Skip to Content

பகுதி 2

P.16 Shrinking distances

பெரிய உலகம் சுருங்கி இடமும், காலமும் மறைகின்றன

ஜடமும் ஆன்மாவும் ஒன்று என்பதே இந்த இரண்டாம் அத்தியாயம். அதன் கடைசிப் பாராவில், உலகம் சுருங்குகிறது. சுருங்கும் உலகம் இடம், காலத்தை அழிக்கும்எனக் கம்பியில்லாத் தந்தியை உதாரணமாகக் கூறி, ரேடியோவைக் குறிப்பிடுகிறார். ரேடியோ ரிசீவர், டிரான்ஸ்மீட்டர் அழியும் நேரம் வரும். அதன் பின் உள்ள ஒரே தடை அகந்தை என்றால், அகந்தை அழிந்தால்,

உலகம் ஒன்று என்பது நிரூபணமாகும்

என்று முடிக்கிறார். உலகம் ஒன்று என்றால், ஜடமும், ஆன்மாவும் வேறு வேறு ஆகாதன்றோ? சுருங்கும் உலகம் என்பதை விளக்கத் தேவையில்லை.

 • மனிதனை மனிதனிடமிருந்து பிரித்தது தூரம்.
 • நடந்துபோய் தூரத்தை முதலில் மனிதன் வென்றான்.
 • குதிரைச் சவாரி நடப்பதைவிட வேகமானது.
 • பிறகு சைக்கிள் வந்தது. தொடர்ந்து காரும், ரயிலும், விமானமும் வந்தன. தூரம் சுருங்குகிறது. அதனுடன் காலமும் சுருங்குகிறது.
 • பூமி மட்டுமன்று, சூரிய மண்டலமும் சுருங்குகிறது.
 • ஒளி ஒரு செகண்டில் உலகை 7 தரம் சுற்றி வருவதை அதிகபட்ச வேகமாகக் கருதிய உலகில் அதையும் 300 மடங்கு வேகப்படுத்தலாம் எனவும் கண்டுள்ளனர்.
 • தபால், தந்தி, போன், e-mail செய்தியைத் துரிதப்படுத்தி விட்டது.
 • டெலிபதி என்பது ஒருவர் மனத்தை அடுத்தவர் அறிவது, ஒரு சிலருக்கு இத்திறமையுள்ளது.
 • எல்லாப் பொருள்களும், எல்லா ஜீவராசிகளும் அணுக்களால் ஆனவை என்பதும் உலகம் ஒன்று என்றும் கூறுகிறது.
 • மனித சுபாவம் எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் ஒன்றாகவே இருப்பதை சரித்திரம் கூறுகிறது.
 • உடலுறுப்புகள் மனிதனுக்கும், விலங்குகட்கும், மீன் போன்ற ஜந்துகட்கும் ஒன்றுபோல் செயல்படுவதை விஞ்ஞானம் கூறுகிறது.
 • உலகம் பல வகைகளிலும் ஒன்றுஎன்றறிய போதுமான அறிவும், செய்திகளும் உள்ளன. நாம் ஏற்பது நம்மைப் பொருத்தது.

P.30 The perfect human soul must be able to move to Non-Existence without losing hold of Existence

தன் கட்சியை எடுத்துச் சொல்பவன் அரசியல்வாதி (politician). தான் ஒரு கட்சியைச் சேர்ந்தவனானாலும், நாட்டின் நன்மையைக் கருதுபவன் தேசபக்தியுள்ள அரசியல்வாதி (statesman).

மனிதன் குடும்பம் நடத்தலாம், அல்லது துறவறம் பூணலாம். ஒன்றை விட்டபிறகுதான் அடுத்ததை நாட முடியும் என்பது உலக அனுபவம். ஸ்ரீ அரவிந்தம் குடும்பஸ்தனுக்கு துறவியின் தூய்மையையும், துறவிக்கு இல்லறத்தின் பொறுப்பையும் வழங்குகிறது. குடும்பத்தை மட்டும் நடத்த முடியும் என்பதே இதுவரை உலகம் கண்ட உண்மை. துறவற நெறி பெரியது. குடும்பப்பொறுப்புகளை ஏற்றால் துறவறத்திற்குரிய சக்தியிருக்காது. மேலும் குடும்பம் ஆசை, பாசம், பற்றாலானது. பற்றறுத்த பின் ஆண்டவனைத் தேடுவது துறவறம். இது காணும் மனிதன் இரண்டில் ஒன்றை நாடினான். மனிதன் பூரணம் பெற,

 • துறவறத்தின் தூய்மை தேவை,
 • பாசமும், பற்றும் குறையானவை,
 • அவை அன்பாக மாற வேண்டும்,
 • அது எல்லா மனிதர்களாலும் இயலாது,
 • அன்பும், தூய்மையும் நிறைந்த இல்லறம் பூரணமானது.
 • குடும்பப்பொறுப்பை, உலகப் பொறுப்பாக மாற்றுவது துறவறம்.
 • இடையறாது குடும்பத்தில் ஈடுபடுவதுபோல், உலகவாழ்வில் துறவி ஈடுபட வேண்டும்.
 • குடும்பவாழ்வை மனதாலும், உணர்வாலும், உடலாலும் அனுபவிப்பதைப்போல் துறவி உலக வாழ்வை அனுபவிப்பதே பூரணம் தரும்.
 • துறவறம் பெற, இல்லறம் விலக்கப்பட வேண்டியதில்லை.
 • பூரணமான மனித வாழ்வு துறவறத்தின் தூய்மையையும், இல்லறத்தின் இன்பப்பொறுப்பையும் ஆன்மீக உயர்வுக்கு உயர்த்தவேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

வக்கீல் தம் கட்சி ஜெயிக்கப் பேசுபவர். எதிர்க்கட்சி வக்கீல் அவர் கட்சி ஜெயிக்க சட்டம் பேசுபவர். ஒரு வக்கீல் கட்சிக்காரன் ஜெயிக்க வேண்டும் என்று மட்டும் நினைக்காமல் சட்டம் ஜெயிக்க வேண்டுமென நினைத்தால், மனதால் அவர் நீதிபதியின் நிலைக்கு உயருகிறார். ஸ்ரீ அரவிந்தர் கூறும் சட்டம், நியாயமாகும். வக்கீல் எதிர்க்கட்சியின் நியாயத்தை ஏற்கும் மனப்பான்மையுடையவராக இருப்பதின் அவசியத்தைக் கூறுகிறார்.

