Skip to Content

பகுதி 3

P.169 மனம், உடல், உயிர், மனத்திலிருந்து விடுபட்டால், பிராணமயப்புருஷன், மனோமயப் புருஷன், சத்தியஜீவன் வெளிப்படுவான்

‘மனமும் சத்தியஜீவியமும்' என்ற அத்தியாயத்தில் வரும் கருத்து இது. சிருஷ்டி, பரிணாமம் எதிரானவை. சிருஷ்டியில் சச்சிதானந்தம் ஜடமாகிறது. அதாவது சத் கீழே வருகிறது. பரிணாமத்தில் ஜடம் சச்சிதானந்தமாகிறது. அதாவது மேலே போகிறது. சிருஷ்டி பரிணாமத்தால் பூர்த்தியாகிறது. The Life Divineஇன் பெரும்பாலான அத்தியாயங்கள் சிருஷ்டியின் ஆதியில் ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக இறங்கிவந்து ஜடத்திலும், ஜட இருளிலும் சிருஷ்டியைப் பூர்த்தி செய்து, மீண்டும் பரிணாமத்தை அடியில் ஆரம்பித்து, பிரம்மத்தில் பூர்த்தி செய்யும்வரை விளக்குகிறது. சில அத்தியாயங்கள் சத்தியஜீவியத்துடன் முடியும். ஒரு சில அத்தியாயங்களில் முக்கிய அம்சங்கள்வரை குறிப்பிடுகிறார். சுருக்கமாக இந்த அத்தியாயத்தில்,

  1. சிருஷ்டியில் பிரம்மம் சச்சிதானந்தம், சத்தியஜீவியம், மனம், உயிர், உடல், ஜட இருள்வரை இறங்கி வருவதையும்,
  2. பரிணாமத்தால் ஜட இருளினின்று பிரம்மம் உடல், உயிர், மனம், சத்தியஜீவியம், சச்சிதானந்தம்வழி மீண்டும் பிரம்மமாகும் வரை எழுதுகிறார்.

முக்கியமாக சத்தியஜீவியத்தில் ஆரம்பித்து, உடல்வரை இறங்கி வந்து, உடலினின்று மீண்டும் சத்தியஜீவனையடைவதை வலியுறுத்தி விளக்கமாக எழுதுகிறார். இந்த விளக்கத்தைப் பூர்த்தி செய்ய ஒவ்வொரு கட்டத்திலும் மனத்திற்கும், சத்தியஜீவியத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுதுகிறார். உதாரணமாக,

  • மனம் சர்க்கார் ஊழியன் போன்றது.

அவனுக்குச் சம்பளம், வேலை நிலையாக உண்டு.
பிரமோஷன் படிப்படியாக, சீனியாரிட்டிபடி வரும்.
அதற்கும் நடைமுறையில் அளவுண்டு.
கிளார்க், கெஜட் பதவியை அடையலாம்.
அதற்குமேல் போக சட்டம் இடம் கொடுத்தாலும், வழக்கில்லை.
ஒவ்வொருகட்ட பிரமோஷனுக்குரிய பரிட்சை பாஸ் செய்ய வேண்டும்.
சர்வீஸ் ரிஜிஸ்டர் சுத்தமாக இருக்க வேண்டும்.
பென்ஷன், பிராவிடண்ட் ஃபண்டு (P.F.), விதவா பென்ஷனுண்டு.
எல்லாம் நிலையானவை, எதற்கும் அளவுண்டு, நிபந்தனையுண்டு. 

  • அரசியல்வாதிக்கு எதுவும் நிலையில்லை. 

பதவியிலிருந்தால் சம்பளம் உண்டு.
பென்ஷன் கிடையாது.
பிரமோஷன் உச்சகட்டம்வரையுண்டு.
எந்தக் கட்டத்திலும் பரிட்சையில்லை. சீனியாரிட்டி பார்க்கமாட்டார்கள்.
எலக்க்ஷனே எல்லாம்.
எதுவுமே நிலையில்லை; எல்லாம் உண்டு.

சத்தியஜீவியம் அரசியல் வாழ்வு போன்றது. மனம் சர்க்கார் வேலை போன்றது.

இந்த அத்தியாயத்தின் முக்கிய கருத்துகளை எழுதுகிறேன்.

  1. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிகிறது.
  2. இரண்டின் இடையே மனம் உற்பத்தியாகிறது.
  3. சத்தியஜீவியம் முழுமையின் கருவி, மனம் பகுதியை அறியும் கருவி.
  4. மனம் இரண்டாகப் பிரிந்தவுடன் தன் முழுமையை இழந்துவிடுகிறது.
    ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தையே காணமுடியும்.
    அடுத்த பக்கம் திரும்பிப் பார்த்தால், அடுத்த பகுதி தெரியும்.
  5. மனம் அடுத்த பகுதியைப் பார்க்க மறுத்தால், அஞ்ஞானம் எழுகிறது.
    அஞ்ஞானம் முழுமையைக் காணமுடியாதநிலை.
  6. மனம் தன் செயலில் தன்னை இழக்கிறது. இது அஞ்ஞானத்தை வலுப்படுத்தும்.
  7. மனம் தன்னோடு ஐக்கியமாகிறது.
  8. உயிருடன் மனம் ஐக்கியமாகிறது.
  9. உடலுடன் மனம் ஐக்கியமாகிறது.
    கீழே போகப் போக அஞ்ஞானம் வலுப்படுகிறது. 

அஞ்ஞானத்தினின்று விடுபடும் வழிகள்:

  1. உடலோடுள்ள ஐக்கியத்தினின்று விடுபடுதல்.
    இதனால் உயிரிலுள்ள புருஷன் - பிராணமயப்புருஷன் - விடுபடுகிறான்.
  2. உயிருடன் உள்ள ஐக்கியத்தினின்று விடுபடுதல்.
    இதனால் மனத்திலுள்ள புருஷன் - மனோமயப்புருஷன் - விடுபடுகிறான்.
  3. மனத்திலிருந்து விடுபடுதல்.
    இதனால் சத்தியஜீவன் விடுபடுகிறான். 

இவ்வழி பரிணாமம் பூர்த்தியாகிறது.

