Skip to Content

03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்

‘ஆசிரமம்’ என்பது ஒரு குருவைச் சுற்றி ஏற்படும் ஸ்தாபனம். அவரது கொள்கைகளைப் பரப்பவும், அவரது பணிகளை அவருக்குப் பின் தொடர்ந்து செய்யவும், அவரால் ஓர் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டால், அதை நாடெங்கும் கொண்டு செல்வதே அவர் பெயரால் ஏற்படும் ஆசிரமத்தின் கடமைகளாகும்.

‘‘இந்த ஆசிரமம் வேறு ஒரு நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்டது’’ என ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். அதற்கு அவர் விளக்கம் கொடுக்கவில்லை. ‘சத்தியமனம் (Supermind) பூமியில் வந்து செயல்படுமானால், வீரியம் நிறைந்த அந்த சக்தியைத் தாங்கிக்கொள்ளவும், அது தங்கிச் செயல்படவும் அதற்கேற்ப ஓர் இடம் தேவை’ என்பது உண்மை. ஆனால் ஒரு ஸ்தாபனத்தாலோ, ஓர் இயக்கத்தாலோ, ஒரு தத்துவத்தாலோ கட்டுப்படுத்த முடியாத பெரும் சக்தி அது என்பதும் உண்மை. ‘ஸ்ரீஅரவிந்தாசிரமம் எது?’ என்னும் கேள்விக்கு விடையளிப்பது போல் ஸ்ரீ அரவிந்தர், ‘‘நானிருக்கும் ஆசிரமக் கட்டிடம் மட்டும் ஆசிரமம் என்று கருதிவிடக் கூடாது. எங்கெல்லாம் சாதகர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஆசிரமம் இருக்கின்றது’’ என்று தீர்மானமாகக் கூறியுள்ளார். உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் யோகம் பூரண யோகம். ‘‘உலகத்தில் புதியதாக நல்லது ஒன்று ஏற்பட வேண்டுமானால் அது ஆசிரமத்தில் முதலில் ஏற்பட வேண்டும்’’ என்று அன்னை சொல்கிறார். ஆயுர்வேத வைத்திய சாலை ஆனாலும், சிமெண்டால் கான்கிரீட் செய்யும் பகுதியானாலும் ஒரு புதிய வேலையை ஆசிரமத்தில் ஆரம்பிக்கலாம் என ஒருவர் அன்னையிடம் சொன்னால், உடனே அவர் அதற்கு ஒத்துக்கொண்டதற்குக் காரணம், அதன் மூலம் உலக வாழ்க்கையை அன்னையின் பேரொளி தொட்டுச் செயல்பட முடியும் என்பது தான்.

ஸ்ரீ அரவிந்தருடைய அமைதி நிலவும் ஆத்மீக சூட்சும உடலின் சக்தி புதுவையைச் சுற்றி ஏழுமைல் வரை பரவியுள்ளது. ஜவஹர்லால் நேரு புதுவை வந்த பொழுது புதுவையிலுள்ள சிறப்பான அமைதியைக் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆசிரமத்தில் காலையில் 3 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது சட்டம். 1962 வரை அன்னை பால்கனியில் நின்று காலை 6.15க்குத் தரிசனம் கொடுத்து அன்றைய தினத்தை ஆரம்பிப்பது வழக்கம். மறுபடியும் காலை 8.00 மணிக்கு அவரவர்கள் தங்கள் வேலைக்குப் போகுமுன் அன்னையின் முன் வரிசையாக வந்து ஆசீர்வாதம் பெற்று வேலைக்குச் செல்வார்கள். மாலையில் உடற்பயிற்சி முடிந்த பிறகு அன்னை தினமும் விளையாட்டு மைதானத்திற்கு வந்து அங்கு மீண்டும் தரிசனம் கொடுப்பார். ஒருவரது பிறந்த நாளை அன்னை விசேஷமாகக் கருதுகிறார். ‘‘ஒவ்வொரு பயிரும் குறிப்பிட்ட காலத்தில் பலன் தருவதைப் போல் தங்கள் பிறந்த நாளன்று மனிதனுடைய ஆத்மா ஜீவனின் ஆழத்திலிருந்து லேசாக மேலே வந்து மலர்ந்து பிரிந்து தெய்விக உணர்வைப் பெரிதும் பெற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இருக்கிறது’’ என்று அன்னை கருதுகிறார். பிறந்த நாளன்று சாதகரைத் தனியே சந்தித்து சிறப்பாக வாழ்த்தி ஆசீர்வாதம் செய்வது அன்னையின் வழக்கம்.

