Skip to Content

7. அகமும் புறமும்

அன்னை மீது நம்பிக்கை ஏற்பட்டு இத்தனை வருஷமாக நான் செய்த பிரார்த்தனை ஒன்று கூட தவறியதில்லை. பெரும்பாலும் அவை உடனே பலித்து விடும். சில பிரார்த்தனைகள் தாமதமானதுண்டு, ஒரு போதும் தவறியதில்லை. தாமதமான பிரார்த்தனைகளை பிறகு யோசனை செய்து பார்த்ததில் அவற்றுள் சிலவற்றில் தாமதம் ஒரு நல்ல காரணத்திற்காக நடந்ததைக் கண்டேன். வேறு சில இடங்களில் எனக்குத் தெரிந்த குறையை விலக்காமல் நான் காத்திருக்க வேண்டியதாயிற்று என்ற அன்பர்கள் அநேகம்.

அப்படிப்பட்ட அன்பர்களுக்கும், ஒரு முக்கியமான விஷயம் தாமதமானால் தவறியது போல் தோன்றும், தவறி விட்டால் பதறி விடுவார்கள். இத்தனை நாள் மலைபோலிருந்த நம்பிக்கை அசைந்து ஆட்டம் கண்டு விடும். பிறகு பல எண்ணங்கள் தோன்றும் அவற்றுள் சில;

  • அன்னைக்கு சக்தி அதிகம் என்றாலும் அதற்கும் ஓர் அளவு உண்டல்லவா?
  • எல்லாம் நினைத்தபடி நடந்துவிட்டால், உலகம் பிடிபடாது.
  • அன்னை கர்மத்தை அழிப்பார்கள்தான், எனினும் கர்மத்திற்கு உண்மையுண்டல்லவா?
  • இது தாமதமாவதில் என் நம்பிக்கையே இந்த விஷயத்தில் தளர்ந்தது உண்மைதான்.
  • இது தவறிவிட்டது, அதனால் நம்பிக்கை அன்னை மீது முழுவதும் போய்விடவில்லை இந்த விஷயம் கூடி வரும் என்ற நம்பிக்கை போய்விட்டது உண்மைதான்.

நாம் என்ன பாவம் செய்தோமோ அதை நாம் அனுபவிக்கத்தானே வேண்டும். இதுபோன்ற கருத்துகள் மனதை ஆட்கொள்வது உண்மையானாலும், அன்னையைப் பொருத்தவரை இவற்றுள் எதுவும் உண்மையில்லை, ஒன்றே ஒன்றுதான் நிலையான உண்மை.

அகத்திலுள்ள நம்பிக்கை, புறத்தில் வெற்றியை தவறாது தரும்: இந்த உண்மையே விதி விலக்கு இல்லாத பூரண உண்மையிது. இதை வலியுறுத்தும் எந்த நிகழ்ச்சியையும் உதாரணமாகக் கொடுக்காமல் இதில் உள்ள ஆன்மீக உண்மையையும், (truth in life) வாழ்வுக்குரிய உண்மையையும் மட்டும் விளக்குகின்றேன். அத்துடன் தளர்ந்த நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்தி தவறியதைப் பெறவும், தாமதத்தை விலக்கவும் உள்ள முறையைக் குறிப்பிடுகிறேன்.

பிரச்சினையில் தாமதம், தவறுதல், ஏற்பட்ட பின் மனத்திலிருந்து பிரச்சினையை ஒதுக்கி, அன்னையை மட்டும் மனத்தில் 5 நிமிஷம் உருவகப்படுத்தினால், மனத்தில் சில சமயம் அன்னை தெரியும், தெரியாவிட்டாலும் மனம் அமைதியுறும். அமைதி ஏற்பட்டபின் பின் தளர்ந்த நம்பிக்கை மீண்டும் உறுதிப் படுவதைக் காணலாம். "அன்னையே, உன் மீதுள்ள நம்பிக்கை வளர வேண்டும், தொடர்ந்தும் வளரவேண்டும்'' என்று அன்னையிடம் பிரார்த்தனை செய்தால், மனம் தெளிந்து மாறி 5 நிமிஷத்திற்கு முன்னிருந்ததைப் போலில்லாமல் புதிய உற்சாகத்துடன் இருக்கும். இந்நிலையில் பிரார்த்தனையை மீண்டும் தெளிவுற மேற்கொண்டால், பிரச்சினை உடனே தீருவதைக் காணலாம்.