மனத்திற்கும், சத்தியஜீவியத்திற்கும் உள்ள வேறுபாடு :

மனம்
சத்தியஜீவியம்
1. பகுதியானது.
முழுமையானது.
2. அஞ்ஞானத்தின் கருவி.
ஞானத்தின் கருவி.
3. ஞானமும், உறுதியும் பிரிந்துள்ளன.
ஞானமும், உறுதியும் இணைந்து உள்ளன.
4. முக்கிய திறமை - organising- முறைப்படுத்துவது.
சுமுகமாக அனைத்தையும் இணைப்பது.
 
5. காலத்தில் செயல்படுவது.
மூன்றாம்நிலைக் காலத்திலுள்ளது.
6. முழுமையை அறியும் திறனற்றது.
முழுமையையும், பகுதியையும்
அறியும் திறனுள்ளது.
7. கீழ் நோக்கிச் செல்வது.
மேல் நோக்கிச் செல்வது.
8. செயல் உரிய நேரத்தில் பூர்த்தியாகும். அவசரப்பட முடியாது.
உடனே பூர்த்தியாகும்.
 
9. கர்மத்திற்குக் கட்டுப்பட்டது.
 
கர்மத்திற்குக் கட்டுப்படாதது.
10. பிரம்மத்தையறியாது.
பிரம்மத்தைவிட்டு அகலாது.
11. மாயையை உற்பத்தி செய்வது.
மாயையை மாயை என மாற்றுவது.
12. ரிஷிகள் மனம் சிருஷ்டித்தது என நினைக்கின்றனர்.
உலகை சத்தியஜீவியம் சிருஷ்டித்தது
என பகவான் கூறுகிறார்.

P.331 அனந்தம் என்பது ஒரே சமயத்தில் மூலமான சாரமுடையது, அளவுகடந்த பெரிய தொகுப்பானது, பல்வகைச் சிறப்புடையது

அந்தம் என்பது முடிவு. முடிவற்றதை அனந்தம் என்றனர். நம்மூரிலிருந்து சென்னைக்கு ஒரு ரோடு போகிறது. அது சென்னையுடன் முடியவில்லை. அங்கிருந்து டெல்லிக்குப் போகிறது. டெல்லியிலிருந்து சிம்லா போகிறது. இந்த ரோடு எந்த ஊருடனும் முடியவில்லை என்பதால் நாம் இதை அனந்தம் எனக் கூறலாம். முடிவற்றதை நாம் அனந்தம் என இதுவரை அறிவோம். பகவான் தலைப்பில் கூறிய அனந்தம் பிரம்மத்தைப் பற்றியது. அது இப்பொருளுக்குக் கட்டுப்படாது. பிரம்மத்தின் அனந்தத்தைக் குறிக்கும். அதன் அம்சங்களை உபநிஷதம், கீதை கூறியுள்ளன.

  1. அந்தமில்லை என்பதுடன் ஆதியுமற்றது. "ஆதியும் அந்தமும் அற்றவன்".
  2. பிரிந்து தோன்றுவது, ஆனால் பிரிக்க முடியாதது.
  3. அசைவற்றது, ஆனால் நமக்குமுன் செல்வது.
  4. அகண்டமாகவும் அணுவாகவும் ஒரே சமயத்திலிருப்பது.
  5. எடுக்க எடுக்க குறையாதது.
  6. அழிவற்றது, அழிக்க முடியாதது, அழியாதது.
  7. சுதந்திரத்தின் எல்லா அம்சங்களையும் உடையது. (உதாரணமாக சுதந்திரத்தை இழக்கும் சுதந்திரமும் உடையது).
  8. எதையும் நிர்ணயிக்கக்கூடியது. எந்த நிர்ணயத்திற்கும் கட்டுப்படாதது.

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா என்ற அத்தியாயத்தில் (Book II, Chapter 11) பகவான், பிரம்மம் மனத்திற்கும், தெய்வீக மனத்திற்கும், சத்தியஜீவியத்திற்கும் எப்படித் தெரிகிறதுஎனக் கூறுகிறார். அத்துடன் பிரம்மத்தின் காலத்தை (காலமும், கடந்ததும் இணைந்தது) விளக்குகிறார். இதுவரை இந்துமத தத்துவ மரபிலில்லாத கருத்து அது. அங்கு மரணம், தீமை, வலி, நோய், துன்பமில்லைஎனவும், அனைத்தும் க்ஷணத்தில் நடக்கும் எனவும் விளக்கிக் கூறுகிறார். அதுவே பகவான் கூறும் அற்புதம். தத்துவமாகக் கூறும்பொழுது அதற்கு மூன்று அம்சங்களைக் கூறுகிறார். பிரம்மத்தின் அம்சம் மூலமானது. பிரபஞ்சத்தின் அம்சம் தொகுப்பானது. தனி மனிதனான ஜீவாத்மாவின் அம்சம் பல்வகைப்பட்டதுஎன்பது தலைப்பு குறிக்கிறது. அதன் சிறுஅம்சத்தை - ஓர் அம்சத்தை - நாம் காமதேனு, கற்பக விருக்ஷம், பிரம்ம தண்டம்என அறிவோம். உலகில் அனைத்துப் பொருள்களும் எல்லா நேரமும் காமதேனுவாகவும் கற்பக விருக்ஷமாகவும் பிரம்ம தண்டமாகவும் உள்ள லோகம் சத்தியஜீவியம் வந்து எழுப்பப்போகும் அற்புத லோகம்என்கிறார். இவை அந்த லோகத்தில் நிரந்தரமான குணங்களாக அமையும்என்கிறார் பகவான். பூலோகம், பிரபஞ்சம், பிரம்ம லோகம் மூன்றும் சேர்ந்த நிலை என்பதை மூலம்-சாரம் எனவும், பெரிய தொகுப்பு எனவும், பல்வகைச் சிறப்பு எனவும் சேர்த்து – அனந்தம் எனக் குறிப்பிடுகிறார்.

