Skip to Content

13. அன்னை வழியில் சாதிப்பது

அன்னை வழியில் சாதிப்பது

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

N. அசோகன்

அன்னை அன்பர்களுக்கு மிகவும் உதவக்கூடிய மூன்றாவது spiritual value, silent will என்று அப்பா அவர்களால் வர்ணிக்கப்படுகின்ற மௌன சக்தி ஆகும். எதையுமே கேட்டுப் பெறுவதுதான் நம்முடைய வழக்கம் என்று நாம் இருக்கிறோம். காலையில் நாம் குடிக்கும் டீ, காபியில் ஆரம்பித்து வேலை, வருமானம், promotion, increment, வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்ளுதல் என்று எல்லா இடத்திற்கும் இப்பழக்கம் வந்து விடுகிறது. இப்படிக் கேட்டு வாங்கிக் கொள்வதை நிறுத்தி, கேட்காமல் இருந்தால் நமக்குத் தேவையானது நமக்கு விரைவாகவும் கிடைக்கும், அதிகமாகவும் கிடைக்கும் என்று நமக்குத் தோன்றுவதே இல்லை. நமக்கு ஒரு வேலையோ, வாழ்க்கைத் துணையோ மற்றும் ஏதேனும் உதவியோ தேவைப்பட்டால் நம் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய இடத்தில் இருப்பவர்களை அணுகி நீங்கள் எனக்கு வேலை கொடுப்பீர்களா? உங்களோடு திருமண சம்பந்தம் கிடைக்குமா? மற்றும் இந்த உதவியை எனக்குச் செய்வீர்களா என்று கேட்டுப் பார்க்கத்தான் நமக்கு இயற்கையாகத் தோன்றுகிறது. ஆனால் மௌன சக்தியைக் கடைபிடிப்பவர்கள் வேறு அணுகுமுறையை ஏற்றுக் கொள்கிறார்கள். அன்னையிடம் அவர்களுடைய வாழ்க்கையை ஒப்படைத்து விட்டால் அவர்களுக்கு என்ன தேவை எழுந்தாலும் அதை அன்னையிடம் தெரிவித்து விட்டு அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கைக்கு அன்னை பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் அன்பர் தன்னிடம் தெரிவித்துள்ள தேவையை அன்பருடைய சூழலில் இருக்கின்ற யாரையேனும் வைத்துப் பூர்த்தி செய்கின்ற முயற்சியை அன்னை எடுக்கின்றார். அன்பருடைய தேவை வேலை வேண்டும் என்றோ, நிதி உதவி வேண்டும் என்றோ, வாழ்க்கைத் துணை வேண்டும் என்றோ மற்றும் physical help வேண்டும் என்றோ எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் மௌன சக்தி செயல்படும் போது சட்டம் ஒன்று தான்.

நமக்கு வேண்டியதை அன்னை யார் மூலமாவது நமக்கு delivery செய்து விடுவார். நாம் கேட்க வேண்டியது அன்னையை மட்டுமே ஒழிய மற்றவரை அல்ல. உதாரணமாக ஓர் அன்பருக்கு மகளின் திருமணத்திற்காகக் கடன் உதவி தேவைப்படுவதாக வைத்துக் கொள்வோம். இப்படி ஓர் உதவி தேவைப்படும் போது எந்த உறவினரையோ நண்பரையோ கேட்டால் அவருக்குக் கடன் உதவி கிடைக்கும் என்று தோன்றுகிறதோ அவர்களை அணுகி கேட்பதற்கு அவருக்கு இயற்கையாகத் தோன்றும். இவர் மௌன சக்தியைக் கடைப்பிடிப்பவராக இருந்தால் தனக்கு நிதி உதவி தேவைப்படுகிறது என்று அன்னையிடம் சொல்லி விட்டு உறவினர்களையோ நண்பர்களையோ இவர் கேட்காமல் இருக்க வேண்டும். அவர் அப்படி இருந்தார் என்றால் அன்னை கடன் உதவி செய்யக்கூடிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு தூண்டுதலை மானசீகமாக வழங்கி அவர்களே இவரை போனில் தொடர்பு கொண்டோ அல்லது நேரில் வந்து பார்த்தோ, "மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்திருக்கின்றீர்கள் என்று கேள்விப்பட்டேன். ஏதேனும் கடன் உதவி தேவையா? தேவை என்றால் எவ்வளவு தேவை என்று சொல்லுங்கள் நான் கொடுக்கிறேன்'' என்று அவர்களே இவரிடம் வந்து தெரிவிக்கும்படி செய்வார். வேலை விஷயமாகவோ அட்மிஷன் விஷயமாகவோ recommendation letter தேவை என்றாலும், அவசரமாக ஓர் இடத்திற்குப் போக தெரிந்தவருடைய கார் வேண்டும் என்றாலும் அன்னை இப்படியே செயல்படுவார். அதாவது பிரச்சனை எப்படிப்பட்டதாக இருந்தாலும் தேவைப்படும் உதவி எந்த ரூபத்தில் இருந்தாலும் மௌன சக்தியை ஓர் அன்பர் பயன்படுத்தினால் அது ஒரே மாதிரிதான் செயல்படும். மௌன சக்தி எப்படி எல்லாம் செயல்பட்டுள்ளது என்பதைப் பல அன்பர்கள் தங்கள் வாழ்க்கையில் பல ரூபத்தில் பார்த்துள்ளார்கள். இதைப் பற்றி என் தகப்பனாருக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. மேலும் தியான மையங்களில் நிறைய அன்பர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பேசியும் இருக்கிறார்கள்.

