Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா

பகவான் ஸ்ரீ அரவிந்தர் கோபப்பட்டதேயில்லை

– Volume-IV, page 51

அவர் செய்கைகட்கு உள் அர்த்தம் உண்டு. அதையறியாமல் சாதகர்கள் அவர் மேஜையை வேறு இடத்தில் போடுகிறார்கள். அவரால் எழுத முடிவதில்லை.

  • பகவான் வேறு உலகத்தைச் சார்ந்தவர்.
  • நம்மால் அவர் தேவைகளை, செயல்களை அறிய முடியாது.

எகிப்தில் ஆந்திரா ஆபீசர்கள் அமெரிக்க நண்பரை விருந்திற்கு அழைத்தனர். மோர்க்குழம்பு ஆந்திரக் குடும்பங்களில் விசேஷமானது. மோர்க்குழம்பு பச்சை மிளகாய் அரைத்து செய்யப்படுவது. அமெரிக்கர்கள் காரத்தை சிறிதளவும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். வந்த விருந்தாளி விஷயமறியாமல் ஒரு வாய் மோர்க்குழம்பு சாதத்தை வாயில் போட்டவுடன் நெருப்பை வாயில் போட்டதுபோல துள்ளிக் குதித்து ஓடினார். வாயில் காரம் தாங்கவில்லை. அங்கிருந்த பூக்கிண்ணத்தை எடுத்து பூவை வீசிவிட்டு தண்ணீரைக் குடித்தார். பிற நாட்டாரிடம் நாம் பழகுவதோ, நம்மிடம் அவர்கள் பழகுவதோ சிரமம், ஒத்துவாராது. 10 அல்லது 20 வருஷம் உடன் உறைந்தாலும் சாப்பாடு, பழக்கவழக்கங்களை அறிந்து செயல்பட முடியாது.

பகவான் சூட்சுமலோகம், காரணலோகத்தைச் சார்ந்தவர், நம்முடன் வாழ்பவர்.

  • ஒரு முறை கோபப்படுவது அவர் போன்றவர்க்கு ஒத்துவாராது. நாம் ஒரு நாள் ஜெயிலுக்குப் போய் வந்ததுபோலாகும். மீண்டும் சமூகத்தில் சேர முடியாது.
  • ஒரு முறை துரோகம் செய்த பின் நட்பு நீடிக்காது என்பது போல, பகவான் ஒரு முறை கோபப்பட முடியாது. கோபப்பட்டால் நம் உலகுக்கு வரவேண்டும். மீண்டும் காரணலோகத்திற்கு எளிதில் போக முடியாது.
  • கற்பு, நாணயம், விஸ்வாசம் தவறக்கூடியதில்லை என்பதுபோல் பகவானுக்கு கோபம் வந்து அடங்குவதும் ஒத்துவாராது.
  • அன்னை அவரை சூட்சுமஉலகில் கண்டபொழுது உடலில் பல இடங்களிலும் கட்டுப் போட்டிருந்தது. என்னஎன்று விசாரித்தார். "நான் எழுதியவற்றை சாதகர்கள் திருத்துகிறார்கள்'' என்றார்.

உட்கார்ந்து எழுதுமிடம், எழுதும் நேரம், அவருக்குத் தேவையான பேனா, பேப்பர், மற்ற புத்தகங்களை உடனிருப்பவர் பகவான் சௌகரியத்திற்காக ஏற்பாடு செய்தால், பகவானால் எழுத முடியாது. ஒரு பெரிய ஆபீசில் ஒரு நாளைக்கு private secretary வரவில்லையெனில் அந்த வேலையை அடுத்தவர் திருப்தியாகச் செய்ய முடியாது. பூலா என்பவர் எலக்ட்ரிசிட்டிக்கு பொறுப்புள்ளவர். அன்னை அறையில் ஒரு புது ஒயர் wire போட ஒரு மேஜையை நகர்த்த அவர் பட்டபாடு சில மணி உழைப்பாயிற்று. அதன் மீதுள்ள பொருள்களை மீண்டும் அதேபோல் வைக்க வேண்டும் என அன்னை கூறினார். சம்பக்லால் பகவான் கட்டிலின் முன்னிருந்து ஒரு ஸ்டூலை எடுக்க வந்தபொழுது பகவான், "அது அன்னையால் அங்கு வைக்கப்பட்டது'' என்றார். அதை நகர்த்த எவருக்கும் உரிமையில்லை. இவை ஜட உலகச் செயல்கள். அடுத்த லோகங்களை நாம் அறிவதெப்படி? ஏன் கோபம் வருகிறது? காரணங்கள் பல.

  1. அறியாமை.
  2. இயலாமை.
  3. பொறாமை.
  4. பொறுமையின்மை.
  5. பழக்கம்.
  6. பரம்பரைப் பழக்கம்.
  7. சூழலில் பலரும் கோபப்பட்டால் நமக்கு கோபம் வரும்.
  8. நெடுநாள் முன்பட்டது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நினைவு வந்தால் கோபம் வரும்.
  9. உடல் தெம்பை இழந்தால் கோபம் வரும்.
  10. பழக்கம் ருசிப்பதால் நாமே கோபத்தை நாடுகிறோம்.
  11. தீயசக்திகள் நம்மை சீண்டினால்.
  12. யோகம் சித்தியை நெருங்கினால் கோபம் வரும்.
  13. கோபக்காரர் மீது ஆசை வந்தால்.

பகவான் இவற்றையெல்லாம் கடந்தவர். அதனால் அவருக்குக் கோபம் வருவதில்லை. இவற்றுள் ஏதாவது ஒன்றைச் செய்து பார்த்தவருக்கு அதன் சிறப்பு தெரியும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உரிமை பாராட்டுவது ஆசையைக் குறிக்கின்றது. விருப்பு, வெறுப்பு அகந்தையைக் குறிக்கிறது. காட்சி ஏற்பட்டு திருஷ்டியாக முதிராமலிருப்பது மனத்தைக் குறிக்கிறது.
 
மனம் மறைந்தால் திருஷ்டி கிட்டும்.
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உடனுள்ளவருடன் உணர்ச்சிபூர்வமாகச் செயல்படுவதற்கே (responding and reacting) நம் சக்தி முழுவதும் செலவாகிறது.
 
அர்த்தமற்ற சூழலைக் கடந்தால் சாதிக்கலாம்.
 
 
******



book | by Dr. Radut