P.333 பிரம்மம் நிர்ணயிக்காது என்பது தவறில்லை, குறையில்லை, நிறைவு

வேத காலத்திலிருந்து இந்து மதம் கண்ட ஆன்மீக உண்மை சச்சிதானந்தம். அதையும் கடந்தது பிரம்மம். வேதமும், அதன்பிறகு உபநிஷதமும், வேதாந்தமும், கீதையும் சச்சிதானந்தம், பிரம்மம் என்ற கருத்துகளை ஆமோதித்தனர். ஒவ்வொருவரும் சில மாறுதல்களையும் செய்தனர். அனைவரும் ஏற்ற கருத்துகள்.

  • பிரம்மம் அசைவற்றது, வளராதது, ஆதியும் அந்தமும் அற்றது.

பிரம்மம் அசையாதது என்பதால் உலகத்தை அதனால் சிருஷ்டித்திருக்க முடியாது என்றனர் அனைவரும். இதுவரை இந்து மதம் கண்டது பிரம்மத்தின் ஓர் அம்சம். பிரம்மம் அசையும், வளரும்என்கிறார் பகவான். அதனால் பிரம்மமே உலகை சிருஷ்டித்தது எனவும் கூறுகிறார். ரிஷிகள் கூறியதை பகவான் மாற்றிக் கூறுவதன் காரணத்தை மேற்சொன்ன கருத்து எடுத்துக் கூறுகிறது. கீழ்க்கண்டவற்றைக் கருதுவோம்.

  • மேட்டூர் அணையில் தேங்கி நிற்கும் 120அடி நீர் சக்தி வாய்ந்தது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் பயன்படும் மின்சார சக்தியை அது உற்பத்தி செய்கிறது.
  • மௌனம் சலனத்தைவிட சக்தி வாய்ந்தது. சலனத்தின் திறன் முழுவதும் மௌனத்தில் உற்பத்தியாகிறது.
  • ஜனாதிபதி செயல்படுவதேயில்லை. மௌனமாக பேப்பரில் கையெழுத்திடுகிறார். ஆனால் நாட்டின் எல்லா அதிகாரங்களும் அவரிடம் உள்ளன. பிரதமரை நியமிப்பது அவரே. லோக் சபைக்கு உயிர் அளிப்பது ஜனாதிபதியே. பிரதம நீதிபதி, எலக்க்ஷன் கமிஷனர், ரிஸர்வ்பேங்க் கவர்னர் ஆகியவரை நியமிப்பவரும் அவரே. பிரதமரை அவரால் நீக்க முடியும். அவரைப் பிரதமரால் நீக்க முடியாது.

தத்துவம் :

பிரம்மம் எந்த முடிவும் எடுப்பதில்லை என்பது எந்த முடிவுக்கும் பிரம்மம் கட்டுப்பட்டதில்லை எனக் கூறுவதை நாம் அறியவில்லை. பிரம்மத்தின் அடிப்படை சுதந்திரம்.

பிரம்மத்தின் முடிவான சட்டம் சுதந்திரம். பகவான் அதன் சுதந்திரத்திற்குத் தரும் விளக்கம் வேறு. "சுதந்திரத்தை இழக்கும் சுதந்திரமும் அதனுடையது" என்கிறார். பிரம்மம் சுதந்திரத்தை இழந்து அடிமையாக முடியாது என்பதால், அதன் சுதந்திரம் குறைபடுகிறது. அக்குறைக்கும் பிரம்மத்தை நாம் ஆளாக்க முடியாது என்பது பகவான் விளக்கம்.

P.689 மனிதனுடைய எண்ணம் பிரம்மத்தில் பூர்த்தியாகிறது

மனம் மூன்று பிரிவுகளாக உள்ளது. உடலிலும் மனம் உண்டு. அதை ஜட மனம் என்கிறார். அதன் மையம் மூளை. உணர்வுக்கு மனம் உண்டு. அதன் இருப்பிடம் நரம்பு மண்டலம். உணர்ச்சி, கிளர்ச்சியைக் கடந்த தூய்மையான மனம் உண்டு. அதையே மனம் எனக் குறிப்பிடுகிறோம். இவை மூன்றிற்கும் உச்சகட்ட இலட்சியம் உண்டு.

  1. ஜடமான மனம் முடிவாக எதையும் நம்புவதில்லை (agnosticism).
  2. உணர்வின் மனம் மாயையை இலட்சியமாகக் கொள்கிறது.
  3. மனம் - தூய்மையான மனம் - பிரம்மத்தை இலட்சியமாக நாடி அதில் பூர்த்தியாகிறது.

உடலுக்குத் தொடுஉணர்ச்சியுண்டு. அதற்குக் கண் தெரியாது, காது கேட்காது. மணத்தையும் ருசியையும் அறியும். தொடுவனவற்றை மட்டும் உடல் அறியும். தன்னால் தொட முடியாதவற்றை அதனால் ஏற்க முடியாது, நம்ப முடியாது. அதனால் உடலின் மனம் எதையும் நம்புவதில்லை (agnostic). பிராணன் என்பது உயிர் (vital). அதற்குப் பழக்கம் புரியும், பழகியவரை நம்பும். திருடனானாலும் பிரியமாகப் பழகினால் அவனை நம்பும். எவ்வளவுக்கெவ்வளவு பொய்யாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது வசீகரமாக, ருசியாக, கவர்ச்சியாக இருக்கும். பொதுவாக, சமூகத்தில் அளவுகடந்து பிரபலமானவர்கள் தறுதலைகளாக, ஆபத்தானவர்களாக இருப்பார்கள். உணர்வின் மனம் இல்லாததைப் பிரியமாக நம்பும். அது மாயையை வழிபடக்கூடியது. தூய்மையான மனம் எண்ணத்திற்குரியது. அது நாடுவது கருத்து. நாட்டு மக்கள் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்பதைத் தொட்டுப் பார்க்க முடியாது; ருசித்துப் பார்ப்பது எளிதன்று என்று புரியும்; புரிந்ததை ஏற்கும்; ஏற்றால் ஏற்றபடி நடக்கும். தேர்தலன்று எங்கிருந்தாலும் ஊருக்கு வந்து ஓட்டுப் போடவேண்டும் என முடிவு செய்யும். செய்த முடிவுபடி நடக்கும். இதுவே நம் மனத்தின் பகுதிகளில் உச்சகட்டமானது, உயர்ந்தது, உன்னதமானது. மனிதன் இலட்சியவாதி. அதனால் கருத்தை ஆராய்ந்து ஏற்கிறான். அப்படி ஒரு கருத்தை ஏற்றால், அதைவிட உயர்ந்த கருத்து எதிரே வந்தால், அதை ஆராய்வான். அது உயர்ந்ததானால் அதை ஏற்பான். அறிவாளி உயர்ந்த இலட்சியங்களை நாடிப் போகிறான். அறிவு முதிர்ந்தால் விவேகமாகிறது. விவேகம் கருத்தைக் கடந்ததுண்டா என ஆராய்ச்சி செய்யும். கருத்து என்பது மனிதன் ஏற்படுத்தியது (is a structure). அதற்கு ஒரு கட்டுக்கோப்புண்டு. கட்டுக்கோப்புக்குள் நடக்க கட்டுப்பாடுவேண்டும். மனிதன் தேடுவது இறைவன். இறைவன் சுதந்திரமானவன். உடலுக்குச் சுதந்திரம் எனில் மரணத்தினின்று விடுபடுதல், மரணமிலாப் பெருவாழ்வு, அமரத்துவம். உணர்ச்சி கறுப்பானது. பாசம் அதன் உச்சி. உணர்ச்சி தேடும் உன்னதம் ஒளி. மனமும் சுதந்திரம் தேடுகிறது. கட்டுப்பாடினின்றி மனம் சுதந்திரம் விழைகிறது. அது கட்டுக்கோப்பற்ற (structurelessness) நிலை. அந்த நிலையையுடையது பிரம்மம். அங்கு எந்த ரூபமும், குணமும், கட்டுப்பாடும், கட்டுக்கோப்புமில்லை. அதனால் மனிதனுடைய எண்ணம் பிரம்மத்தில் பூர்த்தியாகிறது.

