Skip to Content

4. முடிவான பலன்

வேலைக்காரியின் மகன் பட்டம் பெற்று பல ஊர்களில் என்ஜினீயராக இருந்து, சொந்த ஊருக்கு என்ஜினீயராக வந்தான். அவனிடம் வேலை செய்யும் ஆட்கள் பலர் அவனுடன் சிறு வயதில் பழகிய நண்பர்கள். வேலைக்காரியின் மகனெனக் கேலி செய்தனர். வேலையை மாற்றிக் கொண்டு வெளியூர் போய் விட்டான். நம் பழைய வாழ்வு இன்று நம்மைப் பாதிப்பதைக் கர்மம் என்கிறோம். உள்ளூரை விட்டுப் போக முடியாது என்ற வரை, கர்மத்திலிருந்து தப்பமுடியாது. வெளியூர் போனால் உள்ளூர் நிலை தொடராது. வாழ்வை நீத்துத் துறவறத்தை மேற்கொண்டால், தவசிக்கும் கர்மமில்லை.

வேலைக்காரியின் மகன் என்ஜினீயராக வெளிநாட்டு டெக்னாலஜி பெற்று புதிய தொழிலை நாட்டில் முன்னோடியாக ஆரம்பித்தாலும் உள்ளூரில் பழைய கேலியை எவரும் மறக்க மாட்டார்கள். வெளியூர் போனால், அங்கு தொழில் ஆரம்பித்தால், உள்ளூர் கர்மம் தொடராது.

வெளியூரில் தொழிலை ஆரம்பித்து, அதற்கான முஸ்தீபுகளைச் செய்து, முயற்சியை கைக்கொண்டு, நிர்வாகம் செய்து 5 வருஷ முடிவில் 1 கோடி சம்பாதிக்கத் திட்டமிட்டு அதை நிறைவேற்ற முடியும். தொழிலின் நுட்பம் உயர்ந்ததாகவும், ஒரு பெரிய தொழிலுக்கு அத்யாவசியமாகவும் அமைந்து விட்டதால் அத்தொழில் அதிபர் வேலைக்காரியின் மகனைச் சந்தித்து 5 வருஷ சம்பாத்தியத்தை இன்று கையில் தருகிறேன், தொழிலை எனக்குக் கொடுத்துவிடு எனக்கேட்டு ஒருவரிடம் வாங்கினார். இது அபூர்வம். ஆனால் உலகம் அறியாததல்ல.

பூவுலகத்தைச் சிருஷ்டித்த இறைவன், பூவுலகச் செயலனைத்தையும் தாங்கிப் பிடிக்கின்றான். ஆனால் மனிதன், இறைவனின் அம்சம் என்பதால், அவனிஷ்டப்படி, சுதந்திரமாக முன்னேற அனுமதிக்கின்றான். சுதந்திரம் பெற்ற மனிதன் சுயமாகச் செயல்பட்டு திறமைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் முன்னேறுகிறான். அத்துடனில்லாமல், தவறுகளை வளர்க்க சுதந்திரமளித்த இறைவன் கர்மத்திலும் தலையிடுவதில்லை. அன்னை பூவுலகில் வந்து செயல்படும் பொழுது மேலும் ஓர் அம்சம் வருகிறது. திறமைகள் மூலம், காரியம் பூர்த்தியாக மனிதன் முயன்றால் நெடுநாளாகிறது. அன்னையை ஏற்றுக் கொண்டு, திறமைகளை நம்பாவிட்டால், நெடுநாளைக்குப் பின் முடிய வேண்டிய காரியம் உடனே பூர்த்தியாகிறது.

