Skip to Content

11. அன்னை இலக்கியம் - வாழும் தெய்வங்கள்

அன்னை இலக்கியம்

வாழும் தெய்வங்கள்

இல. சுந்தரி

"சார், யார் வீட்டில்?" என்று கேட்டவாறு அழைப்பு மணியைத் தேடியும், கதவைத் தட்டியும் அவ்வீட்டிலுள்ளவரை அழைக்க முயன்றார் அவர். பேண்ட், ஷர்ட் அணிந்திருந்தார். கண் கண்ணாடி அணிந்திருந்தார். நாற்பது வயதிருக்கும். கையில் ஒரு அட்டை பைலில் நீண்ட நோட்புக் ஒன்று வைத்திருந்தார். ஒருவாறு அழைப்பு மணியைத் தேடிக் கண்டுபிடித்து, கம்பி கேட்டுக்குள் கை வைத்து மணியை ஒலித்தார்.

வெளியே வந்த கல்பனா என்ற அந்த வீட்டுப் பெண்மணி நாற்பது வயதினர். கேட்டைத் திறந்து, "உள்ளே வாருங்கள். நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று அமைதியாகக் கேட்டார்.

"அரசாங்க அலுவலர் நான். ஜனத்தொகை கணக்கெடுப்பு நடக்கிறதல்லவா, இந்த வார்டில் நான் கணக்கெடுக்க வேண்டியுள்ளது. வீட்டில் உள்ளவர் எத்தனை பேர் என்று சொல்லுங்கள்'' என்றவர் பைலை பிரித்து, நோட்டை எடுத்து, கதவெண் சரி பார்த்து, வைத்துக் கொண்டார்.

"இந்த வீட்டில் நாங்கள் மூன்று பேர் இருக்கிறோம்'' என்றாள் கல்பனா.

"அதே பழைய எண்ணிக்கைதானா?'' என்று தம் கையிலுள்ள ஏட்டைப் பார்த்து, பழைய கணக்கெடுப்பில் உள்ள விபரங்களின்படி உள்ளதைக் கண்டு தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார்.

"சரி, உங்கள் வயது, பெயர் சொல்லுங்கள்'' என்றார்.

"பெயர் கல்பனா, வயது நாற்பத்திரண்டு'' என்றாள்.

"பரவாயில்லை, பெண்கள் வயதைக் குறைத்துச் சொல்வார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் அதிகமாகச் சொல்கிறீர்கள் போலிருக்கிறது'' என்று அவள் இளமையை மறைமுகமாகப் பாராட்டினார். அவரே மேலும் தொடர்ந்தார்.

"உங்கள் கணவர் பெயர் குருமூர்த்தி, வயது நாற்பத்தெட்டு. உங்கள் மகள் மணிமேகலை, வயது 24, சரிதானே?'' என்று பழைய லிஸ்டில் உள்ள பெயரையும், ஐந்து வயது கூட்டிய கணக்கையும் சொன்னார்.

"உங்கள் கணக்கு சரிதான். ஆனால், அவர்கள் இப்பொழுது லிஸ்டில் இல்லை. என் கணவர் இறந்துவிட்டார் (அவள் நெற்றியில் உள்ள கருந்சாந்துப் பொட்டைப் பார்த்து, பார்க்காத பாவனைக்கு மாறுகிறார்). என் மகள் மணமாகி, கணவன் வீடு போய்விட்டாள்'' என்றாள் கல்பனா.

"அப்படியென்றால் நீங்கள் மட்டும்தான் இந்த வீட்டில் வசிக்கிறீர்களா?'' என்றார் வந்தவர்.

"இல்லையில்லை, நாங்கள் மூவர் இந்த வீட்டில் வசிக்கிறோம்'' என்றாள் கல்பனா.

"அப்படியா, சரி, சரி, மற்ற இருவர் வயதும், பெயரும் சொல்லுங்கள்'' என்றார்.

"அவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சேரமாட்டார்கள்'' என்றாள் கல்பனா.