நியாயம் நிலைக்க சட்டத்தை விளக்கும் மனப்பான்மை வக்கீலை ஜட்ஜ் நிலைக்கு உயர்த்தும்பொழுது வக்கீல் உயர்ந்த மனிதனாவது போல், இல்லறத்தையும் துறவறத்தையும் இணைக்கும் மனித உள்ளம் தெய்வநிலையை எய்தும் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

P. 50 All totality is a reversion to harmony and a reconciliation of the opposites

முழுமை சுமுகத்திற்குரியது. எதிரான வாதத்தின் நியாயத்தை அறிவதாகும்

குடும்பத்தில் அவரவர் தம்தம் ஆதாயத்தைக் கருதுவது சுயநலம். அதுபோன்ற குடும்பங்கள் நாளடைவில் உடைந்து பிரியும். வசதி குறையும். விவசாயக் குடும்பமானால் நிலம் சிறுசிறு துண்டுகளாகும். அடுத்த தலைமுறையில் சிறுவிவசாயி, விவசாயக் கூலியாவான். வியாபாரம் செய்யும் குடும்பம் குடும்பத்தைப் பாராட்டினால் வியாபாரம் பெருகும். சிறுதொழில் பெரியதாகும். குடும்பத்தில் சுமுகம் வளரும். எதிரியின் நியாயத்தை ஏற்கும் மனம் பண்புள்ளதாகும், சுயநலம் வளராது.

ஸ்தாபனத்தில் தம் சௌகரியத்தைக் கருதுபவர் மட்டுமிருந்தால் ஸ்தாபனம் வளராது. பிணக்கு வளரும்.

முழுமையான இறைவன் பகுதிகளிலான உலகைச் சிருஷ்டித்தான். பகுதி தன்னை வலியுறுத்தினால் மீண்டும் முழுமையை அடையமுடியாது. சுமுகமும், முழுமையும் மீண்டும் இறைவனையடைய உதவும் என்பது The Life Divineஇல் முக்கியக் கருத்து.

1947-இல் காங்கிரஸ், முஸ்லீம்லீக் சுமுகத்தை நாடாததால் நாடு இரண்டாயிற்று. பின்னர் இரண்டு மூன்றாயிற்று. பிணக்கு வளர்ந்தால் ஆங்கிலேயரும், முஸ்லீம்களும் வருமுன் இருந்த நிலையான 56 தேசமாக மாறும்.

உலகம் globalisation ஒன்றாக முனையும் நேரம், நாடும், ஸ்தாபனமும், வீடும் முழுமையை நாடுவது நல்லது. அது நடைபெற மனிதன் தன்னை ஆராய வேண்டும். தன் ஜீவனின் 4 பகுதிகளில் ஒன்றான ஆன்மாவை மற்றதினின்று பிரித்து ஆன்மாவுக்கு மோட்சம் தேடும் பாதை நாட்டுக்கோ, தனிமனிதனுக்கோ இறைவன் வகுத்த பாதையில்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

உடல், உணர்வு, மனம், ஆன்மா நான்கும் இணைவதே பூரண யோகம். அவை எந்த மனிதனில் ஒன்று சேருகிறதோ அவனே நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவான். அவனே global citizen உலகத்திற்குரிய குடிமகனாவான்.

வறுமையிலுள்ள குடும்பம் பிணக்கை விலக்கி, முழுமையை நாடினால், குடும்ப நலனை நாடினால் வறுமையிலிருந்து விடுபடும் என்பது இதன் மூலம் நாமறிவதாகும்.

நஷ்டமாகும் கம்பனி இலாபம்பெற ஒவ்வொரு பகுதியும் அடுத்த பகுதியுடன் இணைந்து செயல்படுவது முறையாகும்.

 • முழுமையை நாடினால் சுமுகமும்,
 • சுமுகத்தைத் தேடினால் வளமும்,
 • வளம் பெற்றால் தெளிவும்,
 • தெளிவு பெறுவதால் ஆன்மவிளக்கமும்,
 • ஆன்ம விளக்கம் ஏற்படுவதால் ஜீவன் பூரணம் பெறுவதும்,
 • பூரணயோகப் பாதைகளாகவும், இலட்சியங்களாகவுமிருப்பதை பகவான் ஸ்ரீ அரவிந்தர் அடிப்படையாக்கி, நிர்வாணம், துறவறம், மாயை என்ற கருத்துகளை, பூரணம், முழுமை, சத்தியம்என மாற்றி அமைக்கிறார்.

P.71 அகந்தையினின்று விலகி, ஆர்வம் நிறைந்த பார்வையோடு உலகை நோக்கினால் ஹிருதய சமுத்திரம் தெரியும்

நிலைமை அப்படியேயிருந்து நம் மனம் மாறுவதால் மட்டும் பிரம்மாண்டமான மாறுதல்கள் வாழ்வில் ஏற்படுவதை நாம் அறிவோம். கடைப் பையனாக வேலை செய்து வந்தவனுக்கு தான் கோடீஸ்வரன் மகன், சிறு வயதில் தொலைந்துவிட்டேன், இன்று வரை என் பெற்றோர்களுக்கு நான் இங்கிருப்பது தெரியாது, இன்று தெரிந்துவிட்டது எனில் அவன் வாழ்வில் ஏற்படும் மாறுதல் பெரியது. அதேபோல் எதிரான செய்தியும் உண்டு. வாழ்வில் உயர்ந்து பதவி வகிக்கும் பொழுது அவருடைய பிறப்பு விசேஷம் அவரும் அறியாதது வெளியில் வந்தால், அத்தனையும் போய்விடும்.

 • உலகம் அற்புதமான சலனமுள்ள சக்தியான சமுத்திரம்.
 • வேதத்தில் இதை ஹிருதய சமுத்திரம்என்றனர்.
 • மனிதன் இதை அறிய முடியும்.
 • கவிகளும், முனிவர்களும் மட்டுமே இதைக் காண்கின்றனர்.
 • நாம் உலகை அகந்தைஎன்பதன் மூலம் காண்பதால் துன்பமும், துயரமும் தெரிகிறது.
 • உலகம் அற்புதக் காட்சி.
 • அகந்தையை அழித்து, ஞானக்கண் திறந்து பார்த்தால், இச்சலனம் தெரியும்.
 • Wordsworth என்ற ஆங்கிலக் கவி இது போன்ற சில வரிகளை எழுதியுள்ளார்.
 • கவிகளும், கலைஞர்களும் இதைத் தவறாது ஏதோ ஓரளவில் காண்கின்றனர்.
 • இந்தப் பார்வைக்கு உலகம் ஜடமாகத் தெரியாது, சலனமான அலைகளாகத் தெரியும்.

