Skip to Content

பகுதி 5

We know God in the descent; we do not know God in the ascent

நமக்குக் கடவுளைத் தெரியும்; மனிதனில் கடவுளை நாம் காணவில்லை 

  • சிவனடியாரைச் சிவபெருமானாகக் கருதினர்.
  • வைஷ்ணவர், அடுத்த வைஷ்ணவனை விஷ்ணுவாகக் கருதினர்.
  • இவை நாட்டில் சிறப்பானவர் வாழ்விலிருந்தது உண்மை. பொதுமக்களிடையே இக்கருத்து நடைமுறையில் ஏற்கப் படவில்லை.
  • கடவுள் உலகை சிருஷ்டித்தார் என்பதை மனம் ஏற்கிறது.
  • ஜடம் பரிணாமத்தால் கடவுளை நோக்கி உயரும்பொழுது, மனிதனாக இருக்கிறது என்ற கருத்தில்லை.
  • கோவிலில் விக்ரஹத்தை கல்லாக நினைக்காமல், கடவுளாக மனிதன் தொழுகிறான்.
  • சிருஷ்டி ஜடத்தில் முடிகிறது. பரிணாமம் ஜடத்தில் ஆரம்பிக்கிறது.
  • பரிணாமத்தில் கடவுள் ஜடத்திலிருந்து வெளி வருகிறார்.
  • அதன் முடிவான கட்டம் இன்று மனிதன்.
  • நாளை அது சத்தியஜீவனாகும்.
  • இக்கருத்தை நாம் ஏற்றால் நாம் மற்றவரைக் கடவுளாக நடத்தவேண்டும்.
  • மற்றவரைக் கடவுளாக நினைத்தால்,
    • அவரைக் குறை கூறக்கூடாது.
    • அவரை வணங்க வேண்டும்.
    • அவர் செய்யும் கெடுதல்களை வரமாக ஏற்க வேண்டும்.
    • உலகில் தீமையில்லை என ஒப்புக்கொள்ள வேண்டும்.
    • Negative என்பதில்லை என்று நம்பவேண்டும்.
    • பிறர் நமக்குச் செய்யும் தீங்கு, நன்மை என எண்ண வேண்டும்.
    • புயலும், பூகம்பமும் ஆண்டவன் திருவிளையாடலாகும்.
    • விஷ ஜந்துக்கள் அற்புதமாகும்.
    • பிள்ளையைக் கொடுமைப்படுத்தும் பெற்றோர் கடவுள் எனக் கூறும்படியாகும்.
    • வயிற்றில் எழும் பசி ஆண்டவனின் குரலாகும்.
    • நாட்டில் போர் மூள்வது ஆண்டவன் செயலெனப்படும்.
    • அணுகுண்டும் நல்லது எனக் கூறும்படி நினைக்கவேண்டும்.
    • கன்னத்தில் விழும் அறை ஆண்டவனின் அன்புக்கரம் தீண்டுவதாகும்.
    • அதே சமயம் அர்ஜுனன் உறவினரைக் கொன்று குவித்தது ஆண்டவனிட்ட கட்டளை என்பதுபோல் நம் வாழ்வில் நாமும் நம் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும்.

The knowledge of the self in the Non-birth and Non-becoming and the changeless spirit within us is immortality

அக்ஷரபிரம்மத்திலும், க்ஷரபிரம்மத்திலும் ஆத்மாவை அறிவது அமரத்துவம்

  • மோட்சம் பெறும் தவசி அக்ஷரப்பிரம்மத்தில் தன் ஆத்மாவை அடைக்கலம் செய்கிறார்.
  • கிருகஸ்தன் க்ஷரப்பிரம்மத்தைத் தன் ஆத்மாவாகக் காண்கிறான்.
  • வேத ரிஷிகள் கண்ட மோட்சம் மேற்சொன்னவாறு அக்ஷர, க்ஷரப் பிரம்மங்களில் தங்கள் ஆன்மாவைக் கண்டதாகும்.
  • அதுவே இயற்கையோடு இணைந்த வாழ்வு.
  • ரிஷிகள் அதை உடலில் கண்டனர்.
  • பகவான் அதையே சத்தியஜீவியத்தில் காணவேண்டும் என்கிறார்.

உதாரணம் :

  • கோபம் வாராதபொழுது நிதானமாக இருக்கலாம்.
  • கோபம் வரும்பொழுது நிதானம் தவறும்.
  • நிதானத்தை இழக்காதவர்க்கு உள்ளும் நிதானமிருக்கும்.
  • கோபமே வாராதவருக்கு உள்ளும், புறமும் நிதானமிருக்கும்.
  • அவருக்கு வேத ரிஷிகள் பெற்றதைப் பெறும் தகுதியுண்டு.
  • பணமில்லாதபொழுது மனம் தாராளமாக இருப்பது, பணம் வந்தபின் இருக்காது. பணம் வந்தபின் முந்தைய தாராளம் அந்நிலையைக் குறிக்கும்.
  • போலீஸ்காரனைப் பிச்சைக்காரன் வம்புக்கு இழுத்தால், போலீஸ்காரனுடைய நிதானம் அதுபோன்றது.
  • கணவனை மனைவி அதிகாரம் செய்யும்பொழுது எரிச்சல் வாராமலிருப்பது கணவனுக்கு நிதானம்.
  • நேருவுக்குப் பொறாமை என M.P.யின் குற்றச்சாட்டு நேருவுக்குச் சிரிப்பு மூட்டியது, அதுபோன்றது.
  • ஈராக் அமெரிக்காவுக்குச் சவால் விட்டால், அமெரிக்கா கொதித்து எழாதது, அதுபோன்றது.
  • புயல் அடிக்க ஆரம்பித்தால், ஒருவர் மனம் நிதானத்தை நாடிப் போனால், புயல் அந்த நிதானத்தால் அடங்கும்.
  • சுத்தமான அதிகாரிக்கு கறுப்புப்பண முதலாளி அவர் சுத்தத்தால் மனம் மாறிப் பணம்தர முன்வாராமல் விஷயத்தைப் பேசுவது வேத ரிஷிகள் பெற்ற யோகத் தகுதிக்கு இவர் உரியவர் எனப் பொருள்.