52 பிரிவுகளாக ஆசிரமம் இயங்குகிறது. சாப்பாட்டு அறையிலிருந்து ஆரம்பித்து, ‘ரொட்டி சுடும் இடம், லாண்டரி, அச்சகம், விளையாடுமிடம், கலை நிலையம் (Art gallery), நெற்பயிர் விளையும் பூமி, பால் பண்ணை, கோழிப்பண்ணை, தச்சுப் பட்டறை, நர்ஸிங் ஹோம், விடுதிகள், எம்ராய்டரி, பைண்டிங், சிமெண்ட் கான்க்கிரீட் தொழிலகம், பூந்தோட்டம், சாவி செய்யும் இடம், பர்னிசர் செய்யும் இடம், மோட்டார் ஒர்க் ஷாப், பட்டறை, காகித நிறுவனம், பல் வைத்தியசாலை, கண் வைத்தியசாலை, கராத்தே பயிற்சி நிலையம், நூல் நிலையம், போட்டோகிராப், புத்தக விற்பனை நிலையம், சிற்றுண்டிச் சாலை போன்ற ஏராளமான பிரிவுகளைக் கொண்டது ஆசிரமம்.

வேலையை நிஷ்காம்ய கர்மமாகவும், பலன் கருதாத சேவையாகவும் செய்வது கர்ம யோகம். அதுவே இந்தத் தொழிற்கூடங்களின் அடிப்படை. பூரண யோகத்தில் வேலைக்குள்ள நியதி சற்று மாறுபட்டுள்ளதாகும். மனிதன் ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது — உதாரணமாகத் தன்னுடைய மேஜையைச் சீர் செய்யும் பொழுது — தன் சௌகரியத்திற்காகச் செய்கிறான். தன் மேஜையைச் சீர் செய்பவன் சுயநலமியாக இருந்தால், தம்பி மேஜையைச் சீர் செய்வதில்லை. நல்லவனாக இருந்தால், கலைந்துள்ள மேஜை யாருடையதாக இருந்தாலும் அதைச் சீர் செய்வான். அது அவனது மனப் போக்கைக் காட்டுகிறது. வேலையில் இது முக்கிய அம்சம். ஆனால் ஓர் அம்சம் தான். சுறுசுறுப்புடன் செய்யலாம். அது திறனைக் குறிக்கும். அறிவோடு செய்யலாம். அறிவில்லாமல் புத்தகங்களைத் தலை கீழாக அடுக்கலாம். அது அறிவின் நிலையைக் குறிக்கும். தன் வீட்டுப் பழக்கப்படி எழுந்து போகும் பொழுது அடுக்கலாம். அது பழக்கத்தைக் குறிக்கும். ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது மனம் தெளிவால் ஈடுபடுகிறது. உணர்வு சுயநலத்தின் மூலமும், உடல் சுறுசுறுப்பின் மூலமும், எல்லாப்பகுதிகளும் பழக்கத்தின் மூலமும் செயல்படுகின்றன. கர்மயோக முறைப்படி தன்னலத்தை விலக்கிச் செயல்பட்டால் அச்செயல் கர்ம யோகப் பலனைக் கொடுக்கும். பூரண யோகத்தில் சாதகனோ, அவனது அறிவோ, உணர்வோ, மனப்பாங்கோ, சுறுசுறுப்போ, அவற்றின் பழக்கங்களோ செயல்படுதல் கூடாது. அவையெல்லாம் விலக்கப்பட வேண்டியவை. இறைவனை ஜீவனின் ஆழத்தில் உணர்ந்து, செயலில் தன்னையும் தன் சுபாவங்களையும் விலக்கிச் செயல்பட்டால் அச்செயலின் மூலம் இறைவன் தன்செயலைப் பூர்த்தி செய்துகொள்வான். சாதகனுக்குப் பூரண யோகம் பலிக்கும்.

