Skip to Content

19. சூட்சுமம்

புதிய தம்பதிகளுக்குள் சண்டை வந்து மனைவி தூக்கு மாட்டிக் கொள்ள முயன்றாள். கணவன் பதறிப் போய், பெரும் பாடுபட்டு, சமாதானம் செய்து சமாளித்தான். இனி சண்டையிடுவதில்லை என முடிவு செய்தான். கொஞ்சநாள் கழித்து சண்டை வந்தது. தூக்கு மேடையும் மீண்டும் வந்தது. கணவன் நிலையிழந்தான். அடிக்கடி இது போல் நடந்ததால் அவனுக்குப் பயித்தியம் பிடிக்கும் போலிருந்தது. நிரந்தரமாக tension படபடப்பேற்பட்டது. அடுத்தமுறை சண்டை வந்தபொழுது, அவள் தூக்கு மேடைக்கு தயாரானாள். அவன் தன்னையறியாமல் சத்தம் போட ஆரம்பித்தான் "நீ இறந்தால் எனக்கு நிம்மதி'' என்றான். ஒருவாறு சண்டை ஓய்ந்தது. அவனுக்கு படபடப்பு பதட்டம் போய் விட்டது. தனக்குத் தெரிந்த பெரியவரிடம் யோசனை கேட்டான். "இனி உன் மனைவி சண்டை போட மாட்டாள். போட்டாலும் தூக்கு மாட்டிக் கொள்வதாகச் சொல்லமாட்டாள்'' என்றார். அவனால் நம்ப முடியவில்லை. அதன் பிறகு அவன் மனைவி தூக்கு போட்டுக் கொள்வதை மறந்து விட்டாள்.

மனைவி தூக்குப் போட்டுக் கொள்வாள் என்பதை அவனால் தாங்க முடியவில்லை என்பதை அறிந்து, அவள் அவனை பயமுறுத்துகிறாள் என்பதை அவன் அறியவில்லை. வாய் தவறி அவன் சொன்ன சொல் அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது என்று அவளை நம்பவைத்தது. தன் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தினாள். இதைத் தெரிந்து செய்யும் மனைவியும் உண்டு, தெரியாமல் செய்பவர்களும் உண்டு. இதே ஆர்ப்பாட்டத்தைச் செய்யும் கணவனும் உண்டு.

எப்படிச் செய்தாலும், அடுத்தவர் மனம் பதறும்வரைதான் இந்தப் பயமுறுத்தல் பலிக்கும். மனம் பதறாவிட்டால், பயமுறுத்தல் பலிக்காது. சண்டை நடக்கும் பொழுது கணவனுக்கு நிதானமிருக்காது, மனைவி இறந்து விடுவாள் என்ற பயம் மேலிட்டிருக்கும். அது இருக்கும் வரை ஆர்ப்பாட்டம் அடங்காது. இதுபோன்ற சமயத்தில் இதன் சூட்சுமத்தை அறிந்து, மனத்தை அதிலிருந்து விலக்கினால், தூக்குப் போட்டுக்கொள் என்று சொன்னாலும், அதைக் கண்டு நடுங்காமல் இருந்தாலும், அடுத்த நிமிஷம் ஆர்ப்பாட்டம் அடங்கும். இதுபோன்ற நிலையை அனுபவித்தவர்களுக்கு இது எளிதில் புரியும்.

வாழ்வில் பல நிலைகளில் அதுபோன்ற சூட்சுமம் உண்டு. அவை புரிந்தால் மனிதனுக்கு வாழ்வின் அப்பகுதி முழுவதுமாக அடங்கும். அரசியல், தொழில், நிர்வாகம், பெரிய குடும்பம் ஆகிய இடங்களில் இந்த அறிவு பெரிதும் பயன்படும். சாதாரணமாக ஒருவர் இது போன்ற பல சூட்சுமங்களை அறிந்திருந்தால், அப்பகுதிகளிலிருந்து எந்தப் பிரச்சினையும் அவருக்கு எழாது. சூட்சுமத்தின் அடுத்த பகுதியும் உண்டு. அது இல்லாத வாய்ப்பை உற்பத்தி செய்வது. அந்நிலையை பூரணமாக அறிந்தால், அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியும். அதிர்ஷ்டத்தின் நுணுக்கங்களை முழுவதும் அறிந்தால், மனம் தன்னலமற்ற பெருந்தன்மையும் பெற்றிருந்தால், அந்த அறிவின் மூலம் பிறருக்கும் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இன்று இது உலகிலில்லாத புதிய ஞானமில்லை. நெடுநாளாக மனிதன் அறிந்ததே இது. ஆனால் ஆபத்திலிருந்து தப்பிக்கவும், பிறரை அழிக்கவும் முற்படும் இடங்களில் இந்த ஞானம் செயல்படுகிறது. இதை அறிந்தவர்களை கெட்டிக்காரன், சாமர்த்தியம் என்று சொல்வார்கள். அதனால் அவர்கள் நம்ப மாட்டார்கள். ஆபத்தான நபர்களாக அவர்களைக் கருதுவார்கள். சூட்சுமம் ஆபத்தானதல்ல. அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து ஆபத்தை விலக்குவதா, வாய்ப்பையும் அதிர்ஷ்டத்தையும் உற்பத்தி செய்வதா, ஆபத்தை விளைவிப்பதா என்று முடிவு செய்ய வேண்டும். சூட்சுமம் கருவி. கருவிக்கு நல்ல குணமோ, கெட்ட குணமோ இல்லை. குணம் மனிதனுக்குண்டு. நல்ல மனிதனுக்குப் பெரிய சேவை செய்யும் கருவி இது.