உலகத்தைக் காப்பது அருள். மனிதன் சேகரிப்பது திறமையும், கர்மமும். கர்மத்தைச் சேகரம் செய்த மனிதன், கர்மத்தை நம்பாமல் இறைவனை நம்பினால், கர்மம் கரைந்து, இறைவன் செயலால், அவனுடைய திறமைகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. இறைவனை நம்பி, கர்மத்திலிருந்து விடுபடும் தவசி போல், மனிதன் இறைவனை நம்பினால் அவன் கர்மம் கரையும். கர்மத்தைக் கரைத்தாலும் திறமையைக் கரைத்தாலும் ஒன்றே. கர்மம் கரைய விழையும் மனம், திறமையைக் கரைக்க ஒவ்வாது. கர்மமும், திறமையும் (negative & positive aspects of man) மனிதன் இரு அம்சங்கள் என நாம் உணர்வதில்லை. இறைவனை நம்பி கர்மத்தை இழப்பதைப்போல், திறமைகளையும் இழக்க முன்வந்தால், முடிவான பலன் முதலிலேயே வரும்.

வேலைக்காரியின் மகன் உள்ளூரில் தொழில் செய்தால் தன் கர்மத்தை - பழைய அந்தஸ்தை - மீறி திறமை மூலம் முன்னுக்கு வந்து 5 வருஷங்களில் 1 கோடி சம்பாதித்தால், கர்மத்தின் வலிமையை விட, திறமை அதிகம் என்று பொருள். வெளியூரில் சென்று தொழில் செய்தால் கர்மம் பாதிப்பதில்லை. 5 வருஷங்களில் 10 கோடிகள் சம்பாதிக்கலாம். நுட்பம் அதிகமாக இருந்தால், பெருந்தொழிலதிபர் துணை நின்றால், 5 வருஷத்தில் சம்பாதிக்கும் 10 கோடிகளுக்கு ஆரம்பத்திலேயே தொழிலை விற்கலாம்.

உலக வாழ்வு கர்மத்திற்குட்பட்டது. மனிதன் தன் செயலால் கர்மத்தையும், திறமையையும் வளர்க்கிறான். (faith) தெய்வ நம்பிக்கை கர்மத்திலிருந்து அவனை விடுவிக்கிறது. திறமையால் முன்னேறுகிறான். கர்மம் தடையாக இருந்ததைப்போல் திறமையும் அருளுக்குத் தடை என உணர்ந்தால், திறமையை, சரணம் செய்ய முன் வந்தால் (surrender) அருள் பேரருளாகி முடிவான பலனை, முதலிலேயே கொடுக்கிறது. உழைப்பு (work) கர்மத்தைச் சேகரிக்கும். நம்பிக்கை (faith) கர்மத்தைக் கரைக்கும். (surrender) சரணாகதி திறமையை விலக்கி, அருளைப் பேரருளாக்கி, முடிவான பலனை முதலிலேயே அளிக்கவல்லது.

அன்னையின் அவதாரம் கர்மத்தைக் கரைக்கும். அவர்களைச் சரணடைவதால் முடிவான பலன், முதலிலேயே கிடைக்கும். அன்னையை ஏற்றுக்கொண்டால், கர்மம் கரையும். நம் திறமையை ஏற்க மறுத்தால் பேரருள் செயல்படும், நம்பிக்கை கர்மத்தை அழிக்கும், சரணாகதி பேரருளை அழைக்கும்.

Work - உழைப்பு - கர்மம்

Faith - நம்பிக்கை - கர்மம் அழிதல், அருள் செயல்படுதல்

Surrender - சரணாகதி பேரருள் செயல்படுதல்

தன்னை விலக்கி, தன் திறமைகளை விலக்கி, அன்னையைச் சரணடைந்தால் கர்மம் அழிந்து, அருள் பேரருளாக மாறி, முடிவான பலன் முதலிலேயே வருவது, அன்னையின் அவதாரச் சிறப்பு.

மனிதன் கர்மத்தின் பிடியில் வாழ்கிறான். அன்னை பக்தன் அருளின் ஆட்சியில் இருக்கிறான். யோகம் செய்யும் சாதகர் பேரருளின் நிழலில் வாழ்கிறார் எனலாம்.

