Skip to Content

பகுதி 9

வேலைக்காரி: ஒரு நாள் நீங்க பேசிக்கொண்டிருந்தபொழுது சமர்ப்பணம் பெரியது என்று கூறினீர்கள். அதனால் நானும் அதைச் செய்து பார்க்க ஆசைப்பட்டேன்.

அவள் கணவர்: சமர்ப்பணம் என்றால் என்ன?

வேலைக்காரி: முதலாளி சொல்லியது, இந்த சமர்ப்பணத்தால்தான்.

தாயார் : என்ன செய்தாய்?

வேலைக்காரி: தோப்பு நினைவு வரும்பொழுதெல்லாம் அம்மாகிட்டே சொன்னேன்.

தாயார் : அதைத் தொடர்ந்தால், தோப்பு உன்னிடம் வந்துவிடும்.

வேலைக்காரி: அதைச் சொல்லத்தான் வந்தேன். அவள் கணவர் : விஷயத்தைச் சொல்லாமல் பேசுகிறாயே.

தாயார் : என்ன நடந்தது?

வேலைக்காரி: முதலாளி எங்க வீட்டுக்காரரிடம் தோப்பை நீயே எடுத்துக்கொள். ஒரு விலை கட்டி பணத்தைக் கொஞ்சம், கொஞ்சமாகக் கொடு என்றார்.

அவள் கணவர்: அம்மா, நீங்க எப்படிச் சொன்னீங்க தோப்பு வரும் என்று?

தாயார் : மதர் சக்திவாய்ந்த தெய்வம். அவர்கள் பேரைச் சொன்னால் எதுவும் பலிக்கும்.

அவள் கணவர்: இது நம்பமுடியாதது. எங்க முதலாளி அப்படியெல்லாம் செய்கிறவர் இல்லை. நான் சீக்கிரம் விலையைக் கொடுத்துவிடுவேன்.

வேலைக்காரி: முதலாளி விலையைக் கேட்கவில்லை, அம்மா. ஒப்புக்கு விலை என்று ஒரு தொகையைக் கூறுகிறார். அந்த விலைக்கெல்லாம் இந்த தோப்பு வாராது. தோப்புன்னு வந்தபிறகு வேலை தலைக்குமேலே இருக்கிறது. இருந்தாலும் நான் என் தங்கையை என் வீட்டில் விட்டுவிட்டு அம்மா வீட்டில் நானே செய்கிறேன். வீட்டில் இந்தச் செய்தி சம்பந்தப்பட்டவர், படாதவர், அனைவருக்கும் போய் அவர்களை ஆச்சரியத்தில் திளைக்க வைத்தது. அதனால் எவருக்கும் நம்பிக்கை வரவில்லை. ஆச்சரியம் வந்தது. மாலையில் வீட்டார் கூடினார்கள்.

பெண் : நானும் சமர்ப்பணம் செய்கிறேன், அம்மா.

தாயார் : அது நல்லது. நீ படிக்கிறேன், முதல் கிளாஸ் வாங்கறேன் என்றாயே அது நல்லது.

பெண் : சமர்ப்பணம் சுலபம்.

தாயார் : சுலபத்திற்காக ஒன்றைப் பின்பற்றினால் பலன், சுலப'மாக வரும். பார்க்கப்போனால் படிப்பது சுலபம். சமர்ப்பணம் சுலபமன்று.

பெண் : வேலைக்காரி செய்வதை நான் செய்யக்கூடாதா?

சிறியவன் : அவளுக்கு மூடநம்பிக்கை, எதையும் எளிதில் நம்புவாள்.

தாயார் : அப்படியெல்லாம் அன்னையை நம்பமுடியாது.

கணவர் : ஏதாவது விஷயம் என்றில்லாமல் அன்னையை நினைக்கவும் முடியாது.

பெரியவன் : அம்மா சொல்றாங்க என்று நானும் செய்து பார்த்தேன். வரமாட்டேங்கிறது.

கணவர் : அதற்கு பூர்வஜென்மப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

பெண் : சமர்ப்பணம் என்றால் மதர் பேரைச் சொல்வதுதானே.

தாயார் : அதுவும் சமர்ப்பணம்தான்.

பெண் : பின் எது சமர்ப்பணம்?

தாயார் : வேலையைத் துவங்குமுன் வேலையை அன்னைக்குச் சமர்ப்பிப்பது சமர்ப்பணம்.

சிறியவன் : அது கஷ்டம். நீ செய்தால் பெரிய மாப்பிள்ளை வருவார்.

கணவர் : அது உண்மையா?

தாயார் : நாம் எதைச் சமர்ப்பணம் செய்தாலும், மனத்தில் எது இருக்கிறதோ அதுவே பலிக்கும்.

பெண் : நான் கல்யாணத்தை நினைக்கவில்லை.

பெரியவன் : நீ நினைக்காவிட்டால், உன் மனம் நினைக்கும்.

சிறியவன் : வேலைக்காரிக்கு எப்படிப் பலித்தது?

தாயார் : அவர்கள் இந்தியர்கள். மனம் நமது படிப்பாலும், நகர வாழ்வாலும் பாழாகப் போய்விட்டது. அவள் மனம் பாழாகவில்லை. இங்கு ஆயா வேலை செய்தவள் பெண் படித்துவிட்டு அமெரிக்காவில் கல்யாணம் செய்துகொள்ளவில்லையா?

கணவர் : அது எவரும் நம்பமுடியாதது. 230/- ரூபாய் சம்பளம் 2300 ரூபாயாகி, இலட்ச ரூபாய் சர்க்கார் மான்யம் வந்து, அமெரிக்காவில் மாப்பிள்ளை, பார்த்தவரே நம்பமாட்டார்கள். நம்பிக்கைப் பலன் தருகிறது. நமக்கெல்லாம் நம்பிக்கையே வரமாட்டேன் என்கிறது.

