Skip to Content

10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

2. சத்திய ஜீவியம்

பாரதப் போரை "தர்ம யுத்தம்' என்போம். கிருஷ்ண பரமாத்மா உலகில் அவதாரம் எடுத்து, துஷ்டர்களைத் தண்டித்து, சிஷ்ட பரிபாலனம் செய்து, 18 நாள்கள் யுத்தம் நடத்தி, தர்மத்தை உலகில் நிலைநாட்டினார்.

தெய்வங்கள் வானுலகில் சத்திய வாழ்க்கை நடத்தலாம். ஆனால் அவர்கள் பூவுலகில் அவதரித்து வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களின் இயல்பான சத்தியத்தின் மாற்று சற்று குறைந்தேபோகும். பொன்னால் ஆபரணம் செய்ய வேண்டுமானால், அதில் பொடி சேர்க்க வேண்டியது அவசியமாகின்றது. அதே போல தர்ம யுத்தத்தில் வெற்றி காண்பதற்குத் தர்மத்தின் மாற்றைச் சற்று குறைத்து, வாழ்க்கைக்கே சொந்தமான பொய்யை அதில் பொடியாகக் கலந்தால்தான் வெற்றி கிட்டும். பரமாத்மாவே தர்மபுத்திரரைப் பொய்யுரைக்குமாறு செய்தார். சூரியன் அஸ்தமனமானதாக ஒரு பொய் நிகழ்ச்சியை உருவாக்கினார். போர் தர்மத்திற்கு மாறாக, துரியோதனனைத் தொடையில் அடித்து வீழ்த்துமாறும் கூறினார். "பொய் என்பது வாழ்க்கையில் சிருஷ்டியினால் ஏற்பட்ட முத்திரை. அவதாரபுருஷனும் அந்த விதிக்கு உட்பட்டேயாக வேண்டும்'' என்பது மகாபாரதத்தின் படிப்பினை.

அன்னையின் யோகத்தில் வாழ்க்கை புறக்கணிக்கப்படுவதில்லை. அன்னை வாழ்க்கையில் படிந்திருக்கும் பொய்யின் சுவட்டை அறிந்து, அதை ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றார். அதனால்தான் அவர் அந்தப் பொய்யைக் கரைக்க முனைகின்றார். "வாழ்வு' என்பது ஜீவியம். ஜீவியத்தை முழுவதும் சத்திய ஜீவியமாக்க அன்னை விழைகின்றார். அவரின் விழைவை விளைச்சலாக்கிக் காட்டுவதற்கு நாம் முதலாகவும், முடிவாகவும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் வாழ்க்கையில் திரையாக விழுந்து கிடக்கும் பொய்யை நாம் முழுதுமாக விலக்கிவிட வேண்டும். இதைச் செய்வது கடினம். செய்துவிட்டாலோ அன்னை சிறப்பாகச் செயல்பட்டுச் சாதனைகளை நமக்குப் பரிசாக அளிக்கின்றார்.

யோக இலட்சியக் கண்ணோட்டத்தை விடுத்து, சாதாரண மனித வாழ்வின் நோக்கில் அன்னை வழியில் அமைந்த வாழ்க்கையைப் பார்த்தோமானால், அது சிறப்பு மிக்க, வளம் நிறைந்த, உயர்வு பொருந்திய, ஒளிமிகுந்த வாழ்க்கையாகத் தோன்றும். கார்ப்பொரேஷன் பள்ளிக்கும், கான்வென்ட்டுக்கும் உள்ள வேறுபாடு போன்றது அது. பசுமைப் புரட்சிக்கு முன்பு செங்கற்பட்டு சிறுமணியை எருவிட்டுப் பயிர் செய்தான் விவசாயி. இன்று அவன் I.R.20ஐ ரசாயன உரமிட்டுப் பயிரிடுகின்றான். மாற்றம் குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலத்தில் ஆயிரம் வேலிக்குச் சொந்தக்காரரான பெரிய மிராசுதாரும் வெள்ளிப் பிடியிட்ட பெட்டி வண்டியில்தான் போக வேண்டும். இந்தக் காலத்தில் அதே வாகனம் மாற்றம் அடைந்து மாருதி காராகவும், மற்றவையுமாகி இருக்கின்றன. தர வேறுபாட்டால் கான்வென்ட் படிப்பு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றது. அதே போல விஞ்ஞான வளர்ச்சியால் விவசாயமும், வாகனமும் மாறிப் பொலிவு பெற்றுள்ளன.