Submission to the higher is the basis of the freedom of the lower

சிறியது சுதந்திரம் பெற பெரியதற்குப் பணியவேண்டும்

  • சுதந்திரம் என்பது தடைகளை விலக்குவது.
  • பூரணசுதந்திரம் என்றால் தடைகள், அளவுகள், எல்லை, பூரணமாக இல்லாமலிருப்பது - பூரணசுதந்திரம் ஆனந்தமாகும்.
    • தடையிருந்தால் அனுபவிக்கமுடியாது.
    • சமூகம் தடைசெய்யும்.
    • குடும்பம் தடைசெய்யும்.
    • மனச்சாட்சி தடைசெய்யும்.
    • தர்ம நியாயம் தடைசெய்யும்.
    • தடை என ஒன்றில்லாவிட்டால் அனுபவிக்கமுடியவில்லை. முடிவில்லாத அனுபவம் ஆனந்தம்.
    • அகமான ஆனந்தம் புறமான அனந்தம். அனந்தம் அந்தமில்லாதது, முடிவற்றது.
  • பெரியது என்பது பகுதி, சிறியது என்பதும் பகுதி.
    • இரண்டும் சேர்ந்தது முழுமை.
    • சிறியது முழுமைபெற பெரியதுடன் இணையவேண்டும்.
    • பணிவு, சிறியது பெரியதற்குப் பகுதியாவது.
    • பெரியது சிறியதற்குப் பகுதியாக, ஆட்சி செலுத்தவேண்டும்.
    • அதுவே, பெரியது சிறியதுடன் சேர்ந்து முழுமை பெறுவதாகும்.
    • சிறியதற்குப் பணிவும், பெரியதற்கு ஆட்சியும் (domination) முழுமைபெறும் வழிகளாகும்.
    • அடக்கம் அனைத்தையும் தன்னுட்கொள்ளும்.
  • மனிதன் இறைவனை நான்கு அம்சங்களாகத் தேடுகிறான்.
    • இறைவன், ஜோதி, சுதந்திரம், சாகாவரம் ஆகியவை அவ்வம்சங்கள்.
    • ஜீவனில் இறைவன், மனத்துள் ஜோதியாகவும், உணர்வில் சுதந்திரமாகவும், உடலில் அமரத்துவமாகவும் உள்ளான்.
    • ஞானயோகம் ஜோதியை நாடுகிறது.
    • பக்தியோகம் சுதந்திரமான ஆனந்தத்தை நாடுகிறது.
    • ஹடயோகம் உடல் காயகல்பம் பெற முயல்கிறது.
    • காயகல்பம் பெறும் வழிகள் ஆசனம், பிராணயாமம்.
    • ஆனந்தம் பெறும் வழி பணிவு.
    • ஜோதியை அடையத் தேவைப்படுவது தியானம்.
    • இறைவனையடைய வழிசெய்வது இரண்டறக்கலப்பது.
  • பூரணயோகம் இவற்றையே முழுமையாக நாடுகிறது.
    • பூதவுடல் நிலையாக வாழ்வது காயகல்பம். உடல் பொன்மயமாகி வாழ்வுக்கு அமரத்துவம் அளிப்பது பூரணயோக ஜோதி. அது பொன்னொளி.
    • முழுஆட்சி செலுத்த பூரணயோகம் முழுப்பணிவை நாடுகிறது.

Complete emergence of the soul means direct contact on the surface with the Spiritual Reality

ஆத்மா வெளிப்படுகிறது என்றால் நம்முள் உள்ள ஆத்மாவின் உண்மை மேல்மனத்தில் வந்து செயல்படவேண்டும்

  • மேல்மனம் என்பது மனிதன். ஆத்மா என்பது உள்மனம், அடிமனத்துள் உள்ளது.
  • உள்மனத்திலுள்ளது சாட்சிப்புருஷன்.
  • அடிமனத்திலுள்ளது சைத்தியப்புருஷன்.
  • மேல்மனத்திலுள்ள அகந்தை, அகங்காரம்என்பதை நாம் ஆத்மா எனக் கருதுகிறோம்.
  • ஆத்ம வெளிப்பாடு என்றால் என்ன?
    • ஒரு மகான் பெயரில் நடக்கும் பள்ளிக்கு நாம் போனால் அங்கு பிரின்சிபால் சிகரெட் பிடித்துக்கொண்டு ஆபீசில் இருந்தால், "இதுவா அம்மகான் கூறியது?" என நினைக்கிறோம்.
    • அப்பள்ளி மாணவன் ரோட்டில் போகும்பொழுது நாம் இடறிவிழுவதைக் கண்டு ஓடிவந்து உதவிசெய்து, தன் பையிலிருந்து பிளாஸ்திரியை எடுத்து, நம் காயத்தில் போட்டு, வீடுவரை வந்து விட்டுவிட்டுப் போனால், ‘மகான் பெயரில் நடக்கும் பள்ளி என்பதால் பையன் மகான் இலட்சியத்தை வெளிப்படுத்துகிறானே’ என ஆச்சரியப்படுகிறோம்.
    • ஒரு ஸ்தாபனத்தின் ஆதிஇலட்சியம் அதன் உறுப்பினர்கள் செயலில் வெளிப்படுவது, அந்த ஸ்தாபனத்தின் ஆத்மா வெளிப்படுவதற்கொப்பாகும்.
  • நமக்கு நண்பர்கள், உறவினர்கள் உண்டு. அவர்கள் நம் வீட்டிற்கு வரும்பொழுது கவனிக்காவிட்டால், மீண்டும் வரமாட்டார்கள். அவர்கள் குழந்தைகளை நாம் கவனிப்பது அவர்கட்குத் திருப்தி தரும். அவர்கள் வீட்டு வேலைக்காரர்கட்கு நாம் செலுத்தும் கவனம் அவர்கட்கு மேலும் திருப்தி தரும். இதை அந்தஸ்திற்காக அனைவரும் செய்கிறார்கள்.

அந்தஸ்திற்காகச் செய்வதை

ஆத்மாவுக்காகச் செய்வது

ஆத்மா வெளிப்படுவதாகும்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உயர்வு, தாழ்வு இல்லை. வைஷ்ணவன் என்றால் அவன் உயர்ந்தவன். அவர்கள் நடக்க துண்டை எடுத்துப் போடுவார்கள். வைஷ்ணவன் எவனாய் இருந்தாலும் ஆலிங்கனம் செய்துகொள்வார்கள். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார்கள். அது சமூக அந்தஸ்தைக் கருதாமல், வைஷ்ணவ மதத்தைக் கருதுவதாகும்.

  • வாடிக்கைக்காரர்களைக் கம்பெனி உயர்ந்தவர்களாக இன்று நடத்துகிறது. வாடிக்கைக்காரரில் கம்பெனி காண்பது ‘பிரம்மமாகும்’.
  • இந்த நோக்கில் எதிரி நண்பன்.
    • விரயம் செய்பவன் அஸ்திவாரத்தில் சேவை செய்பவன்.
    • சம்பாதிக்காதவன், நாட்டில் சம்பாதிக்க முடியாதவர்களின் பிரதிநிதி. அவன் சம்பாதிக்காமலிருப்பது, சம்பாதிப்பவன் செய்யும் சேவையைவிடப் பெரிய சேவை.
    • அழிப்பவன் அவனைவிட உயர்ந்த சேவை செய்கிறான்.

