Skip to Content

02. லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன் 

 

 

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

                                                                                                                   கர்மயோகி

17. தெய்வீக ஆன்மா

தெய்வம், கடவுள், இறைவன் ஆகிய சொற்கள் நமக்கு ஒன்றையே குறிக்கும். நினைவில் சிவன், விஷ்ணு தோன்றும். தத்துவரீதியாக பிரம்மம் முடிவானது. சச்சிதானந்தம் அதைச் சேர்ந்தது. நாம் அதைச் சச்சிதானந்த பிரம்மம் என்கிறோம். தெய்வம் என்றால் ஒரு பெரிய சக்தி எனப் புரியுமே தவிர, எதை நாம் தெய்வம் எனக் கூறுகிறோம் என நாம் விவரமாக அறிவதில்லை. அதைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை. சத்புருஷன்என்ற அத்தியாயத்திலிருந்து கடவுள் என்ற கருத்துக்கு தத்துவரீதியாக ஒரு தெளிவான உருவம் கொடுத்து, அது எப்படி உலகைச் சிருஷ்டித்தது என பல அத்தியாயங்- களில் கூறினோம்.

தவத்தை மேற்கொண்ட ரிஷிகள் தெய்வத்தையடையவில்லை. தெய்வத்தைக் கடந்த பிரம்மத்தையடைந்தனர். அதைச் சாதிக்க வாழ்வை விட்டு வெளியேறினர். அந்த பிரம்மத்தை ஆதியும், அந்தமும் இல்லாத பிரம்மம் - அக்ஷர பிரம்மம் - எனக் கூறினர். க்ஷரம் என்றால் அழிவு. அக்ஷரம்எனில் அழிவில்லாதது. அது அழிவில்லாமல் இருக்கக் காரணம் அசைவில்லாமலிருப்பதேயாகும். அசைவு வளர்ச்சி தரும், அழிவையும் தரும். ஆதி, அந்தம் - முடிவு, அசைவு, வளர்ச்சி, அழிவு - இல்லாத பிரம்மம் அக்ஷர பிரம்மம். பரமாத்மா எனவும் கூறலாம். மனிதனில் உள்ளது ஜீவன். ஜீவனுக்கு உயிரளிப்பது ஜீவாத்மா. ஜீவாத்மா எனில் ஜீவனுக்கு மையமான ஆத்மா. ஆன்மா எனவும் கூறுவர். மனிதன் மனத்தை விட்டகன்று ஜீவாத்மாவை அடைவது மோட்சம். அவன் ஜீவன் முக்தன் எனப்படுவான். ஜீவாத்மாவை அடைந்த மனிதன் தவத்தால் மேலும் உயர்ந்து பரமாத்மாவையடைவது மோட்சத்தில் உயர்ந்த கட்டம். இவை தெய்வங்களைக் கடந்த நிலை. ரிஷிகள் தெய்வங்களைவிட சக்தி வாய்ந்தவர்கள்.

ஸ்ரீ அரவிந்தம் மோட்சத்தை நாடவில்லை; திருவுருமாற்றத்தை நாடுகிறது. ஜடமான உடல் சத்புருஷனாகி, சைத்தியபுருஷன் ஆனந்தமாகி, இருண்ட வாழ்வு சித்-சக்தியாகி, மனம் சத்தியஜீவியம் ஆவது திருவுருமாற்றத்தின் 4 பகுதிகள். இது நடந்தால் மனிதன் சத்தியஜீவனாவான். இது பரிணாமம். சத்தியஜீவன் உலகில் வாழும் வாழ்வு தெய்வீகவாழ்வு. அதை அடைவது எப்படி என்பது கேள்வி. முன் அத்தியாயங்களில் சச்சிதானந்தம் உலகமாக மாறியதைக் கண்டோம். அதன்படி இறைவன் சிருஷ்டி வழியாக உலகை வந்தடைகிறான். சத்தியஜீவன் பிறந்து, அவன் தெய்வீகவாழ்வை நடத்த மனிதன் அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு மேலே போய் பரிணாமத்தால் உயர வேண்டும். வாழ்வுக்கு மையம் ஆத்மா அல்லது ஆன்மா. தெய்வீகவாழ்வுண்டெனில் அதன் மையம் தெய்வீக ஆன்மா. அது எப்படி ஜீவாத்மா, பரமாத்மாவினின்று வேறுபடுகிறது? நாம் அகந்தையில் மேல்மனத்தில் வாழ்கிறோம். சைத்தியபுருஷனையடைய வேண்டும் என அறிவோம். அகந்தையும், சைத்தியபுருஷனும் தெய்வீக ஆன்மாவிலிருந்து எப்படி வேறுபடுகின்றனர் என அறிவதும், அதை எப்படிச் செய்வதுஎனவும் நம்முன் உள்ள கேள்விகள்.

மேல்மனம் பகுதி. தெய்வீகவாழ்வு முழுமையானது. உள்மனம் மேல்மனத்தின் ஆழ்ந்த பகுதியானாலும் முழுமையுடையதுமன்று; ஆன்மீகம் உடையதுமன்று. ஆனால் சூட்சுமம் உடையது. சூட்சுமம் ஆன்மீகமாகாது. அடிமனம் பிரபஞ்சம் முழுவதும் பரவியது; முழுமை உடையது. தன்னுள் சைத்தியபுருஷனைக் கொண்டுள்ளது. திருவுருமாற்றம் அடிமனத்தில் சைத்தியபுருஷனில் முழுமையாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தெய்வீகவாழ்வு பிரம்மத்தின் வாழ்வு. அக்ஷரபிரம்மம் அசைவற்றது என்பதுடன் காலத்தைக் கடந்தது. அது காலத்தை விலக்குவதாலும், அசைவை விலக்குவதாலும் முழுமையாகாது. அதே காரணத்தால் க்ஷரபிரம்மம் - காலத்தைக் கடந்த நிலையை விலக்குவதாலும்,சலனமற்ற நிலையை விலக்குவதாலும் - முழுமையான பிரம்மம் ஆகாது. முழுமையான பிரம்மம் காலம், காலத்தைக் கடந்த இரு லோகங்களையும் உடையதாக இருக்க வேண்டும். அதன் வாழ்வு தெய்வீகவாழ்வாகும். கடவுள் (God) என நாம் கொள்வது காலத்தைக் கடந்த நிலையில் உள்ளது. ஜீவாத்மாவும் காலத்திலில்லை. எனவே தெய்வீகவாழ்வுக்குரிய ஆன்மாவாக ஜீவாத்மா, பரமாத்மா, கடவுள் ஆகியவை பயன்படா. அது முழு பிரம்மத்தின் ஆன்மாவாக இருக்கும். காலமும், கடந்த நிலையும் அதற்குண்டு. கடவுளும், ஜீவாத்மாவும் அதற்கு விலக்கன்று. பிரம்மம் அதற்கு எப்பொழுதும் விலக்கன்று. எந்த நேரமும் தெய்வீக ஆன்மா முழு பிரம்மத்தின் முன்னிலையில் இருக்கும்.

சமாதி நிலையில் - நம்மை மறந்த நிலையில் - நாம் பிரம்மத்தை எட்டுவது மோட்சம், சித்தி எனப்படும். அது பகுதியான பிரம்மம். அது முழுமையான பிரம்மமானால் நம்மை மறந்த நிலை தேவையில்லை. விழிப்பில் சமாதி நிலையை அடைவது ஸ்ரீ அரவிந்தம். அதைப் பெற திருவுருமாற்றம் தேவை. தெய்வீகவாழ்வின் முழுமைக்குச் சமாதி விலக்கு, நிஷ்டை விலக்கு. விலக்கு என்ற நிலை விலக்கு. அதனால் ஏகன் என்ற பரமாத்மா மட்டுமோ, அநேகன் எனும் ஜீவாத்மா மட்டுமோ தெய்வீகவாழ்வுக்குரிய ஆன்மாவாக முடியாது. தெய்வீக ஆன்மா இரண்டிலும் ஒரே சமயத்தில் வாழ்வது அவசியம். அகந்தை உலகினின்று பிரிந்து தனித்து வாழ்வதால் தெய்வீகவாழ்வுக்கு பிரிவினை விலக்கு. அதனால் அகந்தை அவ்வாழ்வு மையமாக முடியாது. எதையும் விலக்காமல் எல்லாவற்றையும் சேர்த்தால் சிறியது,பெரியது, லீலை எப்படியிருக்க முடியும்? பிரிவினையற்ற பகுதிகள் லீலைக்கு உதவும். அம்சத்தைப் பிரிக்கலாம்; அங்கத்தைப் பிரிக்க இயலாது. தெய்வீக ஆன்மாவின் அம்சங்கள்,

1) அஞ்ஞானத்தை விட்டு விடுபட்டதாகும்.

