Skip to Content

14. அன்னை இலக்கியம் - ஸ்ருதியும் லயமும்

அன்னை இலக்கியம்

ஸ்ருதியும் லயமும்

விசாலம்

வெல்வட் சொக்காய் போட்டுக்கொண்டு சாரட் வண்டியில் band வாத்தியத்துடன் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற சாமிநாதனுக்கு, பிறகு, இடைப்பட்ட காலத்தில் தான் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் ஆரம்பத்தில் வாழ்க்கை அமைத்துக் கொடுத்த பூப்பாதையில் இறுதி நாட்களில் நடந்து செல்லவும் செய்தார்.

காவிரி மணம் கமழும் தஞ்சாவூர் ஜில்லாவில் பிறந்த சாமிநாதனுடைய அப்பா, உத்தியோக நிமித்தம் மதராஸ பட்டணத்திற்கு குடிபோக நேர்ந்தது. அங்குப் பள்ளிப் படிப்பை தொடருவதற்கு முன்பு கடலூரில் இருந்த தனது தாய் வழி சித்தி வீட்டில் சில காலம் தங்கிப் படிக்கலானான்.

சாமிநாதன், சித்திக்குச் செல்லப் பிள்ளை. சாமிநாதனோ குறும்புக்காரப் பையன். கோபம் வந்தால் கூரைதான். கூரைமேல் ஏறி அங்கிருந்து கிணற்றுக்குள் குதித்து விடுவேன் என்று சித்தியை மிரட்டுவான். நண்பர்களுடன் பெண்ணையாற்றில் நீச்சலடித்து, கிரிகெட் விளையாடி கொட்டம் அடித்துக் கொண்டிருந்தான். சித்தியால் சமாளிக்க முடியவில்லை. மஸ்லின் துணி வாங்குகிறேன் என்று கூறி அவ்வப்போது பாண்டிச்சேரிக்கு கிளம்பிவிடுவான். சித்திக்கும் வயதாகி வந்தது. அவரவர் பிள்ளை அவரவர் வீட்டிலேயே வளரட்டும் என்று மதராஸுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டார்.

இடைப்பட்ட காலத்தில் வளர்ந்து பெரியவனான சாமிநாதன் மிகவும் சாதுவான பையனாக மாறியிருந்தான். ஒரு நாள் தன்னுடைய அப்பாவிடம் சென்று, "அப்பா, பள்ளிப் படிப்பு முடிந்துவிட்டது. B.A. ஆங்கிலம் சேர பிரஸிடென்ஸி கல்லூரியில் விண்ணப்பப் படிவம் வாங்கி பூர்த்தி செய்து வைத்திருக்கிறேன். நீங்க கையெழுத்துப் போட வேண்டும்'' என்றான்.

"ஏண்டா, யாரைக் கேட்டு இந்தக் காரியம் செய்தாய்? குடும்ப பாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாமா? B.A. படிப்பு முடித்து விட்டு என்ன செய்யப் போகிறாய்? ஒரு வாத்தியார் உத்யோகம் கிடைக்கும். என்னுடைய நண்பன் சேஷகோபாலனை நேற்று சந்தித்தேன். இப்பொழுது Radio Engineeringக்குத்தான் ரொம்ப மவுசு இருப்பதாகச் சொன்னான். நீ அதில் போய் சேர். டிப்ளமா வாங்கி ஒரு உத்யோகத்தில் சேரும் வழியைப் பார்'' என்று நிதானமாகவும், ஆணித்தரமாகவும் கூறினார்.

அந்தக் கால பிள்ளையல்லவா சாமிநாதன், அப்பா பேச்சிற்கு மறு பேச்சில்லை. "சரிப்பா'' என்றான். ஆனால் "தரையில் இறங்கும் விமானங்களின்' கதாநாயகனான விஸ்வம் போல் சாமிநாதனுக்கும் கனவுகள் நொறுங்கிப் போனது.