அருள் உலகில் செயல்படும் பொழுது அது வாழ்வு மூலம் நம்மை அடைந்தால் அதன் மூலம் கர்மம் உற்பத்தியாகும். ஏனெனில் இயற்கை, வாழ்வு மூலம் செயல்படுகிறது. வாழ்வு இரு கூறானது. அதனால் கர்மத்தையும், திறமையையும்தான் உற்பத்தி செய்ய முடியும். மனிதன் அருளை வாழ்வு மூலம் பெறாமல் ஆன்மா மூலம் பெற்றால், ஆன்மாவுக்கு இரு கூறாகச் செயல்படும் திறனில்லாததால், கர்மம் உற்பத்தியாவதில்லை. திறமை மட்டும் உண்டாகிறது. சைத்திய புருஷன் மூலம் செயல் பட்டால் திறமையும் விலகி, பேரருள் நேரடியாகச் செயல் படுகிறது.

(இயற்கை) வாழ்வு - கர்மம்

ஆன்மா - அருள்

சைத்திய புருஷன் - பேரருள்

கர்மம் கடந்த காலத்துடன் நம்மைப் பிணைக்கிறது. அருள் நம்மையே செயல்படச் செய்கிறது. பேரருள் ஆன்மாவை வளர்க்கிறது. உலகம் முன்னேறுவது கர்மத்தால் எனலாம். மனிதன் முன்னேறுவது அருளால் எனலாம். ஆன்மா முன்னேறுவது பேரருளால் எனலாம்.

பிரபஞ்சம் தான் முன்னேற ஆன்மாவை உற்பத்தி செய்கிறது. மனிதன் முன்னேற சைத்திய புருஷனை நாடுகிறான். சத்தியஜீவன் ஏற்பட சைத்திய புருஷன் வளர வேண்டும். சில உதாரணங்கள் மூலம் கர்மம், அருள், பேரருள் ஆகியவற்றிற்குள்ள தொடர்பை விளக்கலாம். ஆனால் இவை உலகுக்கே புதிய கருத்துகளாக இருப்பதால் உதாரணம் ஓரளவு தான் பொருந்தும். அதனால் சிறிது குழப்பம் ஏற்படும். முடிந்த வரை சொல்கிறேன்.

புதிய காமிரா வந்தபொழுது, நாம் அதை, பழைய காமிராவைத் திறப்பதைப்போல் திறக்கின்றோம். புதியதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொண்டு பழைய பழக்கத்தை மறந்து, புதிய காமிராவைப் பயன்படுத்தினால் அது பலன் தரும். இல்லை எனில் பழைய பழக்கம் புதிய காமிராவை உடைத்துவிடும். இனி ரிப்பேர் செய்ய வேண்டும். பழைய பழக்கம் கர்மாவைப் போன்றது; புதியதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு அருளை நம்புவது போன்றது. நாம் கர்மத்தால் செயல்படுவது புதிய காமிராவை உடைத்து பிறகு ரிப்பேர் செய்து, மீண்டும் பயன்படுத்துவது போலாகும். புதியது வந்துள்ளது என்றவுடன், பழைய பழக்கத்தை மறந்து புதிய கருவிக்குரிய முறையைக் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை (faith) அருளில் நம்பிக்கை கொள்வதைப் போன்றதாகும்.

இனி புதிய காமிராவைப் பயன்படுத்தும் முறைகளை அறிந்து, பயிற்சிபெற்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்வது கர்மத்தை அருளால் அழித்து, கர்மத்தின் தடையின்றி, நமது திறமை மூலம் முன்னேறுவதைப் போன்றதாகும்.

