Skip to Content

பகுதி 6

பெண் : மேடம், என் தாயார் அன்னை பக்தை. அதனால் அப்பாவை எதுவும் கேட்கமாட்டார்.

ஆசிரியை : அன்னையைத் தெரியுமா? எனக்கும் அன்னை தெரியும். அதனால் கேட்கக் கூடாது என்று சட்டமில்லை.

பெண் : அப்பாவாக உங்களிடம் தம் அபிப்பிராயத்தைக் கூறியதில்லையா?

ஆசிரியை : ஏன் கேட்கக் கூடாது என நினைக்கிறீர்கள்? நான் அன்னையை வெகுநாட்களாக அறிவேன். எது வேண்டுமானாலும் கேட்பேன். அப்படியே பலிக்கும்.

தாயார் : முழு நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.

ஆசிரியை : உங்கள் அபிப்பிராயம் தெரியப் பிரியப்படுகிறேன்.

தாயார் : எதையும் கேட்கலாம் என்ற அன்னை, எதையும் கேட்காமலிருப்பது நல்லது எனவும் கூறியிருக்கிறார்.

ஆசிரியை : அன்னை கூறியவற்றை எல்லாம் நம்மால் அப்படியே பின்பற்ற முடியுமா? திருமணம் கூடாது என்கிறார். பெண்ணுக்குத் திருமணம் வேண்டாம் எனக் கூற முடியுமா?

தாயார் : நான் தாயாரானாலும், முடிவுக்கு உரியவர் இரண்டு பேர். கணவர் முடிவு செய்ய வேண்டியவர். பெண் பக்தையானால் அவள் முடிவு செய்யவேண்டும்.

பெண் : அம்மா, நான் பக்தையில்லையா?

தாயார் : நீயும், நானும் பக்தை எனக் கூறுவது தவறானது.

ஆசிரியை : ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?

தாயார் : நான் பிரார்த்தனை செய்கிறேன். சமர்ப்பணம் செய்ய முடிவதில்லை. சமர்ப்பணம் செய்பவர் பக்தராவார்.

ஆசிரியை : உங்கள் கணக்கில் நானும் பக்தையாகமாட்டேனா?

தாயார் : அன்னையை ஏற்பதில் பல அளவுகள் உண்டல்லவா?

ஆசிரியை : என்னை எந்த அளவில் வைக்கின்றீர்கள்?

தாயார் : எனக்குப் பொதுவான சட்டம் தெரியும்.

பெண் : எந்தச் சட்டம்?

தாயார் : அன்னை பக்தை என்பவர் அன்னை கூறியவற்றை ஏற்பவர்.

பெண் : நான் ஏற்கவில்லையா? நீங்கள் அப்படியே பின்பற்றுகிறீர்களே?

தாயார் : உன் ஆசிரியைச் சொற்படி நாம் அன்னையின் திருமணச் சட்டத்தை ஏற்க முடியுமா?

ஆசிரியை : ஒருவேளை நீங்கள் சாதகருக்குண்டானதைப் பற்றிப் பேசுகிறீர்கள் போலிருக்கிறது.

தாயார் : சாதகருக்கு விலக்கேயில்லை. எந்தச் சட்டத்திலும் விலக்கை அவர் எதிர்பார்க்கக் கூடாது.

ஆசிரியை : அன்னை எழுதியவற்றை எல்லாம் படித்து இருக்கிறீர்களா?

தாயார் : ஊம்.

ஆசிரியை : பின்பற்றப் பிரியப்படுகிறீர்களா?

தாயார் : ஓரளவு, முடிந்த அளவு பின்பற்றுகிறேன்.

பெண் : அம்மா, அன்னையை ஏற்பது என்றால் என்ன?

தாயார் : அன்னை சொல்லியதை அப்படியே வேதவாக்காக ஏற்க வேண்டும்.

ஆசிரியை : அது படிக்காதவர்கட்குரியது, மூடநம்பிக்கை. நாமெல்லாம் புரிந்து ஏற்கவேண்டும்.

பெண் : அம்மா, மேடம் சொல்வது சரியில்லையா?

தாயார் : புரியாமல் ஏற்பதைவிடப் புரிந்து ஏற்பது மேல்.

ஆசிரியை : அதையே நான் சொன்னேன்.

பெண் : இரண்டு பேரும் ஒன்றையே கூறுகிறீர்களா? எதிரானதைச் சொல்கிறீர்களா?

தாயார் : புரியாமல், புரிந்துகொள்ள முயலாமல் ஏற்பது முதல் நிலை. புரிந்து ஏற்பது அடுத்த நிலை. புரிந்தபின், புரிந்ததற்காக ஏற்காமல், அன்னை கூறியிருப்பதற்காக ஏற்பது அடுத்த நிலை.

ஆசிரியை : எப்படி?

தாயார் : புரியாமல் ஏற்பது உணர்வு ஏற்பது (vital acceptance). புரிந்து ஏற்பது மனம் ஏற்பது (mental acceptance). புரிந்தாலும் அன்னை கூறியதால் ஏற்பது சைத்தியப்புருஷன் ஏற்பது (psychic acceptance).

ஆசிரியை : நீங்கள் அன்னையைப் படித்ததுடன், அதிகமாக யோசனை செய்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டில் மாதம்தோறும் சுமார் 10, 20 அன்பர்கள் கூடுகிறோம். அங்கு வந்து இக்கருத்தை விளக்கிக் கூறினால் அனைவரும் வரவேற்பார்கள். அவர்கள் கேள்விகட்குப் பதில் சொல்வதும் நன்றாக இருக்கும். நமது மரபில் இதைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறார்களா?

தாயார் : மரபைப் பற்றி நமக்கு விவரமாகத் தெரிந்துகொள்ள வழியில்லை. பொதுவாக குரு கூறுவதை மறுத்துப் பேசக்கூடாது. நினைக்கவும் கூடாது என்ற பழக்கம் தெரியும். உபநிஷதம், சாஸ்திரம் அப்படிக் கூறும் என நான் நினைக்கவில்லை. எனக்கு அந்தப் படிப்பில்லை.

ஆசிரியை : அன்னை என்ன கூறுகிறார்கள் என்று படித்திருக்கிறீர்களா?

தாயார் : 1. மனித குரு தேவையில்லை.

2. குருவைக் கேள்வியே கேட்கக் கூடாது.