இது போல் அன்றாடம் சாதகன் வாழ்க்கையில் செயல் மூலமாக ஈடுபட அவனுக்கு 50 தொழிற்கூடங்களை அன்னை ஏற்படுத்தியுள்ளார்கள். பால்கனியிலும், பிறகும் தன் ஆசீர்வாதத்தால் ஆழத்தில் பதிந்துள்ள இறையுணர்வை மேலே கொணர்ந்துள்ளார்கள். சாதகன் தான் வேலை செய்யும் இடத்தில் அன்னை அன்று காலை மலரச் செய்த இறையுணர்வைச் செயலில் வெளிப்படுமாறு தொழில் செயதால் அவனுக்குப் பூரண யோகம் பலிக்கும்.

இதை விட முக்கியமான பகுதி வேலை செய்வதில் உள்ளது. அன்னைக்குச் சேவை செய்ய மனம் விழைவதும், பலனைப் புறக்கணிப்பதும், ‘தான்’ எனும் உணர்வை நீக்குவதும் பொதுவாக சிரமமானவையானாலும் யோகத்தை இலட்சியமாக ஏற்றுக்கொண்டவர்கள், அவற்றைச் சிரமமாகக் கருதாமல் இலட்சியமாகச் செய்ய முனைந்து வெற்றிபெறுதல் சாத்தியம்; அதற்கடுத்தபடி அவ்வளவு சாத்தியமில்லை. சாதகன் காலையில் அன்னையின் ஆசியையும், அருளையும் பெற்றுத் தன் காரியாலயத்திற்குச் சென்று, அங்கே தன் அறைக்கு வந்தவுடன் தன் மேஜை மீது நேற்று வைத்துவிட்டுப் போன பொருள்கள் அலங்கோலமாகக் கிடந்ததால் அவற்றை அடுக்கி வைக்கத் தோன்றுவதற்கு முன் ‘யார் இதைச் செய்தது? என் மேஜையைத் தொட்டது யார்? இது அன்னையின் சேவைக் கூடமல்லவா?’ என்ற உணர்வுகள் எழுந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தி, ‘அவை எல்லாம் பிரச்சனையில்லை. முதலில் மேஜையை அடுக்கலாம்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டால், சாதகன் முதல் படியில் வெற்றி பெறுகின்றான். ‘‘என் மேஜையை எவரும் கலைக்கக் கூடாதல்லவா? யார் கலைத்தாலும் தவறல்லவா? யார் கலைத்தார்கள்? ஏன் கலைத்தார்கள் என்று எனக்கு முதலில் தெரிய வேண்டும்’’ என்ற எண்ணங்களைப் புறக்கணித்தலும் அவற்றை வெளியிடாமலிருத்தலும் அன்றாட வாழ்க்கையில் — சாதகனின் வாழ்க்கையிலும் கூட — சிரமம். அதைச் செய்ய வேண்டும். தன்னுள் எழும் உணர்ச்சிகளை, தன்னை மற்றவர் தொந்தரவு செய்கிறார்கள் என்ற எண்ணத்தை, காலையில் பெற்ற அன்னையின் அருளுக்குச் சமர்ப்பித்து தன்னை வெல்ல வேண்டும். இது ஒரு பெரிய காரியம். இதைச் செய்து வெற்றிகரமாக முடித்தால் பூர்த்தியாவது வேலையில்லை. ‘தான்’ வேலையிடமிருந்து விலக்கப்படுகிறான். அது சாதனையில் முதற் கட்டமான முக்கிய வெற்றி. அலுவலகத்தில் தனக்குக் கணக்கு எழுதும் வேலை கொடுத்தால், ‘‘எனக்குக் கணக்கென்றாலே கசப்பு. நன்றாக டைப் அடிப்பேன். இது வேண்டாம். அதைக் கொடுங்கள்’’ எனக் கேட்காமல், கொடுத்த வேலையை ஏற்றுக்கொண்டு, வளரும் கசப்பை அன்னையின் அருளுக்குச் சமர்ப்பணம் செய்து, கசப்பில்லாத சுபாவமாகத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.

