Skip to Content

29. அன்னை அருளின் சிறப்பு

அன்னை அருளின் சிறப்பு

வாழ்க்கையில் உள்ளவர்களுடைய தொழில் அன்னையின் அருளால் பெருகுவதைப் பற்றி அடிக்கடி நான் பேசுவதுண்டு.

வாழ்க்கையில் முழுத் தூய்மையை நிலைநாட்டுவது கடினம். அன்னையின் சேவையில், யோக வாழ்க்கையில் தூய்மை (purity)யைப் பூரணமாக நிலை நிறுத்த முடியும். சேவை தூய்மையாக இருந்து செயல்படும் சூழ்நிலை முழுவதும் அருள் நிறைந்ததாக இருந்துவிட்டால், ஒன்று இரண்டாகவோ, ஒன்று பத்தாகவோ பெருகுவதில்லை. ஒன்றில் ஆரம்பித்தால், அனந்தம், முடிவற்ற, எல்லையற்ற (infinity) என்ற ஒரு நிலைக்குக் காரியத்தின் அளவும், சிறப்பும், பலனும் பெருகும். ‘‘அருள் நிறைந்த சூழ்நிலை என்றால் என்ன? தூய்மை என்றால் சுத்தம் தானே?’’ என்ற இந்த இரண்டு கேள்விகளுக்கும் நாம் கேள்விப்படாத ஒரு விளக்கத்தை அன்னை அளிக்கிறார்.

கணவனைத் தெய்வமாகக் கொண்ட பெண்ணின் மனத்தைக் கற்புடையது என்பது போல், தெய்வத்தை மட்டும் நம்பிச் செயல்படும் மனிதனை, ‘தூய்மையுடையவன்’ என்கிறார் அன்னை.

நம் செயலில் பல விஷயங்களை நம்புகிறோம். ஒரு நிறுவனத்தில் ஒரு பிரமுகர் இருந்தால் அவரது செல்வாக்கை நம்புகிறோம்; செல்வந்தர் இருந்தால், அவர் செல்வத்தை எதிர்பார்க்கிறோம்; திறமைசாலி இருந்தால் அவன் திறமையை நாடுகிறோம். அப்படி எல்லாம் நாம் செயல்படும் பொழுது நமக்கு எதில் நம்பிக்கையிருக்கிறதோ அதன் மூலம், அது எந்த அளவுக்கு வழிவிடுகிறதோ அந்த அளவுக்குத்தான் அருள் செயல்படும். வியாதி வந்த பின் டாக்டரிடம் போகும் பொழுது, அன்னை மீது நம்பிக்கை வைத்து மருந்தை ஒரு கருவியாக உபயோகித்தால், மருந்தின் மூலம் அன்னை குணப்படுத்துகிறார். மருந்தையும், டாக்டரையும் விலக்கி தன் மீது மட்டும் நம்பிக்கை வைப்பவர்களை நோக்கி அன்னை கூறுகிறார்: ‘‘உனக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது. உன் உடல் பல நூறு ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டுப் பழக்கமானது. உடலுக்கு மருந்தின் மீது நம்பிக்கையிருப்பதால் மருந்தில்லாமல் உடலில் அருள் செயல்படாது. மருந்து சாப்பிட்டால் 100 மாத்திரை சாப்பிட வேண்டிய இடத்தில் 8 மாத்திரையில் அருள் குணப்படுத்தும்.’’

முற்றிலும் புதியதான சூழ்நிலையில் ஒரு வேலை செய்யப் போனால், நமக்கு எதுவுமே தெரியாது என்பதால், ‘நம்புவதற்கு ஒன்றுமில்லை’ என்பதால், அருள் அது போன்ற நிலையில் அபரிமிதமாகச் செயல்படுவதை எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். நம் பழக்கங்கள், திறமை, சந்தர்ப்பம் போன்றவற்றை முழுதும் விலக்கி அருளை மட்டும் நம்பும் சூழ்நிலையில், அருள் வெள்ளமாகச் செயல்படும். மனத்தில் தூய்மையும், அன்னையை மட்டும் நம்பும் தூய்மையும், மற்றெதையும் எதிர்பார்க்காத உறுதியான மனநிலையும் இருந்தால், அது அருளும் தூய்மையும் நிறைந்த சூழ்நிலையாகும்.

சிருஷ்டியின் அடிப்படை சத்தியம். சத்தியம் ஒளியாகவும், அன்பாகவும், ஆனந்தமாகவும், சக்தி (power) ஆகவும் மாறி, மனம், உள்ளம், நாதம், உடல் என்ற கூறுகளில் செயல்படுகிறது. சத்தியத்தால் மனம் நிரம்பினால் அறிவு முதலில் பிரகாசமாகவும், பின்னர் ஜோதியாகவும் மாறுகிறது. உள்ளம் சத்தியமயமானவனின் பற்று பவித்திரமாகி தெய்வீக அன்பாகி விடுகிறது. அதே போல் சத்தியம் நரம்பின் மூலம் ஆனந்தமாகவும், உடலில் திறனுள்ள சக்தியாகவும் மிளிர்கிறது. இத்துடனில்லை. சிருஷ்டியின் அடிப்படை சத்தியம் என்றாலும், அது அன்பு, ஆனந்தம் ஆகியவற்றை உற்பத்தி செய்வதுடன் நிற்பதில்லை. சிருஷ்டியின் விநோதம் என்னவென்றால், பகலை உற்பத்தி செய்த ஆண்டவன் இரவையும் உற்பத்தி செய்ததைப் போல், அமிர்தத்தை உற்பத்தி செய்யும் பொழுதே விஷத்தையும் உற்பத்தி செய்தார். அதே போல் சத்தியம் பொய்யாக மாறுவதும், ஜோதி இருளாக மாறுவதும், அன்பு வெறுப்பாக மாறுவதும், ஆனந்தம் சோகமாக மாறுவதும் சிருஷ்டியின் விநோதங்கள். பொய், இருள், வெறுப்பு, சோகம் - இவை வளர வளர இவற்றிற்குத் தலைமை தாங்கவல்ல சக்தி மிக்க ஜீவன்கள் உற்பத்தியாகி, அவை பெரிய அளவில் வளர்ந்து, நாம் ‘தீய சக்திகள்’ என்று சொல்லக்கூடிய பலவும் ஏற்படுகின்றன.

