Skip to Content

பகுதி 2

தாயார் : முதலியாரும், அவர் சம்சாரமும் பெண்ணை இந்த மாப்பிள்ளை கூடாது எனக் கூறச் சொன்னார்கள்.

பெண் : ஏன்?

தாயார்: உனக்கு அவர்களைத் தெரியுமில்லையா?

பெண் : நல்லவர்களில்லை, பொறாமைக்காரர்கள்.

தாயார்: பெண் நல்ல மாப்பிள்ளையைக் கட்டிக்கொள்வது பிடிக்கவில்லை.

பெண் : பெண் மீது பொறாமையா?

தாயார்: பெற்றோர் சொல்லியதைப் பெண் ஏற்றுக்கொண்டு மாப்பிள்ளையை மறுத்தாள்.

பெண் : நம்ப முடியவில்லையே.

தாயார்: முதலியார் தங்கை என்னிடம் கூறி வருத்தப்பட்டார்கள்.

பெண்: அவர்கள் அன்பராயிற்றே.

தாயார்: அவர்கள் என்னைக் கேட்டார்கள். இந்த மக்குப் பெண் தான் சாக மருந்து சாப்பிட்டுவிட்டது.

பெண்: என்ன கேட்டார்கள்?

தாயார்: நாங்கள் முக்கியமாக நம்புவது, "ஒருவர் எதிர்ப்பை மீறி அன்னை சக்தி பலிக்காது'' என்பது.

பெண்: பெண்ணே வேண்டாம் என்றால், பெற்றோரே கூடாது என்று பொறாமைப்பட்டால், அதையும் மீறிச் செயல்படஒரு சக்தி உலகில் உண்டா என்பதற்குத்தான் படிக்காத பையனை உதாரணம் காட்டினீர்களா?

தாயார் : பெண்ணினுடைய அத்தையின் பிரார்த்தனையால் பெற்றோர் அறியாமல் திடீரென விஷயம் முடிந்தது.

பெண்: அன்னைக்கு அவ்வளவு சக்தியுண்டா? கவனிக்காத நிலத்தில் உபரியாக விளைவதைப் போலல்லவா இருக்கிறது. ஒரு வார்த்தை மறுத்துப் பேசினால் காரியம் கெட்டுப்போவதைக் காண்கிறோம். முழு எதிர்ப்பை மீறி முழுப் பலன் தருகிறது அருள். எனக்கு இப்பொழுது நினைவு வருகிறது. அவர்கள் வீட்டில் எல்லோரும் கருமி. அமெரிக்காவிலிருந்து மாப்பிள்ளை வந்தபொழுது, பெற்றோருக்கு எதுவும் வாங்கி வரவில்லை. பெண்ணின் அத்தைக்கு ஏராளமாக வாங்கி வந்தார் எனப் பேசினார்கள்.

தாயார் : தானே பலன் செய்தவர்க்கு வருகிறது.

பெண்: இது ஆச்சரியமாக இருக்கிறது. எந்தப் புத்தகம் படித்தால் நல்லது, சொல்லுங்கள் நான் படிக்கிறேன். பெண் இதுவரை இதுபோல் பேசியதில்லை. ஆனால் அன்னையை ஏற்கும் பக்குவம் படிப்பால் மட்டும் வாராது. இருந்தாலும் படிப்புக்கு முக்கியத்துவம் உண்டன்றோ எனத் தாயார் சந்தோஷப்பட்டாள். இரண்டு, மூன்று நாள்கள் கழித்து கணவர் ஆரவாரமாக, பதைபதைப்புடன் வந்தார். மனைவியைத் தனியே அழைத்துப்போய், தாம் ஒரு செல்வருடைய வீட்டில் நடந்த விருந்திற்குப் போயிருந்ததாகவும் அனைவரையும் தமக்கு அங்கு அறிமுகப்படுத்தியதாகவும் கூறினார். கணவர் : இது பெரிய இடம்.

மனைவி : இது அகில இந்திய கம்பனியாயிற்றே. அதன் முதலாளியைத் தெரியாதவரில்லையே.

கணவர்: எனக்கு எப்படி அழைப்பு வந்தது என ஆச்சரியப்பட்டேன்.

மனைவி : அந்த வீட்டிலிருந்து நமக்கு எப்படி அழைப்பு வரும்?

கணவர்: என்னை அனைவருக்கும் முதலாளி அறிமுகப் படுத்தினார்.

மனைவி : அதெல்லாம் வழக்கமில்லையே.

கணவர்: அனைவரும் என்னைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பதாகக் கூறினர்.

மனைவி : நம்பமுடியவில்லையே.

கணவர்: வரும்பொழுது முதலாளி மகனுடன் பேசினேன்.

மனைவி : அவனை எப்படி உங்களுக்குத் தெரியும்.

கணவர்: அவனுக்கு என்னைத் தெரியுமாம்.

மனைவி : என்ன சொல்கிறீர்கள்?

கணவர்: நம்ம புதிய கம்பனி product இந்தப் பிரபலத்தைக் கொடுத்திருக்கிறது என நான் புரிந்துகொண்டேன். பேசியவர்கள் எல்லோரும் அதைக் கேட்டனர்.

மனைவி உள்ளூர சந்தோஷப்பட்டு விஷயம் productஇல் இல்லை. இது மதர் என்று கணவரிடம் சொல்லமுடியாது என நினைத்தாள்.

மனைவி : உங்களுக்கு நல்ல கவனிப்பு இருந்திருக்கிறது.

கணவர் : முதலாளி மகன் "உங்களுக்காகவே அப்பா இந்த விருந்தை ஏற்பாடு செய்தார்'' என்று கூறியபொழுது எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

மனைவி : அன்னை விருந்தாக, productஆக, முதலாளியாக வருகிறார்.

கணவர் : இனி அன்னையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

"தாம் ஜெயித்துவிட்டோம். இனி தம்மைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்'' எனக் கணவர் நினைப்பதை மனைவி அறிந்தார். தாம் ஜெயிக்க அன்னையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று கணவருக்குத் தோன்றவில்லை என்று அவருக்குத் தெளிவாயிற்று.

மனைவி தான் கணவர்போலவே இருப்பதை அறியவில்லை.

