Skip to Content

28. அன்னை காப்பாற்றும் விதம்

அன்னை காப்பாற்றும் விதம்

ஒரு 15 வயதுப் பையன் டேப்ரெக்கார்டரில் ஒரு டிரான்ஸ்பார்மரை இணைத்துப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். மேஜை மேலிருந்தவற்றை எடுத்து வேறு மேஜைக்கு மாற்ற ரெக்கார்டரை ஒரு கையிலும், டிரான்ஸ்பார்மரை ஒரு கையிலும் எடுத்தான். டிரான்ஸ்பார்மர் ஒரு ஷாக் கொடுத்ததுடன் அவன் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டது. ‘வீல்’ என்று குரல் எழுப்பினான். ‘விபத்து மின்சாரத்தால்’ என்று தெரிந்து, மெயின் ஸ்விட்சை நிறுத்தினால்தான் பையன் உயிர் பிழைக்க முடியும். விஷயம் புரிவதற்குள் ஆபத்து முற்றி விடும் நிலை. பையன் இருந்த இடம் ஆசிரமத்துக்குச் சொந்தமான விருந்தினர் விடுதியானதால் மெயின் ஸ்விட்ச் சற்று தள்ளி இருந்தது. என்றோ ஒருநாள் வந்து தங்குபவர்களுக்கு அது இருக்கும் இடம் தெரியாது. முதலில் அது எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த அறையில் இருந்த அவன் தந்தைக்குக் குரல் கேட்டதும் இது ஒரு ஷாக்காகத்தானிருக்க வேண்டும் எனச் சட்டென்று உதயமாயிற்று. அவர் ஓடிவந்து பார்த்துச் செயல்பட நேரமில்லை. பார்க்காமலும், செயல்பட்டால், வேறு காரணமாயிருந்தால் ஆபத்து மீறிப் போய்விடும். உரத்த குரலில் பையனின் பெயரை அழைத்துக்கொண்டு அடுத்த அறைக்கு ஓடினார். டிரான்ஸ்பார்மர் பிடித்த பிடியை விட்டுக் கீழே விழுந்தது. கரண்ட் நிற்கவில்லை. பையன் உயிர் பிழைத்தான்.

பையனின் அபயக் குரலைக் கேட்ட தகப்பனார் அன்னையைக் கூப்பிடக்கூட இல்லை. பையனின் பெயரையே உரக்கக் கூறினார். அவர் பையனின் பெயரைக் கூவினாலும், தன் பெயரையே கூவுவது போல் அன்னைக்கு அது கேட்டு, அன்னை செயல்பட்டு, பையனின் கையில் ஒட்டிக் கொண்டிருந்த டிரான்ஸ்பார்மரை தானே விழச் செய்தார். அன்னையைக் கூவி அழைத்தால் உடன் வருவது அவர் வழக்கம். கூவி அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் அந்தக் குரலை தன்னை அழைக்கவே எழுப்பிய குரலென உணர்ந்து, அன்னை அதைக் கேட்டுப் பதில் அனுப்பிவிட்டார். இது அன்னையின் அபயமளிக்கும் வகைகளில் ஒன்று.

***********



book | by Dr. Radut