தாயார் : பெறுவது ஒரு பக்கம். எதிராகப் போனால் தாங்காது.

கணவர் : அன்னை தண்டிப்பதில்லை என்பாயே.

தாயார் : அன்னைக்குத் தண்டனையே தெரியாது. எட்டு வகுப்புப் படிக்க முடியாதவனை ஆதரவால் கல்லூரிக்கு அனுப்பினால், எனக்கு உங்கள் ஆதரவு தேவையில்லை என்றால் என்ன ஆகும்?

கணவர் : எல்லாம் போகும். எல்லோரும் சிரிக்கும்படியாகும்.

தாயார் : நமக்குத் தகுதியில்லாத பெரிய விஷயத்தை மதர் கொடுத்தபின் மதர் வேண்டாம் என எட்டிப்போனால், அடி தாங்காது. அது அன்னை கொடுக்கும் தண்டனையில்லை. அவர்களே பெறும் தண்டனை.

கணவர் : புரியலை.

தாயார் : பக்கத்து வீட்டு பேங்க் மானேஜர் ஒரு பெரிய நல்லதைச் செய்து பிறகு பின்வாங்கினார். 10 மாதம் ஆஸ்பத்திரியிலிருந்தார். வேலை போய்விட்டு வந்தது.

கணவர் : அவர் என்ன செய்தார்?

தாயார் : அன்பரை அழைத்து உதவி செய்து, பிறகு பின்வாங்கியது அவர் செய்தது. 25 இலட்சம் 11/4 கோடியானபின் இந்த பவானிக் கம்பெனிக்காரர் அன்னை வேண்டாம் என்று விலகினார்.

கணவர் : அவர்கட்கு இருந்த பிஸினசும் போய்விட்டதே.

தாயார் : அன்னையிடம் பெறுபவர், அன்னைக்கு எதிராகப் போகாதது குறைவு. இல்லை என்று கூறலாம்.

கணவர் : நினைத்துப் பார்த்தால், எல்லாக் கேஸும் அப்படியே இருக்கிறது. ஏன் அது?

தாயார் : தான்' என்ற அகங்காரம். அது தலைதூக்கினால் அப்படித்தான். அது இல்லாதவரில்லை. சட்டம், எவ்வளவு அதிகமாகப் பெறுகிறோமோ அவ்வளவு அதிகமாக இது எழும் என்பது.

சிறியவன் : அப்படியானால், அன்னையிடமிருந்து பெறுவது பயனில்லையா?

கணவர் : கொடுப்பது அன்னை, பெறுவது நாம். அகந்தையைக் களைந்தால் பெறலாம், நிலைக்கும். நம்ம பார்ட்னர் போலிருக்கவேண்டும்.

தாயார் : அவர் அடக்கமானவர். அவர் பெறுவதற்கு அளவில்லை.

கணவர் : இந்தக் கம்பெனி அவருக்கே பெரியது.

தாயார் : இந்தக் கம்பெனி உங்களால் அவருக்கு வந்தது என்று சொல்ல என்ன அடக்கம் வேண்டும்!

கணவர் : நம்மால் அப்படியிருக்க முடியாது.

சிறியவன் : நீங்கதான் பார்ட்னருக்குக் குரு.

பெரியவன் : பார்ட்னர்தான் நமக்கெல்லாம் குரு. அவர் அம்மாவை எப்படி நினைக்கிறார். நாம் அதுபோல் அம்மாவை நினைக்க முடியுமா?

பெண் : நமக்கு அம்மா.

கணவர் : அம்மா என்றால் சாதம் போடுவார்கள். குரு என்றால் அருள் செய்வார்கள்.

தாயார் : என்னைப் பற்றிப் பேசுவதைவிட அன்னையைப் பற்றிப் பேசவேண்டும்.

சிறியவன் : அன்னை தண்டிப்பதில்லை என்றும் சொல்கிறீர்கள். அடி பெரியதாக விழும் என்றும் கூறுகிறீர்கள், புரியலை.

கணவர் : பாதுகாப்பை விட்டு விலகி அடிபட்டால் அது எப்படித் தண்டனையாகும்?

சிறியவன் : அன்னை பாதுகாக்கமாட்டார்களா?

தாயார் : நீ அன்னையை விலக்காதவரை, அவர் விலகமாட்டார். மெனக்கெட்டு விலக்கினால் அன்னை அங்கிருக்க மாட்டார்.

பெரியவன் : எந்த நிலையிலும் அன்னை பாதுகாப்புண்டு என்று சொல்கிறீர்களே.

தாயார் : நாம் செய்த சேவை, ஒரு காலத்திலிருந்த நம்பிக்கை, கொடுத்த காணிக்கை, அதனளவில் ஆங்காங்கு செயல்படும்.

சிறியவன் : உதாரணமாகச் சொன்னால் தேவலை.

தாயார் : தண்ணீரில் மூழ்கியவர் அன்னையை மறந்தபொழுது, உள்ளிருந்து குரல் எழுந்து உயிர் பிழைத்தார். ஆரம்ப நாளில் அவர் செய்த சமர்ப்பணம், அவர் மறந்தாலும், அது மறக்கவில்லை.

சிறியவன் : எனக்குப் புரியும் உதாரணம் வேண்டும்.

தாயார் : 30 வருஷத்திற்குமுன் தொலைந்த புத்தகம் திரும்ப வந்தது தெரியுமா? புத்தகத்தைப் பிரியமாக வைத்திருந்ததால் திரும்ப வந்தது.

பெரியவன் : ஏன் தொலைந்தது?

தாயார் : அவ்வளவு பிரியமாகப் படித்த புத்தகத்தை அர்த்தமற்றவருக்கு கடன் கொடுப்பது தவறு. அந்த மடத்தனத்தால் தொலைந்தது. பொங்கலில் புது நெய் விட்டால் மணமாக இருக்கும். கல்லிருந்தால் பல்லை உடைக்கும். உள்ளதற்குப் பலன்.