சத்தியத்தின் சிறப்பால் அன்னை வழி அமைந்த வாழ்வு, மனித வாழ்வில் அது போன்றதொரு பெரிய மாறுதலுடன் விளங்குகின்றது. அத்தகைய மேலான வாழ்வை நாம் ஒவ்வொருவரும் பெற முடியும். அதற்காகச் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதாவது சத்தியத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக "சத்தியம்” என்றால் உண்மை. நான் சொல்வதை, "பொய் சொல்லக்கூடாது” என்று யாரும் புரிந்துகொள்வார்கள். அது உண்மைதான். என்றாலும் அது உண்மையின் ஒரு பகுதியே.

இக்கட்டுரையில் நான் ஒரு கருத்தை விளக்க முற்படுகிறேன். "சத்தியத்தின் சாயல் எந்த ரூபத்தில் இருந்தாலும், அதைக் கண்டவுடன் அன்னையின் சக்தி விரைந்து செயல்படுகின்றது' என்பதே அக்கருத்து. "சத்தியம்' என்பது பெரிய இலட்சியம். அதன் கூறுகள்: நம்பிக்கை, நல்லெண்ணம், சேவை, சீரிய வழிபாடு, தெளிந்த அறிவு, சிறந்த உழைப்பு, தெய்வ தரிசனம், ஆர்வம், முறைமை (Faith, Goodwill, Service, Right Attitude, Clarity, Hard work, Darshan, Enthusiasm, Systems) என்பனவாகும்.

பல கட்டுரைகளில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளைச் சான்றாக வைத்து மேற்கூறிய கருத்தைப் புரிய வைக்க முயல்கிறேன்.

சைக்கிள் அடிக்கடி தொலைகின்றது. தொலைந்தால் கிடைப்பதில்லை. நூற்றுக்கு ஒன்று கிடைப்பதே அபூர்வம். அப்படிக் கிடைத்தாலும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைந்து திரிந்து அல்லாட வேண்டியிருக்கின்றது. இது நடப்பியல் உண்மை.

சுவாமிநாதன் என்பவர், என் மகனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு தியானமையத்திற்குச் சென்றார். அதை வாசலில் பூட்டி வைத்துவிட்டு, தியானமையத்திற்குச் சென்று ஸ்ரீ அரவிந்தர்-அன்னையைத் தரிசித்துவிட்டு வெளியில் வந்து பார்த்தால், சைக்கிளைக் காணவில்லை. சுவாமிநாதன் அதிர்ச்சியும், பரபரப்பும் அடைந்து தவிப்பதாக எனக்குச் செய்தி வந்தது. நான் அது பற்றிய விவரங்களை எல்லாம் முழுவதுமாகக் கேட்டு, அறிந்த பிறகு, "சுவாமிநாதனை அமைதியாக இருக்கச் சொல்'' என்று கூறி அனுப்பினேன்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் யாருக்கும் அமைதி வருவதில்லை; வருவது கடினம். வந்துவிட்டால் அது யோகம். சுவாமிநாதனும் நான் விடுத்த அறிவுரையை ஏற்று அமைதி அடையவில்லை. இரண்டு தடவை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் கொடுக்க முயன்றார். ஏனோ கொடுக்காமல் திரும்பினார்; குழம்பினார்; புயலில் சிக்கிய படகுபோல அலைக்கழிந்தார்.

அவர் படும்பாட்டை நான் அறிந்தேன். மீண்டும் நான், "சுவாமிநாதன் தங்கமான பிள்ளை. நல்லெண்ணம் மிக்கவர். சைக்கிளைப் பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கின்றார். பிறகு தியானமையத்திற்குப் போயிருக்கின்றார். அதற்குச் சற்று முன்னதாக, சேவையாக அன்னை பற்றிய இரண்டு புத்தகங்களை விற்றிருக்கின்றார். சுவாமிநாதன் கையால் பொருள்கள் தொலையா. அதுவும் நம்முடைய சைக்கிள் நிச்சயமாகத் தொலையாது. இப்பொழுது ஒன்றுதான் முக்கியம்; சுவாமிநாதன் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்'' என்று அவருக்குச் செய்தி அனுப்பினேன்.