10 வயது குழந்தை பள்ளிக்குப் போக மறுத்து அடம் செய்தாலும், ரஷ்யாவைப் போல் நாடே நிலைகுலைந்து நின்றாலும், பஞ்சாபைப் போல் அமளியாக இருந்தாலும், நம் நிலைக்கு அளவு மீறிய வரன் வந்து கலைந்தாலும், அப்படிப் பட்ட வரனை வரவழைக்க வேண்டுமென்றாலும், எந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்றாலும், அதற்குரிய சூட்சுமம் ஒன்றுண்டு. அனுபவத்தாலும், நுணுக்கத்தாலும் விவேகமுடையவர்கள் இவற்றைச் சந்தர்ப்பம் வரும் பொழுது பயன்படுத்தும் திறமையைப் பெற்றிருக்கிறார்கள். அதை ஒரு சாஸ்திரமாக (subject) எழுதும்படியான ஞானம் இருப்பதில்லை. அந்த ஞானத்தின் ஓரிரு இயல்புகளை விளக்கும் கட்டுரை இது. அன்னையின் கல்வியின் (Mother's education) முக்கிய பகுதி observation வாழ்வை கூர்ந்து கவனிப்பது. இந்த சூட்சுமம் அதில் ஒரு பகுதி.

கணவனும் மனைவியும் திருமணமாகி சுமார் 10, 15 வருஷங்களாக ஆழ்ந்த அன்பால் பிணைக்கப்பட்டும், இடை இடையே குண விசேஷத்தால் வாக்குவாதத்துடனும் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். கணவனின் வாழ்வு முன்னேற ஆரம்பித்தது. மனைவியின் வாக்குவாதம் அதிகமாயிற்று. வாழ்வில் முதல் பெரிய சந்தர்ப்பம் வந்தது. அதில் ஒரு பகுதி எழுத்து சம்பந்தப்பட்டது. மனைவி அதை டைப் செய்ய வேண்டும். வாக்குவாதம் டைப்பிங் விஷயத்தில் முற்றியது. கணவனுக்கு ஒரு புத்தகம் எழுத வாய்ப்பு வந்தது. பிரபலமான பிரசுரம் புத்தகத்தை வெளியிடச் சம்மதித்தது. தொழில் உயர் மட்டத்திலுள்ள ஒருவருடன் இணைந்து கணவன் எழுதப்போகிறார். அவர்கள் சந்திக்கும் நாள் குறிப்பிடப்பட்டு அவர் வெளிநாட்டிலிருந்து வரப் போவதற்கு ஒரு வாரத்திற்கு முன் மனைவி மீது ஒரு லாரி மோதிவிட்டது.

கணவனும் மனைவியும் கட்டுப்பாடான வாழ்க்கையை எல்லா விஷயங்களிலும் மேற்கொண்டார்கள். இந்த வாக்குவாதம் தவிர அவர்கடம் ஒருவர் மீது மற்றவருக்கு குறையில்லை. லாரி மோதிய செய்தி கேட்டு ஓடிப்போய் அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். உயிருக்கு ஆபத்தில்லை. உடல் முழுவதும் ரத்தக் கறை. எங்கெங்கு காயம் என்றும் தெரியவில்லை. உடலெல்லாம் காயம். முக்கியமாக தோலும் தொடையிலும் காயம். டாக்டர் பார்த்துச் சொல்ல வேண்டும்.

டிராபிக் இன்ஸ்பெக்டர் காயம் பட்டவரைப் பார்க்க வந்தார். ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு, லாரியும், moped மோப்பெட்டும் அங்கிருக்கும் நிலையைப் பார்த்தபின், நான் இங்கு பிணத்தைத்தான் எதிர்பார்த்தேன். எதிர்பார்த்ததற்கு இது ஒன்றுமேயில்லை என்றார்.