கடைசியாக நான் சமநிலை என்ற நான்காவது spiritual valueவைப் பற்றி விவரிக்க விரும்புகிறேன். சமநிலை என்பது நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளால் நாம் நிதானம் இழக்காமல் இருப்பதைக் காட்டுகிறது. இது ஒரு தெய்வீகமான குண விசேஷமாகும். ஏனென்றால் பூவுலகத்தில் நடக்கின்ற எந்த நிகழ்ச்சியாலும் தெய்வம் தன் நிதானத்தை இழக்காமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். பக்தர்களுடைய வழிபாட்டால் அவர் பரவசம் அடைவது இல்லை. இம்மாதிரியே நாத்திகர்களுடைய மறுப்பாலோ மற்றும் அவர்களுடைய நிந்தனைகளாலோ அவர் வருத்தப்படுவதும் இல்லை. அன்னை தன்னுடைய பிறப்பிலேயே இந்தச் சமநிலையைப் பெற்றுள்ளார். இல்லாவிட்டால் அவரால் இந்தப் பூரண யோகத்தினுடைய கடுமைகளை சமாளித்திருக்கவே முடியாது. அவருடைய பக்தர்களாக நாம் இருக்கும்பட்சத்தில் அவருடைய அருளும் ஆசியும் நம் வாழ்க்கையில் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் அவர் வளர்த்துக் கொண்டுள்ள இந்தச் சமநிலையை நம் சக்திக்கு ஏற்றவாறு நம் வாழ்க்கையிலும் வெளிப்படுத்த வேண்டும். நமக்கு நல்ல செய்தி வந்தால் கட்டுக்கடங்காத பரவசமும் வரக்கூடாது. அதே சமயத்தில் நமக்கு வரும் கெட்ட செய்தியாலும் நாம் நிலை குலைந்து போய் வருத்தத்திலும் முழுகக்கூடாது. வருகின்ற நல்ல செய்தியை நாம் நிதானமாக ஏற்கும்பொழுது அந்த நல்ல செய்தியால் வருகின்ற நன்மை வளரும். இம்மாதிரியே கெட்ட செய்தியையும் நாம் நிதானமாகக் கேட்டுக்கொள்ளும்பொழுது இந்தச் செய்தி மூலம் வரும் கெட்டதற்கும் நம்மேல் ஒரு பிடிப்புக் கிடைக்காமல் நம் சூழலை விட்டு விரைவில் விலகும்.

ஆகவே நான் இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் அன்னை அன்பருக்கு என்று என் தகப்பனார் ஸ்ரீ கர்மயோகி அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் நாம் நெறியாக நடந்து செல்வது என்று முடிவு செய்து விட்டோம் என்றால் அதோடு சேர்த்து நம்பிக்கை, சரணாகதி, மௌன சக்தி மற்றும் சமநிலை ஆகிய ஆன்மீக valueக்களையும் seriousஆகக் கடைப்பிடித்தோம் என்றால் நம்முடைய சாதனை நம்முடைய கற்பனைக்கெட்டாத உயரத்திற்குச் சென்று விடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்றும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பேச்சு எழுவதை அடக்குவது மௌன விரதம்.
பேச்சே எழாதது மௌனம்.
 
 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உள்ளதையறிய உள்ளே போக வேண்டும்.
 
 
*******



book | by Dr. Radut