பிறகு அவர் முயன்றிருக்கிறார். முயற்சி அளவிலேயே பலன் கிடைத்து விட்டது!

மறுநாள் காலையில் சைக்கிளை எடுத்தவர் - பூட்டைத் திறந்து எடுத்தவர் - ஒரு போலீஸ் ஸ்டேஷனில் அந்தச் சைக்கிளைக் கொண்டுவந்து ஒப்படைத்து, ஏதோ ஒரு விளக்கமும் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

முதல் நாள் இரவு 7 மணிக்கு காணாமல்போன சைக்கிள், மறுநாள் காலை 10 மணிக்கெல்லாம் தன்னாலேயே வீடு வந்து சேர்ந்துவிட்டது!

"சைக்கிள் எப்படித் தொலைந்தது?' என்ற ஆராய்ச்சியை விலக்கி, "எப்படிக் கிடைத்தது?' என்று பார்த்தால், அதன் உள்ளீடு நன்கு புலன் ஆகும். அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைத்தும் தூய்மையானவை. சுவாமிநாதன் சைக்கிளை வைத்த இடம் தியானமையத்தின் வாசல், அவர் சென்றது அன்னை தரிசனத்திற்கு, சைக்கிளை அலட்சியப்படுத்தாமல் கவனமாகப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார், அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகச் சேவை உணர்வோடு அன்னையின் இரண்டு புத்தகங்களை விற்றிருக்கின்றார், அவர் இயல்பில் நல்லவர், நம்மிடம் நல்ல ஈடுபாடு உடையவர், இத்தனையும் நிறைந்த ஒருவருடைய பொருள் பறிபோகாது. சுவாமிநாதன் விஷயத்திலும் பறிபோகவில்லை. அது தன்னாலேயே வீடு வந்து சேர்ந்துவிட்டது.

இவையெல்லாம் சுவாமிநாதனுக்குத் தெரிய நியாயம் இல்லை. "கவலை" என்ற மத்து, "மனம்" என்ற தயிரைக் கடையும்பொழுது, குழப்பம்தான் குமுறி வெடிக்கும். சுவாமிநாதனும் அந்தக் குழப்பத்தில் சிக்கி, இரண்டு முறை புகார் கொடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அது தேவை இல்லை. நல்லெண்ணம், பொறுப்பு, சேவை நிறைந்த இடங்களில் அன்னையால் விரைந்து செயல்பட முடிகின்றது.

"27,000 ரூபாய்க்கு நீண்ட காலமாக விற்க முடியாத நிலத்தை, அன்னை தரிசனம் செய்த பிறகு ரூ.81,000க்கு விற்க ஏற்பாடாகியது. சம்பந்தப்பட்டவரின் கோபத்தால் அந்த ஏற்பாடு தடைப்பட்டது. மீண்டும் அவர் அன்னை தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது, "வேண்டாம்' என்று கையை உதறிக்கொண்டு போனவரே நிலத்தை வாங்குவதற்காகக் காத்துக்கொண்டு இருந்தார்' என்ற ஒரு நிகழ்ச்சியை நான் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

அந்த நிலத்துக்குச் சொந்தக்காரர் அன்னையின் பக்தர் அல்லர். அவர் தரிசனத்திற்குத் தற்செயலாக வந்தவரே தவிர, பக்தியோடு வந்தவரல்லர். 81,000 ரூபாய் ஏற்பாடு கை நழுவிப் போன பிறகு, "27,000 ரூபாய் கிடைத்தாலே போதும்" என்று இறங்கிவந்து, என்னிடம் அந்த நிலத்தை விற்றுத் தரும்படிக் கேட்டார். "81,000 ரூபாய்க்கு ஒரு பைசா குறையாமல் உங்களுக்குக் கிடைக்கும். அது அன்னை தரிசனம் நிர்ணயித்த விலை. ஏன் தவறியது எனத் தெரியவில்லை. மீண்டும் அன்னை தரிசனம் செய்யுங்கள். அந்த விலைக்கே நிலம் விற்பனையாகும்'' என்றேன் நான்.