கணவர் : அவன் என்ன கேட்கிறான் எனில், "நான் அன்னையை ஏற்கிறேன். அன்னை என்னை நல்லபடியாக மட்டும் வைத்திருக்க மாட்டாரா?'' எனக் கேட்கிறான்.

தாயார் : ஏற்பது 5 வயதுக் குழந்தை தாயாரை ஏற்பதுபோல் ஏற்றால் அன்னை அதுபோல் காப்பாற்றுவார்.

சிறியவன் : எனக்கு 5 வயதில்லையே.

தாயார் : எந்தக் கட்டத்தில் நீ விலகுகிறாயோ, அங்கு அன்னை எப்படிப் பாதுகாப்பார்?

சிறியவன் : பாதுகாப்பில்லை எனச் சொல்லுங்கள்.

பெண் : ஹாஸ்டலுக்குப் போன பையன் சினிமாவுக்கு அடிக்கடிப் போய் பெயிலானால், பணம் அனுப்பும் தகப்பனார் அவனைக் காப்பாற்ற முடியுமா?

சிறியவன் : அன்னை பூரணமாகக் காப்பாற்றமாட்டாரா? தாயார் : அவன் சொல்வதும் சரி. பூரணமாகக் காப்பாற்றுவது இல்லை.

பெண் : ஏம்மா அப்படிச் சொல்கிறீர்கள்? ஓடிப்போன பையனை எத்தனை வகையாகக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டு வந்தார்?

தாயார் : குறிப்பிட்ட விஷயமாகப் பேசினால் விளங்கும்.

பெரியவன் : புரியவில்லையா? அவன், "நான் உங்கள் பையன். நான் என்ன கொட்டமடித்தாலும், உங்கள் பையன் என்று அன்னை காப்பாற்றுவாரா?'' எனக் கேட்கிறான்.

தாயார் : அதெல்லாம் பார்த்திருக்கிறீர்கள், சொல்லவேண்டாம். அதையும் மனிதன் கடந்து போவானில்லையா?

சிறியவன் : எங்கே போனாலும், என்ன செய்தாலும், பாதுகாப்புண்டு என நான் நினைத்தேன்.

தாயார் : ஆத்மா அன்னையை அடைந்திருந்தால், அதுவும் உண்டு. அமெரிக்காவில் கிடைப்பவை நம்மூரில் இன்று கிடைக்கிறது என்றால், பணமில்லாமல் தருவார்களா? என்றால்...

பெரியவன் : தம்பி என்ன வேணுங்கிறான், "நான் அண்ணனைக் கிண்டல் பண்ணுவேன். அன்னை என்னைக் காப்பாரா?'' என்கிறான்.

சிறியவன் : அது நீ.

தாயார் : மனிதன் அன்னையைக் கண்டவுடன், தன் எதிரிகளை அழிக்க, அகங்காரத்தை வளர்க்க, கொட்டமடிக்க அன்னையின் துணை தேடுவான். அது கிடைக்காது.

கணவர் : அப்படியெல்லாம் நடந்து அடிபட்டுவிட்டு, "ஏன் காப்பாற்றவில்லை?'' எனக் கேட்பார்கள்.

தாயார் : அன்னை அதற்கு உடன் வரமாட்டார். அந்த நினைப்பு போகும்வரை அன்னை வாழ்வினுள் நுழையமாட்டார்.

பெரியவன் : நாம் relics வாங்கி வைக்கக்கூடாதா?

தாயார் : Relics பகவான் உடலின் பகுதிகள். முடி, நகம் போன்றவை. நம் வீடு சுத்தமில்லை. இங்கு வைக்கக்கூடாது. மையத்தில் வைக்கலாம்.

சிறியவன் : சுத்தமாகவே இருக்கிறது.

தாயார் : சூழல் சுத்தமாக இருக்கவேண்டும். நாளைக்கு உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். அது சூழலைக் கறுப்பாக்கும். பலன் எதிராக இருக்கும். சூன்யம் வைத்தது போலிருக்கும்.

கணவர் : சூன்யத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை. பொதுவாக சாமியார்களுக்கு சூன்யம் வைக்கத் தெரியும். அதனால் அவர்களைக் கண்டு பயப்படுவார்கள்.

தாயார் : பெரிய ஆன்மீக மடங்களில் ஆரம்பித்து நாளானால் ஆன்மீகத்திற்கு எதிரானவை ஏற்படும். அதுபோல் ஏற்படுவதில் சூன்யம் ஒன்று. ஒரு பெரிய மடத்தைப் பற்றி அன்னை, "அவர்கள் வைக்கும் சூன்யத்தை Supreme பிரம்மா மட்டுமே எடுக்க முடியும்'' என்கிறார்கள். அன்னையே அதற்குப் பலியானரே. நாமெல்லாம் எங்கே தப்புவது?

கணவர் : எப்படித் தப்புவது?

தாயார் : இடம், பொருள், ஏவல் தெரிந்து பழகாவிட்டால் ஆபத்துதான். கெட்டவனிடமிருந்து தப்பிக்கலாம். நல்லவனாக நடிப்பவனை நம்பி மோசம் போகாமலிருக்க பாகுபாடு வேண்டும். இடம் பெரியது என ஏமாறக்கூடாது. நாம் ஆரம்ப நிலையிலிருப்பதால், நமக்குப் பெரிய விஷயங்களெல்லாம் கிடையா.

கணவர் : இந்த மையத்தை ஆரம்பித்தவர் வாழ்வில் அப்படியொன்றும் தெரியவில்லையே.

தாயார் : அவர் இன்று வெறும் பென்ஷனுடனிருக்க வேண்டியவர்.

கணவர் : என்ன, பென்ஷன் 3 அல்லது 4 ஆயிரம் வரும். அவர் வீட்டில் தற்சமயம் 20 ஆயிரத்திற்குக் குறையாமல் செலவாகிறது. அதற்கப்புறம் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை.