2) முழு பிரம்மத்தின் முன்னிலையில் எந்த நேரமும் இருப்பது அவசியம்.

3) காலமும், காலத்தைக் கடந்த நிலையும் இணையும் இடத்திலிருக்கும்.

4) (God) கடவுளுடனும், ஆத்மாவுடனும், ஆத்மரூபத்துடனும், ஆத்ம சக்தி (individuality) இடையறாத தொடர்புள்ளதாக இருக்கவேண்டும்.

5) ஜீவன், ஜீவியம், ஆனந்தம் பிரிந்து, மாறி, லீலை செய்யும் பொழுது

அம்சம் பிரியலாம்; அங்கம் பிரியக்கூடாது.

6) பரமாத்மாவிலும், ஜீவாத்மாவிலும் ஏககாலத்தில் உறைய வேண்டும்.

7) அகந்தை, காலம், மனம், மேல்நிலை ஆகியவற்றின் அம்சங்கள் நீங்கி, சத்தியஜீவியத்தின் அம்சங்கள் செயல்பட வேண்டும்.

8) மனித இயலாமை அங்கு இயல்பான கட்டுப்பாடாக இருக்கவேண்டும்.

9) எல்லா ஜீவன்களையும், அவர்கள் ஜீவியத்தையும், ஆனந்தத்தையும் தன்னுள்ளே தன் ஜீவியமாக, ஆனந்தமாக அனுபவிக்க வேண்டும்.

10) பிரிவினை முழுமையின் ஆனந்தத்தை அதிகப்படுத்த வேண்டும்.

பக்கம் 150 / பாரா 1

சத்தியஜீவியம் என்றால் என்னஎன நாம் தெளிவாக அறிந்து கொண்டோம். மனித வாழ்வின் அடிப்படையான மனப்பான்மையிலிருந்து அது வேறுபட்டது என்பதை எப்படி வேறுபட்டது எனத் தெளிவு செய்ததால் நமக்கு இத்தெளிவு கிடைத்தது. தெய்வம், தெய்வீக வாழ்வு என்பவற்றைப்பற்றி நாம் தெளிவு பெற்றுவிட்டோம். தெரிவதற்கும் அறிவு தெளிவு பெற்று அறிவதற்கும் இடையேயுள்ள தூரம் ஏராளம். பலன் பதினாயிரம் மடங்கு. மின்னல் சக்தியை உலகம் அறியும். திருடன் கன்னக்கோலில் அந்த மின்சாரத்தைப் பிடித்துக் கொள்கிறான் என நாம் நம்பினோம். மின்சாரம் என்ன என்று அறிவு கண்டுபிடித்தபின் நூறாண்டுகளாக நாம் மின்சாரத்தையும், அதன் பலனையும் அனுபவிப்பது ஏராளம். இது அறிவால் பெறும் தெளிவு அளிக்கும் பலன். சுமார் 150, 200 ஆண்டுகளாகக் கோர்ட் செயல்படுகிறது. பொதுவாக நம் எல்லோர்க்கும் நம்மைப் பாதிக்கும் எல்லாச் சட்டங்களும் தெரியும். நடைமுறையில் நாம் ஆயிரம் வகைகளில் ஏமாந்து போகிறோம். தெரிந்தாலும் கோர்ட்டால் பலன் பெற நம்மால் முடிவதில்லை. ஏனெனில் நமக்கு கோர்ட் விஷயத்தில் அறிவில் தெளிவு இல்லை. ஒரு வக்கீலுக்கு அவ்விஷயத்தில் நமக்கில்லாத தெளிவு உண்டு. அவர் சட்டத்தால் பெறும்பலன் நாம்பெறும் பாதுகாப்புடன் ஒப்பிட்டுக் காண முடியாது. முன் அத்தியாயங்கள் தெய்வம் என்பதை நமக்கு அப்படி விளக்கியுள்ளது. இதுவரை அத்தெளிவில்லாமல் நாம் இருந்தோம். விவரமற்ற சொல்லாகத் "தெய்வம்' மக்களால் பயன்படுத்தப்படுகிறது. தெய்வம் ஓர் உயர்ந்த சக்தி என்பதையே நாம் இதுவரை அறிந்தோம். இந்த அத்தியாயங்களில் தெய்வம் என்ற கருத்தைத் தத்துவரீதியாக விளக்கி, தெய்வத்திற்கும் மனித குலத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கியுள்ளோம். அதனால் நம் இலட்சியங்கள் விளக்கம் பெற்றன. எதிர்காலப் பரிணாமம் எதிர்கொள்ளும் பாதை துலங்குகிறது. பிரபஞ்சவாழ்வில் நம் பங்கு என்ன என அறிகிறோம். தெய்வம் நித்தியமான சத்தியம் என்பதை அறிவு ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துக் கூறினோம்.அதனினின்று உலகம் எப்படி வந்தது என்ற சிருஷ்டியின் இரகஸ்யத்தை அறிந்தோம். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி இரவில் தரையில் அதன் கூட்டிற்கு வரவேண்டும். உலகை வென்ற அலெக்ஸாண்டர் முடிவாக நாடு திரும்பினார். பூரணம், முழுமை என்பதை பிரம்மம் என்ற சொல் குறிக்கிறது. அம்முழுமையின் தன்மை வெளியே போனது மீண்டும் உள்ளே வரவேண்டும் என்பது. நாம் பேசும் சொற்கள் மீண்டும் நம்முள் வருவதில்லை. நம் செயல்களும் அப்படியே. இது பகுதிகளின் தன்மை. பூமியிலிருந்து எழும் மரம், செடி, கொடி,மனிதன், அனைத்தும் பூமிக்கு மீண்டும் வருகின்றன. அது முழுமையின குணம். உலகம் பிரம்மத்திலிருந்து எழுவது சிருஷ்டி. அது மீண்டும் பிரம்மத்துள் வர வேண்டும். அது பரிணாமம். தெய்வீகவாழ்வை நாம் எப்படியடைய முடியும் என்ற கேள்வியை இப்பொழுது எழுப்பினால் பதில் கிடைக்கும் வாய்ப்புண்டு. ஆத்மா விடுதலையடைந்து, பூரித்து, பரமாத்மாவில் கரையும் மோட்சம் நாம் இதுவரை அறிந்தது. உலகில் அவ்ஆத்மா பரிமளிப்பது தெய்வீகவாழ்வு. நம் விசாரத்தில் ஒரு குறையுண்டு. தெய்வம் மனிதசுபாவத்தை அடையும் முறையே நாம் இதுவரை கண்டது. ஆனால் மனிதன் பரிணாமத்தால் உயர்ந்தெழும் தெய்வம். அந்த அம்சத்தை நாம் இதுவரை ஆராயவில்லை. இரண்டிற்கும் அடிப்படையான வித்தியாசமில்லை. தெய்வம் அஞ்ஞானத்தை அறியாது. மனிதன் அஞ்ஞானத்தில் வாழ்பவன். அதனினின்று விடுதலை பெற்று தெய்வமாவது பரிணாமம். மாற்றம் அடிப்படையில் இல்லை. மாற்றம் தோற்றத்திற்கும்,அதன்வண்ணத்திற்குமேயுரியது. இதுவரை நாம் கண்டதன் அடிப்படையில் தெய்வீகவாழ்வை அறிய முற்படலாம்.