டாக்டர் பரிசோதனை செய்தபின் காயங்கள் ஆழ்ந்திருப்பதால் சுமார் 2 மாதம் படுக்கையாக இருக்க வேண்டும், 3 மாதமும் ஆகலாம், எலும்பு முறியவில்லை, விரல்மட்டும் ஒடிந்து உள்ளது, அது எளிதில் குணமாகும், தலையில் X-ray எடுத்துத்தான் சொல்ல வேண்டும் என்றார்.

கணவன், மனைவியை ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். கட்டுப்பாடான வாழ்வை மேற் கொண்டதால் கணவனுக்கும் மனைவிக்கும் டைப்பிங் தவிர பேசச் சந்தர்ப்பமில்லை. பேசுவதில்லை என்ற கட்டுப்பாடுண்டு.

மனைவிக்கு ஆபத்தில்லை என்பது நிம்மதி. மறுநாள் X-ray ரிஸல்ட் வந்தால் அடுத்த கட்டம் தெரியும். இந் நிலையில் அவர் நண்பர் அவருக்கு ஒரு யோசனை சொன்னார். மனைவியை தினமும் போய்ப் பார்ப்பதும், ஆஸ்பத்திரியிலிருந்து வரும்வரை அருகிலேயே இருப்பதும் தான் வழக்கம். அதுவே முறை. ஆனால் உங்கள் முன்னுள்ள பிரச்சினை வேறு. மனைவிக்கு சிகிச்சையில் சிக்கல் ஏற்படாமல் வெகு சீக்கிரம் வீடு திரும்புவதை நீங்கள் விரும்புவீர்கள். இந்த சிகிச்சையில் எந்த நேரம் எது தடம்மாறிப் போகும் என்று சொல்ல முடியாது. வெகு சீக்கிரம் மனைவி, சிக்கலில்லாமல் குணமடைய வழியுண்டு என்றார் நண்பர்.

கணவன் உடனே மனைவி குணமாவதுதான் முக்கியமே தவிர, நான் போய்ப் பார்க்க வேண்டும் என்பது முக்கியமில்லை என்றார். அப்படியானால், நீங்கள் இனி ஆஸ்பத்திரிக்கு வரப்போவதில்லை என்று மனைவிக்கு தெரிவித்துவிட்டால் சிக்கல் வராது. டாக்டர் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச காலத்தில் மனைவி வீடு திரும்புவாள் என்றார் நண்பர். இதற்குள் ஆஸ்பத்திரியிலிருந்து காயங்களைப் பற்றிய விவரங்களும், எலும்பைப் பற்றிய செய்திகளும் வந்தன. இரண்டு காயங்கள் ஆழமானவை. Skin grafting தோலை ஒட்டி வைத்து குணப்படுத்திவிடலாம். அவை குணமாக 2 அல்லது 3 மாதமாகும். மற்றவை லேசானவை. விரல் ஒடிந்தது, கூடிவிடும். ஆனால் அதற்குரிய நாளாகும். X-ray ரிஸல்ட் மாலை வரும் என்பவை அவை. கணவன் தான் இனி வரப் போவதில்லை என்று சொல்லி அனுப்பினார்.

எக்ஸ்ரே ரிஸல்டில் கோளாறில்லை என்ற செய்தி வந்தது. கணவன் அவசியம் வந்து பார்க்க வேண்டும் என்று மனைவி விரும்பினாள். கணவன் தன் அபிப்பிராயத்தை சொல்லி அனுப்பிவிட்டார். காயங்கள் விரைவாக குணமாயின. ஒரு மாதத்தில் வீட்டிற்கு வந்து விடலாம் என்பது நிலை. தோல் ஒட்டுவதுதான் பாக்கி. சில நாள் கழித்து தோல் ஒட்டுவது அவசியமா என்ற கேள்வி வந்தது. எலும்பு கூடிவிட்டது. காயங்கள் ஆறிவிட்டன. தோல் ஒட்டவில்லை. 20ம் நாள் வீட்டுக்கு மனைவி வந்து விட்டார்.

அவர் வந்தபின் கணவன் நண்பரை இதன் விபரம் என்ன என்று கேட்டார். ஆஸ்பத்திரியில் இருக்கும் வரை நீங்கள் வந்து பேசுவீர்கள், உடன் இருப்பீர்கள் என மனைவிக்குத் தெரியும். மீண்டும் வீட்டிற்கு வந்தால் பேச முடியாது என்று மனைவி அறிவதால் ஆஸ்பத்திரியில் அதிக நாளிருக்க மனம் விரும்பும். அப்படி விரும்பினால், காயங்கள் குணமாகாது சிக்கல் வந்தபடியிருக்கும். வரமாட்டீர்கள் என்று தெரிந்தால் எண்ணங்கள் ஓடாது. காயம் தானே குணமாகும். டாக்டர் எதிர்பார்த்ததை விட விரைவில் உடல் தன்னைக் குணப்படுத்திக் கொண்டது என்று நண்பர் விளக்கமத்தார்.

