Skip to Content

18. கோபம்

ஸ்ரீ அரவிந்தர் கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை. இருமுறை கோபம் வரும் போலிருந்தது, அதையும் அடக்கிக் கொண்டார்'' என்று அன்னை கூறுகிறார். பொதுவாக தபஸ் செய்பவர்களுக்கு அதிகக் கோபம் வரும். மனித சுபாவத்திலுள்ள கோபம் இயற்கையானது. அதை தவம் மூலம் வெளிப்படுவதைத் தடுத்தால் அதிகமாகும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி. இயற்கையாக கோபம் தானே அழிவதில்லை. சிலருக்கு அதிகமாகவும், மற்றவருக்குக் குறைவாகவுமிருக்குமே தவிர, எவருக்கும் கோபமே வராது என்று சொல்ல முடியாது, கோபமே வரக்கூடாது என்றவுடன் நமக்கு தர்மபுத்திரரின் நினைவு வருகிறது. "எனக்குக் கோபம் வரும். நான் வெளியில் காண்பிப்பதில்லை. அதனால் எனக்குக் கோபம் வராது என்று மற்றவர்கள் நினைக்கின்றார்கள்'' என்று தருமர் சொல்கிறார்.

சாதாரண மனிதன் கோபப்படாவிட்டால், சீக்கிரம் அனைவரும் அதைப் புரிந்துகொள்வார்கள். உடனே அதற்கடுத்தாற் போல் அதற்குத் தகுந்த மாதிரி அவனை நடத்துவார்கள். அதாவது மற்றவர்களிடம் காண்பிக்காத குறைகளை அவனிடம் காண்பிப்பார்கள். அவனைச் சற்று மட்டமாக நடத்த முயல்வார்கள். அதற்கும் பேசாமலிருந்தால், அடுத்த கட்டத்திற்குப் போவார்கள். ஏதாவது ஓர் இடத்தில் அவன் கோபப்பட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை என்றால் அவனுக்கு ஆபத்து. இதுபோல் 7வது படிக்கும் ஒரு பையனை கேலி செய்ய ஆரம்பித்த நண்பர்கள், படிப்படியாகத் தொந்தரவை அதிகமாக்கியதால், அவன் பள்ளியைவிட்டே நின்று விட்டான். கோபம் வராவிட்டால் ஒருவன் சமூகத்தில் மனிதனாக வாழ முடியாது. வாழ்ந்தாலும் மரியாதையுடன் வாழமுடியாது. பலமான மனிதனாயிருந்து கோபத்தை காட்டக் கூடாது என்று முயலும் பொழுதும், அவனை அழிக்க சமூகம் முயலும். உண்மையிலேயே பலமில்லாத மனிதனுக்கு கோபம் வரவில்லை என்றால் அவனை சமூகத்தில் அடுத்த கட்டத்திற்குத் தள்ளிவிடுவார்கள். ஓர் ஆபீஸில் குமாஸ்தாவாக ஒருவர் அப்படியிருந்தால் மற்றவர்கள் நடைமுறையில் ஒரு பியூன் போல் நடத்துவார்கள். குடும்பத்திலும் அதுபோன்ற ஒருவரைப் பெரும்பாலான குடும்பங்களில் வேலைக்காரன் போல் நடத்துவார்கள்.

கோபம் வந்தால்தான் மனிதன் உயிரோடு இருக்கலாம். மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதனால் கோபம் உயர்ந்ததாகாது. வலிமையும், இனிமையும் இணைந்து கோபம் வராதவர்களுண்டு, அவர்கள் அரிது. அவர்கள் நிலையுயர்ந்தது. சாதாரண மனிதனுக்குக் கோபம் ஒரு கேடயம்; தற்காப்புத் தருவது.

கோபத்திற்கு வலிமையுண்டு, அதனால் அதைப் பயன்படுத்தி காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். முதலில் அது சௌகரியமாக இருக்கும். பின்னால் அது தொந்தரவாக முடியும். பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் கோபத்தைப் பற்றிக் கூறியவற்றை எடுத்துச் சொல்லி தேவையான இடங்களில் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

ஒரு சிறுவன் அவன் வயதிற்கு மீறிய அனுபவமுள்ள அபிப்பிராயத்தைச் சொன்னால் அது அவனுடைய கருத்தல்ல, பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தது என்று நாம் அறிகிறோம். இப்படிப்பட்ட கருத்து இந்தச் சிறுவனுடையதில்லை என்று எளிதில் அறியலாம். கோபம் வரும் பொழுது சிலசமயம் அளவு கடந்த வேகத்துடன் வருகிறது. அதனால் அது நம்முடைய சக்திக்கு மீறியது என்பது தெரிகிறது. நம்முடைய சக்திக்கு மீறி வேகத்துடன் கோபம் நம்முள்ளிருந்து எழுவதால், அது சமயம் இது நம்முடையதல்ல, வெளியிலிருந்து நம்முள் நுழைகிறது என்று நாம் அறியவேண்டும் என்கிறார் பகவான். இயற்கையின் சக்தி பிரவாகமாக நம்முள் நுழைந்து நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. நம் ஆன்மாவினுடைய சக்தியல்ல அது. இயற்கையில் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி என்று நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

வெளியிலிருந்து கோபம் உள்ளே வருவது உண்மையானால், ஏன் சில சமயம் கோபம் வருகிறது. சிலருக்கு மட்டும் வருகிறது, எல்லா சமயத்திலும், எல்லோருக்கும் கோபம் ஏன் வருவதில்லை என்ற கேள்வி எழுகிறது. கடையில் 100 விதமான பொருள்கள் விற்கின்றன. நாம் அவற்றுள் 60, 70 பொருள்களை உபயோகப்படுத்த முடியும். நம்மிடம் அவற்றுள் 10, 20 பொருள் வாங்க பணமிருக்கும்பொழுதும் நாம் 2 அல்லது 3 பொருள்களை மட்டுமே வாங்குகிறோம். கடையில் ஏராளமான பொருள்கள் இருந்தாலும், நாம் அத்தனையையும் வாங்குவ தில்லை. நமக்கு உபயோகப்படக் கூடியவை அனைத்தையும் வாங்குவதில்லை. அந்த நேரம் எந்தப் பொருள் தேவையோ, அதை மட்டும் வாங்குகிறோம்.