தாயார் : அவர்கள் முயன்று பெறுபவரில்லை. தானே வந்தது போதும் என்பவர்கள் அவர்கள். மனம் சிறியது. முயற்சி குறுகியது.

கணவர் : இந்த ஜவுளிக் கடைக்காரர் அப்படியேயிருக்கிறார்.

தாயார் : அவர் வந்த புதிதில் மிகவும் சிறிய கடை.

கணவர் : இப்பொழுது கடை பெரியதாகிவிட்டது. அதன்பிறகு வளரவில்லை.

தாயார் : கடன் கொடுத்து திவாலானார். தெளிந்து எழுந்தபிறகு மீண்டும் கடன் கொடுக்கிறார். அவர் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி சரிந்தார். மீண்டும் அதையே செய்கிறார். ஒரு தவற்றை ஒரு முறை மீண்டும் செய்தால் பிழைக்க முடியாது. அவர் எல்லாவற்றையும் மீண்டும், மீண்டும் செய்கிறார். இவர் இன்றும் கடை நடத்துவது ஆச்சரியம்.

கணவர் : இவர்களெல்லாம் அன்னையில்லாவிட்டால் என்றோ அழிந்திருப்பார்கள்.

தாயார் : உருப்படுபவனுக்குள்ள வழிகள் சில, உருப்படாதவனுக்கு உள்ளவை சில. மனிதன் இரண்டாம் பட்டியலை கவனமாகக் கடைபிடிப்பான். வாழ்வில் எவர் எழுந்திருக்க முடியாதோ, எவர் மனிதனாய் வாழ முடியாதோ, எவரெல்லாம் தலைதூக்க முடியாதோ, அவர்கள் அன்னையிடம் வந்து உள்ளூர் பெரிய மனிதனாக வாழ்கிறார்கள். நாம் அவர்களைப் பின்பற்றக் கூடாது. அவர்கள் பாஷையை நாம் பேசவும் கூடாது.

கணவர் : நாம் தவற்றையே பேசுகிறோம். நல்லதைப் பேசக் கூடாதோ?

பெரியவன் : ஒருவருடன் பேசினால் அவர் வியாதி வரும். Subtle infection உண்டு என்று ஒரு சமயம் சொன்னீர்கள்.

தாயார் : நல்லதோ, கெட்டதோ, சூட்சுமமாகத் தொற்றி வரும். நாம் நல்லதைப் பெறலாம். உன் புரொபசர் 50 புத்தகங்கள் எழுதினால், உனக்கும் அது பலிக்கும்.

சிறியவன் : பலிக்குமா?

தாயார் : பலிக்கும். நம்மிடம் பொதுவான எந்தக் குறையுமிருக்கக் கூடாது.

பெரியவன் : நம்ம வீட்டில் குறையேயில்லை.

தாயார் : குறை உனக்குக் குறையாகத் தெரியவேயில்லை என்றால், குறையை நிறையாகக் கருதுபவன் நீ எனப் பொருள்.

பெரியவன் : நான் பெரிய மனிதன். கணவர் : பெரிய மனிதனாக வேண்டும்.

தாயார் : ஏதாவது பெரிய இலட்சியமில்லாமல் பெரிய மனிதனாக முடியாது.

பெரியவன் : எனக்கு என்ன பெரிய இலட்சியமிருக்கிறது. நிறைய சம்பாதிக்க வேண்டும், வேறொன்றுமில்லை.

கணவர் : அதுவும் இலட்சியம்தானே, நேர்மையாகச் சம்பாதிப்பது இலட்சியம்.

சிறியவன் : நேர்மையாகச் சம்பாதிப்பது என்பது முரண்பாடு, உடன்பாடில்லை.

பெரியவன் : முரண்பாட்டை உடன்பாடாக்குவதே யோகம். நேர்மையாகப் பணத்தை அழிக்கலாம், சம்பாதிக்க முடியாது. இதுவரை யாராவது செய்திருக்கிறார்களா?

தாயார் : சம்பாதிப்பவர்கள் எல்லாம் நேர்மையில்லாமல் சம்பாதிப்பதில்லை. நேர்மை என்பது நியாயம். அநியாயமாகச் சம்பாதிப்பவனும் ஒரு சேவை செய்வான், அளவுகடந்து உழைப்பான், அவனால் உலகுக்குப் பலனிருக்கும். அது நேர்மையானது என்று சொல்ல முடியாது. இருந்தாலும்,

  • சம்பாத்தியம் உள்ள இடத்தில் உழைப்பு, சேவை இல்லாமலிருக்காது.அவற்றை நேர்மை எனக் கருதலாம்.
  • சம்பாதிக்க முடியாதவன் உழைப்பு, திறமையற்றது. அவனால் எப்பொழுதும் சம்பாதிக்க முடியாது.
  • திறமையில்லாதவன் திறமைசாலியைக் கண்டுபொறாமைப்பட நேர்மையை ஒரு சாக்காக வைத்துக்கொள்கிறான். அதில் எந்த விஷயமோ, சாரமோ, உண்மையோ இல்லை.

  • முடியாதவன் முடிந்தவனைக் கண்டு பொறாமைப்பட நேர்மையை ஒரு விஷயமாகப் பேசுவான்.

மனிதன் பொறாமைப்பட அசிங்கப்படவேண்டும். அதற்கு அசிங்கப்படுவதில்லை. விஷயம் அதுவே.

கணவர் : அன்னையிடம் ஏராளமான வாய்ப்புகளுண்டு. ஏன் சமூகத்திலும் ஏராளமான வாய்ப்புகளுண்டு. அத்துடன் நமக்கு உருப்படாத குணங்களும் உண்டு. அதுவே இந்தியாவை ஏழ்மை நாடாக்கியது.

பெரியவன் : எதை அப்பா சொல்கிறீர்கள்?