கணவருக்குத் தம் பெருமை முக்கியம். மனைவிக்குக் குடும்பம் உயரவேண்டிய அவசியம். இரண்டிலும் அன்னை பக்தியில்லை. சுயநலம் வெவ்வேறு உருவங்களில் வருகிறது என மனைவியால் அறியமுடியவில்லை. அன்னை யோகத்திற்குரியவர்கள், வாழ்வை யோகமாக ஏற்றவர்கட்குரியவர்கள் என்பது பெரிய உண்மை. ஓரூருக்கு பல்கலைக்கழகம் வந்தால், படிப்பவர்கட்கு அதனால் பலன் உண்டு. மளிகைக் கடைக்காரனுக்கும், அச்சாபீஸ்காரனுக்கும், கல்லூரியில் வேலையில்லை என்பதே உண்மையானாலும், ஹாஸ்டல் சப்ளை மளிகைக் கடைக்கும், கல்லூரியில் அச்சடிப்பவை அச்சாபீஸுக்கும் பெரிய வரப்பிரசாதம் என்பது உண்மை. வாழ்வை அன்னை பக்தியுடன் வாழ்பவருக்கு இன்று வாழ்விலில்லாத சிறப்புகள் கிடைக்கும் என்பதை நாமறிவதில்லை. இந்தத் தாயாருக்கு அது தெரியும். தாம் அன்னையை ஏற்றுக்கொண்டதைப்போல் குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொண்டால் குடும்பம் 100ஆம் நிலையை அடையும் என்பதை அறிவார். இந்த நிமிஷம் வந்துள்ள

பெரிய நிலையை குடும்பம் வரவேற்றால் - தம் பக்தியால் வருவதை குடும்பம் நன்றியுடன் போற்றினால் - குடும்பம் 80ஆம் கட்டம் அடைந்து நிலைக்கும் என்று அவர் பதைபதைக்கிறார். பதைப்பு கூடாது எனவும் அறிவார். அதுவே அவர் பிரச்சினை.

கணவர் : அன்னையை நீ சொல்வதுபோல எனக்குத் தெரியவில்லை. அவர்கள் சக்தி தெரிகிறது. எல்லாம் அன்னையால்தான் நடக்கிறது என்றாலும் அது மனதில் படவில்லை.

மனைவி : நாம் பலனை மட்டும் கருதுவதால் அது மனதில் படவில்லை.

கணவர் : இன்று எனக்குப் பலரும் - பல பெரிய மனிதர்களும் - கொடுத்த மரியாதை எனக்குப் புலப்படவில்லை. மேயர் நெருக்கமாகப் பேசினார். நம் வீட்டிற்கு அழைக்கலாம் என நினைத்தேன். தவறாகிவிடும் என பேசாமல் இருந்தேன். அவரே அதைப் பற்றிப் பேசியது எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

மனைவி : அன்னை தம் பங்கை அபரிமிதமாக நிறைவேற்றுகிறார். நம் பங்கு நிறைவேற்றப்பட வேண்டும்.

கணவனுக்கு அன்னையைப் பற்றிப் படிப்பில்லை, நம்பிக்கையும் இல்லை. பலன் - ஆதாயம் - கண் நிறையத் தெரிகிறது. இவரிடம் எதுவும் பேசமுடியாது. பேசுவதில் பலனில்லை. அவரிடம் எதைச் சொல்ல நினைத்தாலும், அதை அன்னையிடம் மட்டுமே சொல்ல வேண்டும் என்று உறுதி பூண்டார். அன்று மாலை பெரியவன் வந்தான். அன்னையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றான். 1/2 மணி நேரம் ஏதோ பேசினான். எழுந்து போய்விட்டான். இந்த பார்ட்னர்ஷிப் வந்ததிலிருந்து பெரியவனுக்கு நிலைகொள்ளவில்லை. அவனுக்கு வேண்டியது நிதானம்,

அன்னையில்லை. அதையும் அவனிடம் பேசமுடியாது. அன்னையைத்தான் கேட்கவேண்டும். வீட்டில் அனைவரும் பாக்டரி வந்து 10 ஆண்டானபின் பல கோடி வருமானம் வரும்பொழுது எப்படியிருப்பார்களோ அப்படி இப்பொழுதே நினைக்கிறார்கள். இது சரியில்லை. யாரைப்போய் நிதானமாக இருக்கும்படிச் சொல்ல முடியும்? அதையும் அன்னையிடம்தான் சொல்லவேண்டும். எதையும் அன்னையிடம்தான் சொல்லவேண்டும் என்றால் என்ன பொருள்? அதை அன்னையிடம் சொல்வதாகக் கொள்ளலாம். அல்லது நம் மனம் குறுக்கிடாமல், நம் ஆசை குறுக்கிடாமல் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கொள்ளலாம். நம்முள் உள்ள அன்னையை நாம் நம்மைவிட முக்கியமாகக் கருதவேண்டும் எனப் பொருள். சுயநலம் விலகி, அன்னை நலம் மனத்தை ஆட்கொள்ள வேண்டும் எனலாம். நமக்கு நம்மைவிட அன்னை முக்கியமாக வேண்டும் என்பதே சூட்சுமம். தொழில் திரும்பி வந்தபின் வீட்டின் நடைமுறை மனைவிக்குப் பூரணதிருப்தி. அத்துடன் அவருக்கு அன்னையின் அதிகபட்சம், குறைந்தபட்சம் தெரியும். அனைவரும் அன்னையை அன்னைக்காக ஏற்றால் பலன் அதிகபட்சம். அனைவரும் தொழிலுக்காக - ஆதாயத்திற்காக - அன்னையை வாயளவில் ஏற்றால் பலன் குறைந்தபட்சம். இதில் தானும் மற்றவர்கள் போலிருப்பது தெரிந்தாலும் மனம் அதற்காக வெட்கப்படவில்லை. இக்குறைந்தபட்சப் பலன் வர ஆரம்பிக்கும்முன் வீட்டின் அஸ்திவாரம் நிலைகுலைந்ததை மனைவி கண்டார். எதையும் திட்டமிட முடியாது, நினைக்கவும் முடியாது. நம் அளவுக்கு மீறியவை என அறிந்த மனைவி தாம் நிதானமாக இருப்பதே மேல் என நினைக்கும்பொழுது அது மட்டும் இல்லை எனக் கண்டார். தன்நிலையிழந்தவர் போய் மேஜை மீதிருந்த புத்தகங்களை அடுக்கி வைக்கலாம் என்று எடுக்கப் போகும்பொழுது புத்தகங்கள் மீதிருந்த கடிகாரம் உருண்டு கீழே விழுந்தது. மேஜைக்குக் கீழேயிருந்த சிறியவன் கடிகாரம் தரையில் விழாமல் பிடித்துக்கொண்டான். "அம்மா இது Mother's Grace"எனச் சத்தமிட்டான்.