உடன் வேலை செய்யும் நாலு பேர் மெதுவாக வேலை செய்தால், சுறுசுறுப்பாகச் செயல்பட்ட சாதகனுக்கு எரிச்சல் வரும். அவர்களைச் சுறுசுறுப்பாக வேலை செய்யச் சொல்லும்படியான எண்ணம் எழும். அந்த எண்ணத்தைத் தவிர்த்து, வளரும் எரிச்சலைப் புறக்கணித்து, அர்ப்பணித்து பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், ‘நாம் செய்யும் காரியங்கள் சரியா, தவறா, லாபமானதா, நஷ்டமானதா, மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா, இல்லையா?’ என்பவையே வாழ்க்கையில் ஒருவன் கேட்கக் கூடிய கேள்விகள். அவையெல்லாம் வாழ்க்கைக்குச் சரி. யோகத்திலும் அவை சரியாக இருக்கும் நேரம் உண்டு; சரியில்லாமலிருக்கும் நேரமும் உண்டு. சாதகனுக்கு ஒரு வேலையைக் கொடுத்தால், கொடுத்தவர் சொல்வதை முழுமையாக ஏற்றுச் செய்வதோடு சரி. அவரையே ‘அன்னை’ எனக் கருதி அவர் சொல்லியபடி செய்தலே சரி; முக்கியமும் கூட. மற்ற கேள்விகளுக்கு அவன் மனத்தில் இடமில்லை. அதைச் செய்யும் பொழுது தன் விருப்பு, வெறுப்புகளையும், மனப்பாங்கையும், பழக்கங்களையும் ஒதுக்கிச் செய்தல் அவசியம். அப்படி தன்னை ஒதுக்குவதே பூரண யோகத்திற்கு முக்கியம். அது அன்னையை ஏற்றுக்கொள்வதை விடக் கடினமானது. ஆனால் அதுவே சாதகனின் பங்கு; சாதனையும் கூட. ஆரம்பத்தில் இலாக்காத் தலைவரை அன்னையாகக் கருத ஆரம்பித்து, பின்னர் உடன் வேலை செய்பவரையும் அன்னையாகக் கருதி, இறுதியில், தனக்குக் கீழே வேலை செய்வபவரையும் அன்னையாகக் கருதிச் செயல்படுவதே ஆசிரமத்தில் ‘கர்மயோகம்’ எனக் கருதப்படுவதாகும்.

இதனுடன் வேறு பல நிபந்தனைகளும், செயல் திறனுள்ள திட்டங்களும், ஏற்றுக்கொள்ள வேண்டிய மனநிறைவுகளும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நீக்கி விட்டு இறுதியான செயல் முறையை மட்டும் குறிப்பிடுகிறேன். தான் வேலை செய்யுமிடத்தில் ஒரு வேலை செவ்வனே பூர்த்தியடைந்து சிறப்பானால், அன்னை அதை எப்படி முடித்தார் என்று அறிந்து கொள்ள முயலவேண்டும். ஒரு வேலை கெட்டுப்போய் நஷ்டம் வந்தால், அந்த நஷ்டத்திற்கு தான் எந்த வகையில் பொறுப்பு என்பதை மட்டும் கருதிக் கண்டு பிடிக்க முயலவேண்டும். இவை அவையடக்கமான முறைகளில்லை. பலன் வரும்பொழுது அன்னையின் பங்கை உணருவதால் ஞானம் வளரும். பலன் கெட்டுப்போனல் நம் பங்கை அறிந்து விலக்கினால் அந்த நஷ்டம் மாறி பலன் வருவதுடன் யோகத்திற்கேற்ற பக்குவமும் வரும். மற்றவையெல்லாம் சுபாவத்தின் வெளிப்பாடுகள். அதனால் அவை விலக்கப்படவேண்டியவை.

பூரண யோகத்தில் தியானம் இரண்டாம் பட்சமான இடத்தைப் பெறுகிறது. ஒரு மணி தியானம் செய்து அதில் கிடைத்த தெய்வவுணர்வை தன் அன்றாடச் செயலில் (தன்னை விலக்கி) வெளிப்படுத்தினால், மனித சுபாவம் அதன் தன்மையை இழந்து தெய்வ சுபாவமாக மாறும். அதனால் ‘‘செய்யும் வேலைகளுக்கு, முக்கியத்துவம் கொடுத்து வேலைகளைச் செய்வதால், தியானத்தைவிட அதிக யோகப் பலனைப் பெறலாம்’’ என அன்னை கூறுகிறார்.