கணவர் : போன தலைமுறையில் சொத்து இருந்தது. இப்போ சாப்பாட்டிற்கில்லை. வேலை செய்வதில்லை, வருமானமில்லை. உழைத்துச் சம்பாதிப்பவர்களைப் பார்த்து கேலி செய்வது நம் பழக்கம். அன்றிருந்த செல்வத்தை நினைத்து இன்று பணக்காரன் என நினைப்பவர் ஏராளம்.

பெரியவன் : இந்தச் செட்டியாரோடு பேசிப் பாருங்கள். எவரும் நிகரில்லை எனப் பேசுவார். சாப்பாட்டிற்கில்லாமல், சாப்பாடு கிடைத்த இடத்தில் சாப்பிடுகிறார்.

கணவர் : ஒரு ரிஷிச் சந்ததியார் தங்களைப் பெரிய ஆத்மா என நினைக்கத் தவறுவதில்லை. இவன் இன்று செய்யாத பாதகமில்லை. குடியிலிருந்து, புகையிலிருந்து, எல்லாப் பாவங்களையும் விரும்பிச் செய்கிறான். வீட்டிற்குச் சாப்பிடக் கூப்பிட்டால், "நான் அந்த ஆசீர்வாதத்தை மறுப்பதேயில்லை'' என்பான். பழகுகிறானே, பட்டினி கிடக்கிறானே, ஒரு வேளை சாப்பாடு போடுவோம் என்றால், "நான் உன் வீட்டில் சாப்பிட்டால் எனக்குக் குறைவு. உனக்கு ஆசீர்வாதம், அதிர்ஷ்டம், அதற்காகச் சாப்பிட ஒத்துக்கொண்டேன்'' என்பான்.

தாயார் : யார் தன்னை உயர்வாக நினைக்கவில்லை. கடைசி நிலையில் உள்ளவரும் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தங்களை உயர்வாக நினைக்கத் தவறுவதில்லை. உயர்வாக நினைத்தால் உள்ளதும் போகும். அன்னையிடம் பெறுவதைத் தடை செய்வதில் தலைசிறந்தது இந்த உயர்ந்த மனப்பான்மை. அன்னைக்குச் சக்தி அதிகம் என்பதை நாம் எத்தனையோ வகைகளில் பார்க்கிறோம். ஆனால் புரிந்துகொள்வதில்லை.

கணவர் : எதைச் சொல்கிறாய்?

தாயார் : எந்த B.P. இருக்கும்பொழுது எழுந்து நிற்கமுடியாதோ, அப்பொழுது நடந்து போகிறார்கள், சிரமம் தெரிவதில்லை. டாக்டரால் நம்பமுடிவதில்லை. ஒருவருக்கு T.B. பல ஆண்டுகளாக இருந்து முற்றிவிட்டது. ஆசிரமத்திலிருந்தார். இருமியதுகூட இல்லை. தம் ஊருக்குப் போய் 1 வருஷம் கழித்து இருமலை டாக்டரிடம் காட்டியபொழுது டாக்டரால் நம்பமுடியவில்லை, அவருக்குப் புரியவில்லை. கொள்ளைக்காரன் பெற்ற பணத்தைத் தானே திரும்பித் தருவது அன்னை சக்தியால். எந்த இடத்தில் எல்லாம் திருடு போகுமோ, அங்கு 10 மாதம் காவலில்லாமல் எதுவும் திருடு போகவில்லை. அந்த 10 மாதமும் அன்னைக்கு அவ்விடத்தைப் பற்றி அடிக்கடி செய்தி போயிற்று.

கணவர் : நீ சொல்வதைப் பார்த்தால் சர்க்கரை சாப்பிட்டால் டயாபெட்டிக்ஸ் பேஷண்ட்டைப் பாதிக்காது என்பது போலிருக்கிறது.

தாயார் : ஆமாம். நான் சர்க்கரையைப் பார்த்ததில்லை. அதுபோல் ஏராளமானவற்றைப் பார்த்திருக்கிறேன். தண்ணீர் சாதம் மட்டும் சாப்பிடக்கூடியவர், மாமிசம் சாப்பிடுகிறார் என்பதும், எழுதாத பரீட்சைக்கு M.A.இல் II class பாஸ் போடுவதும் அன்னையின் திருவிளையாடல். பொதுவாக நம்பமுடியாதது, இயற்கைக்கு மாறானது, இதுவரை நடக்காதது, ஆகியவை அன்னை சக்தியால் நடைபெறுகின்றன. நமக்குப் பலன் தெரிகிறது. பலன், பலனளவிலிருக்கும். எப்படி இந்தப் பலன் வருகிறது? ஏன் வருகிறது? அப்பலனைத் தரும் சக்தி எது? என்றறிபவருக்கு டயாபெட்டிக்ஸ் பேஷண்டிற்கு சர்க்கரை பாதிப்பதில்லை என்று புரியும்.

கணவர் : எல்லாம் புதிராக இருக்கின்றது.

தாயார் : அடாவடிக்காரன் சுபாவம் அடாவடி. சுபாவத்தைத் தாண்டி அவனுக்கு ஆத்மா உண்டு. ஆத்மாவுக்கு நியாயம் உண்டு. எதனாலும் பாதிக்கப்படாமல் செயல்படும் திறனும் உண்டு. அன்னை சக்தி அன்னையின் சுபாவத்திலிருந்து எழவில்லை. அன்னை சக்தி ஆத்ம சக்தி. நாம் அறிவது மனித சுபாவம், ஊர் சுபாவம், வாழ்வின் சுபாவம், இயற்கையின் சுபாவம். சுபாவத்திலிருந்து செயல்பட்டால், அன்னை செயலுக்குரிய பலனிருக்காது. ஆத்மாவிலிருந்து செயல்பட்டால், அன்னை சக்தி செயல்படும். அது அடுத்தவர் ஆத்மாவைச் செயல்படச் செய்யும், மனிதனுடைய ஆத்மாவைச் செயல்படச் செய்யும், ஊரின் ஆத்மாவை, வாழ்வின் ஆத்மாவை, இயற்கையின் ஆத்மாவைச் செயல்படச் செய்யும். அப்பொழுது,

  • அடாவடிக்காரன் நேர்மையாக நடப்பான்,
  • எழுதாத பரீட்சைக்குப் பாஸ் வரும்,
  • எதையும் ஜீரணம் செய்ய முடியாதவர்க்குப் புலால் ஜீரணமாகும்.
  • அந்த சக்திக்கு, சர்க்கரை, டயாபெட்டிக்ஸ் பேஷண்டைப் பாதிக்காது.

