Skip to Content

12. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

என். அசோகன்

  1. ஒரு வீட்டைக் கட்டிப் பராமரிப்பது போல நாம் ஒரு சூழலை உருவாக்கி, அதையும் பராமரித்துக் கொள்ளலாம். இதை வெற்றிகரமாகச் செய்ய நல்ல சூழலை உருவாக்கிக் கொள்வதற்கான ரகசிய சூட்சும அறிவு அறிந்தால் நமக்கு உதவும்.
  2. சுத்தம், தணிவான பேச்சு, சுமுகம், அகப்பரிசுத்தம், ஆகியவை உயரும் அளவிற்கு நம்முடைய ஜீவிய நிலையும் உயரும். மாறாக, அசுத்தம், சத்தமான பேச்சு, சுமுகக் குறைபாடுகள் மற்றும் அகப்பரிசுத்த குறைபாடுகள் அதிகரிக்கும் அளவிற்கு ஜீவிய நிலையும் தாழ்ந்து போகும்.
  3. உயர்ந்த ஜீவிய நிலையில் இருப்பவர்கள் அதற்குண்டான பண்புகளை வளர்த்துக் கொண்டு, அதன்படி தம் வாழ்க்கையை நடத்திக் கொள்ள வேண்டும். தாழ்ந்த ஜீவிய நிலையில் உள்ள மற்றவர்களைப் போல் இவர்களும் நடந்துகொண்டால் அவர்கள் செய்வது பலிக்கலாம். ஆனால் அவர்களுடைய உயர்ந்த ஜீவியநிலை நீடிக்காமல் மறைந்துவிடும்.
  4. உயர்ந்த ஜீவியநிலை என்பது புதிதாக முளைக்கின்ற இளஞ்செடி போன்றது. சுற்றி இருக்கின்ற தாழ்ந்த சூழலால் அது மிதிபட்டு நசுங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  5. நம்முடைய ஆன்மா தான் நம்முடைய personalityயின் மிக உயர்ந்த அம்சமாகும். இருந்தாலும் நம்முடைய personalityயில் அதுதான் மிகவும் சக்தி வாய்ந்த அம்சம் என்று சொல்ல முடியாது. நம்முடைய அறிவு, உணர்வு, உடம்பு ஆகிய இந்த மூன்றுக்கும் ஆன்மா அடங்கி இருக்கிறது. உயர்ந்த அம்சம் ஏன் தாழ்ந்த அம்சங்களுக்கு அடங்கியிருக்கிறது என்பது புரியாத புதிர்.
  6. சமூகத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுடைய பர்சனாலிட்டி அந்தந்த நிலைக்குரிய அம்சங்களுடன் விளங்கும். மேல் வகுப்பைச் சார்ந்தவர்கள் நாகரீகமானவர்களாக இருப்பார்கள். இடை நிலையில் உள்ளவர்கள் கன்சர்வேட்டிவ் ஆகவும் போட்டி மனப்பான்மை நிறைந்தவர்களாகவும் பணத்தைப் பெரிதும் மதிப்பவர்களாகவும் இருப்பார்கள். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் Physicalஆகவும் தோற்றத்திலும், பேச்சிலும் நாகரீகம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
  7. உலகம் முழுவதும் புதுப் பணக்காரர்கள் பழைய பணக்காரர்களை விட அதிக ஆடம்பரமாகவே இருப்பார்கள். இந்த ஆடம்பரம் எல்லாம் அகன்று, பழைய பணக்காரர்களுக்கு நிகரான நாகரீகம் வருவதற்கு புதுப் பணக்காரர்களுக்கு இருபது அல்லது முப்பது வருடங்கள் ஆகும்.
  8. உழைக்கும் வர்க்கத்திருந்து மேல் மட்டத்திற்கு உயர்ந்தவர்கள் பழைய உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களைவிட்டு மிகவும் விலகி நிற்பார்கள். தாம் உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவர்கள் என்பதைப் பற்றிய தாழ்வுமனப்பான்மை அவர்களுக்கு இருப்பதால் இவ்வாறு அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.
  9. வக்கீல் தொழில், மருத்துவம், மற்றும் ஆசிரியர் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிக அறிவு வளர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள். வியாபாரம் மற்றும் அரசியல் ஈடுபட்டுள்ளவர்கள் ஊக்கமும் ஆளுந்தன்மையும் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தச்சு வேலை மற்றும் தையல் வேலை போன்ற கைவேலைகளில் ஈடுபடுபவர்கள் கைத்திறன் மிகுந்தவர்களாக இருப்பார்கள். விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எளிமையானவர்களாகவும், physical. தன்மை கொண்டவர்களாகவும் முறையாகச் செயல்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
  10. பொதுவாக ஒருவர் செய்கின்ற வேலை கைவேலையாக இருந்தால், அவர் பிஸிகலாக இருப்பார். செய்கின்ற வேலையில் பணம் நிறைய சம்பந்தப்பட்டு இருந்தால், நிறைய பேர்களை வேலை வாங்கும் படி இருந்தால், அந்த அளவிற்கு அவர் சக்தி நிறைந்தவராக இருப்பார். செய்கின்ற வேலை அறிவுத்திறன் நிறைந்த வேலையாக இருந்தால், அந்த அளவிற்கு அறிவாளியாக இருப்பார்.
  11. கலைஞர்களுடைய உணர்வு மையத்தில் எனர்ஜி நிரம்பியிருப்பதால் அவர்கள் பொதுவாகவே கட்டுப்பாடுகளை இழந்து, ஒழுக்கம் குறைந்தவர்களாகவே இருப்பார்கள். கலைஞனாய் இருந்து கொண்டு, அதே சமயத்தில் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்றால் மனஉறுதி அதிகம் தேவை.
  12. ஆன்மீகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தீய சக்திகளின் தூண்டுதல்களிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதே பெரிய சவாலாக அமைகிறது.
  13. பணம், காமம், வசதி போன்ற தூண்டுதல்களை விட அதிகாரம், புகழ், மாந்திரீக சக்திகள் ஆகியவற்றை அடையலாம் என்ற தூண்டுதலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வது ஆன்மீகத் துறையில் உள்ளவர்களுக்கு மேலும் கடினம்.
  14. சாதாரண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதுபோல ஆன்மீகத் துறையிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. இடைவிடாமல் தொடரும் முன்னேற்றம் என்பது அரிது. நம் நம்பிக்கையை ஆட்டம் காண வைக்கும் சிரமங்களும் உற்சாகத்தைக் குறைக்ககூடிய நேரங்களும் இடைஇடையே வருவதுண்டு.
  15. சமூகத்தை ஒட்டிச் செயல்படுபவர்கள் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. சமூகத்தை ஒட்டிச் செயல்படுபவர்கள் சமூகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்படுகிறார்கள்என்றுதான் அர்த்தம். ஆடம்பரமான திருமணங்களும், வரதட்சணைகளும் சமூகத்தில் வழக்கமாக இருக்கிறதென்றால் சமூகத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் தங்கள் வீட்டு திருமணங்களையும் இப்படித்தான் நடத்துவார்கள். இப்படி, சமூகத்திற்குக் கட்டுப்படுவதால் அவர்கள் செய்வது தான் சரிஎன்று சொல்ல முடியாது. வரதட்சணை கொடுப்பது என்பது சமூகத்தின் வழக்கம். அதைக் கொடுக்க மறுப்பதுதான் முறையான செயல்பாடு.
  16. புதுமைக்காக நிகழும் மாற்றங்களில் முன்னேற்றம் இருக்கிறதென்று சொல்ல முடியாது. துணிமணிகளிலும், உணவுப் பழக்க வழக்கங்களிலும், சிகை அலங்காரத்திலும் நிகழ்கின்ற புதுப்புது மாற்றங்கள் மக்களுக்குப் பிடித்திருக்கலாம். ஆனால் இவை முன்னேற்றத்தின் அறிகுறி என்று சொல்வதற்கில்லை.