பக்கம் 151 / பாரா 2

தெய்வீக ஆன்மா எங்கிருக்கும்? ஜடத்துள் நுழைந்தால் அது அஞ்ஞானத்தால் சூழப்படும். அப்படியில்லாவிட்டால் எங்கே அந்த தெய்வீக ஆன்மா இருக்கும்? எப்படியிருக்கும்? அதன் ஜீவியம் எத்தகையது? அது சத்தியத்தின் ஆதியில் வாழ வேண்டும். அடிப்படை ஐக்கியத்தில் அது உறையும். அதனுடைய உலகம் அதன் சொந்தமான அனந்தமான ஜீவனாகும். சத்புருஷன் போலவே அது இருக்க வேண்டும். சத்புருஷனிருப்பது சத். அவனுக்கு லீலையில்லை. தெய்வீக ஆன்மா இறைவனிடமிருந்து - பரமாத்மாவிடமிருந்து - வேறுபட்டதுடன் அந்த வேறுபாட்டை மாயையால் அனுபவிக்க வேண்டும். சத்தியஜீவியத்தின் இருபாகங்களாலும் - ஹிரண்ய கர்ப்பம், பிரக்ஞா என்ற காலத்தைக் கடந்த சத்தியஜீவியம், காலத்துள் உள்ள சத்தியஜீவியம் - அவற்றிடையே உள்ள வேறுபாட்டையும் தெய்வீக ஆன்மா அனுபவிக்க வேண்டும். தெய்வீக ஆன்மா காலத்துள்ளோ, காலத்தைக் கடந்தோ இருக்க முடியாது. இரண்டிலும் இருக்க வேண்டும். இரண்டிலுமிருப்பதால் காலத்தைக் கடந்துள்ள கடவுளிட- மிருந்துள்ள வேறுபாட்டை அனுபவிக்க முடியும். அதேபோல் மற்ற ஜீவாத்மாக்கள் காலத்துள்ளிருப்பதால் அவற்றிடமிருந்தும் உள்ள வேறுபாட்டை தெய்வீக ஆன்மா அனுபவிக்க முடியும்.

பக்கம் 151 / பாரா 3

அப்படிப்பட்ட தெய்வீக ஆன்மா சச்சிதானந்தத்துள்ளிருக்கும். அதன் லீலையுள் அடங்கியிருக்கும். அதனால் அதன் ஜீவனின் வாழ்வு தூய்மையான அனந்தமான சுயவாழ்வாக அமையும். அதற்கும் பிரகிருதியுண்டு. அது மரணமிலா வாழ்வாகும்; சுதந்திரமான லீலை ஆகும்; பிறப்பும், இறப்புமற்றதாகும். உடல் மாறாது; அஞ்ஞானமோஇருளோ இருக்காது. நம் உடல் அகந்தையாலும், அஞ்ஞானத்தாலும் வாழ்கிறது. தெய்வீக ஆன்மாவின் வாழ்வு நம் வாழ்வுக்கு எதிராக இருப்பதைக் காணலாம். நம் ஜீவியம் சுயநலமான அகந்தையின் ஜீவியம். அது மனிதவாழ்வின் குறுகிய அளவுக்கு உட்பட்டது. அதன் அடிப்படை மனத்திற்குரிய இருளான படபடப்பு. அதன் நிலை அடிக்கடி மாறும். தெய்வீக ஆன்மாவின் ஜீவியம் தூய்மையான அளவில்லாத சக்தி. அது நிலையான அடிப்படையில் உள்ளது. ஒளிமயமான அமைதி அதன் அடிப்படை. "இந்தியர்கள் திறமையற்றவர்கள்'' என ஒருவர் நம்மிடம் கூறினால், நம்மால் அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டு, அர்த்தமுள்ள பதிலை நிதானமாகக் கூற முடியாது. கோபம் அளவுகடந்து எழும், உடல் பதறும், உணர்ச்சி துடிக்கும். நாம் திறமையற்றவர் என்ற உண்மையை ஏற்கும் நிதானம் இருக்காது. "உங்கள் நாட்டில் திறமையற்றவரில்லையா?'' எனக் கேட்போம். நம் பதில் இருளாலானது, அறிவும் பொறுமையும் இல்லாதது. தெய்வீக ஆன்மா நம்மிலிருந்து வேறுபட்டு செயல்படும். அது சுதந்திரமாகச் செயல்படும். வேறு ஞானத்தின் உருவங்களை - மாற்று அபிப்பிராயங்களை - அது அமைதியாக எதிர்கொள்ளும். அதே போல் மாறிய சக்திகளை - நம்மைவிட வலிமையான, எளிமை- யானவர்களை - மனக்குறையின்றிச் சந்திக்கும். சத்தியத்தினின்று வழுவாது. ஒருமையை இழக்காது. அடிப்படையான ஒளியை மறக்காது. தெய்வீகவாழ்வின் சுமுகம் அதை விட்டுப் பிரியாது. நமக்குத் திறமையில்லை என ஒருவர் கூறுவது உண்மை. அத்திறமையை நாம் பெற வேண்டும் என உணரும். கோபம் இயலாமை. அந்த இயலாமை இல்லாததால் அவர் கூறும் உண்மையை ஏற்பதுடன், அந்நிலை இந்தியருக்கு வரக் காரணத்தை - அடிமை வாழ்வை - அறியும். அறிவதால் நிலைமை புரியும். புரிவதால் நிதானம் அழியாது. நாமும் அவரும் வேறு வேறு ஜீவாத்மாக்கள் என்ற ஆன்மீக உணர்வு சுமுகம் தருவதால் மனம் பேதலிக்காது. அவர் மனத்தின் ஒளி திறமை இன்மையை அறிகிறதுஎன நம் மனத்தின் ஒளி அறியும்பொழுது இருள் எழ வழியில்லை. ஜீவன், ஜீவியத்தின் தன்மைகளைக் கூறியது போல் ஆனந்தத்தையும் கூறவேண்டும். நமக்குரிய சந்தோஷம் வரும், போகும். அது சந்தர்ப்பத்தைப் பொருத்தது. தெய்வீக ஆன்மாவின் ஆனந்தம் அதனுடன் பிறந்தது, விலக முடியாதது. ஆனந்தம் என்பது அனுபவம். சத் தன்னையறிந்து அனுபவிக்கும் பொழுது ஆனந்தம் எழுகிறது. நமக்கு வெற்றி ஆனந்தம் தரும், தோல்வி வருத்தம் தரும்.

நம் ஆனந்தம் வெற்றி, தோல்வி என்ற புற நிகழ்ச்சிகளைப் பொருத்தது. தெய்வீக ஆன்மாவின் ஆனந்தம் சுயமான ஆனந்தம். தான் ஆன்மா என அறிந்து அனுபவிப்பதால் ஏற்படும் ஆனந்தம். காலத்துள் அவ்வானந்தம் சுதந்திரமாக, வெறுப்பு, விருப்பால் பாதிக்கப்படாமல் மாறும். வேண்டியவரைப் பார்த்தால் சந்தோஷமும், வேண்டாதவர் வெறுப்பும் தருவது நம் நிலை. தெய்வீக ஆன்மாவுக்கு வேண்டாதவரில்லை. வேண்டியவரும், வேண்டாதவரும் வெவ்வேறு வகையான சந்தோஷம் தருவர். நம் மகன் முதற் பரிசு பெற்றதை வேண்டியவரிடம் சந்தோஷமாகக் கூறுகிறோம். வேண்டாதவர் என ஒருவர் நம்மை நினைத்தால் அவரிடம் அதைக் கூறாமலிருக்கும் கட்டுப்பாட்டை ஏற்பதால் சந்தோஷப்படுகிறோம். நம் ஜீவன் பிரிந்து நிற்பதுபோல் அது பிரியவில்லை. அகங்காரம் நம்மை ஆட்கொள்வது போல் தெய்வீக ஆன்மாவை ஆட்கொள்ள அது அங்கில்லை. ஆசை அறிவின்றி எழுந்து குதர்க்கமாகப் பேசும் நிலை அதற்கில்லை.

பக்கம் 151 / பாரா 4

நம் நாட்டில் வாழ்வை விலக்கி தவத்தை மேற்கொண்டனர். இக வாழ்வில் இலட்சியமில்லை எனப் பரவாழ்வில் அதைத் தேடினர். அது யோகத்தை மேல்மனத்துள்ளிருத்தி அடிமனத்தை புறக்கணித்தது. அதனால்தான் அவர்களால் உணர்விலிருந்து வெற்றி பெற இயலவில்லை. பிரம்மம் உயர்வு, வாழ்வு தாழ்வு என்றனர். இது மாறுவது ஸ்ரீ அரவிந்தம். இங்கு வாழ்வு ஏற்கப்பட வேண்டும். அடி மனத்தில் செய்யும் யோகம் மேல்மனத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிரம்மத்தை ரிஷிகள் இரண்டாகப் பிரித்து ஒன்றை ஏற்றனர்.