விரயம், அழிவு, சோம்பேறித்தனம் ஆகியவையும் வாழ்வு. அந்த நிலையில் அன்னைக்குச் சேவை செய்வதாக இவர்களைக் கருதுவது வாழ்வில் யோகத்தை ஏற்பதாகும்.

The spiritual man is not the end; the supramental being would evolve

ஆத்மா முடிவன்று; சத்தியஜீவியம் பிறக்கும்

  • மனிதனே முடிவு என்பது விஞ்ஞானம் கண்டது.
  • கிருத்துவ மதம் மனிதனுக்கு ஒரே பிறவி எனக் கூறுகிறது.
  • இந்து மதம் மனிதன் இறைவனின் படைப்பின் சிகரம் எனக் கருதுகிறது.
  • ஸ்ரீ அரவிந்தம் மனிதனுக்குப்பின் சத்தியஜீவன் பிறப்பான் என்கிறது.
  • சிருஷ்டியில் மனம் - முனிவர் - ரிஷி - யோகி - தெய்வம் - சத்தியஜீவியம் - ஜீவியம் - சத்புருஷன் - பிரம்மம் என்ற நிலைகள் உள்ளன.
  • மனிதப் பிறவி மனம் என்ற நிலைக்குரியது.
  • உபநிஷதம் விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என்பவற்றைப் பற்றிப் பேசுகிறது. எனவே விஞ்ஞானமயப்புருஷன் (சத்தியஜீவன்), ஆனந்தமயப்புருஷன் உண்டு என்றாகிறது.
  • ஆத்மா மனத்தைக் கடந்தது; சத்தியஜீவியம் ஆத்மாவைக் கடந்தது.
  • சித்தி பெற்ற மனிதனை ஜீவன் முக்தன் என்கிறோம்.
  • அவனே Spiritual man ஆத்மாவுக்குரிய பிறவி.
  • மனிதன் மனத்தால் செயல்படுவதைப்போல் Spiritual man ஆத்மாவால் செயல்படுபவன்.
  • அவனை தவசி, முனி, ரிஷி, யோகி என்கிறோம்.
  • அவற்றைக் கடந்த சத்தியஜீவியத்திற்குரியவன் - சத்தியஜீவன் - அடுத்த species என்கிறார் பகவான்.
  • கட்டை வண்டிக்குப் பின் காரும், இரயிலும், விமானமும் வந்தன.
  • எதையும் முடிவு எனக் கூறமுடியாது என்பதை அவை காட்டுகின்றன.
  • மனிதன் இன்ப, துன்பங்கட்காளானவன், கர்மத்திற்குக் கட்டுப்பட்டவன்.
  • சத்தியஜீவனுக்கு இன்பமுண்டு, துன்பமில்லை; கர்மமில்லை.
  • மேலும் ஆன்மீகமனிதன் சாட்சிப்புருஷனுக்குரியவன்.
  • சத்தியஜீவன் வளரும் ஆன்மாவுக்குரியவன்.
  • அவன் வாழ்வு அற்புதமானது.
  • அற்புதம் அன்றாட நிகழ்ச்சியாகும் அவன் வாழ்வில்.
  • சிருஷ்டி வேதனைக்காக ஏற்பட்டதன்று; சந்தோஷத்திற்காக ஏற்பட்டது.
  • அதுவே சிருஷ்டியின் இரகஸ்யம்.
  • பிரம்மம் அனந்தம்; சிருஷ்டி பிரம்மம்; எப்படி மனிதன் முடிவாக முடியும்? மனிதனும் முடிவல்லன்; சத்தியஜீவியமும் முடிவன்று. முடிவில்லை என்பதே முடிவு.

A new consciousness of intuition or overmind begins to form in place of the mentalconsciousness

மனத்தில் ஞானம் உதயமாகி, தெய்வஜீவியம் சேரும் நிலை எழுகிறது

  • சத்தியஜீவியம் புவிக்கு வந்தபொழுது முதலில் மனத்தைத் தீண்டுகிறது. ஏனெனில், மனமே அதிக விழிப்புடையது. உடல் இருண்டிருப்பதால் உடலோ, உணர்வோ சத்தியஜீவியத்தை ஏற்க முடிவதில்லை.
  • யோகி மேலே சென்று (ascent) சத்தியஜீவியத்தைத் தொட்டபின், அது புவிக்கு வரும் (decent). அப்படி வரும்பொழுது மனத்தைத் தீண்டி, மனத்தைவிட உயர்ந்த ஜீவியத்தை - யோகி, தெய்வத்திற்குரியவற்றை - ஏற்படுத்தும்.
  • Overmind என்பது தெய்வங்கள் - விஷ்ணு, சிவன், இந்திரன், காளி, சரஸ்வதி - வாழும் இடம். Intuition ஞானம் என்பது யோகிக்குரிய நிலை.
  • உடலால் உழைப்பவன் படித்தால், மனம் தெளிவடைகிறது; உடலில் உள்ள அணுக்களில் மனம் உதயமாகும். அதுபோல் சத்தியஜீவியத்தை நோக்கி மனம் உயர்ந்தால், மனத்தில் சத்தியஜீவியம் உதயமாகும். அதன்முன் தெய்வஜீவியமும், ஞானமும் உதயமாகும்.
  • மனிதநிலை,
    • ஒரு பிரச்சினை வந்தவுடன் மனம் யோசனை செய்வது மனிதநிலை.
    • ஆசையோ, கோபமோ எழுவது விலங்குநிலை.
    • ஆசை, கோபம்போன்ற உணர்வுகள் எழாமல், யோசனையும் பிறக்காவிட்டால், அது ஜடத்திற்குரிய நிலை.
    • மௌனம் தானே குடிகொள்வது முனிவர்நிலை.
    • பிரச்சினை மனத்தில் காட்சியாக எழுவது ரிஷியின் நிலை.
    • உடனே யோசனையுமின்றி, பிரச்சினை முழுவதும் புரிவது யோகிநிலை.
    • புரியும் அவசியமுமில்லாமல் தெரிவது தெய்வநிலை.
    • புரியாமல், தெரியாமல் பிரச்சினையுடன் இரண்டறக் கலந்து திளைப்பது சத்தியஜீவியநிலை.
  • சத்தியஜீவியத்தைக் கடந்த நிலைகள் ஆனந்தம், ஜீவியம், சத், பிரம்மமாகும்.
  • எந்த உயர்ந்த நிலையையும் நிஷ்டையில் ஒரு க்ஷணம் எட்ட மனிதனால் முடியும்.
  • பெற்றதை நிரந்தரமாக அனுபவிக்க அனுபவம் (experience) சித்தியாக மாறவேண்டும்.