    புடவையிலிருந்து சுடிதாருக்கு மாறுவதோ, இட், தோசையிலிருந்து சப்பாத்தி, பரோட்டாவிற்கு மாறுவதோ ஒரு fashionஏ தவிர, நாகரீக வளர்ச்சி என்று ஆகாது.

    சர்வாதிகார நாடு ஜனநாயக நாடாக மாறுவதோ, அல்லது விவசாய நாடு தொழில் மயமாவதோ உண்மையிலேயே நாகரீக வளர்ச்சியைக் குறிக்கின்ற மாற்றங்களாகும்.

  17. உழைக்கும் வர்க்கத்தினருக்கும், பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் இப்போது கிடைத்துள்ள அதிக சுதந்திரம் பழைய கீழ்ப்படிதலுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. ஆனால் பழைய நாட்களில் தொழிலாளிகளும், பெண்களும் பயத்தின் காரணமாகத்தான் அடங்கி இருந்தார்கள். இப்பொழுது பயம் போய்விட்டதால் தைரியமாக எதிர்க்கிறார்கள். கலாச்சாரம் மேலும் முன்னேறும் போது இந்த எதிர்ப்பும் போய் உண்மையான சுமுகம் வரும்.
  18. பல இந்தியப் பெற்றோர்கள் வயது வந்த பிள்ளைகளை இன்னமும் கட்டுப்படுத்த முயல்கிறார்கள். ஆனால் சுதந்திரம் அதிகரித்து வரும் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிகின்றன. மேலை நாட்டில் பெற்றோர்கள் இதை வெகுநாட்களுக்கு முன்பே உணர்ந்து விட்டார்கள். இந்தியாவில் இன்னமும் உணராமல் உள்ளார்கள்.
  19. ஓர் இந்தியக் குடும்பம் என்றால் பொதுவாக அதிகாரம் செய்யும் தகப்பனாரும், அன்பு காட்டும் தாயாரும் உள்ள குடும்பமாகக் கருதப்படும். பெரும்பாலும் பல குடும்பங்களில் இந்த நிலைமை இன்னமும் நிலவுகிறது.
  20. பெற்றோர்கள் வயதான காலத்தில் பிள்ளைகளின் ஆதரவை எதிர்பார்ப்பது வழக்கம். அந்த ஆதரவு கிடைக்கிறதா, இல்லையா என்பது பிள்ளைகள் நன்றியறிதலுடன் உள்ளார்களா, இல்லையா என்பதைப் பொருத்தது. பெற்றோர்கள் தம்மை வளர்ப்பதற்கு என்ன தியாகம் செய்துள்ளார்கள் என்பதை அறியாத பிள்ளைகளிடமிருந்து அந்த ஆதரவு கிடைப்பது கடினம்.

தொடரும்.....

******



book | by Dr. Radut