3. குரு கூறுவதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

4. புரிவது அவசியம்.

5. புரிவதை நம்பினால் நம்மை நம்புவதாக அர்த்தம்.

6. புரிந்தபின், புரியாமல் ஏற்பதுபோல் ஏற்பது பக்குவம்.

ஆசிரியை : ஏன் அது பக்குவம் எனக் கூற முடியுமா?

தாயார் : புறம் அகமாவது சத்தியஜீவியம். புரிவது புறம். புரியாததும் புறம். வேதவாக்காக ஏற்பது அகம். இந்த அகம் புறத்தைத் தன்னுட்கொண்டது என்பதாலும், காலத்தின் புறத்தையும், காலத்தைக் கடந்த அகத்தையும் கடந்த நிலையிலுள்ள காலம் என்பதால், அது உயர்ந்தது.

ஆசிரியை : எனக்குப் புரியவில்லை. இது எங்குள்ளது?

தாயார் :The Life Divineஇல் 364ஆம் பக்கத்திலுள்ளது.

ஆசிரியை : எனக்குப் புரிவதுபோல் சொல்ல முடியுமா?

பெண் : எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

தாயார் : காலம், காலத்தைக் கடந்தது என்ற இரண்டு நிலைகள் உள்ளன.

ஆசிரியை : ஆம். காலம் சிறியது. கடந்தது பெரியது.

தாயார் : இரண்டையும் கடந்த காலம் உண்டு. காலம் வாழ்வுக்குரியது. கடந்தது ரிஷிக்குரியது. இரண்டையும் கடந்தது பூரண யோகத்திற்குரியது. பூலோகச் சுவர்க்கம் எனப்படுவது.

ஆசிரியை : துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம் என்பது அதுதானா?

தாயார் : ஆம். அந்த 3 நிலைகளில் புரிவதை வைத்துக் கூறினேன்.

ஆசிரியை : அதிகமாக யோசனை செய்திருக்கிறீர்கள். இது படிப்பால் வாராது. யோசனை அனுபவத்தால்தான் வரும். நானும் என் தோழிகளும் ஒரு நாள் இங்கு வருகிறோம். உங்களுடன் பேச நன்றாக இருக்கிறது.

ஒரு நாள் பல ஆசிரியைகள் பெண்ணின் ஆசிரியையுடன் வந்தனர். அன்று அனைவரும் பெண்ணின் ஆசிரியையை வாழ்த்தினார்கள். அவர்களுக்குப் பிரின்சிபால் வேலை வந்துவிட்டது. பிரின்சிபால் பேசினார்கள். அனைவரையும் கேள்விகள் கேட்கச் சொன்னார்கள். அவர்கள் எல்லாம் முதலில் பிரின்ஸ்பாலுடைய அனுபவத்தையும், பிறகு பெண்ணின் தாயாரை அன்னையைப் பற்றியும் பேசச் சொல்லிக் கேட்டார்கள்.

பிரின்ஸ்பால் : நான் இப்பெண்ணைப் பார்க்க வந்தபொழுது அவள் தாயார் அன்னை பக்தை என அறிந்து, பேச ஆரம்பித்தேன். அன்று அவர்கள் கூறியதை அப்படியே

மனதில் ஏற்றுப் பின்பற்றினேன். மனம் நிம்மதியாயிற்று. புது வாழ்வு பிறந்தது போலிருந்தது. அதுவரை நான் அன்னையை அறியாதது போலிருந்தது. எனக்கு பிரமோஷன் தற்சமயமில்லை. எப்படி வந்தது எனத் தெரியவில்லை. நீங்கள் எல்லாம் சில புத்தகங்களை படித்திருக்கிறீர்கள். தோன்றும் சந்தேகங்களைக் கேட்டால் அம்மா மிகத் தெளிவாக விளக்கம் தருவார்.

வரலாறு ஆசிரியை: Life Response என்பது மிகச் சிறப்பாக உள்ளது. வரலாற்றிலிருந்து உதாரணம் தரமுடியுமா?

தாயார் : வரலாறு முழுவதும் Life Responseதான். அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் புரியும். 3 இலட்சம் பிரிட்டிஷ் துருப்புகள் டங்கர்க்கில் உள்ளபொழுது, ஹிட்லர் அங்கு குண்டு போட முடிவு செய்தான். போரின் போக்கு பிரிட்டன் பின்வாங்கும் நிலை. குண்டு போட்டால் அத்தனை பேரும் சேதமாவர். திடீரென 7 நாட்கள்வரை மூடுபனி, விமானம் வருவதைத் தடுத்தது. அது Life Response. உலகப்போரில் முக்கியத் திருப்பம்.

வரலாற்று ஆசிரியை : அது உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி.

தாயார் : நாம் Life Responseஐ உண்டுபண்ணலாம். இது பகவான் செய்தது.

கெமிஸ்ட்ரி ஆசிரியை: எங்களுக்கு எல்லாமே புதியது. விவரமாகச் சொல்லுங்கள்.

தாயார் : என் தம்பிக்கு பூரி இஷ்டம் என்றால், அவன் என் வீட்டுக்கு வரும்தோறும் தற்செயலாய் பூரி செய்திருப்பேன். பூரி செய்யும்பொழுதெல்லாம் அவன்

வரமாட்டான். அவன் வரும்பொழுது பூரி டிபனிருக்கும் என்றால், நான் ஒருமுறை தம்பி வரவேண்டும் என்று விரும்பும்பொழுது, பூரி செய்தால் வருவான்.

பூகோள ஆசிரியை : இது என்ன சட்டம்?

தாயார் : விஷயங்களுக்குள் தொடர்புண்டு. நாம் அதைக் காண்பதில்லை. தொடர்பு தற்செயலானதாகவோ, தவிர்க்கமுடியாத தொடர்பாகவோ இருக்கும். அதைக் கண்டுகொண்டால், அத்தொடர்புமூலம் அச்செயலை நிகழ்த்தலாம். அதுவே Life Response. Pride & Prejudice என்ற கதை உங்களுக்கெல்லாம் தெரியும். அதில் எலிசபெத் பெம்பர்லியில் மனம் மாறியவுடன், மறுநாள் வரவேண்டிய டார்சி, அன்றே வருகிறான்.

வரலாற்று ஆசிரியை: அவள் மனம் வெறுப்பானபொழுது அவன் அங்கில்லை. வெறுப்பு விருப்பானபொழுது, அம்மாற்றம் அவனை வரவழைக்கிறது. இதை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்?