பன்னிரண்டு வயது பெண்குழந்தை விரலை வாயில் வைத்துக்கொள்ள ஆரம்பித்தது. டாக்டரிடம் காட்டினார்கள். ஒரு விரல் போன்ற கட்டை ஒன்றைச் செய்து குழந்தையிடம் கொடுத்து அதை வாயில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அதன் பிறகு குழந்தை விரலை வாயில் வைக்கவில்லை. தாய்ப்பாலில்லாத குழந்தை, தாயன்பு பெறாத குழந்தைகளுக்கு இப்பழக்கம் உண்டு. சிலருக்கு 40 வயது வரையும் இருக்கும். டாக்டர் தாயாரிடம் குழந்தையிடம் அதிக அன்பு செலுத்துமாறு சொல்ல வேண்டும். அவை நடைமுறையில் பலன் தராது. குழந்தையை தாயார் அடிக்கடி மடியில் போட்டுக் கொண்டாலும், அல்லது தனக்குப் பிரியம் குறைவாக இருப்பதை உணர்ந்து மனம் மாறி அன்பு செலுத்தினாலும், இப்பழக்கம் உடனே மாறும். அன்பில்லாத தாயார் இனி அன்பை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், அது எளிதல்ல. டாக்டரிடம் தாயார் என் குழந்தை மேல் எனக்கு உயிர் என்று சொல்லி வாதாடுவார். எனவே டாக்டர் வேறு உபாயத்தைக் கடைப்பிடித்தார். குழந்தை வெட்கப்படக்கூடியதை சொன்னவுடன், வெட்கம் பழக்கத்தை மீறியது.

ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். வாய்ப்பு ஏற்பட்டு பெரிய முன்னேற்றம் வர ஆரம்பித்தது. ஒரு குழந்தைக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு தெளிந்தது. வாய்ப்பின் ஒவ்வொரு அம்சம் வரும் பொழுதும் வீட்டில் அமளி. அடுத்த முறை இன்னொரு குழந்தைக்கு ஆபரேஷன். அடுத்த முறை தாயாரும் அதற்கடுத்த முறை மனைவியும் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதாயிற்று.

நல்லகாலத்தில் இது ஒரு கெட்டகாலம் எனப் புரிந்து கொள்கிறோம். நிலைக்குத் தகுந்த பரிகாரம் தேடுகிறோம். வாய்ப்பு வந்தவுடன் குடும்பத்தின் நிலை உயரும். அத்துடன் மன நிலையும் உயர வேண்டும். வரும் வாய்ப்பை இன்றைய மனநிலையில் அனுபவிக்கவே மனிதன் விரும்புவான். அதனால் வாய்ப்பைக் கண்டவுடன் நம் குடும்பத்தில் பலஹீனமான பகுதிக்குத் தொந்தரவு வருகிறது. நல்லது நடக்கும் பொழுது கெட்டதும் நடந்தால் தாழ்ந்த குடும்பங்களில் திட்டுவார்கள். கடுமையாகப் பேசுவார்கள். எனவே அங்கு இது போன்ற தடை வராது. திட்டிப் பழக்கமில்லாத குடும்பத்தில் இது நடக்கும். கவனித்தால் அதிகமாகும். தொந்தரவைக் கவனித்தால் வந்த வாய்ப்பு போய் விடும். பலரும் பல பாணியில் இதைச் சமாளிப்பார்கள். பெரும்பாலோர் வாய்ப்பை விட்டு விடுவார்கள்.

குடும்பநிலையை உயர்த்துவது, மனநிலையை உயர்த்துவது, தொந்தரவைக் கவனிக்காமல் விட்டு விடுவது, வாய்ப்பை விலக்குவது ஆகியவை பிரச்சினையைத் தீர்க்கும்.

(1) இதுபோன்ற சிரமங்கள் வாய்ப்பை ஏற்கும் திறன் குறைவாக இருப்பதால் வருகிறது என்று தெரிந்தவுடன் குடும்பப் பழக்கங்கள், வழக்கங்கள், பேச்சுமுறை, ஆகியவற்றை உயர்த்தி (raise the family to the next higher cultural level) பண்பில் ஒருநிலை உயர்த்தி விட்டால் இதுபோன்ற சிரமங்கள் நின்றுவிடும்.