The Life Divineஇல் 9ஆம் அத்தியாயம் சத்-புருஷன். மேற்சொன்னது அத்தியாயத்தின் முதல்வரி. அன்னை படத்துள் உயிருடனிருப்பதை, அவர் கண்கள் நகருவதை, படத்தைவிட்டு ஸ்ரீ அரவிந்தர் வெளிவருவதை அன்பர்கள் கண்டுள்ளனர். அவர்கள் யோகத்தை மேற்கொண்டால் ஹிருதய சமுத்திரம் தெரியும். சிருஷ்டிக்கு முன் இருந்தது இச்சமுத்திரம். அதன் முதல் அசைவை வித்து, seed, பீஜம் என்கின்றனர். அதிலிருந்து எழுந்ததே உலகம், பிரபஞ்சம். நாம் அதுபோன்று கருவிலிருந்து உற்பத்தியானோம். அப்படி உற்பத்தியானது உடல். அதேபோல் மனத்திற்கும், உணர்வுக்கும் கருவுண்டு. உணர்வின் கருவை அடைந்தால், வாழ்வு அதிர்ஷ்ட மயமாகும். மனத்தின் கருவை எட்டினால் மனத்தில் மேதை பிறப்பான்.

 • ஆசையையும், அகந்தையையும் விலக்கினால் உணர்வின் கருவான பிராணமயப் புருஷனை அடையலாம் (The Life Divine - Page 169).
 • மனத்தில் கோபம்போன்ற உணர்வு எழும்பொழுது அதனினின்று பிரிந்து விலகினால், முதலில் அகந்தையும், முடிவில் மனத்தின் கருவையும் காணலாம் (The Life Divine – Page 514-515).

ஹிருதய சமுத்திரம் இன்று உற்பத்தியாகவில்லை. உலகம் சமுத்திரமாகவே என்றுமிருக்கிறது. அகந்தையின் பார்வைக்கு அது நாம் காணும் உலகம் - மார்க்கெட், மனிதர்கள், etc., ஆத்மாவின் பார்வைக்கு அது சமுத்திரம்.

P.72 சூரிய மண்டலமும், எறும்புபுற்றும் ஒன்றே, வலிமையும், பலஹீனமும் சமமான சக்தியுடையவை

ஒரு மூட்டை நெல்லும், ஒரு வண்டி வைக்கோலும் மதிப்பிலும், விலையிலும் அளவு பெரியது, சிறியது என்பதால் விலை ஒன்றாக இருப்பதைத் தடுப்பதில்லை. ஒரு வலிமையானவனை உற்பத்தி செய்யவும், பலஹீனனை உற்பத்தி செய்யவும் ஜீவியம் சமமான சக்தியையே செலவிடுகிறது என்று கூறிய பகவான் அடுத்த கட்டத்திற்குப் போய், வலிமை, பலஹீனம் என்பவை குணங்கள். குணங்கட்குப் பின்னுள்ளது ஜீவியம். ஜீவியத்தால் தன்னைப் பகுதியாகத் தரமுடியாது. முழுமையாகவே தரமுடியும் என்று முடிக்கிறார்.

 • ஜீவியம் முழுமையானது.
 • தன்னைப் பகுதியாக்க முடியாதது.
 • தன்னைக் கொடுக்க முடிவு செய்தால் முழுமையாகவே கொடுக்கும்.
 • பெறுபவர் தம்மை வெளிப்படுத்துவது அவரையும், அவர் குணத்தையும் பொருத்தது.

ஒரே சக்தியைப்பெற்ற இருவரில் ஒருவர் சக்தியை வெளிப்படுத்துகிறார். அவரைப் பலசாலி என்கிறோம். அடுத்தவர் தாம் பெற்ற சக்தியை மறைக்கிறார். அவரைப் பலஹீனன் என்கிறோம் என்று பகவான் விளக்குகிறார். தகப்பனாரிடம் சமபங்குபெற்ற அண்ணன், தம்பிகளில் ஒருவர் வீடுகட்டி, நிலம் வாங்கி, கார் வாங்கி, மகனை USAஇல் படிக்க வைத்தால் அவரைப் பணக்காரர்என உலகம் அறியும். அடுத்தவர் பழைய வாழ்வை வாழ்ந்து பணத்தை வெளியில் எடுக்காவிட்டால், அவரை வறுமையானவர் என்று கூறுகிறோம். இருவரும் பெற்றது சமம்.

40 வருஷ அனுபவமுள்ள டாக்டர் 3 மணி நேரம் கான்சர் பேஷண்டைச் சோதனை செய்கிறார். தலைவலியுள்ளவனை இரண்டு நிமிஷம் சோதனை செய்கிறார். இரண்டிலும் அவரது முழுத் திறமை வெளிப்படுகிறது. டாக்டரால் தம் திறமையைப் பகுதியாகத் தரமுடியாது.

நாம் உயர்ந்தவர் ஒருவரையும், எளியவர் ஒருவரையும் பார்க்கப் போனால், இரண்டு இடத்திற்கும் நாம் நம்மைப் பகுதியாக, உயர்ந்த பகுதி, தாழ்ந்த பகுதி எனப் பிரித்து எடுத்துப் போக முடியாது. மனிதன் முழுமையானவன்.

 • மனிதனால் பகுதியாக முடியாது.
 • எங்குச் சென்றாலும் முழு மனிதனே செல்வான்.
 • மனித உடலை எப்படிப் பல பகுதிகளாக்க முடியாதோ, அதே போல் ஜீவியத்தைப் பல பகுதிகளாக்க முடியாது.
 • ஜீவியம் தன்னை எங்கு கொடுத்தாலும், முழுமையாகவே கொடுக்கும்.
 • பெறுபவர் ஜீவியத்தைக் குணமாக மாற்றி வெளிப்படுத்துகிறார்.
 • அப்படி வெளிப்படும்பொழுது பகுதி வெளிப்படும்.
 • பெற்றவர் வெளிப்படாத பகுதியைத் தம் அடிமனத்திலும், ஆழ்மனத்திலும் மறைத்து வைக்கிறார்.
 • தான் மறைத்ததை தாமே அறிய மாட்டார்.
 • தோற்றம் மாறும், விஷயம் மாறாது.

P.74 சக்தி - முடிவற்றது சக்தியே பிரம்மம்

ஹிருதய சமுத்திரம் ஆதியும் அந்தமுமில்லாத அனந்தமானது என்றோம். சக்தி சலனப்படுகிறது என்றால், தத்துவப்படி சலனமற்ற சக்தியுண்டு எனப் பொருள். உலக வாழ்வில் எதற்கும் எதிரானதுண்டு. ஒளி, நல்லது, உயர்ந்தது, சிறியதுஎன எதைக் கூறினாலும் அவற்றிற்கு எதிரான இருள், கெட்டது, தாழ்ந்தது, பெரியது என்பவை எழும். அதேபோல் சலனம் என்றால் சலனமற்ற நிலை - அமைதி - உண்டு என்பது தர்க்கம். சக்தி சலனமற்றிருந்தால் அது என்னவாக இருக்கும்? சலனமான சக்தி ஓடும் நதியாகவும், எரியும் தழலாகவும், வீசும் காற்றாகவும், பரவும் ஒளியாகவுமிருக்கும். சலனமற்ற சக்தியை நாம் கற்பனை செய்ய முடியாது. நமக்குத் தெரிந்த எல்லா சக்திகளும், சலனத்தால் செயல்படுபவை. சலனமற்ற சக்தி, சக்தியாக இருக்காது. சக்தியாக இல்லாவிட்டால், என்னவாக இருக்கும்?

