Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/60) காலம், முரண்பாடு, மரணம் ஆகியவை முடிவானதல்ல என அதற்குத் தெரியும்.

  • காலத்தைக் கடந்த காலம் சத்திய ஜீவியம்.  
  • ஆன்மா காலத்தைக் கடந்தது.
  • ஆன்மாவின் அசைவு காலம்.
  • சத்திய ஜீவியம் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி.
  • ஆன்மா தன் அசைவுகளைக் காண்பது காலம்.
  • அசைவற்ற ஆன்மாவுக்குக் காலம் இல்லை. அது காலத்தைக் கடந்தது.
  • ஆன்மா அசையும், அசைவற்றிருக்கும்.
  • முரண்பாடு - எதிரெதிரானவை - காலத்திற்குரியது.
  • எதிர் எதிரானவை வாழ்வு, மரணம், காலத்தின் போக்கு.
  • மரணம் வாழ்வைக் கடந்தால் மரணம் வரும்.
  • வாழ்வின் வலிமை மரணத்தின் வலிமையைக் கடக்கும் பொழுது நாம் வாழ்கிறோம்.
  • பிரம்மம் எதிரெதிரானவையாக இருக்கும்.
  • எதிரானவற்றைத் தன்னுட் கொண்டது பிரம்மம்.
  • அவை மாறி மாறி வரும், ஒரே சமயத்திலும் இருக்கும்.
  • நாம் ஒளியைக் காண்கிறோம், இருளைக் காண்கிறோம்.
  • ஒளியையும் இருளையும் ஒரே சமயத்தில் காண முடியாது.
  • குறையான ஒளியும் குறையான இருளும் சேர்ந்ததே நாம் காண்பவையெல்லாம்.
  • முழு ஒளியும் முழு இருளும் ஒரே சமயத்திலுள்ளது பிரம்மம்.
  • சத்திய ஜீவியம் நிலையாக பிரம்மத்தின் முன்னுள்ளது.
  • காலமும், கடந்ததும் எதிரானவை.
  • அவை இணைந்திரா.
  • சத்திய ஜீவியம் அவை இணைந்த நிலை.
  • அந்நிலையை மூன்றாம் நிலைக் காலம் என்று நான் குறிப்பிடுகிறேன்.
  • காலத்தின் அனந்தமும், கடந்ததின் அனந்தமும், இணைந்த காலம் என்கிறார் பகவான்.
  • எதிரெதிரானவையிருந்தால் முரண்பாடு.
  • முரண்பாட்டில் சிறியது பெரியதை அடக்குவது மரணம்.
  • முரண்பாடேயில்லையெனில் மரணமில்லை.
  • சிந்தனையிலிருந்து மௌனத்திற்குப் போவது காலத்தைச் சிறிது வெல்லும். ஜோதிக்குப் போவதும், நேரடி ஞானம், ஞானத்திற்குப் போவதும் காலத்தைப் பெரிதும் வெல்லும். சத்திய ஜீவியத்திற்குப் போவது முழுவதும் காலத்தைக் கடந்து வெல்வதாகும்.
  • அன்பர்கள் பிரார்த்தனை பலிக்கும் பொழுது காலம் பல அளவில் கடக்கப்படுகிறது.
  • பிரார்த்தனையில் மௌனத்தை எட்டி கற்பனையில் ஜோதியைக் கண்டு மின்னலாக நேரடி ஞானம் பெற்று, முழு ஞானமும் பெறும்பொழுது பிரார்த்தனை பலிப்பதைக் காண்கிறோம்.
  • பிரார்த்தனை பலிப்பதைக் காணாமல் காலத்தை நோக்கினால் நம் பிரார்த்தனையில் காலம் சுருங்கி கடந்ததுடன் இணைந்து மூன்றாம் நிலைக் காலம் எழுவது தெரியும்.
  • மனம் கண்மூடியிருந்தால் பலன் மட்டும் தெரியும்.
  • மனம் நன்றியறிதலோடிருந்தால் பிரார்த்தனை பலிப்பது விளங்கும்.
  • சரணாகதி பூரணமாகி, பூரிப்பும், அன்பும், அர்ப்பணமான நம்பிக்கையாகி உடல் பணிந்து உள்ளம் தொழுது நிறைவு பெற்றால் நம் யாத்திரை விளங்கும்.
  • காலம் கனிந்து கடந்து முதிர்ந்து ஆன்மீகப் பண்பு பெறுவது சத்திய ஜீவியம்.

