Skip to Content

25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி?

அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி?

மனிதனுக்கு அறிவு, உணர்வு என்ற இரண்டு பெரிய அம்சங்கள் உள்ளன. உணர்வை விட அறிவு சிறந்தது. மனத்தில் எழுவது அறிவு. மனத்தையுடைவன் என்பதாலேயே ‘மனிதன்’ என்று அவன் பெயர் பெற்றான். இருந்தாலும், அறிவுக்குப் பிரகாசம் உண்டு; தெளிவுண்டு. ஆனால் செயலாற்றும் திறனில்லை. செயலாற்றும் திறன் உணர்ச்சிக்கேயுண்டு. அறிவால் மனிதன் அன்னையை நம்பலாம். நம்பிக்கையின் உறைவிடம் அறிவு. அந்த நம்பிக்கை, வாழ்க்கையை நன்கு நடத்திச் செல்லும். அறிவின் திறன் வழிகாட்டுவது. அதன் உதவி மனிதனுக்கு அவசியம்.

‘உடனே செயல்பட வேண்டும். பூரணமாகச் செயல்பட வேண்டும். காரியங்கள் நடைபெற வேண்டும்’ என்றால், அதற்கு அறிவு நேரடியாகப் பயன்படாது. அதற்கான கருவி உணர்ச்சியே. உணர்வால் நெகிழ்ந்தால், உணர்ச்சிப் பெருக்கால் அன்னையை நாடி நம் குறைகளைக் கூறினால், நம்முள் உணர்ச்சி பெருகி நாம் தன் நிலையிழந்து, உணர்ச்சி வடிவமாகி உருகிக் கரைந்தால், பிரார்த்தனை உடனே பூர்த்தி பெறும்.

உணர்ச்சி பெருகுவதை இரு நிலைகளில் காணலாம். நம் நிலையைக் கண்டு, பரிதாபப்பட்டு, பயந்து பெருகும் உணர்ச்சி; பிரார்த்திப்பவரின் துன்ப நிலையை உணர்த்தும் உணர்ச்சி.

அதுபோல் அவல நிலையைத் தெரிந்து அதனால் உணர்ச்சி மயமாகும் நிலையில், அதுவே அன்னையின்பால் நெகிழ்ந்த பக்தியைக் கொடுத்து நம்மை மறக்கச் செய்து நம் பிரச்சனையையும் மறக்கச் செய்து, அன்னையின் மீதுள்ள பக்தியால் நிரம்பி, பரவசப்பட்டுத் தன் நிலை இழப்பதும் உணர்ச்சியே.

இந்த இருவகை உணர்ச்சிகளும் அன்னையை உடனே செயல்படச் செய்யும். முதல் வகை பிரச்சனையைத் தீர்க்கும். மற்றது பிரச்சனை தீர்வதன் மூலம் நம்முள் பக்தியை வளர்க்கும்.

**********



book | by Dr. Radut