"உங்களுடன் இருக்கும் உறவினர்களில்லையா அவர்கள்? தற்காலிக விருந்தாளிகளா?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார் கணக்கெடுப்பவர்.

"இல்லையில்லை. அவர்கள் விருந்தினரோ, தற்காலிகமானவர்களோ இலர். நிரந்தரமாய் என்னுடன் இருப்பவர்கள்தாம்'' என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

"அவர்களோடு உங்களுக்கு என்ன உறவு என்று சொல்லலாமா....'' என்றார் தயங்கியவண்ணம்.

"நிச்சயமாகச் சொல்லலாம். நீங்கள் கேட்டதில் தவறொன்றுமில்லை. அவர்கள் என் தாயும், தந்தையும்தான்'' என்றாள்.

"சரிதான், பிள்ளைகளால் கைவிடப்பட்டு பெண்ணுடன் தங்கும் பெற்றோரா? அப்படியென்றால் பிள்ளைகள் வீட்டுக் கணக்கில் அவர்கள் பெயர் சேர்க்கப்பட்டுவிட்டது என்று சொல்லுங்கள்'' என்றார் சுவாரஸ்யமாக.

"நீங்கள் நினைப்பது போல் அவர்களை யாரும் கைவிடவில்லை. அவர்களை விடவும் முடியாது. ஒன்றிரண்டு பிள்ளைகளென்றால் பரவாயில்லை, பல பேர் பிள்ளைகள். என் நச்சரிப்புத் தாங்காமல் என்னுடன் இருக்கிறார்கள்'' என்றாள் கல்பனா.

"அப்படியென்றால் அவர்களுக்குத் தனி ரேஷன் கார்டு என்று சொல்லுங்கள்'' என்றார் மேலும் சுவாரஸ்யமாய்.

"சொன்னால் நம்பமாட்டீர்கள், அவர்கள் வாக்கெடுப்பதிலும் கலந்துகொள்வதில்லை, ரேஷன் பொருளும் தேவையில்லை. அதனால் அவர்கள் எந்தக் கணக்கிலும் வருவதில்லை'' என்று நயமாய் நிதானமாய்ச் சொன்னாள் கல்பனா.

"என்னம்மா இது? இத்தனை நாளும் கார்டில் இல்லாமல், கணக்கில் வராமலா இருக்கிறார்கள்?" என்றார் கண்டிக்கும் தோரணையில்.

"ஆமாம், இதுவரை அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்" என்றாள் இயல்பாக.

"யாரும், எதுவும் சொல்வதில்லையா?" என்றார் சந்தேகமாக.

"அவர்களைப் பார்க்க வேண்டும் என்பார்கள். இயலாது என்று நான் எவ்வளவு தடுத்தாலும் பிடிவாதம் செய்து பார்ப்பார்கள். பார்த்த பிறகு எதுவுமே பேசாமல் போய்விடுகிறார்கள்'' என்றாள்.

வந்தவருக்கு ஒரு மாதிரியாயிருந்தது. சற்று நிதானமாக, அதே சமயம் ஜாடையாக கல்பனாவைப் பார்த்தார். கல்பனாவுக்குச் சிரிப்பு வந்தது. அவர் குழம்பிவிட்டார் என்று புரிந்தது. நமுட்டுச் சிரிப்புடன் பேசாது நின்றாள்.

"மிகத்தள்ளாதவர்களோ? அவர்களுக்கு என்ன வயதிருக்கும்?" என்றார் மிகுந்த தயக்கத்துடன்.

"சொல்வேன், சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாயிருக்கும்'' என்றாள்.

"என்னம்மா புதிர் போடுகிறீர்கள், நூறு வயதை நெருங்கி- விட்டார்களா?" என்றார் சற்று சலிப்புடன்.

"நூற்றாண்டைக் கடந்தவர்கள். அம்மாவின் வயது 126; அப்பாவின் வயது 132" என்று மிகவும் இயல்பாகச் சொன்னாள்.

