Skip to Content

22. எல்லைக்கோடு

வாழ்வு நாட்டுக்குரியது. யோகம் காட்டைச் சார்ந்தது. தவமும் யோகமும் வாழ்வின் எல்லைக்குப் புறம்பானவை. வாழ்வுக்குத் துக்கம் உண்டு. சுகவாழ்வில் பெறும் இன்பத்தைச் சிற்றின்பம் என்றும் தவத்தால் பெறும் இன்பத்தைப் பேரின்பம் என்றும் சொல்வோம். பேரின்பம் வாழ்விலில்லை. சிற்றின்பம் தவத்திற்கு விலக்கு. இதுவே இந்திய யோக மரபு.

பூரண யோகத்திற்கு வாழ்வு புறம்பானதல்ல. வாழ்வை ஏற்று யோகத்தை மேற்கொள்வதே பூரண யோகம். யோகத்திற்கு வாழ்வு விலக்கு என்பது போல் பூரண யோகத்திற்கு வாழ்வின் பொய்மை விலக்கு. வாழ்வுக்கும் மெய்யுண்டு. வாழ்வை முழுவதும் விலக்கினால், வாழ்வின் உயர்ந்த அம்சங்கள் விலகும். வாழ்வை விலக்காமல், வாழ்வின் சிறுமைகளையும் தந்திரங்களையும், பொய்மைகளையும் விலக்கி, வாழ்வைத் தூய்மைப்படுத்தி, தெய்வத்தை அதனுள் வரவழைத்துப் பூவுலக வாழ்வை, பூவுலகிலேயே தெய்வலோக புனிதம் பெறச் செய்வது பூரண யோகத்தின் இலட்சியம்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை விலக்கப்பட வேண்டியவை. எனது மண், எனக்குரிய பெண், என்னைக்கவரும் பொன் என்ற எண்ணம் உள்ளவரை அவை பாவத்தின் சின்னங்கள். அவற்றால் பெறுவது சிற்றின்பம். எனவே அகற்றப்பட வேண்டியவை. மண் மகேசனுடையது, அதை வளப்படுத்துவது என் கடமை; பெண் மென்மையின் சிறப்பு, அதைப் போற்றுதல் புனிதன் செயல்; பொன் வாழ்வை விளக்கம் பெறச்செய்யும். அதை ஆசையின்றிச் செலவிடுதல் அவசியம் என்ற மனநிலையில் பாவத்தின் வேர் அழிந்து போகிறது. அத்துடன் புண்ணியமும் விலகுகிறது. பாவமும், புண்ணியமும் அகந்தையும், ஆசையும் உள்ள மனிதனுக்குரியது. அகந்தையும், ஆசையும் விலகியபின் பாவமில்லை, அத்துடன் புண்ணியமுமில்லை. ஏனெனில் அவை மனிதனுடைய செயல்களல்ல; மனிதனைத் தாண்டிய நிலையில் செயல்கள் தெய்வச்செயல்களாகும். "அங்கு பயமில்லை, எனவே பொய்யில்லை'' என்பது பகவான்கூற்று. திருட்டுப்பழக்கம் அற்றுப்போன வீட்டில் திருட்டில்லை. வெறுப்பு அழிந்த மனங்களில் பொறாமையில்லை, போட்டியற்ற வாழ்வில் சச்சரவில்லை. கோள் சொல்ல வராது என்ற வீட்டில் இரகசியம் பேசுவதில்லை. திருட்டும், வெறுப்பும், பொறாமையும், போட்டியும், கோளும் அழிந்த வீடு நாகரிகமான பண்படைந்த வீடு.

வெறுப்பு உயர்ந்ததாக மாறும்பொழுது அன்பாகிறது. பொறாமை தன்னைக்கண்டு தானே வெட்கப்பட்டால் பெருந்தன்மையாகிறது. போட்டிபோடக் கூச்சப்பட்டால் சுமுகம் உற்பத்தியாகிறது. கோள் சொல்ல அருவருப்படைந்தால், உணர்ச்சி மென்மையடைகிறது. அன்பும், பெருந்தன்மையும், சுமுகமும், மென்மையான உணர்வும் தாழ்ந்த குணங்கள் திருவுருமாற்றம் அடைவதால் ஏற்பட்டவை. அவற்றில் அன்னை வெளிப்படுவார். சிற்றின்பம், பேரின்பமாக தவசிக்கு மாறுகிறது. சிற்றின்பம் தன் சிறுமையை இழந்து உலகிலேயே பேரின்பமாக மாறினால் அது Divine Love தெய்வீக இன்பமாகி, பேரின்ப நிலையை மனிதனுக்கு அளிக்கிறது. ஏனெனில் பேரின்பம் மேல் உலகில் மட்டும் கிடைக்கக்கூடியது. வாழ்வை நீத்து மட்டுமே அதை அனுபவிக்க முடியும். வாழ்வைத் தூய்மைப்படுத்தி, வாழ்விலிருந்து கொண்டே பெறும் பேரின்பம், அதைவிடச் செறிவானது, எனவே சிறந்தது. அதைத் தெய்வீக இன்பமென்றோம்.

நாக்கு சுவையறியும். கண்ணும், காதும் இனிமையை அறியும் தன்மையுடையன. ஆனால் உடலுக்கு சுவையறிதலும், இனிமையை உணரும் திறனும் இல்லை, சுவையின் தரம் உயர்ந்த பொழுது, உடலும் அதையறிகிறது, புல்லரிக்கிறது. உடல் புல்லரித்து, புளகாங்கிதமடையும் இன்பம் புலன்களால் அறியும் இன்பத்தைவிட உயர்ந்தது போல், தெய்வீக இன்பம், பேரின்ப நிலையை வாழ்க்கைக்கு உணர்த்தி ஜீவனைப் புல்லரிக்கச் செய்வதாகும்.

நம் குணங்களில் தாழ்ந்தவை, உயர்ந்தவை உண்டு. தாழ்ந்தவை அருளைப் பெறத் தடையாகவும், உயர்ந்தவை உதவியாகவுமிருக்கும் என்பதை நாமறிவோம். உயர்ந்த குணங்களிலும் இரு நிலைகள் உண்டு. உயர்ந்த குணங்களை நாம் ஏற்று அதன்படி நடக்கும்பொழுது, அவை நம்மையறியாமல் தங்கள் உயர்வை இழந்து விடும். அப்படி இழந்துவிட்டால், அவை அருளுக்குத் தடையாக இருக்கும். அருள் இடையறாது செயல்பட்டாலும், நாம் ஏதோ ஒரு சமயம் மட்டும் அருளைப் பெறுவதற்கான காரணம் இதுவே. உயர்ந்தவரிடமுள்ள தாழ்ந்த குணங்கள், செயல்கள், பழக்கங்கள் தன்னை மீறி எழுந்து அருளைத் தடை செய்வதை நாம் அறிவோம். அனைவரும் அறிவோம். அதற்கு விளக்கம் தேவையில்லை. ஏனோ, பொல்லாத கோபம் வந்தது, நல்ல வேலை கெட்டுப் போய்விட்டது. அவசரம்தான் எனக்குப் பழி. கடைசி நேரத்தில் என்னை மீறி அவசரப்பட்டுவிட்டேன், அத்தோடு முடிந்துவிட்டது என்பவை அனைவரும் அறியும் நிலைகள்.

உயர்ந்த குணங்களாக ஆரம்பித்தவை, பிறகு மாறி அருளைத் தடை செய்வதை விளக்கும் கட்டுரை இது. சங்கரருக்கும் சிவபெருமான் சண்டாளனாகத்தான் பெருமான் தடுத்தாட் கொள்ளும்வரை புரிந்தது. எடுத்துச் சொல்லிய பிறகே ஆன்மாவை அவரால் காண முடிந்தது. விபூதியான சங்கரரும் ஆன்மீக உணர்வை ஒரு சமயம் மறந்து, பழக்கத்தின்படி செயல்பட வேண்டிய நிலை மனித வாழ்வின் அடிப்படை.

நாம் பல உயர்ந்த குணங்களை விரும்பி ஏற்றுச் செயல்படுத்தும்போது, நம்மிடமுள்ள பழக்கம், ஆசை மற்ற தாழ்ந்த குணங்கள், அகந்தை அழிந்து போவதில்லை. அவற்றை மீறி இந்த உயர்ந்த குணங்களை நாம் பாராட்டும் பொழுது நாளடைவில் நம்மையறியாமல் பழக்கம், ஆசை அகந்தை மேலெழுந்து வந்து உயர்ந்த குணங்களைச் செயல்படுத்த முடியும். அதற்கிடம் கொடுத்தால் இவை மூலம் உயர்ந்த குணங்கள் வெளிப்படாது. பழக்கம்தான் வெளிவரும். ஆசை முனைந்திருக்கும் அகந்தை ஆட்சி செலுத்தும். இந்த மாற்றத்தை நாம் அறியாமல் உயர்ந்த குணங்களை நினைத்துக் கொண்டிருப்போம். அது சமூகத்தில் செல்லுபடியாகும். சமூகம் ஏற்றுக் கொள்ளும். அருள் ஏற்றுக்கொள்ளாது, விலகும். இந்த மாற்றத்தை அன்னை unconciousness, insincerity கண்மூடித்தனம், உண்மையற்ற மனம் என்கிறார்.