சிறியவன் : உங்களுக்கு அருளிருக்கிறது. தவறினாலும் தவறு வருவதில்லை. நானும் அன்னையை உங்களைப்போல் ஏற்கவேண்டும்,

என்று உருக்கமாகப் பேசியபொழுது இது எவ்வளவு உண்மையானது எனத் தாயார் யோசனை செய்தார். அதே சமயம் மற்ற மூவரும் அங்கு வந்து, "இன்று இரவு நாம் 5 பேரும்1/2மணி தியானம் செய்யலாமா?'' எனக் கேட்டனர். மனைவிக்கு அளவுகடந்த சந்தோஷம். அத்துடன் அவர் மனம் விஷயம் தியானத்திலில்லை, மனப்பக்குவத்திலிருக்கிறது என்று கூறிற்று.

தியானம் ஆரம்பிக்கும்முன் அனைவரும் கூடினர். சிறியவன் தன்னை அண்ணன் அன்று கேலி செய்ததைத் தகப்பனார் கண்டிக்க வேண்டும் என்றான். பெரியவன் தான் கேலி செய்யவில்லை என்று பொய் பேசினான். தகப்பனாரிருந்ததால் காரம் வளரவில்லை. சூழல் சூடாகிவிட்டது. முதல் நாள் தியானத்திற்கு முன் சூழல் மாறியது வீட்டு நிலையை மனைவிக்குத் துல்லியமாகக் காட்டியது.

  • வீட்டார் மனம் தியானத்தை நாடுகிறது.
  • அவர் குணம் சூடாக இருக்கிறது.

என் மனம் ஆதாயமாக இருக்கும்வரை மற்றவரை நான் எப்படிக் குறை கூறமுடியும் என அறிவு கூறினாலும் மனம் ஆதாயத்தையே நாடுவதைக் கண்டு முதல்முறையாக வெட்கப்பட்டார். சிறியவன் முகம் மலர்ந்து சிரித்தான். பெரியவன் ஏதோ பராமுகமாக இருப்பதைப் போல் பார்த்தான். பெண் அனைவரையும் மாறிமாறிப் பார்த்தாள். கணவர் முகம் அமைதியாக இருந்தது. சூழல் அமைதியாகிவிட்டது. சூடு இல்லை. தாம் வெட்கப்பட்டவுடன் சூழல் அமைதியானது மனைவிக்குக் கண்ணில்பட்டது. தியானம் சிறப்பாக நடந்தது. முடிந்தவுடன் அவரவர் தம்மிடத்திற்கு எதுவும் பேசாமல் போய்ச் சேர்ந்தனர். இரவு சாப்பாடு வழக்கத்தைவிட அமைதியாக சந்தோஷமாக இருந்ததைக் கண்டு தம் வீடு மாறிவிட்டதா என

மனைவி நினைத்தார். மாறியது எது? வீடா, தம் மனமா? என்ற புதிர் மனத்தில் எழுந்தது.

சாப்பாட்டிற்குப் பின் பெரியவன் தனியாகத் தாயாரைச் சந்தித்து, "எனக்கு அன்னை புரியாது, புரியவும் வேண்டாம். என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லுங்கள். செய்கிறேன். பெரிய இடங்களில் அப்பாவுக்குச் சரியாக நடக்கத் தெரியவில்லை. எவரும் அதைப் பொருட்படுத்துவதில்லை'' என்றான். இது தர்மசங்கடம். இவருக்கோ, இவர் குடும்பத்திற்கோ பழக்கம் போதாது, மிக மட்டம். நான் எப்படி அவரைத் திருத்த முடியும்? பிள்ளைகள் அவர்போல இருக்கிறார்கள். மானம் போகிறது. அதுவே அவர்கட்குத் தெரியவில்லை. நல்ல பண்பான பழக்கங்களையே பார்க்காதவர்கள், எப்படி இதைப் புரிந்து கொள்ள முடியும்?

அன்னையை ஏற்றபின் தமக்கு ஆதாய மனப்பான்மையிருப்பது தமக்குத் தெரியாததுபோல் அவர்களிருக்கிறார்கள். இதற்கு வழியுண்டா? என்றால் தத்துவம் புரிகிறது. நடைமுறையில் தாம் தம் நிலைக்குக் கூனிக்குறுகினால் அவர்கள் மாறலாம். வெட்கம் வரவில்லை. வெட்கம்கெட்ட நிலை தன்னுடையது, என்பது மட்டும் மனைவிக்குப் பளிச்சென்று தெரிகிறது. இரண்டு நாள் கழித்து பார்ட்னருடைய குடும்பத்திலிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் இங்கு வரப் பிரியப்பட்டனர். இது மீண்டும் பெரிய விஷயம். ஆனால் எத்தனை தரம் மானம் போகும், எப்படிப் பையன்கள், பெண், கணவர் மானத்தை வாங்குவார் என பயமாயிருந்தது. அவர்களும் வந்தனர், இந்தக் குடும்பமும் போயிற்று. எவரும் முயன்று மானத்தை வாங்கவில்லை. பார்ட்னருக்கும் அவர் குடும்பத்திற்கும் நம் குடும்ப நிலை நன்றாகத் தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாமல், மேலும் நெருங்கிவர முயன்றனர். அது அன்னையின் பேரருள். வந்துவிட்டது. காப்பாற்ற முடியுமா? தெரியவில்லை.

இரண்டு விசிட் முடிந்தபின் பலநாட்கள்வரை அவற்றைப் பற்றி வீட்டில் எந்த நேரமும் பேச்சு.

பெரியவன் : பார்ட்னர் பிள்ளைகள் எல்லாம் அமைதியானவர்.

பெண் : பண்பானவர் என்று கூறலாம்.

சிறியவன் : எதுவானாலும், அண்ணா போல் பேசக்கூடியவர்கள் இல்லை.