‘‘இந்தத் தீய சக்திகளின் இருளுக்கு அஸ்திவாரம் ஒளி. பொய்க்கு அஸ்திவாரம் மெய்’’ என்று அன்னை கூறுகிறார். ‘தீயசக்திகளும் அடிப்படையில் ஒளியினால் ஜீவிப்பவையே’ என்பது சிருஷ்டியின் தத்துவம். ‘சிருஷ்டியின் அடிப்படை சத்தியம்’ என்பது போலவே அதன் சக்தி தெய்வீக அன்பிலிருந்து (Divine Love) வருகிறது. நல்லவற்றைச் சிருஷ்டிக்க தெய்வீக அன்பின் சக்தி அடிப்படையாக இருப்பதைப் போல் தீயவை சிருஷ்டியில் ஏற்படுவதற்கு ஆதாரமாக அன்பின் சக்தி தேவை. ‘‘அன்பும், சத்தியமும் அடிப்படையில் ஒரு துளியாவது இல்லாமல், உலகில் நல்லவையோ, தீயவையோ ஏற்பட முடியாது’’ என்பது அன்னையின் விளக்கம்.

தீமையை ஒழிக்க, தீமையை நன்மையாக மாற்ற அன்னையின் வழி அற்புதமானது. தீமையின் அடிப்படையில் உள்ள அந்த ஒரு துளி அன்பைப் பொறுமையுடன் கண்டு நிதானமாக அதை நம் பிடியில் கொண்டு வந்து, அதன் உதவியால் அதன் ஒளிளைக் கொண்டு, அத்தீமையைக் கரைப்பதே அன்னையின் வழி.

‘‘நான் ஒரு கணமே பார்த்த ஒருவருடைய வாழ்க்கையின் முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்’’ என்கிறார் அன்னை.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அன்னை தங்கள் ஊருக்குக் காரில் வந்து இறங்குவதை ஒரு பார்த்தார். ‘தனக்குக் கிடைத்திருப்பது திவ்ய தெய்வ தரிசனம்’ என்று கூட உணர முடியாதவர் அவர். என்றாலும் அவருடைய ஆத்மா பக்குவமானது. அவரது வாழ்க்கை சாதாரண வாழ்க்கை என்பதுடன், சாதாரண வாழ்க்கையில் ஓர் அம்சம் அபரிமிதமாகப் போகும் பொழுது அது எப்படி விரிவடையுமோ, அது போல் பரந்து அமைந்தது அவர் வாழ்வு. காரிலிருந்து இறங்கிய அன்னை அவரைப் பார்க்கவில்லை. அவர்தான் அன்னையைப் பார்த்தார். ‘பக்குவமடைந்த ஆத்மா’ என்பதால் அவர் பரிபக்குவத்திற்குள்ள வரத்தைப் பெற்றார். ஆனால் அதை அவர் உணர்ந்தாரில்லை. தெளிந்தாரில்லை. வாழ்க்கையைத் தன் போக்கில் விரிவு படுத்திக் கொண்டார்.

அன்னையைத் தரிசனம் செய்த அவரது ஆத்மாவும், அவருக்கு வரமளித்த அன்னையின் ஆத்மாவும் தங்கள் சந்திப்பை மறக்கவில்லை. அவரது பிள்ளைகள் அன்னை பக்தரானார்கள். 1973, நவம்பர் 17 அன்று அன்னை சமாதியடைந்த அன்று அவரும் காலமானார். இது அன்னையை அவரறியாமல் தரிசித்தவருக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

சாதகர்களும், பக்தர்களும் இறந்த பின் அவர்களுடைய ஆத்மா அன்னையை வந்தடைந்து அவர்களுடைய இருதயத்தில் தங்கியிருக்கின்றன. ‘‘ஒரு பெரிய கூட்டம் அங்கிருக்கிறது’’ என்கிறார் அன்னை. ஒரு சாதகரைப் பற்றிச் சொல்லும்பொழுது, ‘‘இறந்த பொழுது அவரது ஆத்மா என்னை வந்தடைந்தபின், ஒரு முறை கூட என் மனத்தை விட்டு அவர் அகலவேயில்லை’’ என்று கூறுகின்ற அன்னை, மற்றொருவரைப் பற்றிச் சொல்லும்பொழுது, ‘‘இவரது ஆத்மா தினமும் வெளியில் சென்று பலரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி என்னை வந்தடையும்’’ என்கிறார்.

************



book | by Dr. Radut