ஆசிரமம் என்று இன்று நாம் சொல்வது ஒரே கட்டிடமாகத் தெரிகிறது. 4 கட்டிடங்களை ஒருங்கிணைத்து, அதை ஒரே இடமாக மாற்றியிருக்கிறார்கள். இந்தக் கட்டிடத்திற்கு ஸ்ரீ அரவிந்தர் வந்தவுடன் தற்சமயம் ஜனவரி முதல் தேதி காலண்டர் கொடுக்கும் அறையில் ஸ்ரீ அரவிந்தர் தங்கியிருந்தார். கொஞ்ச நாள் கழித்து கிழக்குப் பகுதியில் ‘ஸ்ரீஅரவிந்தர் அறை’ என நாம் தரிசிக்கும் இடத்திற்குச் சென்றார். இதை Main Building என்று இன்று சொல்கிறோம். இதன் கிழக்குப் பகுதியில் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் தங்கியிருந்த அறைகளும், தியான மண்டபமும் உள்ளன. மேற்குப் பகுதியில் வாசக சாலை, செய்திப் பத்திரிகை அறை, பழ அறை, பொருள் வைப்பு அறை, நூல் வெளியீட்டுத் துறை, வரவேற்பு அறை, பிரதான வாயில் ஆகியவையுள்ளன. வடக்குப் பகுதியில் அன்னையின் கார் நிற்குமிடமும், பல ஆண்டுகளாக அன்னை தினமும் காலையில் தரிசனம் கொடுத்த பால்கனியும் உள்ளன. ஆசிரமக் கட்டிடத்தின் நடுவில் ஸ்ரீ அரவிந்தர் அடக்கம் செய்யப்பட்ட சமாதி இருக்கிறது. அதே சமாதியில் அன்னையும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சமாதியின் பக்கத்தில் கொன்றை மரம் ஒன்று 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துவிட்டு நிழல் தருகிறது. அன்னை அதை ‘Service Tree’ என்று அழைப்பார். சமாதி கட்டிடத்தின் நடுவேயிருப்பதால் அன்னை தன் அறையில் தன் நாற்காலியை மேற்கு முகமாகப் போட்டு உட்கார்ந்திருந்தார். சமாதியை நோக்கியிருக்க வேண்டுமென்பதற்காக அப்படிச் செய்தார் அவர்.

வரவேற்புப் பகுதிக்கு அடுத்தாற்போல் ஒரு பெரிய அறையும், அதில் ஸ்ரீ அரவிந்தருடைய 3 படங்களும் உள்ளன. நடுவிலுள்ள ஸ்ரீ அரவிந்தருடைய படம், அன்னை முக்கியமாகக் கருதுவது. ‘‘அதற்கு சக்தி அதிகம்’’ என்று சொல்வார் அன்னை. இருபுறங்களிலுமுள்ள படங்கள் ஸ்ரீ அரவிந்தர் சமாதியானபின் எடுக்கப்பட்டவை. ஒரு சாதகர் ஆசிரமத்தின் உள் செல்வதற்கு முன் இப்படத்தை வணங்கி எழுந்த பொழுது ஸ்ரீ அரவிந்தர் அந்தப் படத்திலிருந்து உயிரோடு வெளியே வந்ததைக் கண்டு அன்னையிடம் சொன்னார். ‘‘அந்தப் படம் சக்தி வாய்ந்தது’’ என அன்னை விளக்கினார்.

ஆசிரம வாயிலிலுள்ள மல்லிகைச் செடிக்கு 60 வயதாகிறது.