P.746 பௌத்த மதத்திலும், பரம்பரையிலும், தற்கால கொள்கைப்படியும் ஆத்மா என்பது அழியாததில்லை. அது மனிதன் உற்பத்தி செய்தது

நம்பிக்கை பலவிதம். தெய்வநம்பிக்கை, மனத்தின் நம்பிக்கை, மூட நம்பிக்கை எனப் பலவகைகளுண்டு. பகவத் கீதை தெய்வநம்பிக்கை ஆத்மா மீதுள்ள நம்பிக்கையானால், ஆத்மா எதை நம்பினாலும், மனிதன் அதைச் சாதிப்பான் என்கிறது. சுமார் 150 ஆண்டுகளாக ஐரோப்பாவில் Mind, Matter மனம், உடலில் எது சக்தி வாய்ந்தது என்ற ஒரு கொள்கை விவாதிக்கப்படுகிறது. அதன் விளைவாக மனம் ஒரு விஷயத்தை நம்பினால் அது நம்புபவர்க்குப் பலிக்கும் என ஆயிரம் நிகழ்ச்சிகள் விவாதிக்கப் படுகின்றன.

பௌத்த மதம் நிர்வாணக் கொள்கையை முக்கியமாகக் கொண்டது. அகந்தை, ஆணவம், அகங்காரம் (ego) என்பது நம் பிரச்சினைகட்குக் காரணம் என்பது அவர்கள் அனுபவம். பௌத்த மதம், ஜைன மதம் - நாம் சமணர் என்போம் - அகந்தை வளர ஆரம்பத்திலிருந்தே இடம் தரமாட்டார்கள். ரோட்டில் போகும்பொழுது ஒருவர் தம்மீது இடித்துவிட்டால் அதுவும் தம் குறையெனக் கொள்வார்கள். அவனிடம் மன்னிப்புக் கேட்பார்கள். அவர்கள் பேச்சில் முனைப்பிருக்காது. கைகளைத் தொட்டால் மிருதுவாக இருக்கும். பொதுவாக பௌத்த பிக்ஷூக்கள் கை மிருதுவாக இருக்கும். வேலை செய்த கை முரடாக இருக்கும். மனம் ‘தான்' என்பதைப் பாராட்டினால் அந்த முனைப்பு கண்களில் தெரியும், நடையில் வெளிப்படும், உடலிலும் வெளிப்படும். பௌத்த மதத்தில், 'ஆணவம் என்பது நாமே ஏற்படுத்தியது. நம் முயற்சியால் அதைக் கரைக்கலாம்' என முடிவு செய்து, தவ முயற்சியால் அகங்காரத்தைக் கரைத்துள்ளனர். அதனால் அவர்கள் நடைமுறை அமைதியானதாகும். அது பெருவெற்றி. பௌத்த மதம் அத்துடன் நிற்காமல், ‘ஆத்மா என்பது நாம் ஏற்படுத்தியது. அதையும் தவ முயற்சியால் கரைக்கலாம்' என்றனர். அவர்கள் ஆத்மாவை நம்புவதில்லை. ஆத்மாவுக்கு அமரத்துவம் உண்டுஎனவும் நம்புவதில்லை.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் தம் கொள்கை ஒன்றை விளக்கச் சில முறைகளைக் கையாள்கிறார். அவை :

  1. தர்க்கரீதியாகத் தன் கொள்கையைக் கூறுவது.
  2. பொதுவாக எழும் ஆட்சேபணைகளைக் கூறிப் பதில் சொல்வது.
  3. எதிரித் தரப்புஎன ஒன்றிருந்தால், அவர்கள் எழுப்பும் கேள்விகட்குப் பதில் கூறுவது.
  4. வாழ்க்கையிலில்லை என்பதை எடுத்துக் கூறுவது.
  5. ஏதோ ஓரிடத்தில் உதாரணம் மூலம் விளக்குவது.
  6. எப்படி இந்தத் தவறான எண்ணம் எதிரிக்கு உதயமாயிற்று எனக் கூறுவது.

ஆத்மா, அகந்தை என்பவற்றுள் ஆத்மா பிரம்மத்தின் பிரதிநிதி. அதை இந்தியப்பரம்பரை ஆத்மா, புருஷா, ஈஸ்வரா என்ற மூன்று நிலைகளில் விவரிக்கிறது. காலம் ஆத்மாவின் அகம்; இடம், புறம். சச்சிதானந்தம் சத்தியஜீவியமாகி, சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து, மனம் உற்பத்தியாகிறது.

