Skip to Content

பகுதி 1

P.6 Matter, Life, Mind, Supermind, Spirit are a graded system

ஜடம், வாழ்வு, மனம், சத்தியஜீவியம், ஆன்மா ஆகியவை அடுக்கடுக்கானவை

நாம் ஜடமும், ஆன்மாவும் ஒன்றுஎன்ற அடிப்படையை மனதில் கொண்டுள்ளோம். இது உண்மையானால், இரண்டிற்கும் பொதுவாக ஒன்றிருக்க வேண்டும். தலைவர்களைத் தொண்டர்கள் தெய்வீகப் பிறவியாக நினைப்பதுண்டு. அப்படி ஒரு முடிவுக்கு வருமுன் மக்கள் தலைவர்களைக் கவனிப்பார்கள். நெருக்கடியான நேரத்தில் நெருக்கமாகக் கவனிப்பார்கள். நம்மைப் போலவே தலைவர் நடந்தால் தலைவரும் நம்மில் ஒருவர் என நினைப்பார்கள். தலைவர் நம்மைப் போலில்லாமலிருந்தால், அவரை உயர்வாக, அதாவது தங்களிடமிருந்து பிரித்துப் பார்ப்பார்கள்.

பணக்காரனுக்கு ஊரில் மரியாதை இருக்கும். அவனை உயர்வாக நினைக்க வைப்பது பணம். நெருக்கடியான சமயத்தில் அவனுக்குக் கடன் தேவைப்பட்டால், அவன் கடன் வாங்கத் தயங்குவான். அவன் கடன் வாங்கிவிட்டால் அவனுக்குள்ள மரியாதை போய்விடும். பணக்காரன் உயர்ந்த பிறவிஎன்று நினைப்பவர்கள் "அவனும் கடன் வாங்குகிறான்" என்றவுடன் அவன் உயர்ந்த பிறவியில்லை என முடிவு செய்வார்கள்.

எல்லோரும் கடன் வாங்குவது போல் பணக்காரன் கடன் வாங்கினால் அவன் எல்லோரையும் போன்றவன் என்று ஆகும். பணக்காரனும் மனிதன் தான், அவனும் நம்மைப் போன்றவனே என நிரூபிக்க நாம் செய்வதை அவனும் செய்கிறான் என்று காட்டுவதுபோல், ஜடமும், ஆன்மாவும் ஒன்று என்று நிரூபிக்க இரண்டிற்குமிடையே மூன்று நிலைகள் உள்ளன என்று கூறினால், அடுத்த கட்டத்தில் இரண்டும் ஒன்று எனக் கூறலாம்.

பின்வரும் அத்தியாயங்களில் சத், சித்தான முறையையும், சித்திலிருந்து சத் வந்ததையும், அடுத்தாற்போல் சத்தியஜீவியமும், அதன் பகுதியாக மனம் எழுந்ததையும், மனம் வாழ்வாகி, ஜடமானதையும் விவரிக்கிறார். சத் என்பது ஆன்மா, சிருஷ்டியின் முடிவில் ஜடமாயிற்று என்பது 24, 25ஆம் அத்தியாயங்களில் தெளிவாகிறது.

பின்வருவனவற்றை முன்னே கூற முடியாது என்பதால் பகவான் பல விளக்கங்களை இங்குத் தருகிறார். அவற்றுள் மேற்சொன்னதும் ஒன்று. 

 • மகனுக்குத் தகப்பனார் குணமிருக்கும். ஏனெனில் இருவரும் ஒன்றே.
 • வேர், அடிமரம், பட்டை, கிளை, இலை, துளிர், பூ, காய், பழம் ஆகிய அனைத்தும் ஒன்றே என்று தாவரஇயல் படித்தவர்கள் அறிவார்கள்.
 • மண்ணிலிருந்து உற்பத்தியாகும் மரமும், மனிதனும், ஒன்றே.
 • மண்ணான மலையும், அதன் சிறப்பம்சமான மனிதனும் ஒன்றே எனவும் கூறலாம்.
 • Life and disease and death are the same. வாழ்வும், மரணமும் ஒன்றே என்ற கொள்கையையுடையவர் உண்டு. மரணம் வாழ்வின் மாறிய நிலை என அவர்கள் கூறுகின்றனர்.

P.6 Spirit is Matter, Matter is Spirit

ஜடமும், ஆன்மாவும் ஒன்றே  

 • முதலாளியும், தொழிலாளியும் கம்பனிக்கு அவசியமான இரு அங்கங்கள்.

முதலும், தொழிலும் ஒன்றே.

 • தலைவனும், தொண்டனும் கட்சிக்கும், நாட்டுக்கும் தேவையானவர்.  

தொண்டனே தலைவனானான்.
தொண்டனுடைய மனப்பான்மையே ஒருவனைத் தலைவனாக்கும்.
தலைமையும், தொண்டும் ஒன்றே. 

 • ஆசிரியரும், மாணவரும் கல்விஎன்ற அரங்கத்தின் இரு சமமான பகுதிகள். 

கல்வி புகட்டும் ஆசிரியருக்கு போதிப்பதால் அறிவு நிறைவடைகிறது.
மாணவன் பாடத்தைக் கற்கிறான்.
ஆசிரியர் கற்பிப்பதைக் கற்கிறார்.
கல்வி இறைவனாகும்.
இறைவன் என்ற பிரம்மத்தின் முன் சமமாக இருந்து ஆசிரியரும், மாணவனும் கற்க வேண்டும் என்பது பிரபலமான ஸ்லோகம். 

 • கணவனும், மனைவியும், ஒன்றே எனக் கருதினால் இல்லறம் நல்லறமாகும். 

கணவனும், மனைவியும் குடும்பத்தின் இரு பகுதிகள்.
உலகமே ஆண் பெண் என்ற தத்துவங்களால் செயல்படுகிறது.
குடும்பத்தில் மனைவி கணவனுக்கு அடங்குகிறாள்.
ஆன்மீகத்தில் ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைவதால் பூர்த்தியாகிறான். 

 • சம்பாதிப்பவனும், செலவு செய்பவனும் ஒன்றே.  

செலவு செய்வதால் சம்பாதிக்க முடிகிறது.
செலவாகாவிட்டால், சம்பாத்தியம் நிற்கும்.
ஏரியிலிருந்து நீர் வெளியே போகாவிட்டால், உள்ளே வரும் நீர் ஏரியை உடைக்கும்.
செலவும், வரவும் ஒன்றே. 

 • Positive, negative என்பவையும் ஒன்றே.  