The human reason attempts to define and limits by negation the Infinite and Illimitable

அனந்தமான முடிவற்றதை அறிவு இல்லாததைக்கொண்டு விளக்க முயல்கிறது

  • விளக்கம் என்றால் அதன் பகுதிகளையும், அம்சங்களையும் கூறி விவரிப்பதுஎனப் பொருள்.
  • ஆசிரமம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அங்குள்ளவர் எப்படிப் பட்டவர், யார் அவர் எனக் கூறுவது விளக்கம் எனப்படும்.
    • வாழ்வைத் துறந்து இறைவனைத் தேடுபவர் சேருமிடம் ஆசிரமம்.
    • அவர்கள் தியானத்தை மேற்கொள்பவர்கள்.
    • முடியும், தாடியும் உடையவர்.
    • காவி உடுப்பவர் போன்றவை விளக்கம் எனப்படும்.
  • பிரம்மம் என்பது ஒன்று. அதுபோல் வேறொன்றில்லை என்பதால் பிரம்மத்திற்கு உதாரணமாக எதையும் கூறமுடியாது. சூரியன் ஒன்றே. அதற்கு உதாரணம் கூறமுடியாது.
  • யானையை விளக்கவேண்டுமானால், அது 4 கால்கள் உடைய பிராணி என்பதால், மாட்டை உதாரணமாகக் கூறலாம். துதிக்கை உள்ள பிராணியில்லை என்பதால் துதிக்கைக்கு உதாரணம் கூறமுடியாது. இது உள்ளதைக்கொண்டு விளக்குவதாகும். "இப்படியில்லை" எனக் கூறுவது negative definition. யானையை விளக்க அது மேஜை போலில்லை, மரம் போலில்லை, பேனாவைப் போலில்லை என்றால் என்ன புரியும்? பேனாவைப்போல் யானையில்லை என்பது சரி. அதனால் யானை விளங்குமா? விளங்காது.
  • நாம் அறிபவை அனைத்தும் - கடல், மரம், உணவு, ஊர், பேப்பர், குழந்தை போன்ற அனைத்தும் - அளவுக்குட்பட்டவை. அளவுக்குட்படாதது நம் மனத்திற்கு எட்டாதது. அளவுக்குட்படாததை அளவுக்கு உட்பட்டவற்றைக் கொண்டு விளக்க முயல்வது பயன் தாராது.
  • பிரம்மத்தை விளக்க முடியாது. விளக்க முற்படுபவர்கள் பயன்படுத்தும் முறை இரண்டு.
    • இல்லாததைக்கொண்டு விளக்குவது.
    • அனந்தமானதை, அளவுக்குட்படாததை அளவுக்கு உட்பட்டதன்மூலம் விளக்குவது.

இவ்விரண்டு முறைகளும் பயன்தாரா.

  • ஏதாவது முறை பயன் தருமா?
    • பலர் பலவிதமாகக் கூறிய அனைத்தையும் தொகுத்து மனத்தால் நிறைவுசெய்து பார்த்தால் ஓரளவு பயன் தரும்.
    • ஒரு மெஷினைப் பிரித்தபின், அதன் பகுதிகள் அனைத்தையும் ஒரு கூடையில் சேர்த்தால் அது மெஷினாகாது. எல்லாப் பகுதிகளின் தொகுதி முழுமையாகாது. இவை அனைத்தும் பொருத்தமாகச் சேர்ந்தால் அது மெஷினாகும் என்பதை மனதால், அறிவால் பூர்த்திசெய்யலாம். அப்படி பிரம்மத்தை அறிய முற்பட்டால் நாம் மனத்தைக்கடந்து சத்தியஜீவியத்தைத் தொடுவதால் ஓரளவு புரியும்.

The Timeless Eternity and Time Eternity are the same Eternity in double status

காலமும், காலத்தைக்கடந்ததும் ஒன்றின் இரு வேறு அம்சமான தோற்றங்கள்

  • வியாசபாரதமும், வில்லிபாரதமும் ஒரே கதையின் இரு மொழிக் காவியங்கள்.
  • 5 வயதுக் குழந்தை வளர்ந்து 50 ஆண்டுகள் நிரம்பினால், சிறுவனும், பெரியவரும் ஒரே மனிதனின் இரு பிராயங்கள்.
  • இராமனும், கிருஷ்ணனும் ஒரே விஷ்ணுவின் இரு அவதாரங்கள்.
  • புருஷனும், பிரகிருதியும் ஒரே ஜீவனின் இரு நிலைகள்.
  • முதன்மந்திரியும், பிரதமமந்திரியும் ஒரே சர்க்காரின் இரு தலைவர்கள்.
  • The Life Divineஉம், Synthesis of Yogaவும் ஒரே யோகத்தின் இரு முகங்கள்.
  • அரபிக்கடலும், வங்காளவிரிகுடாவும் ஒரே ஜலப்பிரவாகத்தின் இரு கரைகள்.
  • அண்ணனும், தம்பியும் ஒரே பெற்றோரின் இரு பிள்ளைகள்.
  • சத்தும், சித்தும் ஒரே பிரம்மத்தின் இரு நிலைகள்.
  • காலமும், இடமும் ஒரே ஜீவியத்தின் அகமும், புறமுமான தோற்றங்கள்.
  • ஆத்மாவும், சத்தியமும் சத்தின் அகமும், புறமுமான இரு கட்டங்கள்.
  • மாம்பலமும், திருவல்லிக்கேணியும் ஒரே சென்னையின் இரு பகுதிகள்.
  • எண்ணும், எழுத்தும் ஒரே அறிவின் இரு தோற்றங்கள்.
  • இந்தியாவும், பாக்கிஸ்தானும் பாரதமாதாவின் இரு பகுதிகள்.
  • இராணுவமும், கடற்படையும் ஒரே சேனையின் இரு அங்கங்கள். கல்லூரியும், பல்கலைக்கழகமும் ஒரே கல்வியின் இரு கட்டங்கள்.
  • சரித்திரமும், பூகோளமும் ஒரே படிப்பின் - உலக அறிவு - இருபுறங்கள்.
  • குறளும், வெண்பாவும் ஒரே செய்யுளின் இரு உருவங்கள்.
  • பேப்பரும், பேனாவும் எழுத்துக்குரிய சாதனங்களின் இரு கட்டங்கள்.
  • பிறப்பும், இறப்பும் ஆத்மவாழ்வின் ஆரம்பம், முடிவுஎன்ற கட்டங்கள்.
  • அழகும், அன்பும் ஆனந்தத்தின் இரு வெளிப்பாடுகள்.
  • ஏகனும், அநேகனும் – One and the many - ஒரே பிரம்மத்தின் இரு உருவங்கள்.
  • கையும், காலும் ஓர் உடலின் இரு பகுதிகள்.
  • இடக்கையும், வலக்கையும் கைகளே.
  • அதேபோல் காலமும், காலத்தைக்கடந்ததும் அனந்தத்தின் இரு நிலைகளாகும்.