உயர்ந்த குணங்கள், பக்தி, நம்பிக்கையுள்ளவர்கள் ஏராளமான பேர், இந்திய மக்களில் 70 சதவீதம் அப்படிப்பட்டவர்கள் என்கிறார் அன்னை. அவர்கள் விழிப்புடனிருந்தால், உண்மையுடனிருந்தால் (sincerity) அருள் தொடர்ந்து செயல்படும். நடைமுறையில் இவர்கள் வாழ்வில் அருள் அவ்வப்பொழுது செயல்படுகிறது. தொடர்ந்து செயல்படுவதில்லை. அருள் தொடர்ந்து செயல்பட நாம் எதை விலக்க வேண்டும் என்ற விளக்கமே இங்கு கருதப்படுகிறது.

1947-ல் எனது பேராசிரியர் வீட்டில் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படங்களைப் பார்த்தேன். அவர் 1934, 35, 36ல் தொடர்ந்து பகவானைத் தரிசனம் செய்தவர். அவர்கள் நூல்களைப் பயின்றவர். பகவான் (is above miracles) சித்து விளையாடும் நிலையைக் கடந்தவர் என்று அவர் சொன்னார். அவருடைய தத்துவத்தை விளக்கி ஸ்ரீ அரவிந்தர் தெய்வத்தை உலகுக்குக் கொண்டுவர முடியும் என்கிறார்' என்று சொன்னார். இது எனக்கு அழைப்பு' என்று விளங்கவில்லை. அடுத்த வாரம் என் தாயார் என்னைப் புதுச்சேரிக்கு ஒரு வேலையாக அனுப்பினார். அது வீட்டு வேலை என்றுதான் புரிந்தது. எனக்குப் புரியாத பொழுதும் அழைப்பு தொடர்கிறது என்று தெரியவில்லை. அடுத்த மாதம் ரஷிய மாணவர் குழாம் புதுச்சேரி வருவதால் அவர்களுக்கு வரவேற்பளிக்க பல மாணவர்கள் புதுவை வந்தோம். அதுவும் அரசியலாகப் புரிந்தது. அன்னையின் அழைப்பாக விளங்கவில்லை. இரண்டாண்டு கழித்து வேலை திண்டிவனத்தில் வந்தது. அதுவும் புரியவில்லை, 1950 டிசம்பரில் ஸ்ரீ அரவிந்தர் உடலைப் பக்தர்கள் தரிசனம் செய்வதைப் பேப்பரில் பார்த்தும், அதைப் போய் பார்க்கத் தோன்றவில்லை.

அடுத்த மாதம் நண்பர் சென்னையிலிருந்து வந்தார். பாண்டிச்சேரி பார்க்க வேண்டும் என்றார். வந்தோம். வீதியில் சாதகர்களைப் பார்த்தோம். ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். ஆசிரமம் போகும் எண்ணம் மனதில் எழவில்லை. 1958-ல் நேரடியாக Aug.15 தரிசனத்திற்கு ஒருவர் அழைத்தார். அழைப்பை ஏற்று வந்தேன். அன்னை தரிசனம் பெற்றேன். மனிதன் unconcious கண்மூடியாக இருக்கிறான் என்பது இது போன்ற செயல்களைக் குறிக்கிறது. '47-ல் புரியாதது '58-ல் பலித்தது. அதன் விளக்கம் புரிய '88 ஆயிற்று. தொடர்ந்த அருளின் செயலும், தெய்வத்தின் சூட்சுமமான அழைப்பு இருந்தும் அறியமுடியாத நிலையை இது விளக்குகிறது. இவை அன்னை அறியாமை, கண்மூடித்தனம், உண்மையின்மை (insincere) என்கிறார்கள்.

நான் அன்னையிடமிருந்து பெற்றவை ஏராளம். ஆனால் என் வாழ்வில் அது 10%க்கும் குறைவு. இழந்தது பதின் மடங்கு. இழந்தோம் என்று விளங்க நெடு நாளாகிறது. எனக்கு அவை விளங்கியபின் என் நிலையிலுள்ளவர்க்கு நான் சொல்வது வழக்கம். பலர் ஏற்றுக்கொண்டு பயன் பெறுகிறார்கள். பலர் மறுக்கிறார்கள். அவர்கள் என் பழைய மன நிலையிலிருப்பதாக நான் நினைப்பதுண்டு.

58 ல் வர ஆரம்பித்தது முதல் தவறாமல் தரிசனங்களுக்கு வருவேன். அந்த ஆண்டுகளில் 20 நாளைக்கு மேல் தரிசனமுண்டு. எல்லா முதல் தேதியும், Dec. 5. Dec. 9, துர்கா பூஜை போன்று நான்கு நாட்கள், தரிசன நாட்கள் ஆகிய 22 நாளும், தினமும் காலை பால்கனி தரிசனமும் உண்டு. இதுபோக ஜனவரி 6, March 29, April 4, Dec. 25லும் தரிசனம் உண்டு. நான் எங்கிருந்தாலும் வீண் பேச்சில் கலந்துகொள்ள மாட்டேன். நானிருந்தால் நண்பர்கள் வீண் பேச்சு பேசமாட்டார்கள். இது நல்லகுணம்' என்பது என் கருத்து. ஆசிரமம் வந்தேன், சமாதிக்குப் போவதைத்தவிர வேறு விஷயங்களில் கலந்து கொள்ளமாட்டேன். 1965இல் அன்னை பிறந்த நாளன்று பக்தர்களுக்கு விசேஷமாக ஆசி வழங்குவார் என்று கேள்விப்பட்டேன். வீண் பேச்சை விலக்கும் நல்ல பழக்கம், அன்னை தரிசனத்தை 7 ஆண்டு இழக்கச் செய்தது. நல்ல பழக்கம் என்று ஆரம்பித்தாலும், அது ஒரு பழக்கமானவுடன் அதன் நல்லதன்மை மாறி, ஜீவனற்று விடுகிறது. ஜீவனற்ற இடத்தில் அன்னை வரமாட்டார். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் வாழ்கிறோம் என்பது என் விஷயத்தில் நிதர்சனமாயிற்று. தவற்றை உணர்ந்தால், இழந்ததை சேர்த்துப் பெறுவோம் என்பது அன்னை சட்டம் 1965இல் அன்னையை தரிசித்தேன். அதிலிருந்து அன்பர்களை அழைத்து வரும் தோறும் ஏராளமான முறை தரிசனம் கிட்டியது. உயிருள்ள குணங்களை அன்னை விரும்புகிறார். உயர்ந்த குணமானாலும், அது பழக்கமாகி ஜீவனற்றுப் போனால் அருள் விலகும். குணங்களுக்கு உயிரளிப்பது, விழிப்பு, மனத்தின் உண்மை. வாழ்விலுள்ள மனிதன் மற்றவர் போற்றும் உண்மையைப் போற்றுவான். ஆன்மிக உண்மையை அவன் அறிவதில்லை. நான் என்ன தப்பு செய்கிறேன் என்று நாம் நினைக்கிறோம். தப்பு செய்யாமலிருந்தால் போதாது. ஆன்மாவுக்கு கணந்தோறும் உண்மையாக இருப்பதே விழிப்பு. விழிப்பில்லாத இடத்தை அருள் விலக்கும்.

விழிப்பு, உண்மை என்பதைப் பற்றி அன்னை எழுதியதை முதலில் படித்த பொழுது அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவற்றைப் பற்றி அன்னை கூறியிருப்பதெல்லாம் படித்தபின் விளங்கிற்று. அவர் சொல்லும் விழிப்பு என்ன என்று மனதில் புரிந்தவுடன் புது உலகம் ஒருகணம் தோன்றியது. 3 மைலுக்கு அப்பால் வரும் ரயில் சத்தம் கேட்கும் அளவுக்கும், பரீட்சையில் மாணவர்கள் எழுதும் எழுத்தின் ஒலி கேட்கும் அளவுக்கும் மௌனம் மனத்தை ஆட்கொண்டது. இதை ஒரு கணம் பெறுவது சிறப்பு. தொடர்ந்து பெற மனிதனால் முடியாது என்று தோன்றி, அதை மறந்து விட்டேன். பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்தால் தன்னைப் பாதிக்கும் என்ற விழிப்பு சிவபெருமானுக்கில்லை. அன்னை சொல்லும் விழிப்பை ஏதோ ஒரு சமயம் பெறலாம், தொடர்ந்து பெறமுடியாது என்று கருதினேன். என் கருத்தை அன்னை அறியாமை என்று விளக்குகிறார். பெற்ற விழிப்பைப் பெற நமக்குரிய முயற்சியை முழுவதுமாகச் செய்தால், நாம் வேலைக்குப் போக முடியாது, வேறு வேலை செய்ய முடியாது. எனவே இது நமக்கில்லை என்று நான் அதை மறந்துவிட்டேன். 10, 20 வருஷங்களுக்குப் பின் எனக்குப் புரிய ஆரம்பித்தது. என் முயற்சியால் இதைப் பெறமுடியாது என்பது உண்மை. இந்த யோகத்தின் அடிப்படை என் முயற்சி'யை விடுவது, சரணம் செய்வது. முயற்சி என்பது அகந்தையுள்ளவரை இருக்கும், முயற்சி அகந்தையின் கருவி. முயற்சியை சரணம் செய்தால், அருள் செயல்படும். அருளுக்கு அது முடியும். முயற்சிக்கு முடியாது.

