை கெட்டவர் என்று சொல்ல மாட்டார்கள் என்பவருண்டு. அவருக்கும் சிரமங்கள் வரும்.

நாட்டில் நிலைமை மாறி நம் மனதிற்கு உறுத்தலானதை மனம் ஏற்றுக்கொள்வது முதல் நிலை மாற்றம். அனுபவத்தால் மாற்றம் ஏற்படுவது அடுத்த நிலை. அறிவால் ஏற்படும் மாற்றம் இருப்பதில் உயர்ந்த மாற்றம்.

ஆன்மிகத்தால் ஏற்படும் மாற்றமும், அன்னையால் ஏற்படுவதும் தலை சிறந்த மாற்றங்களாகும். ஒரு தொழிலாளி மிகவும் தொந்தரவு கொடுக்கிறான் என்றால் அதைச் சமாளிக்க சட்டத்தாலும், சாதுரியத்தாலும் பல மார்க்கங்களுண்டு, ஆன்மிக சட்டப்படியும், அன்னை முறைப்படியும் அவனே சிறந்த தொழிலாளி. அவனுடைய சிறப்பை நம் மனம் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், அவன் மாறி, அவனுடைய நிலையும் நம்முடைய நிலையும் பொது நிலையும் மாறி, அவனுடைய சிறப்பு தொந்தரவாக வெளிவராமல் ஆதரவாக வெளிப்படும் என்பது அன்னை சட்டம். அவனே இனி தொழிலுக்குச் சிறந்த காவல்.

அன்னை சட்டப்படி உறுத்தல் உயர்வானவர்களுக்கு மட்டும் வாழ்க்கை பரிசாகக் கொடுப்பது. சாதாரணமாக அதை ஏற்றுக்கொண்டால் அது உறுத்தலாகவே இருக்கும். ஓரளவு குறையும் அல்லது அதிகமாகும். இது உறுத்தலல்ல. ஒரு பெரிய விஷயத்தை தெய்வம் நமக்குக் கொடுப்பதை நம் சிறிய புத்தி உறுத்தலாகக் காண்கிறது. எனது புத்தியை ஆன்மிக விசாலம் அடையச் செய்தால் அது எனக்குப் புரியும் என்ற முடிவை எடுத்தால், அதற்குரிய மனமாற்றம் மேல்மனத்திலும், ஆழ்ந்த மனத்திலும் ஏற்பட்டால், நிலைமை மாற ஆரம்பிக்கும். தொடர்ந்தும் மாறும். உறுத்தல் உந்தலாக மாறும். உயர்வாக மாறும். கண்ணுக்கெதிரேயுள்ள இப்பெரிய உண்மையை எப்படி இவ்வளவு நாள் அறியாமலிருந்தேன் என நினைக்கும்படி இருக்கும்.

அறிவு, அடக்கம், "தவறு முழுவதும் என்னுடையது மட்டுமே'' என்ற கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் அனாதையாகப் போனது, ஆதியில்லாதவனை அடைவதற்காக என்று விளங்கும். மனிதத்தாய் இல்லாதது, தெய்வ அன்னையை அடைவதற்காக என்று தெரியும். நாமே அனைவருக்கும் தாயாக அன்பு செலுத்தும் தகுதியைத் தரவே அன்னை அன்று தாயை விலக்கி தாயன்பின் பெருமையை உணர வைத்தார் என்று விளங்கும். சமூகத்தில் மட்டத்தில் பிறந்தது சமூகத்தில் தலைவனாவதற்கே என்று விளங்கும். எல்லோராலும் ஒதுக்கப்பட்டது அவர்களை விட்டு விலகி உயர்மட்டத்திற்கு வரவேண்டும் என்பதற்காக என்று விளங்கும். அன்னை தன்னை சச்சிதானந்தமாக அறிவுறுத்தவே அன்று உறுத்தலாக வாழ்வில் வந்தார் என்பது விளங்கும்.

* * *



book | by Dr. Radut