இராணுவமும், சர்க்காரும் ஒன்றே.
நன்மையும், தீமையும் ஒன்றே.
நன்மையிலிருந்து தீமை எழுகிறது.
தீமையிலிருந்து நன்மை எழுகிறது.
வாழ்வுக்கு நன்மை, தீமை இரண்டும் தேவை.
ஆன்மாவுக்குச் சலனமும், அமைதியும் தேவை. 

 • பயிரும், கரம்பும் ஒன்றே

   
 • பள்ளி நடப்பதும், விடுமுறையும் ஒன்றே.  

கரம்பாக இருந்தால்தான் அடுத்த பயிர் விளையும்.
விடுமுறையில் தான் மாணவனுடைய அறிவு பக்குவப்படுகிறது. 

P.7 An objective method of analysis or a subjective method of synthesis leads to unity

விஞ்ஞான ஆராய்ச்சியாலும், நிஷ்டையாலும் பிரம்மத்தைக் காணமுடியும்

இன்று ஜடம் என்பது சக்தி என விஞ்ஞானம் கண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் உபநிஷதம் சர்வமும் சக்தி எனக் கண்டது. விஞ்ஞானம் மேற்கொண்ட முறை ஆராய்ச்சி, உபநிஷதம் கைக்கொண்ட முறை நிஷ்டை - முடிவு ஒன்றேயாகும்.

முனிவர் காட்டில் தவம் செய்து பெறும் பலனை, வீட்டில் பெண் கடமையை நிறைவேற்றிப் பெறமுடியும் என்பது நம் மரபு. ஒரே திறமையுள்ள பலர் பல தொழில்களை மேற்கொண்டாலும், முடிவில் பலன் என்று பார்க்கும்பொழுது, முறை வேறுபட்டாலும், பலன் ஒன்றாக இருக்கிறது. பலன் நம் திறமைக்கு வருவது. திறமை சமமானால் பலனும் சமமாக இருக்கும்.

கணவனுக்கும், மனைவிக்கும் ஒரே திறமையுள்ளது உண்மையானால், அவன் வேலை செய்து சம்பாதிப்பதும், மனைவி வீட்டை நிர்வாகம் செய்து பெறும் பலனும் சமமானவையே.

ஆராய்ச்சி மேலும் மேலும் பகுத்துணர்கிறது, (infinitesimal) அணுவைத் தேடி ஆராய்ச்சி செய்கிறது. நிஷ்டை உள்ளே போய் அனந்தனை (infinity) நாடுகிறது. தத்துவப்படி அணுவும், அனந்தனும் ஒன்றேயல்லவா?

The Life Divine தத்துவம், Savitri காவியம். ஆனால் அவையிரண்டும் கூறுவன ஒன்றே. உரைநடையான தத்துவமும் காவியமான செய்யுளும் நமக்கு முடிவாக அளிப்பது ஸ்ரீ அரவிந்தம்.

ஸ்ரீ அரவிந்தர் பேசவேயில்லை. மிகக் குறைவு. Silent God என்று உடனிருந்தவர் கூறுகிறார். எவரையும் கண்டிப்பதில்லை. எதையும் வேண்டும் எனக் கேட்பதில்லை. வீடு அசுத்தமாகயிருக்கும். அவர் யோகத்திற்கு எந்த முறையும் தேவையில்லை என நிராகரித்து விட்டார். எவரையும் நம்பி எதையும் செய்யவில்லை. பணம் எங்கிருந்து வரும் எனத் தெரியாமல் புதுவைக்கு வந்துவிட்டார்.

அன்னை நாள் முழுவதும் பேசுவார். உடனிருப்பவர்கட்கெல்லாம் உத்தரவிட்டபடியிருப்பார். கேள்விகட்குப் பதிலளித்தபடியிருப்பார். எல்லோருக்கும் கட்டுப்பாடு விதித்தார். விதித்த கட்டுப்பாட்டை நிர்ணயமாகப் பின்பற்றும்படி வற்புறுத்துவார். தமக்குத் தேவையான பொருள்களைப் பல மாதம், சில சமயங்களில் ஒரு வருஷம் முன்னதாகத் தருவித்து வைத்துக்கொள்வார். தம்மைச் சுற்றி ஒரு பெரிய ஸ்தாபனத்தை உருவாக்கியவர். சுத்தம் என்பதைத் தெய்வமாகக் கருதிப் பின்பற்றினார். ஸ்ரீ அரவிந்தரிடம் வரும் பொழுது பெரும் பணத்துடன் வந்தார்.

 • ஸ்ரீ அரவிந்தருடைய பாதையும், அன்னையின் பாதையும், வேறு வேறு நேர் எதிரானவை.
 • ஆனால் அவை இரண்டும் அளிப்பது ஸ்ரீ அரவிந்தமே.

P.7 Objective analysis or subjective synthesis

ஜடமும் ஆன்மாவும் ஒன்றே என்று இரண்டாம் அத்தியாயம் கூறுகிறது. ஆன்மா என்ற உடலுக்கு ஜடம் ஆடை என்று உருவகப்படுத்துகிறது. பகுத்தறிவுவாதி ஆன்மா இல்லை என்றால் சன்னியாசி வாழ்வு தேவையில்லை என்கிறார். இவை இரண்டையும் இணைத்து, இரண்டும் ஒன்றே என்பது ஸ்ரீ அரவிந்தம். அவற்றை இணைப்பதை மேற்சொன்ன இருவழிகளாகச் செய்யலாம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

மரம், உலோகம், மனிதன் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ததில் அவை அனைத்தும் அணுக்களால் ஆனவை என்று விஞ்ஞானம் கூறுகிறது. அந்த அளவில் அவை அனைத்தும் ஒன்று. அதேபோல் விஞ்ஞானம் ஆன்மாவை ஆராய்ச்சி செய்யவில்லை. செய்தால் ஆன்மா அணுவாலானது என்று முடிவு வாராது. ஆன்மா சக்தி என்ற முடிவு வரும். அணுவெல்லாம் சக்தியாலானவை என்றும் விஞ்ஞானம் கூறுவதால் சக்தி என்ற அளவில் ஆன்மாவும், ஜடமும் ஒன்று எனத் தெரியும். அடுத்த கட்டம் உண்டு. ஆராய்ச்சி அதுவரை போவது நல்லது. அக்கட்டத்தில் சக்தி என்பது சத் எனப் புரியும். எனவே ஜடமும், ஆன்மாவும் சத் என்ற அளவில் ஒன்று என முடியும். இது புறத்திலுள்ள விஞ்ஞான, தத்துவ ஆராய்ச்சி.