ஸ்ரீ அரவிந்தம் பிரம்மத்தை முழுமையாக்கியது. மனத்தால் தேடினால் பிரம்மம் பகுதியாகும் என்பதால், சத்தியஜீவியத்தால் முழுமையான பிரம்மத்தை நாடியது. பிரம்மமே வாழ்வு என்றது. வாழ்வில் பிரம்மம் வெளிப்படுவதைக் கண்டது. வாழ்வையே பிரம்மமாகக் கொண்டது. ஜடத்திற்கும் பிரம்மத்திற்கும் வேறுபாடில்லை என உணர்ந்தது. சர்வம் பிரம்மம் என்ற ரிஷிகளின் வாக்கை வாழ்வின் இலட்சியமாகவும், யோகத்தின் உயர்ந்த கட்டமாகவுமாக்கியது. பிரம்மம் ஜடத்துள் வெளிப்படுவது பிரம்மம் ஜடத்தைப் பிரம்மமாக மலரச் செய்வது, ஆனந்தத்தை நிலையாக்குவது. பிரம்மம் ஆனந்தத்தை அடுத்த உயர்ந்த கட்டத்தில் அனுபவிப்பது. பூலோகம் சுவர்க்கமாவது என்பதால்,

. தெய்வீக ஆன்மா என்றும் பிரம்மத்தின் முன்னிருப்பது அவசியம்.

. பிரம்மத்தைவிட்டு தெய்வீக ஆன்மா விலக முடியாது.

. தோற்றமான வாழ்வு பகுதியானாலும், அதை மேற்கொண்டபொழுதும்

பகுதி முழுமையாகும், தோற்றம் விஷயமாகும். அவையும் தெய்வீக

ஆன்மாவின் முன்னிருந்து பிரம்மத்தை விலக்காது.

. சச்சிதானந்தமும் கடந்த நிலையில் காலத்தைக் கடப்பதால், தன் முழுமையை அந்த நேரம் இழக்கும். முழுமையான பிரம்மத்தை விட்டகன்று பகுதியான பிரம்மத்தின் முன் நிற்கும். சச்சிதானந்தத்திற்கும் முழுமையுண்டு. அது பிரம்மத்தின் முழுமை. தெய்வீக ஆன்மா அதை அறியவல்லது.

. ஜனாதிபதியை அனைவரும் பார்க்க முடியாது. பார்ப்பவர் சந்திக்க முடியாது. அதற்குரியவர் பார்க்கலாம், சந்திக்கலாம். உயர்ந்தோர் வேண்டும் பொழுது பார்க்கலாம். எளிய மனிதனும் பொதுக்கூட்டத்தில் தூர இருந்து பார்க்கலாம். பிரதமரும் அவருடன் எப்பொழுதும் இருக்க முடியாது. ஆனால் ஜனாதிபதியின் P.A. (personal assistant). எப்பொழுதும் அவர் முன்னிலையிலிருப்பார். அதைப்போல் தெய்வீக ஆன்மா எப்பொழுதும் பிரம்மத்தின் முன்னிலையிலிருக்கும். இது அது முயன்று பெறுவதில்லை. தெய்வீக ஆன்மாவுக்கு இயல்பாக அமைவது.

. அதனால் தெய்வீக ஆன்மா காலமும், கடந்ததும் சந்திக்குமிடத்தில் இருக்கவேண்டும். அந்தநிலை அனைத்துக்கும் இல்லை. பரமாத்மாவுக்கோ, ஜீவாத்மாவுக்கோ, அகந்தைக்கோ இல்லை. பரமாத்மாவும், ஜீவாத்மாவும் காலத்தைக் கடந்தவர். அகந்தை காலத்துள் உள்ளது.

. சைத்தியபுருஷனுக்கு அந்த அம்சம் உண்டெனினும் அதற்கு ஒரு பகுதியில் - மனம், உடல் - மட்டும் அதுஉண்டு. சத்தியஜீவனுக்கே அதுஉண்டு.

பக்கம் 152 / பாரா 5

பரமாத்மா, ஜீவாத்மா என்பவை பிரம்மத்தின் இருதுருவங்கள். நாம் ஒருமுனையில்தானிருக்க முடியும். இருமுனைகளிலும் இருக்க அஞ்ஞானம், பகுதி, மேல்மனம், காலம், அகந்தை, சிறியது என்ற தடைகள் கூடா. அஞ்ஞானம் தடையென்பதுபோல் ஞானமும் ஒருதலைப்பட்டதானால் தடையாகும். ஜீவாத்மா பகுதி, பரமாத்மா முழுமை என்பதால் ஜீவாத்மா தடை, பரமாத்மா தடையில்லை என நினைப்போம். நாம் முழுமைஎன்பது பிரம்மத்தின் முழுமை. நமக்கு முழுமையான பரமாத்மா, பிரம்மத்திற்குப் பகுதி. ஏனெனில் பரமாத்மாவும், ஜீவாத்மாவும் சேர்ந்த முழுமையே பிரம்மம். காலத்தைக் கடந்தது முழுமையென நாம் நினைக்கலாம். அதுவும் முழுமையில்லை. எல்லா ஜீவன்களும் செயல்படும்பொழுது எங்குச் செயல்படுகிறார்களோ அந்த லோகத்தின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர். அவதார புருஷனும் மனிதனாய்ப் பிறந்தால் மனிதன் கட்டுப்படும் கர்மத்திற்குக் கட்டுப்பட வேண்டும். அவதார புருஷன் புவியில் பிறப்பதற்குமுன் -தன் சொந்த இடத்தில் - கர்மத்திற்குக் கட்டுப்பட்டவனில்லை. எல்லா ஜீவன்களும் அவரவர் சொந்த லோகத்தில் இருக்கும்பொழுது பிரம்மத்தின் இருமுனைகளான – One, Many - பரமாத்மா, ஜீவாத்மாவில் ஒரேசமயத்தில் உறைவர். அவர் செயல்படும் லோகம் ஜடலோகமானாலும், உலகமானாலும், பிரபஞ்சமானாலும், காலத்தைக் கடந்த லோகமானாலும், ஒரு முனையில்தானிருக்கமுடியும். தெய்வீக ஆன்மா பிரம்ம வாழ்வு முழுவதும், எல்லா லோகங்களிலும் செயல்படுகிறது. அப்படிச் செயல்படும் காலத்தில் பிரம்மத்தின் இரு முனைகளிலும் (மற்ற ஜீவன்கள் தங்கள் சொந்த லோகத்தில் இருப்பதைப்போல்) எப்பொழுதுமிருக்கும். இந்நிலை காலமும், கடந்ததும் இணைந்தநிலை. ஜில்லாவில் சப்-இன்ஸ்பெக்டர்,D.E.O, D.M.O.எனப் பல அதிகாரிகளுண்டு. அவரவர் தங்கள் தங்கள் இலாக்காவில் மட்டும் செயல்படலாம். கலெக்டர் ரெவின்யூ டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்தவரானாலும், எல்லா இலாக்காக்களிலும் எந்த நேரமும் செயல்பட முடியும். தெய்வீக ஆன்மாவின் நிலை ஓரளவு அது போன்றது.

இப்பிரிவு இருப்பதால் ஒன்றையேற்று, அடுத்ததை மறுக்க வேண்டும். அந்நிலை தெய்வீக ஆன்மாவுக்கில்லை. ஒன்று அனந்தம் செறிந்த ஐக்கியம். அடுத்தது அனந்தம் வெளிப்பட்டு நீண்டு பரவிய நிலை. இரண்டாம்நிலை முதல்நிலையில் வித்தாக இருப்பதை தெய்வீக ஆன்மா அறியும். மனம் வெளிப்படாததை இல்லைஎனக் கருதும். தெய்வீக ஆன்மா அந்தத் தவற்றைச் செய்யாது. இவற்றை - சத்தியம், நியாயம் - வேதம் கூறியது. இதுவே உன்னதமான அத்துவைதம், பேதமற்ற நிலை.