தாயார் : மாமியார் கடுமையாக இருக்கிறார் எனில் நம் மனம் அவர்மீது கடுமையாக இருக்கிறது எனப் பொருள். நம் மனம் கனிவாக மாறினால் மாமியார் கனிவாக இருப்பார்.

வரலாற்று ஆசிரியை: நம்பமுடியவில்லையே . பௌதீக ஆசிரியை: நமக்குத் தெரிந்தே நடந்திருக்கிறதே. திருமணம் ஆனவுடன் பெண்ணிடம் பக்கத்து வீட்டு பெண், "உன் மாமியாருக்கு உன்மீது துவேஷம்'' என்றாள். பெண்ணின் மனம் கசந்துவிட்டது. ஓராண்டு மாமியார்

கடுமையாக இருந்தாள். அடுத்த ஆண்டு வேறொருவர்மூலம் தாம் கேட்டது அக்கப்போர் என அறிந்த அன்றே மாமியார் இனிமையாகப் பழகினார். இது எங்களுக்குப் புரியவில்லை. இந்தச் சட்டம் கேள்விப்பட்டவுடன் விளங்குகிறது.

கணவரும், பிள்ளைகளும் வந்து கலந்துகொண்டனர். பார்ட்னரும் உடன் வந்திருந்தார்.

தாயார் : அன்னையின் கோட்பாடுகள் ஏராளம். அவற்றை அறிந்து பின்பற்றுதல் பலன் தரும்.

பௌதீக ஆசிரியை: அன்னை கான்சரைக் குணப்படுத்தினார் எனக் கேள்விப்பட்டோம்.

தாயார் : உண்மை.

வரலாற்று ஆசிரியை: என்ன செய்தால் குணமாகும்?

தாயார் : நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் குணமாகும்.

கெமிஸ்ட்ரி ஆசிரியை: அன்னையிடம் பலிக்காத பிரார்த்தனையுண்டா?

தாயார் : இல்லை.

வரலாற்று ஆசிரியை: என் தங்கை கணவர் அவளைவிட்டுப் போய்விட்டார். பிரார்த்தனையால் திரும்பி வருவாரா?

தாயார் : தவறு கணவர்மீது மட்டுமிருந்தால் பிரார்த்தனை உடனே பலிக்கும். தவறு உங்கள் தங்கை மீதுமிருந்தால், அதைச் சரிசெய்தால் பிரார்த்தனை இல்லாமலே கணவர் திரும்பிவருவார்.

வரலாற்று ஆசிரியை: இப்படி நடந்திருக்கிறதா?

தாயார் : தினமும் பல விஷயங்கள் இப்படி நடக்கின்றன.

கெமிஸ்ட்ரி ஆசிரியை: சமர்ப்பணம் எப்படிச் செய்வது?

தாயார் : அன்னையிடம் கூறுவது சமர்ப்பணம். நமக்காகச் செய்வதை அன்னைக்காகச் செய்வது சமர்ப்பணம்.

பிரின்ஸ்பால் : எதற்காகச் சமர்ப்பணம் செய்வது?

தாயார் : பொதுவாகப் பிரச்சினை தீர, சமர்ப்பணம் செய்கிறோம்.

வரலாற்று ஆசிரியை : வேறெதற்காகச் சமர்ப்பணம் செய்யலாம்?

தாயார் : வந்த வாய்ப்புகள் பலிக்க சமர்ப்பணம் உதவும். இதுவரை வாராத வாய்ப்புகள் வரும்.

பிரின்ஸ்பால் : எல்லோரும் சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்தால், நாடே மாறிவிடுமே.

தாயார் : ஆமாம். என் தகப்பனார் காலத்தில் எங்களூரில் பட்டம் பெற்றவர் அவர் ஒருவரே. இன்று அதே ஊரில் எல்லா வீடுகளிலும் பட்டதாரியுண்டு. அது முன்னேற்றம்.

தத்துவ ஆசிரியை: சமர்ப்பணத்திற்கு நீங்கள் சொல்லும் பலனிருந்தால், எல்லோரும் எளிமையாகச் செய்யும்படியிருக்காது.

தாயார் : அன்னை அன்பர்கள் தவிர இதரர்கள் சமர்ப்பணத்தை நம்பமாட்டார்கள். அன்பர்கட்கே சமர்ப்பணம் எப்பொழுதும் நினைவு வாராது. நினைவு வந்தாலும் சமர்ப்பணம் பல கட்டங்களில் உள்ளது.

தத்துவ ஆசிரியை: நான் நினைத்தேன். அவற்றை விவரமாகச் சொல்லுங்கள்.

தாயார் : 1) பிரச்சினை தீர வாயால் "நான் சமர்ப்பணம் செய்கிறேன்" என்றாலும், அன்னையிடம் கூறிக்கொண்டே இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் முழுவதும் தீரும்.

2) மனதால் கூறினால் உடனே பூரணமாகத் தீரும். பெரிய பிரச்சினைகளும் தீரும்.

3) உணர்வு பேசினால் அசையாதது அசையும், நடக்காதது நடக்கும்.

4) உடல் விழித்து சமர்ப்பணம் செய்தால், உலகில் எந்த சிக்கலும் அவிழும்.

தத்துவ : இதைச் செய்வதில் கடினம் எது? ஆசிரியை

தாயார் : நாம் மனதால் சமர்ப்பணம் செய்ய முயலும்பொழுது வாய் நம்மை மீறிப் பேசும்.

தத்துவ ஆசிரியை: Concentration வேணும் போருக்கிறது.

தாயார் : சமர்ப்பணத்தை consecration என்கிறோம். அதற்கு concentration தேவை.

தத்துவ ஆசிரியை : பலன் concentrationஐப் பொருத்ததா?

தாயார் : ஆம். மேலும் சமர்ப்பணம் முற்றி சரணாகதியாகிறது. அத்துடன் மனம், உணர்ச்சி, உடல் என்பவற்றுள், மேற்பகுதி, கீழ்ப்பகுதி என இரண்டுண்டு. ஆழத்தைப் பொருத்துப் பலன். போனில் பேசுவதை, சமர்ப்பணம்

செய்யலாம் எனில், சமர்ப்பணம் செய்யுமுன் கை டயல் செய்யும். வாய் பேசும்.