(2) மனம் பழக்கங்களைவிட உயர்ந்தது என்பதால் நம் மனநிலைகளைச் சோதித்து அவற்றை சற்று உயர்த்த முற்பட்டால் அதனால் ஏற்படும் பலன் அதிகம். குடும்பம் உயர்ந்துவிடும். சிரமம் விலகும்.

(3) தொந்தரவு வந்தவுடன் அதைச் சமாளிக்கும் ஏற்பாடுகளை மட்டும் உணர்ச்சிக் கலப்பில்லாமல் செய்தால் கவனம் கிடைக்கவில்லை என்றவுடன் தொந்தரவு விலகும்.

(4) வாய்ப்பை விலக்க முற்பட்டால், தொந்தரவு வராது.

பிறர் மூலம் வரும் தொந்தரவுகளையும், அவற்றை விலக்குவதையும் பார்த்தோம். மனிதர் மூலமில்லாமல், நிகழ்ச்சி மூலமாகத் தொந்தரவு வரும். நம் நிலை உயரும் பொழுது equilibrium நம் வாழ்வு உள்ள நிலை மாறுகிறது. நிலை மீண்டும் சரியாகும்வரை தொந்தரவு இருக்கும். மீண்டும் பழைய நிலையைக் கொண்டு வருதல் ஒரு முறை. அது சுலபம். உயர்ந்தநிலையில் equilibrium புதிய சமநிலையைக் கொண்டு வந்தாலும் தொந்தரவு விலகும்.

இவற்றை எல்லாம் தாண்டிய கட்டம் உண்டு. அது நம் மனநிலை. அதை உயர்த்துவதால் நம் வாழ்வு நிலையை உயர்த்தலாம். நம் வாழ்வு நிலை தானே உயரும் பொழுது மனநிலை பழைய நிலையில் இருப்பதால், நாமே நமக்குத் தொந்தரவாக இருப்போம். அதற்குரிய எண்ணங்கள் தோன்றும். நமக்குத் தொந்தரவான காரியங்களை நாமே ஆரம்பிப்போம். அதைப் புரிந்து கொள்வது எளிதல்ல. புரிந்து கொண்டால், சிரமங்களை உடனே விலக்க முடியும். யாருடைய வாழ்விலும் தீர்க்க முடியாத பிரச்சினை என்று ஒன்று இருக்கும். வெகு நாளாக பலிக்காத வாய்ப்பு என ஒன்றிருக்கும். அதைத் தீர்க்கவும், வாய்ப்பைப் பூர்த்தி செய்யவும் இந்த அறிவு பயன்படும். அன்னை sincerity உண்மை என்பதைப் பல்வேறு கோணங்களில் விளக்குகிறார்கள். நாமே நமக்குத் தொந்தரவானதை ஆரம்பிக்கின்றோம் என்று அறிந்து ஏற்றுக்கொள்வது அதில் ஒரு முக்கிய அம்சம்.

அன்னை பக்தர்களுக்கு இதுபோன்ற குணமிருந்தால் காரியங்கள் அருளால் நடக்கும்பொழுது, நம் சொந்தக் குறையால் காரியம் கெடாமலிருக்கும். அதனால் இக்குறை சரியானது என்பதாகாது. பக்தர்கள் தங்கள் குறையை குறையாக உணராமல் அதையே நிறைவாக நினைத்து அதனால்தான் காரியங்கள் நடக்கின்றன என்றும் தவறுதலாக நினைப்பதுண்டு. குறையை வலியுறுத்த ஆரம்பித்தால், காரியம் கெடும். ஏன் அருள் பலிக்கவில்லை என்ற கேள்வி பெரும்பாலும் இவர்களிடம் இருந்து வருவதுண்டு.

ஒரு சோம்பேறி, சோம்பேறித்தனத்தை இலட்சியமாகப் போற்றி வளர்த்தவர். அதை வள்ளுவர் வாக்கின்படி நினைத்தும் மகிழ்ந்தவர். அதற்காக அவர் செய்த தியாகங்கள் பல. குடும்பம் காற்றில் பறந்தது. தன் நிலை, நிலையில்லாமல் போய்விட்டது. சோம்பேறித்தனத்தை இலட்சியமாகக் கருதி கண்ணும் கருத்துமாக வளர்த்தால், அத்துடன் வரக்கூடிய குணங்கள், செயல்கள் எப்படிப்பட்டவை என்று தெரியும். அவை அத்தனையையும் பொக்கிஷமாகப் போற்றினார். அவர் அன்னையிடம் வந்தார். அவர் வாழ்வில் நிலையாமை முக்கியம், பற்றாக்குறை சொந்தம், தகராறு தினசரி நிகழ்ச்சி, மானம் போகும் செயல்களை அவர் ஆதாயத்திற்காக விரும்பிச் செய்ததால், மானம் போய்விட்டது என்பதே தெரியாத மனநிலை ஊர்ஜிதமாயிற்று. இந்த நிலையில் உயிர் வாழ எத்தனை சாதுர்யங்கள், சாகஸங்கள் தேவையோ அவை அனைத்தும் அவருடைய சொத்து. இந்த நிலையில் அவர் அன்னையை நாடி வந்தார். அவர் வாழ்வில் எதிர்மாறானவை நடந்தன. அன்னை மீது இவருக்குப் பக்தி அதிகம், நம்பிக்கை குறைவு.