இதில் உள்ள ஆன்மீக உண்மை எது?

1. மனிதனுக்கு தெய்வத்தின் மீது நம்பிக்கையுண்டு என்பது நாம் அறிந்தது. எனவே அது மனித முயற்சி என்பதால் அதற்கு எல்லையுண்டு.

2. மனிதனுக்கு நம்பிக்கை உள்பட எதையும் கொடுப்பது தெய்வமே; மனித நம்பிக்கையை நாடும் மனிதன் மனிதனை நம்புகிறான். நம்பிக்கையைக் கொடுப்பது தெய்வம் என அறியும்பொழுது மனிதன் தெய்வத்தை நம்புகிறான்.

3. தளர்ந்த மனம் மனிதனை நம்புவது, தெய்வத்தை நம்பும் மனம் தளர்ச்சியை இழந்து நம்பிக்கை பெறுகிறது. இது மாற சில நிமிஷமேயாகும். நம்பிக்கை வந்தவுடன் காரியம் பலிக்கிறது.

இதில் உள்ள ஆன்மீக உண்மையின் பகுதிகளை மூன்றாய்ப் பிரித்தேன். இது ஆன்மிகத்திற்கும், அன்னைக்கும் மட்டும் உண்மையா? அதையும் தாண்டி வாழ்விலும் இந்த உண்மைக்கு இடம் உண்டா? என்றால் வாழ்வில் செயல்படுவதும் அன்னையே என்பதால் வாழ்விலும் இது முழு உண்மை.

பொதுவாக தெய்வ பக்தியுள்ளவர்கள் - அன்னை பக்தர்களைக் குறிப்பிடவில்லை - என்று நாமறிந்த நல்லவர்களுக்கு இந்த உண்மை வாழ்க்கை அனுபவத்திலும், பக்திச் சிறப்பிலும் தெரியும்.

வாழ்க்கையில் வெற்றியடைந்து செல்வம் பெற்றவர்கள், பதவி பெற்றவர்களை அணுகி அந்தரங்கமாகப் பேசக் கூடும் என்றால் அவர்கள் வெற்றியின் இரகசியம் எது என்று கேட்கும் பொழுது, செல்வத்தின் இரகசியம் உழைப்பு என்றும், பதவியின் இரகசியம் தைரியம் என்றும் வெற்றியின் இரகசியம் நாணயம் என்றும் தெரியவரும். பிற்காலத்தில் எது எப்படியிருந்தாலும் ஆரம்ப காலத்தில் உழைப்பே செல்வத்தை உற்பத்தி செய்கிறது, தைரியமே தலைமைப் பதவியைப் பெற்றுத் தருகிறது, நாணயமே முதல் வெற்றியைத் தந்தது என்பது தெரியவரும்.

பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பவர்கள் கூட 1000 ஆண்டுகட்கு முன் பணத்தை முதலில் உற்பத்தி செய்தது உழைப்பு என்பதை ஏற்றுக்கொள்வார்கள். எனவே உழைப்பு, தைரியம், நாணயம், விஸ்வாசம், புத்திசாலித்தனம் போன்றவை அகத்திற்குரியவை, செல்வம், தலைமை, வெற்றி, நட்பு, பட்டம் போன்றவை புறத்திற்குரியவை.

புறத்தின் திறத்தைப் புறக்கணித்து விட்டு, அகத்தை மட்டும் கருதினால், அகத்திற்குரியவை நிரம்பியிருந்தால், எந்த ஒரு குணம் தேவையோ அது இருந்தால், தவறாமல் புறத்திற்குரிய பலன் வரும் என்பது வாழ்வுக்குரிய உண்மை.