நம் முயற்சியை நம்பாமல், அருளை மட்டும் நம்பும் மனநிலை உண்மையான மனநிலை. அதுவே விழிப்பு. அது புரிந்தபின் உலகம் புதியதாக காட்சியளிக்கின்றது. அந்நிலையே நிரந்தரமாக இருப்பது கடினம் என்பது உண்மையானாலும், எந்த ஒரு முக்கியமான காரியத்திலும், அந்நிலையைப் பெற வேண்டும். அதற்குத் தடையானவற்றைப் புரிந்துகொள்வது அதற்குதவும்.

அருள் செயல்படுவதற்கு ஆன்மிக அறிகுறி மனம் பரந்து விசாலமாகி, லேசாகி, மெய்மறந்து, உடல் புல்லரித்து, கண்கள் நீர் பெருக்குவதாகும். மனத்திற்கும் அருள் செயல்படுவதற்கும் ஓர் அறிகுறியுண்டு. மௌனத்தால் நிரம்புவது ஒன்று. நம் தொழிலில் புதிய கருத்து (creative idea) தோன்றி பலரும் வியக்கும்படி இருப்பது அடுத்தது. தாங்கமுடியாத ஆனந்தம் உணர்ச்சியின் அறிகுறி. காரியம் அற்புதம் போல் நடப்பது செயல் உடலின் அறிகுறி.

அருள் செயல்பட்டால் காரியம் க்ஷணத்தில் நடந்துவிடும். ஒரு வீட்டில் திருமணத்திற்கு வழியில்லாத நிலையில் இரண்டு திருமணமும் ஓர் உபநயனமும் இரண்டு மணிநேரத்தில் முடிவானது அருளின் செயலாகும். மெதுவாகப் பூர்த்தியாவது நடைமுறையில் நடப்பது. விரைவாகப் பூர்த்தியாவது அருளால் முடிவதாகும்.

அருள் செயல்படுவதை நம்மவர்கள் தவறாமல் அறியக்கூடியவர்கள். எந்த ஊரிலும் கைராசியுள்ளவர்களை அனைவரும் அறிவார்கள். ஆன்மவிளக்கம் பெறவில்லை யானாலும், யார் வந்தால் காரியம் கூடிவருகிறது என்பதைத் தமிழர்கள், இந்தியர்கள் அறிவதை மேல்நாட்டார் ஆச்சரியத்துடன் பேசுவார்கள். சில ஊரில் கைராசி டாக்டர், கைராசி வக்கீல் என்றே இருப்பதுண்டு. இராசி என்ற பொழுதும், அங்கு செயல்படுவது அருளேயாகும்.

வேதபுரி முதலியார் water diviner. இவரைப்பற்றி ஒரு முழுக்கட்டுரை எழுதினேன். வீரசைவர். வெள்ளைக்காரருக்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பில்லை என்பவர். பெண்களை ஆன்மிகத்துடன் சேர்த்துப் பேசவும் சம்மதிக்காதவர். ஒருமுறை வேறுகாரியமாக சமாதி வந்தபொழுது, அது இலாபகரமாக தொழிலில் பிரதிபலித்ததைக் கண்டு, அடுத்த முறை தானே சமாதிக்குப் போய்வந்து, மீண்டும் பலன் தெரிவதைப் பார்த்து என்னிடம் வந்து இதில் என்ன விசேஷமிருக்கிறது, ஆசிரமம் போய்வந்தால் ஆர்டர் வருகிறதே' என்றார். மேலை நாட்டாருக்கு இந்தத் தெளிவு இல்லை. நம் நாட்டில் பெரும்பாலோர்க்கு நல்லது கெட்டது என இதுபோல் பாகுபாடு செய்யத் தெரியும்.

கர்ணன் கொடையாளி. கொடை உச்சகட்ட உயர்ந்தகுணம். அவன் உயிரைப் பறிக்க அதை கருவியாகப் பயன்படுத்துவது தெரிந்தும் இல்லை என்று அவனால் சொல்ல முடியவில்லை. உயர்ந்த குணம், நிலைமைக்குத் தகுந்தாற்போல் மாற முடியாததால், உயிரைப் போக்கும் குணமாயிற்று. கர்ணன் சூரியபுத்திரன். அவன் விஷயம் பெரியது. நாம் சாமானிய மனிதர்கள். நம் வாழ்வைக் கவனித்தால், கர்ணனைப்போல் நாம் பலியாவது தெரியும். கேட்டால் இல்லை என்று சொல்ல முடியாது என்பவரிடம் டேப் ரிகார்டரைக் கொடுத்து, அவருடைய பெங்களூர் மனையை மாற்றாக ஒருவர் வாங்கிக்கொண்டார். போனது மனை; வந்தது டேப் ரிக்கார்டர். அன்னையிடமிருந்து புஷ்பம் பெற்றுக் கீழே வரும் பொழுது கொடு பார்க்கலாம் என்றால் கொடுக்காமலிருப்பது நாகரிகமில்லை என்று கொடுத்தால், ஒரு வருஷத்திற்கு அன்னை உனக்காகவே அளித்த special blessings குறிப்பான ஆசீர்வாதம் இடம்மாறிப் போகிறது. ஆர்வம் (aspiration) என்பது பல நிலைகளில் உண்டு. ஐந்து வருஷம் தயார் செய்து Earth summit போட்டது போல் நம் ஜீவன் பல ஆண்டுகள் தயார்செய்து ஆர்வத்தை மேலே கொண்டு வருவதை நாம் பெரும்பாலும் உணருவதில்லை. "ரொம்ப நன்றாக இருக்கிறது'' என்று மட்டும் அறிவோம். அது மேலே வரும்பொழுது எதிர்பாராத விதமாக நம்மைச் சமாதியருகே சந்தர்ப்பம் கொண்டுவரும். தானே ஒருவர் ஸ்ரீ அரவிந்தர் அறைக்குப் போ என்பார். நெஞ்சு அலையலையாக நிறைந்து, விம்மி, வெடிக்கும் நிலையில் உடலெல்லாம் நிறைவது தெரியும். அருள் ஸ்ரீ அரவிந்தர் அறைக்கு அழைப்பதும் வலியவரும். மற்றொருவர் வலியவந்து என்னுடன் வா என்பார். அவர் அருகில் வரும்பொழுது ஆர்வம் தணிவது தெரியும். ஸ்ரீ அரவிந்தர் அறையை உற்று நோக்கினால், ஆர்வம் பெருகுவது தெரியும். உடன் வந்தவர் பஸ்ஸுக்கு நாழியாகிறது அடுத்த முறை அறையைப் பார்க்கலாம் என்பார். எதைச் செய்வது, எதைத் தவிர்ப்பது என்பது தெரியாது. ஆர்வத்தை மட்டும் நினைத்தால், மற்றவர்கள் விலகுவார்கள். அறைக்குப் போனால் ஆர்வம் சிறந்து பூரிக்கும். இதைப்பெற்றவர்கள், கடந்து 25 வருஷமாக அது மீண்டும் வரவில்லை என்பார்கள். இழந்தவர்கள், "மனமே நிறைந்திருந்தது. பஸ்ஸுக்குக் கூப்பிட்டார். அது மறைந்து விட்டது. பிறகு வரவேயில்லை'' என்பார். பலருக்கு ஒருமுறையும் வாழ்வில் கிடைக்காதது. சிலருக்கு 10 வருடத்திற்கு ஒரு முறை வரும். இதுபோன்ற, ஆர்வம் அடிக்கடி வந்து "தாங்கமுடியாத ஆனந்தம்'' நிரம்பிய பெண், அன்னை முறைக்குப் புறம்பான பெண் எழுதிய புத்தகத்தைப் படித்து அதை முழுவதும் இழந்தார்.

அந்த அம்மையாருக்கு ஆனந்தம் வந்தது தெரியும். எப்படி வந்தது என்று தெரியாது. போனது தெரியும். புத்தகத்தால் போயிற்று என்று தெரியாது. இதை நாம் எப்படித் தெரிந்து கொள்வது என்பது பெரிய கேள்வி. இந்த அம்மையாரைப் பொறுத்தவரை அது கேள்வியில்லை. தாங்க முடியாத ஆனந்தம் உணர்ச்சியில் பகவான் குடிகொண்டதால் வந்தது. அது நிறைவது நல்ல காரியம். அது குறைவது புறம்பான காரியம்.

ஆனந்தத்தை அடையாளமாக கருதினால், புத்தகத்தை வாங்கியவுடன் மனம் சரியில்லை என்று சொல்வது தெரியும். மனம் சொல்வதைக் கவனிக்காமலும், கவனித்தால் புறக்கணித்தும், வலிய புத்தகத்தை வாங்கிப் படித்தால் ஆனந்தம் மறைகிறது. வாங்கிவைத்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படங்களை வீட்டிற்குக் கொண்டுவர முடியவில்லை. இதைக் கவனித்தால் நிச்சயம் தெரியும். கவனிக்காமல், சட்டம் பேசினால் எவருக்குமே கிடைக்காத பேரானந்தம் சொல்லாமல் போய் விடுகிறது. ஆனந்தம் நிறைந்திருந்தபொழுது அவருடைய முகத்திலிருந்த ஆன்மிகக்களையை இதுவரை நான் யார் முகத்திலும் பார்த்ததில்லை. தெளிவில்லாமல் தானே அருளை விலக்கும் செயல் இது.