The spiritual being in us which is of the Supreme Existence can know the Supreme Reality. It is self-evident to it

மனம் ஆத்மாவை அறியவல்லதன்று. ஜீவன் சத்தைச் சேர்ந்தது என்பதால் அது சத்தியத்தை அறியும்

  • சிருஷ்டியின் ஆதி பிரம்மம்.
  • சிருஷ்டியின் முதற்படி "சத்" எனப்படும்.
  • "சத்" ஏற்பட்டவுடன் "அசத்" ஏற்படுகிறது.
  • "சத்" என்பது சத்புருஷனாகிறது.
  • சத்தியம் சத்புருஷனின் புறவெளிப்பாடு.
  • சச்சிதானந்தம் என்பதே முடிவு என்ற ரிஷிகள், அதை "சத்" எனவும், "சித்" எனவும், "ஆனந்த" மெனவும் கண்டனர்.
  • "சத்" முதற்கட்டம். "சித்" இரண்டாம் கட்டம். "ஆனந்தம்" மூன்றாம் கட்டம்.
  • சச்சிதானந்தம் அகம் எனவும், சத்தியஜீவியம் புறம் எனவும் கூறினர்.
  • சத்தியஜீவியம் மீண்டும் இரண்டாகப் பிரிகிறது.
  • அது அகம், புறம் எனப்படும். காலத்தைக் கடந்த நிலை, காலம் எனவும் பிரிகிறது.
  • காலம் இரண்டாகப் பிரியுமிடத்தில் மனம் உற்பத்தியாகிறது.
  • மனம் காலத்திற்குட்பட்டது.
  • நாம் என நாம் அறிவது சத்புருஷனுடைய சத்தியம்.
  • நம்மை நாம் மனம்எனத் தவறாக அறிகிறோம்.
  • மனத்தால் நம்மை அறிய முயல்வது பகுதி முழுமையை அறிய முயல்வதாகும்.
  • நாம் என்ற முழுமை பிரம்மம்.
  • பிரம்மம் என்ற முழுமையை மனம் என்ற பகுதி அறிய முடியாது. சத்தியம் அறிய முடியும்.
  • மாணவன் ஆசிரியரை அறிவின் உறைவிடமாகக் கருதலாம். அது உண்மையன்று.
  • ஆசிரியர் மொழி, கணிதம், விஞ்ஞானம், சரித்திரம், போன்ற பாடங்களைப் போதிக்கிறார்.
  • பாடம் என்பது ஞானத்தின் ஒரு பகுதி. மொழி, கணிதம், விஞ்ஞானம், சரித்திரம் சேர்ந்தது பாடம்.
  • பாடத்தைக் கண்டது பெரிய ஆத்மா.
  • ஐன்ஸ்டீன், வால்மீகி, பாஸ்கராச்சாரியார், ஸ்மித் போன்றவர்கள் பாடங்களைக் கண்டுபிடித்தனர்.
  • பாடத்தை அறிந்தவர்கள் பேராசிரியர்கள். அவர்கள் பாடத்தைக் கண்டுபிடித்தவரில்லை. பாடத்தை அறிந்து போதிப்பவர்கள். அவர்களில் சிலர் பாடபுத்தகத்தை எழுதுகின்றனர். புத்தகத்தை எழுதுபவர் பாடத்தைக் கண்டுபிடிக்கவில்லை. எப்படி பாடத்தைப் போதிப்பது என அறிந்தவர்.
  • பாடப்புத்தக ஆசிரியர் எழுதியதை நமக்கு - மாணவனுக்கு - போதிப்பவர் வகுப்பு ஆசிரியர்.
  • வகுப்பு ஆசிரியருக்கும், பாடத்தின் ஆதிக்கும் வெகுதூரம். ஐன்ஸ்டீன் போன்றவர் பாடத்தை அறிவர். வகுப்பு ஆசிரியர் பாடத்தை அறிய முடியாது.
  • மனம் வகுப்பு ஆசிரியரைப்போன்றது. ஐன்ஸ்டீன் போன்றவர் சத்தியம் போன்றவர்.
  • மாணவன் வகுப்பு ஆசிரியரை முடிவாகக் கருதி, அவரால் பாடத்தின் ஆதியைக் காண முனைவதுபோல் மனம் சத்தியத்தை - பிரம்மத்தை - அறிய முயல்கிறது. அதனால் முடியாது.
  • நாம் மனத்தைக் கடந்து சத்தியத்தை அடைந்து அதன்மூலம் பிரம்மத்தை அறிய முனைந்தால், அது பலிக்கும். ஏனெனில் சத்தியம் பிரம்மத்தை தானென உணரவல்லது.

Occult Science is the knowledge of the subliminal in us as well as the world

நம்முள்ளும், உலகிலும் அடிமனத்தை அறிவது சூட்சுமச் சாஸ்த்திரம்

  • நமது புலன்களால் அறிவது ஜடலோகம், ஸ்தூல உலகம் எனப்படும்.
    • கண்களால் காண்கிறோம்.
    • காதால் கேட்கிறோம்.
    • மூக்கால் முகர்கிறோம்.
    • நாக்கால் ருசிக்கிறோம்.
    • கையால் தொடுகிறோம். இவை புலன்களால் அறியப்படுபவை.
  • புலன்கள் மேலெழுந்தவாரியானவை.
    • நமக்குண்டானவை 5 புலன்கள்.
    • மனிதன் 12 புலன்களைப் பெற்றிருந்தான். மனம் வளர ஆரம்பித்தபின் 7 புலன்கள் மறைந்துவிட்டன என அன்னை கூறுகிறார்.
    • ஆப்பிரிக்காவில் நீக்ரோக்கள் தரையில் காதை வைத்து தொலைவில் வரும் மனிதனை அறிவர்.
    • ஒட்டகத்திற்கு 1 மைல் தூரத்திலுள்ள தண்ணீர் தெரியும்.
    • யானைக்குத் தொலைவிலுள்ள பள்ளம் தெரியும்.
    • நாய், பூனைக்கு எங்குப் போனாலும் வந்த வழி தெரியும்.
    • இப்புலன்களை மனிதனும் ஒரு காலத்தில் பெற்றிருந்தான்.
  • அடிமனம் நம்மில் உள்ளது; உலகிலும் உள்ளது.
    • நாம் மறந்தவற்றை அடிமனம் நினைவு வைத்திருக்கும்.
    • இராமன் இலங்கைக்குப் போன வழியும், கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் விளையாடியதையும் அடிமனம் அறியும். அது உலகின் அடிமனம்.
    • நமது அடிமனம் பூர்வஜென்ம ஞானம் உடையது.
    • விஷப்பூண்டைப் பார்த்தால் மாடு அதை விஷம் என அறியும்.
    • ஆயுர்வேதம் என்பது ஆயுள்வேதமாகும். அதைக் கண்டு பிடித்தது அடிமனம்.
    • கைஎலும்பு முறிந்துவிட்டால் அடிமனம் அதைப் பார்வையால் கூட்டிவைக்கும்.
  • உலகின் சரித்திரம் - நினைவு - சூட்சும உலகில் உள்ளது. அடிமனம் அங்குச் செல்லவல்லது. அதைக் கண்டு அறியவல்லது.
    • இதுவரை சிருஷ்டியில் நடந்தவை, இனி நடக்கப்போவது ஆகியவற்றை அடிமனம் சூட்சுமப் புலனால் அறியவல்லது.
    • அதற்கு நினைவு இல்லை. பார்வையுண்டு. திரிகாலத்தையும் பார்க்கும் திறனுள்ளது அடிமனம். அதையறியும் சாத்திரம் சூட்சும சாஸ்த்திரம்.