  • மனம் அஞ்ஞானத்தால் அகந்தையை உருவாக்கியது.
  • மனம் அஞ்ஞானத்தை இழந்தால், அகந்தைக்கு ஆதரவு குறையும்.
  • மனம் அகந்தையை உற்பத்தி செய்து, அஞ்ஞானத்தால் அதை வளர்த்தது.

அதனால் மனம் அகந்தையின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். மனம் தன் ஆதியையடைந்து அகந்தையை உற்பத்தி செய்ததை அறிந்து, மாற்றினால் அகந்தை கரையும்.

மனம் அகந்தையை உற்பத்தி செய்ததால், மனத்தால் அகந்தையைக் கரைக்க முடியும்.  

  • இந்த அனுபவம் தவறாக பௌத்தர்களை மனம் அகந்தையைக் கரைத்ததுபோல், ஆத்மாவையும் கரைக்க முடியும் என்று நினைக்கச் செய்தது.
  • ஆத்மா மனத்தை உற்பத்தி செய்தது. மனம் ஆத்மாவை உற்பத்தி செய்யவில்லை என்பதைப் பௌத்தம் அறியவில்லை.
  • தான் உற்பத்தியாகும் முன் உற்பத்தியான ஆத்மாவை மனத்தால் கரைக்க முடியாது என பகவான் பௌத்தர்கட்கு விளக்கம் தருகிறார். 

இந்தியமரபு

இந்திய மரபில் தவம், யோகம் என்பவை மோட்சம்பெற உதவும் மார்க்கங்கள். அன்றிலிருந்து இன்றுவரை யோகம் எந்த ஸ்தாபனத்திற்கும் கட்டுப்பட்டதில்லை. மேல்நாடுகளில் சர்ச்சுக்கு வெளியே ஒருவர் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது சிரமம். அனுமதி இருக்காது. சில சமயம் ஜெயிலுக்குப் போகவேண்டும். உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். அதுவும் மார்ட்டின் லூதருக்கு முன் சர்ச்சின் ஆட்சி பூரணம்; தெய்வ வழிபாடனைத்தும் சர்ச் கண்ட்ரோலுக்குள் வரும். அதையும் மீறி மலையில், குகையில் சாதுக்கள் இருந்தனர். நம் நாட்டில் தவம் செய்ய எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. வேதம்முதல் யோகங்கள் பல வகைகளாக எழுந்தன. இந்த ஆன்மீகச் சுதந்திரம், மதச் சுதந்திரம் எந்த நாட்டிலும் இன்றுவரை இல்லை. அதனால் ஏற்பட்ட யோகங்கள் பல. அவற்றைப் பயிலுவதில் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு என்பதால் அநேகமாக ஒவ்வொரு முனிவரும் தத்தமக்கேற்ப யோகத்தை மாற்றி அமைத்துள்ளனர். ராஜ யோகம், ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், ஹட யோகம், லய யோகம், மந்திர யோகம், தந்திர யோகம் முக்கியமானவை. இவற்றின் பிரிவுகள் ஆயிரம். பொதுவாகச் சொன்னால்,

  1. யோகி தவத்தால் ஜீவாத்மாவைச் சித்தித்தால் ஜீவன் முக்தனாகிறான்.
  2. சித்தித்தது பழுக்க ஓரிரு பிறவிகளாகும். அதுவரை காத்திருக்கிறான்.
  3. ஜீவாத்மா பரமாத்மாவை எட்டினால் கரைந்துவிடும்என்பது மரபு.
  4. அது மோட்சம்.
  5. அதன் நிலைகள் மூன்று. 

ஜீவாத்மா பரமாத்மாவின் பகுதி. பரமாத்மாவை எட்டிய உடன் அதில் ஜீவாத்மா கரைகிறது என்பது தத்துவம்; அனுபவம். அதனால் மரபில் ஜீவாத்மாவுக்கு அமரத்துவம் இல்லை.

பகவான் கூறுவது

பிரம்மம் மூன்று நிலைகளில் உள்ளது. அவற்றுள் மனிதன் ஒன்று, பிரபஞ்சம் ஒன்று. பிரம்மம் கடந்தது. மனிதன் தவத்தால் பிரம்மம் ஆகலாம். பிரம்மமானபின் பிரபஞ்சத்தின் பிரம்மத்தை எட்டி, பிரபஞ்சத்தில் தன்னைப் பூர்த்தி செய்யலாம். தன்னில் பிரபஞ்சம் பூர்த்தியாக அனுமதிக்கலாம். பின் அதனின்று உயர்ந்து, கடந்த நிலை பிரம்மத்தை அடையலாம். மனிதன் எதைச் செய்வதற்கும் சுதந்திரம் பெற்றவன்.

  1. தான் நேரடியாக பிரம்மத்தை உயர்ந்து அடைவது மோட்சம். அதில், பிரம்மத்தின் முக்கிய அம்சமான பிரபஞ்சம் விட்டுப்போகிறது. படித்து வேலைக்குப் போனவன் வீட்டைக் கைவிட்டது போலாகும்.
  2. மனிதன் தன்னை மறந்து பிரபஞ்சத்தில் ஒன்றி உயர்ந்தால், மனிதனுடைய சிறப்பு வெளிவருவதில்லை. அது கட்சிச் சேவையாகும்.
  3. தன்னைப் பூர்த்தி செய்து, பிரபஞ்சத்திலும் தன்னைப் பூர்த்தி செய்து, பிரம்மத்தை அடைவது, மனிதன் படித்துச் சிறந்து, கட்சியில் சேர்ந்து உயர்ந்து, நாட்டுக்குச் செய்யும் சேவை கட்சியையும், வீட்டையும் பூர்த்தி செய்வதாகும். 

அதுவே பகவானுடைய பூரண யோகம். வாழ்வை ஏற்று, உலகை ஏற்று, பிரம்மத்தில் அவையிரண்டும் பூர்த்தி ஆகும்படி யோகத்தைச் செய்வது.