அகத்தால் மனிதர்களை உணர முடியும். தியானம் கலைந்தவுடன் எதிரில் வருவது வேண்டிய, வேண்டாதவர் ஒன்றாகத் தெரிவார்கள். தியானம் முதிர்ந்தால் கல்லும், ஆன்மாவும் தியானத்தில் ஒன்று சேர்வதைக் காணலாம். இது அகத்திற்குள்ள ஆராய்ச்சி. அகமானாலும், புறமானாலும் ஆராய்ச்சியைப் பாதியில் நிறுத்தாவிட்டால் ஜடமும், ஆன்மாவும் ஒன்றே என விளங்கும்.

வாழ்வுக்குரிய உதாரணம்

கடைக்குப் போவதை, புற நிகழ்ச்சி - ஜடமாகவும் - யாகவும், தியானம் செய்வதை அகவுணர்வுக்குரிய ஆராய்ச்சியாகவும் கருதலாம். ஒன்று எளிமையான செயல். தியானம் உன்னதமானது.

சமர்ப்பணத்தால் இரண்டையும் இணைக்க முயல்வோம். காலையில் கடைக்குப் போவதின் 100 பாகங்களை சமர்ப்பணம் செய்வோம். போய் வந்தபின் தியானம் ஆட்கொள்வது தெரியும். மாலையில் தியானத்தை மேற்கொள்வோம். காம்பவுண்டில் 2" இடிந்து விட்டதைக் கட்ட வேண்டிய வேலையை மறுநாள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் பொழுது இன்று மாலை தியானம் முழுவதையும் சமர்ப்பணம் செய்து மேற்கொண்டு முடித்து எழுந்து வந்தால் கடைக்குப்போய் வந்த பொழுதிருந்தது போலவே தியானம் அமைந்தது தெரியும். அத்துடன் வீட்டிற்கு வெளியில் வந்தால் கொத்தனார் காம்பவுண்டைக் கட்டிக் கொண்டிருப்பார். நாம் ஒன்றும் சொல்லவில்லையே என நினைத்தால், கொத்தனார், பக்கத்தில் வேலைக்கு வந்தேன். இடிந்து போனதை முடிக்க வேண்டும் என்று தோன்றியது. செய்கிறேன் என்பார். ஜடமும், ஆன்மாவும் ஒன்றே என்பதை வாழ்வு தினமும் காண்பிக்கிறது.

P.11 நாத்திகம் ஆத்திகத்திற்குச் செய்த சேவை பெரியது

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகை மதம் ஆண்டது. ஓரளவுக்கு அரசர்களும் குருமார்கட்குக் கட்டுப்பட்டிருந்தனர். இதனால் மதத் தலைவர்கள் உலகெங்கும் அநியாயமாக நடக்க முயன்றனர். வேதம் அனைவரும் பயிலக் கூடாது, பைபிளை மக்கள் படிக்கக் கூடாது, ஆண்டவனை மனிதன் பாதிரி மூலமே அடையவேண்டும் என ஆரம்பித்து உற்பத்தி செய்த கொடுமைகளும் மூடநம்பிக்கைகளும் ஏராளம்.

 • இன்றும் கம்ப்யூட்டர் சாத்தானுடைய கருவி என்று கூறுபவருண்டு.
 • சந்திரனில் மனிதன் போயிறங்கியதை நம்ப மறுக்கும் B.A. படித்தவர் ஒருவர்.
 • சோப்புப் போட்டுக் குளிப்பது அனாசாரம், துணியை சோப்புப் போட்டுத் துவைப்பது ஆசாரமில்லை என்று அழுக்கோடு வாழும் மனநிலை நடைமுறையில் உண்டு.
 • சுத்தம் hygieneக்காக ஏற்பட்ட சட்டங்களை ஆன்மீகச் சட்டங்களாக்கி மூட நம்பிக்கை வாழ்கிறது.
 • சமூகம் சுமுகமாக வாழ ஏற்பட்ட நியதிகளில் ஆண்டவனைக் கொண்டு வந்தது, குருமார்கள் மற்றவர்களை அதிகாரம் செய்ய உதவியாயிற்று. அது மூட நம்பிக்கைக்கு அஸ்திவாரமாயிற்று.
 • முதலாளி, குடும்பத்தலைவன், அரசன், படித்தவன், பணக்காரன் மற்றவர்களைத் தன் ஆட்சிக்கு உட்படுத்த ஆண்டவனைப் பயன்படுத்தியது ஏராளம்.
 • பெற்றோர் தங்கள் அறியாமையைப் பிள்ளைகள் வாழ்வில் வலியுறுத்த ஆன்மீகம் கருவியாக இருந்து கொடுமைக்கு உதவி செய்தது.
 • எந்த விதமான இயந்திரம் கண்டுபிடித்தாலும் சர்ச் அதை அடக்கியது. Steam engine நீராவி என்ஜின் 2ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சால் மறைக்கப்பட்டது.
 • இன்றும் எந்தப் புதிய கருத்தையும் மனிதன் தானே நேரே ஏற்பதில்லை, முக்கியமானவர்கள் ஏற்றால் மனிதன் ஏற்பான். இது பகுத்தறிவில்லை; மூடநம்பிக்கை.
 • 18-ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டுகளில் சுமார் 100 ஆண்டு காலம் ஐரோப்பாவில் குளிப்பது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று நம்பினர். டாக்டர்கள் குளிப்பது சரியில்லை என்று கூறினர். பிறகு நிலைமை மாறியது.
  • இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இன்று ஏராளமாக உள்ளன.
  • நாம் அதை அழிக்க முன்வரவேண்டும்.
  • அது போன்ற சேவையை நாத்திகம் உலகுக்குச் செய்ததை நாம் அறிவோம்.
  • நாத்திகம் அக்காலத்தில் புரட்சிகரமான வேலையைச் செய்தது.
 • எல்லாத் துறைகளிலும், எல்லா நேரங்களிலும் மூடநம்பிக்கைகள் வளர்கின்றன. அதை அழிப்பது சேவை.
 • மூடநம்பிக்கை எந்த அளவிலிருந்தாலும் அன்னையை நெருங்க முடியாது.

P.11 கால் தரையில் பலமாக ஊன்றியிருக்க வேண்டும்

பூமியே அஸ்திவாரம் - உபநிஷதம்

தவமிருந்து மோட்சம் பெற்றாலும் அத்தவசிக்கும் உணவு வேண்டும். கௌபீனமானாலும் தவம் அதைத் தாராது. Aldous Huxley என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர். அவர் குடும்பத்தாரில் ஒருவர் நோபல் பரிசு பெற்றவர். அவரும், அவர் உடன்பிறந்த இருவரும் பிரபலமானவர்கள். ஹக்ஸ்லி ஸ்ரீ அரவிந்தர் புத்தகங்களைப் படித்தவர். மேற்சொன்ன கருத்து அவரைக் கவர்ந்தது. தம் புத்தகத்திற்கு மேற்கோளாக எடுத்துக் கொண்டார்.