The consciousness-Force that creates the world does not reveal itself to us

உலகை சிருஷ்டித்த சக்தியை நாம் காண்பதில்லை

  • குழந்தை பால் சாப்பிடுகிறது, விளையாடுகிறது, தூங்குகிறது. எப்படிப் பால் வந்தது, தாயார் தன்னைத் தூங்கவைத்தாள், படுக்கவைத்தாள் எனக் குழந்தை அறியாது.
  • நாம் வேலைக்குப் போகிறோம், வண்டி ஓட்டுகிறோம், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். இதுபோல் ஏராளமான காரியங்களைச் செய்கிறோம். வேலை எப்படி வந்தது, வண்டியை யார் செய்தது, ரோடு யார் போட்டது, பள்ளியை நடத்துவது யார் என நாம் ஓரளவு அறிவோம். ஆனால் அவற்றை நாம் கருதுவதில்லை.
  • மூச்சு விடுகிறோம், காற்றேது? நெஞ்சு துடிக்கிறது, தெம்பு எப்படி வந்தது? நிலத்தில் கத்தரிக்காய் எப்படிக் காய்த்தது, சூரியன் ஏன் உதயமானான் என நினைக்க நமக்குத் தோன்றுவதில்லை. உலகை நடத்தும் சக்தி இவற்றின் பின்னாலுள்ளது. தன்னை வெளிப்படுத்துவதில்லை.
  • முக்கியமானவர் வெளியில் நடமாடுவதில்லை. மூலவர் நகருவதில்லை. உற்சவர் வீதிவலம் வருவார். மூலவரே முடிவன்று. மூலம் அதற்குப் பின்னுள்ளது.
  • நமக்கு நினைவு, அறிவுண்டு. அறிவு பின்னணியிலும், நினைவு முன்னேயும் நிற்கும். நாம் அறிவை மறந்து நினைவையே அறிவெனக் கொள்கிறோம்.
  • இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை செல்வம் முன் தலைமுறைகளைக் கருதாது. கொஞ்ச நாளானால் தெரியாது.
  • செடிக்கு நாம் தண்ணீர் விடுகிறோம், பச்சென இருக்கிறது. வறண்ட காலத்தில் செடிக்கு எவ்வளவு நீர் விட்டாலும் பச்சென இருப்பதில்லை. பூமிக்கடியில் ஈரமிருப்பதால் மேலே பாய்ச்சும் நீர் செடியை வளமாக்கும். நாம் அடிநீரை அறிவதில்லை.
  • உற்சவர் பின் மூலவர், அதன்பின் மூலமான சிவம், சிவபெருமான் overmental god தெய்வலோகத்திற்குரியவர்.
    • சத்தியஜீவியம் அதைக் கடந்தது.
    • ஜீவியம் அதையும் கடந்தது.
    • ஜீவியத்தில், சித்-சக்தி உற்பத்தியாகிறது. அது தன்னை வெளிப்படுத்துவதில்லை.
    • ஜீவியமும் முடிவன்று, ஜீவன் (சத்) அதற்கப்புறமுள்ளது.
    • சத் என்பதும் பகுதி. அசத் மறுபகுதி.
    • இரண்டும் சேர்ந்தது முழுமை.
    • முழுமையைக் கடந்தது மூலம் - அது பிரம்மம்.
    • நாம் ஜடத்தை ஜடப்பிரம்மம் எனவும், ஆனந்தத்தை ஆனந்த பிரம்மம் எனவும் கூறுகிறோம். பிரம்மம் கடந்தது. அதை எவரும் நினைப்பதில்லை. அதுவும் தன்னை வெளிப்படுத்துவதில்லை.

Religious injunction solves the problem of the individual, not for the whole

மதவழிபாடு தனிமனிதனுடைய பிரச்சினையைத் தீர்க்கும்; மனிதகுலத்திற்குப் பயன்படாது

  • ஸ்ரீ அரவிந்தம் நவதத்துவம் எனப்படும். "நவ" என்றால் புதியது.
  • என்ன புதியதுஎன்பதை பல கோணங்களில் கூறலாம்.
  1. ஜடமும், ஆன்மாவும் ஒன்றே.
  2. முரண்பாடு உடன்பாடு.
  3. ஜீவாத்மாவே பரமாத்மா.
  4. பகுதி முழுமையைவிடப் பெரியது.
  5. உலகில் தீமை படைக்கப்படவில்லை.
  6. இதுவரை ஆன்மீகம் தனிமனிதனுடையது. ஸ்ரீ அரவிந்தம் தனிமனிதனுடைய ஏகபோக பொக்கிஷத்தைச் சமூகம் (collectivity), மனிதகுலத்திற்குத் தருகிறது. 
  • ஸ்ரீ அரவிந்தம் மரபிலிருந்து 30 வகைகளாக மாறுபடுகிறது. அவற்றுள் முக்கியமான சில இங்குச் சொல்லப்பட்டது. இக்கட்டுரைக்குரியது தனிமனிதன்.
  • ஸ்ரீமத் பகவத்கீதை வேத உபநிஷத சாரம். கீதை தான் கூறும் சரணாகதியை வேதம், உபநிஷதத்தைப் படித்துப் பயின்று பெறமுடியாது எனத் திட்டவட்டமாகக் கூறுகிறது. பகவான் "பகவத்கீதை கனிந்த ஆத்மாவுக்குரிய அழைப்பு; மனித குலத்திற்கு அது பயன்படாது" என்கிறார்.
  • 20ஆம் நூற்றாண்டுவரை, அதுவும் 1950வரை மனிதன் தன் வேலைகளைத் தானே செய்துகொண்டான். பிள்ளைக்குக் கல்வி அவன் பொறுப்பு, பெண்ணுக்குத் திருமணம் அவன் கடமை, நிலம் வாங்க, கடை வைக்க அவனே முதல் சேகரம் செய்யவேண்டும். சுருக்கமாக,

"நம் காரியங்களை நாமே செய்யவேண்டும்"

என்பது வாழ்க்கை வழிமுறை.