பெண் : அவர் மனைவி கலகலப்பாக இருக்கிறார்.

கணவர் : அவர் மனைவி மலை போலிருக்கிறார், எதற்கும் அசையமாட்டார் போலிருக்கிறது.

மனைவி : அவர்கள் பிறந்த ஊருடைய தன்மையது. அந்த ஊர், அந்த ஜில்லாவிலேயே எவரும் அதிர்ந்து பேசமாட்டார்கள்.

பெரியவன் : எங்களுக்குத் தெரியாத பூகோளம் தமிழ்நாட்டைப் பற்றி உங்களுக்கு எப்படியம்மா தெரியும்?

மனைவி : எங்கள் சொந்த ஊரிலிருந்து அவர்கள் ஊரில் சம்பந்தம் செய்தார்கள். மிகவும் நல்ல மனிதர்களாக இருந்ததால், தொடர்ந்து பல சம்பந்தங்கள் நடந்தன. அதனால் தெரியும்.

பெண் : அம்மா, அவரைப் பற்றிச் சொல்லுங்க அம்மா. கற்றுக்கொள்ள வேண்டும்.

பெரியவன் : அம்மாவைக் கேட்காதே, நான் சொல்கிறேன். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது எதிர்வீட்டுக் குழந்தை வந்தான். அவன் என்னுடன் பேச ஆரம்பித்தான். "டேய் சீனு, நான் மாமாவுடன் பேசும் பொழுது தொந்தரவு செய்யாதே, அப்புறம் வா'' என்றேன். அவர் சிரித்தார். சீனு அவரிடம் போனான்.

சற்று நேரம் பேசினார். "எங்கள் வீட்டிற்கு வருகிறாயா'' என்றார். சீனு போய் தன் தாயாரிடம் உத்தரவு கேட்டான். பின்னாலேயே இவரும் போனார். அவர்கள் மகிழ்ந்துவிட்டார்கள். சீனுவை அழைத்துப்போய் மீண்டும் கொண்டுவந்து விடுவதாகச் சொன்னார்.

கணவர் : இவையெல்லாம் எனக்குத் தெரியாதே.

 

சிறியவன் : உன்னைப் போல "போ, அப்புறம் வா''ன்னு சொல்லாத மாமா, நல்லவர் போல இருக்கிறது.

கணவர் : எனக்கெல்லாம் அப்படித் தோன்றாது. நானும் பெரியவன் போலப் பேசுவேன்.

பெண் : நாமெல்லாம் அவர்களைப்போலப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்

சிறியவன் : அவர்களைப்போலப் பேசுவது வேறு. நம்மைப்போல் பேசாமலிருக்க வேண்டும்.

கணவர் : இதெல்லாம் என்ன விஷயம், எனக்கு விளங்குவது போல் சொல்லேன்.

பெரியவன் : அப்பா, அம்மாவைக் கேட்காதீர்கள். நான் சொல்கிறேன். நாமெல்லாம் பண்பற்ற மனிதர்கள் uncultured people. இனி பழக, பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெண் : இதென்ன, இன்று புதிய பாஷை கேட்கிறது.

பெரியவன் : இந்த பார்ட்னர்ஷிப் வந்தபின் பெரிய இடங்களில் பழகுவதால், நாமெல்லாம் மட்டம் எனப் புரிகிறது.

கணவர் : உன் அபிப்பிராயம் என்ன? அம்மா பேசட்டும்.

பெரியவன் : நான் காலேஜில் படிக்கும்பொழுது எல்லோரும் நம்ம ஊர் பிள்ளைகளை uncultured பண்பற்றவர், பேசத் தெரியாதவர் எனக் கேலி செய்வார்கள்.

பெண் : அவர்கள் எல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைகளா?

தாயார் : பெரிய இடம், சின்ன இடம் என்பதில்லை. ஊரைப் பொருத்தது பழக்கம்.

கணவர் : நீ, உன் அபிப்பிராயத்தைச் சொல், அன்னை என்ன சொல்லியிருக்கிறார்கள்.

தாயார் : அருள் கொடுப்பதை, பண்பு பெற்றுக்கொள்ளும் எனப் படித்திருக்கிறேன்.

பெரியவன் : நான் சொல்றேனப்பா. ஹாஸ்டலிலிருந்து நான் வீட்டிற்குப் பொய்யாகக் கடிதம் எழுதினால், என் நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள். எப்படி அப்பாவிடம் பொய் சொல்கிறாய் என்பார்கள். நமக்குப் பொய் சொல்வது சகஜம். அவர்கள் அப்படிப் பொய் சொல்வதில்லை. அதனால் நம்மை மட்டமாக நினைப்பார்கள்.

பெண் : மட்டமாகக் கேலி செய்வார்களா?

பெரியவன் : அப்படிக் கேலி செய்யமாட்டார்கள்.

சிறியவன் : "பண்பானவர்கள் கேலி செய்யமாட்டார்கள்'' (என அண்ணன் மனதில்படும்படிச் சொன்னான்).

பெரியவன் : டேய், நீ என்ன சொல்றே என எனக்குத் தெரியும். நான் சொல்லும் நண்பர்கள் இதுபோல் சொல்லிக்காட்ட மாட்டார்கள்.

 

சிறியவன் : நான் உனக்குத்தானே தம்பி, அவர்களுடன் பிறந்தவன் இல்லையே. ஏதாவது கேட்டால் கொடுக்கப் பிரியமில்லை என்றால் இல்லை என்பது நம் வழக்கம்.

பெரியவன் : காலேஜில் நான் கூறும் நண்பர்களிடம் அப்பழக்கங்கள் இல்லை.

சிறியவன் : நம்ம வீட்டுப் பழக்கங்களில்லை என்கிறாயா?

கணவர் : அருள் கொடுப்பது பலிக்க பண்பு வேண்டுமா? நான் திறமை வேண்டும் என நினைத்தேன். அம்மாதான் நமக்கெல்லாம் பண்பு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

பெண் : ஏம்பா, அம்மாவைச் சொல்கிறீர்கள்?

கணவர் : நான் கேலியா பேசலை. பெரியவன் சொல்வதைப் போலிருப்பது அம்மாதான். அதனால் அப்படி நினைக்கிறேன்.

சிறியவன் : பக்குவமில்லாத இடத்தில் நல்லது வாராது என்பது எளிமையான விஷயம்தானே.