 • நாட்டுக்கு விவசாயம் அஸ்திவாரம்.
 • மனிதனுக்கு வாழ்வு அடிப்படை.
 • எந்த ஆராய்ச்சிக்கும் பயன் முக்கியம், மக்களுக்குப் பயன்படாத ஆராய்ச்சிக்கு உயர்வு இருந்தாலும் உயிரில்லை.
 • எழுத்தாளர், கலைஞர், அரசியல்வாதி ஆகியவர் லட்சியமாக இருந்தாலும் வருமானமே அடிப்படை.

செய்யும் காரியம் பெரியதா, சிறியதா என்பதைவிட அவர் குடும்பம் வாழ வழி செய்திருக்கிறாரா என்பதே முக்கியம். யோகத்தை மேற்கொள்ள சாதகர்களை ஏற்குமுன் அன்னையின் ஸ்தாபனம் தரையில் காலை ஊன்றி வைத்ததை நாம் அறிவோம்.

 • கல்லூரியில் படிக்கும் மாணவன் நடிப்பு, பேச்சு, எழுத்து, விளையாட்டுகளில் எவ்வளவு உயர்ந்தாலும் படிப்பும், பட்டமுமே அவனுக்கு அடிப்படை. அவையில்லாவிட்டால் மற்றவை எடுபடாது.
 • Inter-Caste வேறு ஜாதியில் திருமணம் செய்துகொள்வது 50 ஆண்டாக இலட்சியமாக இருக்கிறது. இதைச் செய்தவர்கள் பலர் நல்ல நிலையிலிருக்கிறார்கள். பலர் கெட்டுப்போய்விட்டனர். கெட்டழிந்தவர்கள் வேறு ஜாதியால் கெடவில்லை. அஸ்திவாரமான வருமானமில்லாமல் கெட்டுப் போனவர்கள்.
 • 1947இல் பாகிஸ்தான் ஏற்பட்டபொழுது இந்தியாவின் மிகச் செழிப்பான பகுதிகளை பாகிஸ்தான் பெற்றது. 53 ஆண்டுகட்குப்பின் ‘வரவு செலவு’ கணக்குப் பார்த்தால் பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறையுள்ளது. சர்வதேச அரங்கத்திலும், பாகிஸ்தான் மக்கள் மனதிலும் இந்தியாவுக்குள்ள கௌரவம் பாகிஸ்தானுக்கில்லை. பாகிஸ்தான் 1947இல் பெற்றது அரசியல் சுதந்திரம்.

அரசியலுக்கு அடிப்படை மக்களாட்சி.
அடிப்படையில்லாததால் சுமார் 10 ராணுவப் புரட்சிகள் ஏற்பட்டன.

 • மனிதனுக்குக் குடும்பம் அடிப்படை. அவன் பல இலட்சிய வேலைகளைச் செய்யலாம். ஊதாரியாக இருக்கலாம். குடும்பத்தைப் புறக்கணிக்காதவனுக்கு கடைசி காலம் நல்லபடியாக இருக்கும். குடும்பமே மனிதனுக்குக் காலூன்றும் இடம்.
 • மேல்நாடுகள் செழிப்பானவை. மதவழிபாடு அதிகம். சர்ச்சுக்கு ஏராளமான சொத்து உள்ளது. ஆனால் வாழ்வுக்கு அடிப்படை சொத்தைவிட, படிப்பைவிட, மத வழிபாட்டைவிட, ஆன்மீகமாகும். ஆன்மீகம் புறக்கணிக்கப்பட்டதால் இன்று ஏராளமான செல்வமிருந்தும், அவர்களால் சந்தோஷம் பெற முடியவில்லை.
 • ஜப்பான் USAயிடம் போட்டியிட்டு உலகப் பொருளாதாரத்தில் முதன்மையாயிற்று, அமெரிக்காவுக்குப் புதிய கண்டு பிடிப்புகளில் முதலிடம் உண்டு. ஜப்பான் பிறநாட்டுக் கண்டுபிடிப்பைக் காப்பி அடித்தது. ஏராளமான பணம் குவிந்தது. ஆனால் நாட்டில் இன்று ‘நிலை’யில்லை. ஏனெனில் அவர்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படையான ஆராய்ச்சியைப் பிறரிடமிருந்து காப்பி அடித்தனர். சொந்தக்காலே சுகம் தரும். ஜப்பானுக்குச் சொந்தக்காலில்லை.

P.12 Error is the handmaid of Truth

தவறு, குறை என்பவை சத்தியத்தை உருவாக்கும் கருவிகள்

தவறே வாராமல் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமானால் ஏற்கனவே நாம் அறிந்த காரியங்களை மட்டுமே அதுபோல் செய்யமுடியும். புதியதாக இன்று கம்ப்யூட்டர் வந்துள்ளது. இதன் புது அம்சங்களைத் தவறில்லாமல் கண்டுபிடிக்க வேண்டும் எனில் முடியாது. 27 பல்கலைக்கழகங்கள் இருந்த நம் நாட்டில் 220 உற்பத்தி செய்யும் பொழுது தரம் குறையக் கூடாது எனில் விரிவுபடுத்த முடியாது. தரம் குறையக்கூடாது எனில் அபிவிருத்தியில்லை. புதிய ஸ்தாபனங்களில் பழைய ஸ்தாபன ஜுனியர்கள் தலைவர்களாக வருவதால் தரம் அவசியம் குறையும். மாணவர்கள் 50ஆண்டு முன்பு சமூகத்தின் மேல்நிலையிலுள்ள குடும்பத்திலிருந்து வந்தார்கள். இன்று லட்சியமே அடி மட்டத்திலுள்ளவரை படிக்க வைப்பது. மாணவர்களும், பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் தரம் குறைந்தால் படிப்பின் தரம் குறையும்.

 • இன்று நாட்டில் கல்வித்தரம் குறைவது கல்வி அபிவிருத்திக்கு நாடு இட்ட முதல்.
 • குறையில்லாமல் முன்னேற்றமில்லை.

ஐரோப்பா நாகரீகத்தின் சின்னமாக இருந்து நாட்டை அரசர்கள் ஆண்டபொழுது Log cabin சிறு குடிசையில் பிறந்த படிக்காத லிங்கன் தாமே முன்னேறி வந்து நாட்டில் பிரசிடெண்ட் பதவி ஏற்றார். 1 ஏக்கர் காட்டைத் திருத்தி பயிரிடும் நிலமாக மாற்ற சராசரியாக 3 பேர் இறந்தனர் எனில் நாகரீகம் எப்படிப்பட்டது எனத் தெரிகிறது. அந்தக் குறை இன்று அமெரிக்காவின் நிறைவு.