தத்துவ ஆசிரியை: நம் மனம் நம் கட்டுப்பாட்டிலிருக்காது என்கிறீர்களா?

தாயார் : நம் மனம், உணர்வு, உடல் ஆகியவை உலகம். இவை கட்டுப்பட்டால், உலகம் நமக்குக் கட்டுப்படும்.

வரலாற்று ஆசிரியை: அப்படியானால், இவை நமக்கில்லையா?

தாயார் : போன், T.V., car, வீடு, ஏற்கனவே நமக்கில்லை என இருந்தது. இப்பொழுது அனைவருக்கும் வந்ததுபோல் நமக்கும் சமர்ப்பணம் உண்டு.

பிரின்சிபால் : அப்படி மாறக் காரணம்?

தாயார் : 1956இல் வந்த சத்தியஜீவியம் நாளாக, நாளாக நம் வாழ்வில் ஆழ்ந்து செயல்படுவதால், இதுவரை நமக்கில்லாத சமர்ப்பணம், இன்று நமக்குண்டு. சமர்ப்பணம் இந்த யோகத்திற்கு உயிர் நாடி; சரணாகதி, ஜீவநாடி. என்னால் இவற்றை ஓரளவுக்கு மேல் பயன்படுத்த முடியவில்லை.

கணவர் : எங்கள் வாழ்வு கடைசி கட்டத்திலிருந்தது. எங்கள் வீட்டில் என் மனைவி மட்டுமே பக்தை. இன்று வாழ்வு அளவுகடந்து உயர்ந்துள்ளது. அதற்கெல்லாம் இவளுடைய சமர்ப்பணமே காரணம்.

பார்ட்னர் : நாம் சமர்ப்பணம் செய்வது நம் செயலை.

தாயார் : சொல், உணர்ச்சி, செயல் ஆகியவற்றைப் படிப்படியாக சமர்ப்பணம் செய்கிறோம். முடிவாக நாம் நம்மையே சமர்ப்பணம் செய்கிறோம்.

பிரின்சிபால் : சொல், உணர்ச்சி, செயல் அடுக்கடுக்கானவை. நம்மையே சமர்ப்பணம் செய்வது எப்படி?

தாயார் : நாம் பேசுவதற்குப் பதிலாக அன்னையைப் பேசச் சொல்வது சொல்லைச் சமர்ப்பணம் செய்வதாகும். நாம் உணர்வதற்குப் பதிலாக அன்னையை உணரச் சொல்வது உணர்வை, சமர்ப்பணம் செய்வது. நாம் செயல்படுவதற்குப் பதிலாக அன்னையைச் செயல்படச் சொல்வது செயலைச் சமர்ப்பணம் செய்வதாகும். நாமிருக்கிறோம், வாழ்கிறோம். அதற்குப் பதிலாக அன்னையை வாழச்சொல்வதும், இருக்கச் சொல்வதும் நம்மைச் சமர்ப்பணம் செய்வதாகும்.

பார்ட்னர் : சொல், செயல் புரிவதுபோல் வாழ்வு, இருப்பது புரியவில்லை.

தாயார் : சொல்லையும், செயலையும் சிந்தித்துச் செய்கிறோம். சிந்திக்காமல் செயல்படவேண்டிய பெரிய நேரங்களுண்டு. அந்த நேரம் நாம்' செயல்படுகிறோம். க்ஷணத்தில் முடிவெடுக்கிறோம். அங்கு நம்மை விலக்கி அன்னையை வைப்பது பூரணச் சமர்ப்பணம். அந்நிலையில் சமர்ப்பணம் சரணாகதியாகிறது. பிரின்சிபால் : நாம் என்று ஒன்று இருக்க அவசியமில்லை.

தாயார் : அதுவே கரு, எண்ணம் என எழுமுன் சமர்ப்பணமும் எழுந்தால் சமர்ப்பணம் பூரணச் சமர்ப்பணமாகும். பூரணச் சமர்ப்பணம் சரணாகதி. வாழ்வில் அது அதிர்ஷ்டம். யோகத்தில் அதுவே சித்தியாகும்.

பார்ட்னர் : நம் பிள்ளை, நம் நண்பர், தகப்பனார் குறைகள் நம் கண்ணில் படுவதில்லை. அதற்கும் சமர்ப்பணத்திற்கும் தொடர்புண்டா?

தாயார் : அது பாசத்தால் நடப்பது. அதையே பக்தியால் செய்வது சமர்ப்பணம்.

பிரின்சிபால் : எளிமையாகப் புரிகிறது.

தத்துவ ஆசிரியை : எளிமையாகப் புரிவதால், செய்வது கடினம்.

தாயார் : செய்ய நினைவே வாராது. நினைவு வந்தாலும், சமர்ப்பணத்தைவிட சுபாவம் அதிவேகமாகச் செயல்படும்.

பிரின்சிபால் : உணர்ச்சி வசப்பட்டவனுக்கு அறிவு என்று ஒன்றிருப்பது தெரியாததுபோல் நமக்கு யோகமிருப்பது தெரியவில்லை.

தாயார் : சரி.

தத்துவ ஆசிரியை: தெரிய நாளாகும். செய்ய யுகமாகும். தெரிய அறிவு வேண்டும். செய்ய ஆத்ம விழிப்பு வேண்டும்.

தாயார் : வளரும் ஆன்ம விழிப்பு தேவை.

பெண் : சாதாரண மொழியில் சொல்லக்கூடாதா?

தாயார் : நாம் நாமாக இருப்பதை வேரோடு சுவைத்து வாழ்கிறோம். ஆண்டவனாகும் நேரம் வந்தது தெரியவில்லை. தெரிந்தபின்னும் நம் வாழ்வின் சுவை நம்மை ஆக்ரமித்துக்கொள்கிறது. பகவான் அதை Taste of Ignorance, அஞ்ஞானம் ருசிக்கிறது என்கிறார்.

பெண் : சுபாவம் மாறாது என்பது இதுவா?

பிரின்சிபால் : சுபாவம் மாறும் நேரம் வந்துவிட்டது. அது மாறும் என்றாலும், நாம் சுபாவம் மாறச் சம்மதிக்கமாட்டோம் என்கிறார் உன் அம்மா.

தத்துவ ஆசிரியை: கீதை, "நீ எதையும் சாதிக்கலாம்'' என்பது இதுவா? 