பெரியவன் : எல்லாம் சங்க இலக்கியம் சொன்னதுதான்.

பெண் : நமக்குத் தமிழ்ப் பண்பில்லை என்றாகிறது.

அம்மா : அன்னைக்கு உயர்ந்த பண்பு தேவையானால், அதைக் கற்பது நல்லதுதானே.

பெரியவன் : நாம் பேசுவதெல்லாமே மட்டம் என்று ஹாஸ்டலில் சொல்வார்கள்.

அம்மா : அதெல்லாமிருக்கட்டும். இந்த பார்ட்னருக்குத் தகுந்தவாறு நடக்கவேண்டும்.

பெரியவன் : இப்போ பார்ட்னர்தான் அன்னை'.

சிறியவன் : பணம்தான் அன்னை.

பெண் : சரி, பணத்திற்காகவாவது நல்ல பழக்கம் கற்றுக் கொள்ளலாம்.

சிறியவன் : அண்ணன்கிட்டே சொல்லு.

போன் மணியடித்தது. அம்மா எழுந்தார்கள். பெண், தான் போய் பேசுவதாகச் சொன்னாள். சுமார் 10 முறை மணி அடித்துவிட்டது போனை எடுப்பதற்குள்.

தாயார் : பிறர் நோக்கில் அறிவது சத்திய ஜீவியத்தை நோக்கிப் போவது என்றால், யாரும் போனை எடுக்கவில்லை என்றால் கூப்பிட்டவர் மனம் எப்படியிருக்கும்?

கணவர் : எங்கள் ஆபீஸில் போனுக்கு பதில் சொல்வது வழக்கம் இல்லை. அப்படிச் சொன்னால் அது அதிசயம்.

பெரியவன் : 3 முறை அடித்தபிறகு எடுக்காவிடில் எங்கள் ஆபீசில் memo கொடுப்பார்கள்.

சிறியவன் : இனி ஒரு முறை மணியடித்தவுடன் நான் போனை எடுக்கிறேன்.

*** ஒரு வாரம் கழித்து கணவர் வாட்டமாக வந்தார். மனைவியிடம் பேசினார். பார்ட்னர் நேர்மையானவர். பணம் கொடுத்து காரியம் சாதிக்க வேண்டுமானால், அதை விட்டுவிடுவார். இந்த லைசென்ஸ் சர்க்கார் உத்தரவாகி கையெழுத்தாகிவிட்டது. அந்த ஆபீசர் பணம் வாங்குவதற்குப் பேர்போனவர். அவர் பார்ட்னரிடம் ஆர்டரில் தாம் கையெழுத்திட்டதைக் காட்டி, பணம் வந்தால் ஆர்டர் வரும் என்கிறார் என்று சொன்னார். மனைவி : இது பெரிய தொகையாயிற்றே. லஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பார்களே.

கணவர் : அதற்கெல்லாம் ரேட் ஏற்பட்டுவிட்டது. பெரிய ரூபாய் அதிகமாக எதிர்பார்க்கிறார். லைசென்ஸ் வாராது போலிருக்கிறது.

மனைவி : பார்ட்னர் என்ன சொல்கிறார்?

கணவர் : அன்னை என்ன சொல்கிறார் எனக் கேட்க வந்தேன்.

மனைவி : நாமெல்லாம் ஒரு நல்ல முடிவுக்கு வந்தால், காரியம் கூடிவரும்.

கணவர் : குழந்தைகளை நினைக்காதே, நாம் செய்யக்கூடியது உண்டா?

மனைவி : உண்டு.

கணவர் : சொல்லேன்.

மனைவி : சத்தியம் ஜெயிக்கும்.

கணவர் : என்னைப் பொய் சொல்லாதே என்கிறாயா? நானே அதை நினைத்தேன். அது எப்படி முடியும்? ஏதாவது முடியக்கூடியதாகச் சொன்னால் நல்லது.

மனைவி : லைசென்ஸ் நம் கையிலிருக்கிறது.

கணவர் : பார்ட்னரிடம் என்ன சொல்ல? அவர் பொய் சொல்லாதவர். அதெல்லாம் லைசென்ஸ் விஷயத்தில் பலிக்காது.

மனைவி : அவர் அன்னையை ஏற்றால் கிடைக்கும்.

கணவர் : நாமெப்படிச் சொல்வது?

மனைவி : நாம் சொல்லக்கூடாது.

கணவர் : 3 நாள் பிரார்த்தனை செய்யட்டுமா?

மனைவி : இது பிரார்த்தனைக்கு அசையாது.

கணவர் : பிரார்த்தனைக்குப் பலனில்லாமலிருக்குமா?

மனைவி : பலனில்லாமல் போகாது. வேறு பலன் வரும்.

கணவர் : லைசென்ஸுக்கு வழி சொல்லு. புஷ்பாஞ்சலி செய்யலாமா? காணிக்கை தரலாமா?

மனைவி : அதெல்லாம் வேறு நல்லது நடக்கும், லைசென்ஸ் கிடைக்காது.

கணவர் : என்ன செய்தால் லைசென்ஸ் வரும்?

மனைவி : மெய் மட்டும் சொன்னால் வரும்.

கணவர் : ஏன் அதையே திரும்பத்திரும்ப சொல்கிறாய்?

மனைவி : நம்ம நிலைக்கு நம்ப பையனுக்கு இந்த projectஇல் ஒரு வேலை கிடைத்தால் அதிர்ஷ்டம். Project நமக்கு வந்திருக்கிறது.

கணவர் : எப்படி வந்தது?

மனைவி : மெய் மட்டும் சொல்வதால் வந்தது.

கணவர் : நம் வீட்டில் யார் மெய் சொல்கிறார்கள்?

மனைவி : நாம் அன்னையை ஏற்றுக்கொண்டிருப்பது மெய் அல்லவா? அதற்காக வந்தது.

கணவர் : அப்படியா? அப்போ இந்த projectஇல் பொய் சொல்லக் கூடாதுதான்.

மனைவி : அதுவரை முடிவெடுத்தாலும் நல்லது.

கணவர் : அது முடியும். Project வரை பொய் சொல்லாமலிருக்க முடியும். முழுவதும் முடியாது.