அன்னை உலகில் அவதரித்தது ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் மனிதன் பெறக்கூடியதை இன்று பெற்றுத் தருவதற்காக. அவருடைய அவதாரத்தை மனிதன் புரிந்து கொள்ளவில்லை. மனிதனை நாடி தான் பெற்றுள்ள அமிர்தத்தை அவனுக்குக்கொடுக்க வலிய வந்தபொழுது மனிதன் விலகிச் சென்றான். மனிதன் பின்னால் சென்று அமிர்தத்தை அவன் பெற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்திய பொழுது, மனிதன் மறுத்துவிட்டான். மனிதன் மறுத்தபின் அந்த அமிர்தத்தை தெய்வங்களுக்குக் கொடுத்தேன் என்ற தன் ஆன்மிக அனுபவத்தை அன்னை

"அளவுகடந்த அன்புடன் நான் மனிதனுக்காகத் தயார் செய்த அமிர்தத்தை அவன் மறுத்து விட்ட பொழுது தெய்வங்களுக்கு அளித்தேன்'' என்று கூறுகிறார்.

அன்னையின் அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்ய சூட்சும உலகில் ஈஸ்வரனுடைய சக்தி பூவுலகுக்குப் புறப்பட்டு வந்து, அன்னைக்குப் பக்கபலமாக இருந்தது. அதையும் யோகம் செய்பவர்கள் அறிந்து கொள்ளவில்லை. ஒரு சமயம் அன்னை அதைச் சுட்டிக்காட்டி Universal Mother சர்வேஸ்வரியே இங்கு வந்திருக்கிறார், அதை நீங்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து பாராமுகமாக இருந்தால், அவர் திரும்பிப்

போய்விடுவார் என எச்சரிக்கிறார். எச்சரிக்கைக்குப் பயனில்லை. அவர் திரும்பிப் போய்விட்டதாக அன்னை அறிவித்தார்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் யோகத்தை மேற்கொண்டபின் அரசியல் நேரடியாகத் தலையிடவில்லை. 1942-ல் கிரிப்ஸ் மிஷன் வந்த பொழுது இந்திய சுதந்திரம் பெற்ற அதிர்ஷ்டம் அது என பகவான் உணர்ந்தார். காங்கிரஸ் தலைமை அதை உணரவில்லை. அதைத் தவற விட்டால் துர் அதிர்ஷ்டம் வரும் என அறிந்த பகவான் காங்கிரஸ் தலைமைப் பீடத்திற்கு கிரிப்ஸ் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி கடிதம் எழுதினார். தலைமை அதை மறுத்துவிட்டது. சுதந்திரம் வரும் பொழுது நாடு துண்டிக்கப்பட்டது. அவதார புருஷன் நேரடியாகத் தலையிட்டு துர் அதிர்ஷ்டத்தை தவிர்க்கச் சொன்ன பொழுது, அரசியல் தலைமை அருளை விலக்கும் வகையில் நடந்து கொண்டது.

1950-ல் கிராமந்தோறும் பள்ளிகள் திறந்தனர். பெற்றோர் குழந்தைகளை அனுப்ப மறுத்ததால், பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன. தேடிவரும் அருளை வலிய விலக்கும் பழக்கம் மனிதனுக்குண்டு. 4500 சம்பாதிப்பவருக்கு 40,000 சம்பளம் வந்தது. தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். அதை விட்டு விட்டுப் பழைய வேலைக்கு வரவேண்டும் என நினைக்கிறார். தன் உரிமைகளை உதறித் தள்ளி விலகியவர், 20 வருஷங்களுக்குப் பின் அன்னையை ஏற்றுக் கொண்டபின், உரிமைகள் திரும்பி வந்தன. இருபது லட்சம் கொண்டு வந்து கொடுத்தனர். வாங்க மறுத்துவிட்டார்.

பத்தாயிரம் பெரிய தொகை என நினைப்பவரை அருள் தேர்ந்தெடுத்து பத்து இலட்சம் கொடுக்க முனைந்தது. அவருக்குத் தகுதியில்லை. தகுதியைப் பெற்றுக் கொடுத்தது. திறமையில்லை. திறமையை அளிக்க முன் வந்தது. வாய்ப்பில்லை. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. வரும் வருமானத்தை நம்பவில்லை. அரை மனதுடன் ஏற்றுக்கொண்டு அருளை விலக்கும் பழைய பழக்கங்கள் மூலம் செயல்பட்டார். ஒரு பத்தாயிரம் வந்தது. சலித்துக்கொண்டு தொடர்ந்தார். அடுத்த பத்தாயிரம் வந்தது. வருவதைப் பெற்றுக்கொள்ள கிராக்கி

செய்தார். பிறர் உதவியை ஏற்பது தவறு என்று பேசினார். இரண்டு நாள் இவருடன் பழகியவர் ஒருவருக்கு இவரைச் சுற்றியுள்ள அருள் கண்ணில் பட்டது. அவர் அருளைப்பெற விழைந்தார். அருள் அவருக்குப் பலித்தது. அடுத்த பத்து மாதத்தில் அருளைப் பெற்றவர் பத்து இலட்சம் சம்பாதித்து விட்டார். அருளை விலக்குபவர், அருளின் உற்பத்தி ஸ்தானத்தை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தார். அவர் உறவினர் திறமைசாலி. இவர் விலக்கிய அருள் சாமர்த்தியம் உள்ள இடத்தை நோக்கிப் போயிற்று. உறவினர் உள்ள இடம் உயர்ந்த இடம். உயர்ந்த இடத்தில் திறமையுண்டு. திறமையை அருள் நாடும். திறமைக்குப் பரிசு கிடைத்தது. மாநிலத்தில் தன்மையான இடம் திறமையுள்ளவரைத் தேடிப் போய்விட்டது.

அருள் வலிய வருகிறது. வலிய விலகும் குணம் மனிதனுக்குண்டு. வலிய விலக்கும் குணமும் உண்டு. நம்பிக்கை, பக்தி, சேவை, திறமை, உயர்வு போன்றவை விலக்குபவரைச் சுற்றியிருந்தால், அவர் விலக்கியது, சுற்றியுள்ளவரைச் சேரும்.

"ஏதோ வருகிறது. ஒன்றும் பலிப்பதில்லை'' என்று மனம் சொல்கிறது. வலிய இவர் அருளை விலக்கும் பொழுது, அவர் வாழ்வில் நல்லது செய்ய சந்தர்ப்பத்தை அருள் மீண்டும் வலிய ஏற்படுத்தியது. அன்பு செலுத்த ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுது, "அன்பைப் பார்க்காமல், மரியாதையைப் பாராட்டி'' அருளை மீண்டும் விலக்கினார்.

1970-ல் கிராம முன்னேற்றத்திற்காக வேலை செய்து, அது அபரிமிதமாகப் பலித்த பொழுது, 100 கிராமங்களை அடுத்தகட்டத்தில் முன்னேற்றப் பிரியப்பட்டேன். ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டது. முதல் திட்டத்திற்கு உதவி செய்த தலைவர் இசையவில்லை. அவருடைய இலாக்காவிற்கு மத்திய மந்திரி எனக்கு ஆரம்ப காலத்தில் சக ஊழியர். அவரிடம் திட்டத்தைச் சமர்ப்பித்தேன். தன்னை வந்து பார்க்கும்படி எழுதினார். சந்தித்த பொழுது திட்டத்தில் அவர் ஆர்வம் காட்டவில்லை. நான் திட்டத்தைக் கைவிட்டு விட்டேன். அருள்

செயல் பட்டது. வருஷத்தில் இன்று மூவாயிரம் கோடி உதவி செய்யும் நிறுவனத்தின் டிரஸ்டி ஆசிரமம் வந்தார். என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வேண்டுமென்றார். அவரைச் சந்தித்தேன். திட்டத்தை அவர் ஏற்றார். இதைவிட பெரிய திட்டம் போட முடியுமா என்றார். நூறு கோடியில் ஒரு திட்டம் என்னிடம் உள்ளது என்றேன். இருநூறு அல்லது முன்னூறு கோடியில் திட்டம் தயாரித்தால் எங்கள் நிறுவனம் உதவி செய்யும் என்றார். நான் அவரைக் கேட்ட ஒரே கேள்வி "எவ்வளவு நாளாக அன்னையை உங்களுக்குத் தெரியும்?'' "பிறந்ததிலிருந்து ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாது அன்னையை இந்த 52 வருஷமாக நான் தரிசித்து வருகிறேன்'' என்றார். நிச்சயம் இந்தத் திட்டம் பலிக்கும் என்பதை நான் உணர்ந்தேன்.

கிராமத் திட்டத்தில் என்னுடன் வேலை செய்பவர்கள் யாருக்கும் அக்கரையில்லை. எனக்கு மேலே உள்ளவர் தினமும் அன்னையைத் தரிசிப்பவர். அவருக்கு அன்னை மீது நம்பிக்கையில்லை. என்னைக் கேலி செய்தார். எனக்குக் கீழே வேலை செய்பவர்கள் எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்யாத சோம்பேறிகள். என்னுடன் உள்ள மற்ற எந்த நண்பருக்கும் எந்தச் சேவையிலும் மனமில்லை. அன்னைமீது யாருக்கும் நம்பிக்கை யில்லை. வெறும் பேச்சுப் பேசும் விதண்டாவாதக்காரர்கள். தன்னம்பிக்கையில்லாதவர்கள். "யாருக்கு சேவை வேண்டும். நம் காரியத்தைப் பார்ப்போம்'' என வெட்கமில்லாமல் பேசுபவர்கள். அனைவரும் திட்டத்தை விட்டு மனதில் விலகினர். முதல் நாளிருந்த நம்பிக்கை எனக்கு அடுத்த நாள் போய்விட்டது, எதுவும் சரியில்லை, யாரும் சரியில்லை. எனவே எதுவும் நடக்காது என்று நினைத்து அதை மறந்துவிட்டேன்.