புதிய காமிராவைக் கொண்டு வந்தவர், தாமே நமக்கு பயிற்சி அளிக்க முன்வருவதுடன், நாம் பயிற்சி பெறுமுன், தானே அதைப் பயன்படுத்தி படம் எடுத்துக் கொடுக்க முன்வருவது பேரருள் செயல்படுவதாகும். நம் திறமையை எதிர்பார்க்காமல், நம் திறமை முடிவில் கொடுக்கும் பலனை, முதலிலேயே கொடுக்க முன்வருவது பேரருள்.

பழைய பழக்கத்தை விட முடியாதவர்கள், காமிராவை உடைப்பது, கர்மத்தை விட முடியாததாகும். புதியதைக் கண்டதும் பழையதை விலக்கும் மனப்பான்மை, இறைவனைக் கண்டதும், மனிதனை விலக்கும் மனப்பான்மையையொத்தது, அருளைச் செயல்பட அனுமதிக்கும் faith நம்பிக்கையாகும். புதியதைக் கற்கும் திறமையை நம்பாமல் அதையும் விலக்கி, வந்தவர் போட்டோ எடுக்கட்டும் என அனுமதிக்கும் மனம், அன்னையைச் சரண் அடைந்து, தன்னை அழித்து, பேரருளைச் செயல்பட வைப்பதாகும்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு, வீட்டில் திருடு போனதைச் சொல்லப் போன பழைய (K.D.) திருடனைக் கைதுசெய்து தண்டிப்பது, புதியவேலை செய்யப் போன பொழுது, பழைய கர்மம் குறுக்கிட்டு நாசம் செய்வதைப் போன்றது. போலீஸ் ஆபீசர் குறுக்கிட்டு, பழைய கேஸ் வேறு, அதை எடுக்க இப்பொழுது சட்டமில்லை. புதிய கேஸைப் பார் என்பது, அருள் செயல்பட்டு, கர்மத்தை விலக்குவது போலாகும்.

தொழிலாளர் தலைவர் என நடித்து, ஒரு கம்பெனியில் வேலை நிறுத்தத்தைக் கிளப்பி, முதலாளியையும், ஆபீஸர்களையும் கைது செய்ய முனைந்தபொழுது, முதலாளி Public Prosecutor பப்ளிக் ப்ராசிகியூட்டரிடம் சென்று கைது செய்தவர்களை விடுவிக்க முயன்றார். நடந்ததைச் சொன்னார். இந்த போலித் தொழிலாளர் தலைவர்கள் ஏற்கனவே வேறொரு கேசில் மாட்டிக்கொண்டு, பப்ளிக் பிராசிகியூட்டரின் தயவில் இப்பொழுது வாழ்பவர்கள். அவர் கைது செய்தவர்களை ஜாமீனில் விடுதலை செய்து, போலித் தலைவர்களை அழைத்து, இனி இந்தக் கம்பெனிப் பக்கம் போனால் உங்களை நான் ஆதரிக்கமாட்டேன் என்றவுடன் எல்லாச் சிரமங்களும் மறைந்துவிட்டன. கேஸ் நடந்து, பல வருஷங்கள் சிரமப்பட்டு நியாயம் கிடைக்குமா என எதிர்பார்க்க வேண்டிய நிலையில் ஒரே நிமிஷத்தில் பிராசிகியூட்டர் பிரச்சினையைத் தீர்த்தது பேரருள் செயல்படுவதாகும்.

இறைவன் மீது நம்பிக்கையின்றி, (faithless work) உழைப்பை நம்பினால், ஒருபக்கம் திறமையுடன் மறுபக்கம் கர்மமும் சேரும். நம்பிக்கையை இறைவன் மீது வைத்து, உழைப்பைக் கருவியாகக் கருதினால் (work in faith)அருள் செயல்படும் கர்மம் கரையும். நம் திறமையையும், அதன் மீதுள்ள நம்பிக்கையையும் இறைவனுக்குச் சரணம் செய்தால் (surrender) பேரருள் செயல்பட்டு, முடிவான பலன் முதலிலேயே வரும்.

ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்வை இன்று யோசித்துப் பார்த்தால் உணவுக்கு அவன் பட்டபாடு அதிகம். விவசாயம் செய்ய ஆரம்பித்தபின் உணவு மிகுந்து பாடில்லாமல் கிடைத்தது. அடுத்த அடுத்து நாகரீகம் வளர வளர முயற்சி குறைந்து, பலன் அதிகமாயிற்று. ஒரு மூட்டை நெல்லை உரலிலிட்டுக் குத்தி அரிசியாக்கி, அதைப் புடைத்து சமையல் செய்தவருக்கு, நேரடியாக அரிசியைக் கடையில் வாங்குவது முடிவான பலன் பெறுவது போலாகும். நாகரீகம் வளரும்பொழுது lifestyle வாழ்க்கை அமைப்பு மாறி, சிரமம் குறைவதற்கு நம் அன்றாட வாழ்வு அநேக உதாரணங்களைக் கொடுக்கிறது. இவை நேரடியான உதாரணமில்லை என்றாலும், அடிப்படைக் கருத்து ஒன்றாக இருப்பதால், பேரருன் செயலைப் புரிந்து கொள்ள உதவும்.

Calculator வந்த பொழுது கூட்டலில் திறமையுள்ள அக்கௌண்டண்ட்கள் அதைப் பயன்படுத்தத் தயங்கினர்; சிலர் மறுத்தனர். தம் திறமை வெளிப்பட வேண்டும் என்ற விருப்பத்தால், calculator கால்குலேட்டரைப் பயன்படுத்த வில்லை, தன் திறமையை ஒதுக்கி, மெஷின் கூட்டட்டும் என்றால் பெருமுயற்சிக்குப் பதிலாக சிறு முயற்சியால் பெரும் பலன் ஏற்படுவதே பேரருன் தத்துவம்.

விலங்கைப் போலவும் நாம் வாழலாம். ஆதி மனிதனைப் போலவும் வாழலாம். நவீன நகரவாசியாகவும் வாழலாம். அது நம்மைப் பொறுத்தது. அதேபோல் கர்மத்தை அனுபவித்தும் வாழலாம், கர்மத்தைக் கரைத்துத் திறமையாலும் வாழலாம். திறமையையும் ஒதுக்கி முடிவான பலனையும் பெறலாம். இவை நம்மைப் பொருத்தது. தெய்வ பக்தியில்லாத எளிய மனிதன் தன் உழைப்பை நம்பி வாழ்வது, தெய்வ நம்பிக்கையால் கர்மத்தைக் கரைத்து திறமையால் முன்னேறுவது, திறமையையும் விலக்கி அருளைப் பேரருளாக மாற்றி வாழ்வது ஆகிய மூன்றில் எதையும் நாம் பின்பற்றலாம்.

தனிப்பட்டவருடைய முயற்சியை விலக்கி, அவருடைய திறமைகள் செயல்படுவதையும் விலக்கினால் அருள், பேரருளாகிறது. டெக்னாலஜி முன்னேறும் போது இதே தத்துவத்தைக் காண்கிறோம்.

நாம் சைக்கிள் விடுவது, எழுதுவது, பேசுவது போன்ற காரியங்களைக் கற்றுக்கொள்ளும் பொழுது பயிற்சியைப் பெறுகிறோம். பயிற்சி திறமையைக் கொடுக்கிறது. மோட்டார் சைக்கிள் விடும்பொழுது சைக்கிள் கற்றுக் கொண்டது உதவுகிறது. பாட்மிண்டன் பயின்றது, டென்னிஸ் விளையாட உதவுகிறது. ஆனால் கால்பந்து விளையாடியது, வாலிபால் விளையாடும்பொழுது தடையாகிறது. மேடையில் மணிக்கணக்காகப் பேசியவர், அசெம்பிளியில் சுருக்கமாகப் பேச சிரமப்படுகிறார். பழைய திறமை, புதிய காரியத்திற்கு உதவுவதும் உண்டு, தடையாக இருப்பதும் உண்டு.