பார்ட்னர் வரச் சொல்வதாக ஆள் வந்தான். கணவர் போனார். பார்ட்னர் இரண்டில் ஒன்று முடிவு செய்யவேண்டி I.A.S. ஆபீசரைப் பார்க்கப் போனாராம். அவர் லீவில் போயிருக்கிறார். இன்று அவரிடத்திலிருந்தவர் காசே வாங்காதவர். ஆர்டரைக் கையில் கொடுத்துவிட்டார் என்ற செய்தியுடன் திரும்பினார்.

கணவர் : என் முடிவுக்கு இந்த அளவு சக்தியுண்டு என நினைக்கவில்லை. இந்த மதர் விஷயம் நமக்கு ஒத்துவாராது போலிருக்கிறது. பொய் எப்படிச் சொல்லாமலிருப்பது? இன்னும் என்னென்ன வருமோ? சாமியைக் கும்பிடலாம். Discipline வேண்டாம். இது நீடிக்குமா எனத் தெரியவில்லை.

மனைவி: பார்ட்னர் என்ன சொன்னார்?

கணவர் : "என்னை எப்பொழுதுமே சத்தியம் - கடவுள் - கைவிட்டதில்லை என நான் அறிவேன்'' என்றார். எனக்குப் பொய் சொல்லித்தான் சாதித்துப் பழக்கம். ஏதோ முக்கியமான விஷயம் என பிள்ளைகள் தூர இருந்தார்கள். பிறகு வந்தார்கள். தகப்பனார் சுருக்கமாக, "லைசென்ஸ் சிரமமாய்விட்டது. அன்னை வாங்கிக் கொடுத்தார்'' என்றார். நடக்காது என்பதில்லை என்று பிள்ளைகள் எதிர்பார்ப்பதால், இது நடந்தது பெரிய காரியமாக அவர்கட்குத் தோன்றவில்லை. மகள், தாயார் ஓய்வாக இருக்கும்பொழுது அன்னையைப் பற்றிப் பேசவந்தாள். பெரியவனும், சிறியவனும் ஓடிவந்து, "என்னமோ நடக்கிறது, என்ன இரகஸ்யம் பேசுகிறீர்கள்'' என்று கேட்டார்கள்.

பெரியவன் : நானும் பார்க்கிறேன், கொஞ்ச நேரமிருந்தால் அம்மாவும், பெண்ணும் சேர்ந்து பேசுகிறார்கள்.

சிறியவன் : என்னமோ plan போடுகிறார்கள். தமிழ்நாட்டை ஆளப் போகிறீர்களா?

பெண் : அவன் போறான், நான் கேட்பதற்குப் பதில் சொல்லம்மா. என் சிநேகிதி அக்காவை புருஷன் கைவிட்டுவிட்டான். நான் அவளுக்கு உதவி செய்யமுடியுமா?

சிறியவன் : இந்த ஊர்க்கதையெல்லாம் எனக்கு வேண்டாம், நான் போகிறேன்.

பெரியவன் : நானும் போகிறேன், பாக்டரியில் வேலையிருக்கு.

தாயார் : நீ சின்னப் பெண். நீ சொல்வதை எவரும் ஏற்க மாட்டார்கள்.

பெண் : அவள் என்னைக் கேட்டாள். எந்த தெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்தால் பலிக்கும் எனக் கேட்டாள்.

தாயார் : அது சொல்வது எளிது.

தாயார் : கல்யாணத்தில் ஏராளமான கோளாறு. கேட்கவே பயங்கரமாக இருக்கிறது. பணம் முக்கியத் தகராறு. மாப்பிள்ளைக்கு ஏற்கனவே ஒரு பெண் வேண்டியவளாம்.

தாயார் : கோளாறு எவ்வளவிருந்தாலும் பரவாயில்லை. சிநேகிதியின் அக்கா அன்னையைக் கூப்பிட்டால் வழி பிறக்கும்.

பெண் : அவளுக்கு வாழ்க்கை அமையுமா அம்மா? என் தோழி மனம் உடைந்து போயிருக்கிறாள்.

பெண்ணை யாரோ தேடுவதால் எழுந்து வெளியில் போய் 15 நிமிஷம் கழித்து வந்தாள். தாயாரிடம் ஆச்சரியமாகப் பேசினாள். அவள் சிநேகிதி வந்தாள். மாப்பிள்ளை தானே வீட்டிற்கு வந்ததாகவும், தகப்பனாரைச் சந்தித்துப் பெண்ணை அழைத்துப்போக அனுமதி கேட்டதாகவும், மன்னிப்புக் கேட்கும்தொனியில் பேசியதாகவும் கூறிவிட்டு ஓடிவிட்டாள். "நான் கஷ்டப்படுவது உனக்குக் கஷ்டம். அதனால் உடனே உனக்குச் செய்தி சொல்ல ஓடிவந்தேன்'' என்றாளாம்.

தாயார் : நினைத்த மாத்திரம் செயல்படும் தெய்வம் அன்னை.

பெண் : இது எப்படி அம்மா? நான் அந்தப் பெண்ணிடம் பேசவும் இல்லையே.

தாயார் : Receptivity என்பது பெரியது. உன் சிநேகிதி குடும்பம் நல்லவர்கள், பண்பானவர்கள். அதனால் உடனே பலிக்கிறது.

பெண் : மாப்பிள்ளை அவளை அழைத்துப் போவதற்குமுன் நான் போய் பார்த்து வருகிறேன். ஏம்மா, இது இப்படி க்ஷணத்தில் நடக்கிறது? நம் எதிர்வீட்டில் வந்த கல்யாணத் தகராறு 2 வருஷமாக அப்படியே இருக்கிறது. என் சிநேகிதி அன்பரில்லையே. எதிர்வீட்டார் அன்பராயிற்றே.

தாயார் : எதிர்வீட்டார் குப்பையாக வீட்டை வைத்திருக்கிறார்கள். வீட்டில் சண்டை அடிக்கடி போடுவதால் சுமுகம் இருக்காது. அதனால் அன்னை செயல்படமுடியாது.

பெண் : நாம் சொல்லக்கூடாதா?

தாயார் : சொன்னால் சண்டை வரும். நீங்கள்தான் அன்பரா? நாங்களில்லையா? ரொம்ப உயர்வு என்ற நினைப்பா? எனக் கேட்பார்கள்.