இதுபோன்று நான் கைவிட்ட திட்டங்கள் சுமார் பத்து திட்டங்களாகும். எதுவும் சரியில்லை. யாரும் சரியில்லை என்றால் தடை அதிகம் என்று பொருள். தடை அதிகமானால், வாய்ப்பு பெரியது என்று அர்த்தம். வாய்ப்புக்குத் தகுந்த அளவு என் நம்பிக்கையை உயர்த்தி, என் முயற்சியை உயர்த்தினால், அருள் செயல்படும், பலிக்கும் என்று அன்று எனக்குத் தோன்றவில்லை. தெரியவில்லை. அறிவில்லை.

ஒரு காரியம் பலிக்காது எனில் அது சொல்லாகவும் நம்மை நாடி வராது. நம்மை நாடி வந்த வாய்ப்பை நாம் ஏற்றுக் கொண்டு, அதற்குரியவை அனைத்தையும் நாம், பிறரை எதிர்பார்க்காமல் செய்துவிட்டால், அருள் பலிக்கும் என நான் அறிவதற்கு மேலும் 15 வருஷமாயிற்று. 15 வருஷங்களுக்குப் பின் அது புரிந்தது. செயல்பட ஆரம்பித்தது. புதிய சந்தர்ப்பங்கள் வந்தன. நமக்கு நெருக்கமானவர் இன்று அதே ஸ்தாபனத்தில் அதே பதவிக்கு வந்துவிட்டார் என்பது தெரியாமல், அவரிடம் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்தோம். அவர் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். அதே போன்ற நிதி உதவி அளிக்கும் மற்றொரு ஸ்தாபனத்தின் தலைவரை சக ஊழியராக அழைத்தார். அவரும் சம்மதித்தார். திட்டத்தை உலகெங்கும் அமல்படுத்த வேண்டும் என்று பேசினர். முதல் இரண்டு நாடுகளில் சோதனை செய்ய முனைந்தார்கள். இந்தியாவில் இந்தத்திட்டத்தை நிறைவேற்ற 70,000 கோடி தேவை. இந்திய சர்க்கார் 100 கோடி ஒதுக்கி சோதனை செய்ய சம்மதித்தது. வேறு இரு நாடுகளும் திட்டத்தில் அக்கரை காட்டின.

திட்டம் பெரியது தொகை பெரியது. தலைவர் சரியில்லை. சக ஊழியர் ஒத்து வரவில்லை என்பவை சரியான காரணமில்லை. நான் சரியாக இருந்தால், அருள் செயல்படும். நான் சரியாக இல்லாவிட்டால் அருள் விலகும். அருள் செயல்பட ஆரம்பித்தால், சரியில்லாதவர் விலகுவார்கள். சரியானவர் சேருவார்கள். இதை மனம் ஏற்றுக் கொள்ள Himalayan faith மலை போன்ற நம்பிக்கை வேண்டும். பெரிய காரியத்தை நான் எப்படிச்செய்யமுடியும்என்பதுதவறானகேள்வி.செய்வதுநான் என நினைப்பது தவறு. செய்வது அன்னை. நம் பங்கு நம்பிக்கை, தூய்மை, சரணாகதி மட்டுமே. அன்னை இவற்றைப்பற்றி அநேக இடங்களில் எழுதியிருக்கிறார்கள். நாம் அதைப் படிக்கிறோம். பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்த மனதில் நம்பிக்கை வேண்டும்.

ஆயிரம் கோடி திட்டத்தில் சோதனை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆயிர ரூபாய்க்குக் கடைசாமான் வாங்கும் செயலும் சோதனை செய்யலாம். இரண்டும் ஒன்றே.

சிறியதில் வெற்றிகண்டால், பெரியது பலிக்கும். சிறியது, பெரியது என்ற வேறுபாடு அன்னையிடமில்லை. ஜீவனுள்ளது, ஜீவனற்றது என்ற பாகுபாடுண்டு. அகந்தை, அடக்கம் என்ற பிரிவுண்டு. நல்லது கெட்டது என்பதுண்டு.

மரியாதை, செல்வாக்கு, அந்தஸ்து, கிராக்கி, வக்கிர புத்தி, ஜீவனற்ற முறை, இது சௌகரியம், சிறுமை, அவசரம், போலி கௌரவம், ஜாதி உயர்வு, படிப்புக்குரிய உயர்வு, செல்வம் ஆகியவற்றை ஒதுக்கி, அடக்கம், பணிவு, பெருந்தன்மை, உயர்ந்த மனப்பான்மை, விட்டுக் கொடுத்தல், ஜீவனுள்ள செயல், இலட்சியம், பெருமை, பொறுமை, மனிதத்தன்மை, அகவுணர்வுக்குரிய உயர்வு, ஆன்மிக உயர்வு, நல்லெண்ணம் ஆகியவற்றைப் பாராட்டினால், விழிப்புடனிருந்தால், அருள் நம்மை நாடி வரும், ஆன்மா செழிக்கும். இதுவரை இழந்தவை இனி விழிப்பு ஏற்பட்டால் சேர்ந்துவரும். மனம் விழிப்படைந்த பின் நஷ்டம் என்பதில்லை. கடந்த கால கர்மத்தைக் கரைக்கும் அருள் கடந்த கால நஷ்டத்தையும் கரைக்க வல்லது. இந்த விழிப்பேற்பட்ட பின் மனம் வாழ்வின் வசதிகளை நாடாது. அன்னையின் சிறப்பை அகத்தில் நாடும். அதை நாடாதவர்க்கு வாழ்க்கை அளவு கடந்த வளத்துடன் அமையும். அந்த வாழ்வில் உலகத்திற்குரிய சிறுமைகள் இருக்காது.

இதெல்லாம் நமக்கெதற்கு, இருப்பது போதும், காசியில் கலம் விளைந்தால் நமக்கென்ன, நடைமுறையைப் பார்ப்போம் என்பவர் ஒருவகை. அவர்கள் சாமானிய மனிதர்கள்.

இப்படி ஒன்றிருக்கிறதா? அது அதிக உயர்வானதாயிற்றே நமக்கு எட்டாதது போலிருக்கிறது என்று உயர்வை நாடும் மனமும், தயங்கும் குணம் உடையவர் ஒருவகை.

உயர்வு உலகத்திலிருக்கிறது. ஒருவருக்குப் பலிக்கிற தென்றால், நாமும் அதைப்பெற வேண்டும், பெறமுடியும் என்பதைப் பெற எல்லா முயற்சியும் செய்ய நான் தயார் என்பது மற்றொரு வகை. இந்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் தயக்கம், குழப்பம், சந்தேகம் ஆகியவற்றைப் போக்க இக்கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். இந்தியாவின் ஜனத்

தொகையில் இந்த மூன்றாம் வகைக்குரியவர் முக்கால் பாகம் என்று அன்னை கூறுகிறார். இவர்களுக்குத் தங்கள் (potentiality. possibility) வாழ்வில் பொதிந்துள்ள சிறப்புகளைச் சொல்பவர் இல்லை. நேரடியாகப் பலன் பெற அனைவரும் முன்வருவார்கள். பட்டம் பெற்றவனுக்கு வேலை என்றால், உடனே ஆயிரம் அப்ளிகேஷன் வரும். பட்டம் பெறத் தகுதியுடையவனைப் பார்த்து, நீ பட்டம் பெற்றால் வேலை கிடைக்கும் என்றால் அதற்கு முன்வர மாட்டார்கள். ஒரு தகுதி புதைந்துள்ளது. தகுதியைப் பெற்றால் மேலும் சிறப்புப் பெறலாம் என்பதை ஏற்க முன்வருபவர்களை நான் இதுவரை சந்தித்ததில்லை.

அன்னையின் முடிவான இலட்சியம் யோகம் பலித்து, சத்திய ஜீவன் பிறப்பது. அந்த இலட்சியத்திற்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள நிலைகள் நான்கு. தெய்வ நிலை, யோகி, ரிஷி, முனிவர் ஆகியவையாகும். மனிதனில் மிக உயர்ந்தவர் அவதாரமாகும். அதற்கடுத்த நிலையிலுள்ளவரை விபூதி என்போம். அலெக்ஸாண்டர், சங்கரர், சிவாஜி போன்றவரை விபூதி என்பது குறிக்கும். அதற்கடுத்த நிலை genius மேதை என்பது இவை உயர்ந்த மனித நிலைகள். அவற்றை நான் இக்கட்டுரையில் எழுதவில்லை. மற்றவர்கள் சாமானியர்கள். அவர்களையும் பாகுபாடு செய்யலாம். அந்நிய கலாசாரத்தை ஆழ்ந்து ஏற்றுக்கொண்டு மனத்திலும், ஜீவனிலும் ஆன்மிகத்திலிருந்து விலகியவர் உண்டு. இவர்கள் நாட்டில் கால் பங்கு இருப்பதாக அன்னை கூறுகிறார். மீதி முக்கால் பங்கு ஜனத்தொகைக்கு தகுதியுண்டு என்று அன்னை கூறுகிறார். அவர்களுள் முயற்சியில்லாதவர், தயக்கமுடையவர் போக மீதிப்பேருக்கு அருளை ஏற்கும் வாய்ப்புண்டு. அவர்களில் அன்னையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு வாய்ப்பு அதிகம்.