  • 1950க்குப் பின்,
    • பிள்ளைக்குக் கல்விப் பொறுப்பை சர்க்கார் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றது.
    • 1980க்குப் பின் பெண் திருமணப் பொறுப்பில் சர்க்கார் பங்கு கொண்டது.
    • தற்பொழுது நம் வீட்டில் மின்விளக்கெரிய சர்க்கார் செலவேற்கிறது.
    • நம் நிலத்தில் நீர் பாய்ச்ச சர்க்கார் மின்கட்டணம் கட்டுகிறது.
    • நமக்கு உடல் ஊனமானால், அதனால் எழும் பொறுப்புகளை ஓரளவு சர்க்காரும், சமூகமும் ஏற்கிறார்கள்.
  • தனிமனிதன் மோட்சம் தேடியது மரபு. கீதை அதையே கூறுகிறது. அதை முதிர்ந்த ஆத்மாவுக்கு எளிதில் பூர்த்தி செய்யும் வழியைக் கூறுகிறது.
  • ஸ்ரீ அரவிந்தம் மனிதகுலம் மோட்சம் பெறும்வழி திருவுருமாற்றம் எனக் கூறுகிறது.
    • அதனால் இனி மதவழிபாட்டிற்கு இடமில்லை.
    • மனிதன் ஜீவாத்மா மட்டுமன்று, பரமாத்மாவும் கூட.
    • பூரணயோகம் மனிதன் செய்யும் யோகமில்லை. மனிதனில் இறைவன் செய்யும் யோகம்.
    • மனிதன் பங்கு உபத்திரவம் தாராமலிருப்பது. அதற்குரிய மார்க்கம் சரணாகதி.

The ideal of the infinite Soul and a perfect oneness is unattainable

அனந்த குணம் உடைய ஆத்மா வாழ்வுடன் ஒன்றி இணைவது நடைபெறாது

  • அஞ்ஞானம் ஏழு வகைப்பட்டது.
  • இதுவரை The Life Divine ஜடமும், ஆத்மாவும் ஒன்றுஎனக் கூறியது.
  • உலகம் அஞ்ஞானஇருளில் சிருஷ்டிக்கப்பட்டது.
  • The Life Divine ஏழுவகை அஞ்ஞானத்தை விளக்கும்பொழுது, சிருஷ்டியின் ஏழு தத்துவங்களைக் கூறுகிறது.
  • இருளில்லாத உலகம் சாத்தியமா, அஞ்ஞானமற்ற வாழ்வு நடக்குமாஎன்பது கேள்வி.
  • வேதம் அது முடியும்எனக் கருதியது.
  • தன்னையறியும் ஆத்மா, தன்னுடன் ஒன்றிய உலகத்தை சிருஷ்டிப்பதே இலட்சியம்.
  • ஆனால் சிருஷ்டி அஞ்ஞானத்தால் ஏற்பட்டது.
  • நம் பார்வைக்கு இருள் ஆரம்பம், இருளே முடிவு.
  • வாழ்வின் இருண்ட பார்வைக்கு ஆத்மா அன்னியமாகத் தோன்றுகிறது.
  • அதனால் ஆன்மீகவாழ்வு - இருளற்ற ஒளிமயமான வாழ்வு - முடியாது என முன்னோர்கள் கருதினர்.
  • நமக்கு வாழ்வு நடைமுறை. யதார்த்தம் என நாம் அதைக் கூறுகிறோம்.
    • நடைமுறைக்கு இலட்சியம் பயன்படாது என நாம் நெடுநாளாக அறிவோம்.
    • அரிச்சந்திரன்கதை பொய் சொல்லாதவன் பட்ட பாட்டைக் கூறுகிறது.
    • கர்மத்திலிருந்து எவரும் தப்பமுடியாது என நளமகாராஜன் கதை விளக்குகிறது.
    • வெளியில் போய், உள்ளே வந்து கால்களை அலம்பும்பொழுது நீர் படாத இடமிருந்தால், அதன் வழி சனியன் உள்ளே வருவான் என நாம் வாழ்வை நடத்துகிறோம்.
    • கீதை பெரிய தத்துவம்.
    • பாரதம் கீதையின் விளக்கம். அது நடைமுறை.
    • தர்மம் நியாயமாக ஜெயிக்கவில்லை. போரிட்டுப் பெறவேண்டியது ஆயிற்று.
    • பாரதப் பிரசங்கத்திற்கு ஊரே திரண்டுவருகிறது. கீதைப் பிரசங்கத்திற்கு ஒருவர் வந்தார்.
    • இலட்சியம் நடைமுறைக்கு உதவாதுஎன்பது உலக அனுபவம்.
  • இந்த யதார்த்தமான உலகில் வேதமும் முடியாது எனக் கைவிட்ட இலட்சியத்தை - நியாயமான பூலோக சுவர்க்கத்தை - ஸ்ரீ அரவிந்தம் முடியும் எனக் கூறி நடத்திக்கொண்டிருக்கிறது. மனிதன் காதில் அக்குரல் விழவில்லை. எங்கெல்லாம் மனிதன் குறுக்கிடமுடியாதோ, அங்கெல்லாம் இந்த Force அவனுக்கு வர இருக்கும் ஆபத்துகளை - சீனப் படையெடுப்புபோன்றவற்றை - அவனை அறியாமல் விலக்குகிறது.
  • நாம் பிரார்த்தனையால் இந்த Forceஐ அழைத்தால், அழைத்த காரியத்தைச் செய்துகொடுக்கிறது.
  • உலகம் ஏற்பட்ட இருண்ட அமைப்பில், எந்த இலட்சியவாதியும் வெல்லமுடியாது.
  • ஸ்ரீ அரவிந்தம் அவ்விருளைமீறி, விலக்கி, நாம் நாடும் காரியத்தை முடிக்கிறது.
  • நாம் அனுதினமும் பார்க்கிறோம். ஆனால், திரையே நிதர்சனமாக இருக்கிறது. திரையின் பின்னணியில் செயல்படும் Force நம் மனத்தைத் தொடுவதில்லை.
  • தொடும்வரை Force பொறுமையாகக் காத்திருக்கிறது.
  • "ஞானமும், அஞ்ஞானமும்" என்ற The Life Divine அத்தியாயத்தில் பகவான், "ஏன் இது இதுவரை முடியவில்லை, இனி எப்படி முடியும்" என விளக்குகிறார்.

