Skip to Content

08. பணம், செல்வம்

பணம், செல்வம்

ஸ்ரீ அரவிந்தர் மூன்று விஷயங்களை முக்கியமாகக் கருதினார். ‘‘உலகத்தில் பொய் ஒழிந்து மெய் ஆட்சி செலுத்த மூன்று விஷயங்கள் பொய்யிலிருந்து விடுபட்டு, மெய்யின் ஆதிக்கத்திற்குள் வரவேண்டும். அவை, தேக ஆரோக்கியம், செல்வம், அரசு ஆகியன. உடல் நலம் என்பதை நாம் பேண விரும்பினால், நல்ல அளவுக்கு ஆரோக்கியத்தைப் பெறலாம். அந்த அம்சத்தைப் பூர்த்தி செய்வது முடியக்கூடிய ஒரு காரியம். அரசு, மெய்யின் ஆதிக்கத்திற்குள் வர வேண்டுமானால் மெய்யைத் தன் யோக சித்தியின் மூலம் முழுமையாக அடைந்தவனே அரசின் தலைவனாக வர வேண்டும். நாட்டின் தலைவன் யோக சித்தி பெற்றவனை குருவாக ஏற்றுக்கொண்டால், நாட்டின் வாழ்வில் மெய்மையை நிலை நாட்ட முடியாது. அரசின் தலைவனே தன் வாழ்வில் மெய் சித்தித்தவனாக இருக்க வேண்டும்” என ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். மேலும், “செல்வத்தை பூமியில் மெய்யின் ஆட்சியை நிலைநாட்டப் பயன்படுத்த வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை’’ எனவும் ஸ்ரீ அரவிந்தர் கூறினார்.

அன்னை அவரது சொற்களை மனத்தில் தாங்கி, அப்புதிருக்கு விடை தேட முனைந்து தியானத்திலாழ்ந்தார். அவர் தியானத்தில் இந்த உலகை விட்டு வேறு பல உலகங்களுக்கும் சென்று ஒரு பாதாள லோகத்திற்கு வந்தார். பூமியின் செல்வம் முழுவதும் ஒரு இடத்தில் திரட்டி வைக்கப்பட்டிருந்தது அந்த லோகத்தில். அவ்விடத்திற்கு அன்னை வந்ததும், பொக்கிஷங்களுக்குக் காவலாகப் பெரிய கரிய மலைப் பாம்பு ஒன்று இருந்தது. அன்னை அதைத் தாண்டிச் செல்ல முயன்றார். ‘‘எந்த உலகத்திலும், எந்த ஜீவனும், என் சொல்லுக்குப் பணிவது வழக்கம். ஆனால் இந்தப் பாம்பு என்னைத் தடுத்து நிறுத்தியது’’ என்று அன்னை கூறுகிறார். அன்னை அதனுடன் உரையாடலைத் துவங்கினார். ‘‘என்னைத் தாண்டி யாராவது சென்றால் நான் கொல்லப்படுவேன்’’ என்றது பாம்பு. மேலும், ‘‘இந்தப் பொக்கிஷங்களைப் பெற ஒரு நிபந்தனையுண்டு. பூவுலகில் எல்லா மாந்தரும் இன உணர்வு (Sex feeling) அற்றுப் போனால் இந்தப் பொக்கிஷங்களைப் பெற அவர்களுக்குத் தகுதியுண்டு’’ என்றது பாம்பு.

