Skip to Content

21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன

அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன

‘அன்னையை நீ ஏற்றுக்கொண்டபின் என்ன நடக்கிறது?’ என்று முதல் கேள்வி. ‘அன்னை உன்னை ஏற்றுக்கொண்டபின் மேலும் நடப்பதென்ன?’ என்பது அடுத்த கேள்வி. எனது 28 ஆண்டு அனுபவத்தில் என் கண்ணால் கண்டவற்றையும், நானே முயன்று செய்தவற்றையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அவற்றுடன் இணைந்து காணப்படும் செயல்களை முன் நிறுத்தி மேற்சொன்ன இரு கேள்விகளுக்கும் பதிலளிக்க முயல்கின்றேன்.

குழப்பமான உன் வாழ்க்கை தெளிவுறுகிறது. மனம் விளக்கம் பெற்றுத் தெளிகிறது. உடல் உறுதியடைந்து வியாதி நீங்கி, வாழ்வின் மகிழ்வுச் சிறப்பை விரிவாக்குகின்றனது. மற்றவர்களால் தகுதிக்கு மேற்பட்ட அன்புடனும், மரியாதையுடனும் நடத்தப்படுகிறாய். வாழ்க்கைப் படிகளை இரண்டிரண்டாயும், மூன்றும், நான்குமாய்த் தாண்டிச் செல்கிறாய். வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது. திருமணமாகாத பெண்கள் மன நிறைவு பெற மண நிறைவடைகிறார்கள். புதிய சட்டம் வந்து உனக்குப் புதிய சலுகைகளை அளிக்கிறது. பூசல் மண்டிக் கிடக்கும் குடும்பம் பாசப் பெருக்கு எடுத்தோடும் குடும்பமாகிறது. இதுவரை செய்து வந்த வேலை சாதகமாக மாறுகிறது. மனம் நிறைவு பெற்று வாழ்வு மணம் வீசுகிறது. பட்டங்கள் தேடி வருகின்றன. வீட்டைத் தேடி வந்து விருது வரும் செய்தி கதவைத் தட்டுகிறது. திறமைக்கு மேற்பட்ட பெருமை வந்தடைகிறது. எதிரிகள் ஏமாந்தவர்களாகிறார்கள். நோய் நம் வீட்டையும் வீதியையும் விட்டு விலகுகின்றது. ‘எங்கிருந்தேன், எப்படி இங்கு வந்தேன்?’ என்று பிரமிக்கும் அளவுக்கு வாழ்வின் உச்சிக்கு நீ உயர்த்தப்படுகிறாய். பதற்றம் பதப்பட்டு அடக்கமாகிறது. பண்பில் சிறந்தவனாகிறாய். இல்லாத திறமையை ஏற்றுக் கொள்கிறாய். வெளிநாட்டுக்கு உன்னை அழைக்கிறார்கள். தறுதலைப் பிள்ளைகள் தலைசிறந்த மக்களாகின்றனர். நேற்றுவரை உன்னை மிரட்டிய முதலாளி விரும்பியழைக்கிறார். உயிரை எடுக்கும் கூட்டாளி தானே வெளியேறுகிறான். கருமியான கூட்டாளி உன் கஷ்டம் தீர தன் பணத்தில் உன் பங்கை உனக்காக வாங்குகிறான். கெட்டுப்போன பெரிய திட்டங்கள் மீண்டும் உயிர் பெறுகின்றன. வீதியில் விலாசம் இல்லாமல் திரிந்தவன் பெரிய புள்ளியாகிறான். ஜாதகம் தந்த ஆயுளைத் தாண்டி வாழ்வு நீள்கிறது. நீக்க முடியாத கெட்ட பழக்கம் தானே விலகுகிறது. இழந்த பேச்சு மீள்கிறது. தொண்டன் முதல் மந்திரியாகிறான். மீளா ஆபத்து கேளாச் சந்தர்ப்பமாக மாறி வெற்றி மாலை சூடுகிறது. இழந்த பெரும் செல்வம் இருமடங்காகத் திரும்புகிறது. ஏலத்திற்கு வந்துவிட்ட சொத்து மூன்றுமடங்கு விலை போகிறது. ஓர் ஆண்டு வருமானம் உனக்கு ஒரு மாதச் சம்பளமாகிறது. நாளடைவில் அது தினசரி வருமானமாகவுமாகிறது. கடைநிலை ஊழியர் முதல் நிலை அதிகாரியாகிறார். கடைசிச் சிப்பந்தி கம்பெனி முதலாளியாகிறார். ‘பாதாளத்தில் விழுந்த நாம் தொலைந்தோம்’ என்று நம்பிக்கை இழந்தவனுக்குத் திடீரென்று வானத்தை முட்டக்கூடிய வளர்ச்சி கிடைக்கிறது. ஒரு ஏக்கர் வாங்கப் பணம் இல்லாமல் தவித்த நீ காலப்போக்கில் 300 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரனாகிறாய். உலகம் கேள்விப்படாத விலை உன் மகசூலுக்குக் கிடைக்கிறது. எதிர்பாராத உதவி கற்பனைக் கெட்டாத கருவூலத்தை அளிக்கிறது. சிக்கல் பெரும் சிக்கலான பின், வந்த வழியே