தாயார் : ஆம். ஓரு முறை நம்மை அன்னை கையில் ஒப்படைத்தால் நிகழும் அற்புதம் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும்.

பிரின்சிபால் : அதை எப்படிச் செய்வது?

தாயார் : நம்மால் சமர்ப்பணத்தை முழுவதும் ஏற்கமுடியவில்லை என்பதால், ஏதாவது ஒரு காரியத்தில் அதை ஏற்பது பலன் தரும், அன்னையை நமக்கு விளக்கும்.

பார்ட்னர் : நான் செய்யமுடியுமா?

தாயார் : கம்பெனியில் ஒரு வேலையில் சமர்ப்பணத்தைப் பின்பற்றலாம்.

ஒரு ஆசிரியை : என்ன பலன் தரும்?

தாயார் : பெரும் பலனிருக்கும்.

ஆசிரியை : நான் சம்பளத்திற்காக வேலை செய்கிறேன். எனக்கு என்ன பலன் வரமுடியும்?

தாயார் : பல உதாரணங்களைக் கூறலாம். வேண்டுமானால் சொல்கிறேன்.

பிரின்சிபால் : அன்னை சொல்வதை ஏற்கிறேன். உதாரணம் தேவையில்லை. என் பிரமோஷனைப் பார்த்தபின் நான் எதையும் நம்பத் தயாராக இருக்கிறேன்.

தாயார் : சமர்ப்பணத்தால் எதையும் சாதிக்கலாம் எனில் அது இன்று நமக்கில்லாத சக்தி; உலகில் இல்லாத ஒன்று.

அது இன்று நமக்கும் உண்டு என்றால் அதற்குரிய பக்குவம், தீவிரம், பக்தி நமக்கவசியம். நம் பங்கு அதுவே. நாம் ஒரு காரியம் செய்யவேண்டுமானால் உடனே செய்கிறோம். போனில் பேசவேண்டுமானால் பேசுகிறோம். அது நம் செயல். இச்செயலுக்கு அந்த சக்தியில்லை. நம் செயலைத் தெய்வ செயலாக்குவது எப்படி? நம் வீட்டில் திருடு போனால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் போலீஸைக் கூப்பிடுகிறோம். அது நம்மால் முடியாததை, சமூகத்தின் திறமையால் முடிப்பது. போலீஸ் அதன் சட்டப்படிச் செயல்படுமே தவிர நம் இஷ்டப்படிச் செயல்படாது. திருடு போன பொருளை வீட்டில் உள்ளவர் திருடியிருந்தால், நாம் கூடாது' என்றாலும், போலீஸ் விடாது. போலீஸ் வீட்டில் உள்ள மனிதரிடமிருந்து திருட்டுப் பொருளை மீட்டால், நமக்குப் பொருள் கிடைத்ததைவிட மானம் போனது குறையாகும். நம்மைவிட உயர்ந்த சக்தி,

  • நம்மால் முடியாததைச் சாதிக்கும்.
  • நமக்குப் பிடிக்காத வகையிலும் செயல்படும்.
  • எதுவும் நம் நன்மைக்கே அமையும்.

அதை மனம் ஏற்பதும், இனிமையாக ஏற்பதும் சமர்ப்பணம், சரணாகதியாக உதவும். போனில் பேசுவது நம் செயல். போனில் பேச எண்ணம் எழுந்தவுடன் அந்த எண்ணத்தை மறுத்து, சமர்ப்பணம் செய்தால், சமர்ப்பணத்தின் தீவிரத்தைப் பொருத்துப் பலனிருக்கும். பல நிலைப் பலன்கள்,

  • 1. யாரிடம் பேச விரும்பினோமோ, அவர் அதே நேரம் நம் வீட்டிலிருப்பார்.

  • 2. ஓர் ஆபத்தான விஷயத்தில் சீப் இன்ஜினீயர் உதவியை நாடி எக்ஸிகுயூடிவ் இன்ஜினீயரைக் கூப்பிட்டால், எக்ஸிகுயூடிவ் இன்ஜினீயருடன் சீப் இன்ஜினீயர் பேசிக்கொண்டிருப்பார்.
  • 3. பத்திரிகைச் சந்தாவைப் பத்திரிகை ஆசிரியரிடம் கொடுப்பதை, சமர்ப்பணம் செய்தால், பத்திரிகை ஆசிரியருடன் அகில இந்திய பாங்க் தலைவரிருப்பார். அவரை அறிமுகம் செய்தால், இல்லை' என்ற பாங்க் லோன் உண்டு' என்றாகும்.
  • 4. தரிசனத்திற்குப் போவதை, சமர்ப்பணம் செய்தால், தரிசனத்தன்று சட்டம் மாறி, வாழ்வு முடிந்துவிட்டது என்ற நிலையில் புது வாழ்வு வரும்.
  • 5. இறைவன் செயல் இதமானது என்பதை இதயம் ஏற்குமா என்பதே பிரச்சினை.
  • 6. 4 இலட்சம் ஆர்டர் பெறாதவர்க்கு 4 கோடிஆர்டருக்குரிய வாய்ப்பு எழும்.

வரலாற்று ஆசிரியை: சேவைக்குள்ள பலனைவிட, சமர்ப்பணத்திற்குப் பலனுண்டா?

தாயார் : சேவை உடலுழைப்பு, சமர்ப்பணம் ஆத்மாவின் அசைவு.

பிரின்சிபால் : என் மகன் தொழில் செய்கிறான். அவன் செய்யக்கூடிய சேவையுண்டா?

தாயார் : அனைவரும் செய்யக்கூடியது புத்தகச் சேவை. அதன்மூலம் ஒருவர் தொழில் 1 கோடியிலிருந்து 3கோடியாயிற்று. அவரை 1000 புத்தகம் விற்கச் சொல்லுங்கள். பிரச்சினை பிரார்த்தனை செய்தால் பலிக்கும்.

வாய்ப்பைப் பெற பெரிய மனம் தேவை. எல்லோரும் கலைந்தபின் வீட்டார் கலந்து பேசினர். சிறியவன், "அம்மா, நீங்களே எனக்கும் சேர்த்து சமர்ப்பணம் செய்யுங்கள்'' என்றான். பெரியவன், சிறியவனைக் கிண்டலாகப் பார்த்து சிரித்துவிட்டுப் போய்விட்டான். கணவர் நெகிழ்ந்து போயிருந்தார். பெண்ணுக்கு அன்னைமீது யோசனை எழ ஆரம்பித்துவிட்டது. தாயார் அனைவரையும் கவனித்தார். பேசாமலிருந்தார்.