The whole concentration will be shifted from below upwards and from without inwards

மனிதவாழ்வின் மையம் கீழிருந்து மேலேயும், வெளியிலிருந்து உள்ளேயும் மாற்றப்படும்

  • இது புதுப்பரிணாமம் என்கிறார் பகவான்.
  • இதுவரை பூமியில் நடந்தது உடலின் அடிப்படையில்.
  • மனத்திற்கு உடல்என்பது மூளை. இது ஜடமானது, இதன் சிந்தனையும் ஜடம்.
  • விஞ்ஞானம் அறிவுக்குரியதன்று, மூளைக்குரியது.
  • உடலின் அடிப்படையில் நடந்த பரிணாமம் முடிந்து, இயற்கையின் அடிப்படையில் புதுப்பரிணாமம் எழவேண்டும். உடல் இயற்கையின் பகுதி. இயற்கை முழுமையானது.
  • பகுதியான பரிணாமம், முழுமையான பரிணாமமாகவேண்டும்.
  • அதற்கு மூளையைவிட்டகன்று, மனத்தை - புத்தியை - அடைய வேண்டும்.
  • தற்சமயம் நம் வாழ்வின் மையம் வெளியில் - புறத்தில் - உள்ளது.
  • அத்துடன் வாழ்வின் மற்றொரு மையம் ஜடமான உடலில் அமைந்துள்ளது.
  • புதிய பரிணாமம் ஏற்பட :
    • வாழ்வுமையம் உடலினின்று உள்ளத்துக்கு வருதல் அவசியம்.
    • அப்பொழுது புறத்தில் உள்ள மையம், அகத்தை வந்தடையும். உலகம் அகத்துள் தெரியும்.
    • மூளையைவிட்டு மனத்தை அடையவேண்டும்.
    • மேல் மனத்தைவிட்டு உள்மனத்தை அடையவேண்டும்.
  • நண்பர் உறவு மேலெழுந்தவாரியானது. குடும்பத்தார் உறவு ஆழ்ந்த உறவு.
    • குடும்பத்து உறவு நட்பு தலைகீழே மாறியதுபோலாகும்.
    • நட்பு உறவானால் இதுவரை தெரியாதது தெரியும்.
    • இத்தனை நாட்கள் கேட்டுப்பெற்றது, இனி கேளாமல்பெற முடியும்.
    • சந்தேகம் நம்பிக்கையாக மாறும்.
    • வேண்டாதது என விலக்கியது அவசியமானதாகும்.
    • இரகஸ்யமான செய்தியைத் தவறாது கூறுவோம்.
    • இதுவரை இருண்டிருந்த உறவு ஒளிபெறும்.
  • இம்மாற்றம் நம் அடிப்படையை உடலிலிருந்து மேலே எடுத்துச் செல்லும்.
  • மேலிருந்து ஒளி, சக்தி பிரவாகமாக உள்ளே வரும்.
  • பரிணாம வேகம் அதிகரிக்கும்.
  • ஜடம் இனி அடிப்படையாக இருக்கமுடியாது.
  • இருளான ஜடம் ஒளிமயமாக மாறும்.

மனம், வாழ்வு, ஜடத்தில் அவற்றின் ஆரம்பத்திலிருந்து அறியாமைக்குரிய காரணம் காணப்படவில்லை

  • "1862இல் அமெரிக்காவில் ஏழைகள் (slum dwellers) ஏழு வாரத்தில் வீடு, வாசல் பெற்று மத்தியதர மக்களானார்கள். கூலி 10 மடங்கு அதிகம். பயிரிட விரும்புகிறவர்க்கு 160 ஏக்கர் நிலம் இனாமாகத் தந்தனர். படகு வலித்தவன் 10 வருஷங்களில் ஆலை முதலாளியானான்" என்று வரலாற்று ஆசிரியர் Paul Johnson பால் ஜான்சன் எழுதுகிறார்,

"அன்று அமெரிக்காவில் வறுமையானவன் தன்னையே நொந்துகொள்ள வேண்டும். அந்தச் சந்தர்ப்பத்தில் பொருளீட்டாதவன் என்றும் சம்பாதிக்க மாட்டான்".

  • மனிதனுக்கு, கர்மம், வறுமை, நோயில்லை. அவனே அவற்றை நாடினால் அவனை ஆண்டவன் உள்பட எவரும் தடுக்க முடியாது என்பது நெடுநாட்களாக அறிஞர், உலகைப்பற்றிக் கூறுவது. அதன் அடிப்படை யோகத்தத்துவம் மேலே காணப்படும் கூற்று.
    • மனத்திலும், வாழ்விலும், ஜடத்திலும் அறியாமையில்லை எனில், அறியாமை மனிதன் விரும்பி நாடுவதாகும்.
    • Mind and Supermind என்ற அத்தியாயம் கீழ்க்கண்டவற்றைக் கூறுகிறது.
      • மனம் சத்தியஜீவியத்தின் உபகருவி.
      • இதனால் முழுமையைக் காண ஒரே பார்வையில் முடியாது. ஆனால் இரு பகுதிகளாகக் காணமுடியும். மனத்தில் அறியாமையில்லை. மனம் ஒரு புறத்தைக் காண மறுத்தால் அறியாமை ஏற்படும்.
      • ஒரு புறத்தை மட்டும் காண முடிவு செய்யும் மனம் சத்திய ஜீவியத்துடனுள்ள தொடர்பை இழந்துவிடுகிறது. அது அறியாமையின் ஆரம்பம்.
      • தீராத பிரச்சினையில்லை; தீர்க்காத பிரச்சினையுண்டு. முடிவில்லாத சிக்கலை ஆராய்ந்தால் முடிவு தெரியும். "அதை நான் ஏற்க முடியாது" என்பார் பிரச்சினைக்குரியவர். தீர்வுண்டு. "என் இஷ்டப்படி தீர்வு வேண்டும்" என்று வற்புறுத்தினால் தீர்வில்லை என்பதே உண்மை.
    • இக்கருத்து எந்த நாட்டிற்கும் பொருந்தும்.

உதாரணமாக, அணுகுண்டு ஒழிப்புத் திட்டம் 50 ஆண்டுகளாக முடிவு பெறாமலிருக்கிறது. ஏன்? முடியவில்லையா? என்ன தடை?

அணுகுண்டு வைத்துள்ள அரசுகள் அதை விட்டுக்கொடுக்க இசையவில்லை. இது ஒரு பிரச்சினையாகுமா? தீர்க்க முடியாததே பிரச்சினை. தீர்க்க விரும்பாதது பிரச்சினை இல்லை. பிரச்சினை அறியாமையின் சின்னம். அறியாமை எங்குமில்லை. நாமே விரும்பித் தேடுவது

Taste of Ignorance.



book | by Dr. Radut