அதே போல் உலகில் ஏராளமான எண்ணங்களும், உணர்ச்சிகளும் உலவினாலும், அவை நம்முள் நுழைவதில்லை. பலவித எண்ணங்களுடன் நம் மனம் தொடர்பு கொள்ளாததால் அவை எப்பொழுதும் நம்முள் வருவதில்லை. எந்த எண்ணங்களை வரவேற்க நம் மனம் பயிற்சியுடையதாக இருக்கின்றதோ அவை மட்டுமே நம்முள் வருகின்றன. எந்த அளவில் அவை நம்முள் வரலாம் என்பது நம் மனத்தின் அன்றைய நிலையைப் பொறுத்துள்ளது. மனிதன் இப்படி உள்ளே வருபவற்றைத் தன் சுபாவம் என அறிகிறான். அது உண்மையில்லை. அதை அவனால் மாற்ற முடியும், தடுக்க முடியும். அவற்றின் பிடியில் மனிதனில்லை. அவனுடைய தீர்மானத்திற்கு அவை உட்பட்டுள்ளன.

எனவே அதிகக் கோபம் வரும் எவரும், தன் கோபத்தைக் குறைக்க வேண்டுமென்றாலும், அறவே அழிக்க வேண்டு மென்றாலும், அதற்குரிய முயற்சியை மேற்கொண்டால் பலிக்கும். கடைத்தெருவுக்குப் போனால், தன்னை மீறி தனக்குத் தேவையானவை, தேவையில்லாதவைகளை வாங்குபவரைப் பார்க்கிறோம். இது தேவையில்லை என நமக்குப் புரிகிறது. அவர் நான் என்ன செய்வேன், கடைக்காரன் கொடுத்து விட்டான் என்கிறார். வாங்குவதோ, வாங்காமலிருப்பதோ கடைக்காரன் முடிவில்லை, அவர் கையிலிருக்கிறது என்று நாம் அறிவோம்.

அதேபோல் கோபம் வெளியிலிருந்து நம்முள் நுழைந்தாலும், அதைக் கட்டுப்படுத்துவது நம் கையிலுள்ளது.

சைத்திய புருஷன் என்பது ஆன்மா, ஆன்மாவின் பிரதிநிதி. நாம் நம்மை ஆன்மாவில் இருத்திக் கொண்டால் அதற்கு விவரம் புரியும். ஒரு கோபமான சூழ்நிலை ஏற்பட்டால் மனம் கொதிக்கும், உணர்ச்சி பொங்கும், கை கால் துடிக்கும். இது இவற்றின் தன்மை, திட்டியவனை மனம் திட்டச்சொல்லும். உணர்ச்சி அவனை பழிவாங்கச் சொல்லும், நம்மை மீறி உடல் அவனை நோக்கி விரையும், கை தானாக ஓங்கும். ஆன்மாவிலிருந்தால், நாம் மற்றவர் கோபப்படும்பொழுது அவரை நிதானமாகப் பார்ப்பது போல் பார்க்க முடியும். எதிரியின் தப்பு தெரிவது போல், நம் குறையும் தெரியும். ஆன்மா கொதிக்காது, பொங்காது, துடிக்காது. வெளியிலிருந்து கோப உணர்வு நம்முள் நுழைவதை ஆன்மா பார்க்க முடியும். ஒரு துக்க வீட்டிற்குப் போனால் நுழைந்தவுடன் இதுவரை நம்மில் இல்லாத துக்கம் நம்முள் நுழைவதை நாம் காண்பது போல், கோபம் வெளியிலிருந்து நம்முள் வருவதைப் பார்க்கலாம். அதனால் தடுக்கலாம், அதனால் கோபம் மறையும்.

சாந்தம், அன்பு என்பவை மனிதனிடமும் உள்ளவை. இவற்றுக்கு தெய்வத்தின் திறன் ஏற்பட்டால் அவை அளவு கடந்தவையாக (infinite peace, infinite love) மாறி தெய்வத்திற்குரிய சாந்தமாகவும், தெய்வீக அன்பாகவும் ஆகின்றன. அவையிருந்தால், கோபம் தானே கரைந்து விடுகிறது. சாந்தமானவர்களுக்கு வரும் கோபம் சீக்கிரத்தில் மறைந்து விடுகிறது. அன்பானவர் மீது வரும் கோபமும் நீடிப்பதில்லை.