பெண் : நீங்கள் ஏதோ எங்களுக்கெல்லாம் சொல்ல நினைக்கிறீர்கள். ஆனால் சொல்லவில்லை எனத் தோன்றுகிறது.

தாயார் : நான் செய்யாததை உங்களுக்கு எப்படிச் சொல்வது?

பெண் : நீங்கள் செய்யாவிட்டால், நாங்கள் செய்யக்கூடாதா? நீங்கள் பாட்டு கற்றுக்கொள்ளவில்லை. எனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லையா?

தாயார் : பாட்டு மாதிரி அன்னை வாராது.

பெண் : என்ன என்று எனக்குச் சொல்லக்கூடாதா?

தாயார் : பாக்டரி பெரியது, வந்துவிட்டது. அதுவும் போனது மீண்டும் வந்தது. இனி நிச்சயம் பலிக்கும். அது குறைந்தபட்சமாகவிருக்கும். அதிகபட்சமாக்கலாம், அதைச் சொல்ல முடியவில்லை.

பெண் : என்ன செய்தால் அதிகபட்சம் வரும்?

தாயார் : நாம் அனைவரும் மனத்தால் அதிகபட்சம் அன்னையை ஏற்க முயன்றால் அது நடக்கும்.

பெண் : ஓர் உதாரணம் சொல்லம்மா?

தாயார் : நாம் பேச உட்கார்ந்தபொழுது இரண்டு பேரும் கேலி செய்தார்கள்.

பெண் : கேலி செய்யக்கூடாதா?

தாயார் : செயல் முக்கியமில்லை. மனநிலை - நினைப்பு - முக்கியம்.

பெண் : ஏன் அவர்கள் நினைப்பு சரியில்லையா?

தாயார் : கேலி, ஹாஸ்யம், கிண்டல், நகைச்சுவை எல்லாம் humour என்ற தலைப்பில் வரும். அதுவே வாழ்வின் சாரம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

பெண் : பின் ஏன் நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள்?

தாயார் : கிண்டலுக்கு ஒரு போக்கில்லையா?

பெண் : எனக்கு ஒன்றும் தப்பா தோன்றவில்லையே. அவனே வருகிறான், கேட்போம் ஏன் எங்களைக் கிண்டல் செய்தாய்? சிறியவன் : என்னமோ எனக்கு வேட்டு வைப்பதாக நினைத்தேன்.

பெண் : வேட்டு வைக்க என்னயிருக்கு? என்னை வேட்டு வைப்பவளாக நினைக்கின்றாயா?

பெரியவன் : நீங்கள் என்ன பேசுகிறீர்களோ, எனக்குத் தெரியாது. நீங்கள் இருவரும் சேர்ந்தால் எனக்கு சந்தேகம் வருகிறது.

தாயார் : அம்மா, நான் இந்த நினைப்பைத்தான் சொல்கிறேன். இது தவறு.

சிறியவன் : எது தவறு, நீங்கள் பேசுவதா? நான் கேட்டதா?

 

இருவரும் வெளியில் போகிறார்கள்.

பெண் : ஏதோ அர்த்தமில்லாமல் உளறுகிறார்கள். அவர்கட்கு உங்கள்மீது சந்தேகப்பட என்னயிருக்கிறது? ஏன் அதைத் தவறு என்கிறீர்கள்?

தாயார் : அன்னை என்பது உயர்ந்த மனநிலை. சந்தேகப்படுவது உயர்ந்த மனநிலையன்று. எப்படிப் பலிக்கும்?

பெண் : சந்தேகப்படுவது தாழ்ந்த மனநிலையா? எப்படி மாறுவது?

தாயார் : நீ மாறுவதைப் பற்றிக் கேட்கிறாய். இப்படிப் பேசுவது தவறு என இருவரும் ஏற்பார்களா?

பெண் : நீங்கள் ஏன் திருத்தக்கூடாது? உங்கள் பிள்ளைகள் தானே? அப்பா இப்படித்தானே பேசுகிறார். இதுதானே நம்ம பழக்கம்.

தாயார் : அன்னை சக்திவாய்ந்தவர் என்பதை அறியவேண்டும்.

பெண் : அதை நாடவேண்டும்.

தாயார் : நாடினால் பலன் உண்டு. சக்திவாய்ந்த அன்னையை சக்திக்காக நாடாமல், பக்திக்காக நாடுவது பவித்திரம்.

பெண் : தலைகீழே மாற்றிப் பேசுகிறீர்களே.

தாயார் : சக்திக்காக அன்னையை நாடுவது ஆதாய மனப்பான்மை.

பெண் : அதில்லை என்றால் வேறு எதற்காக அன்னையை நாடவேண்டும்?

தாயாருக்குப் பெண்ணின் எளிய ஆதாய மனப்பான்மை ஏமாற்றத்தைக் கொடுத்தது. அடுத்த நிமிஷம் அதுவே தன் மனநிலை என்பது நினைவு வந்தவுடன் வருத்தம் எழுந்தது. அதனால் உணர்ச்சிபூர்வமாகப் பேச முடியவில்லை. கேள்விக்குப் பதில் வாயளவில் கூற முயன்றார்.

தாயார் : நாம் ஆதாயமாகவே நினைத்தால் வாழ்க்கை எப்படி நடக்கும்?

பெண் : வேறு எப்படியிருக்க வேண்டும் என்கிறீர்கள்?

தாயார் : பெற்றோர் பிள்ளைகளை அன்பாக வளர்க்கா விட்டால், எப்படி வளரும்?

பெண் : நாளைக்குச். சம்பாதிப்பான் என்றுதானே வளர்க்கிறார்கள்

தாயார் : பெண்ணை எப்படி வளர்ப்பது?

பெண் : அது கடமை.

தாயார் : கடமை எதிலிருந்து வருகிறது?

பெண் : ஆமாம், அன்பில்லாமல் கடமை செயல்பட முடியாது.

தாயார் : அதுவே நாம் அன்னையை வழிபடும் சட்டம்.

பெண்: எந்தச் சாமிக்கும் இல்லாத சக்தியிருப்பதால் நாம் அன்னையிடம் வந்திருக்கிறோம். இதில் கடமை, அன்பு ஏது?