வாழ்க்கையில் சாமர்த்தியம் பலிப்பதையும், சாமர்த்தியசாலி பொய்யிலும், புரட்டிலும் பெரும் செல்வத்தைக் குவிப்பதையும் பார்க்கிறோம். சாமர்த்தியம் இருந்தால் வாழ்க்கை பலிக்கும். சாமர்த்தியம் இருக்கும்போது பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் பணம் சேரும். பொய்யினால் வரும் பணம் அதைப் போலப் பொய்யாகவேயிருக்கும். எதிர்காலத்தில் அப்பணத்தின் விளைவும் அந்தக் களங்கத்தின் வண்ணங்களைத் தாங்கி வரும். மெய்யினால் சம்பாதிப்பது எளிதல்ல. அப்பணம் அதற்கேற்றபடியிருக்கும். எதிர்கால விளைவுகள் மெய்யின் வண்ணத்தைத் தாங்கி வரும். வாழ்க்கையில் யார் எதை நாடுகிறார்களோ, அவரவர்கள் தங்களுக்கேற்றதைப் பெறுகிறார்கள். அன்னையை வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டபின் பொய்யினால் சம்பாதிக்க முடியாது. அப்படி ஓரளவு சம்பாதித்தாலும் அடுத்த கட்டத்தில் அதை இழக்க நேரிடும். மெய்யினால் மட்டுமே சம்பாதிக்க முடியும். மெய்யால் சம்பாதிப்பது அன்னையை ஏற்றுக்கொண்டவர்கட்குச் சுலபம். உதாரணமாக, இருவர் அன்னை அன்பர்களாக இருந்து ஒருவர் பொய்யையும், மற்றவர் மெய்யையும் நாடினால் கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் முதலாமவரைப் போல் மற்றவர் 100 மடங்கு சம்பாதித்திருப்பார். இதுவே அன்னையின் சிறப்பு. அன்னையை ஏற்றுக்கொண்டபின் மனம் மெய்யை நாடினால் வாழ்க்கை பொய்யை விலக்கும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கும். ஒருவர் பொய்யினால் சில இலட்சங்களைச் சம்பாதித்த நிலையில் அதைப் பெரிதாகக் கருதினால், அவர் மேலும் கருத வேண்டியவை இரண்டு: (1) தான் சம்பாதித்த ஒவ்வொரு சொத்துடனும் ஒரு சிக்கல் கூடவே வந்திருக்கும். சிக்கலை அவிழ்த்தால் அந்தச் சொத்து அழிந்துவிடும். அந்த வெற்றிகள் எல்லாம் விலங்குகளாக மாறிவிட்ட நிலைமை தெரியும். (2) பொய்க்குப் பதிலாக மெய்யைக் கைக் கொண்டிருந்தால், அவர் சம்பாதித்த ஒவ்வொரு ஆயிரத்திற்கும் ஓர் இலட்சம் வீதம் சம்பாதித்திருக்கலாம். அவை சிக்கலின்றி வந்திருக்கும்.

இந்த இரண்டையும் அவர் கருத வேண்டும். இரண்டாம் நிலை பொதுவாக கற்பனையான ஒன்றாக இருக்காது. நம்முடன் நம் நிலையிலிருந்து வேறுபட்டு அதுபோல் இலட்சக்கணக்காகச் சம்பாதித்தவர் கண்ணுக்குத் தெரிவது போல் வாழ்க்கை அமைந்திருக்கும். அன்னையிடம் உள்ள சிறப்புகளில் அது ஒன்று.

பொய்யை மட்டும் கடைப்பிடிப்பது, மெய்யைப் பூரணமாக ஏற்றுக்கொள்வது ஆகிய இரு நிலைகளும் வாழ்க்கையில் காண்பது அரிது. இரண்டும் கலந்துள்ளதே அதிகம். நான் இங்கு குறிப்பிடுவதெல்லாம் அன்னையை ஏற்றுக்கொண்டவர்களைப் பற்றியதே. இரண்டும் கலந்த நிலையில் மெய் வருமானத்தையும், பொய் நஷ்டத்தையும் கொடுப்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். அதில் மீதியானதே கையிலிருப்பதாகும்.