கடுமையான சொல், கோபம் போன்றவை மனிதனுடைய வீரியகுணங்களால் உருவானவை. அவை உடலில் ஆழ்ந்து பதிந்திருப்பதால், அவற்றை மாற்றுவது கடினம். விரதத்தாலோ, மனஉறுதியாலோ அவற்றை வெல்ல முடியும். அது சிலாக்கியம். இதை விரைவாகச் செய்ய முடியாவிட்டால், அதற்காக மனம் ஒடிந்துவிடக்கூடாது. சைத்திய புருஷனாக ஆன்மாவைத் தொடுவதும், இறைவனை நம்முள் காண்பதும், இது போன்ற குறைகளை - கடும் சொல், கோபம் - அழிப்பதைவிட எளிது. ஆன்மாவைத் தொட்டு நம் வாழ்வின் ஆட்சியை அதன் கீழ் கொண்டுவந்து விட்டால், இக்குறைகள் தானே கரைய ஆரம்பிக்கும்.

கோபம் ஒருவரை வந்து ஆட்கொண்டால் என்ன செய்வது என அன்னை விளக்குகிறார். அமைதியாக இருந்தால் கோபம் நம்மை அசைக்க முடியாது என்பது ஓர் ஆன்மிக உண்மை. அமைதி உள்ளுணர்வுக்கு வலிமை அளிக்கிறது. வலிமை பெற்ற உள்ளுணர்வால் கோபத்தை அழிக்கமுடியும். அமைதியால் கோபத்திலிருந்து விலக முடியும், கோபத்தை விலக்க முடியும், ஆனால் அழிக்க முடியாது. இம்முறைகள் எல்லா உணர்வுக்கும் பொதுவானவை. 10 சந்தர்ப்பங்களில் 9 முறை பலிக்கும், 10 முறையும் பலிப்பதில்லை என்றால் அது முறையின் குறையல்ல. முறைக்குரிய அனைத்து நிபந்தனைகளையும் நாம் பின்பற்றுவதில்லை என்பதால் 9 முறை பலிக்கின்றது. ஓர் உணர்வுக்கு வடிவம் கொடுத்தால் அந்த வடிவம் உயிர் பெறுகிறது. அந்த வடிவத்தை அழித்தால் அந்த உணர்வு அழியும் என்பது உண்மை. பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய மனைவியின் படம் சுவரில் மாட்டியிருந்தது கீழே விழுந்து உடைந்ததைக் கண்டு பகவான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது மனைவி இறந்துவிட்டதாகத் தந்தி வந்தது. அவருடைய உயிர் பிரிவதை, சுவரிலிருந்து விழுந்த படம் குறிக்கின்றது.

கோபம் ஒருவரை ஆட்கொண்டபோது அன்னை அவரை ஒரு தனி இடத்திற்குப் போகவேண்டும் என்கிறார், "நான் ஒரு வார்த்தையும் பேசப் போவதில்லை. எதையும் இந்நிலையில் செய்யப் போவதில்லை'' என்ற சங்கல்பத்தை எடுத்துக்கொண்டு, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து விட்டால், உட்கார்ந்த பின் கோபம் வெளியிலிருந்து வருவதைக் காண முயன்றால், அமைதியாக இருப்பதால் கோபம் நம்மிலிருந்து பிரிந்து தெரியும். ஒரு பேப்பரில் கோப உணர்ச்சிகளை எழுதினால், எழுதி முடிந்தவுடன் கோபம் மறைந்துவிடும் என்கிறார் அன்னை. கோபத்தை வெல்ல ஒரு சங்கல்பம், உடலும் உணர்வும் கட்டுப்பட்ட அமைதி, கோபத்தை நம்மிருந்து பிரிக்கும் முயற்சி, கோப உணர்ச்சிக்கு வரிவடிவம் கொடுப்பது என்பதே இம்முறை. 10ல் 9 தரம் பலிக்கும். கோபம் மறையும்.

கோப உணர்வு வெளியிலிருந்து வருவதைப் போல் subconscient நம்முள் புதைந்துள்ள இருண்ட உணர்விலிருந்தும் பொங்கி வரும். இதைக் கட்டுப்படுத்துவது வெளியிலிருந்து வருவதைக் கட்டுப்படுத்துவதைவிட சிரமம். அதற்குரிய முதல் நிபந்தனை ஒன்றுண்டு. நாம் வேறு, நம் கோபம் வேறு என்று பிரித்துப் பார்க்க வேண்டும். நமக்கு ஜுரம் வந்தால் நாமே ஜுரம் என நினைப்பதில்லை. ஆனால் கோபம் வந்தால், நாம் வேறு, நம் கோபம் வேறு என்று நினைக்கக் கூட முடியாத அளவு அத்துடன் ஒன்றிப் போகிறோம். அப்படியின்றி, நம்முள் கோபம் எழுவதை தலைவலி எடுப்பதைப் பார்ப்பதைப் போல், பிரித்துப் பார்க்க வேண்டும், பிரித்துப் பார்க்கவில்லை என்றால், நாம் கோபத்தோடு ஒன்றிப்போய் நாமே கோபமாகி விடுகிறோம். அதன் பின் கோபத்தை வெல்லும் திறன் நமக்கிருப்பதில்லை. நாம் நம் மனதில் கோபத்திலிருந்து பிரிந்து, தனித்திருக்க வேண்டும். மனத்திலுள்ள அமைதியையும், ஒளியையும் கோபத்தின் மீது பொழிய வேண்டும். கோபம் தணிந்து மறையும். அத்துடன் சேர்ந்துவிட்டால், அதை வெல்லும் திறன் போய் விடும்.