பக்கம் 153 / பாரா 6

சிருஷ்டி என்பது லீலை. ஒன்று பலவாக மாறுவது. ஜீவன், ஜீவியம், ஆனந்தம் அப்படி மாறுகின்றன. நம் பார்வைக்கு அவை பகுதிகளாகப் பிரிவதாகத் தோன்றுகின்றன. வேறுபட்டவையாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவற்றைத் துண்டாடாமல் அம்சங்களை மட்டும் பிரிப்பதை நம் மனம் அறிவதில்லை. ஜீவனில் உள்ள ஒருமை எப்பொழுதும் மாறுவதில்லை. அதன்வெளிப்பாட்டில் மாற்றமுண்டு. எல்லாரூபங்களும் பரமாத்மாவில் வித்தாக உள்ளவையே. மௌனத்திலி ருந்து எழுவது சப்தம். ரூபம் அரூபத்தினின்று வருகிறது. சலனமற்ற அமைதியினின்று சக்தி எழுகிறது. காலத்தைக் கடந்த சுய ஞானத்திலிருந்து சூரியஒளிபோன்ற சுயதெளிவு எழுகிறது. சத்புருஷனிலிருந்து இயற்கை எனும் பிரகிருதி வெளிவருகிறது. அமைதியான ஆனந்தம் ஆயிரம் வகையான இன்ப உணர்வுகளை எழுப்புகிறது. அவை இரு வேறு நிலைகளில்லை. அவை இரண்டில் ஒன்றான (biune) இரு வகைத் தோற்றம். பிரம்மம் சிருஷ்டியானாலும் சிருஷ்டியும் பிரம்மமே.

அஞ்ஞானமில்லாத பொழுது சிருஷ்டி பிரம்மமே. பிரம்மத்தைவிடக் குறைந்ததில்லை. தோற்றம் மாறுகிறது, விஷயம் மாறுவதில்லை. அவை வெவ்வேறான இரண்டில்லை, இரண்டான ஒன்று.

பக்கம் 154 / பாரா 7

மாற்றத்தில் சத்தியஜீவிய நிலைகள் மூன்றுண்டு. மனம் அவற்றை மூன்று வெவ்வேறு நிலைகளாகக் காணும். அவை ஒன்றில் மூன்றானவை. அது சச்சிதானந்தம் தன்னைத் தானே வெளிப்படுத்துவது. சச்சிதானந்தம் மூன்று அம்சங்களை ஒன்றாக வெளிப்படுத்தினால் தெய்வீக ஆன்மா ஒரே பார்வையில் அவற்றைத் தழுவி அறியும் - சத்தியஜீவியத்தின் அடிப்படை பரந்த ஒருமித்த ஞானம் - அம்மூன்றுநிலைகள்:

1) தெய்வீக ஆன்மா கருத்தாலும், உள்ளுணர்வாலும், உணர்ச்சியாலும் தெய்வீகமாக முதல் நிலையை அறியும். அனைத்தும் பிரம்மம், தன் சொந்த பிரம்மம், எல்லோருடைய பிரம்மம் ஒரே பிரம்மஜீவன், ஒரே பிரம்மபிரகிருதி. பிரகிருதி தனித்தனியே பிரிந்ததில்லை. தன் சுய ஜீவியத்தை விட்டுப் பிரிந்து நிற்பதன்று.

(கடவுள் அனைத்துமானார்).

2) தெய்வீக ஆன்மா கருத்தாலும், உள்ளுணர்வாலும், உணர்ச்சியாலும் தெய்வீகமாக இரண்டாம் நிலையை அறியும். அனைத்தும் பரமாத்மாவின் ஆத்மரூபங்கள் என அறியும். அவை ஒவ்வொன்றும் தன் ஜீவனைப் பரமாத்மாவில் பெற்றிருக்கும். பரமாத்மாவில் அதனுடைய நோக்கம் உண்டு. அனைத்துடனும் அதற்கு ஐக்கியத்தில் உறவுண்டு. ஆனால்

அனைத்தும் பரமாத்மாவை நம்பியுள்ளன. அனைத்தும் அவனுடைய ரூபம் அவனனந்தத்தில் உறைவது.

(தெய்வீக ஆன்மா ஆத்ம ரூபங்களை அறியும்).

3) தெய்வீக ஆன்மா கருத்தாலும், உள்ளுணர்வாலும், உணர்ச்சியாலும் அனைத்தின் தனித்தன்மையை அறியும். ஜீவாத்மாவில் அவற்றிற்கு உண்டான தனியான நோக்கத்தை அறியும். ஒவ்வொன்றும் பரமாத்மா அதனுள் வாழ்வதை அறியும். அதனால் ஒவ்வொன்றும் நிழற்படமன்று, மாயையன்று, அலைகளில் எழும் நுரையன்று. ஆனால் ஒவ்வொன்றும்

முழுமையுள் முழுமை (இவை மனத்திற்குப் புலப்படாத உருவகங்கள்), அனந்தசத்தியத்தை மீண்டும் கூறும் சத்தியம், கடலான அலை, பிரம்மமான சிருஷ்டி. ரூபத்தின் பின்னால் அதன் முழுமையைக் காணும் பொழுது அது தெரியும்.

கடவுள் அனைத்துமாவது, பெற்றோர் பிள்ளைகள் உடலாவது போன்றது. கடவுள் அனைத்து ஆன்மாவாவது, பெற்றோர் பிள்ளைகள் சுபாவமாவது போன்றது. கடவுள் அனைத்தின் தனித்தன்மையாவது பெற்றோர் பிள்ளைகளின் அறிவாவதுபோல் சொல்லலாம். குடும்பத்தை அறிந்தவர் வீட்டினுள் நுழைந்தால் பெற்றோரையும் பிள்ளைகளையும் பார்த்து, உடலமைப்பு - ஜாடை - சுபாவம், அறிவு, ஆகியவை பெற்றோருடையது என ஒரே பார்வையில் அறிவதுபோல் தெய்வீக ஆன்மா உலகையும், அதன் ஆத்மாக்களையும், தனித்தன்மைகளையும் அறியும்.

பக்கம் 154 / பாரா 8

இறைவனே, நம்முள் உள்ள இறைவனே, உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளாக மாறினான் என்றால், நமக்கு மற்ற பொருள்கள், ஜீவராசிகளுடன் உள்ள ஒருமை விளங்கும். அனைத்தையும் அவனுள் காண்கிறோம் எனில் ஒருமையில் பன்மை விளங்கும். அனைத்திலும் அவனைக் காண்கிறோம்எனில் மனிதன் ஜீவாத்மா என விளங்கும்.

நம் மனம் குறையுடையது. இந்த மூன்றுநிலைகளில் மனத்தால் ஒரு நிலையைத்தான் அறிய முடியும். இம்மூன்றும் சுயஞானம். ஒன்றையறிய மனம் மற்ற இரண்டையும் விலக்கிப் பார்க்கிறது. மனத்தின் சித்தி குறையுடையது. அனைத்தையும் விலக்கி, ஒன்றை அறிவது. சத்தியம் பூரணமானது. மனம் அதில் குறையைக் கொண்டு வரும். ஒன்றைச் சேர்த்து, மற்றதை விலக்கும். ஆனால் சத்தியஜீவன் எதையும் விலக்காது. சத்தியஜீவன் சத்தியஜீவியத்தின் முக்கிய அம்சம் பெற்றவன். அதன் இரு முக்கிய அம்சங்கள் (1) அனந்தமான ஐக்கியம்

(2) ஒருமையுள்ள பூரணம். சத்தியஜீவியம் மூன்று தனித்த அம்சங்களைக் காண்பதில்லை. ஒன்றில் மூன்றாக இவற்றைக் காண்கிறது. ஒருவர் ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் தலைவர் எனில், அவருடைய மூன்று அம்சங்கள் அவரை மூன்று தனி மனிதர்களாகப் பிரிப்பதில்லை. மூவரும் ஒருவரே. திறமை மூன்று. இந்தியர் பலதரப்பட்டவர் - தமிழர், தெலுங்கர், வங்காளி என 18 வகையானவர், இந்து, முஸ்லீம், கிருத்துவர், ஜைனர், புத்தர் எனவும் மாறுபட்டவர். சிறுவர், இளைஞர், முதியவர் எனவும், ஆண், பெண் எனவும் வேறுபட்டவர் - என்றாலும், பாகிஸ்தான் படையெடுத்தது எனில், அனைவரையும் இந்தியராகக் காணலாம். எந்த நாட்டில் இருந்தாலும் இந்தியர் இந்தியரே. அனந்தமான ஐக்கியம், அசையாத சத்தியம்.