தாயாருக்கு மண்டையில் அடித்தாற்போலிருந்தது. தன் பெண்ணின் அப்பாவி மனப்பான்மையின் ஆதாயத்தை நினைக்க வெட்கமாக இருந்தது. தானும் அப்படியிருப்பது அந்த நேரம் மீண்டும் மறந்துவிட்டது. இந்த நன்றிகெட்ட உலகை மனமார நிந்தித்தாள். மேலே பேச வாய் வரவில்லை. பெண் பதில் எதிர்பார்க்கிறாள். உள்ளபடி எதிர்பார்க்கிறாள். சுயநலமாக மட்டும் வாழ்வது சரி என்ற பெண்ணின் மனப்பான்மை மனத்தை உறுத்தியது.

தாயார் : நீ ஏன் உன் தோழியின் அக்காவுக்கு உதவ நினைத்தாய்?

பெண் : என் தோழிமீது எனக்கு ஆசை.

தாயார் : ஆதாயமில்லாத ஆசைக்கு அன்பு, இலட்சியம் எனப் பெயர்.

பெண் : அதை எப்படி அன்னையிடம் செலுத்துவது?

தாயார் : தோழிமீது ஆசைப்படுவதைப்போல் அன்னையின் தெய்வாம்சத்தை அறிந்து அன்னைமீது எழும் அன்புக்கு பக்தி எனப் பெயர்.

பெண் : எனக்கு அப்படிப்பட்ட பக்தியில்லையே.

தாயார் : இல்லாவிட்டால் பெற முயலக்கூடாதா?

பெண் : அது எதற்கு?

தாயார் : அது மட்டும் உலகில் நல்லது.

பெண் : அதனால் பாக்டரி பலிக்கும் என்றால் செய்யலாம்.

தாயார் : பாக்டரி மனிதனுக்கு, அன்னை பக்தனுக்கு.

பெண் மட்டுமல்லள், மற்ற குழந்தைகளும், கணவனும் சுயநலமாக, ஆதாய நினைப்புடனிருப்பது தாயாருக்கு வருத்தம் தந்தது. இது இன்று தெரிவதில்லை. ஆரம்பத்திலிருந்து தெரிந்ததுதான். இதை மாற்ற முடியுமா? மாற்ற முயல்வது சரியா? அன்னையின் முறை என்ன என்பது நெடுநாளாகத் தாயார் யோசனை செய்த விஷயம். இதுவரை அவருக்குப் புரிந்தவை,

  • சுபாவம் மாறாது. மாற்ற முயல்வது தவறு என்பது வாழ்வு.
  • பிள்ளைகள் இதுபோல் இருந்தால் அது தம்மையும் பிரதிபலிக்கிறது.
  • ஏன் பண்பான பெண்ணுக்குப் பண்பற்ற கணவர் அமைந்தார் என்பது திருமணத்தின் இயல்பு.
  • கணவர் தம் ஆத்மாவுக்கு அடுத்த பக்கம் (corresponding side) என்றால், குழந்தைகள் தம்மை நேரடியாகப் பிரதிபலிக்கின்றன.
  • பழக்கத்தைச் சொல்த் தரலாம், நல்ல பயன் தரும்; சுபாவத்தை மாற்ற முடியாது.

  • ஆழ்ந்து கவனித்தால் குடும்பத்தாருக்கு வீட்டு விஷயத்திலுள்ள சுயநலம் தமக்குக் குடும்ப நலத்தில் உண்டு என்பதால், இரண்டும் சுயநலமே.
  • தாம் மட்டும் மாறவேண்டும் என்பது அன்னை முறை.
  • வருத்தம் என்பது உணர்ச்சிக்குப் புரியவில்லை எனக் காட்டுகிறது.
  • மனப்போராட்டம் பக்குவமில்லாததால் எழுவது.
  • தாம் மாறும்பொழுது சூழல் மாறும், மற்றவர்களும் மாறுவார்கள்.
  • ஒரு பெரிய விஷயம் நடந்தால், அனைவரும் மாற சந்தர்ப்பம் உண்டு. அது பாக்டரிமூலம் வந்திருக்கிறது.
  • இந்த நேரம் உள்ளும், புறமும் முடிந்தவரை செய்யலாம்.
  • முடிந்தால் அதையும் சரணம் செய்வது சிறப்பு.
  • சமர்ப்பணம் முடியாத அளவுக்கு வருத்தம், போராட்டம், கவலை இருக்கும்.
  • மனத்தில் உள்ள உண்மைக்கு உண்மையான பலனிருக்கும்.

மறுநாள் கணவர் வந்து பார்ட்னர் லைசென்ஸ் கிடைத்துவிட்டதால் மேற்கொண்டு செய்யும் காரியங்களை ஆர்வமாகக் கூறினார். பார்ட்னருக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை பொருட்படுத்தாது எல்லா விஷயங்களிலும் நம்மை சமமாக நடத்தும் பாங்கு தமக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார். அத்துடன் பெரியவன் தன் நெடுநாளைய நண்பனுடன் கோபப்பட்டதாகவும் கூறினார். நண்பன் தற்சமயம் பெரியவனுக்கு வந்துள்ள அந்தஸ்தைப் பாராட்டாமல் பழையபடி நடப்பது பெரியவனுக்குப் பிடிக்கவில்லை, அதனால் தகராறு என்றார். பெரியவன் செயலை ஆமோதித்துப் பேசினார். பார்ட்னர் நம்மைச் சமமாக நடத்துவது சரி, பெரியவனிடம் அவன் நண்பன் சகஜமாகப் பேசுவது சரியில்லை. தாயாருக்கு இதன் முக்கியத்துவம் புரிந்தது. பெரியவன் தன் நண்பனிடம் சகஜமாக இல்லை எனில் பார்ட்னரிடம் பெருந்தன்மை நீடிக்காது என்று தாயார் அறிவாள். எவரிடமும் சொல்லாமல் அன்னையிடம் மட்டும் இதைக் கூறிவிட்டு தம் மனத்தை சோதனை செய்தார். தம் பங்கில் அதுபோன்ற மனப்பான்மையில்லை என்று கண்டார். அதனால் இது சரிவர வாய்ப்புள்ளது என நினைத்தார். பெரியவனே வந்து நண்பன்மீது தன் குறையை அம்மாவிடம் கூறினான். அந்த நேரம் சிறியவன் ஒரு புத்தகத்தின் பகுதியைக் காட்டி அம்மாவை விளக்கம் கேட்டான்.



book | by Dr. Radut