எஸ்டேட் முதலாளி நெருக்கடி காரணமாக எஸ்டேட்டை விற்று விட்டார். வாங்கியவர் அந்த எஸ்டேட்டை நிர்வாகம் செய்யும் திறமையுள்ளவரை எதில் கண்டு பிடிக்க முடியாது என்று அறிந்து, விற்பவரே எஸ்டேட்டை ஒரு வருஷகாலம் நிர்வாகம் செய்ய ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டார். விற்றவரும், வாங்கியவரும் ஒரு வருஷம் பழகியதில் உயர்ந்த நண்பராகி விட்டபடியால் தொடர்ந்து அதே நிலை பல வருஷம் நீடித்தது.

ஓர் அசந்தர்ப்பம் நடந்து விட்டது. நடந்த விஷயம் சிறியது. குறுக்கேயிருந்தவர்கள் பேச ஆரம்பித்ததால், சிறு விஷயம் பெரியதாகி, மானப்பிரச்சினையாகிவிட்டது. விற்றவர் மானேஜராக இருக்கிறார். அவர் அன்னை பக்தர். அவருடைய சொத்து போய்விட்டது. இப்பொழுது மரியாதைக்கும் ஆபத்து என்பதால், அவர் கோபமிகுதியால் எதையும் செய்யும் நிலையில் இருந்தார். ஆனால் எதையும் செய்யவில்லை. வாங்கியவருக்கு தினசரி இரண்டு கடிதங்கள், தந்தி, டெலிபோன் மூலமாக வதந்திக்கேயுரிய அனைத்து செய்திகளும் போய்க் கொண்டிருந்தன. எஸ்டேட்டிலிருந்து அவர் இருப்பிடம் 400 மைல். அவர் நிலை கலங்கியுள்ள பொழுது எஸ்டேட்டை நாளை கொளுத்தப் போகிறார் என்ற செய்தி' கிடைத்தது.

பக்தர் கொந்தளிப்பான தன் மனநிலையை ஆசிரமத்திற்கு எழுதி தான் தன் நிலையிலில்லை என்பதை விளக்கியிருந்தார். கோபப்பட நமக்குரிமையில்லை. தவறு எவருடையதாக இருந்தாலும் கோபம் விலக்கப்பட வேண்டியது, என்று பதில் வந்தது. 400 மைல் பிரயாணத்தை 70 மைல் வேகத்தில் முதலாளி நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு முடித்து எஸ்டேட் பங்களாவில் நுழைவதற்கு முன் ஆசிரமத்திலிருந்து பதில் அன்பருக்குக் கிடைத்துவிட்டது.

அன்பர் முதலாளியை அன்புடன் வரவேற்றார். முதலாளிக்கு எதுவும் புரியவில்லை. செய்தி'களை அனுப்பிய வர்களைக் கேட்டார். நாங்கள் சொன்னதெல்லாம் உண்மை. புலியாகத்தான் இருந்தார் மானேஜர்; இன்று ஒரு கடிதம் வந்தது. அதன் பிறகு அமைதியாய் விட்டார். என்ன என்று புரியவில்லை' என்றார் செய்திகளை அனுப்பிய கணக்குப்பிள்ளை.

கோபம் பொல்லாதது. அடக்க முடியாதது என்பது உண்மை. அன்னையின் அருள் முன்பு அது அடங்கும், அழியும் என்பதும் உண்மை.

தங்கள் கோபத்தை அடக்க முடியாத முன்கோபக் காரர்களுண்டு. இவர்கள் பக்திமான்களாக இருப்பதுண்டு. யோக முறைகளைப் பின்பற்றுபவர்களாக இருப்பதும் உண்டு. பக்தியாலோ, நிஷ்டையாலோ உயர்ந்த தெய்வீக சக்தியை இவர்கள் பெறுவதும் உண்டு. தெய்வீக சக்தி உள்ளே வந்தவுடன் இவர்களுடைய குறையான முன்கோபம் அழியும் என்று எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் அதற்கு எதிரான பலன் இருக்கும். பாத்திரம் கறைபடிந்ததாக இருப்பதால், அமிர்தத்தை அதனுள் ஊற்றினாலும், அமிர்தம்தான் கெட்டுப் போகுமே தவிர, பாத்திரத்தின் கறை அமிர்தத்தால் அழிவதில்லை. பெரிய சக்தி, பெரிய வேகம் உள்ளே வந்தவுடன் இவருடைய முன் கோபம் தீவிரமாகும். ஒருவர் ஆன்மிக முன்னேற்றம் பெற தெய்வீகசக்தி உதவ வேண்டுமானால் அதைப் பெறுமுன் அவர் ஆத்மா தூய்மையானதாக இருக்க வேண்டும்.

கோபம் கெடுதல் செய்யும், வேகமும் அதற்குரியதைச் செய்யும். ஆர்வமாகப் பேசும்பொழுது, யோசனை இல்லாமல் சில வார்த்தைகளைச் சொல்கிறோம். அவை நல்லவையாகவும் இருக்கும், கெட்டவையாகவுமிருக்கும். வேகம் இருப்பதால் அவை பலிப்பதுண்டு. அரசியல் சேவையாகவே வாழ்நாளைக் கழித்தவர் அறுபது வயதில் சலிப்பாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் சேவை பெரியது. அவர் வாழ்நாளில் பலனாகப் பெற்றது எதுவுமில்லை. நிலையான சாப்பாட்டிற்கு வழியில்லை. கேட்டுக் கொண்டிருந்த நண்பர் அவரைத் தேற்ற வேண்டி, "போனதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். இனியும் இந்த ஊர் முனிசிபல் சேர்மனாக வேண்டியவர்கள் நீங்கள்'' என்றார். அவருடைய ஆயுசில் எத்தனையோ முனிசிபல் எலக்ஷன் நடந்தது. அதிலெல்லாம் தொண்டராகவே பணியாற்றினார். கௌன்சிலராக நின்றதுமில்லை. நண்பர் சொல்லியதை காது கொடுத்தும் அவர் கேட்டுக்கொள்ளவில்லை. 4 ஆண்டுகளுக்குப் பின் முனிசிபல் கௌன்சிலைக் கலைத்து விட்டார்கள். பிறகு சர்க்காரே ஒரு கமிட்டியை நியமனம் செய்தார்கள். புதிய அரசியல் நிலைமையில் இவரை கமிட்டி மெம்பராக நியமனம் செய்தார்கள். ஏதோ ஒரு வகையில் கவுன்சில் மெம்பராகி விட்டார் தொண்டர். நண்பர் வாக்குப் பலித்து விட்டது.