பெண் : அண்ணா இதுபோல் பொறுப்பில்லாமலிருக்கிறாரே, நீங்கள் ஏன் ஒன்றும் சொல்வதில்லை?

தாயார் : அதற்குப் பல வகைகளில் பதில் சொல்லலாம்.

1) நான் பொறுப்பில்லாததால், என் மகன் பொறுப்பற்றிருக்கிறான்.

2) நான் பொறுப்போடு இருப்பதால், அவன் எதிராக இருக்கிறான்.

3) பொறுப்பற்றவனுக்குப் பொறுப்பேற்படுத்தும் பொறுமையை நான் பெறவேண்டுமென வந்து இருக்கிறான்.

4) பொறுப்பில்லாதவனுக்கு அதிர்ஷ்டம் வந்தால், சாதாரண அன்பருக்கு அன்னை வந்ததுபோல் என நான் அனுபவப்படவுமிருக்கலாம்.

5) பொறுப்பில்லாமலிருக்கப் பெருமைப்படும் மகன், எனக்கு வர நான் அன்னையை முழுவதும் ஏற்காததைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம்.

பெண் : அண்ணா திருந்தி, பாக்டரியை வெற்றிகரமாக்க வேண்டுமல்லவா?

தாயார் : என்னால் தனியாக முடியும்வரை செய்கிறேன். வீட்டார் அனைவரும் செய்தால் பெரும் பலனிருக்கும்.

பெண் : நான் உங்களுடன் சேர்ந்து செயல்படுகிறேன்

தாயார் : உனக்குப் படிப்பில் பொறுப்பிருக்கிறது போதுமா? இதுவரை நீ III classஇல் பாஸ் செய்திருக்கிறாய். உன்னால் II classஉம் வாங்க முடியும். I classஉம் முடியும். நீ அந்த முடிவை எடுத்துச் சாதித்தால் அண்ணாவிடம் மாறுதல் தெரியும்.

பெண் : எனக்குப் படிக்க ஆசையெனில், M.A. படிக்க ஆசை. வகுப்பில் முதலாக வரவேண்டும் என்றும் நான் நினைத்ததில்லை.

தாயார் : நாம் அலட்சியமாக இருக்கிறோம். அன்னை செயல்பட நம் செயல் நம் முயற்சியை முடிக்க வேண்டும்.

பெண் : சரி. நான் அதைச் செய்கிறேன். இதோ அண்ணாவே வருகிறார்.

பெரியவன் : அம்மா, என் வேலைக்கு Mother's Blessings வேண்டும். எனக்குக் கணக்கே வாராது. கம்பெனியில் கணக்குச் சரியில்லையாம். நான் அதை எடுத்துச் சீர் செய்கிறேன் என்றால், எனக்குக் கணக்கு வாராது என்று தெரியுமாதலால் அனைவரும் கேலிசெய்கிறார்கள்.

தாயார் : எடுத்துச் செய். அன்னைக்குப் பிரார்த்தனை செய்.

பெண் : உங்களுக்கு அன்னை மீது நம்பிக்கை இருந்தால் தானே கணக்கு நேராகும்.

பெரியவன் போனபின் பெண் தன் முடிவிற்கும் அண்ணன் முடிவிற்கும் உள்ள தொடர்பைத் தாயாரிடம் சுட்டிக்காட்டினாள்.

தாயார் : வெளியுலகுக்கு அன்னையைத் தெரியாது. நமக்கு ஏராளமாகத் தெரியும். நம்மால் தெரிந்ததில் ஒரு துளியும் பின்பற்ற முடியவில்லை. அன்னை பாவ, புண்ணியத்திலிருந்து நம்மை மீட்டுவிட்டார் என்றாலும், நாம் அன்னையை அறியாமல், பலனை மட்டும் கருதுகிறோம்.

பெண் : பாவ, புண்ணியத்திலிருந்து மீட்பது என்றால் என்ன?

தாயார் : நீ சிறு பெண். யாராவது பெரியவர்கட்குச் சொல்லும்பொழுது நீயும் கேட்டுக்கொள். உனக்கே எப்படிச் சொல்வது?

அந்நேரம் அவ்வூர் தியான மையம் நடத்தும் தம்பதிகள் வந்தனர். அவர் வக்கீல். அவர் மனைவி பேங்க் ஏஜெண்ட். இதே விஷயத்தை எடுத்தனர். பெண் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டாள்.

வக்கீல் : பாவம் என்பது செய்யும் மனநிலையைப் பொருத்தது என்கிறார் அன்னை. சரி, பாவமேயில்லை எனவும் கூறுகிறார். புரிவது போருக்கிறது. மேற்கொண்டு விளக்கம் தேவை.

ஏஜெண்ட் : அம்மா, நீங்கள் அதிகம் படித்தவர். அத்துடன் நுணுக்கமாக யோசனை செய்கிறீர்கள். நாங்களிருவரும் 2 நாளாக இதைப் பேசுகிறோம். பேசும்பொழுது புரிவது போலிருக்கிறது. பிறகு செய்யும்பொழுது குழப்பம் வருகிறது.

தாயார் : இது சம்பந்தமாக அன்னை கூறியவற்றையும், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டிய வகைகளையும் கூறுகிறேன்.

  • பாவம் என்பது சிருஷ்டிக்கப்படவில்லை.
  • பாவ, புண்ணியம் என்பது இரட்டை மனத்தின் செயலுக்குரியது.
  • மனத்தைக் கடந்தால் செயல் உண்டு, பாவமோ புண்ணியமோயில்லை.
  • செயல் செய்வதின் மனநிலைக்கு பாவம் உண்டு.
  • மனத்தைவிட பாவம் அகந்தைக்குண்டு.
  • அகந்தையில்லாதவர்க்குப் பாவமில்லை.
  • பஞ்சமா பாதகங்களும் அகந்தையுள்ளவரையே.
  • அதில்லாவிட்டால் பாவமில்லை.
  • மேல்மனம், மனம், காலம், அகந்தைக்குப் பாவம் உண்டு.
  • புலி மானைக் கொல்வது பாவமில்லை. மான் தன்னைச் சாப்பிடும் புலி மீது அன்புகொள்கிறது.
  • குழந்தை எட்டி உதைப்பது பாவமில்லை. பெற்றோர் காலை முத்தமிடுவர். குழந்தைக்கு அகந்தையில்லை.
  • நாம் சித்தப்பா பெண்ணை கட்டிக்கொள்வது பாவம். இங்கிலாந்தில் அத்தை மகளைக் கட்டிக்கொள்வதுபாவம். பாவம் பண்பைப் பொருத்தது.
  • சர்ச்சில் கார்டினல்களுக்கு இது தெரியும். பாமரமக்களுக்காக நரகம், பாவம் என்று கூறுகிறார்கள்.
  • அசைவனும் வெள்ளிக்கிழமை மாமிசம் சாப்பிடமாட்டான். மறதியாகச் சாப்பிட்டால் பாவம் எனவருத்தப்படுவான். வருத்தம் நினைவுக்கே, செயலுக்குஇல்லை.