பக்கம் 155 / பாரா 9

இந்த தத்துவத்தை வேதம், தெய்வங்களைக் கொண்டு விளக்குகிறது.

1) எந்த ஒரு தெய்வமும் - அக்னி, விஷ்ணு, ....... - எல்லாதெய்வமாகும்.

2)எல்லாத் தெய்வங்களும் ஒரு தெய்வத்தில் அடக்கம்.

3)ஒவ்வொரு தெய்வமும் தனித்தது. மற்ற தெய்வங்களைவிடத் தாழ்ந்தவை. குருக்களாகவும், வேலையாளாகவும் செயல்படும்.

ஆத்மா இந்நிலையை ஏற்றால் அதன் ஜீவாத்மமையம் மற்ற ஜீவாத்மாக்களுடன் கொள்ளும் தொடர்பு ஐக்கியத்தின் அடிப்படையில் இருக்கும். அந்த ஐக்கியத்திருலிந்து அனைத்தும் எழும். அதன் பின்னணியில் மாறுபட்ட அடுத்த நிலைக்கு நீட்டப்பட்ட ஐக்கியம் இருக்கும். அங்கிருந்து மீண்டும் வந்து தனித்தன்மையை அனுபவிக்கும். ஒவ்வொரு தெய்வமும் உலகை சிருஷ்டித்த பிதா. அவனே அவர் செயலுக்குப் பிள்ளையாய்ப் பிறந்தவன். அதுவே ஆதி. சிருஷ்டியில் வெளிப்படுவதும் அதுவே. அனைத்தையும் உட்கொண்ட "ஒன்றும்' அதுவே.

பக்கம் 155 / பாரா 10

பிள்ளைகள் தாய் வயிற்றில் இருந்து பிறந்ததால் அவர் உடல் தாயுடன் ஒன்றியது. அனைவரையும் தாயினுள் காண்பதால் அனைத்துப் பிள்ளைகளும் ஒன்றானாலும், தனித்தனி மனிதரே. எல்லோரிலும் தாயைக் காண்பதால் அவர்களிடம் உள்ள சுபாவம்,

தனித்தன்மை - பிரியம், பொறுமை, அன்பு, கோபம், பாசம், ஆகியவை

- ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிய தனித்தன்மை. தத்துவத்தால் இதைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

1) எல்லா ஜீவன்களையும் தெய்வீக ஆன்மா தன்னுள் அனுபவிக்கிறது.

2) ஒவ்வொருவருடன் தெய்வீக ஆன்மாவுக்குள்ள தொடர்பை தெய்வீக ஆன்மா தன்னுள் இரண்டறக் கலந்த நிலையில் அனுபவம் பெறுகிறது.

3) எந்த ஒரு ஜீவாத்மா தன்னுள் தன்னை அனுபவிப்பதையும், தெய்வீக ஆன்மா தன்னுள் தன் சொந்த அனுபவமாகப் பெறுகிறது.

அறியாமை வந்து பிரிவினையை ஏற்படுத்தவில்லை என்பதால், அடிப்படை ஐக்கியம் அசையாமலிருப்பதால் தெய்வீக ஆன்மா இந்த மூன்று நிலைகளிலும் மற்ற ஜீவாத்மாக்களைத் தன்னிலும், தன் உறவிலும், தன்னுள்ளும் அனுபவிக்கிறது. சங்கீதக் கச்சேரியில் பக்கவாத்தியம் பலஆனாலும் பாட்டும், ராகமும், ஸ்வரமும் ஒன்றே.

பக்கம் 156 / பாரா 11

ஆத்மா ஜீவன், ஜீவியம் - சக்தி, ஆனந்தம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் இந்த நான்கு நிலைகள் உள்ளன. மற்ற ஜீவாத்மாக்களுக்கும் அவையுள்ளன. நமது அறிவும், உணர்வும் பிணக்கானவை. நம் கருத்தும் பிறர் கருத்தும் மோதும். ஒருவர் உணர்வும், அடுத்தவர் உணர்வும் ஒத்துப் போகா.

தெய்வீக ஆன்மாவில் அதன் அம்சங்கள் - அறிவு, உறுதி, ஆனந்தம் - ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை. அதன் அம்சங்கள் பிற ஜீவாத்மாவின் எந்த அம்சத்துடனும் மோதுவதில்லை. அனைத்தும் வாசிப்பது ஒரே ராகம். வாசிப்பவர் பலர். வாத்தியங்கள் பல. பாட்டு, ராகம், ஸ்தாயி, ஸ்வரம் வேறுபடும். ஆனால் கச்சேரி ஒன்றே. கச்சேரியில் அனைத்தும் - பாடகர், வாத்தியம், பாட்டு - ஒன்றே.

பக்கம் 156 / பாரா 12

தெய்வீக ஆன்மாவுக்குக் கடவுள் பிரம்மம். நாம்என்பது உடல். உடலில் மனமும் உணர்வும் சேர்ந்து நாம் என்ற மனிதனை ஏற்படுத்தினாலும், அவை ஆத்மாவின் வெளிப்பாடுகள். அந்த ஆத்மா ஜீவாத்மா எனப்படும். அது பிரம்மம் நம்முள் ஆன்மீகமாக வெளிப்படுவது. பிரம்மம் என்பது மூன்றாகப் பிரிந்து, பிரம்மம், புருஷா, ஈஸ்வரனாகும்பொழுது முழுபிரம்மத்தின் பகுதியான இம்மூன்றில் ஒன்றான பிரம்மம் நம் ஆத்மா எனப்படும். நமக்குப் பின்னணியில் ஆத்மா இருப்பதுபோல், தெய்வீக ஆன்மாவுக்குப் பிரம்மமாக நாம் கடவுள்எனக் கூறுவது அமையும். சத் என்பது காலத்தைக் கடந்த இறைவன். தெய்வீக ஆன்மா ஒரு புறம் காலத்தைக் கடந்த சத்தையும் - கடவுள் - மறுபுறம் பிரபஞ்சத்திலுள்ள ஜீவாத்மாக்களையும் அறியும். சத், காலத்தைக் கடந்தது, கடவுள், பரமாத்மாஎன நாம் கூறுவது

அனைத்தும் ஒன்றே. ஒன்றின் பலஅம்சங்களாகும். ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வந்ததெனினும் ஒன்று மற்றதை அறியாது. சட்டசபை ஏற்பட பார்லிமெண்ட் அதிகாரம் கொடுத்ததெனினும் சட்டசபை, பார்லிமெண்ட்டை அறிவதில்லை. சில சமயங்களில் மாறுபடுவதும் உண்டு. ஜீவாத்மா, பரமாத்மாவினின்று எழுவதால் ஒன்று மற்றதை முழுவதும் அறிய வேண்டும் என்ற நிபந்தனையில்லை. தகப்பனாரும் மகனும் ஒருவரையொருவர் அறியாத நிலையில் இடையில் ஒருவர் - மாமா, சித்தப்பா, அத்தை - இருவரையும் நன்கு அறிந்து இருப்பார். அதுபோல் தெய்வீக ஆன்மா இருவரையும் நன்கு அறியும். தெய்வம் எல்லாம் அறிந்தது, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது.

இத்தனையையும் தெய்வீக ஆன்மா எப்படி அனுபவிக்கும்? ஞானத்துடன் உறவு எனில் தெய்வம் எல்லாம் அறிந்ததுடன், எப்படி தெய்வீக ஆன்மா ஞானஉறவு கொண்டாடும்? மனிதன் அறியாமையால் செயல்படும்பொழுது தெரிந்ததைச் சேர்த்துக் கொண்டு, தெரியாததை விலக்குகிறான். இது அறியாமையின் இயலாமை. தெய்வீக ஆன்மாவுக்கு இயலாமையில்லை. இயலாமை இல்லாத நிலையில் எப்படி ஓர் அம்சத்தை வெளிப்படுத்தி, அதை மட்டும் லீலையாக அனுபவிப்பது?