சிருஷ்டியில் உள்ள அனைத்தும் ரூபம், அளவு, குணம் என்ற ஒன்றைப் பெற்றிருக்கும். இலை, மலை, மனிதன், நீர் என எதை நினைத்தாலும் அவற்றிற்கு இம்மூன்றும் இருக்கும். இவற்றுள் ஒன்றாவது இல்லாதது சிருஷ்டியில் இல்லை. சிருஷ்டியில் இல்லாதது, சிருஷ்டிக்கு முந்தைய நிலையாகும். அது பிரம்மம் எனப்படும். சலனமற்ற சக்திக்கு ரூபமில்லை, குணமில்லை, அளவில்லை. எனவே, சலனமற்ற சக்தி பிரம்மம் Absolute எனப்படும்.

பிரம்மம் என்பது எதையும் சிருஷ்டிக்கவல்லது.

 • கவிகளும், கலைஞர்களும் இதைத் தவறாது ஏதோ ஓரளவில் காண்கின்றனர்.

வாழ்வில் உதாரணம்

திறமைசாலிகட்கு கோபம், அவசரம் போன்ற குறை இருப்பது உண்டு. அவை குணங்கள், கெட்ட குணங்கள். கெட்ட குணங்களை அவர் விட்டுவிட்டால், அவரது திறமை அதிகமாகப் பெருகும். அவசரம் போனால் பொறுமை வருகிறது. கோபம் போனால் சாந்தம் வருகிறது. அவை நல்ல குணங்கள். குணங்களுள்ள வரை நாம் மனிதன்என்ற நிலையில் இருப்போம்.

ஆசையை அழிக்க வேண்டும் என்ற திருமூலர் ஆண்டவன் மீதும் ஆசை கூடாது என்றார். ஆண்டவன் என்ற பெயரில் ஆசை எழுந்தாலும், அது தேவையில்லை என்றார். அதே விளக்கத்தை நாம் ஏற்போம். குணம் என்பது மனித நிலை. கெட்டகுணம் போக வேண்டும் என்பதை ஒத்துக் கொள்வோம். அவசரம்போய் பொறுமை வருகிறது. பொறுமை நல்லகுணம். பொறுமையும் குணம் என்ற பெயரில் தேவை இல்லை எனில் அழிவது குணம். குணம் அழிந்தால் மனித நிலையைக் கடக்கிறோம். தெய்வ நிலையையும் கடக்கிறோம். குணம் அழிந்த பின் நாம் பிரம்மமாகிறோம். அவசரம் இருக்காது, பொறுமை இருக்குமோ?

பொறுமை என்ற குணமிருக்காது.

குணத்தைக் கடந்த பிரம்மநிலையில் பொறுமை அளவு கடந்து இருக்கும். ஆனால் பொறுமை குணமாக இருக்காது. எந்தத் திறமையையும் உற்பத்தி செய்யும் திறமை வரும். அவசரத்தைக் கடப்போம். பொறுமை வந்தால், குணம்என்ற உருவத்திலும் பொறுமை தேவையில்லை என்று தியானத்தை மேற்கொண்டால், நாம் எல்லாவற்றிலிருந்தும் விடுபடுவது தெரியும். மௌனத்தைக் கடப்போம், சாந்தியைக் கடப்போம், ஜோதியைக் கடப்போம். எல்லாவற்றையும் கடந்து ‘அது’ என்ற பிரம்மநிலையை, தியானம் அடையும்.

 • அவசரத்தை இழந்ததுபோல் பொறுமை என்ற குணத்தையும் இழந்தால் பிரம்மமாவோம்.
 • பிரம்மம் என்ற நிலையில் திறமை அளவுகடந்து பெருகும்.

சலனத்தைக் கடந்த சக்தி பிரம்மம். குணத்தைக் கடந்த மனம் பிரம்மம். எல்லாவற்றையும் கடந்த நிலை பிரம்மத்திற்குரிய நிலை.

P.74 காலம், இடம் - அனந்தமானவை, முடிவற்றவை

‘ஓர் எண் சொல்’ என்பது ஒரு விளையாட்டு. பதிலாக 12 என்றால், அடுத்த எண் என்ன என்பது அடுத்த கேள்வி, பதில் 13. வேறோர் எண் சொல் என்பதற்கு 25 என்றால், அடுத்த எண் 26 ஆகும். அடுத்த எண் என்று ஒன்றில்லாத எண்ணை நம்மால் கூறமுடியாது. எந்த எண்ணுக்கும் அடுத்த எண் உண்டு. அதனால் எண்கள் அனந்தம் Infinite முடிவற்றவை என்கிறோம். தரையில் ஒரு குச்சியை நட்டு 40 அடி கோடிட்டால், குச்சிக்கு முன்னும், 40 அடியில் உள்ள குச்சிக்குப் பின்னும் தரையுண்டு. முன்பு இடமில்லாத புள்ளியில் குச்சியை நடமுடியாது. நட்ட குச்சிக்குப்பின் இடமளிக்கக் கூடாது என்பது முடியாது. இடம் என்பதை அளவுபடுத்த முடியாது. இடம் முடிவற்றது. இருபுறமும் நீடிக்கக் கூடியது, முடிவின்றி நீடிப்பதற்கு அனந்தம் - அந்தம் எனில் முடிவு, அனந்தம் எனில் முடிவற்றது. ஒரு நாளைச் சொல், அதற்கு முன் நாளில்லாத நாளைச் சொல் என்றால் அதுபோன்ற நாள் இல்லை. 10ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை ஒரு காலம் எனில் 10ஆம் தேதிக்கு முன் 9, 8, 7,... என நாட்களுண்டு. அதே போல் 30க்குப் பின்னாலும் நாட்களுண்டு. அதனால் காலம் என்பதற்கு அளவில்லை, அனந்தம் என்கிறோம்.