*******

II/61) உடல் இறவாமையெய்த உடலின் இன்றைய உணர்வுகள் அழிய வேண்டும்.

  • இன்றைய உணர்வை இழந்தவுடல் என்றும் அழியாது.  
  • வாயால் பேசும் சொல் காற்றில் கலந்து விடுகிறது, அழிகிறது.
  • பேப்பரில், அச்சடித்தால் அது போல் அழியாது.
  • புத்தகம் நெடுநாள் நீடிக்கும்.
  • கல்லில் பொறித்த சொல்லுக்கு அழிவில்லை.
  • இவை சொல்லைத் தாங்கும் காற்று, பேப்பர், கல்லைப் பொறுத்தவை.
  • வால்மீகி, கம்பர், ஷேக்ஸ்பியர், வேதம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் அழியா.
  • அழிவு அமைப்பைப் பொருத்தது.
  • ஆசை அழியும்.
  • அன்பு நிலைக்கும்.
  • காதல் அழிவற்றது.
  • உண்மையான காதல் உள்ளத்தில் நிலை பெறும், உலகம் உள்ளவரை இருக்கும்.
  • கல்லும், மலையும் நிலைத்து நிற்கும்.
  • ஓடும் ஆற்றில் நீர் இருக்கும், வறண்டு போகும்.
  • உடல் ஜடமானது, அழிவது, என்ன செய்தால் இறவாமை பெறும்?
  • உடல் வாழ்வது உயிரின் சக்தியால்.
  • உயிர் சக்தி தருவது போல் உடலுக்கு உணர்ச்சி, கிளர்ச்சி, எண்ணம் உண்டு.
  • உடலுக்கு நினைவுண்டு, சிந்தனையுண்டு, தீர்மானிக்கும்.
  • 50 ஆண்டிற்கு முன் வாழ்ந்த வீட்டிற்குப் போனால் எதுவும் நினைவு வருவதில்லை.
  • ஒரு படம் மாட்ட கை ஆணியைத் தேடும்.
  • தேடிய இடத்தில் ஆணியிருக்கும்.
  • அது 50 ஆண்டு முன் நாமே அடித்த ஆணி.
  • நாம் மறந்த பின்னும், ஆணியை அடிக்க கை நினைவு வைத்திருக்கும்.
  • ஒரு சொல்லுக்கு ஸ்பெல்லிங் மறந்து விட்டால், எழுதினால் சரியாக வரும்.
  • ஞாபகம் மறந்து போனதைக் கை, எழுதியதால் நினைவு வைத்திருக்கும்.
  • ஒளி அழியாது, இருள் அழியும்.
  • ஞானம் அழியாது. அஞ்ஞானம் அழியும்.  
  • ஆனந்தம் அழியாது. வலி மறையும்.
  • எண்ணம் ஞானம் பெற்றால், உணர்ச்சி ஆனந்தம் பெற்றால் அவை தங்கியுள்ள உடலுக்கு ஆயுள் நீடிக்கும்.
  • உடலின் எண்ணம் ஒளிமயமானால், உடலின் உணர்வு ஆனந்தமயமானால் உடல் இறவாமை பெறும்.
  • எதுவும் ஜோதிமயமானால் அழியாது.
  • ஜோதியும், ஆனந்தமும் சத்தியத்தின் உருவங்கள்.
  • சத்தியம் ஆன்மாவின் புறம்.
  • சத்தியம் அழியாது.
  • ஆன்மா அழிவு அறியாதது.
  • எனவே உடலின் ஆன்மா வெளிவந்தால் உடல் அழியாது.

தொடரும்....

******



book | by Dr. Radut