கணவர் : நமக்குப் பயன்படும் உதாரணங்கள் நல்லது. நீ சொல்வனவெல்லாம் எனக்குச் சரியாகப் படுகிறது. ஏன் மக்கள் இப்படிப் புரியாமல் நடக்கிறார்கள்? நாமும் இப்படித்தானா? விபரம் புரிந்தால் நல்லது.

தாயார் : மனிதன் வினோதமானவன். அதன் அம்சங்கள் ஏராளம்.

  1. உணர்வால் செயல்படும்பொழுது தாம் செய்வது தவறு எனத் தெரியாது. அது அறிவுக்குத்தான் தெரியும். பிறருக்குத் தெரியும். பிறர் அதையே செய்யும்பொழுது நமக்குத் தவறு தெரியாது. தம் முதுகு தமக்குத் தெரியவில்லை என்பது இது.
  2. தான் பெற்ற பெரிய பேறு முதல் தெரியும். பிறகு அதை (take it for granted ) வழக்கமாகக் கருதுவான். இன்று 3000 பென்ஷனில் இருக்கவேண்டியவன் மாதம் 75,000 செலவு செய்வது மாறிய நிலை என மனம் உணராது. இது தான் பெற்ற அதிர்ஷ்டம் என அறியமாட்டான்.
  3. தானிழந்த வாய்ப்பை ஏற்றவன் கவர்னராக இருக்கும்பொழுது தாம் கல்லூரிப் பேராசியராக ஓய்வு பெற்றது பெரிய நஷ்டம் என்பது உணர முடிவதில்லை. இருப்பதே யதார்த்தம் என்பவன் மனிதன்.

  1. மலைபோல வந்தாலும் தனக்குரிய அளவில் அதைதான் குறுக்கிக்கொள்வதை மனம் உணராது.
  2. சிறிய வசதிக்கு உலகைப் புரட்டிப் போராடுபவன்,பிரம்மாண்டமான வாய்ப்பைத் தவறவிடுவதை மனதில் கொள்ளமாட்டான்.
  3. தனக்குப் பெருமை வேண்டும் என்பதே குறிக்கோளாகக் கொண்டவன் தன் SSLC படிப்பை அடுத்தவரின் M.A. படிப்பைவிட உயர்ந்ததாகக் கருதுவான்.
  4. 3 ஏக்கர் நிலம் உள்ள பழைய பணக்காரன் 300 ஏக்கர் உள்ளவனை ஏழையாகக் கருதுவான். புதுப் பணம் பணமில்லை.
  5. Ph.D. படித்தவன், பெர்னாட்ஷாவைப் படிக்காதவர் என உள்ளே பெருமிதம் கொள்வான்.
  6. 10 தரம் தவறு செய்து நஷ்டப்பட்டாலும், 11ஆம் தரம் உற்சாகமாக அதையே செய்வான்.
  7. தனக்கு வந்த V.C.Post உடன் உள்ளவர்க்கு அவர் நல்ல குணத்தால் போவதைக் கண்ணால் கண்டாலும், தன் குணக்குறை தனக்கு விளங்காது. அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லிக்கொள்வான்.
  8. 80ஆம் வயதில் 12 மைல் உடனிருப்பவர் ஓடினாலும் 50ஆம் வயதில் தன்னால் 1/2 மைல் நடக்க முடியவில்லை என்பதைப் பழக்கம் என மனம் அறியாது.
  9. நல்ல சகுனம் 400 கண்ணில் பட்டாலும், மனத்தில் படாது.
  10. தன் கடுமை பிறரைப் பாதிப்பது தெரியாது, ரசிப்பான். முக்கியமாக, தான் rational, அறிவுக்குப் பொருத்தமாக நடக்கவில்லை என்று தெரிவதில்லை. பல முறை செய்த தவற்றை அடுத்த முறை செய்யாமலிருக்க முடிவதில்லை.

கணவர் : இதுபோல் நான் நடப்பதைக் கூறுவாயா?

தாயார் : நான் பொதுவாகத்தான் கூறமுடியும். குறிப்பானவற்றை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

கணவர் : இந்த பாக்டரி நமக்குரியதன்று, இது பெரியது, இது நீடிக்க நான் என்ன செய்யவேண்டும் என்று சொன்னால் செய்கிறேன்.

தாயார் : அதற்குரிய பெரிய குணங்களை ஏற்கவேண்டும். அது பிறர் செய்வதில்லை. நாமே செய்வது.

கணவர் : உன்னையே எனக்காகப் பிரார்த்திக்கச் சொன்னதைச் சொல்கிறாயா?

