Skip to Content

23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்

அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்

எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கக் கூடியவையே. ‘பிரச்சனை என்று ஒன்று இல்லை’ என்பது உண்மையானாலும், தீராது இருக்கும் பிரச்சனைகளும் நம் கண் முன் இருக்கின்றன. ‘பிரச்சனைகள் எப்படி உருவாகின்றன?’ எப்படித் தீர்வு காண்கிறோம்? எந்த வகையில் தீராத நிலை ஏற்படுகிறது? என்ற விளக்கங்களையெல்லாம் இங்கு கருதாது, அவற்றைத் தீர்க்க உள்ள இரு வழிகளை மட்டும் சுருக்கமாக எழுதுகின்றேன்.

  1. முதல் வகையான தீர்வு: யார் பிரச்சனையை ஏற்படுத்தினார்களோ எந்த மனப்பான்மையுடன் ஏற்படுத்தினார்களோ, அவர்களுடைய மனப்பான்மையை மாற்றி, பிரச்சனையை உற்பத்தி செய்த மனிதனை மாற்றி, அவனுக்கு அந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் ஒரு புனர்ஜன்மம் ஏற்பட்டு, இப்பொழுதுள்ள பிரச்சனை தீர்ந்து இந்தப் பிரச்சனை மீது ஆயுள்வரை வராமல் தடுக்கும் வகை.
  2. இரண்டாம் வகை: மனிதனையும் அவன் சுபாவத்தையும், மனப்பான்மையையும் விலக்கி, அவற்றையெல்லாம் மாற்றும் பெருமுயற்சிகளை எல்லாம் இப்பொழுது மேற்கொள்ளாமல், பிரச்சனையை மட்டும் தனியாக எடுத்து அதைக் குறிப்பாகக் கவனித்து கவனத்தைத் தீவிரப்படுத்தி ஏதாவது ஒரு முறையைக் கையாண்டு, பிரச்சனையைத் தீர்க்க வேண்டி அன்னையைக் கேட்பது.

முதல் முறை: பிரச்சனைக்கு உரியவர், பிரச்சனையின் கருவாக அமைந்த காரணத்தை ஆராய்ந்து, மற்றவர்கள் மீது பழி போடுவதைத் தவிர்த்து, அப்பிரச்சனை ஏற்பட்டதில் தன் பங்கு என்ன என்பதைத் தீர்மானித்து, அவற்றில் இப்பொழுது எவற்றை மாற்ற முடியுமோ அவற்றை மாற்றி, மாற்ற முடியாத விஷயங்களைப் பற்றி மனத்தில் தெளிவு பெற்று மனத்தை மாற்றிக்கொண்டு, பின்னர் பிரச்சனை தீர வேண்டுமெனப் பிரார்த்தனை செய்தால் பிரச்சனை தீரும்.

இரண்டாம் முறை: மேற்சொல்லியபடி ஆராய்ந்து, ஆழ்ந்து, பிரச்சனையின் ஆணி வேர், சல்லி வேர்களை நீக்கும் முறையை விலக்கி, பொதுவாக அன்னையிடம் இந்தப் பிரச்சனையில் தன் பங்கை மாற்றிக் கொள்வதாகவும், குறைகள் தனக்குத் தெரியாத இடங்களில் அன்னையே தன் குறைகளை விலக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து, கீழ்கண்டவற்றுள் ஏதாவது ஒரு முறையைத் தீவிரமாகப் பின்பற்றினால் பிரச்சனை தீரும்.

  1. தியானம்.
  2. சமர்ப்பணம்.
  3. கர்ம பலனிருந்தால் அதைச் சமர்ப்பணம் செய்தல்.
  4. பிரச்சனைக்கு உரிய குணங்களைச் சமர்ப்பணம் செய்தல்.
  5. இடைவிடாத அன்னை நினைவு.
  6. நன்றியுணர்வு கலந்த நினைவு.
  7. நம்பிக்கை.
  8. பிரச்சனையை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல்.
  9. அருளை நாடுதல்.
  10. பிரச்சனை தீரக் காலத்திற்காகக் காத்திருத்தல்.

