Skip to Content

06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்

மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்

மோட்சத்தை நாடித் தவம் செய்து, தவம் பலித்தால் மோட்சத்தை அடைவது யோக இலட்சியம். பூரண யோகத்தை, சரணாகதியை இலட்சியமாகக் கொண்டு வாழ்க்கையை யோகமாக மாற்றி வாழும் பொழுது முதற்கட்டமாக மோட்சம் சித்திக்கும். அதை ஏற்றுக்கொண்டு மோட்ச லோகத்திற்குப் போகாமல், தன் அடிப்படையில் பூரண யோக இலட்சியமான மரணத்தை வெல்லும் பாதையில் போக வேண்டும்.

மனம், உள்ளம், உடல் ஆகியவை ஜீவனின் பகுதிகள். எந்த ஒரு பகுதியைச் சுத்தி செய்தாலும் முக்தி கிடைக்கும். இதுவே ஞானம், பக்தி, கர்மம், ராஜ யோகங்களின் அடிப்படை. எல்லாக் கரணங்களையும் ஒருங்கே பயன்படுத்தி இருதய குகையில் உள்ள சைத்திய புருஷனையும், பின்னர் ஜீவாத்மாவையும் (Central being) விடுதலை செய்து மனிதப் பிறப்பை சுத்தி செய்வது பூரண யோகம்.

யோகத்தில் முதுகெலும்பின் அடியில் மூலாதாரச் சக்கரத்திலுள்ள குண்டலினி சர்ப்பம் போல் வீரிட்டெழுந்து மார்பிலும், புருவத்திலும், தலையிலும் உள்ள சக்கரங்களைத் திறந்து கொண்டு தலைக்கு மேலுள்ள சகஸ்ரதளம் – ஆயிரம் தாமரை –சக்கரத்தில் ஜீவாத்மாவுடன் இணைந்து மோட்சமடைதல், சமாதியடைதல் நமது பரம்பரை – கரணங்களை சுத்தி செய்வதாலும், சைத்திய புருஷன் விடுதலை பெறுவதாலும் உடலும் மனமும் தூய்மை பெற்று, அத் தூய்மையால் சகஸ்ரதளம் திறந்து ஜீவாத்மாவின் ஆத்மீக சக்திகள் சகஸ்ரதளத்தின் வழியாக, புருவம், மார்பிலுள்ள சக்கரங்களையும் திறந்து கொண்டு குண்டலினியை வந்து அடைந்து, அதைக் கிளப்பி, மேலிருந்து வந்த சக்தியாலும், சக்கரங்களில் உள்ள சக்தியாலும் கரணங்களை மேலும் இறைவனுக்குக் கருவியாகத் தகுதிபெறும் அளவில் தூய்மைப்படுத்தி, உரு மாற்றி, நீண்ட நாள் வாழ உதவுவது பூரணயோகம்.

யோகத்தில் ஒரு பகுதி – மனம் அல்லது உடல் – முழு ஜீவனுக்கும் விடுதலையளிக்க முயல்வதால், கடுமையான கட்டுப்பாடுகளை அனுஷ்டிக்க வேண்டியிருக்கிறது.

பூரண யோகத்தில் முழு ஜீவனும் யோகக் கருவியாகப் பயன்படுவதாலும், யோகத்தின் தலைவன் இறைவனாதலாலும், கட்டுப்பாடுகள் இல்லை; கடுமையில்லை; சோதனையில்லை; சட்ட திட்டங்களில்லை; ஆசனம், பிராணாயாமமில்லை; மந்திரங்களும் இல்லை. ஒரே நிபந்தனை: மனம் முழுமையாக, உண்மையாக இறைவனை முழு ஆர்வத்தோடு தேட வேண்டும்.

பல யோக சாரங்களைத் தன்னுள் கொண்ட தந்திர மார்க்கத்தின் அஸ்திவாரம்: மனிதன் என்பவன் உடலிலுள்ள ஆத்மாவாகும்.

பூரண யோகத்தின் அடிப்படை: மனிதன் என்பவன் மனத்திலுள்ள ஆத்மாவாகும்.

எல்லா யோகங்களும் மோட்சத்தில் முடிவடைகின்றன. பூரணயோகம் மோட்சத்தைத் தொடக்கத் தகுதியாகப் பெற்ற பின் ஆரம்பமாகின்றது.

ஞான மார்க்கம் பக்தியை அலட்சியமாகக் கருதுகிறது. கர்ம மார்க்கம் ஞான மார்க்கத்தை அலட்சியமாகக் கருதுகிறது. இவ்வாறு ஒவ்வொரு மார்க்கத்தினரும் மற்றவற்றைக் குறையாகக் காண்கின்றனர். பூரண யோகத்தில் ஞானத்தில் ஆரம்பித்தால், அது பக்தியையும், கர்மத்தையும் கொடுப்பது போல், ஒரு பகுதியில் ஆரம்பித்து மற்ற இரு பகுதிகளையும் அதன் மூலம் அடைய உதவி செய்கிறது.

நம் யோகங்களெல்லாம் மனிதன் தன் ஆத்ம விடுதலைக்காக மேற்கொள்ளப்படுபவை. ஆனால் பூரண யோகம், ‘‘வாழ்வனைத்தும் யோகம்’’ என்ற இலட்சியத்தை மேற்கொண்டு, வாழ்வை வாழ்ந்து கொண்டு, அதை தெய்வீக வாழ்வாக (Divine Life) மாற்றுவதாகும்.

தவசிகளும், ரிஷிகளும், யோகிகளும் கோபம் வந்து மற்றவர்களைச் சபிப்பதுண்டு. பூரண யோகம் தன்னிடம் தொடர்பு கொள்வோர் அனைவரையும் புனிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அது பிறரைத் தண்டிக்கும் முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் பிறர் தனக்குச் செய்யும் கெடுதலுக்கும் பூரண யோகி தன்னையே திருத்தி அக்கெடுதலை விலக்க முயல்வான்.

மோட்சமடைய எந்த மார்க்கத்தை நாடுகிறோமோ, அப்பகுதியின் அகந்தையில் பெரும் அளவு கரைந்து வரும். மற்ற பகுதியின் (ego) அகந்தை கரையாது நிலைக்கும்.

பூரண யோகத்தில் ego முழுவதும் கரைந்து போக வேண்டியது அவசியம். அதுவும் முதற்கட்டம். அதற்கடுத்ததாக, மற்றொரு கட்டத்தையும் தாண்டிய பின்னரே அது பலிக்கும்.

நாட்டை விட்டுக் காட்டிலும், வாழ்க்கையை விடுத்துத் துறவிலும் மேற்கொள்ளப்படுவது தவம். வாழ்க்கையை மையமாக வைத்துச் செய்வது பூரண யோகம்.

யோகத்திற்கு ஏற்ற குருவை நாடி அவரையே கடவுளாகக் கருதுவது மரபு. மனித குருவையே நாடாமல், மனத்திலுள்ள ஜகத்குருவையே, அதாவது இறைவனையே குருவாக ஏற்றுக்கொள்ளுதல் பூரண யோக நிபந்தனை.

பூரண யோகம், தெய்வ லோகத்திற்கு மேலேயுள்ள சத்தியலோக சக்தியை நாடுவதால், தெய்வங்கள் இந்த யோகத்திற்குத் துணையாக இருக்க முடியாது. அவர்கள் யோக சித்திக்குத் தடையாக இருப்பார்கள்.

***********



book | by Dr. Radut