நமக்கு இயலாமை தெய்வீக ஆன்மாவுக்கு இயல்பான கட்டுப்பாடு. அதனால் ஓர் அம்சத்தை வெளிப்படுத்தி மற்ற எல்லா அம்சங்களையும் பின்னால் இழுத்துப் பிடிக்கும் திறமையுண்டு. நமக்கு ஊரில் வேண்டியவர், வேண்டாதவர் பலருண்டு. பலருடனும் பழகுகிறோம். வேண்டாதவரும் அவர் வீட்டு விசேஷத்திற்கு அழைக்கிறார். அவரிடம் நமக்கு வேண்டாதவற்றை வெளிப்படுத்தாமல், விசேஷத்தில் பழக வேண்டிய முறைப்படி பழகிவிட்டு வந்துவிடுகிறோம். இது நாகரீகம். அப்படிப் பழகமுடியாதவன் நாகரீகமற்றவன், அறியாமையில் உழல்பவன். அவன் வேண்டாதவர் வீட்டுக்கு அழைத்தாலும் போகமாட்டான். அவர்களை அவன் அழைக்கமாட்டான். அது அநாகரீக அறியாமையின் இயலாமை. எல்லாம் அறிவதும், எல்லாம் முடிவதும், எங்கும் நிறைவதும் தெய்வீக ஆன்மாவில் இப்படித் தங்கு, தடையின்றி செயல்படும்.

தெய்வீக ஆன்மாவின் உறுதி (will) சித்திப்பதுஎனில் தெய்வத்தின் எல்லா வல்லமையும் சித்திப்பதாகும். நமக்கு எது பலஹீனமோ, இயலாமையோ, அது தெய்வீக ஆன்மாவில் இயல்பான கட்டுப்பாடு - இழுத்துப் பிடிப்பதாகும். அன்பும், ஆனந்தமும் தெய்வீக ஆன்மா அனுபவிக்க வேண்டுமானால், தெய்வத்தின் பூரிப்பு வெளிப்படுவதாகும். கடவுள் அன்பு, ஆனந்தமாகும். நம் வாழ்வில் அன்பை மறுப்பது அல்லது ஆனந்தத்தை விலக்குவதுஎன்பது தெய்வீக ஆன்மாவுக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் கட்டுப்படுத்தி, ஓரிரு தெய்வீக உறவுகளை வெளிப்படுத்துவதாகும். தெய்வீக ஆன்மாவின் சிருஷ்டி என்பது பரமாத்மாவின் உருவகங்கள் ஆகும். மரணம், அழிவு, வாழ்வின் முடிவு என நாமறிவது, அமைதி, கட்டுப்பாட்டுடன் வெளிப்படுவது என தெய்வீக ஆன்மா அறியும். அதை ஆனந்தமாயை சச்சிதானந்தத்தில் சிருஷ்டிப்பதாகும். அதே சமயம் இந்த ஒருமை தெய்வீக ஆன்மா கடவுளை - அதன் உன்னத பிரம்மத்தை - அனுபவிக்கும் உறவை மறுக்காது. அது பிரிவினையில் ஒருமையை ஆனந்தமயமாக அனுபவிக்கும் உறவு. ஐக்கியத்தின் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்பட்ட பிரிவினையின் ஒருமை அது.மனதால் குடும்பத்திலிருந்து பிரியாதவன் தனிக்குடும்பம் வைத்தால் அப்பிரிவினை குடும்பஒற்றுமையை அதிகமாக அனுபவிக்க உதவும். இறைவனின் ஆனந்த ஆங்கனம் எனப்படும் உச்சகட்ட உன்னத உறவு அப்படிப்பட்டது.

பக்கம் 157 / பாரா 13

எந்த நிபந்தனையின்படி இந்த தெய்வீக ஆன்மா உலகில் சித்திக்கும்? அதற்குரிய சுபாவமெது? குணம், செயல், திறன் என்பவை மனிதசுபாவத்தின் கருவிகள். உறவு அனுபவம் தரும். அவை ஜீவனுடைய சக்திமூலமாகச் செயல்படுகின்றன. அச்சக்திகள் குணம், செயல், திறன் என்ற கருவிகளாகத் தங்களை உருவாக்கிக்கொள்கின்றன. உதாரணமாக மனம் பலவகைப்பட்ட மனோ சக்திகளாக மாறுகிறது. தீர்ப்பு, கவனம், நினைவு, அனுதாபம் போன்றவை அவை. இவை மனோமயபுருஷனுக்குரிய கருவிகள். அதே போல் சத்தியஜீவியத்திற்குரிய கருவிகள் உள்ளன. அவை ஒரு ஜீவாத்மா அடுத்த ஜீவாத்மாவுடன் உறவாட உதவும். அவற்றை சக்தி, திறன், செயல் எனலாம். அவையில்லாவிட்டால் லீலையில்லை. இந்தக் கருவிகள் என்ன என்பதை பின் அத்தியாயங்களில் தெய்வீக வாழ்வை எட்டும் வகைகளைக் கருதும்பொழுது எழுதலாம். தற்சமயம் ஒன்றை மட்டும் குறிக்கலாம். ஏனெனில் நாம் தத்துவம் பேசும் நேரம் இது. மனித சுபாவத்தையும், அதன் சட்டங்களையும் நாம் ஆராயுமிடம் இது. அகந்தை அழிவது அவசியம். அகந்தையும், அது ஏற்படுத்திய பிரிவினையும் உள்ளவரை தெய்வீகவாழ்வில்லை. அவை நம் மரணத்திற்கு வழிகோலும். அதுவே நமக்கு பிறவிப்பயன், பிறவியில் உண்டான கர்மம். தத்துவபாஷையில் நாம் இலட்சியத்தை விட்டு விலகிய பாங்கு அது. சத்தியம், நியாயம், ஆன்மா என்பவை இலட்சியம். அவற்றை விட்டுவிலகுவது பாவம். பிரம்மம் அறியாமையுள் மூழ்கியது. இது பிரம்மம் மேற்கொண்ட லீலை. அதனால் வேதனை ஏற்பட்டது. மனிதன் இன்று தன் ஆரம்ப நிலைக்கு ஆர்வமாகச் செயல்படுவது அதனால்தான்.

150/1: தத்துவரீதியாகக் கடவுளையறிந்தபின் தெய்வீகவாழ்வையடையும்

பாதையை அறிய முடியும்.

151/2:

தெய்வீக ஆன்மாஎன்பது ஒன்றான பலவான பிரம்மத்தின் லீலை.

151/3:

தெய்வீக ஆன்மா சச்சிதானந்தத்தில் அஞ்ஞானக்கறைபடாமல் ஆனந்தமாக, அனந்தமாக, தூய்மையாக உறைகிறது.

151/4: தெய்வீக ஆன்மா பிரம்மத்தை விட்டு அகல்வதில்லை.

152/5: பரமாத்மாவிலும், ஜீவாத்மாவிலும் ஒரே சமயத்தில் உறைவது தெய்வீக ஆன்மா.

153/6: பிரியும்பொழுதும் ஐக்கியத்தை அது இழப்பதில்லை. சிருஷ்டி அதற்கு

எப்பொழுதும் பிரம்மமே.

154/7: பிரம்மமே எல்லாம்; எல்லாம் பிரம்மத்துள் உறைகிறது; பிரம்மம் அனைத்துள்ளும் இருக்கிறது.

154/8: இவை ஒருமை; பன்மையில் ஒருமை; ஜீவாத்மாவின் தனித்தன்மை.

155/9: அக்னியே எல்லாக் கடவுள்களும்; அக்னியில் அனைவரும் சேர்கின்றனர்; அக்னி மற்றவருக்குச் சேவகன்.

155/10: அனைத்தையும் தானேயென உணர்வதும், அவருடன் உள்ள தொடர்பை இரண்டறக் கலப்பதாக அறிவதும், அவர் தன்னில் பெறும் ஆனந்தத்தை தம் சொந்த ஆனந்தமாக அனுபவிப்பதும் தெய்வீக ஆன்மா.

156/11: ஞானம், உறுதி, ஆனந்தம் நம்முள்ளும் பிறரிலும் மோதும் நிலை தெய்வீக ஆன்மாவுக்கில்லை.

156/12: எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவனான

இறைவனை தெய்வீக ஆன்மா வெளிப்படுத்தும் பொழுது மனித இயலாமையை தன் இயல்பான கட்டுப்பாடாக்கி வெளிப்படுத்துகிறது.