டிப்ளமா சேர்ந்தாகிவிட்டது, அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியும் அடைந்தாகிவிட்டது, பங்களூரில் இருக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்லில் வேலைக்கும் சேர்ந்தாகிவிட்டது. வெள்ளைக்கார துரையின் கீழ் வேலை. சாமிநாதனுடைய வேலைத் திறன், மணிமணியான கையெழுத்து, ஆங்கிலக் கவிதை எழுதும் ஆர்வம் இவற்றையெல்லாம் ரசித்த துரை பெற்ற பிள்ளைக்கும் மேலாக போற்றி வந்தார். படிப்படியாக உத்யோக உயர்வு, நல்ல சம்பளம், அக்கா, தங்கைகளுக்கு திருமணம் முடிந்தது. வாழ்க்கை ஜில்லென்று ஒரு காற்று போல் வீசிக் கொண்டிருந்தது.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் உடம்பு சரியில்லை என்று படுத்த சாமிநாதனது அப்பா பிறகு கண்களை திறக்கவேயில்லை. குடும்ப பாரம் முழுவதும் அவனது தோள்களில் வந்திறங்கியது. வாங்கும் சம்பளம் தம்பிகளைப் படிக்க வைக்க போறவில்லை, மற்ற இதர செலவுகளும் அதிகரித்துக் கொண்டே வந்தன. என்னதான் இருந்தாலும் தனியார் நிறுவனம், எப்பொழுது வேண்டுமானாலும் மூடலாம் அல்லது வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற பயம் உள்ளூர சாமிநாதனுக்கு இருந்து கொண்டே இருந்தது. கால் காசு என்றாலும் அரசாங்க உத்யோகம் என்று பலரும் சொல்ல, அரசாங்க உத்தியோகத்திலும் சேர்ந்தான். இங்கு தான் ஆரம்பமாகியது சோதனை காலம். ரோஜாப் பூப் போல் இருந்த பாதை முட்பாதையானது.

உத்யோகத்தில் சேர அலுவலகத்திற்குச் சென்றபோது, உத்யோக orderஐ கையில் கொடுத்த அதிகாரி, தன்னுடைய வாழ்த்துகளைக் கூறி சாமிநாதனைப் பார்த்துச் சிரித்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இவர் தன்னைப் பார்த்துச் சிரிக்கிறார், சரியாகத் தானே உடை அணிந்திருக்கிறேன் என்று தன்னையே மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டான்.

"பிரித்துப் பார்''.

கவரைப் பிரித்த சாமிநாதனுக்குத் தலையைச் சுற்றியது. Posting, Lahorepல். அப்பொழுது Lahore இந்தியாவாகத் தான் இருந்தது. இது நடந்த வருடம் 1946ல். வயிற்றைப் பிசைய ஆரம்பித்தது. மதராஸ், பங்களூரைத் தாண்டி எங்கும் போனதில்லை. வயதான அம்மா, படித்துக் கொண்டிருக்கும் தம்பிகள். இவர்களை விட்டு எப்படிப் போவது? பேசாமல் வேண்டாம் என்று சொல்லிவிடலாமா என்று யோசனை செய்த வண்ணம் இருந்தான்.

"என்னப்பா யோசிக்கிறாய்? ஒன்றும் யோசனை செய்யாதே. போய் முதலில் வேலையில் சேர். ஒரு ஆறு மாதம் ஆகட்டும். பிறகு நானே மெதுவாக மேலிடத்தில் பேசி, மதராஸுக்கு மாற்றல் வாங்கித் தந்து விடுகிறேன். அரசாங்க உத்யோகம் வேண்டாம் என்று விடாதே''.

தந்தை ஸ்தானத்தில் இருந்த அந்த அதிகாரியின் வார்த்தைகள் சாமிநாதனுக்குத் தெம்பூட்டியது. சரி என்று கையெழுத்திட்டு அந்த orderஐ வாங்கிக் கொண்டான்.

வீட்டிற்குத் திரும்பிய அவனுக்கு பலத்த வரவேற்பு. அம்மா ஒரு பக்கத்திலிருந்து திட்ட, தம்பிகள் கவலை தோய்ந்த முகங்களுடன் ஒரு பக்கம் நிற்க எங்கிருந்துதான் தெம்பும், தைரியமும் வந்ததோ சாமிநாதனுக்குத் தெரியவில்லை, கிளம்பிவிட்டான் Lahoreக்கு.