பௌத்தம்

ஆத்மா என்ற ஒன்றில்லை. இருந்தால், அதைத் தவம் கரைக்கும் என்பதால், ஆத்மாவுக்கு அமரத்துவம் என்ற கேள்வி அவர்கட்கு எழுவதில்லை.

மரபு

நோக்கம் ஜீவாத்மாவைப் பரமாத்மாவில் கரைப்பது என்பதால் ஜீவாத்மாவுக்கு அமரத்துவம் தரும் அவசியம் அவர்கட்கில்லை. ஜீவாத்மா அமரத்துவம் பெற்றால் எப்படி மோட்சம் பெறுவது?

பகவான் நிலை

இவரது கொள்கை ஆன்மீகப் பரிணாமம். மரபு, ஆன்மா ஆதியந்தமற்றது, மாற்றமற்றது, வளர்ச்சியற்றது என்கிறது. பகவான் ஆத்மா வளர்கிறது என்கிறார். வளராத ஆத்மா வளர்ச்சியை நாடுவதே சிருஷ்டி என்பது அவர் கொள்கை. அதனால் மரபு கூறும் ஆத்மாவை ஆத்மா எனவும், தான் கூறும் ஆத்மாவை (Psychic being) வளரும் ஆத்மா எனவும் கூறுகிறார். மனத்தில் ஆரம்பித்து, கீழ்நோக்கி, உயிரின் வளரும் ஆத்மா, உடலின் வளரும் ஆத்மாஎனவும், மேல்நோக்கி, 4 கட்டங்களுக்குரிய வளரும் ஆத்மாவாகத் தொடர்ந்து வளர்கிறது என்கிறார். தெய்வீக மனத்தைத் தாண்டி வளரும் ஆத்மா சத்தியஜீவியத்தை அடைந்தால், அது சத்தியஜீவன் ஆகிறது. அந்நிலையில் அது ஈஸ்வரனாகிறது. அதே சமயத்தில் அது உடலின் வளரும் ஆத்மாவுடன் கலந்து பூரணம் பெறுகிறது எனக் கூறுகிறார்.

பூரண யோகம் ஆத்மாவின் வளர்ச்சியை ஏற்பதால், ஆத்மாவுக்கு அமரத்துவமில்லாமல் இவ்வளர்ச்சி ஏற்படாது என்பது தத்துவம்.

மேலும் விஞ்ஞானமயபுருஷன் (சத்தியஜீவன்) ஏற்பட்ட பின்னும் பரிணாமம் தொடர்ந்து ஆனந்தமயபுருஷன் வெளிவருவான். முடிவாக அவன் மூன்றாம் நிலைக் காலத்துச் சத்புருஷனாவான். ஆத்மாவுக்கு அழிவில்லை என்பது பகவான் கொள்கை. இவர் யோகம் பூர்த்தியாக இக்கொள்கை அவசியம் எனப் பல இடங்களிலும் வலியுறுத்தி எழுதுகிறார்.

ஜடத்திற்கும் சூட்சுமம் உண்டு

நமக்கு இரு மனம் உண்டு                         - மேல்மனம், ஆழ்மனம்

நம் வாழ்வு இரு கூறானது                        -  நாமறிந்த வாழ்வு, ஆழ்ந்த                                                                                  பிராணனுக்குரிய வாழ்வு

ஆத்மாவுக்கும் இரு நிலைகளுள்ளன - ஜீவாத்மா, சைத்தியபுருஷன்

அதேபோல் ஜடத்திற்கும் சூட்சுமம் உண்டு

இவை உயர்ந்த தத்துவங்கள். எனவே நமக்கில்லை என நினைப்பது இயல்பு.

உயர்ந்த தத்துவங்களை உன்னத வாழ்வாக மாற்றுவது ஸ்ரீ அரவிந்தம்.

இக்கருத்தின் ஆன்மீக உண்மையை தத்துவரீதியாக நன்றாக விளக்கி நீண்ட கட்டுரைகளை எழுதமுடியும். வாழ்விலும் பல்வேறு வகைகளில் இதன் உட்கருத்தை எடுத்துரைக்க முடியும். எதற்கும் உதவாது என்று எடுத்தெறியப்பட்டவை எல்லாவற்றையும் மீறி உயர்வதை மட்டும் சில உதாரணங்களால் கூறி, அதன் தத்துவத்தை எடுத்துரைப்பதே என் நோக்கம். 

  • குருடன் ஒதுக்கப்படுவது பழைய வாழ்வு. 

Helen keller மலர்ந்தது புதிய நிலை. 

  • ஊரைவிட்டு வெளியே வாழ்ந்தவன் தாழ்த்தப்பட்டவன். 

நாட்டின் ஜனாதிபதியாகி உலகப் பிரசித்தி பெற்ற விருது பெறுவது நாராயணன். 

  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவு கோலும் மிஞ்சாது என்பது சென்ற நூற்றாண்டு. 

ஏக்கரில் ஒரு லட்சம் சம்பாதிப்பது இன்றைய நவீன விவசாயம். 

  • வழுக்கி விழுந்தவன் எழுந்திருப்பதில்லை. வாழ்வு இனி அவனுக்கில்லை என்பது பழைய நிலை. 

தொழிலில் வழுக்கி விழுந்தவனை வாழ வைக்க ஸ்தாபனம் ஏற்பட்டுள்ளது புதிய நிலை. 

  • திருடனுக்குத் தூக்கு, விபசாரம் அபசாரம் என்பது மனிதன் அறிந்தது. 

திருடனுடைய அடி திருவடி, விபசாரியின் கற்பு தெய்வீகமுடையது என்பது ஸ்ரீ அரவிந்தம். 

ஜடம் என்றால் கல், மண், களிமண், கேலிக்குரியது, அசைவற்றது, எதற்கும் உதவாது என்று நாமறிவோம். ஆன்மீகம் ஜடத்திற்கும் சூட்சுமமுண்டு என்கிறது. ஸ்ரீ அரவிந்தம் அதை ஆழமாக ஆமோதிக்கிறது. மேலும் ஸ்ரீ அரவிந்தம் இருளை அடர்ந்த ஒளி என்றும், தீமை என்பதை நன்மையின் சிறப்புருவம்என்றும், வலியை ஆனந்தத்தின் உச்சகட்டம் என்றும் தொடர்ந்து கூறுகிறது. நடைமுறையில் நமக்கு இது எப்படிப் பயன்படும்?