157/13: மனம் சத்தியஜீவிய சக்தி, குணம், திறன் பெற்றால் தெய்வீக ஆன்மாவாகும்.

. ஆத்மவிடுதலைக்கு வாழ்வு எதிரி என்பது ஆரிய முன்னோர் வழக்கு.

. ஆத்மா வளர வாழ்வு அடிப்படை என்பது ஸ்ரீ அரவிந்தம்.

. தெளிவு வாழ்வை இறைமயமாக்கும் என்பது மையக்கருத்து.

. அறிவு பெறும் தெளிவு ஆத்மா பெறும் வாழ்வு.

. இறைவனின் இயல்பை இகவாழ்வில் அனுபவிப்பது ஸ்ரீ அரவிந்தம்.

. அறியாத அகண்டம் புரியாத பிரமிப்பு.

. தெளிவான அறிவு திறமான ஆட்சிக்கு வித்து.

. உயிரில்லாத உடலில்லை. ஆத்மா இல்லாத வாழ்வில்லை.

. ஆத்மாவையடையத் தடையென்ற வாழ்வுக்கு ஆத்மீகநறுமணம் தருவது ஸ்ரீ அரவிந்தம்.

. பிரம்மம் பிரிதல்ல. நம்மை பிரம்மமாக அறிவது ஞானம். பிரம்மமாக வாழ்வது பிரம்மஞானம்.

. தெய்வம் அறியாதது அஞ்ஞானம்.

. அறியாமையை அறியாத தெய்வம் ஆத்மாவின்அமிர்தத்தையும் அறியாது.

. அறியாமை அனந்தனின் மகுடம்.

. ஆத்மாயில்லாத வாழ்வில்லை.

. மனிதவாழ்வில் உள்ள அனைத்தும் மாயை சிருஷ்டித்தது.

. மாயை சிருஷ்டிக்காத மகிமையில்லை.

. ஆத்மாவுக்கும் தெய்வீகம் உண்டு.

. அது பிரம்மத்தைவிட்டு அகலாது.

. இறைவனை இடைவிடாது அனுபவிப்பது தெய்வீகவாழ்வு.

. தெய்வீகவாழ்வின் மையம் தெய்வீக ஆத்மா.

. பிரிவின் அனுபவம் பிரம்மானுபவம்.

. இறைவனை இணைந்தும், பிரிந்தும் அனுபவிக்கலாம்.

. இரண்டறக் கலப்பது இழப்பதின் உச்சி.

. விலகி நிற்பது வினோதமான உணர்ச்சி.

. இரண்டையும் ஏற்பது இகழ்ச்சி புகழ்ச்சியாவது.

. வாழ்வு என்பது உறவு.

. தெய்வத்துடனும், ஆத்மாவுடனும் உறவு கொள்வது தெய்வீகவாழ்வு.

. தெய்வீக ஆன்மாவின் இருப்பிடம் சச்சிதானந்த லீலை.

. ஒளிமயமான அமைதி அதன் அடிப்படை.

. அமைதியான சச்சிதானந்தம் அசைவை அனுபவிப்பது லீலை.

. தெய்வீக ஆன்மாவுக்கு ஜீவனும், ஜீவியமும், ஆனந்தமும் உண்டு.

. முயன்று பெறுவது மூலவன் செயலன்று.

. இல்லாததைப் பெறுவது சாதனை.

. இருப்பதை ஏற்பது இயல்பு.

. தெய்வீக ஆன்மா பிரம்மத்தின் முன்னிலையிலிருப்பது அதன் இயல்பு, முயற்சியால் பெற்றதன்று.

. அறிவுக்குப் பிரம்மம் தத்துவம்.

. அறிவு தரும் தத்துவம் அனுபவம் தாராது.

. ஜீவாத்மா மறந்ததை தெய்வீக ஆன்மா மறக்கவில்லை. மறக்காதது, மறக்க முடியாதது தருவது மகிமை.

. ஒன்று பலவானது சிருஷ்டி.

. மனம் இரண்டில் ஒன்றை அறியும்.

. தெய்வீக ஆன்மா இரண்டிலும் காலூன்றி நிற்கும்.

. நாம் நம்மை மறந்த தெய்வீக ஆன்மா.

. அனைவரும், அனைத்தும், இரண்டையும் அறிவர்.

. அறிந்ததை மறந்த பேறு மனம் தந்த பெருவாழ்வு.

. அம்சம் பிரியும்; அங்கம் பிரியாது.

. அம்சத்தை அங்கமாக அறிவது அஞ்ஞானம்.

. பிரியாமற் பிரிவது எட்டாத வாழ்வை ஏற்று மகிழ்வது.

. ஒருமையிற் பன்மை உயர்ந்த நெறி.

. இறைவன் இருப்பது ஒருமை.

. இறைவனிலிருப்பது பன்மையில் ஒருமை.

. இறைவன் அகத்துள் உருவம் பெறுவது ஜீவாத்மா.

. இவை தெய்வத்துள் வேதம் கண்ட சத்தியம்.

. அக்னி அனைவரையும் உட்கொண்ட ஆண்டவன்.

. அக்னியில் அனைத்து தெய்வங்களும் இணைகின்றன.

. அக்னி அனைவருக்கும் சேவகன்.

. சிருஷ்டியை பிரம்மமாக அறிவது தெய்வீக ஆன்மா.

. பிரம்மம் எந்த ரூபத்திலும் பிரம்மமே.

. மேகமும், மழையும், ஊற்றும், வெள்ளமும் தண்ணீரே. உருவம் மாறலாம், உள்ளது மாறாது.

. மலையும், மடுவும், கடலும், மரமும், மனிதனும் பிரம்மமே. தோற்றம்

மாறியதால் பிரம்மம் மாறுவதில்லை, அழிவதில்லை.

. மாற்றம் மனத்துடையது. மகிமை குறைவதில்லை.

. அறிவும், செயலும் இணைவது வேகம்.

. பிணக்கு இயல்பன்று.

. இணைந்து பெறும் இன்பம் இறைவனின் இயல்பு.

. எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன் ஒரு நேரம் செய்வது ஒன்றே.

. மனிதனுக்கு பிரம்மம் ஆத்மா.

. தெய்வீக ஆத்மாவுக்கு பிரம்மம் இறைவன்.

. மனிதனுக்கு இயலாமை இறைவனுக்கு இயல்பான கட்டுப்பாடு.

. பிரம்மம் குணமாக வாழ்வில் வெளிப்படும்.

. குணம், செயலாக, தண்மையாகவும் வெளிப்படும்.

. குணம் மாறினால் தெய்வீகமணம் வீசும்.

. வாழ்வு தெய்வீகவாழ்வாக மனித குணம் தெய்வீகஉறவாக வேண்டும்.

. குணம் உறவில் வெளிப்படும் மணம்.

. பிரம்மம் ஆனந்தத்தைப் பேரானந்தமாக்க சிருஷ்டித்தது.

. அறியாமை ஆனந்தத்தின் கருவி.

. அறியாமை அறிவைவிட உயர்ந்தது என்ற ஞானம் பிரம்மம் பேரானந்தம் பெறும் ஞானம் -- அதுவே உலகில் பிரம்மஜனனம்.

. அசைவற்ற பிரம்மம் அசைவை நாடுவது ஜனனம்.

. பிரம்மத்தின் அசைவு பரிணாமத்தின் அமிர்தம்.

. அசைவு அனந்தனுக்கு அமிர்த ஊற்று.

. அசையும் பிரம்மம் அக்ஷரபிரம்மத்தின் முழுமை.

. முழுமை ஆனந்தத்தின் பெருமை.

. அனந்தம் பெறும் சுதந்திரம் ஆனந்தம்.

. ஆனந்தம் அமிர்தத்தின் முழுமை பெறுவது சிருஷ்டியின் பெருமை.

 

*****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன்னை அறிந்தால் முன்னேற்றமுண்டு. சமூகத்தை அறிவதால் சமூகத்தில் முன்னேற முடிகிறது. விஞ்ஞான முன்னேற்றம் அல்லது செயல்படும் வகையில் முன்னேற்றம் சமூகத்திற்குரியது. தனி மனிதனுக்குச் சமூகத்தைத் தாண்டிய முன்னேற்றமில்லை.

மனிதனுக்கு முடிவான முன்னேற்றம் சமூகம் தருவது.

 



book | by Dr. Radut