தாயார் : பகவான் ஸ்ரீ அரவிந்தர் செய்ய முயன்றது இதுவரை எவரும் நினைத்தும் பார்க்காதது. அதன் பலனைப் பெறுவது மனிதன். அதற்கு அவன் செய்த கிராக்கி பெரியது. அந்த கிராக்கியின் முக்கிய அம்சம், "தான் செய்ய வேண்டியதை அவரையே செய்யச் சொன்னது''. அன்னை மட்டுமே அதை அறிந்து, உணர்ந்து, போற்றி, விரும்பி, முழுமையாகச் செய்தார். யோகத்தில் பகவானைக் கடந்து சென்றார். பகவான் உடலை நீத்து சூட்சும உலகில் போய் யோகத்தைத் தொடர்ந்து வெற்றி பெற உதவினார். முடிவாக சூட்சும உலகில் பகவானை அனுதினமும் சந்தித்தார். இந்த யோகம் மனிதன் செய்யக்கூடியதன்று என முடிவுக்கு வந்தார். அன்பர்கள் அறியவேண்டியவை,

  1. பகவான் தருவது உலகிலில்லாதது.
  2. அதைப் பெற நம் பங்கைச் செய்ய ஆர்வமாக முன்வரவேண்டும்.
  3. அதைச் செய்யாவிட்டாலும், கொடுப்பவரையே நம் பங்கையும் சேர்த்துச் செய் எனக் கேட்கக் கூடாது.
  4. அப்படிக் கேட்பது, நமக்கு அது பலிக்காது என அறிவிப்பதாகும்.

கணவர் : அதெல்லாமிருக்கட்டும், நானும், பிள்ளைகளும் என்ன செய்தால் நமக்கு வந்த பாக்டரி தொடர்ந்து பலிக்கும்.

தாயார் : இது பெரிய விஷயமன்றோ? அதைப் பெற பெரிய மனது வேண்டும். பெரிய மனம் பெரிய பழக்கங்கள்மூலம், பெருந்தன்மையான பேச்சுமூலம் வெளிப்படும்.

பெரியவன் : நாங்கள் எல்லாம் மட்டமானவர்களா?

தாயார் : அதை உணர்வதே முதற் கட்டம்.

சிறியவன் : எனக்கு நான் மட்டம் எனப் புரியவில்லையே.

பெண் : அது புரிவதே ஆரம்பம்.

பெரியவன் : காலேஜ் ஹாஸ்டல் அடிக்கடி என் நண்பர்கள் அதைக் கூறியிருக்கிறார்கள்.

கணவர் : எது மட்டம், எது உயர்வு என்று எனக்குப் புரியவில்லை.

தாயார் : பார்ட்னர் உயர்வு, பெருந்தன்மையானவர்.

கணவர் : அவர் என்னால்தான் அவருக்குப் பாக்டரி வந்தது என்கிறார்.

பெண் : அதுவே பெருந்தன்மையில்லையா?

பெரியவன் : பார்ட்னர் யார் மனமும் புண்படப் பேசமாட்டார்.

தாயார் : பெருந்தன்மைக்கு அது அவசியம். நாம் அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சிறியவன் : அவர்தான் நாம் அவருக்கு அதிர்ஷ்டம் என்கிறார்.

தாயார் : நம் நிலையை மீறி, நமக்கு இந்த அதிர்ஷ்டத்தை அன்னை கொடுத்திருப்பதை நாம் உணர்ந்து நன்றியறிதலைச் செலுத்தவேண்டும்.

பெரியவன் : நமக்குக் கொடுத்தது பார்ட்னராயிற்றே. அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

தாயார் : அப்படி நடக்கிறோமா?

கணவர் : அவர் நம்மிடம் அப்படி - நன்றியறிதலோடு - நடக்கிறார்.

தாயார் : நாம் அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டும்.

கணவர் : இது முடியுமா?

தாயார் : நடக்காதது நடந்ததால், முடியாதது முடியவேண்டும். சிறியவன் கனவு நினைவிருக்கிறதா? அது பல ஆண்டுகட்குமுன்.

கணவர் : என்ன அது?

சிறியவன் : நம்மை அனைவரும் ஊரைவிட்டு விரட்ட முயல்கின்றனர். நாம் மாட்டிக்கொண்டு விழிக்கிறோம்.

கணவர் : ஆமாம், நினைவு வருகிறது.

தாயார் : அதுவே நமக்கு ஜாதகத்தில் உள்ளது.

கணவர் : அப்படி நடக்கவில்லையே.

பெண் : அப்பா, மதர் அதையும் மாற்றி நமக்கு பாக்டரியைக் கொடுத்துள்ளார்.

கணவர் : நம்ம தரித்திரத்தை மதர் அதிர்ஷ்டமாக்கிவிட்டார். நாம் அதையே பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது என்கிறாயா?

தாயார் : தரித்திரம், அதிர்ஷ்டமாய்விட்டது. நாம் மாறவேண்டும்.

பெரியவன் : போன தரித்திரத்தை நாம் மீண்டும் கூப்பிடக்கூடாது.

சிறியவன் : நம் பேச்சு, பழக்கம், நினைப்பு, அதைக் கூப்பிடுகிறது.

கணவர் : என்ன செய்யவேண்டும் எனப் புரியவில்லையே?

பெண் : அம்மா, நாமெல்லாம் பார்ட்னர்போலப் பெருந்- தன்மையாக இருக்கவேண்டும் என்கிறார்.

கணவர் : அவர் எப்பொழுதும் அமைதியாகப் பேசுவார். நமக்குப் பேச்சு காரமாக வரும்.

தாயார் : காரம் தரித்திரம், அமைதி அதிர்ஷ்டம்.

பெரியவன் : காரம் போனால் சப்'பென்றிருக்கும்.

சிறியவன் : காரம் ருசிப்பதைப்போல் அமைதி ருசிக்க வேண்டும்.

தாயார் : அது சரி. அமைதி ருசித்தால் அதிர்ஷ்டம் வரும்.

பெண் : அந்த மாதிரி அம்மாதான் இருக்கிறார்கள். நாம் அதுபோல்லை.

கணவர் : எங்களை எல்லாம் உன்னைப்போலிருக்கவேண்டும் என்கிறாயா?

தாயார் : அதிர்ஷ்டத்திற்கு ஒரு பழக்கம், தரித்திரத்திற்கு ஒரு பழக்கம்.

 

பெரியவன் : அம்மா அதிர்ஷ்டம், நாங்களெல்லாம் தரித்திரமா?

கணவர் : பிறருக்கு உதவி செய்வது அதிர்ஷ்டம். அதை நாம் செய்கிறோம்.