அன்னை பக்தர்களுக்குரிய "அகம்'' அன்னை மீதுள்ள நம்பிக்கை. அன்னை தவறியதில்லை, அன்னையால் தவற முடியாது, அன்னையும் தவறுவார்கள் என்றால் நான் அன்னையை உணரவில்லை என்ற நம்பிக்கையே அகம். அகம் நிறைந்தால், புறம் பொலிவுறும்.

அன்னையை அறிந்தபின் நான் பெற்ற பேறு பல, என் கண்ணால் கண்டவை அநேகம். அவற்றையெல்லாம் விட ஆழ்ந்த மனத்துள் அன்னை நிரம்பி என்னையும், என் பெற்றோரையும், குழந்தைகளையும் மலரவைத்த ஆன்மிகப் பெருமையை நினைத்தாலும் கண்கலங்குகிறது. என் கணவருக்கு இக்கட்டு நேர்ப்பட்ட பொழுது அவரும் அன்னையை வேண்டிக் கொண்டார். இடர் நீங்கிற்று. அவர் எதைச் சொன்னாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். அன்னையைப் பற்றி அவர் எது சொன்னாலும் என் மனம் பதறுகிறது. அன்னையை வணங்கக்கூடாது என்று என் கணவர் சொல்வதை நாம் எப்படிக் கேட்டுக் கொள்ள முடியும். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை என்பது ஒருவர் நிலை. இது பலருடைய நிலை. ஒரு வீட்டில் கணவர், மற்ற இடத்தில் மனைவி, பெற்றோர், நண்பர்கள் என இது போன்று பேசி பக்தர்கள் மனதைப் புண்படுத்துபவருண்டு. அவர்கள் அந்நியரானால் நாம் அவர்களை ஒதுக்கமுடியும். அன்புக்குரியவர், அதிகாரம் செலுத்துபவரானால் என்ன செய்வது?

இந்த நிலையை நமக்களித்தது அன்னைதானே? அதற்கு ஒரு காரணம் இருக்குமல்லவா? காரணத்தைக் கண்டு களைந்தால் நிலைமை மாறி விடும். சில சமயம் காரணத்தைக் கண்டு கொள்ள முடியாது. ஸ்ரீ அரவிந்தரிடம் ஒருவர் தன் இலாகா தலைவர் எதேச்சாதிகாரம் செய்கிறார் என்று குறைப்பட்ட பொழுது உன் கடமை அவரைப் பணிந்து நடப்பதுதான் என்றார்.

அந்த நிலையை நமக்களித்தது அன்னை என்பதால் மனம் புண்படுவதற்கு காரணமானவரை - தலைவர், கணவன், மனைவி, - அன்னையாக ஏற்று அவர் சொற்படி நடந்தால், அன்னையின் அற்புதம் வெளிப்படும். அன்னையை நீ வணங்கக் கூடாது என்ற சொல் மனைவியிடம் இருந்து வந்தாலும், பெற்றோரிடமிருந்து வந்தாலும், அதை அன்னையின் ஆணையாக ஏற்றுப் பணிந்தால் நிலைமை மாறுவது அன்னையின் அதிசயம் என்று காண்போம்.

அகம் அன்னையால் நிரம்பியபின் புறம் மற்றவற்றால் நிரம்பாது. அன்னை புறத்தில் வெளிப்பட நாழியாகாது. அன்னையிடம் நம்மை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் அடிக்கடி சமாதிக்குப் போகக் கூடாது என்றும் சொல்வதுண்டு. அதையும் மனதார ஏற்றுக் கொண்டால் அவர் சொல்லை அவரே மாற்றி எதிராக நடந்து கொள்ளும் சூழ்நிலை உடனே வந்ததுண்டு.

மனிதர்கள் பலவிதம். அன்னை என்றும் ஒரே விதம். அன்னை மீது நாம் கொண்ட பக்தி பவித்திரமானதென்றால் புறச்சூழ்நிலையால் அது பாதிக்கப்படாது. புறச்சூழ்நிலையைக் கொடுத்ததே அன்னை. எனவே அதையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன் என்பது உயர்ந்த பக்தி. அதற்குரிய பலன் தவறாது உண்டு.

* * *



book | by Dr. Radut