நம் மனம் அளவான காலத்திற்குரியது. காலத்தை உற்பத்தி செய்வதே நம் மனம் என்பதால் அளவற்ற காலத்திற்கும் நம் மனம் போக முடியும். நாம் சிந்தனை செய்வதால் உற்பத்தியாவது கற்பனை, இறைவன் கற்பனை செய்வதால் உற்பத்தியாவது காலம் என்பது தத்துவம். நம்முள் உள்ள இறைவன் ஆத்மா. நாம் ஆத்மாவில் இருந்து கற்பனை செய்து காலத்தை உற்பத்தி செய்கிறோம். அதனால் காலம் நம் மனத்திற்குக் கட்டுப்பட்டது என்பது தத்துவம். ரிஷிகளுக்குக் காலம் கட்டுப்படும். நளாயினிக்குக் கட்டுப்பட்டு, சூரியன் அடங்கியது அவளது கற்பின் திறத்தால்.

வாழ்வில் உதாரணம்

எனக்கு இன்று 5000 ரூபாய் சம்பளம். ஓய்வு பெறும்பொழுது 10,000 ரூபாயாகலாம். என் தகப்பனார் பாங்கில் 70 லட்சம் போட்டிருக்கிறார். அவருக்குப்பின் அது எனக்கு என்பவற்றுள் பலன் காலத்தால் பெறுவதாகும். இந்த 10,000 ரூபாய் சம்பளம் எனக்கு இப்பொழுது வருமா? வரும், மனம் காலத்தைக் கடந்தால் வரும். இது அன்பர்கள் வாழ்வில் அடிக்கடி நடப்பதுண்டு. அதை அருளாக ஏற்கிறோம், எப்படி என அறிய முயல்வதில்லை. அறியலாம், பலனை அடையலாம்.

காலத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? பழையவற்றை நினைத்தாலும், எதிர்காலத்தை நினைத்தாலும் மனம் காலத்திற்குட்பட்டுள்ளது. இரண்டையும் நினைக்காவிட்டால் நாம் நிகழ்காலத்தில் மட்டும் Ever-present ஆக இருப்போம். இது முடியாதா? வேலையை நாம் 1/10 கூட செய்வதில்லை. நமக்குள்ள வேலையில் ஈடுபட்டு, நம்மை மறந்தால் நாம் காலத்தினின்று விடுபட்டு - காலத்தைக் கடந்து - நிகழ்காலத்துள் வருகிறோம். ஒருவர் இதுபோல் தம்மை மறந்து 30 நாள் மெய்மறந்து வேலை செய்தால் முடிவான 10,000 ரூபாய் 30ஆம் நாள் வரும்.

70 லட்சம் இன்றே வாங்க வேண்டுமென்றால் தகப்பனார் ஆயுளைப் பற்றி மனம் நினைக்கிறது. அது சரியாகப் படவில்லை. நான் சொல்வது அதில்லை. மனநிலைக்குத் தகுந்தாற்போல் காலம் வேகம் பெறுவதை நாம் அறிவோம். நாம் நம் மனத்தை ஆராய்வோம். காலம் மனத்துள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகர்வது தெரியும். தடையானது அறியாமை, தமஸ், அகந்தை என்று The Life Divine கூறுகிறது. காலம் நம் மனத்தால் ஏற்பட்டதுஎன்று மனம் ஏற்றுக் கொண்டால் அறியாமை விலகும். அந்த அறிவு வளர்ச்சியை உந்தினால் தமஸ் போகும். நான் வேறு என் தகப்பனார் வேறு என்று கருதுவது அகந்தை, பிரிவினை எனப்படும். மனம் உணர்வால் நானும் தகப்பனாரும் ஒன்று என உணர்ந்தால் இரண்டிலொன்று நடைபெறும்.

 1. தகப்பனார் பையனை அழைத்து இன்றே பணத்தை எடுத்துக்கொள் என்பார்.
 2. அல்லது அதே தொகை வேறு வழியாக பையனைத் தேடி வரும்.

இவை காலத்தைக் கடக்கும் முறைகள். மனம் காலத்தை அனந்தம் என அறியுமானால், மனம் அனந்தமாகிறது.

P.74 பிரம்மத்தின் அனந்தம் காலத்தின் அனந்தத்தையும் கடந்த சுத்த அனந்தம்

நல்லவன் என்று நாம் பேசினால் அவன் கெட்டவனில்லை என்றும் பொருள் கொள்கிறோம். உலகில் நல்லவனும், கெட்டவனும் கலந்துள்ள பொழுது நல்லவனைக் கெட்டவனிலிருந்து பிரித்து நல்லவன் என்கிறோம். சுவர்க்கத்தில் அப்பாகுபாடில்லை. ஏனெனில் அங்குக் கெட்டவனில்லை. நல்லவர்கள் மட்டும் இருக்கிறார்கள். அதை ஆங்கிலத்தில் Self-existing Goodness என்கிறார்கள். பெரிய எழுத்து ஆங்கிலத்திலிருப்பதால் Good என்கிறார்கள். தமிழில் அதை சுத்த சிவம் என்று கூறுவதுபோல் - சுத்தமான நல்லவன் - எனலாம். அதேபோல் Self-existing light, Self-existing knowledge என எல்லா 12 அம்சங்கட்கும் - Infinity, Eternity, Silence, Peace, Truth, Good, Knowledge, Force, Bliss, Beauty, Love, Joy கூறலாம். காலத்திற்குள்ளது Infinity. இது finiteக்கு எதிரானது. பிரம்மத்திற்குள்ள Infinity, Self-existing Infinity. அதை சுத்த அனந்தம் எனலாம்.

வாழ்வில் உதாரணம் :

பண்டிட் ஜவஹர்லால் நேருவை பார்லிமெண்டில் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் மறுத்துப் பேசி ‘உங்களுக்கு எங்கள் மீது பொறாமை’ என்றார். அடுத்த நிமிஷம் ஒரே ஆரவாரம். பலரும், எதிர்க்கட்சியினர் உள்பட அவர் கூற்றை மறுத்துப் பேசினர். ஒருவர் மட்டும், ‘நேருஜீக்குப் பொறாமையைக் கற்றுக் கொடுத்தாலும் வாராது’ என்றார். ஒரே கைதட்டல். அத்துடன் விவாதம் முடிந்து விட்டது. நேருவை சுத்தமான ஆரியன் என்றார் ஸ்ரீ அரவிந்தர்.

நமக்கெல்லாம் பொறாமை எழுகிறது. பலர் வெளிப்படுத்துகிறார்கள். மற்றவர் வெளிப்படுத்துவதில்லை. நேருவுக்குப் பொறாமை உணர்ச்சி எழுவதில்லை. அதை Self-existing Goodness என்கிறோம். அன்னையை நெருங்க இது ஓர் உபாயம். எந்தக் கெட்ட குணமும் வெளிப்படக் கூடாது என்பதைவிட எந்தக் கெட்ட குணமும் மனதில் எழக்கூடாது என முயல்வது யோகப் பயிற்சி.