வாழ்வில் முதன்முறையாக நிலையான தன்மை வலுவாக ஏற்பட்டது. பற்றாக்குறை மறைந்தது, தகராறு எங்கே போயிற்று என்று தெரியவில்லை. சுமுகம் பெரும் அளவில் உற்பத்தியாகி பரவி நிலைத்தது. மரியாதைக்கும் அவருக்கும் தூரம் என்ற நிலைமாறி, மரியாதை முதன்மை ஸ்தானத்திற்குரிய அளவில் ஓரிரு இடத்தில் ஏற்பட்டது. அவருடைய சாதுரியங்கள். சாகஸங்களுக்கு வேலையில்லை என்றாயிற்று: கொஞ்ச நாள் இதுபோல் இருந்தவுடன், இதைவிட சுமார் 4 அல்லது 5 மடங்கு மரியாதை வருமானம், சந்தோஷம், உயர்வுள்ள நிலை இவரைத் தேடி வந்தது. அவர் சூட்சுமமாக தன்னையறிவார். ஆனால் அது தெளிவில்லாத அறிவு, unconcious knowledge. இந்த உயர்ந்தநிலை நிச்சயமாகப் பலிக்கும் என்று அவர் மனதில் தீவிரமாகப் பட்டவுடன், இது அன்னையால் தான் வருகிறது என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. அத்துடன் ஆழ்ந்த மனத்தில் பயம் ஏற்பட்டது. இந்த உயர்ந்த நிலை வந்தால், சோம்பேறித்தனத்திற்கு வேலையில்லை. பிறகு வேலை செய்ய வேண்டும். அதிக உழைப்பு தேவை. தன் சாதுர்யங்களுக்கு வேலையில்லை என்று தெரிந்து unconciously தன்னையறியாமல் கலங்கினார். அடுத்த தரிசனத்திற்கு வரமுடியாமல் முக்கிய வேலை வந்தது. அதன்பிறகு முடிந்தும் தரிசனத்திற்கு சில சமயம் வருவார். சில சமயம் வருவதில்லை. வந்த புதிய வாய்ப்பெல்லாம் மறைந்தன. வேறு வாய்ப்புகளைத் தேடிப் போனார்.

ஏன் நான் செய்வது கூடிவரவில்லை என்று அடுத்தவரைக் கேட்டார். எனக்கு அன்னை மீது நம்பிக்கையில்லை என்றார். தடுமாறினார். தடம்புரண்டார். பழைய நிலையை நினைத்துப் பார்த்து "அதுவே சிறப்பானது'' என்றும் பேசினார். மீண்டும் ஒரு சில சமயம் ஆசிரமம் வந்தார். பழைய தாழ்ந்த நிலைக்கும் புதிய பெரிய நிலைக்கும் இடைப்பட்ட சிறிய உயர்வு வந்தது. ஒரு நிலைக்கு வந்துவிட்டார். அன்னை என்றால் இப்பொழுது பயமாக இருக்கிறது. விடவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

இவருடைய நெருங்கிய நண்பர்கள் அடித்துப் பேசுவார்கள், "நீ சோம்பேறி, வேலைக்குப் பயந்து வந்ததை விட்டு விட்டாய். அது கெட்டுக் போகும் காரியங்களை வலிய செய்து விலக்கினாய்'' என்பார்கள், அவர் மனம் ஆம்' என்று சொல்லும் வாய் இல்லை என்று சொல்லும்.

இவருக்கு அன்னையும் வேண்டாம், உயர்வும் வேண்டாம். நாள் முழுவதும் கட்டிலில் படுத்துத் தூங்க வேண்டும். இவர் நிலையில் இதை உணராதவர்கள் உண்டு. உணர்ந்து மாறுபவர்கள் குறைவு. "எனக்கொன்றும் புரியவில்லை, அன்னையிடம் வந்தால் எல்லாம் நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை'' என்பவர்கள் அதிகம்.

சூட்சுமமான செய்தியை இவர் வீட்டார் அறிவதில்லை. இவர் சொல்வதை நம்புவார்கள்.