வக்கீல் : விளக்கமே தேவையில்லை. தெளிவாக இருக்கிறது.

ஏஜெண்ட் : மேலும் சொல்லுங்கள்.

தாயார் : மனத்தை விட்டகன்று செயல்பட்டவர் இதை உணர்ச்சிபூர்வமாக அறிவார்.

வக்கீல் : மனத்தைவிட்டு எப்படி அகல்வது?

தாயார் : நம் மகன் செய்த தவறு நமக்குத் தவறில்லை. அது பாசம். பாசத்தை விட்டகன்று சிந்தனை செய்தால் மகன் செய்தது தவறு எனத் தெரியும். அடுத்த கட்டத்தில் மனத்தைவிட்டு அகலவேண்டும்.

பெண் : ஏதாவது நடந்த நிகழ்ச்சிமூலம் விளக்க முடியுமா?

தாயார் : மகன் போதை மருந்தை தகப்பனார் திருடினால் அது திருடாகுமா?

பெண் : நல்ல காரியமன்றோ! ஆமாம். இங்கு பாவம் புண்ணியமாகிறது.

ஏஜெண்ட் : மேலும் விபரம் உண்டா?

தாயார் : உண்டு. மேல்நாட்டார் நம் நாட்டில் வந்திருக்கும்பொழுது ஒரு திருவிழாவில் பூட்சுடன் வந்தால், அது பாவமானால், அவர்களைப் பாதிக்க வேண்டாமா? அது பாதிப்பதில்லை. பாவம் நமக்கு. நாம் நம்புவதால் பாவம். நம்பாததால் அவர்கட்குப் பாவமில்லை. பாவமும், புண்ணியமும் நம்பிக்கையைப் பொருத்தது.

பெண் : வேறு உதாரணங்கள்.

தாயார் : முதல் மந்திரிக்கு one way traffic உண்டா? அவர்கள் எதிராகப் போனால் அவரை சார்ஜ் செய்வார்களா?

வக்கீல் : முதல்வர் அவ்வழி போவதால் அந்த வழி முக்கியமாகும்.

தாயார் : யார் செய்வது என்பது கேள்வி. என்ன செய்கிறார் என்பது கேள்வியில்லை. பாவம், புண்ணியம் கர்மத்தைவிடச் சிறிய கருத்துகள். கர்மம் (force) சக்திக்குரியது. சக்தியைக் கடந்து ஜீவனில் உள்ளவர்க்குக் கர்மமில்லை.

வக்கீல் : அன்னை அப்படிக் கூறுகிறார்.

ஏஜெண்ட் : அப்போ பாவம் என்பது national culture சமூகப் பண்பிற்குரியதா?

தாயார் : சமூகத்திற்குரியது பாவம். சமூகம் மாறினால் பாவ, புண்ணியச் சட்டங்கள் மாறும். அன்னை பக்தர் forceஐ விட்டகன்று ஜீவனிலிருந்தால், அல்லது ஒருவர் அப்படியிருந்தால், அவர் செய்யும் காரியங்கள் புண்ணியமானவை. அவர் கையால் செய்வதாலேயே அவை புண்ணியமாக மாறிவிடும். நம் நிலை உயர்ந்தால், அக்காரியங்களைச் செய்யும் சந்தர்ப்பம் நமக்கு வாராது. வந்து அவற்றைச் செய்தால் தவறாகாது.

வக்கீல் : இதற்கு மேல் விவரங்கள் உள்ளனவா?

தாயார் : உலகம் பாவம் என்றுணரும் காரியத்தை ஜீவனில் வாழ்பவர் செய்ய நேர்ந்து செய்தால், அன்றுமுதல் அச்செயல் கொஞ்சம் கொஞ்சமாக உலகுக்குப் பாவமில்லை என மாறும்.

ஏஜெண்ட் : கேட்கவே நன்றாக இருக்கிறது. அவர்களிருவரும் போனபின், தாயார், பெண்ணிடம் முடிவான கருத்தைச் சொல்லுகிறார்.

தாயார் : சிறு பெண் என்பதால் நான் சொல்லப் பிரியப்படவில்லை. நீ கேட்டுக்கொண்ட வகை நன்றாக

இருந்தது. அன்பர் வாழ்விலிருந்து அன்னைக்கு மாறும்பொழுது - சக்தியினின்று ஜீவனுக்கு வரும்பொழுது - பாவம், புண்ணியமாவதைக் காணலாம். மாறும் தருணம் மனநிலையை அறிந்தால் அதுவே பாவத்தைப் புண்ணியமாக்கும் எல்லை.

பெண் : எனக்குக் காட்டமுடியுமா?

தாயார் : பாசம், பிரியம், நல்லது, கெட்டது, மனச்சாட்சி ஆகியவற்றைக் கடந்தபின் தெரியும் எல்லை அது. பாசம் தவற்றை, சரி' எனப் பேசச் சொல்லும். வேண்டியவர் செய்யும் கெட்டது நல்லதாகும். அங்கெல்லாம் மனுநீதி சோழன்போல இருந்தால் எல்லைக்கோடு தெரியும்.