பள்ளியில் 14 வருஷங்கள் பட்டம் முடியும் வரை படித்தபின் ஆங்கிலம் எழுதுகிறோம், பேசுகிறோம். இதையே 3 மாதங்களில் பல நாடுகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள். நம் பழக்க வழக்கங்களை மாற்றப் பிரியப்படாவிட்டால் பள்ளியில் சேர்ந்து 14 வருஷத்தில் கற்றுக் கொள்ளலாம். பழைய பழக்கத்தை விட்டு, புதிய முறையை ஏற்றுக்கொண்டால் அதே பலன் 3 மாதத்தில் வரும். முதல் முறை கர்மத்தைப் போன்றது. அடுத்தது கர்மத்திலிருந்து விலகுவது போன்றது.

நம் மூதாதையர் காசிக்கு நடந்து போனார்கள் என நாமும் இப்பொழுது காசிக்கு நடந்து போகலாம். அல்லது அதை விலக்கி இன்றைய ரயிலில் போகலாம். இது போன்று இன்று நம் வாழ்வில் உள்ள அனைத்தும் உதாரணமாக இருக்கும் அவற்றை இரு தலைப்புகளில் உதாரணமாக எழுதலாம், முந்தையது பழைய முறை (கர்மத்தைத் தாங்கிவருவது). அடுத்தது கர்மத்தை விலக்கிய புதுமுறை.

பழைய நிலை : புதிய முறை

கால்குலேட்டர் : கம்ப்யூட்டர்

(Rank promotion) : (Direct recruitment)

படிப்படியாக உயருதல் : நேரடித் தேர்வு

கார்பன் பேப்பர் : ஜெராக்ஸ்

கையால் பிரதி எடுத்தல் : கார்பன் பேப்பர்

விவரமாகக் கணக்குப் போடுதல் : சூத்திரத்தைப் பயன் படுத்துதல்

நடப்பது : பஸ், ரயில் வசதி

வாயால் கூட்டுவது : கால்குலேட்டர்

மனத்தில் எண்ணங்கள் ஓடுவதை நாம் சிந்தனை எனக் கருதுகிறோம் அது சிந்தனையில்லை. கவனித்துப் பார்த்தால் ஒரே எண்ணம் 10 வருஷங்களாகத் தினமும் நூறு முறைகள் மனதில் வருவது தெரியும். இதனால் மன வளர்ச்சி ஏற்படாது. மனவளர்ச்சி இதனால் தடையுறும். மனம் அமைதியாக இருந்தால் வளரும். மனத்தின் ஓட்டத்தை நிறுத்தி சிந்தனை செய்தால் மனம் வளரும். இந்த ஓட்டத்தால் மனம் திறமையை இழந்து தவறான பழக்கங்களைக் கற்றுக்கொள்ளும். கர்மம் அதன் மூலமாக வருவது. அதை நிறுத்த மௌனம் தேவை. மௌனம் கர்மத்தைத் தவிர்ப்பது, அருளைச் செயல்படச் செய்யும், மௌனமான மனமும் தன்னை நம்பும். முயன்று மனத்தை, சரணடையச் செய்தால் தன்னம்பிக்கை போய் அருளை, பேரருளாக மாற்றும். அதை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.

மனத்தின் ஓட்டம் - கர்மம்

மௌனம் - அருள்

சரணாகதி - பேரருள்

பேரருளை மனிதனுக்கு வழங்குவது அன்னையின் அவதாரம். அன்னையை ஏற்றுக்கொண்டால் கர்மம் விலகி, அருள் செயல்படும். நம்மை அறிந்து, நம் உயர்ந்த திறமைகளையும், உன்னத குணங்களையும் சரணம் செய்தால் அருள் பேரருளாக மாறும். அன்னையைச் சரணடைந்த வாழ்வு பேரருளின் வெளிப்பாடான வாழ்வாகும்.