ஒருவர் தன் சிறிய தாயாரிடம் சென்று அவருடைய தங்கச்செயினை வாங்கி வந்து அடகு வைத்திருந்தார். மீட்டுக் கொடுக்கவில்லை. ஏலம் போய்விடும் போலிருந்த நிலைமையில் சிறிய தாயார் நகையை மீட்டுக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார். மீட்கப் பணம் இல்லை. அவருக்கு எரிச்சல் வந்தது. உனக்கு என்ன, குடும்பமில்லை. எதற்கு நகை உனக்கு? என்னைத் தொந்தரவு செய்யாதே. எங்கேயாவது போய் விழுந்து சாவு என்றார். நகையில்லாமல் அவர் திரும்பப் போய் விட்டார். சில ஆண்டுகளுக்குப் பின் அந்த அம்மையார் ஒரு மகானைப் பார்த்து விட்டு அவர் ஆசிரமத்திலிருந்து அருகிலுள்ள ஊருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். மயக்கம் வந்து விழுந்தார். அங்கேயே உயிர் போய் விட்டது. எவருமில்லாமல் அனாதையாகக் கிடந்தார். அக்கா மகனுடைய வாக்கு பலித்து விட்டது.

சாபமிடுவது போல் பேசுவது கன்னத்தில் அறைவதை விட மனிதனுக்குத் தீங்கு செய்யக்கூடியது என்கிறார் அன்னை. நாம் யோசனையில்லாமல் வேகமாகப் பேசும் சொல் நல்லதானாலும், கெட்டதானாலும், பல சமயம் பலிப்பதுண்டு என்கிறார் அன்னை. ரோஷக்காரரிடம் ஒருவர் கடுமையாகப் பேசி விட்டால், ரோஷக்காரர் வயிற்றைக் கலக்கும், இதயம் துடிக்கும், என்கிறார் அன்னை. கடுமையான சொல்லில் தீயசக்தி கலந்திருப்பதால் இப்பலன் வருகிறது. வலிமையுடையவர்கள், அதுவும் உணர்வில் வலிமையுடையவர்கள், தன் அடக்கததுடனிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுடைய சுடுசொல், கடும் சொல் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும்.

உணர்வு அறிவைப்போல் நிதானமுடையதல்ல. தனக்குப் பிடித்ததை அது அதிகமாக விரும்பும். பிடிக்காததை அதிகமாக வெறுக்கும். பொதுவாக மனிதர்கள் பிறரைத் திட்டுவார்கள், பிறர் திட்டினால் கேட்டுக் கொள்வார்கள். உணர்வே உயிர் என்பவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களை வாய் ஓயாமல் திட்டுவார்கள். பலநாள் தன்னைத் திட்டுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர் ஒரு கேள்வி திரும்பக் கேட்டால், எப்படி நீ என்னைக் கேட்கலாம் என படையெடுத்துக் கொண்டு போர் தொடுப்பார்கள். யாரை வேண்டுமானாலும் நான் எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுவேன். என்னை யாரும் எதுவும் சொல்லக் கூடாது என்ற நியாயம் பேசுபவர்கள் இவர்கள். இவர்களுடைய உணர்வு எப்பொழுதும் பதட்டத்துடனிருக்கும். ஒரு சொல் காதில் விழுந்து விட்டால், அது உணர்வை எட்டியவுடன் அங்கு ஒரு பூகம்பம் கிளம்பும். எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது இவர்கள் நிலை.

சுபாவம் நாணயம் (coin) போன்றது. நாணயத்தில் தலை, பூ என இரு பக்கங்களுண்டு. ஒரு பக்கமுள்ள நாணயம் இல்லை. விஸ்வாசமுள்ளவனிடம் துரோக குணமிருக்கும். ஓர் உயர்ந்த குணமுள்ளவனிடம், அதற்கெதிரான தாழ்ந்த குணமும் இருக்கும் என்கிறார் அன்னை. ஒன்றில்லாமல் மற்றது இருக்க முடியாது. வெளிப்படையாக இல்லை என்றாலும் மறைந்திருக்கும்.