பிரிந்து அவிழ்கிறது. கடந்த காலத்தில் மறந்துபோன ஆசைகள் உயிர் பெற்றுப் பலனளிக்கின்றன. நீ சிறியதைத் தேடினால் பெரியதே கிடைக்கிறது. அநாகரிகமான மனிதரும் அழகாகப் பழகுகின்றனர். ‘அழித்துவிடுவோம்’ என்றெழுந்த உலகம், உன்னைப் போற்றித் துதிபாடுகிறது. குடும்பத்திலிருந்து நோயும், வண்டியிலிருந்து விபத்தும் மறைகின்றன. உன் நிறுவனத்ததைப் போர்க்களமாக்கிய தொழிலாளிகள் சமாதானக் கொடியை வீசுகிறார்கள். உன் பணப்பிசாசான முதலாளி, பணத்தை மறந்து உன்னை நினைக்கிறான். திவாலான கம்பெனியில் பணம் கொழிக்கின்றது. வரட்டு ஜம்பக்காரர்கள் நிதானமடைகிறார்கள். இருபது ஆண்டிற்கு முன் இழந்த பார்வை திரும்புகிறது. கர்மவினை கரைந்து அதன் பரிசான நோய் மறைகிறது. உயிரை எடுக்கும் எதிரி ஊரை விட்டுப் போகிறான். சந்தையில் ஏமாற்றிய பெருந்தொகை முழுதுமாகக் கைக்கு வருகின்றது. ஊற்றில்லாத கிணற்றில் புது ஊற்றுத் தோன்றுகிறது. பரம எதிரிகள் உன்னைத் தேடி வந்து பட்டம் சூட்டுகின்றனர். ஏங்கி நின்ற பதவிகளை உனக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் வாங்கி வழங்குகின்றனர். நேற்று வரை பயந்து அடங்கி இருந்த நீ, இன்று நிமிர்ந்து நின்று தலைமை தாங்குகிறாய். மாநில, மாவட்டத் தலைவர்களிடமிருந்து உனக்கு அழைப்பு வருகிறது. எழுதியறியாதவர் எழுத்தை, பத்திரிகைகள் தேடிவருகின்றன. வாழ்க்கையின் இறுதியில் கிடைக்கும் பலனும் பரிசும் ஆரம்பித்திலேயே வருகின்றன. மக்கட்டையான குழந்தை மலர்ந்து மணம் புரிந்து கொள்கிறது. கேட்பாரற்ற குழந்தை ஊரறியக் கொண்டாடும் மனிதனாகிறது. பயந்து சாகும் பிறவி, வியந்து புகழும் தலைவராகிறார். கூலிக்காரன் ஊருக்குத் தலைவனாகிறான். காட்டில் முந்திரிக் கொட்டை திருடிச் சிறைக்குப் போனவன் பெரும் வியாபாரி ஆகிறான். சித்திரையில் பம்ப் எரிந்து போய் உன் பயிர் தண்ணீருக்கு வாடினால், பெரும் மழை பெய்து பயிரைக் காப்பாற்றுகிறது. மாதக்கணக்கில் அலைந்தாலும் வீடு கிடைக்காத ஊரில், மணிக்கணக்கில் பெரிய வீடு கிடைக்கிறது. எதிரி வக்கீல் அசம்பாவிதமாக ரகசியத்தைக் கோர்ட்டில் சொல்லி விடுகிறார். அதனால் உன்னைத் தீர்த்துக் கட்டத் திட்டமிடும் எதிரி மண்ணைக் கவ்வுகிறான். டிஸ்மிஸ் ஆர்டர் டிஸ்மிஸ் செய்யப்படுகிறது. விலாசமில்லாத தபால் வினோதமாகக் கைக்கு வருகிறது. போக்கடாவுக்கு கொடுத்த பணம் வட்டியோடு வருகிறது. கடுகடுத்த கணவன் கனிவுள்ளவன் ஆகிறான். ஓர் ஏழை மனிதர் மூன்றே ஆண்டுகளில் தன் 3 பெண்களுக்கு சிறப்பாக மணம் புரிவிக்கின்றார். ‘3 வருஷத்திற்கு ஒரு பிரமோஷன்’ என்ற நிலையில் உள்ள உனக்கு 3 வருஷத்தில் 3 பிரமோஷன் வருகிறது. உன் மேல் வேண்டும் என்றே ரிப்போர்ட் எழுதிய திமிர் பிடித்த உன் அதிகாரியைக் கோபித்த மேலதிகாரி, உண்மையை அறிந்து உனக்கு சப்போர்ட்டாக எழுதுகிறார். மெடிக்கல் காலேஜில் போட்ட அப்ளிக்கேஷனுக்குப் பதிலாக அட்மிஷனே கிடைக்கிறது.

அன்னையை ஏற்றுக் கொண்டபின் நடப்பதற்கும், அன்னை நம்மை ஏற்றுக் கொண்டபின் நடப்பதற்கும் சான்றுகளாக இன்னும் ஆயிரம் நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். ஆனால் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படையாக ஒன்றைத்தான் சொல்ல முடியும். அது மன நெகிழ்ச்சி. இந்த நெகிழச்சியில் கரைந்து நாம் அழைக்கும் போது, அக்கணமே அன்னை நம்மிடம் வந்துவிடுகிறார். அந்த அருள் சூரியன் உதித்துவிட்ட பிறகு துன்பப் பனிக்கு இனி என்ன வேலை?

**********



book | by Dr. Radut