ஆசிரமத்தில் ஒரு பெரிய விலையுயர்ந்த மெஷினை லண்டனிலிருந்து வாங்கினார்கள். அதை விற்ற கம்பெனி கியாரண்டி கொடுத்திருந்தது. அதில் ஒரு சிறு தகராறு வரவே, அதைச் சில காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அந்தத் தகராறு வருமிடத்தைப் பயன்படுத்தாது விடுத்து, அந்தக் கம்பெனிக்கு அதுபற்றித் தந்தி கொடுத்திருந்தார்கள். தினமும் காலையில் அந்த மெஷின் உள்ள அறைக்கு வரும் சாதகர், கதவைத் திறந்தவுடன் ஒரு நாள் அந்த மெஷின் அருகில் 2 அடி உயரமுள்ள ஒருவர் மெஷினைத் துடைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துத் திகைத்தார். உருவம் உடனே மறைந்துவிட்டது. அவர் இந்த விஷயத்தைத் தயங்கித் தயங்கி மற்றவர்களிடம் சொன்னார். பலர் சிரித்தனர். அவரை நம்பவில்லை. சிலர் அவரை விநோதமாகப் பார்த்தார்கள். தினமும் அவர் அந்த உருவத்தைக் கண்டார். ஆனால் மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்திக்கொண்டார். லண்டனிலிருந்து இன்ஜீனியர் வந்தார். மெஷினில் தகராறு செய்யும் பகுதியைப் பார்த்தார். ‘‘தகராறுக்குப் பின் மெஷினை என்ன செய்தீர்கள்?’’ என்று கேட்டதற்கு, அவர்கள் செய்ததைச் சொன்னார்கள். அவர்கள் கூற்றை அவரால் நம்ப முடியவில்லை. ஏற்கனவே செய்ததை அன்றும் செய்து காண்பித்தார்கள். அவரால் கண்களையே நம்ப முடியவில்லை. ‘‘மேலே இந்தத் தகராறு தெரிகிறது என்றால், உள்ளே முக்கியப் பகுதி உடைந்து விட்டது என்று அர்த்தம். அதன்பின் மெஷின் லேசாகக்கூட அசையாதே! எப்படி ஓட்டினீர்கள்?’’ எனக் கேட்டுவிட்டு, மெஷினைப் பிரித்து தான் சொல்லியது போல் உடைந்த முக்கியப் பகுதியைக் காட்டினார் அவர். அன்னையிடம் வந்து அவர் சொல்லியதையும், சாதகர் பார்த்த உருவத்தையும் பற்றிச் சொன்னார்கள். ‘‘என்னுடைய பொருள்களைப் பாதுகாக்க சூட்சும உலகில் அநேக ஜீவன்கள் உண்டு. சாதகர் பார்த்தது உண்மையில் அப்படிப்பட்ட ஒரு ஜீவனாகும்’’ என்று அன்னை விளக்கினார்.

ஒரு நிறுவன அதிகாரியின் மனம் ஒரு வகையான அசுர வெறியின் ஆதிக்கத்திற்குட்பட்டுத் தூக்கமின்மையாலும், நிம்மதியின்றியும் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தார். புதுவைக்கு ஒரு வேலையாக வந்தவர் ஆசிரம விடுதி ஒன்றில் ஒரு நாள் தங்கினார். வாழ்க்கையிலேயே கண்டிராத அளவுக்கு தன் மனம் மென்மையடைந்ததையும், அமைதியில் ஆழ்ந்ததையும் உணர்ந்து வியந்தார். இவ்வாறாக, அன்னையின் அமைதி, ஸ்ரீ அரவிந்தரின் சாந்தம் ஆகியவை அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிளெல்லாம் பரவியுள்ளன.

உயர்நிலை சர்க்கார் அதிகாரி ஒருவர், வைதீக பிராமணர். சமஸ்கிருதத்தில் வல்லுநர். ஆயிரக்கணக்கான சுலோகங்களை எழுதியவர். புதுவைக்குத் தன் அலுவலக வேலையாக வந்தார். ஆசிரமத்தில் அவருக்கு ஈடுபாடில்லை எனினும் வந்தார். அங்குள்ளவர்களுடைய முகத்திலுள்ள ஒளியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். ‘‘மற்ற யோகங்களில் கடைசி இலட்சியமாக உள்ளதை இங்கு ஆரம்பத்திலேயே பெற்றிருக்கிறார்கள்’’ என்றார். ஆசிரமத்தின் சாப்பாட்டு அறையில் அன்று சாப்பிட்டார். சாப்பிட்டு விட்டு வெளியே வந்தவர், வெற்றிலைப் பாக்குப் போட நினைத்தார். ‘‘எனக்கு வயிற்றில் ஒரு சிறு கோளாறு உண்டு. சாப்பிட்டவுடன் அது தொந்தரவு செய்யும், ஆசிரம உணவை உண்டவுடன் அந்தத் தொந்தரவில்லை. கோளாறும் போய்விட்டது போலிருக்கிறது. வெற்றிலையையும், புகையிலையையும் போட இப்பொழுது மனமில்லை’’ என்றார்.

ஆசிரமத்திலுள்ள அமைதி சிறப்பானது; செறிவானதும் கூட. ஆசிரமத்துக்கு வெளியே சாலையில் செல்லும்போது கூட அந்த அமைதி தெரியும். ஆசிரமத்தை நன்கு அறிந்தவர் ஒருவருடைய கண்ணைக் கட்டிப் போட்டுப் பல இடங்களுக்கும் அழைத்துச்சென்று ஆசிரமத்திற்குத் திரும்பி அழைத்துக் கொண்டு வந்தால், நேரில் காண்பது போல் அங்குள்ள அமைதி அது ஆசிரமம் என்பதைக் காட்டிவிடும்.