"என்னம்மா இது? இறந்துபோன உங்கள் பெற்றோரின் வயதைக் கூறுகிறீர்களா? நீங்கள் நார்மலாகத்தானே இருக்கிறீர்கள்?" என்று கேட்டவண்ணம் மெல்ல எழுந்து கொண்டு, தமக்குத் தாமே "நான் சரியான நபரிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேனா?' என்று முனகினார்.

கல்பனாவிற்கு அவர் குழப்பம் புரிந்தது. தன் சிரிப்பை வெளியிடாமல், "நீங்கள் நினைப்பது போல் நான் மெண்டல் கேஸ் இல்லை. உள்ளதைத்தான் சொல்கிறேன்" என்றாள் சகஜமாக.

மீண்டும் இருக்கையில் அமர்ந்தார். அவளை இலேசாகக் கவனித்தார். எத்தனை தெளிவான முகம், குழப்பமில்லாத பேச்சு. நிச்சயம் இவள் மெண்டலாக இருக்க முடியாது என்று உறுதி செய்து கொண்டார்.

"படுத்த படுக்கையாய் நோய்வாய்ப்பட்டு பார்க்கப் பரிதாபமாய் இருக்கிறார்களா?''

"அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் நோய் தாக்க முடியாத அளவு நன்றாகவேயிருக்கிறார்கள். அவர்கள் பூரணப் பாதுகாப்பில் தானே நானே இருக்கிறேன்" என்றாள் கல்பனா. தன் பெற்றோரின் பெருமிதம் அவள் பேச்சில் தெரிந்தது.

"என்ன விந்தை மனிதர்கள் இவர்கள்!' என்று அவர் மனம் அதிசயித்தது. வந்த வேலையும் மறந்துபோனது. "அடடா! என்ன ஆச்சர்யம். பிறக்கும்போது நோயுடன் பிறக்கின்ற இந்த நாளில் இப்படிப்பட்ட அசாதாரண மனிதர்களா! அப்படியென்றால் யாரேனும் அவர்களைக் காணவும், செய்தி சேகரிக்கவும் வந்தவண்ணமிருப்பார்களே. T.V.க்காரர்கள் விட்டுவைக்கமாட்டார்களே'' என்றார் பரபரப்பாக.

"அதையேன் கேட்கிறீர்கள்! அவர்களைப் பற்றிய செய்தி சிதம்பர ரகஸ்யம்தான். விஜய் T.V., ஜெயா T.V., விண் T.V.காரர்களும் அவர்களைப் பற்றி ஒளிபரப்பிக் கொண்டுதானிருக்கிறார்கள்" என்றாள் கல்பனா.

ஏறக்குறைய வந்தவர் சுவாமி தரிசனத்திற்குத் தயாராகும் பக்தராகிவிட்டார்.

"அவர்களுடன் நான் பேச முடியுமா?" என்றார் வந்தவர்.

"முடியும். ஆனால், அவர்கள் பேசுவது உங்களுக்குப் புரிய வேண்டுமே" என்றாள்.

"ஏன், தெளிவாகப் பேசமாட்டார்களோ?" என்றார் கனிவாக.

"மிகத்தெளிவாகப் பேசுவார்கள். ஆனால், அது உங்களுக்குப் புரிய வேண்டுமே" என்றாள்.

"என்னம்மா, ஒரே புதிர் மேல் புதிர் இட்டுப் பேசுகிறீர்கள்? அவர்கள் தெளிவாய்ப் பேசினால் எனக்கெப்படிப் புரியாமல் போகும்?" என்றார்.

"அதுதானே பெரிய விஷயம். அவர்கள் வார்த்தைகளால் பேசமாட்டார்கள். விழிகளால் பேசுவார்கள். எனக்குப் பழகிவிட்டது. ஆனால், வருவோரில் பலருக்குப் புரிவதில்லை" என்றாள்.

"அவர்கள் எப்படியிருந்தாலும், எப்படிப் பேசினாலும் பரவாயில்லை. எனக்கு அவர்களைக் காண மிகவும் ஆர்வமாகி- விட்டது".

"அவர்களைப் பார்க்கலாம். ஆனால், அவர்களைப் பார்ப்பதற்கு ஏற்றவர்களாக இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை" என்றாள்.