தன் தவற்றை உணர்ந்தார். முழுநம்பிக்கையுடன் சென்று அன்னை தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியபொழுது, பேச்சை முறித்துக்கொண்டு போனவரே 81,000 ரூபாய்க்கு நிலத்தை வாங்கக் காத்துக்கொண்டிருந்தார்!

"27,000க்கு விற்றாலே போதும்' என்ற நிலைக்கு இறங்கிவந்துவிட்ட அவர், தரிசனத்தின் மகிமையால் உச்சபட்ச ஆதாயத்தை அடைந்தார். இந்தத் தரிசனம் மகிமையைத் தேடித் தந்தது எப்பொழுது? அவர் முழுமையாக நம்பிக்கை கொண்டபொழுது, அவர் நம்பிக்கையுடன் சென்றபொழுது, பிரச்சனை மறைந்து, பெரிய லாபம் கிடைத்தது.

அன்னையின் பக்தர் அல்லாத ஒருவர் நம்பிக்கை கொள்ளும்பொழுது, அந்த நம்பிக்கையின் மூலம் அன்னை செயல்பட முடிகின்றது. நம்பிக்கை - அதுவும் தெய்வ நம்பிக்கை - வாழ்க்கையில் சத்தியத்தின் மணிச்சுடராகும்.

1949இல் எம்.ஏ. முதல் வகுப்பில் தேறிய ஓர் இளைஞர், அச்சகம் ஒன்றில் வேலை செய்தார். வேலையில் பிடிப்பும் இல்லை; வருமானமும் இல்லை. "தியானமையத்தில் சேவை செய்தால் வாழ்வில் உயர்வு கிடைக்கும்' என்பதை ஒரு நண்பர் மூலம் அறிந்து, வேலையை விட்டுவிட்டு தியானமையத்திற்கு வந்து ஆறு மாதக் காலம் புத்தகப் பிரிவில் சேவை செய்தார். அச்சமயம் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு வேலைக்கு விண்ணப்பித்தார். 250 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அந்தக் காலத்தில் ஒரு டெபுடி கலெக்டருக்குக் கிடைக்கக்கூடிய சம்பளம் அது. அவர் அந்த நிறுவனத்தில் வளர்ந்து, வளர்ந்து உச்சக்கட்டத்திற்கு உயர்ந்து, 10,000 ரூபாய் சம்பளத்தில் ஓய்வு பெற்றார். அது சேவையின் மகத்துவம்.

அவருடன் பட்டப்படிப்புப் பெற்ற வேறு யாருமே அவர் அளவுக்கு வாழ்க்கையில் உயரவில்லை. அவர்களுள் ஒருவர் போஸ்ட்மாஸ்டராகவும், மற்றொருவர் ஒரு பெரிய புத்தகக் கடையில் ஸ்டால் சூப்பரின்டென்டாகவுமே ஓய்வு பெற்றனர்.

அந்த அன்பர் செய்தது சேவை. அச்சக வேலையைத் துறந்துவிட்டு வந்து தியானமையத்தில் சேவை செய்தார். வேலையைத் துறப்பதும், வருமானத்தை இழப்பதும் மனித வாழ்வில் பெரிய செயல்கள். அவர் அந்தப் பெருஞ்செயல்களை, சேவையைக் கருதி மிக எளிதாகச் செய்தார். அவருடைய சேவை சிறப்பானது. சேவையை ஏற்றுக்கொண்ட அவரின் மனப்பான்மை அரியது. அவை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்டவை. அறிவில் சேவையைப் பற்றிய தெளிவும், அதன் பலனில் நம்பிக்கையும், நம்பிக்கையின் காரணமாக இருந்த வேலையை விட்டுவிட்ட மனத்திண்மையும் சேவையுடன் சேர்ந்துகொண்டதால், ஆறு மாத சேவை முப்பது ஆண்டுகளுக்குப் பலன் கொடுத்தது.

தொடரும்....

*******



book | by Dr. Radut