i. தியானம்: இது சிலருக்குத்தான் சௌகரியமாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமே பயன்படும். தியானப் பழக்கமுள்ளவர்கள், மேற்சொன்ன பிரார்த்தனையைச் செய்து, பிரச்சனை விலக வேண்டுமெனத் தியானத்தில் அமர்ந்தால், தியானம் ஆழ்ந்து ஒரு கட்டத்தில் தன்னை மறந்து, பிரச்சனையையும் மறக்க நேரிடும். எந்தக் கட்டத்தில் நாம் பிரச்சனையை மறந்து தியானத்தில் திளைக்கின்றோமோ, அப்பொழுது பிரச்சனை விலகும்.

ii. சமர்ப்பணம்: மனத்தைத் தியான நிலைக்கு அமைதியாகக் கொண்டு வந்து, நம் பிரச்சனையின் வரலாற்றை வரிசையாக - முக்கியமான கட்டங்களை - அன்னையிடம் கூறுதலை சமர்ப்பணம் என்கிறோம். அப்படி செய்யும் சமர்ப்பணத்தில் நினைவுகள் மேல் நோக்கி வரும் பொழுது, எரிச்சல், வன்மம், குரோதம், கோபம் போன்றவை வராமல் இருப்பது முக்கியம். நம்மை மீறி அவை மேல் எழுந்து வந்தால், முதலில் அவற்றை அகற்ற வேண்டும். அகற்ற முடியாவிட்டால், அவை போக வேண்டுமெனப் பிரார்த்தனை செய்ய வேண்டும். தினமும் தொடர்ந்து கையாள வேண்டிய முறை இது. எப்பொழுது அன்னையிடம் நிதானமாக, கோபம் போன்றவையில்லாமல் முழு வரலாற்றையும் கூற முடிகிறதோ, அப்பொழுது பிரச்சனை தீரும்.

iii. கர்மத்தைச் சமர்ப்பணம் செய்தல்: பிரச்சனை ஒன்றாக இருந்து, ‘இது நாம் செய்த எந்தக் காரியத்தால் வருகின்றது?’ என்று நமக்குத் தெரிந்தால், பிரச்சனையை விட்டு விட்டு தன் அடிப்படையான கர்மத்தைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். கர்மம் சமர்ப்பணமானவுடன், பிரச்சனை பிரார்த்தனையின்றித் தீரும்.

iv. பிரச்சனைக்கு உரிய குணத்தைச் சமர்ப்பணம் செய்தல்: முன் கோபத்தால் ஒரு வார்த்தை சொல்லியதால், இன்று பல ஆண்டுகளாகக் கஷ்டப்படும் நிலையில் இருக்கும் ஒருவர், தன் முன் கோபத்தைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

v. இடைவிடாத நினைவு: பிரச்சனையை மறந்து அன்னையை நினைவு கூர்ந்து, அந்நினைவு முழுமையாகும் நேரத்தில் பிரச்சனை விலகுகிறது.

vi.நன்றியுணர்வு கலந்த நினைவு: ‘‘நன்றி என்ற தெய்வம், உலகத்தில் கடைசியாகப் பிறந்த தெய்வம்’’ என அன்னை கூறுகிறார். ‘நன்றி’ என்பதைச் சொல்லால் வெளிப்படுத்துவதே சிறப்பு. மனத்தில் நெகிழ்ந்த உணர்வோடு நன்றியறிதல் எளிதில் ஏற்படுவதில்லை. ஒரு பிரச்சனை தீராமலிருக்கும் பொழுது, வேறு பிரச்சனைகள் தீர்ந்ததற்காகவோ, அன்னையை நாம் தெரிந்துகொள்ளும் பாக்கியத்தை நமக்குக் கொடுத்ததற்காகவோ, அன்னைக்கு உணர்ந்து நன்றி செலுத்த ஆரம்பித்தால், அதைத் தொடர்ந்து செய்தால், எதிரேயுள்ள பிரச்சனை தீரும்.

vii. நம்பிக்கை: பொதுவான நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், ‘குறிப்பிட்ட பிரச்சனை அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையால் தீரும்’ என்ற அளவில் இருக்காது. பொது நம்பிக்கையால், குறிப்பிட்ட பிரச்சனை தீராது. ‘இந்தப் பிரச்சனைக்காக நாம் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை, பிரச்சனையை விலக்கும்’ என்ற நம்பிக்கை, ஊன்றிக் கவனித்தால் அது 80 சதம் இருக்கும். சில சமயம் குறையும்: சில சமயம் அதிகப்படும். அதை ஆழ்ந்து யோசனை செய்து பூரண நம்பிக்கையாகச் செய்தால் பிரச்சனை விலகும்.