அருள் ஒருவர் வாழ்வில் செயல்பட முடிவு செய்தவுடன், அவர் வாழ்வு அற்புதமாக மாறுகிறது. விலாசம் தெரியாமலிருந்தவருக்கு விருது வருகிறது. பொதுவாக அருள் நம்மை நோக்கி நகர ஆரம்பித்தவுடன் அர்த்தமற்ற காரியத்தைச் செய்யத் தோன்றி அருளிலிருந்து விலகுவது மனித சுபாவம். ஓரளவு பெற்றுக் கொண்டபின் அதை தடை செய்யும் காரியங்களைச் செய்வதும்; வேண்டுமென்றே தடை செய்வதும் மனித சுபாவம்.

ஸ்தாபனத்தில் மேல்மட்டத்திலிருந்தவர், தன் குண விசேஷத்தால் படிப்படியாக இறங்கி, அடிமட்டத்திலுள்ளவரும் மதிக்காத நிலையில் வந்து, மேல் மட்டத்தில் ஒட்டிக் கொண்டிருந்தவரை, ஸ்தாபனத்தில் மேல் மட்டத்தை எட்டிய அனைவரையும்விட உயர்த்திய நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக 5 வருஷம் நடந்து, எல்லாம் சிறப்பாகவும், உயர்வாகவும் நிறைவாகவும் இருக்கும்பொழுது அவருக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. "யாருக்கு நாம் எந்த கெட்டதைச் செய்து திளைக்கலாம்'' என்று தோன்றி, எவரிடமும் அதைச் செய்ய முடியாமல், யாருக்குத் தன் நன்றி உரித்தாகுமோ அவரிடமே செய்யத்தோன்றி அதைச் செய்து, 5 வருஷம் கட்டிய கோட்டையை 5 நாளில் அழித்துவிட்டார்.

வாழ்க்கை சதிசெய்து விட்டது என்று கடைசிவரை சமாளித்துப் பார்த்து, முடியாமல் முடிவைத் தேடியவரை தேடி அன்னை வந்தார். அத்துடன் அனைத்தும் வந்தது. இதற்கு மேல் இப்படியும் ஒரு வாழ்வு உதயமாகுமோ என தனக்குத் தானே சொல்லும் அளவுக்கு வாழ்வு முன்னேறியது, எதைச் செய்தால் இந்த 12 வருஷ சௌகரியத்தை அடியோடு அழிக்கலாமோ அதைச் செய்ய வேண்டும் என்று அடிக்கடி தோன்றியது. அதையும் செய்தார். அருளின் கவசம் அவர் செயலுக்குரிய பலனை அவர்மீது விழாமல் பார்த்துக் கொண்டது. அதற்கடுத்த நிலையில் எதைச் செய்யலாம் என முனைந்து ஆராய்ச்சி செய்து சில காரியங்களைச் செய்தார். அருள் அவரைத் தடுக்க முடியவில்லை. அவர் செய்ததின் பலன் அவர் மீது விழாமல் செய்தது. அதற்கடுத்த நிலையில், எதைச் செய்தால் அருளும் நம்மைக் காப்பாற்ற முடியாதோ அதையும் செய்தார். அருள் விலகியது. பழைய வாழ்வு முழுவதுமாகத் திரும்பியது.

ஆன்மா வறுமையை அனுபவிக்க வந்தால், வறுமையிலிருந்து விலக்க முயல்பவர்களை விலக்கிவிட்டு வறுமையை அனுபவிக்கும் என்பது சித்தாந்தம். அவர் மீண்டும் வறுமையை முழுவதும் அனுபவித்தார். அவருடைய செயல்கள் அவரைச் சேர்ந்தவர் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. நான் அதைத் தொடர்ந்து கவனித்து வந்ததால் எனக்கு ஆச்சரியமாக இல்லை. அவர் குணவிசேஷங்கள் செயல்பட்ட முறை ஆன்மிக ஞானம் பெற விழைவோர்க்கு ஓர் அரிய பொக்கிஷம், சூட்சுமமாக தன்னைத்தானே அழித்துக் கொள்ள அவருடைய அறிவு துணை செய்தது.