நம்முள் உள்ள கேள்வி இரண்டு. கர்மத்தை அழிப்பது எப்படி? அருளைப் பேரருளாக மாற்றுவது எங்ஙனம்? கர்மத்தை அழிக்க கர்மத்தை நம்ப மறுத்தாலும், அன்னை மீது முழு நம்பிக்கையும் இருந்தாலும் கர்மம் அழிந்து போகும். அதனால் அருள் செயல்படும், ஆனால் பேரருளாக மாறாது.

அருள் செயல்படும்பொழுது நம் முயற்சி முழுமையாக இருக்கவேண்டும் என்பது சட்டம். முயலாமல் அருள் செயல்படும் என எதிர்பார்க்கக் கூடாது.

முயற்சியை விலக்குதல் பேரருள் செயல்பட அவசியம். முயற்சி, திறமை, தகுதி, உரிமை ஆகியவற்றில் நமக்கு நம்பிக்கையுண்டு. அருள் செயல்பட திறமையைப் பயன்படுத்தவேண்டும், முயலவேண்டும், உரிமையைப் பாராட்டவேண்டும். தகுதிக்கேற்ப நடக்கவேண்டும். வேலைக்கு நேர்முகத் தேர்வுக்குப் போனால் நம் தகுதியை எடுத்துச் சொல்லவேண்டும். உரிமையைப் பாராட்ட வேண்டும். சரியான பதில் சொல்ல முழுமுயற்சி எடுக்கவேண்டும். திறமையாக நடக்க வேண்டும். பேரருள் செயல்பட இவை எதிலும் நம்பிக்கை இருக்கக்கூடாது, இவற்றை விலக்கவேண்டும்.

துணைவேந்தர் பதவிக்குக் கவர்னரிடம் போக, பட்டியல் தயாரானபொழுது, சிலர் சிபார்சு தேடினர். மற்றவர் தங்கள் தகுதிக்காக வேண்டும் என்றனர். ஒரு சிலர் பதவி வேண்டாம், பட்டியலில் பெயர் வந்தால் போதும் என்றனர். தகுதியும், திறமையும் மிக்க ஒருவரை நண்பர்கள் அப்பதவிக்காக முயலச்சொன்னார்கள். உங்கள் தகுதியை நீங்கள் எடுத்துச் சொல்லாவிட்டால் எப்படித் தெரியும் என்றனர். உள்ள தகுதியை, திறமையைச் சொல்வதில் தவறில்லை என்றனர். அவர் அப்பேச்சைக் கேட்கவில்லை. இவர் பெயர் பட்டியலில் இருந்திருக்கிறது. இவரையே தேர்ந்தெடுத்தார்கள். அத்துடன் அப்பதவி முடிந்தவுடன், அடுத்த பல்கலைக் கழகத்திற்கும் இவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

நமக்குள்ள திறமையை நம்பாமல், விலக்கி, அருளை நம்பினால், திறமை விலகுவதால் அருள், பேரருளாகிறது. முடிவான பலன் முதலிலேயே வருகிறது.

கர்மத்தை நம்பாமல் அருளை நம்பினால் கர்மம் அழியும். அடுத்த கட்டத்தில் திறமையை நம்பாமல் அருளை நம்பினால் அருள் பேரருளாகும். கர்மம் அழிந்து, திறமையால் முன்னேற அருள் உதவும். கர்மம் அழிந்து, திறமை விலகி, அருள் நேரடியாக அது மட்டும் நம் வாழ்வில் செயல்படும்பொழுது பேரருளாகும். கர்மத்தால் காரியம் தடைப்படும். கர்மம் அழிந்தால், அருள் மூலம் திறமை குறைந்த காலத்தில் பலன் தரும், கர்மம் அழிந்து திறமையில் நம்பிக்கை அழிந்தால் பேரருள் முதலிலேயே பலனைத் தரும்.

* * *



book | by Dr. Radut