viii. அருள்: அருள் தானாகவே செயல்படக் கூடியது. நாம் அதைப் பெற என்ன செய்யலாம்? ‘நம்மீதுள்ள நம்பிக்கை, நம் திறமை மீதுள்ள நம்பிக்கை, சொல்லப் போனால் நம் பிரார்த்தனை மீதுள்ள நம்பிக்கை, மற்ற எந்த விஷயத்தை மனம் நாடினாலும் அவற்றின் மீதுள்ள நம்பிக்கையை முழுவதும் அகற்றியவுடன் அருள் தானே செயல்படும்.

ix. காலம் பிரச்சனையைத் தீர்க்கும்: எந்தப் பிரச்சனையும் காலத்தால் தீர்வதுண்டு. சில பிரச்சனைகள் காலம் செல்வதால் சிக்கல் அடைவதுண்டு. நம்மால் எதுவும் செய்ய முடியாத நேரத்தில், ‘நடப்பது நடக்கட்டும், நடக்கும் போது நடக்கட்டும்’ என்று மனிதன் விட்டுவிடுவதுண்டு.

அன்னை மீது நம்பிக்கையுள்ளவர்கள் அந்த மனநிலையைப் பெற்று, ‘நடக்கும்போது நடக்கட்டும்’ என்று விட்டுவிட்டால் அதற்குரிய நேரம் தானே வந்து நடந்துவிடும்.

x. பிரச்சனையை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல்: நாம் அன்னை பக்தராக இருப்பதால் அன்னையின் ஒளி நம் மனத்திலும், மற்றெல்லாப் பகுதிகளிலும் இருக்கின்றது. ஏதாவது ஓர் இடத்தில் - மனத்தில் அல்லது உணர்ச்சியில் - அப்பிரச்சனையைப் பற்றிய தெளிவிருந்தால், அங்குள்ள அன்னை ஒளி அந்தத் தெளிவின் மூலம் பிரச்சனையை விலக்கும்.

நமக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால், அது நமக்கு ஓரளவு புரியும். நாமே ஆழந்து சிந்திப்பதாலோ, மற்ற அனுபவசாலிகளின் உதவியாலோ பிரச்சனையை நமக்கு ஏற்கனவே புரிந்ததைவிட மேலும் தெளிவுடன் புரிந்து கொண்டால், அப்பிரச்சனை முற்றிலும் விலகும்.

பிரச்சனைகள் பல வகை: சிறியவை, தற்காலிகமானவை, தற்காலிகமான சிறிய பிரச்சனை, கடினமானவை, நிரந்தரமானவை, நிரந்தரமான கடினப் பிரச்சனை, தற்காலிகமான கடினப் பிரச்சனை, சிறிய - நிரந்தரமான பிரச்சனை போன்ற பல வகையானவை.

தீர்வு அமையும் முறைகள்: அரைகுறையான தீர்வு, முழுமையானது, நிதானமாகக் கரைந்துவிடுதல், திடீரென விலகுதல், நிதானமாக முழுமையாக விலகுதல், நிதானமாகவும் கொஞ்சமாகவும் விலகுதல், திடீரென ஒரு பகுதி விலகுதல், திடீரெனப் பிரச்சனையின் எல்லா அம்சங்களும் மறைதல் ஆகிய பல முறைகள்.

பிரச்சனையின் தரத்தையொட்டி, பக்தனின் நம்பிக்கை, ஆழ்ந்த ஈடுபாடு, குணவிசேஷம், பிரச்சனையைத் தீர்ப்பதில் உள்ள அக்கறை, அனுஷ்டிக்கும் முறை - இவற்றையெல்லாம் கருதி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பிரச்சனை தீரும். எப்படி, எந்தப் பிரச்சனை தீரவேண்டுமென நாம் விரும்புகிறோமோ, அதற்குரிய முறைகளையும், ஆர்வத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘வியாதிக்கு ஏற்ற மருந்து’ என்பதைப் போலத்தான் இதுவும்.

**********



book | by Dr. Radut