(Vital power) உணர்வின் சக்தி, பிராணனுடைய சக்தியாகும். தைரியம், வீரம், வேகம் போன்றவை உணர்வின் சக்தி. தைரியமுள்ளவனுக்கு அனைவரும் அடங்குவர். தைரியம் சுத்தமாகவும் நிதானமாகவும் இருக்கக் கூடும். பிராணசக்தி சீரழிவதால் ஏற்படும் குணங்களில் ஒன்று கோபம். தைரியமுள்ளவனுக்கு எந்தக் காரியமும் நடக்கும். தைரியம் குறைவாக இருந்தால், பல காரியங்கள் கூடிவரும். மற்றவை கெட்டுப்போகும். தைரியத்தால் சாதிக்க முடியாததை கோபத்தால் சாதிக்க முயல்வது இயற்கை. நான் நல்ல முறையில் கேட்கின்றேன், எனக்குச் சேர வேண்டியதைக் கொடுத்துவிடு என்ற தைரியசாலிக்கு அவன் வார்த்தை பலிக்கும். அவனுடைய சொல்லுக்குச் சக்தியிருக்கும். எதிரி அடங்குவான். போதிய தைரியமில்லாதவன் நல்ல முறையில் கேட்கிறேன், கொடுக்காவிட்டால் எனக்குக் கோபம் வரும், நான் என்ன செய்வேன் என்று சொல்ல முடியாது என்கிறான். வலிமை குறைந்த நிலையில் நிதானமாகச் சாதிக்க முடியாதவன் வேகத்தாலும், வன்முறையாலும் சாதிக்க முற்படும்பொழுது கோபம் உற்பத்தியாகிறது.

வன்முறை எதுவானாலும் அது பலஹீனம். பலஹீனத்தின் அறிகுறி, பயங்கரவாதிகள் வன்முறையைக் கடைப்பிடிக்கின்றனர். தெம்பில்லாதவன், திறனில்லாதவன், சாதிக்க முடியாதவன் தன் பலஹீனத்தை வன்முறையால் வெளிப்படுத்துகிறான். அது போன்ற வன்முறையிலொன்று கோபம்.

கோபம் வந்தபிறகு தன் கோபம் நியாயமானது என்று நினைப்பவருண்டு. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் முறை இது. கோபம் அறியாமையின் சின்னம், குருட்டுத்தனமானது, அசுரனைச் சார்ந்தது, ஆன்மாவுக்கு எதிரியானது. எக்காரணத்தை முன்னிட்டும் கோபம் நியாயமானது என்று பேசமுடியாது.

பழிவாங்கும் மனப்பான்மையும், கோபமும் மறைந்த சமுதாயத்திற்குரியவை. இனி மலர இருக்கும் சமுதாயத்திற்குப் புறம்பானவை. எதிரியைப் பழிவாங்காமல் விட்டுவிட்டால், அவன் சும்மா இருக்கமாட்டான். நாளைக்கு மீண்டும் நம்மை அழிக்க முயல்வான். அதனால் அவனுக்கு மனதில் பயம் ஏற்படும்வரை தண்டனை கொடுத்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பது சமுதாயத்தின் கொள்கை. அது பழைய சமுதாயத்திற்கு சரி. அந்தச் சமுதாயத்திற்கு கோபம் அவசியம். கோபமில்லாமல் பழி வாங்க முடியாது. இனிவரும் சமுதாயத்திற்கு இவையிரண்டும் உதவா.

கோபம் திடீரென்று வருகிறது. ஒருவருடைய கோபம் அடுத்தவரை தொத்திக் கொள்ளும். எவரிடமிருந்து வராவிட்டாலும் (atmosphere) எங்கிருந்தோ வரும், திடீரென்று உள்ளிருந்து உன்னைக் கிளப்பும். அது கிளம்பிய பின் உன்னால் எதுவும் செய்யமுடியாது. நீ அதற்கு அடிமை. நம் உடல் மற்றவர் உடலிலிருந்து வேறுபட்டது என நாம் நினைக்கின்றோம். அவையிரண்டும் ஒன்றே என்கிறார் அன்னை. சிறு துளிகள்போல் ஒருவருடலிலிருந்து உற்பத்தியாகும் அதிர்வு அலைகள் மற்றவருடலில் பட்டு உள்ளே செல்கிறது என்கிறார். அதனால்தான் சூட்சுமமானவர்கள் கோபம் தூரத்தில் வரும் பொழுதே கண்டு கொள்கிறார்கள்.

ஆவி உலகம், உணர்வுலகத்துடன் கலந்துள்ளது. அதில் ஆயிரக்கணக்கான சிறு தேவதைகளுண்டு. நம்மிடமிருந்து எழும் வேகம், கோபம், தாபம், தீவிரம் ஆகியவை இத்தேவதைகளுக்கு விருப்பமான விருந்து. இந்த விருந்தை அடிக்கடி பெற அவை கம்பியில்லாத் தந்தி மூலம் நமக்குச் செய்தி அனுப்பி நம் கீழான உணர்ச்சிகளைக் கிளப்ப முயல்வார்கள். அது நுழையுமுன் நாம் விழிப்போடு அதை மறுத்துவிட்டால் தப்பினோம். என் கோபத்தை கிளப்பாதே. எனக்குக் கெட்ட கோபம் வரும் என்று நாம் சொல்லும்பொழுதே அதற்கு இடம் கொடுத்துவிடுகிறோம்.

இடம் கிடைத்தால் அவை நுழைந்து விடும். நுழைந்து விட்டால் ஆழமாக நம்முள் சென்று பதுங்கிக்கொள்ளும். அப்பொழுது தான் என் வயிற்றைக் கலக்குகிறது என்பார்கள். வயிறு, நாபிதான் அவைகளுக்குரிய இடம். இதைத் தடுக்க வழி என்ன? என்றும் உள்ளது ஒரே வழி தான்; பொறுமை, நிதானம், உண்மை, நல்லெண்ணமிருந்தால் இத்தேவதைகள் நம்மைத் தீண்டாது. இன்றில்லை என்றாலும், என்றோ ஒரு நாள் நமக்கு வெற்றியுண்டு.