நமக்குப் பணத்தின் மீது நம்பிக்கையிருக்கிறது. முடியாத காரியங்களைப் பணம் சாதிக்கும் என்று நினைக்கிறோம், நம்புகிறோம். இது பணம் வர, உபரியாகப் பெருகத் தடை. பணத்தை நம்புவதால் பணத்திற்கு நம்மைவிட அதிக சக்தியிருப்பதாக நம்புகிறோம். நாமே நம்மைவிடப் பணத்திற்கு அதிக சக்தியைக் கொடுக்கிறோம். அதிக சக்தியுள்ளது நம்மைத் தேடி வாராது. பணம் உபரியாக நம்மைத் தேடி வர வேண்டுமானால்,

 • நமக்குப் பணத்தைவிட அதிக சக்தி உண்டுஎனப் புரிய வேண்டும், நம்ப வேண்டும்.
 • நடைமுறையில் அதைச் சோதனை செய்ய வேண்டும்.
 • பணத்தைவிட நமக்கும், அன்னைக்கும் சக்தியுண்டு என்று உணர ஆரம்பித்தவுடன் பணவரவு பெருகும்.

பணத்தால் முடியாத காரியங்கள் பல. எந்த டாக்டருக்கும் பிடிபடாத தலைவலி, சீசனில்லாதபொழுது தேவைப்படும் மலர், பழம், எவர் பேச்சுக்கும் கட்டுப்படாத மகன், நம்மை அழிக்க நினைக்கும் பணக்கார எதிரி போன்றவர்கள் பணத்திற்குக் கட்டுப்பட மாட்டார்கள். அங்கு பிரார்த்தனை பலித்தால், அன்னை பணத்தைவிட சக்தி வாய்ந்தவர்கள் என மனம் நம்ப வேண்டும். அன்னை பணத்தைவிட சக்தி வாய்ந்தவர் என்பதை நம் மனம் ஏற்றால், நம் மனத்திற்குப் பணத்தைவிட பலம் அதிகம். பணவரவு உபரியாகும், அதிகப்படும். பணத்தால் பெறமுடியாத அட்மிஷன், கோர்ட்தீர்ப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அன்னையால் பெற்றவர், அதை நம்பினால் பணம் அவருக்குக் கட்டுப்படும். அதிர்ஷ்டம் பெறத் தேவையான நிபந்தனைகளில் ஒன்று நமக்கு பணத்தைவிட அதிக சக்தியுள்ளது என நம்ப வேண்டும்.

P.77 Reason, Intuition, Integral experience

பகுத்தறிவு, ஞானம், ஆத்மானுபவம்

பகுத்தறிவு பெரும்பாலும் சரியாக இருக்கும். தவறும் நேரம் உண்டு. அதனால் பகுத்தறிவுக்குப் பொருத்தமானது என்பதால் மட்டும் ஒன்றை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கில்லை. படித்தவனுக்கு அறிவுண்டு எனலாம். படித்தவன் நல்லவன்என்று சொன்னால் அது 60% தான் உண்மையாக இருக்கும். ஞானம் பகுத்தறிவைவிட உயர்ந்தது. ஞானம் என்பதை intuition எனவும் நேரடி ஞானம்எனவும் கூறுகிறார்கள். இன்ஜீனீயர் படித்தவன். அவன் கட்டும் வீடு நன்றாக இருக்கும்என்பது 90% உண்மை. முழுவதும் உண்மைஎனக் கொள்ள முடியாது. கொத்தனார் அனுபவசாலி. பல வீடுகள் கட்டியிருக்கிறார். இன்ஜீனீயர் படிப்பைவிட கொத்தனார் அனுபவத்தை நம்பலாம்என்பது சரி. கொத்தனார் படிப்பில்லாதவர். அனுபவத்தில் அவருக்குத் தெரிந்தது சரி. அவருக்கு அனுபவமில்லாத இடத்தில் சரிவாராது. அத்துடன் கொத்தனார் தம் அனுபவம் தவிர மற்றவர் அனுபவம் தவறு என்பார். R.C. roofing வந்தபொழுது சாரம் போட்டுக் கட்டிய எந்தக் கொத்தனாரும் R.C.யை ஏற்கவில்லை. ‘நிற்காது’ என்று மறுத்தனர். Integral experience ஆத்மானுபவம் என்பது படிப்பின் அடிப்படையில் அனுபவம் பெற்ற இன்ஜீனீயர் வேலை. இவருக்குப் படிப்புண்டு, பல கட்டிடங்களைக் கட்டியவர். அதனால் படிப்பைவிட, படிப்பில்லாத அனுபவத்தைவிட, படித்த அனுபவம் பெரியது.

பகுத்தறிவு தவறலாம்                                                           - இது முதல் நிலை.
நேரடிஞானம் அறிவைவிடச் சிறந்தது                             - இது இரண்டாம் நிலை.
ஆத்மானுபவம் - படிப்பின்பேரில் ஏற்பட்ட அனுபவம் - முடிவானது.

முதலிரண்டும் மூன்றின் பகுதி. நாம் பகுத்தறிவில் ஆரம்பித்து ஆத்மானுபவம் வரை செல்லமுடியும்.

போட்டோ - வீடியோ - கண்ணால் பார்ப்பது.
பகுத்தறிவு - ஞானம் - ஆத்மானுபவம்.

போட்டோவைப் பகுத்தறிவுக்கும், வீடியோவை ஞானத்திற்கும், நேரடியாகப் பார்ப்பதை Integral experience ஆத்மானுபவத்திற்கும் உதாரணமாகக் கூறலாம்.

 1. போட்டோவில் தவறு வரலாம்.
 2. அத்தவறு வீடியோவில் வாராது.
 3. நேரடியாகப் பார்த்துப் பேசுவது முடிவானது என்பதாலும் போட்டோவும், வீடியோவும் அதன் பகுதிகள் என்பதாலும் இம்மூன்றாம் நிலையை நாம் ஏற்கலாம்.

அதனால் போட்டோவை நம்ப முடியாது என்பதில்லை. வீடியோவில் இல்லாததைக் காட்டமுடியாது என்று கூற முடியாது. நேரடியாகப் பார்த்துப் பேசுவது மற்ற இரண்டையும்விட பூரணமானது என்பதையும் மறுக்க முடியாது.

நேரடியாக ஒருவரைப் பார்ப்பதைவிட போட்டோவில் அழகாகத் தெரிவதும் உண்டு. வீடியோ காட்சியில் ஒரு வீடு நேரே பார்ப்பதைவிடக் கவர்ச்சியாக இருப்பதும் உண்டு. இவையெல்லாம் மனிதனே ஏற்படுத்தியவை என்பதால் உயர்வு, தாழ்வு என்பதைக் கருதவேண்டிய அவசியமில்லை. எதையும் வற்புறுத்தாத மனநிலை, எதையும் மறுக்காத மனநிலை மேல்.