பெரியவன் : அதுவும் அம்மாவுக்கு ஆகாது. தாயார் : அன்னை அப்படிச் சொல்கிறார்.

பெண் : ஏனம்மா?

தாயார் : ஒரு பெண் தாய்லாந்தில் வேலை செய்தாள். அவர் அமெரிக்கப் பெண். அவளுடைய நுரையீரல் வேலை செய்யவில்லை. 48 மணி நேரத்தில் இறந்துவிடுவாள் என வீட்டிற்குச் செய்தி. தங்கை புறப்பட்டு வந்தாள். விமானப் பிரயாணம் முழுவதும் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தாள். நுரையீரலுக்குப் பதிலாக நுரையீரல் கண்டுபிடிப்பது சிரமம், மாதக்கணக்காகும். அதிர்ஷ்டவசமாக 48 மணி நேரத்திற்குள் பதில் நுரையீரல் கிடைத்தது. புது நுரையீரலை வைத்தார்கள். பெண் பிழைத்துக்கொண்டாள். அன்று முதல் தங்கையைத் தனக்குப் பரம எதிரியாக நடத்துகிறாள். 5 ஆண்டுகள் கழித்து அவளுக்குக் கான்சர் வந்தது. தங்கை மீண்டும் அவளுக்காகப் பிரார்த்திக்க விரும்பினாள். இந்த விஷயத்தில் யோசனை கூறும் நண்பர் இம்முறை அவளைத் தடுத்துவிட்டார். என்றாலும் அவளால் தமக்கைக்காகப் பிரார்த்திக்காமல் இருக்க முடியவில்லை. அடிக்கடி அவர் சொல்லை மீறிப் பிரார்த்திப்பாள். உடனே அக்காள் அவளிடம் சண்டைக்கு வருவாள். இது விலக்கில்லாத விதி.

பெண் : புரியவில்லை. ஏன் உதவி செய்பவருக்கு ஊறு செய்யவேண்டும்?

தாயார் : ஏன் என்பது பிறகு. நடப்பது இது. இதிலிருந்து நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

கணவர் : நாம் உதவி செய்த அனைவரும் நமக்கு எதிராகப் போகவில்லையா. எதிர்வீட்டுப் பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தேன்.

பெரியவன் : அவன்தான் எதிரி.

தாயார் : 140 ரூபாய் சம்பாதித்தவருக்கு 500 ரூபாய் சம்பளத்திற்கு ஏற்பாடு செய்தோம்.

சிறியவன் : நமக்கு முதல் எதிரி அவர்தான்.

கணவர் : சர்க்கார் எடுத்துக்கொண்ட மனையை மீட்டுக் கொடுத்தோம்.

சிறியவன் : எனக்கு அது தெரியாதே. அவர் செய்தது பொறுக்க முடியாததே.

தாயார் : இதுவே மனித சுபாவம். நமக்குப் பார்ட்னர் உதவுகிறார். அவரிடம் நமக்குப் பகைமை வரக்கூடாது. அது முக்கியம்.

கணவர் : தாசீல்தார் மகனுக்கு M.A. அட்மிஷன் பெற்றுக் கொடுத்தோம். அதன்பிறகு அவன் வரவேயில்லை. எத்தனை முறை வந்து போனவன்.

தாயார் : துரோகம் பலவகையின. சம்பளம் கொடுக்கும் ஸ்தாபனத்திற்குத் துரோகம் செய்தவர் உனக்குத் தெரியுமே. வேலையே செய்யமாட்டார். வேலையை ஏமாற்றுவதில் பெருமைப்படுவார். அவருக்குப் பிரமோஷனே வரவில்லை. ஓய்வு பெற்றபின் உறவினர்கள் அவர் தம் ஸ்தாபனத்திற்குச் செய்ததை அவருக்குச் செய்கின்றனர். அத்தனை பேரும் அலட்சியம் செய்கின்றனர். சட்டம் தவறாது.

பெரியவன் : அம்மா சொல்படி நடப்பதானால், பூமிக்கு மேலே ஒரு அடியில் நடப்பதுபோலிருக்கும்.

பெண் : நல்ல பழக்கம் அவ்வளவு கடினம்.

கணவர் : நம் பாக்டரிக்குப் பக்கத்து ஷெட் விலைக்கு வருகிறது. பார்ட்னர் அதை வாங்க ஆசைப்படுகிறார். சட்டப்படி செல்லாது. எல்லோரும் வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றனர். நீ என்ன சொல்கிறாய்?

தாயார் : எனக்கு விபரம் தெரிந்தால் சொல்வேன். நாம் சட்டத்திற்கு எதிராகப் போகாவிட்டால், சட்டம் நமக்குச் சாதகமாகச் செயல்படும்.

கணவர் : பார்ட்னர் நீ சொல்வதைக் கேட்பார். பெரியவன் : ஏம்பா, அம்மா வீட்டில் சமையல் பண்ணுகிறவர்கள். அவர்களைப் போய் பிஸினஸ் விஷயமெல்லாம் கேட்டால் என்ன தெரியும்? மதர் விஷயம் கேட்கலாம். எல்லாரும் செய்வதை நாம் செய்யாவிட்டால் அந்த ஷெட் கிடைக்காது.

சிறியவன் : அப்பா, இதெல்லாம் ஏம்பா அம்மாவைக் கேட்கிறீங்க?

பெண் : கேட்பது வேறு. செய்வது வேறு. எப்படிப்பா, அம்மாவுக்கு ஷெட், பாக்டரி தெரியும்?

கணவர் : எல்லோரும் சும்மாயிருங்க. நீ சொல்லும்மா. குறுக்கே பேசினா, உங்களையெல்லாம் எழுந்து போகச் சொல்வேன்.

தாயார் : நடக்கறது உங்க முடிவு பிரகாரம் நடக்கும்.



book | by Dr. Radut