Skip to Content

04. ஆரோவில் நகரம்

ஆரோவில் நகரம்

‘Sri Aurobindo’ என்ற பெயரில் உள்ள Auro என்ற பகுதியையும் ‘நகர்’ என்று பொருள்படும் ‘Ville’ என்ற பிரெஞ்சுச் சொல்லையும் சேர்த்து இந்த உலகப் பொதுநகருக்கு ‘ஆரோவில்’ என்று பெயரிடப்பட்டது. அதற்கு ‘ஸ்ரீ அரவிந்தர் நகரம்’ என்ற கருத்தில் அப்பெயர் சூட்டப்பட்டது.

இளம் வயதிலிருந்தே அன்னைக்கு இலட்சியமாக ஒரு கருத்து அவர்கள் மனத்திலிருந்தது. ‘மனிதன் நாள் முழுவதும் உணவுக்கும், உடைக்கும், உடைவிடத்திற்குமாக, தன் வாழ்நாட்களை எல்லாம் செலவு செய்கிறான். தன்னுள் உறையும் இறைவனை நினைக்கவோ, அவனையுணர்ந்து வாழ்வைத் தெய்வீக வாழ்வாக மாற்றவோ மனிதனுக்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது. உலகத்தில் ஓரிடத்தில் தெய்வத்தைத் தேடுபவர்கள் எல்லாம் சேர்ந்து அடிப்படை வசதிகளைத் தேடும் அவசியமில்லாமல், எந்த மதத்தையும் சார்ந்து வழிபாடு நடத்தாமல், ஆண்டவனைத் தங்கள் வாழ்விலும், ஆத்மாவிலும் தேடியடைய ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்பதே அன்னையின் இலட்சியம். அந்த இலட்சியத்தை அவர் ‘‘என் கனவு’’ என்று குறிப்பிடுவார். அன்னையின் கனவு நினைவாகும் வகையில் ஆரோவில் நகரம் ஏற்பட்டது.

இதை ‘சர்வ தேச நகரம்’ என்பர். அதைவிட, ‘சர்வ சுதந்திர நகர்’ என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இறைவனை நாடும் ஜீவன்கள் ஒன்று சேர்ந்து, அவரவர்கள் தங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, காரியங்களைப் பகிர்ந்து கொண்டு, சட்டங்களைக் கொண்டு வராமல், தலைவரை ஏற்படுத்தாமல், தங்கள் ஆத்மீக ஆர்வம் வெளிப்படும் வண்ணம் செயல்பட்டு நகரை நிரப்ப வேண்டும்.

‘தனி நபர் சொத்துரிமையில்லை’ என்பதை அடிப்படையாகக் கொண்டதால், ‘‘ஆரோவில் எவருடைய சொத்துமில்லை’’ என்பதை அன்னை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இந்நகரத்தின் ஆன்மாவாக மாத்ருமந்திர், அன்னையின் கோயில் எழுப்பப்படுகிறது. கோள வடிவமான கட்டிடம் இது. இதன் மையத்தில் ஒரு தியான மண்டபம். சூரிய ஒளி எக்காலத்திலும் உள்ளே வர, ஓர் ஏற்பாடு. உலகத்திலுள்ள பல நாடுகளிலிருந்தும் மண் கொண்டு வந்து தாமரை உருவான ஒரு கட்டிடத்தின் மையத்தில் அம் மண்ணை எல்லாம் சேர்த்து பூமியின் ஆழத்தில் புதைத்து ஆரோவிலுக்கு அஸ்திவாரம் போடப்பட்டது.

சோவியத் பிரதமர் குருஷேவ் இந்தத் திட்டத்தைக் கேட்டு வியந்து பாராட்டினார். ‘எவ்வகையில் தன் அரசாங்கம் இதில் பங்கு கொள்ள முடியும்?’ எனவும் தீவிரமாகக் கருதினார்.

‘‘பணத்திற்கு வாழ்க்கையில் உள்ள செல்வாக்கு ஆரோவிலில் வரக்கூடாது’’ என்பதற்காக, அங்கு பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

மூன்றாம் உலக மகா யுத்தத்தைத் தடுக்க அன்னை செய்த யுக்தி இது. ‘‘ஆரோவில் உள்ள வரை மற்றொரு உலக யுத்தம் மூளாது’’ என்றார் அன்னை. ‘‘உலகத்தின் பிரச்சனைகள் இங்கு சிறு அளவில் மோதித் தீர்வு கண்டால், பெருமளவில் மோத வேண்டிய அவசியமிருக்காது’’ என்றார்.