சில வேலைகளை குறையின்றி செய்தால்தான் அவை சிறக்கும். வேறு சில இடங்களில் முன்பின் இருந்தாலும் இருந்த வரை பலன்தரும். விழா நடத்துவது, ஸ்போர்ட்ஸ், திருமணவிழா, பத்திரம் எழுதுவது, காண்டிராக்ட் எழுதுவது. புத்தகம் அச்சடிப்பது, balance sheet வரவு செலவு கணக்கெழுதுவது போன்ற பலகாரியங்கள் பிழையில்லாமலிருந்தால்தான் சிறக்கும். அன்னை அன்பர் அன்னையிடம் வந்து மனமும், உணர்வும், குடும்பமும், வாழ்வும், சந்தோஷமும் அதிகப்பட்டு நிறைவான நேரம், அருள் அவரைத்தேடி ஆன்மிகமாகவும், சேவையாகவும், செல்வமாகவும், புகழாகவும், அந்தஸ்தாகவும் ஒரே சமயத்தில் அனைத்தும் வந்தன. அவருக்கு விபரீதமான ஓர் எண்ணம் தோன்றியது. அன்னையின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிரான ஒன்றை கைக் கொள்ள வேண்டும் என்று, பிரமேயமில்லாமல் பேச ஆரம்பித்தார். பொதுவான அனைத்தும் அதே சமயம் விலகும். ஏனோ தெரியவில்லை எதுவும் விலகவில்லை. இவை பலித்து விட்டால் என்ன செய்வது என்ற உள்ளுணர்வு அவரைப் பற்றியது. அவர் மனமும் நிலையும் குறுகியவை. சுபாவமும், தன்மையும் அதற்கேற்ப அமைந்தவை. பெரியது வந்தால் தன் சிறுமையை விட்டுவிட வேண்டும் என்ற சூட்சும ஞானம் unconscious தன்னை அறியாத நிலையில் அவரிடம் வந்தது. அவருக்கு இயல்பான வேலையில் ஒரு குறையை ஏற்படுத்துவார். குறையின்றி செய்தால், அருள் பலித்துவிடும் என்ற பயம். அருள் பலித்தால் தன் சிறுமை கரையும். இவருக்கு இந்த ஞானத்தைத் தெளிவுற உணர்த்த முடியாது. ஏனெனில் மனநிலையில் அவர் சிறுமைக்கு உடையவர். தன் சூட்சும ஞானத்தால் தன் நிலையைப் பாதுகாப்பவர். பக்தர்கள் ஆசிரமம் வரும் தினம் வீட்டிலுள்ள வர்களுக்கு காயம்படுவது, கணவன் தொழில் முன்னேறும் பொழுது மனைவி ஆர்ப்பாட்டம் செய்வது, மனைவிக்கு ஸ்திரிதனம் வரும் பொழுது கணவனுக்குத் தீராத வியாதி வருவது, தொழில் அடுத்த கட்டத்திற்குப் போகும் பொழுது நரம்புத் தளர்ச்சி ஏற்படுவது, குடும்பத்தலைவர் மரணமடைவது, மனைவிக்கு நல்லது நடக்கும் பொழுதெல்லாம் கணவன் வேலையில் பெரிய சிரமம் வருவது உள்ளூர்பிரமுகர் அகில இந்தியப் பிரமுகராகும் பொழுது, வீட்டில் முக்கியமானவருக்கோ, முக்கியமான விஷயத்திற்கோ ஆபத்து வருவது போன்றவை, வரும் அதிர்ஷ்டத்திற்குரிய எதிர்ப்புகள். அவை வியாதியல்ல, விபத்தல்ல, விஷயமல்ல. அவை நமக்கோ, நம்மைச் சார்ந்தவருக்கோ வரும் முன்னேற்றம் பிடிக்கவில்லை என்று பொருள். அந்த அபிப்பிராயத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் இவை.

பிறருடைய அபிப்பிராயம் என்று தெரிந்தால் அவர் மீதுள்ள அனுதாபத்தை நாம் மனதில் விலக்கிவிட்டால் அத்தடை விலகும். நம் மனதின் தடையானால் அதை அறிந்து உண்மையாக மாற்றிக் கொள்ளப் பிரியப்பட்டால் அடுத்த நாள் தடை இருக்காது.

வாழ்வில் பல முக்கிய கட்டங்களை, பல முக்கியமான, நிகழ்ச்சிகளை இந்தச் சூட்சுமம் தெரிவதால் பூர்த்தி செய்யலாம். நூறாண்டில் நடக்கக் கூடியதை சீக்கிரம் நிறைவேற்றலாம். யோகம் என்பதே இதைப் போன்ற ஒரு ஞானம். சிருஷ்டியின் சூட்சுமம் தெரிந்தவர் யோகி.

சூட்சுமம் தெரியாமலிருப்பது ஒரு நிலை. தெரிந்து விரும்பாமலிருப்பது மற்றொரு நிலை. தெரிந்தால் அரை நிமிஷம் தாமதிக்காமல் ஏற்றுக்கொள்வார்கள் என்பது அநேக இடங்களில் உண்டு. நம் வாழ்வை இது போல் ஆராய்ந்து பார்த்து பலவற்றைக் கண்டுபிடித்து, ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றை ஏற்றுக்கொண்டால் மனிதன் அடுத்த 100 ஆண்டில் பெறும் பலனை இன்று பெறலாம்.

* * *



book | by Dr. Radut