தகுதியும், முயற்சியும் உடைய அன்னை பக்தர்கள் அருளிலிருந்து விலகும் வகை பல. அவற்றைக் கூடியவரை விளக்க முயல்கிறேன்.

1. ஒருமுறையை நல்லது எனப் பின்பற்ற ஆரம்பித்து முறை ஜீவனற்றுப் போவதால் அருள் விலகுகிறது. 2. நல்ல உயர்ந்த பழக்கம், தடம்மாறி, தடையாக மாறுகிறது.

3. நான் எனும் முனைப்பு வெற்றியால் ஏற்பட்டுத் தடையாகிறது.

4. ஜீவனற்றது எனத் தெரிந்தும், சூழ்நிலையால் விடமுடியாத பழக்கம் தடை.

5. ஓர் இடத்தில் உயர்ந்த குணமிருப்பதால், அடுத்த இடத்தில் உள்ள தாழ்ந்த குணம் தெரியாமற் போகிறது.

6. கெட்டதை விலக்கப் போய், நல்லதையும் விலக்கி வரும் பழக்கம்.

உயர்ந்தது மாறினால், தாழ்ந்ததாகிறது என்கிறார் பகவான். 100 மார்க் வாங்கும் மாணவன் சரியில்லாவிட்டால் 90 வாங்குவான் என நாம் நினைக்கிறோம். சிறந்த மாணவன், தடம் பிறழ்ந்தால், திருத்த முடியாத தறுதலையாவான் என்பது பகவான் கொள்கை. நக்கீரர், உள்ளதை ஒளிக்காமல் பேசும் உயர்ந்த குணத்தை அளவு கடந்து பின்பற்றியதால் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும், குற்றம் குற்றமே என்றார். உயர்ந்த புலவரை, உயர்ந்த கொள்கை, தவறு செய்யத் தூண்டியது. எனவே உயர்ந்த கொள்கைக்கு வரையறை உண்டு. எல்லைக்கோட்டைத் தாண்டினால் நல்லது, கெட்டதாகும். நான் என்ற முனைப்பு வந்தால் எல்லைக் கோட்டைத் தாண்டுகிறோம். இந்தப் பதில் எதற்காகச் சொல்கிறோம். இலக்கணத்திற்கான பதிலா, அல்லது நான் பெரியவன் என்பதால் வரும் பதிலா என்பது சொல்பவருக்குத் தெரியும். இலக்கண வரம்பு எல்லையைத் தாண்டாது. நான் என்பது தாண்டும். தாண்டினால் அருள் விலகும்.

சிக்கனம் நல்ல பழக்கம். வீண் செலவைக் குறைப்பது சிக்கனம். நாளடைவில் அதுவே ஒரு பழக்கமாகி, சிக்கனம் என்ற

கொள்கையைக் கடைப்பிடிப்பது முக்கியம் எனக் கருதி அதனை கடைப்பிடித்தால் முக்கிய வேலைகள் தடைபடும். நமக்காகச் சிக்கனம். சிக்கனத்திற்காக நாம் என வாழ ஆரம்பித்தால், நல்லமுறை தவறாக மாறும். இது அருளை விலக்கும்.

பெரும் தன்மையாக இருக்க விரும்பி கேட்டவர்களுக் கெல்லாம் உதவி செய்து சொத்தை இழப்பது சரியில்லை. கேட்பது சரியில்லை. நல்ல கொள்கையை சுயநலமான தம்பியிடம் பின்பற்றி, சொத்து முழுவதையும் அவன் ஆக்கிரமித்துக்கொண்டு உன் குடும்பம் நிர்க்கதியாகப் போவது முறையாகாது. இதைச் செய்பவர் குறைவு. கேட்பது சரியில்லை என்பதால், அன்னையைத் தரிசனம் செய்ய அனுமதி கேட்பதும் சரியில்லை என்று அருளை இழப்பது சரியில்லை.

நான் பிறர் உதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்ற நல்ல கொள்கையை 93 வயதில் பார்வை இழந்த பின்னும் பின்பற்றிச் சிரமப்படுதல் சரியில்லை. அன்னையை என் வியாதியை குணப்படுத்துங்கள் என்று கேட்பதும், பிறர் உதவியை நாடுவது என்பதால் கேட்கமாட்டேன் என்றவர் ஒருவர்.

கூட்டத்தில் நான் கலந்து கொள்வதில்லை என ஆசிரம தரிசனங்களை இழந்தவர் ஒருவர்.

நான் செய்யும் பிரார்த்தனை அத்தனையும் பலிக்கும் என்று நினைத்து நான்' என்பதை முன்னுக்கு வைத்து அருளை விலக்கியவர் சிலர்.

நம் முறை சரியா, நம் பழக்கம் நல்லதா என அறிய பகவான் ஒரு யோசனை கூறுகிறார். எந்த உயர்ந்த இலட்சியமும், நடைமுறையில் பலன் தரத்தக்கதாக இருக்கவேண்டும். The touch of the earth is the test என்கிறார். நாம் செய்யும் காரியங்களில் பலனைக் கண்டால், பெரும்பாலும் அது சரியான முறையாக இருக்கும். பலன் இல்லாவிட்டால் நிச்சயமாக முறை சரியானதல்ல எனலாம் என்பது ஸ்ரீ அரவிந்தர் விளக்கம்.

சாம்பாரில் உப்பு அளவோடு போடவேண்டும். அளவு சரியானதா என்பதை ருசி சொல்லும், தவறுக்கு வழியில்லை, உப்பு தேவை என்பதால், அதிகமாகப் போட முடியாது. நல்லமுறை என்பதால், அளவு கடந்து பின்பற்ற முடியாது.

மாதம் ஆயிர ரூபாய் கைச்செலவாகச் செய்பவர், அண்ணனிடம் கொடுத்த 5 ரூபாயைக் கேட்டு வாங்குவது அவருக்குத் தப்பாகத் தெரியவில்லை. கணக்காகச் செலவு செய்யவேண்டும் என்று, அக்கொள்கையை அளவு மீறி பின்பற்றி, பிறர் மனம் புண்பட நடந்தால், புண்படும் செயல் அருளை விலக்கும்.

அறிவில்லாமல் செயல்படுவதைவிட அறிவோடு செயல் படுதல் நல்லது. அறிவோடு செயல்படுவதால், அருள் நம்மை நாடிவரும். அறிவுக்கு அருள் தரும் பரிசு அது. அருள் நம்மை நாடிவருவதை அறியாமல், அறிவைப் பின்பற்றினால், அருள் விலகும். சர்க்கார் உத்தியோகத்தில் தற்காலிகமாக ஆபீசர் வேலை செய்தவர், நிரந்தரமான உத்தியோகத்திற்கு விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் சேரும் முன் ஆசிரமம் வந்தார். அன்று தற்காலிகமான உத்தியோகத்திற்கு சம்பள உயர்வு வந்ததை பேப்பரில் பார்த்தார். 6 இன்க்ரிமெண்ட் அதிகமாக வந்துள்ளது. இந்தப் புதிய உத்தியோகத்தில் இன்று ஆரம்பித்து 6 வருஷம் கழித்து தான் விடப்போகும் வேலையின் புதிய சம்பளத்தை எட்டிப் பிடிக்கவேண்டும்.

நிரந்தரமான வேலையை ஏற்பது அறிவு. அருள் செயல்பட்டதற்கு அடையாளம் சமாதி தரிசனத்திற்குப் பின் சம்பள உயர்வு வருகிறது. தற்காலிக வேலையைத் தொடர்ந்து செய்ய 4 பெரும் தடைகளுண்டு. இது அறிவுக்கும், அருளுக்கும் உள்ள இடைவெளி. நம்பிக்கையை முன்வைத்து அருளை ஏற்றுச் செய்த முயற்சியால் 4 தடைகளையும் மீறி பழைய வேலை நிரந்தரமாகியது.

மகனுக்கு ஒரு படிப்பு அமைகிறது. அதுசமயம் மகன் வேறு படிப்பில் நாட்டம் காட்டுகிறான். அவன் பிரியப்படும் படிப்பு சம்பந்தமானவர் நம்மை நாடிவருகிறார். கொஞ்சநாளில் அவர் தொழில் 10 மடங்கு உயர்வு வருகிறது. பெற்றோருக்கு இதன் மூலம் மகன் பிரியப்படும் படிப்பு அருளைத் தாங்கி வருகிறது என்று தெரியவேண்டும். இது தெரிவதில்லை. நம்மை நாடிவந்தவர் தன் தொழில் 10 மடங்கு உயர்வு பெற்றால் அதே படிப்பு மகனுக்கு அளவிறந்த சிறப்பைக் கொடுக்கும் என்பது புரியவேண்டும். புரியாவிட்டால் அறிவை வற்புறுத்தாமல் நடப்பவற்றைக் கவனித்தால் அருள் தன் சுவடுகளைக் காட்டும். பெற்றோர் போக்கு மகனுக்கு விலக்குவதாக அமைந்தது.