நகரில் உள்ள பகுதிகளுக்கு அன்னை Harmony, Peace, Aspiration போன்ற பெயர்களைக் கொடுத்துள்ளார். அவை முறையே சுமுகம், சாந்தி, ஆர்வம் எனப்படும்.

‘ஆரோவில் நகரம் 1968ல் ஏற்படப் போகிறது’ என்பதையும், ‘அது எங்கு ஏற்படப்போகிறது?’ என்பதையும் அறியாத அன்பர் ஒருவர், புதுவையிலிருந்து 6 மைல் தூரத்திலுள்ள சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வரும் பொழுதெல்லாம் (1965, 66, 67 ஆண்டுகளில்) தொலைவில் ஒரு காட்சியைக் காண்பது வழக்கம். கோபுரம் போன்று உயர்ந்து ஒளி மயமாக ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் வானிலிருந்து பூமி வரை பரவி, காட்சியாகத் தெரிவார்கள். பல ஆண்டுகளாக அக்காட்சியைப் பார்த்து வந்த பக்தர், அதன் உட்பொருளை உணர்ந்ததில்லை. 1968-ல் ஆரோவில் நிர்மாணிக்கப்பட்ட தினத்தன்று அந்த பக்தரும் அஸ்திவார விழாவுக்குச் சென்றிருந்தார். தான் கண்ட காட்சியிருந்த இடத்தில் நகரம் ஏற்படுவதை அறிந்தார். அதன் பின்னரே அவருக்கு அது புரிய வந்தது.

ஆரோவில் நகரம் ஏற்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் வட நாட்டிலிருந்து பலர் வந்திருந்தனர். அவர்கள் நகரத்தைப் பார்க்கச் சென்றனர். ‘பாரத் நிவாஸ்’ என்ற இடத்தில் ஒருவர் இருந்தார். அவரை நகரைப் பற்றிக் கேட்டார்கள். வந்தவர்கள் எதிர்பார்த்த எந்த விஷயத்தையும் பதிலாகக் கொடுக்காத அவர், ‘‘இங்கு எதுவும் நிலையில்லை. ஆனால் எல்லாம் தடையின்றி நடக்கிறது’’ என்றார். மனிதனுடைய திட்டங்களையெல்லாம் கடந்து இறைவனின் பிடியில் மட்டும் வாழ்க்கையிருக்கும் கட்டத்தை உணர்த்துவது போலிருந்தது அவருடைய விளக்கம்.

வட துருவத்தில் மட்டும் பயிராகும் சில மரங்களை அன்னை அங்கு நடச்சொன்னார்கள். யாருக்கும் எதுவும் புரியவில்லை. ‘‘பருவங்கள் மாறும், பனிபெய்யும், வடதுருவ நிலை இங்கும் ஏற்படும்’’ என்று அன்னை கூறினார்கள். அதே போல வட துருவத்தில் முளைக்கக்கூடிய மரக்கன்றுகள் அங்கு நடப்பெற்றன; அவை நன்றாக வளர்ந்தன; செழித்தன.

ஆயுதங்களைக் குவிக்கின்ற மேலை நாட்டு அரசுகள், குவியும் தளவாடங்களுக்கு ஒரு சக்தியுண்டு. அவை மனிதனை வன்முறைக்குத் தூண்டும் திறமையுடையவை. ‘‘குவிந்த தளவாடங்களில் பொதிந்துள்ள சக்தி தங்களை பயன்படுத்தும்படி மனிதனை வற்புறுத்தும் தன்மையுடையன’’ என அன்னை கூறுகிறார். ‘‘அந்த ஆபத்தை எதிர்க்கும் வலு ஆத்மீகத்திற்கே உண்டு. ஆபத்தை வளர்க்கும் வகையில் அரசுகள் செயல்படுவதை எதிர்ப்புறத்திலிருந்து ஈடுகட்ட, ஆரோவில்லில் ஆத்மீகத்தை அளவு கடந்து குவிக்க வேண்டும்” என்றார் அன்னை.

**********



book | by Dr. Radut