இன்று இங்கிலாந்தில் படித்தவர் எவரும் பொய் சொல்வதில்லை என்பது அன்று இந்தியாவில் பொய் சொல்பவரில்லை என ஒரு வெளிநாட்டு யாத்திரீகன் தன் குறிப்பேட்டில் எழுதியது போலிருக்கிறது. இதே இங்கிலாந்தில் கொஞ்சநாள் முன் Chancellor & Exchequer என்பவரை ஊழலுக்காகக் கைது செய்ய உத்தரவிட்டனர். நம் நாட்டில் மத்தியப் பொருளாதார மந்திரி (Finance Minister) போன்றவர். அவர் நேரே அரசனிடம் போய் முறையிட்டார். சில நூற்றாண்டுகட்கு முன் நடந்த செய்தியிது. எதிர்ப்புத் தெரிவிக்காமல் Towerக்கு - ஜெயிலுக்கு - போவதே நல்லது என்றான் அரசன். அந்த அரசனே அதிகபட்ச இலஞ்சம் பெற்றவன். அந்தப் பெருங்குறை இன்று நாட்டில் பொய் சொல்பவர்களைக் காண முடியவில்லை, கோர்ட்டில் எவரும் பொய் சொல்வதில்லை, பொய் சொல்லும் கட்சிக்காரனுக்கு கேஸ் நடத்த வக்கீல் கிடைக்கமாட்டார் என்ற நிலை.

குறை, தவறு என்பதால் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் ஏராளம்.

 1. பேப்பர் செய்யும்பொழுது குறை ஏற்பட்டது. அதனால் இங்க் ஊறியது, அப்படி ஏற்பட்டதே blotting paper.
 2. கோந்து செய்யும்பொழுது கோந்து சரியாக ஒட்டவில்லை. அதைப் பயன்படுத்தி Post It என்றதைச் செய்தனர். சிறுகுறிப்பெழுதி இதில் ஒட்டினால் ஒட்டிக்கொள்ளும். எடுத்தால் வரும். இது ஆபீஸில் பெரிய உபயோகமானது.
 3. பென்சிலின் அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டதே. 

P.12 If not knowable by thought, It is attainable by a Supreme effort of consciousness

அறிவுக்கு எட்டாதது ஜீவியத்திற்கு எட்டும்

பகுத்தறிவுவாதி கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை. அதனால் நம்ப முடியாது என்று கூறுவது அறிவுக்குப் பொருத்தமான வாதம் இல்லை. இதை எளிதில் மறுக்கலாம். நெடுங்காலமாக இக்கேள்விக்குச் சொன்ன பதில்கள் ஏராளம். கேட்பவனை மடக்கிச் சொன்ன பதில்கள் அவை. கேட்பவர் மனம் விரிந்து ஏற்று மகிழும் வகையில் ஸ்ரீ அரவிந்தர் பதில் கூறுகிறார். அவர் கூறும் பதில் மனத்திற்கு மட்டும் திருப்தி அளிக்கக் கூடியதன்று. கேட்டவனுக்கு இதுவரை பதில் சொல்லியவர்களும் காணாத கடவுளைக் காணும் மார்க்கம். அவர் கூறிய பதில் மேலேயுள்ளது.

கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரை உணரும் தன்மை மனிதனிலிருக்கும். அத்திறமைக்குக் கடவுள் தெரியும். முன்சீப் கோர்ட்டில் வழக்குத் தோற்றுவிட்டால், அதுவே முடிவுஎன்று நாம் ஏற்பதில்லை. கடைசி கோர்ட்டிலும் வழக்கு தோற்றுவிட்டால், தர்மம், நியாயம் என்று ஒன்று இருந்தால் அது ஜெயிக்கும்என்ற நம்பிக்கையுடையவர்க்கு அது ஜெயிக்கும். அதுபோல் கலெக்டர் போட்ட உத்தரவு ரத்தாகியிருக்கிறது. வேலைக்குப் போனபின் படித்து பட்டம் பெற சட்டமில்லாத காலத்தில், சட்டம் உள்ள சிலரும், வேலைக்குப் போன பின் படிப்பது என்பது கறுப்பு நாய் வெள்ளை நாயாவதாகும்என்று கைவிட்ட காலம். சரியாக 50 ஆண்டுகட்குமுன், ஒரு கறுப்பு நாய் supreme effort of consciousness பெருமுயற்சியை மேற்கொண்டு வெள்ளை நாயாயிற்று. தொடர்ந்து மேலும் இருபட்டங்கள் எடுத்து பதவி உயர்வு பெற்றதால், அடுத்த 10 ஆண்டுகளில் அவ்வூரில் 73 பேர் பட்டம் பெற்றனர். ஒருவர் Ph.D.யும் எடுத்தார். ஒரு சமயம் அவ்வூரில் உள்ள எல்லாப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பிரைவேட்டாகப் பட்டம் பெற்றவர்களாக இருந்தனர்.

அறிவு ஜீவியத்திலிருந்து வருவதால், அறிவுக்குப் புலப்படாததை ஜீவியத்தில் தேடலாம்என்பது பகவான் பதில். தேடியவர் பெறுவதென்ன? ஜடம் சக்திமயமான அலைகளாக ஜீவியத்திற்குத் தெரிகிறது. விஞ்ஞானி சோதனை மூலம் கண்டதை மனிதன் ஜீவியத்தின் முயற்சியால் காண்கிறான். ஆன்மா ஹிருதய சமுத்திரத்தின் அலை என்பதை ஏற்பவர்கட்கு இரண்டும் சக்தி எனப் புலப்படும். மனம், வாழ்வு, ஜடம், ஆன்மா ஆகியவை சக்தியின் அலைகளாகக் கண்டால், அவை அனைத்தும் ஒன்று என அறியலாம்.

அறிவிலிருந்து ஜடத்தன்மையை அறிந்ததுபோக ஜீவியத்திற்குப் போவது எப்படி? அறிவு எண்ணமாக எழுகிறது. எண்ணத்தை நிறுத்தினால் மௌனம் வரும். அறிவு விலகும். அறிவு விலகியபின் நிஷ்டை ஜீவியத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த விளக்கத்தைப் பேசிக் கொண்டிருந்த பொழுதே ஓர் அன்பர் சுவரெல்லாம் நகர்வது போல் தெரிவதாகச் சொன்னார். இதெல்லாம் நமக்கில்லை என்று நினைக்கிறோம்.