கஷ்டம் வந்த காலத்து மனிதன் துவண்டு போகிறான். சிலர் சமாளிக்கின்றார்கள். அன்பர்கள் கஷ்டம் வந்த காலத்தில், அதிர்ஷ்டம் எதிரான ரூபத்தில் வந்துள்ளதாக அறியவேண்டும். அறிந்து பயன்பெற்றவர் அனுபவம்,

  • உள்ள வேலையைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில் எடுத்த முயற்சி பெரிய வேலையைத் தந்தது.
  • பாஸ் செய்ய முடியாது என்றவன் மனம் மாறியபொழுது பள்ளியில் முதல்வனானான்.
  • உள்ளூர் பள்ளியை முடிக்காத 9 பேர்களுள்ள குடும்பத்தில் ஒருவன் வெளியூர் பட்டம் பெற்றான். 

ஜடத்தை ஜடமாக ஏற்று மடிவது பழைய வாழ்வு. ஜடத்திற்கு சூட்சுமம் உண்டு என்பதை அறிவது ஸ்ரீ அரவிந்தம். சூட்சுமத்தை அறிந்தால் கஷ்டத்தின் மறுபுறம் தெரியும். அதை ஏற்று, அதன் பயன் பெற முயன்றால் கஷ்டம் மட்டும் தீராது. அதன் மூலம் அதிர்ஷ்டம் வரும்.

The Life Divine என்ற நூலில் 1070 பக்கங்களில் இதுபோன்ற ஓர் உயர்ந்த கருத்து இல்லாத பக்கமில்லை, விளக்கத்திற்குத் தகுந்த கருத்துகளை இப்பகுதியில் எழுதவே இப்பகுதியை ஆரம்பிக்கின்றோம்.

The spiritual fullness of being is eternity

ஜீவனின் ஆன்மீக நிறைவு காலத்தை வெல்லும்

நாம் வாழ்க்கையை எப்படி நடத்துகிறோம்? நம் கையில் எதுவுமில்லை. ஏதாவது ஒரு விஷயம் கூடிவந்தால் அது அதிர்ஷ்டம் என்பது நம் நிலை. பெண்மனம் அடிமை என்ற கருத்தை விளக்க அவள் ஒவ்வொரு பருவத்திலும் தகப்பனார், கணவன், மகன் ஆதரவிலிருக்க வேண்டும் என்று அந்த நாளில் சொல்வதுண்டு. சாதாரண மனிதன் ஆபீஸில் வேலை செய்தால், ஆபீசுக்குக் கட்டுப்படவேண்டும். ரோட்டில் போனால் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும். கட்சியிலிருந்தால் கட்சிக்குக் கட்டுப்படவேண்டும். வீட்டில் தலைவருக்குக் கட்டுப்பட வேண்டும். சாதாரண மனிதன் வீட்டில் தலைவராக இருந்தாலும் அடுத்தவர் பேச்சைக் கேட்க வேண்டும்.

சாதாரண மனிதனுக்கு எங்கும், எப்பொழுதும் சுதந்திரம் இல்லை.

தலைவன், கெட்டிக்காரன், முதலாளி, பணக்காரன், அதிகாரி போன்றவர்க்குச் சுதந்திரம் உண்டு. தலைப்பிலுள்ள கருத்தில் ஜீவனின் நிறைவைப்பற்றி பகவான் எழுதுகிறார். நிறைவு உடல், உணர்வு, மனம், ஆன்மாஎன்ற நிலைகளில் உண்டு. உடல் நிறைவு பெற்றால் ஆரோக்கியமும், உணர்வு நிறைவு பெற்றால் சந்தோஷமும், மனம் நிறைவுபெற்றால் தெளிவும் ஏற்படும்என நாம் அறிவோம்.

பகவான் ஜீவனுடைய ஆன்மீக நிறைவைக் குறிக்கின்றார்.

இதன் உட்கரு ஸ்ரீ அரவிந்தம். இதன்படி, சாதாரண மனிதன் காலத்தை வெல்லமுடியும். சாதாரண மனிதன் எல்லா இடங்களிலும் பிறருக்குக் கட்டுப்படுபவன். காலத்தை வெல்ல யாராலும் முடியாது. யாராலும் வெல்ல முடியாத காலத்தை ஸ்ரீ அரவிந்தம் சாதாரண மனிதனால் வெல்ல முடியும்என்று கூறினால் அதை நாம் புரிந்து பயனடையலாம்.

விஞ்ஞானமும் technologyயும் ஒரு காலத்தில் எவராலும் முடியாத காரியத்தை அடுத்த காலத்தில் எவருக்கும் முடியும் என்ற நிலையை ஏற்படுத்துவதை நாம் அறிவோம். விஞ்ஞானம் வருமுன் அரசர்களும் அனுபவிக்காத வசதிகளை இன்று பாமரர்களும் அனுபவிக்க முடிகிறது.

விஞ்ஞானம் வசதியில் நமக்களித்தது போல் ஸ்ரீ அரவிந்தம் வாழ்வில் கனவிலும் காணமுடியாத பலனைத் தருகிறது.

ஏழைச் சொல் அம்பலம் ஏறாது என்பது இன்றும் முழு உண்மை. காலத்தை வெல்லுதலுக்குச் சில உதாரணங்களைச் சொல்லலாம். வெகு நாளில் நடப்பதைக் குறுகிய காலத்தில் செய்வது காலத்தை வெல்வதாகும். அந்தக் காலத்தில் முடியாததை இன்று செய்ய முடிவதும் காலத்தை வெல்வதாகும். 6 மாதத்தில் பெறும் லைசன்ஸ் பெற சாதாரண மனிதனுக்கு 2 வருஷமாகும். அவனுக்கு அது 6 மாதத்தில் கிடைத்தால் அவன் காலத்தை வென்றவனாவான். அன்னையை அழைப்பது உடலையோ, உணர்வையோ, மனத்தையோ நிரப்புவதைவிட ஆன்மாவைப் பூர்த்தி செய்யும்.