புகைவண்டி நிலையத்தில், தில்லி செல்லும் வண்டியில் ஏகப்பட்ட கூட்டம். சீட்டில் உட்கார்ந்தாகிவிட்டது. பக்கத்து சீட்டில் யார் அமரப் போகிறார்களோ என பயந்து, ஒவ்வொரு பிரயாணியாக ஏறும்போது இவராக இருக்குமோ, இந்தம்மாவாக இருக்குமோ என பார்த்துக் கொண்டே இருந்தான். ஜன்னல் வழியாக வெளியே பார்வையை ஓடவிட்ட சாமிநாதனது தோளில் ஒரு கரம் அட்டகாசமாக ஓர் அடி கொடுத்தது. யாரடா இந்த பாதகன் என்று திரும்பிய சாமிநாதன்,

"டேய் சீனு, நீ எங்கடா இங்கே?''

"அதையே தான் நானும் கேட்கிறேன். நீ என்ன செய்யப் போகிறாய் தில்லியில்?''

"அந்தச் சொந்த கதை, சோகக் கதையை ஏனடா கேட்கிறாய். நான் Lahoreக்கு போய் கொண்டிருக்கிறேன். விமான நிலையத்தில் பணி. என்ன செய்யப் போகிறேன், எப்படி காலம் தள்ளப் போகிறேன் என தெரியவில்லை''.

இதைக் கேட்ட சீனு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தான். "ஏண்டா, நான் ஜோக்கா அடிக்கிறேன். இந்த சிரிப்பு சிரிக்கிறாய். நான் எவ்வளவு சீரியஸாகப் பேசுகிறேன். என் கவலை உனக்கு எப்படி தெரியப் போகிறது''.

பள்ளி நாட்களில் நண்பர்களாய் இருந்த சீனுவும், சாமிநாதனும் பல வருடங்கள் கழித்துச் சந்தித்துக் கொள்கின்றனர். எப்போதும் ஹாஸ்யமாகவே பேசும் சீனு தைரியசாலியும் கூட. "கவலையை விடுடா. நானும் அதே உத்யோகத்திற்கு, அதே ஊருக்குத்தான் போகிறேன்''.

சந்தோஷத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்த சாமிநாதனுக்கு அப்பொழுதுதான் ஒரு சிரிப்புக் களையே முகத்தில் வந்தது. "டேய் சீனு, ரொம்ப தாங்க்ஸ்டா''. "எனக்கு எதற்குடா தாங்க்ஸ்? அந்தக் கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். நம் இருவரையும் சேர்த்து புது ஊருக்கு அனுப்புகிறார் பார், அவருக்குத் தான் தாங்க்ஸ்''.

பிறகென்ன பாட்டும், பேச்சும், சிரிப்புமாக தில்லி சென்று அங்கிருந்து Lahoreக்கும் சென்றாகிவிட்டது. ஆறு மாத காலம் ஓடிவிட்டது. வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று நாட்டில் புயல் வீசத் தொடங்கியது. "வெள்ளையனே வெளியேறு' என்ற காலம். அவனும் வெளியேறத் தீர்மானித்துவிட்டான். ஆனால் இந்தியாவிலோ பிரிவினை, ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்தனர். எங்கும் கலவரம், எங்கும் பதட்டம். நாளாக நாளாக சாமிநாதனுக்கும், சீனுவுக்கும் பயம் தலையெடுக்கத் தொடங்கின. இருக்கும் ஊரோ வேறு மதத்தினர் அதிகம் இருக்கும் இடம். தினம் தினம் அலுவலகத்திற்குப் போய்விட்டு வருவதே ஒரு பெரிய சவாலாக இருந்தது.

ஊரிலிருக்கும் தாயும் சகோதரர்களும் எப்படி கவலைப்படுவார்கள் என்று எண்ணி எண்ணியே ஜுரம் வந்துவிட்டது சாமிநாதனுக்கு. தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் தன் குடும்பத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு அப்பிராணியாக காட்சியளித்த அவனைப் பார்க்க சீனுவுக்குப் பாவமாக இருந்தது.