முன் கோபமே உன் சுபாவமானால், "இனி நான் கோபப்படமாட்டேன்'' என்ற முடிவு உனக்குப் பயன்படாது மற்றவர்களுக்குப் பயன்படலாம். அதைவிடக் கோபம் என்னுடையதல்ல. அது உலகெங்கும் உலவும் உணர்வு. எனக்குச் சொந்தமானதல்ல. எல்லோருக்கும் சொந்தமானது. என் ஜீவனின் கதவை நானே திறக்காதவரை கோபம் என்னுள் நுழைய முடியாது என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் அது உதவும். அதை விட்டு விட்டு இது என் சுபாவம், என்னுடன் பிறந்தது கோபம் என்று நீ கருதினால், நீ அதை ஏற்றுக்கொள்கிறாய், நீ ஏற்றுக்கொள்வதால் அது உன்னை விட்டு லேசில் போகாது. எல்லா உணர்வுகளும் உலகில் பொதுவாக உதவுகின்றன. காற்றில் T.B. கிருமிகள் இருப்பதைப் போல், உணர்வு அலைகள் இருக்கின்றன. அவையெல்லாம் நம்முள் நுழைந்து விடுகின்றன. நுழைவதால் மட்டும் T.B. வந்துவிடாது. நம் உடல் நிலை T.B.க்கு இடம் கொடுத்தால் தான் அக்கிருமிகளுக்கு வேலை. அதே போல் கோபம் நம்முள் நுழைந்தாலும், நம் மனநிலை அதற்கு இடம் கொடுத்தால்தான் கோபம் தன் ஆட்சியைச் செலுத்த முடியும்.

கோபத்தை இந்த ஒரு முறையால்தான் வெல்லலாம் என்பதில்லை. ஓர் ஆசையை மறுத்து அதை வெல்லலாம் அல்லது அதிக அளவு ஆசையை அனுபவித்து விட்டால் அது அழியும். அதே போல் அளவு கடந்து கோபம் வருபவரைப் பார்த்து எத்தனை முறை கோபித்துக்கொள்ள முடியுமோ, எந்த அளவுக்கு கோபப்பட முடியுமோ அந்த அளவுக்கு உன் கோபத்தை வெளிப்படுத்தினால் அது தீர்ந்து அழிந்துவிடும் எனலாம். அதுவும் ஒரு முறை.

முழுவதும் கோபத்தை அடக்கியும் வெல்லலாம். அதுவும் ஒருமுறை. ஆனால் எவ்வளவு நாள் அடக்கினாலும், ஒருநாள் கவனமில்லாமலிருந்தால் கோபம் உடனே வெளிப்படும்.

ஒருவருக்குப் பயன்படும் முறை அடுத்தவருக்குப் பயன்படாது. கோபத்தை தீரும்வரை வெளிப்படுத்துவதை விட அடக்கி ஆள்வதைவிட, அதைப் புரிந்து கொண்டு, அதனின்று, விலகி, சாந்தத்தாலும், ஒளியாலும் அதைக் கரைத்தால் இனி அது வராது. சீக்கிரமாக அழியும். வேரோடு அழியும். இது அன்னை முறை. முறை எதுவானாலும் விழிப்புணர்வு வேண்டும். அது இல்லாமல் எந்த முறையும் பயன்படாது.

(Mother's consciousness) அன்னை என்பது, அவருடைய ஜீவியம், அவருடைய சக்தி; அவர் நம் சூழலில் வருவது, அதன் இனிமை மனித உணர்வில்லாதது. இயல்பாக சக்திவாய்ந்த நல்லெண்ணமாக செயல்படும் தன்மையுடையது. இதன் ஸ்பரிசம் தெய்வத்தின் கருணை, நம்மீது இதன் பார்வை பட்டவுடன் இதமான நிறைவு ஜீவனிலிருந்து எழுந்து கரணங்களையும், செயல்களையும் நிரப்பும் வகையில் பரவுகிறது. அன்னையை அறிந்தபின் அவரை அடைய மனம் விழைகிறது. அருளெனும் வித்து முளைத்து அன்பு எனும் செடியாகும். அகவுணர்வில் தெய்வத்திருவுள்ளம் மலர்கிறது. மனிதனின், உயர்ந்த பண்புகளும் இம்மலர்ச்சிக்கு விலக்கு. தாழ்ந்த குணங்கள் தடை, கோபம் போன்ற எந்தச் சிறுமையும் இம் முளையைக் கருக வைக்கும். கட்டை விரல் பருமனுள்ள ஆத்மாவை அனந்தனுக்குச் சொந்தம் என உணர்த்தும் அன்னை ஜீவியம் நம்முள் வர தீயசக்தியின் தீண்டலுக்குரிய சிறுமைகள் கனவிலும் களையப்பட வேண்டும். அவை கரைந்து மறைய வேண்டும்.

கோபத்தைக் களையும் வழிகள் பல. எளிய முறையிலிருந்து கடினமான விரதம் வரை பல முறைகள் உண்டு. கோபத்தின் நிலைகள் பல. ஒரு க்ஷணம் தோன்றும் எரிச்சல் மனத்தைத் தொட்டு மாறிய நிலையான வேதனை, சிறிய இன்பத்தை விரும்பித் தொடர்ந்து நாடியதால் அது மாறி துன்பமாகி ஜீவனை பதைபதைக்கும்படி செய்த நிலை, அடக்கமுடியாத ஆத்திரம், உயிரையே கொடுக்க முன்வரும் கொந்தளிப்பு, மானம் போகும் நிலையில் ஆத்மாவே தழலாக எரிந்து நிற்கும் ரௌத்திரம் போன்ற பல நிலைகளில் கோபம் இருப்பதால் அவற்றை அழிக்கும் முறைகளும் பல நிலைகளிலுள்ளன.