பிரின்சிபால் மகன் வந்து தாயாரைப் பார்த்து புத்தகச் சேவையைப் பற்றிய விவரங்கள், எந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பனவற்றை அறிந்துகொண்டு போனான். ஓராண்டில் 1000 புத்தகங்கள் விற்க முடியுமா என நினைத்தான். 49ஆம் நாள் அவனும், அவன் நண்பர்களும் 1000 பிரதிகள் விற்றுமுடித்தனர். அதே காலத்தில் 28 இலட்சமிருந்த அவன் தொழில் 8 கோடியாயிற்று. அவனால் நம்பமுடியவில்லை என்பதுடன், சமாளிக்கவும் முடியவில்லை. அத்துடன் அவன் அன்னையை அடியோடு மறந்துவிட்டான். தாயாருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது. "நீங்களே எனக்காகப் பிரார்த்தனை செய்தால் போதும்'' என்று தாயாரிடம் கூறிவிட்டான். மகன் அன்னையை மறந்தாலும் தொழில் அபரிமிதமாகப் பெருகியதால் பிரின்சிபால் அன்னையை மனதால் இறுகப் பிடித்துக்கொண்டார். பெண் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். தானும் தன் படிப்பில் அக்கறை செலுத்தவேண்டும் என்பது நடைமுறைக்கு வரவில்லை. இருப்பினும் பொதுவாக அவளுக்கு மார்க் சற்று அதிகமாக வருகிறது. ஒரு பாடத்தில் வகுப்புப் பரீட்சையில் முதலாவதாக நின்றாள். ஒரு நாள் பெண்ணும் தாயாரும் பேசுகிறார்கள்.

பெண் : அம்மா, பாக்டரி எப்படியிருக்கிறது?

தாயார் : அப்பாவோ, பையனோ, என்னிடம் எதுவும் சொல்வதில்லை.

பெண் : எதுவும் சொல்லவில்லை என்றால் எல்லாம் நன்றாக நடப்பதாக அர்த்தமா?

தாயார் : அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். சரியாக இருந்தால் இருவரும் ஆடுவார்கள்.

பெண் : சரியில்லை என நினைக்கிறீர்களா?

தாயார் : ஆம்.

பெண் : ஏன்?

தாயார் : இருவர் முகமும் வாடியிருக்கிறது.

பெண் : பார்ட்னர் வந்து நாளாகிறது.

தாயார் : அவராவது அன்னையை ஏற்பார். இவர்கள் ஏற்கமாட்டார்கள். அவருடைய மைத்துனர் தம் ஊருக்குப் போய் தியான மையத்தில் தீவிரமாக இருப்பதாகவும், அவர் குடும்பம் துரிதமாக முன்னேறுவதாகவும் அவர்கள் உறவினர்மூலம் செய்தி.

பெண் : நான் எவ்வளவு முயன்றாலும் இரண்டொரு நாளில் முயற்சி முடிகிறது.

தாயார் : உனக்குப் படிப்பில் ஆர்வமில்லை. பட்டம் எடுப்பதிலும், காலேஜ் போவதிலும் ஆர்வமுண்டு. உண்மையான ஆர்வம் பலிக்கும்.

பெண் : நாங்கள் மூவரும் ஏன் இப்படியிருக்கிறோம்?

தாயார் : முன்னோர்போல் நீங்கள் இருக்கிறீர்கள்.

பெண் : தாத்தா, மாமா, எவரும் எதையும் சாதித்ததில்லை. எந்த இலட்சியத்திற்காகவும் எவரும் முயன்றதில்லை. ஆனால் எல்லோரும் அப்படித்தானிருக்கிறார்கள்.

தாயார் : சாதிப்பது வேறு, மனம் நம்புவது வேறு. சுயநலம், பரநலம், பாசம், கடமை, திறமை, உழைப்பு, நேர்மை, எனப் பல இலட்சியங்கள் உண்டு. நம் முன்னோர் எவரும் எதையும் பாராட்டியதில்லை. எப்படிச் சாதிக்க முடியும்?

பெண் : பரம்பரையாகச் சாதித்தவருக்குப் பலன் உண்டா?

தாயார் : பண்பு values என்பதற்கு அர்த்தம் உண்டு. நம் குடும்பத்தில் எது values?

பெண் : எப்பொழுதும் பிறரை மட்டம் தட்டிப் பேசுவது எல்லோரும் செய்வது?

தாயார் : ஏன்?

பெண் : சுபாவம்.

தாயார் : சுபாவம் எப்படி வந்தது?

பெண் : அண்ணனுக்கு யாராவது, ஏதாவது சொல்லி விடப் போகிறார்கள் என முந்திக்கொண்டு அவர்களை மட்டமாகப் பேசும் மனம் உண்டு.

தாயார் : நம் குறையைப் பிறர் மேல் ஏற்றிப் பேசுவான் பெரியவன்.

பெண் : ஏன் நம் குடும்பம் குறையுடையதாக இருக்கிறது?

தாயார் : வறுமை.

பெண் : வறுமையிருந்தால் குறையிருப்பது அவசியமா?

தாயார் : வறுமையைவிட்டு வெளிவர முயலாவிட்டால் குறை எழும்.

பெண் : எந்த நேரமும் எப்படியாவது காசு சேர்க்க முனைகிறார்களே.

தாயார் : எந்த முறையில்?

பெண் : எல்லாம் தவறான முறையே தோன்றும்.

தாயார் : குறையிருக்கலாம். குறையை வலியுறுத்துபவனுக்கு வழியில்லை.

பெண் : நமக்குப் பாக்டரி எப்படி வந்தது?

தாயார் : அருள், குறையை மீறிச் செயல்படும். நாம் அருளை மீறிக் குறையை வலியுறுத்தினால் குறை வெல்லும், அருள் தோற்கும்.

பெண் : அண்ணாவால் எவரும் சந்தோஷப்படுவதைப் பார்க்க முடியாது.

தாயார் : சந்தோஷம் அதிர்ஷ்டம்.

பெண் : நீங்கள் வெளியே போயிருந்தபொழுது பிரின்சிபாலும், மற்றொருவரும் வந்தனர். உடன் வந்தவர் சர்க்கார் ஆபீசராம். 10 இலட்சத்திற்கு மேல் கடனாகிவிட்டதாம். உங்களைச் சந்திக்க வந்தனர். நான் கடன்' என்ற கட்டுரையைப் படிக்கச் சொன்னேன். தாம் படித்துவிட்டதாகவும், கடன் குறையவில்லை எனவும் கூறினார். மீண்டும் வருவதாகக் கூறினார்.

மாலையில் அவர்களிருவரும் மீண்டும் வந்தனர். தாயார் பிரின்சிபாலுடன் முதலில் தனித்துப் பேசினார்.



book | by Dr. Radut