ஜுரத்தால் படுத்திருந்த அவனுக்குப் பணிவிடைகள் செய்தான். பழம், பால், ஹார்லிக்ஸ் என்று வாங்கி ஒரு வழியாக உடம்பை தேற்றியும் விட்டான்.

"சாமிநாதா, ஒரு 10 ரூபாய் இருக்குமாடா, செலவுக்கு வேண்டும். நாளை சம்பளப் பணம் வந்தவுடன் தந்து விடுகிறேன்''.

"அதற்கென்ன, உனக்கில்லாததா?''

பையை நோண்ட ஆரம்பித்தான். வெறும் ஒற்றை பத்து ரூபாய் தாள் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டி சிரித்துக் கொண்டிருந்தது. "ஸாரிடா சீனு, 5 ரூபாய் தருகிறேன். மீதியை நான் செலவுக்கு வைத்துக் கொள்கிறேன். சம்பளம் வந்தவுடன் எனக்காக நீ செலவு செய்த பணத்தைக் கொடுத்து விடுகிறேன்''. "வேண்டாமடா சாமிநாதா, ஏதாவது சொல்லிவிடப் போகிறேன். நீ திருப்பி கொடுப்பாய் என்று நினைத்தா உனக்குச் செய்தேன். சமயத்திற்கு உதவாத ஒரு நண்பன், நண்பனாடா?''

விழிகளில் நீர் திரையிட்டது சாமிநாதனுக்கு. நண்பனை ஆரத் தழுவிக் கொண்டான். மறுநாள் சம்பளம் வாங்கப் போகும் போதுதான் நாட்டின் உண்மை நிலவரம் என்ன என்று தெரிய வந்தது. சம்பளம் கொடுக்க வேண்டுமென்றால் தில்லியிலிருந்து pay order வர வேண்டும். அங்கேயோ நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது. தபால், தந்தி எதுவும் இயங்கவில்லை.

"Pay orderவராமல் சம்பளம் கொடுக்க மாட்டார்களே, என்னடா செய்வது?''

இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. நாளை தினத்தை நினைத்துப் பார்த்தால் பகீரென்கிறது. எப்படியோ பதினைந்து நாட்களை ஓட்டி விட்டனர். கையில் நயா பைசா இல்லை. நாளை சாப்பாட்டிற்கே வழியில்லை, வாடகை தராததால் வீட்டுக்காரன் வேறு நெருக்குகிறான். இல்லையெனில் வீட்டைக் காலி செய் என்கிறான்.

ஏதேதோ சிந்தனைகளோடு இருவரும் தெரு ஓரமாக இருந்த ஒரு குட்டிச் சுவரில் உட்கார்ந்து கொண்டனர். "அரே ஸாப், ஆப் இதர் கைஸே, என்ன சார், எப்படி இங்கு வந்தீர்கள்? இந்த ஊரில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?''

யாரடா இந்த ஊரில் நம்மை விசாரிக்கிறார் என்று பார்த்தால், "அடேடே, ரிஸால் சிங், நீங்களா? எப்படி இருக்கிறீர்கள்? பங்களூரை விட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதே, இந்த ஊரில் எப்படி?''

"ஆமாம், சாமிநாதா. எங்க குடும்ப பிஸினஸ், ஹோட்டல் இங்குதான் இருக்கிறது. அப்பாவுடன் சேர்ந்து அதைப் பார்த்துக் கொள்ள நான் இங்கு வந்துவிட்டேன். இங்கு தான் ஐந்து வருடங்களாக இருக்கிறேன். ஆமாம், ஏன் ஏதோ கவலையாக இருக்கிறீர்கள், என்ன ஆயிற்று?''