P.81 The force is anterior, not the physical instrument

சக்தி முந்தையது, கருவி பிந்தையது

தலையிருக்க வால் ஆடலாமா என்று நாம் அடிக்கடி கேட்கிறோம். உலகத்தின் அமைப்பு வால் ஆடுவதாக அமைந்துள்ளது. அதைச் சாதாரண மனிதன் செய்தால் உலகம் முன்னுக்கு வரமுடியாது, ஆனால் கெட்டுப்போகாது. தலைவர்களே செய்தால் உலகம் பின்னுக்குப் போகும். இராமனை நம்பிய தேரைக்குப் போக்கிடமில்லையன்றோ?

எது முதல்? கோழியா? முட்டையா? என்ற கேள்வியை மனிதன் கேட்டுக்கொண்டேயிருக்கிறான். பதில் தெரியவில்லை. அதனால் கேட்பது நிற்கவில்லை. பணம் முதலில் வந்ததா, மனிதன் முதலில் வந்தானா என எவரும் கேட்பதில்லை. கேட்டால், பதில் எளிதில் வரும். ஆனால், நடைமுறையில்

மனிதனைவிட பணமே முக்கியம் என்று நாம் நினைக்கிறோம்.

பணத்தைப் பேர் அளவில் சம்பாதித்தவர்கள் பணத்தை மிக முக்கியமாகக் கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் பணத்தைச் சம்பாதித்தபொழுது, பல இக்கட்டான கட்டங்களில் இந்தக் கேள்வி எழுந்ததுண்டு. மனிதனை முக்கியமாகக் கருதியவர்கள் மட்டுமே ஜெயித்தனர் என்பதும் உண்மை. வாழ்க்கை ஆரம்பத்தில் நண்பர்கள், குடும்பம், கூட்டாளிக்குத் துரோகம் செய்தவர்களில் 10இல் 9 பேர் விருத்திக்கு வருவதில்லை. பணத்தைவிட குடும்பம், கூட்டாளி முக்கியம் என நினைப்பவர்கட்குப் பணம் சம்பாதிக்கும் திறமையுண்டு. பணமே முக்கியம் எனக் கருதியவர்கள் அப்படிச் சம்பாதிப்பதில்லை. பணம் கருவி, விஸ்வாசம் சக்தியாகும்.

உலகம் சக்தியால் இயங்குகிறது. சக்தி தனக்குரிய கருவிகளைத் தயார் செய்துகொள்கிறது என்பது ஆன்மீகம். விஞ்ஞானி தலைகீழாகப் பேசுகிறான். கருவியியங்குவதால் சக்தி உற்பத்தியாகிறது என்பது விஞ்ஞானியின் வாதம். மின்சாரம் உள்ளே வருவதால் மோட்டார் இயங்குகிறது. மோட்டார் இயங்குவதால் மின்சாரம் உற்பத்தியாகிறது என நாம் எப்படிக் கூற முடியும் என ஸ்ரீஅரவிந்தர் கேட்கிறார். இந்த விஷயத்தில் விஞ்ஞானி மாறினால், விஞ்ஞானமும், ஆன்மீகமும் இணையும் வாய்ப்புண்டு.

படிப்பு முடிந்ததன் அடையாளமாக டிகிரி வருகிறது. டிகிரியைக் கையில் கொடுத்தால் படிப்பு வாராதுஎன்ற சிறு விஷயத்தை அன்பர்கள் ஏற்றுக்கொண்டால், அதன்படி நடக்க முற்பட்டால் அருள் அபரிமிதமாகச் செயல்படும்.

அருள் அதிகமாகச் செயல்பட இம்மனமாற்றம் தேவை. உதாரணமாக நாம் வேலை செய்யும் ஆபீஸ் நமக்கு எல்லா வசதிகளையும் செய்யக் கடமைப்பட்டுள்ளது என நினைப்பவருண்டு. அவர் இதை ஏற்றால் ஆபீசுக்காக நாமிருக்கிறோம். நமக்காக ஆபீசில்லை என்று உணர்ந்து, தம் செயல்களை அதற்கேற்ப மாற்றிக் கொண்டால், 30ஆம் நாள் அவர் வருமானம் இருமடங்காகும். இதேபோல் மனம் மாற வேண்டிய இடங்கள் ஏராளமானாலும், இந்த ஒரு மாற்றத்திற்கு இப்பெரும் பலனுண்டு.

கணவன், மனைவி இதே போன்ற மனமாற்றத்தை ஏற்றால் நரகமாக இன்றுள்ள வீடுகள் சுவர்க்கமாக மாறும். நாம் ஏற்க வேண்டியது அன்னையை. அவர் ஏற்படுத்திய ஸ்தாபனத்தை நாம் அன்னையாகக் கருதுவது தவறாகும். அன்னை வேறு, ஸ்தாபனம் வேறு. அன்னையை மட்டும் ஏற்றால் அருள் செயல்படும். ஸ்தாபனம் வேறு, அதன் போக்கு வேறு. நமக்கு அது உதவாது. இந்த வித்தியாசத்தை நாமறிதல் அவசியம்.

P.84 Understanding the wider purpose of Nature, there is no waste

இயற்கையில் விரயம் என்பதில்லை

விரயம் என்பதை நாம் அறிவோம். தேவைக்கு மேல் திறமையற்றவர் செய்யும் செலவு விரயமாகும். 5ஆம் வகுப்பு படிக்க, கிராமத்துப் பணக்காரர் மகனுக்கு மாதம் 4000 ரூபாய் செலவு செய்து டவுனில் வீடு எடுத்து சமையல்காரனை வைக்கிறார்எனில் அது விரயம். அது போன்ற எல்லா விரயங்களையும் நாம் அறிவோம்.

பல்வேறு காரியங்கள் விரயம்போல் தோன்றினாலும் உண்மையில் அது விரயமாகாது. நேரடிப் பலனை மட்டும் கருதுபவர்கள், அது போன்றவற்றை விரயம்எனக் கருதுவார்கள். வருமானம் குறைவான வீட்டில் பெருமுயற்சி எடுத்துப் பெரும்செலவு செய்து குழந்தைக்குச் சங்கீதம் கற்பிப்பதை அனைவரும் விரயம்என்பர். குழந்தையின் திறமையை அறிந்தவர்கட்கு அது விரயமாகத் தெரியாது. பிற்காலத்தில் குழந்தை பாடகியானால் அது விரயமில்லைஎனப் புரியும். அடுப்பூதும் பெண்ணானால் விரயமாகத் தெரியும்.

நேரடியான விரயமானாலும், மறைமுகமான விரயமானாலும் இயற்கையில் விரயம் என்பதேயில்லைஎன்ற பகவான் மேலும் கூறுவதாவது:-

பல்வேறு காரியங்களை ஒரு செயல்மூலம் சாதிப்பதில் இயற்கைக்கு நிகரில்லை.