10 வயதுச் சிறுவன் அசம்பாவிதமாகப் பேசுகிறான் அவனை அதட்டி, முறையாகப் பேசச் சொல்கிறோம். அதே சிறுவன் அருளின் வடிவமாக இருந்தால், அவனை மிரட்டுவது தவறு. அதிகாரி அசம்பாவிதமாகப் பேசுவதை அடங்கி ஏற்றுக் கொள்கிறோம். சிறுவன் அருள் நிறைந்தவன் என்று தெரியவில்லை என்றால், அங்குள்ள சூழ்நிலை அதைக் காட்டும். கவனிக்காவிட்டால் அவன் மூலம் வரும் அருள் விலகும். அருள் நிறைந்தவன் அசம்பாவிதமாகப் பேசினால், அதிகாரிக்கு அடங்குவதைப்போல், அருளை ஏற்று, அசம்பாவிதத்தைப் புறக்கணித்தால், அதன் மூலம் அருள் செயல்படும். மேலும் நம் சூழ்நிலை அழகான சொல்லை அனுமதிக்காததால்தான் அருள் அசம்பாவிதமான சொல்லாக வருகிறது என அறிய வேண்டும். சுமார் 10 முறை பெரிய வாய்ப்பை இது போன்ற சூழ்நிலைகளில் பலர் இழந்ததை நான் பார்த்திருக்கின்றேன். அப்படி வெளிப்பட முயன்ற அருள் உரியவர் ஏற்காவிட்டால், அருகிலுள்ள தகுதியுள்ளவரை நாடிப் பலித்ததையும் கண்டிருக்கிறேன்.

அன்னை சம்பந்தப்பட்ட பொருள்கள்படங்கள், பிரசாதம், புத்தகம், இவை சம்பந்தப்பட்ட வேலைகள் சில சமயம் நண்பர்கள் மூலம் அனுப்பப்படுகிறது. அந்த வேலை, அருளைத் தாங்கி வரும் சேவையாக மாறுகிறது. இவற்றை ஏற்று அருளைப் பெற்றவரும் உண்டு. காணிக்கைகளை அனுப்பும் பொழுது, அது சம்பந்தமான எல்லா வேலைகளையும் நாமே செய்வதுபோல், இது போன்ற வேலை அமைந்தால், அதை காணிக்கையாகவும், சமர்ப்பணமாகவும் செய்தால் அது அருளைத் தாங்கி வரும்.வேலையாக மாற்றினால் அருள் விலகும்.

ஆசிரமத்திலிருந்து நண்பருக்காக ஒரு படம் அல்லது புத்தகம் வாங்கி வருகிறோம். அதைச் சேவையாகச் செய்வதானால் நாமே அவரிடம் அதைக் கொண்டு கொடுத்தல் நலம். அதுபோல் செய்த ஒருவருக்கு 10 மாதமாக தடையான பெரிய வேலை பூர்த்தியாயிற்று. அவர் வரும் பொழுது கொடுத்தாலும், பிறர் மூலம் கொடுத்தனுப்பினாலும், அவரை வந்து எடுத்துப் போகச் சொன்னாலும் அது வேலையாக நின்றுவிடுகிறது. அருள் விலகுகிறது.

அன்னை பக்தர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில், நல்ல மனிதர்கள் விஷயத்தில், நல்ல காரியங்களைச் செய்யும் பொழுது, நின்று நிதானித்து, பெரியவர்களிடம் பழகுவதுபோல் நடப்பது நல்லது. அது அருள் வெளிப்பட உதவும். பக்தர்களை அவர்கள் வயதிற்குத் தக்கபடி, அந்தஸ்திற்கு தக்கபடி, குண விசேஷத்திற்கு ஏற்றபடி நடத்தாமல், பக்திக்கு ஏற்றபடி நடத்தினால், அருள் விலகாது.

இதுவரை நமக்குப் பலித்த பெரிய காரியங்களில் நம்மையறியாமல் இந்தப் பக்குவத்துடன் நடந்து கொண்டிருப்போம். இதுவரை நமக்குத் தடையான முக்கியமான காரியங்களில் அலட்சியமாக இருந்திருப்போம். இன்று கவனித்தாலும் புரியும். திருப்தி, முனைப்பு, பெருமை, அதிகார உணர்வு அருளை விலக்கும். நெகிழ்வு, மென்மை, அடக்கம் அருளை ஈர்க்கும். கவனித்தால் இந்த அகவுணர்வு தெரியும்.

ஒருவருடைய வாழ்வில் பேரொளி தோன்றியது. அவர் அறியவில்லை. அதன் சிறு பலன்கள் அவருக்குப் பெரியதாகத் தோன்றியது. அவர் நடைமுறை மெனக்கெட்டு அருளை விலக்குவதாக இருந்தது. இருந்தும் வேறு பல நல்ல அம்சங்களால் இப்பேரொளி தோன்றியது. அதைச் செயல்பட அனுமதித்தால் பஞ்சாயத்து பிரசிடெண்ட் நாட்டுக்குப் பிரசிடெண்ட் ஆனது போன்ற மாற்றம் ஏற்படும். அது சமயம், அவரையறியாமல், நான் அவருக்கு ஒரு சேவை செய்யப் பிரியப்பட்டேன். வருஷத்தில் 10 முறை கிடைக்கும் அருள் தினமும் அவருக்குக் கிடைக்க வேண்டுமென நினைத்தேன்.

உடனே சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது. வேறொருவர் பெரிய செலவில் பெறுவதை பக்தருக்கும் அளிக்க நான் எல்லா ஏற்பாடுகளும் செய்தபின், பக்தர் சேவையை வேலையாக மாற்றி தன் சுய கௌரவத்தை நிலைநாட்டி என்னைச் செயல்பட அனுமதிக்கவில்லை. அருள் அடுத்தவரை நாடியது. சில மாதங்களில் பெற்றவர் வாழ்வு மாறியது. 30 வருஷத்தில் 10 பேர் பெறும் வருமானம் பெற்றவரை நாடி வந்தது. பக்தர் இழந்து விட்டார்.

மற்றொரு முறையும் முயன்றேன். தோல்வியே கிடைத்தது. இழந்தவர், இழந்ததை அறியவில்லை. இவர் நல்லவர். ஆனால் அருளை அறியாதவர். அவருக்கு நஷ்டமில்லை. இனி வரும் பெரிய இலாபம் நஷ்டமாகிறது. அவருக்குள்ள அகவுணர்வு சிறப்பானதால், அவர் இழந்த வாய்ப்பைவிட, வாய்ப்பின் மூலம் வரவேண்டிய ஆன்மிகத் தகுதி பெரிய நஷ்டம். எனக்குப் புரிந்தது கொஞ்சம். இது புரிய எனக்கு அரை நூற்றாண்டு ஆயிற்று. இன்றோடு சரியாக 50 வருஷமாயிற்று. அன்று எனக்குச் சொல்வார் இல்லை. சொல்லியிருந்தால் எனக்குப் புரிந்திருக்குமோ என்பதை இன்று எப்படிச் சொல்லமுடியும்?

சாதாரணத் தொழிலாளி ஒருவரை நான் அறிவேன் அவருக்குப் படிப்பில்லை. பக்குவம் அதிகம். அதிக பட்ச பக்குவம் உடையவர் என்பதால் நான் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அவர் போன்றவர் அன்னையிடம் பெறமுடியாத ஆன்மிகச் சிறப்பில்லை. இருமுறை அவரை அணுகினேன். அன்பைப் புரிந்தும் அவரால் அருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. முக்கியமான அருள் செயல்படும் நேரத்தில் அவரைத் தேடினேன். விலகிப்போய்விட்டார். எல்லா உயர்வும் பெற்ற பக்தர். அருளை ஏற்கும் சூழ்நிலையில்லை அவருக்கு.

This is the Hour of God. இது இறைவன் வரும் தருணம் என்கிறார் பகவான். உலகம் ஆயிரம் ஆண்டில் பெறக்கூடியதை இன்று பெறலாம் என்கிறார். நாம் இத்தருணத்தை அறிவோம். தருணத்தை அறியாத மனிதனை நோக்கி கருணையாக மனித உருவில் தெய்வம் வந்தது. தெய்வத்தை ஏற்றவர்கள் சொல்பம். தெய்வத்தின் கருணை செயல்பட அன்னை வந்தார். அன்னையின் அவதாரச் சிறப்பை அனைவரும் அறியவில்லை என்பதால், அன்னை நம் வாழ்வில் அன்புரு எடுத்து நண்பனாக வருகிறார். நண்பனை அறிந்து நட்பை ஏற்றுக்கொள்கிறோம். நண்பன், அன்னையின் உருவம் என்பது தெரிந்தால், தருணம் பலிக்கும். பலர் வாழ்வில் அன்னை நண்பனாக வருகிறார். சிலர் வாழ்வில் தாயாக வருகிறார். குடும்பத்தில் ஒருவராகவோ, நட்பில் ஒருவராகவோ அன்னை நம்மை நாடுவதை நாம் கண்டு கொண்டால், பெரும்பாலும் அருள் விலகாது. He is Mother to me. She is Mother to me என்ற உண்மையை நம்மருகிலுள்ளவரில் நாம் கண்டுகொள்ள முடிந்தால், தொடர்ந்து அருள் செயல்படும் வாய்ப்புண்டு.

தருணத்தை மனிதன் அறியாததால் ஸ்ரீ அரவிந்தர் அவதாரமெடுத்தார். அவரிடமிருந்து நேரடியாக நாம் பெறமுடியாது என்பதால் அன்னை மூலம் நமக்களிக்கின்றார். அன்னையை நாம் முழுவதுமாக அறியாததால், நம்மிடையே உள்ள ஒருவர் மூலம் அன்னை நம்மை நாடுவதுண்டு. அச்சிறப்புக்குரியவர்கள் அவரை அன்னையாகப் புரிந்து கொண்டால் அது அதிர்ஷ்டம்.