"ஏற்றவர்களாக என்றால், வயதானவர்களாய் இருக்க வேண்டும் என்கிறீர்களா?" என்றார் வந்தவர்.

"வெறும் வயது நிறைந்தால் போதாது, மனம் நிறைந்திருக்க வேண்டும்'' என்றாள். "பொய் பேசுபவர்களுடன் அவர்கள் பேசமாட்டார்கள். மனத்தூய்மை இல்லையென்றாலும் அவர்களுக்குப் பிடிக்காது. உங்களைப் பற்றி எனக்கெதுவும் தெரியாதே, அதனால்தான் யோசிக்கிறேன்" என்றாள்.

"என் மனம் தூய்மையானதுதான். லஞ்சம், ஊழல் ஏதுமில்லை. ஆனால் மேடம், வாழ்க்கையில் பொய் சொல்லாமல் எப்படி வாழ முடியும்? மனமில்லாமலேயே சில பொய்களைச் சொல்லிவிடுவேன்" என்றார் உருக்கமாக.

தன்னை ஒப்புக்கொள்ளும் நேர்மை அவரிடமிருந்ததைக் கவனித்தாள் கல்பனா.

"உண்மையாகவே நீங்கள் பொய் சொல்ல விரும்பவில்லையென்றால் பொய் சொல்லும் சந்தர்ப்பமே வராமலிருக்க அவர்களால் உங்களை ஆசிர்வதிக்க முடியும்" என்றாள்.

"அப்படியா? அது போதுமம்மா. எனக்கு அதுவே போதும். நான் கட்டாயம் அவர்களைப் பார்த்து ஆசி பெற வேண்டும்" என்றார் தீர்மானமாக.

"சரி, நீங்கள் பிடிவாதமாயிருப்பதால் அவர்களிடம் அழைத்துப் போகிறேன். அவர்கள் சதா தியானத்திலிருப்பவர்கள். நீங்கள் அதற்கு இடையூறு செய்யக்கூடாது. மேலும் பார்த்த பிறகு, இவர்கள்தானா என்று என்னைக் கேட்கக் கூடாது" என்றாள்.

மேலும் குழப்புகிறாயே. நிச்சயமாக இவள் நல்லவளா, பைத்தியமா? இவளை நம்பி, இவள் இருப்பதாகச் சொல்லும் இவள் தாய், தகப்பனைக் காணப் போவது சரியா? என்று உள்ளே குழப்பம் வந்தாலும், காணும் ஆர்வம் அதை அடக்கி மேலெழுந்தது.

"நான் எதுவும் சொல்லமாட்டேன். அவர்களைப் பார்த்தால் போதும்'' என்றார்.

"சரி, அவர்கள் மேலே (மாடியில்) இருக்கிறார்கள். அமைதியாக என்னைத் தொடர்ந்து வாருங்கள்" என்று கூறி, ஒலி எழுப்பாமல் அடக்கமாக மாடிப்படியேறினாள்.

அவரும் தொடர்ந்து சென்றார். ஒரு சிறிய அறையின் கதவின் முன் நின்று மௌனமாக கண் மூடி சிறிது நின்று, பிறகு கதவுகளைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, கதவுக்கு வலிக்குமோ என்பது போல் மிகமென்மையாகத் திறந்தாள்.

பளிங்குக் கற்கள் பதித்த அறையில் சுத்தமும், அமைதியும், மலர் மணமும், பத்தியின் நறுமணமும் இவர்களை வரவேற்றன. நடு மண்டபத்தில் கொலுவிருந்தவர் யார்?

ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரல்லவா!

அவள் தன்னை எதுவும் கேட்கக் கூடாது என முன்பே கூறிவிட்டதால் கேட்க முடியவில்லை. விழிகளால் பேசினர். "வா மகனே!" என்று அவருக்குப் புரிந்தது. விழுந்து நமஸ்கரித்து, விழிநீர் பெருக, ஏதும் பேசாது வெளியேறிவிட்டார் வந்தவர்.

முற்றும்.

******



book | by Dr. Radut