அன்னை ஸ்ரீ அரவிந்தர் படத்தில் அவர்கள் உயிரோடிருப்பதைக் கண்ட பக்தர்கட்கு இது முயன்றால் பலிக்கும். மனம் குதூகலமாக இருக்கும்பொழுது ஒரு பக்தர் வேணுகானம் கேட்டதுஎன்றார். அவர் போன்றவர்க்கு இது முடியும்.

 • முயற்சி பெருமுயற்சியாக இருக்க வேண்டும்.
 • ஏதாவது ஒருவகையில் சூட்சுமம் வேண்டும் படத்தை உயிருடன் காண்பது, கனவில் அன்னையைத் தரிசிப்பது, சூட்சுமத் தரிசனம் பெறுவது, அந்தராத்மா குரல் கேட்பது, வேணுகானம் கேட்பது, நடக்கப் போவது கனவிலோ, கருத்திலோ முன்கூட்டித் தெரிவதுபோன்றவை சூட்சும அம்சங்கள். இரவில் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து மேலே போவதும் சூட்சுமமே.

P.12 It is the highest knowledge, but not the final one

உயர்ந்த ஞானமுண்டு; அதுவே முடிவான பிரம்ம ஞானமில்லை

இதை விளக்குமுன் இது போன்ற பல உண்மைகளைக் கூறலாம்.

 • சுப்ரீம் கோர்ட் முடிவான கோர்ட் என்பது உண்மை. ஆனாலும் அதுவே முடிவன்று. பார்லிமெண்ட் அதைக் கடந்த அதிகாரமுள்ளது.
 • Ph.D. முடிவான பட்டம். பெரிய படிப்பு. அதைக் கடந்து படிப்புண்டு. பட்டங்களும் - D.Sc., D. Litt., LL.D. - உண்டு.
 • நாட்டில் அரசன் வைத்ததே சட்டம் என்பது உண்மை. அவனும் தர்மத்திற்குக் கட்டுப்பட வேண்டும்.
 • பிரதம மந்திரியே தலைவர். அவரைக் கடந்து ஜனாதிபதி உள்ளார்.
 • ஜாதகம் கூறிவிட்டது. இனி மறுபேச்சில்லை. அருள் ஜாதகத்தைக் கடந்தது.
 • போரில் இராணுவமே கடைசி கட்ட அதிகாரமுள்ளது. ஆனால் இராணுவம் மந்திரிசபைக்குட்பட்டது.
 • இராணுவம் தோற்றால் அதுவே முடிவு. சர்ச்சில் தம் தைரியத்தால் தோற்ற இராணுவத்தை மீண்டும் போரிடச் செய்து வெற்றி பெற்றார்.
 • பகவான் எழுதிய நூல்களில் தலை சிறந்தது The Life Divine. சாவித்திரி அதையும் கடந்தது.
 • வாழ்க்கையில் பணம் பேசும். பணத்தைக் கடந்து நியாயம் பேசும் நேரங்களை நாம் கண்டோம். எலக்க்ஷனில் பணத்தைக் கடந்து பல விஷயங்கள் பேசுகின்றன. அதில் ஜாதி ஒன்று.
 • குடும்பத்திற்குத் தலைவன் கணவன். அவன் மனைவிக்குட்பட்ட நேரம் உண்டு.

இந்தப் பக்கத்தில் ஆன்மீக உண்மையை எடுத்துக் கூறும் பொழுது பெரிய ஞானத்தை எடுத்து பகவான் விளக்குகிறார். ஆனால் அதுவே முடிவானதில்லை எனவும் கூறுகிறார். இதை விளக்க பல பக்கங்கள் எழுத வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சுருக்கமாகக் கூறலாம்.

 • பிரம்மம் அனந்தம் என்பதால் அதை அறிய முயலும் ஞானமும் அனந்தமானது என்றாகுமன்றோ?
 • அதனால் எந்த நிலை ஞானமும் முடிவானதெனக் கூறிவிட முடியாதன்றோ?

P.13 The unknown is not unknowable

இன்று அறியாதது, என்றும் அறிய முடியாததில்லை

ஒரு காலத்தில் அன்று அறிந்ததே முடிவு, அதிகமாக அறிய முயல்வது தவறு என்ற கருத்து இருந்தது. அத்துடன் இனி அறிய ஏதுமில்லைஎன்ற அபிப்பிராயமும் பலமாக இருந்தது. பழைய மதங்கள் அப்படியிருந்தன. இன்றும் அம்மதங்களில் fundamentalists என்பவர்களைப் பார்த்துப் பேசினால் Bibleஇல் அது இல்லை, மேற்கொண்டு பேசவேண்டாம். கீதை கூறுகிறது, அதைத் தாண்டிய ஞானமில்லை. கொரான் கூறுவதை மறுத்துப் பேசாதே என்ற மனப்பான்மையைக் காணலாம். சுமார் 50 வயது, 60 வயதானவர்கள் கிராமத்தில் செல்வாக்கோடிருந்தால், பேராசிரியர் புகழ் பெற்றவரானால், கட்சித் தலைவர் பிரபலமானவரானால் முடிவான ஞானத்தைக் கண்டுவிட்டோம் இனி பேச எதுவுமில்லை என்ற மனநிலையைக் காணலாம். இன்று உலகம் மாறுவதால் மனநிலை சற்று இடம் கொடுக்கிறது. தங்கள் அறிவின் உச்சத்தை intellectual maximum எட்டியதாலும், தங்கள் அறிவைக் கடந்து எதுவுமில்லை என்ற ஆழ்ந்த அனுபவப்பூர்வமான தெளிவு இருப்பதாலும் அவர்கட்கு இனிமேல் அறிய எதுவுமில்லை என்று தோன்றுகிறது.

எந்தக் காலத்திலும் உயர்ந்த தீர்க்க தரிசனமுள்ளவர்கள் கற்றது கைம்மண் அளவு எனக் கருதியுள்ளார்கள். ஸ்ரீ அரவிந்தம் கூறுவது,

 • இதை - இனி அறிய எதுவுமில்லை - கூறுபவர்கள் மனநிலை மனவளர்ச்சியில் ஒரு கட்டம். அதை முடிவாக ஏற்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.
 • பிரம்மம் அனந்தமானது Infinite. அனந்தம் எனில் அது புனைவதும் அனந்தமானது.
 • அதனால் மேலும்மேலும் முடிவில்லாமல் சிருஷ்டியிலும், நம் வாழ்விலும் உற்பத்தி செய்யக் கூடியவையுண்டு.
 • பிரபஞ்சத்தில் அறியக் கூடியது ஒன்றிருந்தால் மனிதனிடம் அதை அறியும் திறமையிருக்கும்.
 • மனம் பகுதியானதால், அதன் திறனுக்கு முடிவுண்டு.
 • சத்தியஜீவியம் முழுமையானதால், அதன் திறனுக்கு முடிவில்லை.
 • கடந்த நூற்றாண்டுகளில் இதை நினைத்தவர்களை இன்று நாம் நினைத்துப் பார்த்தால், அவர்கட்கு இக்கூற்று பொய் எனத் தெரியும்.
 • அவர்கட்கு அன்று இது பொய் என்பதுபோல், நமக்கும் இன்று இது உண்மையன்று எனத் தெரியும்.
 • கீதை நாம் ஆச்ரயிப்பதை அடையலாம் என்பதால், தெரிய முனைந்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