பொய், மெய்களைப் பற்றி நாம் ஓரளவு புரிந்துகொள்கிறோம். அவற்றிற்கு மேலும் விளக்கம் தேவை. சுறுசுறுப்பு, விரைவு, தெளிவு, சேவை, தெளிந்த செயல், ஆர்வம், உற்சாகம் போன்றவையெல்லாம் மெய்யின் பட்டியலில் சேரும். சோம்பேறித்தனம், மந்தம், குழப்பம், தன்னலம், சோர்வு போன்றவை பொய்யில் சேரும். ஒருவர் ஒரு பொய் கூடச் சொல்லாதவர், நாணயமானவர் என்றால், அவரை மெய்யில் எடுத்துக்கொள்கிறோம். அவர் முழுச் சோம்பேறியானால் நாம் அவர் நாணயத்தைக் கருதி, சோம்பேறித்தனத்தைப் பெரிதுபடுத்துவதில்லை. வாழ்க்கைக் கணக்கில் அவையும் சேரும். ஒருவரிடம் உள்ள மெய்யைப் பலர் அறிந்திருப்பார்கள். அவர் செய்யும் தொழிலால் பலருக்குப் பலனிருக்கும். அப்பலன் மெய்யாகும். அவரது வரவு செலவுக் கணக்கில் சேவையை வரவாகவும், அவரது பொய்யைச் செலவாகவும் கணக்குப் போட்டால், இருப்பு சரியாகப் புரியும்.

அன்னையை ஏற்றுக்கொண்டபின் மெய் மட்டுமே சம்பாதிக்க உதவும். மெய்யால் சம்பாதிப்பது, பொய்யால் சாதிப்பதை விட 100 மடங்காக இருக்கும்.

‘‘பணம் ஓர் இடத்தில் குவியக் கூடாது. நடமாடிக்கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு பணம் புரண்டு வருகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது பெருகும்’’ என அன்னை கூறுகிறார்.

அன்னை நாகலிங்கப் பூவை ‘செல்வ வளம்’ (Prosperity) என்றழைக்கிறார். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியை அன்னை ‘Prosperity Day’ என்று குறிப்பிட்டு, சாதகர்களுக்குத் தேவையான சோப்பு, எண்ணெய் முதலிய பொருள்களைத் தன் கையாலேயே அன்னை வழங்குவது வழக்கம். புத்தாண்டு தினம் (ஜனவரி முதல் தேதி) அன்னைக்கும், ஆசிரமத்திற்கும் சிறப்பான நாளாகும். அது ஆண்டுக்கே Prosperity Day அல்லவா?

இறை வழிபாட்டில் காணிக்கைக்கு முக்கிய இடமுண்டு, புண்ணியத்தையும், யோகப் பலனுக்கெனவும், சாந்தி, ஜோதி, மோட்சம் ஆகியவற்றைத் தேடுவோர்க்கும் ‘காணிக்கை’ என்பது அவசியம். கீதையில் கிருஷ்ணன் சொல்வது போல் இலை, ஒரு கை ஜலம், ஒரு பழம் காணிக்கையாகக் கொடுத்தல் அவசியம். அவற்றையே சாதகனின் ஆத்ம சமர்ப்பணத்திற்குக் காணிக்கையாக ஏற்றுக்கொண்டு இறைவன் சாதகன் வேண்டுவதை அளிக்கின்றார்.

வாழ்க்கையில் உள்ளவர்கள் ஒரு பிரச்சனை தீர, பொருள் ஈட்ட, சொத்து சம்பாதிக்க என்று பிரார்த்தனை செய்தால், பொருளைக் காணிக்கையாகச் செலுத்துவது நல்லது. லௌகிக வாழ்க்கைக்குப் பொருளும், ஆத்மீக வாழ்க்கைக்கு மலரும் காணிக்கையாக அமையும். காணிக்கைக்கு அளவு கிடையாது. அவசியம் உண்டு. பெரும் அளவில் அன்னைக்குப் பொருள் கொடுக்க விழைபவர், காணிக்கைக்காகக் கொடுத்தல் அவசியமில்லை. சேவைக்காக எந்த அளவிலும் செய்யலாம். சேவை வேறு; காணிக்கை வேறு.

***********



book | by Dr. Radut