அழைப்பு ஜீவனின் ஆன்மீக நிறைவு.

அழைப்பை மேற்கொண்டவரின் ஆரோக்கியமும், சந்தோஷமும் பெருகுவதைக்கண்டு தொடர்ந்தார். தெளிவு நிறைவுபெற்றது. அடுத்தாற்போல் அவர் பெற்றது என்னஎன்று அவர் அறியவில்லை. நிறைவாக இருந்தது. அன்று அவர் கடையில் 3 நாளைய வியாபாரம் ஒரே நாளில் நடந்தது. 3 நாள் ஒரு நாளாக சுருங்குவது காலத்தை வெல்வதாகும். ஜீவனை ஆன்மா நிறைவுபெறச் செய்யும் வழிகளில் மேற்சொன்னது ஒன்று. இடையறாத நினைவும் அதைச் செய்யும். அதை மேற்கொண்ட ஒருவர் தம் தொழில் சம்பந்தமான கூட்டத்திற்குப் போனார். அங்கு முதல் வரிசையில் உட்காருபவரில்லை இவர். இவர் பெறும் நிறைவு ஆன்மநிறைவு. கூட்டத்துடன் கூட்டமாக உட்கார்ந்திருந்தவரை மேடைக்கு அழைத்து மரியாதை செய்தனர். எளிய மனிதனுக்கு எதிர்காலத்தில் மரியாதை வரலாம். இன்றில்லை. ஜீவன் நிறைவு பெற்றதால் எதிர்காலம் இவர் வாழ்வில் நிகழ்காலமாயிற்று.

ஸ்ரீ அரவிந்தம் எளிய மனிதனுக்குக் காலத்தை வெல்லும் தகுதியை அளிக்கிறது.

The physical mind sees things upside down

ஜட மனம் விஷயங்களைத் தலைகீழே புரிந்து கொள்கிறது

தண்ணீரில் உள்ள பென்சில் உடைந்ததுபோல் தோன்றுவது தோற்றம், உண்மையன்று. 500 ஆண்டுகட்கு முன்வரை சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்று நினைத்தார்கள். உலகம் தட்டையானது என்பதே வெகுநாள் வரை அபிப்பிராயம். இவையெல்லாம் நம் அறியாமை என படித்தவர்கள் அறிவதுபோல் வாழ்விலும், அரசியலிலும், படிப்பிலும் நம் அறியாமை வெளிப்படுவதை பகவான் மேற்கண்டவாறு கூறுகிறார். அவற்றுள் சில,

  • சர்க்கார் வேண்டுமென்ற பணத்தை அச்சடித்துக் கொள்கிறது.
  • ஆஸ்ப்ரின் தலைவலியைக் குணப்படுத்துகிறது.
  • ஊசிபோட்டால் வியாதி குணமாகும்.
  • பட்டம்பெற்றால் அறிவும் பண்பும் வளரும்.
  • நல்லவனுக்கு வாழ்வில் நல்லது நடக்கும்.
  • தெய்வம் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
  • மனிதன் நல்லவன்என்று பெயரெடுக்கப் பிரியப்படுவான். 

மனிதன் உலகத்தை உற்பத்தி செய்தான். உலகிலுள்ள அத்தனையும் மனிதனால் செய்யப்பட்டவை. ஆனால் மனிதன் தான் உற்பத்தி செய்த பணத்தைத் தன்னைவிட முக்கியமாகக் கருதுகிறான். அதற்கு அடிமையாகிறான். இதைச் செய்வது ஜடமான மனம். வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் விஷயத்தைத் தலைகீழே புரிந்துகொள்வதால் ஏற்படுவதே.

சர்க்கார் பணம் அச்சடிக்க கணக்குண்டு. ஒரு ரூபாயும் மேலே அடிக்க உத்தரவில்லை. ஆஸ்ப்ரினுக்கு தலைவலியைக் குணப்படுத்தும் சக்தியில்லை. வலியை உணராத அளவுக்கு தலையை மறுக்கச் செய்யும். ஊசி போட்டால் வியாதிபோகும் என்று பட்டிக்காட்டு மனிதரிடையே முழுநம்பிக்கை நிலவுகிறது. பட்டம் பெற்றால் அறிவு வரும். அதனால் பண்பு வாராது. பண்பு பிறப்பில் வந்தது. கெட்டிக்காரன் சாதிப்பான். நல்லவனால் முடியாது. நாம் தெய்வத்திற்குச் சேவைசெய்ய வேண்டும். நம் தேவைகளைப் பூர்த்திசெய்வது தெய்வத்தின் கடமையன்று. மனிதன் நல்லவனாக இருக்கப் பிரியப்படுவதில்லை. நல்லவன் என்று பெயரெடுக்கப் பிரியப்படுவான்.

பூரணயோகத்தின் முக்கியமான அடிப்படைகளில் ஒன்று :-

அறிவு உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டால் மரணம் உள்பட அனைத்து பிரச்சினைகளும் விலகும்.

ஒரு 15, 20 பேருக்கு  மேல்நாட்டவர் - மஞ்சள்காமாலை வந்தது. ஊரில் இவர்களைச் சார்ந்த டாக்டர்கள் 16 பேர். பல நாட்களாகியும் வியாதி எவருக்கும் குணமாகவில்லை. எனவே டாக்டர்களை மாற்றிப் பார்த்தார்கள். பலன் தெரியவில்லை. ஒரு டாக்டர் என்ன சாப்பிடுகிறீர்கள் என விசாரித்து பப்பாளிப்பழம் சாப்பிடவேண்டாம் என்றார். "மஞ்சள் காமாலை" குணமாயிற்று.

பப்பாளிப்பழம் சாப்பிடுவதால் மஞ்சள்காமாலை சின்னங்கள் தெரிகின்றன. மேல்நாட்டார், டாக்டர்கள், அதை மஞ்சள் காமாலை என்று முடிவு செய்து சிகிச்சை செய்தனர்.

ஜடமான மனம் விஷயங்களைத் தலைகீழே புரிந்துகொண்டு இல்லாத பிரச்சினைகளை உற்பத்தி செய்கிறது என்கிறார் பகவான்.



book | by Dr. Radut