  1. கோபத்தை நிரந்தரமாக வேரோடு அழிக்கச் சிறந்த வழியொன்றுண்டு. அது கோபாக்கினியானாலும் பலிக்கும். அது மனத்தின் தூய்மையான உண்மை. கோபம் குறையானது என்பதை மனம் உணர்ந்து, அந்த உண்மையை மனதார ஏற்றுக் கொண்டு, கோபத்தின் சூட்சுமமான பிறப்பு, இருப்பு, வளர்ப்பு ஆகியவற்றை அறிந்து, தீவிரமாக அன்னையிடம் முறையிட்டு "இதை வேரோடு களைய வேண்டும்'' என்று இடைவிடாத பிரார்த்தனையை மேற்கொண்டால், 50 வருஷமாக ஆட்டிப் படைத்த பேய் 50 மணி நேரத்தில் மறையும்.
  2. கோபம் குணத்திற்கு மட்டும் உரியதாக இருக்கலாம். குணத்தின் குறையாகச் சிலருக்கு அமைவதுண்டு. உடல் அமைப்பின் குறையால் ஏற்பட்டதாக இருக்கும். குணத்தில் குறையில்லாமல், பிறப்பில் உடல் குறையால் ஏற்பட்டதாகவுமிருக்கும். அது போன்ற குறை பிரார்த்தனையால் எளிதில் விலகும்.
  3. இவை போக பல்வேறு வகைப்பட்ட கோபங்களுண்டு. ஒவ்வொரு வகையான கோபத்திற்கும் ஒருவகை பிறப்பு இருக்கும். பிறப்பைக் காணுதல் அவசியம். கண்டபின் அதிலிருந்து விலக வேண்டும். விலகியவுடன் கோபத்தின் வேகம் போய்விடும். பிறப்பின் காரணத்தை ஆராய்ந்தால் ஆராய்ச்சி விளங்கினால், கோபம் பலமிழந்துவிடும். அதன்பின் தீவிர பிரார்த்தனை கோபத்தை அழிக்கும். முறை எதுவானாலும் கோபம் அழிய வேண்டும் என்ற உண்மையான முயற்சி அவசியம். மனத்தின் உண்மைக்குப் பலன் உண்டு. உண்மைக்கு மட்டுமே பலன். அதனால் உள்ளத்து உண்மையை நாடுபவர்க்கே இம் முறைகள் பலிக்கும்.

கோபம் நம்முள் ஏற்பட காரணமாயிருப்பவைகளில் சிலவற்றைக் கீழே தருகிறேன்.

(a) பரம்பரையாக வந்த குணம்

(b) எந்த வகையிலும் ஒழுங்கில்லாத வீட்டின் சூழ்நிலை

(c) சீரழிந்த குணநலம்

(d) அவசரம் சீக்கிரத்தில் காரியத்தை முடிக்கும் என்பது போன்ற தவறான கருத்தை ஆழ்ந்து நம்பும் குணம்

(e) திறமையற்றவனின் பேராசை

(f) தவறான நம்பிக்கையின்மீது எழும்பும் வாழ்க்கை என்னும் கட்டிடம்

(g) அன்பிற்குரியவரை அதிகாரம் செய்யும் எண்ணம்

(h) பணிவுக்குரியவரிடம் பதவிக்குரிய அதிகாரத்தை செலுத்த விழைதல்

(i) பிறப்பிலுள்ள ரோஷம்

(j) உடற்கூறினால் ஏற்படும் ரோஷ மனப்பான்மை

(k) தாழ்வு மனப்பான்மை

(l) வறுமை

(m) இயலாமை

(n) பெரிய நகரத்தில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம்

(o) கண் மூடித்தனம்

(p) தன்பிறப்பு, வளர்ப்பு, ஜாதி, குலம், உத்தியோகம் இவற்றைப் பற்றிய தவறான அதிகமான நினைவு

(q) காரணம் புரியாமல் உள்ளிருந்து எழும் கோபத்தீ

(r) திறமையேயில்லாதவன் பெற்ற ஒரு திறமை

(s) அகங்காரம்

காரணம் எதுவானாலும், உண்மையாக நம் கோபத்தின் காரணத்தைக் கண்டுபிடித்து, ஆத்மசமர்ப்பணத்தால் அதன் வரலாற்றை அன்னையிடம் தினமும் சொல்லிவந்தால்,

கோபத்தின் தீவிரம் குறைந்து நாளாக நாளாக மறைவதைக் காணலாம். இனி கோபப்படக் கூடாது என்ற சங்கல்பம் இதற்குத் துணை நிற்கும்.

அன்னை நூற்றாண்டு வெளியீடாக 15 வால்யூம் 1978ல் வந்தது. 16ம் வால்யூம் சமீபத்தில் வெளிவந்தது. 17ம் வால்யூம் இப்பொழுது வந்திருக்கிறது. இவற்றின் பின்னால் (index) உள்ள குறிப்பில் கோபமும், கோபம் சம்பந்தப்பட்டவைகளும் காணப்படும். சுமார் 200 அல்லது முன்னூறு இடங்களில் அவற்றைக் காணலாம். அவற்றையெல்லாம் நிதானமாகப் படிப்பதே ஒரு விரதம், யோகம் எனவும் கூறலாம். அது உதவும், முக்கிய கருத்துக்களை மட்டும் மேலே குறிப்பிட்டிருக்கின்றேன்.



book | by Dr. Radut