Skip to Content

17. தெய்வங்கள்

தெய்வங்கள்

அன்னைக்கும் தெய்வங்களுக்கும் பல தொடர்புள்ளன. ‘‘தெய்வங்களுடைய அளவு (size) பூமியின் அளவுக்குச் சமம்’’ என்று அன்னை கூறுகிறார்கள்.

அன்னையிடம் சாதகர்கள் தங்கள் தங்கள் நாகரிகம், பண்பு, மதம், கடவுள் இவற்றைப் பற்றி எல்லாம் பேசுவதில்லை. ஏதாவது ஒரு சமயம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பிரஸ்தாபம் வந்தால், அன்னை விளக்கம் கேட்பார். அதுபோல் கேள்விப்பட்ட விஷயங்கள் மட்டுமே அன்னைக்குத் தெரியும். விநாயகரைப் பற்றி ஒரு சமயம் அன்னை அதிகமாகக் கேள்விப்பட்டார்கள். அடிக்கடி விநாயகரைப் பற்றிப் பேச வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஒரு நாள் அன்னை அது பற்றிய உண்மையை அறிய நினைத்தார். தியானம் செய்து விநாயகரைக் கூப்பிட்டார். துதிக்கையுடன், ஜகஜ்ஜோதியாக ஆர்வத்துடன் விநாயகர் புறப்பட்டு வந்தார். ‘‘ஏன் என்னைக் கூப்பிட்டீர்கள்?’’ என்று கேட்டார். தன் பணிகளுக்கான செலவுக்கு ஏராளமான பணம் தேவை என்றும், அதை அவர் அனுப்புவாரா என்றும் அன்னை கேட்டதற்கு விநாயகர் முகமலர்ச்சியுடன், ‘‘அனுப்புகிறேன்’’ என்று ஒப்புதல் அளித்தார்.

‘‘அடுத்த 10 வருடங்களுக்கு ஏராளமான பணம் தொடர்ந்து வந்தது’’ என்றார் அன்னை. பிறகு எல்லாத் திசைகளிலிருந்தும் பணம் வருவது நின்று விட்டது. மீண்டும் அன்னை விநாயகரை அழைத்து விசாரித்தார். ‘‘உங்கள் தேவை மிகப்பெரியது. என் சக்தி அளவுக்குட்பட்டது’’ என்றார் விநாயகர். அதைப்பற்றிப் பின்னால் அன்னை ‘‘நான் அமெரிக்காவில் வேலைகளை ஆரம்பித்த பின் பணம் வறண்டுவிட்டது. அமெரிக்கர்களுக்கு விநாயகர் மீது நம்பிக்கையில்லை என்பதால் அவரால் அந்தச் சேவைக்கு பணம் கொடுக்க முடியவில்லை’’ என்று விநாயகரால் முடியாமல் போனதற்கான காரணத்தை விளக்கினார்.

பேப்பர் வெயிட் ஒன்று விநாயகர் உருவில் அன்னையின் மேஜை மீதிருந்தது. அன்னை அதை எப்பொழுது தொட்டாலும், அதிலிருந்து விநாயகர் வெளிவந்து அன்னையைப் பார்ப்பது வழக்கம்.

ஆசிரமத்தை ஒட்டி இருக்கும் மணக்குள விநாயகர் கோயிலைப் புதுப்பிக்கும்பொழுது பிரகாரத்தில் இடம் போதவில்லை. ஒருநாள் அதிகாலையில் விநாயகர் அன்னையிடம் வந்து தனக்கு இடம் தேவை என்றார். உடனே கோயிலுக்கு அடுத்தாற்போலுள்ள ஆசிரமக் கட்டிடத் தோட்டத்திலிருந்து போதுமான இடம் கொடுக்க அன்னை உத்தரவிட்டார்.

‘வீராம்பட்டினத் திருவிழா’ என்பது பாண்டிச்சேரியில் மிகப்பிரபலம் வாய்ந்த காளி அம்மன் திருவிழாவாகும். அன்னை ஒரு சமயம் காளியம்மன் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மாலை நேரத்தில் அந்த வழியாகக் காரில் போய்க் கொண்டு இருந்தார். கூட்டம் நெரிசல்பட்டது. அதைக் கடந்து காரைச் செலுத்த முடியவில்லை. காரை காளியம்மன் ஆலயத்தில் அருகே நிறுத்தினார். அப்பொழுது காளி அன்னையிடம் வந்து பேசினார். ‘‘அடிக்கடி என் கோயிலுக்கு நீங்கள் வரவேண்டும். நீங்கள் வந்ததால் தான் இன்று திருவிழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடி இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன். நீங்கள் அடிக்கடி என் கோயிலுக்கு வரவேண்டும்’’ என்று காளி அன்னையிடம் கூறினார்.

ஒரு நாள் ஸ்ரீ அரவிந்தரைப் பார்த்துவிட்டு அன்னை தன் அறைக்குத் திரும்பிய பொழுது சிவபெருமான் அங்கு இருந்தார். அவர் தலை கட்டிடத்தின் உச்சியைத் தொட்டுக்கொண்டிருந்தது.

ஸ்ரீ அரவிந்தர் சமாதியடைந்து பல வருடங்களுக்குப் பின் அன்னை ஸ்ரீ அரவிந்தர் அறைக்குப் பக்கத்திலுள்ள வராண்டாவில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது கிருஷ்ண பரமாத்மா தன்னுடன் கூடவே உலவுவதைக் கண்டார்கள். தினமும் இது தொடர்ந்தது. ஒரு வருடம் கழித்து கிருஷ்ணனுக்குப் பதிலாக அங்கு ஸ்ரீ அரவிந்தர் வந்தார். அது கொஞ்ச நாள் தொடர்ந்தது. அதற்குப்பின் அன்னை தன் பின்னால் தானே (அன்னையே) வருவதைக் கண்டார்!

ஸ்ரீ அரவிந்தர் இருந்த காலத்தில் அன்னை தியான மண்டபத்தில் தியானம் நடத்துவதுண்டு. ஒவ்வொரு தூணும் மிகப்பெரியதாக இருக்கும். தூணுக்கு மேல் கொரனாசு உண்டு. ரிஷிகள், கடவுள்கள், தேவதைகள் தியானம் ஆரம்பிக்குமுன் தவறாது, தயாராக வந்து அன்னையின் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.

சமுத்திர தேவதையை ஒருமுறை அழைத்து அன்னை உரையாடினார்கள். நம்மிடம் நண்பர்கள் வந்து உரையாடுவதைப் போல தெய்வங்கள் அன்னையிடம் அடிக்கடி வந்து உரையாடி, தங்களுக்குத் தேவையானதைப் பெற்றும், அன்னைக்குத் தேவையானதைக் கொடுத்தும் சென்றன.

**********



book | by Dr. Radut