P.13 Forth now and fresh forward also in other fields

ஆராய்ச்சி என ஆரம்பித்தால், அது தொடரும்

ஒரு குற்றம் நடந்துவிட்டால், நாம் கூப்பிடாவிட்டாலும் போலீஸ் வரும். நாமே போலீஸில் புகார் செய்து போலீஸ் வந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர் விலக நினைத்தாலும், போலீஸ் விடாது. கிராமத்திலுள்ளவர்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தபின், அவர்கள் நகரத்தில் வேலைசெய்து, அங்கே குடியிருக்கும்பொழுது மகனைப் பார்க்கப் போனால், மகன் அவன் நண்பர்கள் எதிரில் தாய் தந்தையரைக் கண்டு வெட்கப்படுவதைக் காண்பதுண்டு. இதைக் கண்ட வேறு சில கிராமத்தார்கள், "படிப்பு வந்துவிட்டால், பிள்ளை என்னை மதிக்கமாட்டான். நான் அந்தத் தப்பைச் செய்யமாட்டேன்" என, படிக்கப் போவதை அனுமதிப்பதில்லை. படிப்பு என்றால் அறிவு, நாகரீகம், நகர வாழ்வு, பண்பு, சுத்தம். ஒரு முறை அது உள்ளே வந்துவிட்டால், அதன் பிறகு மகனால் மீண்டும் அநாகரீகமான கிராம வாழ்வைப் போற்ற முடியாது. ஆராய்ச்சிஎன ஆரம்பித்தால், அதை எந்த நிலையிலும் தடுத்து நிறுத்த முடியாது.

நாகரீகம் வளரும்பொழுது இதைக் காணலாம். புதியது என்பது அறிவுக்குரியது. ஆராய்ச்சி அதன் கருவி. மனித வாழ்வு உடலுக்குரியது. மனம் இரண்டு படி உயர்ந்தது. உயர்ந்ததன் கருவியான ஆராய்ச்சியை உள்ளே விடலாம், வெளியே போகச்சொல்லும் உரிமை நமக்கில்லை.

 • பெண் சம்பாதிக்கப் போனால், புருஷனை மதிக்கமாட்டாள்.
 • பையனிடம் பெட்டிச் சாவியைக் கொடுத்துவிட்டால், கட்டுப்பட மாட்டான்.
 • தொழிலாளிக்கு உரிமை வந்துவிட்டால், கம்பெனியை நிர்வாகம் செய்யமுடியாது.
 • வியாதியஸ்தனுக்கு வியாதியின் விபரம் தெரிந்தால், குணப்படுத்துவது கஷ்டம்.
 • பிள்ளைகட்குப் பெரியவர்களது இரகஸ்யம் தெரிந்தால், பிள்ளைகள் நிம்மதி போய்விடும்.

இவைபோன்ற கருத்துகளை நாம் எங்கும் கேட்கிறோம். இவற்றில் பெரும்பாலும் உண்மையுண்டு. முழுவதும் உண்மை என எடுத்துக் கொள்ள முடியாது. இங்கெல்லாம் உள்ளது,

 • ஆன்மீக உண்மை, அது பெரியது.
 • நாகரீகம் வளர்ந்ததே அது போலத்தான்.

இதைச் சார்ந்த வேறு ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. சுமார் 130 வருஷத்திற்கு முன் மின்சார பல்ப் வந்தது. பல்புக்காக என்றாலும் வந்தது மின்சாரம். இன்று மின்சாரம் ஆயிரம் இடங்களில் பயன்படுகிறது. மின்சாரம் கெடிகாரத்திற்கும், சமையலுக்கும் வந்துவிட்டது. மின்சாரம் பயன்படாத இடமேயில்லை. பிளாஸ்டிக்கும் அது போலவே. புதியதாக வந்த எதுவும் முடிந்த அளவு வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் பரவும். அது தவிர்க்க முடியாதது.

 • ஆராய்ச்சி அறிவின் கருவி.
 • மனிதன் உடலாலும், உணர்வாலும் வாழ்பவன்.
 • ஆராய்ச்சி மனத்திற்கும், அறிவிற்கும் உரியது.
 • அறிவை உடலிலும், உணர்விலும் செயல்பட அனுமதிக்கும் நாகரீகம் அது பரவுவதைத் தடுக்கப் பிரியப்படாது, பிரியப்பட்டாலும் முடியாது என்ற அடிப்படையான உண்மையை மேற்சொன்ன கருத்து சுட்டிக் காட்டி வலியுறுத்துகிறது. The Life Divineக்குரிய சிறப்பு அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.

P.14 The Energy that creates the world can be nothing else than a Will

சக்தி என்றிருந்தால் அதன் மூலம் Will மன உறுதி

நாம் ஓர் இடத்திற்கு - பள்ளிக்கூடம், ஆசிரமம், தர்ம ஸ்தாபனம் - போய் அங்கு நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது, உள்ளவர்கள் லட்சியமாய்ப் பழகுகிறார்கள், உயர்ந்த இடம்எனக் கண்டால், ‘இதன் தலைவர் யார்?’ எனக் கேட்கிறோம். தலைவர் என நாம் கேள்விப்படுபவர் இவ்வளவு உயர்ந்த ஸ்தாபனத்தை நடத்த முடியாது என மனதில் பட்டால், ‘அவரே செய்கிறாரா அல்லது வேறு யாராவது பின்னணியிலிருக்கிறாரா?’ என விசாரிப்போம். தலைவர் யார் எனத் தெரிந்தபின், ‘ஏன் இந்த ஸ்தாபனத்தை நடத்துகிறார்?’ எனக் கேட்கிறோம். ஒரு பெரிய காரியம் கண்ணில் பட்டால், அதன்பின் ஒரு மூலகர்த்தா இருக்கிறார், இருக்கவேண்டும் என்பது நம் அபிப்பிராயம். ‘சக்தியின் பின்னால் மனஉறுதி’ என்பது அது போன்றது.

உறுதி (will) இல்லாமல் சக்தியில்லை.
சக்தியை எழுப்பாத உறுதியில்லை.