மனித சுபாவம் இவர்களை அறிய மறுக்கும். அறிந்தாலும் எளிதில் ஏற்காது. சிலர் நம்மை வலியவந்து நன்மை செய்வதுண்டு. சில சமயம் மனிதன் ஏற்கிறான். பலமுறை முயன்று விலகுவான். கிருஷ்ண பரமாத்மாவை நண்பனாகவே பாண்டவர்களும் மற்றவர்களும் கருதினார்கள். சிறிய உறவின் பெரிய சிறப்பை நாம் அறிதல் நன்று. இப்படிப்பட்டவர் அருகிலுள்ள அன்னை, காத்திருக்கும் கடவுள் எனச் செயல்படுவார்கள், அவர்களை விட்டு விலகாமலிருப்பது நல்லது.

மனிதர்கள் அன்னைக்குப் பிரதிநிதியாக வருவதுபோல் நிகழ்ச்சிகளும் அன்னையைப் பிரதிபலிக்கும். நேரம், எண்ணம் உணர்ச்சி, செயல் ஆகியவையும் அன்னையாக நம் வாழ்வில் செயல்படும். மனிதர்களில் அன்னையைக் காண்பது எளிது. மற்ற இடத்தில் காண்பது எளிதல்ல.

அன்னை அன்பர்கள் வாழ்வை சூட்சுமப்பார்வையுடன் கவனித்தால் அருள் நம்மைச் சூழ்ந்து, தொடர்வதையும், மனிதன் சுபாவத்தால் முயன்று விலகுவதையும் காணலாம்.

இன்று இக்கருத்தை ஏற்று தங்கள் வாழ்வை இதுபோல் கவனிக்க முன்வருபவர்கள், ஆன்மிக வாழ்விலும், குடும்ப வாழ்விலும், மனவளத்திலும், தொழில் நலத்திலும், எதையும் குறிப்பிட்டால், அருள் மூலமாகப் பெறலாம்.

நல்லவர்கள், நல்ல முறைகளைக் கடைப்பிடிப்பவர்கள், அதன் வரையறையைக் கண்டு, அதை மீறாமலிருந்தால், அருள் எளிதில் செயல்படும். அந்த எல்லைக்கோடு தங்கள் மனதில் எது என்று காண்பதே நம் முயற்சி. அதை வாழ்வில் கடைப்பிடிப்பதே கட்டுப்பாடு.

எப்பொழுது நாம் அருளை அறியாமல் போகிறோம் என்பது முக்கியக் கேள்வி. நமக்கு பிடித்தவை பிடிக்காதவை என உண்டு. நமக்கு பிடிக்காத வழியில் பெரிய வாய்ப்புகள் வந்தால், அவை அருளைத் தாங்கி வருபவையாக இருக்கும். வருகிற பெரிய அதிர்ஷ்டம் ஏன் இப்படி வருகிறது. நல்ல முறையில் வரக்கூடாதா என நாம் கூறுவது போல் அமையும். நமக்கு பிடித்தவை சிறியவை, ஜீவனற்றவை. உலகத்தின் பெரிய அம்சங்களெல்லாம் நமக்கு பிடித்தவைக்குப் புறம்பானவை. பெரிய காரியம் நிகழும் பொழுதும் பெரும்பாலும் நமக்கு பிடிக்காத முறைகள் வழியாகவே வரும். அதுபோன்ற நேரத்தில் பிடிக்கவில்லை என்று விலக்குவதைவிட, அதை கவனிப்பது நல்லது.

பிட்டுக்கு மண் சுமக்க வந்த பெருமான், எல்லோரையும் போல் தன் பங்கு வேலையைச் செய்திருந்தால், பிட்டுக்கிழவி பெற்ற அருளை இன்று நாம் அறிந்திருக்க முடியாது. பெருமான் வேலை செய்யவில்லை. மரத்தடியில் படுத்துத் தூங்கினார். சிவபெருமான், பக்தைக்குப் பரிந்து வந்தாலும், சட்டத்திற்குட்பட மாட்டார். சட்டத்திற்கு உட்படுபவன் மனிதன். தெய்வத்தால் சட்டத்திற்குட்பட முடியாது. அருளால் தன்னை பிடித்தவற்றிற்குள் அடக்க முடியாது.

எதை மனம் கடுகளவும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறதோ அவ்வழியே நம்மை நாடி வருவது அருளின் செயல். எதை மனமும் உணர்வும் விரும்பி ஏற்றுக்கொண்டு மகிழுமோ அதன் மூலம் வருபவை அளவோடு கூடிய வாழ்வின் சிறு பரிசுகளாகும்.

நரகத்தின் வழியேதான் சுவர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற பழமொழி உண்டு. அன்னை எனும் சுவர்க்கத்தையடைய நரகம் எனும் துவாரபாலகரைத் தாண்ட வேண்டும் என்று ஒரு சாதகர் எழுதினார். அன்னையை நேரில் தரிசிக்கும் பாக்கியம். அதுவும் அடிக்கடி கிடைத்தது கொஞ்சம் பேருக்கே. தரிசனம் எனும் அருளைப் பெற அவர்கள் கடந்து செல்ல வேண்டியவர்கள் நரகத்தின் அனுபவத்தைக் கொடுத்தவர்கள். எனக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தது. அந்த அனுபவமும் அளவின்றி கிடைத்தது!

தன்னலமற்ற சேவையைச் செய்யக் கிடைத்த கருவி தன்னலமே உருவான கருவி. அதன் மூலமே ஒரு பெரிய சேவையைச் செய்ய வேண்டியிருந்தது.

பேரொளிக்கு அஞ்சலி செலுத்த முயன்ற பொழுது அதை நிறைவேற்றக் கிடைத்த சந்தர்ப்பம் தீய சக்தி எனும் கருமையான கருவி.

பெரும் பலனைத் திரட்ட அமைந்த வழி திறனற்ற மனித உருவம்.

சத்தியத்தின் சேவைக்குத் தலைவராக அமைந்தவர் ஆதாயத்திற்காக மட்டும் மெய் சொல்பவர்.

விஸ்வாசத்திற்கு நினைவுச் சின்னமமைக்க அமைந்தவர் துரோகத்தால் மன நிறைவு பெறுபவர்.

இனிமையைப் பரப்ப இசைந்தவர் கடுமையுள்ளம் நிறைந்தவர். அன்னை சேவையில் இதுபோன்ற அனுபவங்களை நான் கண்டிருக்கின்றேன். பொய் மட்டும் சொல்பவரைத் தலைவராக ஏற்று சத்தியத்திற்கு எப்படி சேவை செய்ய முடியும் என்று நினைத்தால், சேவையிலிருந்து விலகவேண்டும். இன்று சத்தியத்திற்குச் சேவை செய்ய அமைந்த சூழ்நிலை பொய்மை என்று கொண்டு சேவையை ஆரம்பித்தால், பொய்மை உரிய காலத்தில் விலகுகிறது என்பது என் அனுபவம். இதுபோல் நான் புரிந்து ஏற்றுக் கொண்டவை பலன் அளித்தன. புரியாமல் விலக்கியவை எனக்குப் புரியும்வரை காத்திருந்தன.

அருள் செயல்பட நம் சுபாவம் மாற வேண்டும். நம் சுபாவம் நல்ல சுபாவம் என நம்புபவர்கள் அருளுக்கு விலக்கு. சுபாவம் விலக்கப்பட வேண்டியது என்பதாலும், நல்ல சுபாவமும் விலக்கப்பட வேண்டும் என்பதாலும், சுபாவம் செயல்படும் இடத்தில், அருள் செயல்படாது என அறிய வேண்டும்.

சாப்பிட்டால் அடுத்த முறை சாப்பிட இடைவெளி தேவை. அதேபோல் படித்தாலும், ஒரு காரியம் செய்து முடித்தாலும், அடுத்ததை ஆரம்பிக்க இடைவெளி தேவை. ஆனால் அருள் இடைவெளி தேவைப்படாமல் இடையறாது செயல்பட வல்லது. ஏற்கும் நமக்கு இடைவெளி தேவை. பெரும்பாலோர் வாழ்வில் அருள் ஒரு முறை செயல்படும். சிலர் வாழ்வில் அதுவும் இருப்பதில்லை. அன்னை பக்தர்கள் வாழ்வில் அருள் பலமுறை செயல்பட்டதைக் கண்டிருக்கிறார்கள். இடையறாது செயல்பட்டால் யோகம் பலிக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை, மாதம் ஒரு முறை அருள் செயல்பட நாம் முனைந்தால், இக்கட்டுரைக் கருத்துகள் அவருக்குப் பயன்படும்.

அருளை ஆன்மிகச் செல்வமாகப் பெறுவது சிறப்பு. அது முடியாவிட்டால் அறிவின் பொவாகப் பெறலாம். அதுவும் முடியாதவர் வாழ்வின் இன்பமாகப் பெறலாம். எதுவும் முடியாதவர் செல்வமாகவும், அதிர்ஷ்டமாகவும் பெறலாம்.

தங்கம், கட்டியாக இருந்தாலும், முத்திரைப்பவுனாக இருந்தாலும், நகையாக இருந்தாலும் மதிப்பு ஒன்றே. பயன்வேறு. கட்டித் தங்கத்தை காதில் போட்டுக் கொள்ள முடியாது. நகையாக மாற்றவேண்டும்.

எந்த உருவில் அருளைப் பெற்றாலும், அது நாம் அன்னையை நெருங்குவதாகும். அதனால் உருவை விலக்கி, கருவைக் கருதுதல் முறையாகும்.

* * *



book | by Dr. Radut