ஒரு 70 வயதுக் கிழவர், ஆசிரமத்தைப் பற்றி அவருக்குத் தெரிந்த பலர் சிறப்பாகப் பேசியதைக் கேட்டு அதைப் பார்க்க ஆவலோடு வந்தார். புதிய அனுபவங்களைச் சந்தித்துப் புளகித்த அவர், ஊருக்குத் திரும்பியவுடன் வியப்புடன் கூறினார்: ‘‘ஆசிரமத்தில் கிழவர்களெல்லாம் தடியின்றி நடக்கும் அதிசயத்தைக் கண்டேன்!.’’

உண்மையில் ஒரு முதியவர் அதிசயப்பட வேண்டிய காட்சிதான் அது. அந்த அளவுக்கு ஆசிரமத்தில் வாழும் முதியவர்களுக்கு ஆரோக்கியம் மிகுந்திருக்கும்.

சமாதியை அன்னை, ‘‘சித்தி பெறும் இடம்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆசிரமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இமாலயத்தில் கொஞ்ச நாள் பயணம் செய்தார். ஒரு பெரிய யோகியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றார். குகையில் புலித்தோல் பரப்பி நிர்வாணமாக அதன் மீது உட்கார்ந்திருந்தார் யோகி. குகைக்கு வெளியே ஒரு அடிக்கு மேல் பனி விழுந்து கடும் குளிர். அவர் இளைஞரைப் பார்த்தவுடன், ‘‘ஓர் ஆசிரமத்திலிருந்து வருகிறாய். அது கடலோரத்திலுள்ளது. அங்கு இதுவரை செய்யாத ஒரு யோகத்தைச் செய்கிறார்கள். அது கடுமையான யோகம்’’ என்று கூறினார்.

உலகத்தின் எல்லாச் சிரமங்களையும் உருட்டித் திரட்டி ஆசிரமத்தில் வைத்திருக்கிறார்கள். ‘‘உலகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க, அவற்றை இங்கு முதலில் தீர்க்க வேண்டும்’’ என அன்னை கூறுகிறார்.

‘ஆசிரமம் உள்ள இடம் அகஸ்திய முனிவர் வாழ்ந்த இடம்’ என்று ஓர் ஆராய்ச்சி அறுதியிட்டுக் கூறுகிறது.

குடி தண்ணீரை நன்கு சுத்தம் செய்வதற்காக ஆசிரமத்துக் கட்டிடத்தில் ஒரு ஃபில்டர் இருக்கிறது. தண்ணீரிலிருந்து 7, 8 வகையான அசுத்தங்களையும், ரசாயனப் பொருள்களையும் சுத்தம் செய்து மீண்டும் ஃபில்டர் செய்து சாதகர்களுக்குக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள்.

வாட்டர் டிவைனர் ஒருவர் அன்னையைப் பார்க்க வந்தார். ஸ்ரீ அரவிந்தருடன் 40 ஆண்டுகள் இருந்த ஒரு சாதகர், அந்த வாட்டர் டிவைனர் எப்படி பூமிக்கடியில் நீரைக் கண்டு பிடிக்கின்றார் என்று பார்க்க ஆசைப்பட்டார். அதைப் பார்க்க வேண்டுமானால் நீரூற்றுள்ள இடத்தில்தான் வாட்டர் டிவைனர் அவருக்கு அதைக் காட்ட முடியும். ஆனால் சாதகரோ ஆசிரமக் கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதில்லை. அதனால் அவர் ‘‘இங்கேயே சோதனை செய்துகாட்டு’’ என்றார். ‘சமாதி இருக்கும் இடம் புனிதமான இடமாதலால், இங்கு நீரூற்று இருக்கலாம்’ என முடிவு செய்த வாட்டர் டிவைனர், தன் குச்சியால் சோதனையைத் தொடங்கினார். சமாதியின் அடியில் ஒரு நீரூற்று இருந்தது! குச்சி செயல்பட்டது. சாதகர் கண்டு களித்தார்.

***********



book | by Dr. Radut