ஒரு சாதாரணக் குடும்பப் பையனுக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்தது எனில், நம் மனம் கேள்வி கேட்கிறது. பையன் rank வாங்கியவன் என்றால், மனம் ஓரளவு சமாதானம் அடைகிறது. மீண்டும், ‘ராங்க் மட்டும் இவ்வளவு பெரிய வேலையை வாங்கித் தாராதே?' என்ற கேள்வி எழுகிறது. பணமா, சிபார்சா என இதர கேள்விகள் எழும். பணம் என்றால், மனம் அடங்கும். சிபார்சு என்றால், மனம் ஏற்றுக் கொள்ளும். அவையில்லை, பையன் rankஉம் வாங்கியவனில்லை என்றால், கேள்வி மேல் கேள்வி எழும். நாம் ஏற்கும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றால், மனம் புதுக் கேள்விகளை எழுப்பும். ஒரு சிலர் personality பர்சனாலிட்டிக்குக் கிடைத்தது என்பார்கள். அடுத்தவர் aptitude test இல் திறமை talent இருந்திருக்கும் என்பார்கள். ஒருவாறாக பதில் கிடைத்துவிட்டால்,

வேலை பெரியது என்றால், அதன்பின் விஷயம் இருக்குமே என்று நினைத்தேன்

என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுவதுபோல், சக்தி என்று இருந்தால், அதன்பின் will மன உறுதியிருக்கும் என பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். இதுபோன்ற கருத்துகள் வேறு சிலவற்றையும் நாம் கூறலாம். அவை ஸ்ரீ அரவிந்தர் கூறியவை,

 • ஒருவருடைய உயிர் பிரிய வேண்டும் என்றால், பரமாத்மாவும் ஜீவாத்மாவும் அதற்குச் சம்மதிக்க வேண்டும்.
 • எந்தச் சிறுகாரியம் நடக்க வேண்டுமானாலும் இந்த இரண்டு - பரமாத்மா, ஜீவாத்மா - உத்தரவும் தேவை.
 • ஒருவர் படுக்கையாக இருந்து உயிர் பிரிகிறதுஎனில், அவருக்கு முக்கியமானவர் ஒருவர், ‘இவர் போனால் நல்லது’ என்று நினைக்காமல், பேசாமல் அவர் உயிர் பிரியாது.
 • நமக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும், நாமே - உள்மனம் - அழைக்காமல் அது வாராது. மேல்மனம் கஷ்டமாக உணருவதை, உள்மனம் சந்தோஷமாக அனுபவிக்கிறது. சில சமயங்களில் அழைக்கிறது என்று பகவான் கூறுகிறார்.
 • கஷ்டம் என வந்தால் அதன்பின் நம் அழைப்பு இருக்கும். நல்லதற்கும் அதுவே சட்டம்.

P.14 சக்தியின் பின் உறுதி will உண்டு எனில் அது யாருடைய உறுதி

அது மனிதனுடைய உறுதி அன்று,  கடவுளுடைய உறுதியாகும்

ஒருவர் வீடு கட்டினால் அது அவர் பணம் என அறிகிறோம். 20,000 ரூபாய் சம்பளமுள்ளவர் குடும்பத்துடன் உலகைச் சுற்றிவரப் புறப்பட்டால் அது அவர் பணமாக இருக்க முடியாது, கம்பெனிப் பணமாக இருக்கலாம் எனக் கருதுகிறோம். நம்மூரில் பெரிய பாலம் கட்டினால், ஏது பணம் என எவரும் கேட்பதில்லை. ஆனால் இதெல்லாம் வரிப்பணம் என நினைப்பவருக்கு நம்மூர் வரிப் பணத்தில் இதெல்லாம் கட்ட முடியாது எனப் புரியும். வரிப்பணம் என்பது உண்மைதான். ஏக்கருக்கு 60ரூபாய் வாய்தா கட்டினால் நம்மூரில் உள்ள 1000 ஏக்கரிலும் 60,000 தான் வரும். பாலம் கட்ட பல கோடி வேண்டும். எனவே இப்பணம்,

ஓர் ஊர் பணம் இல்லை, இது சர்க்கார் பணம்

எனப் புரிகிறது.

சக்தியை will உறுதி செய்கிறது. சக்தி உலகத்தை சிருஷ்டித்தது என்றால், தனி மனித உறுதியோ, மனித குலத்தின் உறுதியோ சூரிய மண்டலத்தையும், உலகத்தையும் சிருஷ்டிக்க முடியாது. இதற்குரிய உறுதி அதைவிடப் பெரியது.

அது ஆண்டவனின் Will உறுதியாகும்

என விளங்கும்.

சக்தி பலனாக மாற உறுதி வேண்டும் என்பது சட்டம்.

தமிழ்நாட்டில் பணக்காரர்கள் எல்லா ஊர்களிலும் உண்டு. பொதுவாகப் பணக்காரன் என்றால் தியேட்டர், பஸ், ஹோட்டல் முதலாளியாக இருப்பான். கடந்த 10 வருஷமாக நிலைமை மாறுகிறது. சிறு தொழில்கள் எல்லா ஊர்களிலும் ஏற்படுகின்றன. அவற்றுள் 60%, 70%க்கு மூடி விடுகின்றனர். ஏன்?

தொழிலை ஆரம்பிக்கும் திறனிருந்தாலும், நடத்திப் பலன் பெறத்தேவையான திறமை - will power - இல்லை.

உள்ளூரில் கல்லூரி இருந்தாலும், படிக்க வசதியும், புத்திசாலித்தனமிருந்தாலும் படிப்பைத் தொடர்ந்து முடிக்கும் திறன் அனைவருக்கும் இல்லை.

1875இல் அமெரிக்காவில் Ph.D. பட்டம் பெற்றவர் ஒருவரே. இன்று ஆண்டுக்கு 36,000 பேர் அதைப் பெறுகின்றனர். பணமிருக்கலாம், வசதியிருக்கலாம், காரியத்தை முடிக்கும் திறனில்லாவிட்டால் 36,000 பட்டம், 1 பட்டத்துடன் நின்றுவிடும்.

உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயங்குகிறது. நதிகளும், மலைகளும், சர்க்காரும், கோடிக்கணக்கான மனிதர்களும், நகரங்களும், உள்ளன எனில்,

 • இவை ஒரு மனிதனால் செய்யப்பட்டதில்லை.
 • மனித குலம் முழுவதும் சேர்ந்து சூரிய மண்டலத்தை ஏற்படுத்த முடியாது.
 • இதை சிருஷ்டித்தது ஆண்டவன் என முடிவு செய்கிறோம்.book | by Dr. Radut