அதாவது, நாம் இயற்கையில் விரயம் எனக் காண்பவை உண்மையில் அதிகத் திறமைக்குரிய முறைகள் என்றாகின்றன. மழைபெய்து நீரெல்லாம் கடலுக்குப்போவது, புயலடித்து நாசம் செய்வது, காட்டில் பெய்யும் மழை போன்ற ஆயிரம் செயல்களை நாம் அனைத்தும் விரயம் எனக் கருதுகிறோம்.

அன்னை பக்தர்கள் தங்கள் கடந்த வாழ்வைக் கருதினால் "இப்படி விரயமாக்குவது பொறுக்குமா?'' எனச் சலித்துக்கொண்ட நிகழ்ச்சிகள், பிற்காலத்தில் பெருஇலாபத்தில் முடிந்ததைக் காணலாம். விரயமே கூடாது என்று அன்னை கூறுவதை எப்படி இத்துடன் சேர்த்துப் புரிந்து கொள்வது?

 • திறமையற்றவர்க்கு விரயம் ஏற்படும்.
 • அதனால் திறமையை நாடுபவர் விரயத்தைத் தவிர்க்க வேண்டும்.
 • திறமை பெருந்திறமையானால் நம் நிலைக்கு மீறிய கட்டத்தில் சாதிக்க முடியுமானால், நம் நிலையிலுள்ளவர்க்கு நம் செயல் பெரு விரயம் செய்வதாகத் தெரியும்.
 • நாம் சாதிக்கும் காரியத்தைக் கருதும்பொழுது, விரயமில்லை என்பதுடன் அளவுகடந்து சிறிய முயற்சியால் அளவு கடந்த பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டோம் எனப் புரியும்.

ஹாஸ்டலில் இரவு பகலாய் அனைவரும் பரீட்சைக்குப் படிக்கும் பொழுது ஒரு கெட்டிக்கார மாணவன் லைப்ரரியில் படிப்பதை விரயமாகக் கருதும் நண்பன், "படித்தால் I class வரும்! ஏன் நேரத்தை விரயமாக்குகிறார்?'' என்கிறார். I class வாங்க வேண்டியவன் II class வாங்குகிறான். இதை விரயம் என நாம் ஏற்கிறோம். திறமையும், நேரமும் விரயமாகிவிட்டன.

II class வாங்கி I.A.S எழுதி, லைப்ரரி படிப்பால் பாஸ் செய்தால் அன்றைய விரயம் இன்று பலன் கொடுத்ததைக் காண்கிறோம். இதனுள் உள்ள கருத்துகள்:

 • சிறியவன் பெரிய காரியம் செய்ய அதிக முயற்சி வேண்டும்.
 • இயற்கையில் விரயமில்லை என்பதைப்போல், வாழ்விலும் விரயமேயில்லை.
 • பணம் விரயமானால் அறிவு வளரும், முயற்சி விரயமானால் திறமை வளரும்.
 • எது விரயமாகத் தோன்றினாலும், அடுத்த உயர்ந்த நிலையில் உரிய பலனிருக்கும்.

P.119 Mind Understands not knowledge, but its own analysis

மனத்தால் ஞானத்தை அறியமுடியாது. மனம் தன்னையே அறியும்

"தான் கண்டவாறே காண்பவனை" வள்ளுவர் அறிவற்றவன் என்கிறார். மின் விளக்கைப் பற்றி எல்லா விவரங்களையும் அறிந்தபின் எண்ணெய் எங்கு ஊற்றுவார் எனக் கேட்பவன், தான் அறிந்த எண்ணெய் விளக்கையே நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

மனம் என்பது சிருஷ்டியின் கருவி. தானே சிருஷ்டிக்கும் தன்மையுடையதன்று. பேனாவைப் போன்றது. பேனா எழுதும் கருவி. பேனாவுக்குச் சொந்தமாக எழுத வாராது. நாம் மனம் ஞானபீடம் எனக் கருதுகிறோம். ஸ்ரீ அரவிந்தம் அடிப்படையில் மரபிலிருந்து மாறுபடும் இடங்களில் இதுவும் ஒன்று.

புத்தகத்திலுள்ளதை ஆசிரியர் விளக்கும் திறன் பெற்றவர். புத்தகம் எழுதியது ஆசிரியர் அல்லர். நியூடன், வால்மீகி, தாகூர் எழுதியதை ஆசிரியர் புத்தகத்திலிருந்து வகுப்பில் போதிக்கிறார். வகுப்பு ஆசிரியர் நியூடனோ, தாகூரோ அல்லர் என்பது போல் மனம் ஞானத்தின் உறைவிடமன்று. தம் சிந்தனையை மட்டும் அறியும் கருவி மனம் என்கிறார் பகவான்.

ரிப்பேர் செய்பவனுக்கு ரேடியோவை ரிப்பேர் செய்ய மட்டும் தெரியும். ரேடியோ செய்யத் தெரியாது. நமக்கு வரும் தபாலைக் கொண்டு வருபவன் தபால்காரன். அத்தபாலை எழுதியது தபால்காரனல்லன்.

ஸ்ரீ அரவிந்தர் கூறும் இவ்விளக்கம் உலகுக்குப் புதியது. விஞ்ஞானிகளும், மாயாவாதிகளும் கூறுபவை மனமே ஞானத்தை அறியும் எனப் பொருள்படுவதால் பகவான் மறுப்பாக இக்கருத்தை வலியுறுத்திக் கூறுகிறார்.

சர்க்கார் மக்கள் சார்பாகப் பணத்தை அச்சிட்டு வழங்குகிறது. சர்க்காரிடம் பணம் என்று ஒரு ரூபாயுமில்லை. பணத்தை உற்பத்தி செய்வது மக்கள் உழைப்பு. மக்களின் உழைப்பில் உற்பத்தியான பணத்தை அச்சிட்டு வினியோகம் செய்யும் கடமையைச் சர்க்கார் ஏற்றுக்கொண்டுள்ளது. பொதுவாக நாம் சர்க்காரிடம் எல்லாப் பணமும் இருப்பதாகப் பேசுகிறோம், நினைக்கிறோம். "நான் என்ன கஜானாவா?'' என்கிறோம்.

மனம் என்பது என்ன என்று ஆழ்ந்துணருபவர்க்குக் கவலை என்பதிருக்காது. குழப்பம் எழாது. இறைவனை எளிதில் நினைக்கலாம். நிம்மதியைச் சுலபமாக அடையலாம். மனம் கருவி என்றறிபவன் ஞானத்தை அடைய அது உதவும். Mind is ignorance seeking knowledge. அறிவைத் தேடும் அறியாமை என்பதே மனம் என்கிறார் பகவான்.book | by Dr. Radut