அவ்வளவு தான், மடை திறந்த வெள்ளம் போல் இருவரும் தங்களுடைய நிலைமையைக் கொட்டித் தீர்த்தனர். "அடடா, இதற்கா இந்தக் கவலை. பார், கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார். இல்லையென்றால் இன்று நீங்கள் என்னைச் சந்தித்திருக்க முடியுமா? நாளை எனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. நீங்கள் இருவரும் அவசியம் வர வேண்டும். எங்களது ஹோட்டலில் எவ்வளவு நாட்கள் வேண்டுமென்றாலும் தங்கிக் கொள்ளலாம். சாப்பாட்டைப் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம். பங்களூரில் அந்த துரையிடம் நான் பேசத் தெரியாமல், பாஷை புரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் போதெல்லாம் நீ ஆபத்பாந்தவனாய் காப்பாற்றியதை நான் மறக்க முடியுமா? உனக்கு உதவ ஒரு சந்தர்ப்பம் கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி, நன்றி'' என்று கூறிய ரிஸால் சிங்கைப் பார்த்து வாயடைத்து நின்றனர் இருவரும். கஞ்சிக்கே வழியில்லை என்றபோது விருந்தே கிடைத்தது.

ஒரு வாரம் தன்னுடைய ஹோட்டலில் தங்க வைத்து, அவர்களுக்குக் கையில் பணமும் கொடுத்து, தில்லி செல்லும் ரயிலில் ஏற்றிவிட்டார் ரிஸால் சிங். பிப்ரவரி மாதம் 1947 - சாமிநாதனும், சீனுவும் Lahoreலிருந்து தில்லி பிரயாணம் செய்கின்றனர். இருவரும் ஏறிய கம்பார்ட்மெண்டில் ஒரு பதான் குடும்பம்.

ஆஜானுபாகுவாக இருந்த அவர்கள் உரத்த குரலில் சண்டை போடுவது போல் பேசிக் கொண்டிருந்தனர். சாமிநாதனுக்கும், சீனுவுக்கும் அவர்களைப் பார்த்து குலை நடுங்கியது. வேறு எங்காவது எழுந்து போய் உட்காரலாம் என்றால் எங்கே அதற்காக அவர்களுக்கு கோபம் வந்து அறைந்து விடுவார்களோ என்ற பயத்தில் ஆணி அறைந்தாற் போல் நகராமல் சீட்டில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

ரயில் நகரத் தொடங்கியது. வெளியே கூச்சல், கலவரம். ஒவ்வொரு நிலையம் வரும்பொழுதும் வேறு மதத்தினர் தபதபவென்று கதவைத் தட்டி, "யாரடா உள்ளே, யாராவது உள்ளே இருக்கிறார்களா, பாருங்கடா'' என்று சத்தம் போட்டவாறே எட்டிப் பார்த்தனர். பதான் குடும்பத்தைப் பார்த்து வெளியேறி விடுவார்கள். அந்த இக்கட்டான சமயத்திலும் சீனு தன் ஹாஸ்யத்தைக் கைவிடவில்லை. ஒவ்வொரு முறை கும்பல் கதவை தட்டும் பொழுதும் "டேய் சாமிநாதா, அவ்வளவு தான் நம் கதை முடிந்தது. யாரையெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டுமோ அவர்களை எல்லாம் நினைத்துக் கொள். நம் கதை இப்பொழுது முடியப் போகிறது'' என்று கூறிக் கொண்டே வந்தான்.

வயிற்றைக் கிள்ளியது இருவருக்கும். சாப்பிட ஒன்றும் கொண்டு வரவில்லை. ஸ்டேஷனில் இறங்கி சாப்பிடவும் பயம். கோழிக்குஞ்சு போல் பரிதாபமாகக் காட்சியளித்த இருவரையும் பார்த்த அந்தப் பதான் குடும்பம்,

"பசங்களா, பயப்படாதீங்க. நாங்க இருக்கோம். யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது. தில்லிக்குச் செல்லும் வரை நாங்கள், உங்கள் இருவருக்கும் காவல் இருப்போம். பார்த்தால் பசியாக இருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. இந்தாருங்கள் இந்த ரொட்டி, கறி. சாப்பிடுங்கள்'' என்று இரண்டு ரொட்டியும் அதன் நடுவே கறியும் வைத்துக் கொடுத்தனர்.

"ஏண்டா சீனு, ரொட்டி சரி, நடுவிலே இருக்கே அது என்னவாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்''.

"ஊர்வன, பறப்பன, நடப்பன என்று ஏதோ ஒன்று தான் நடுவே உட்கார்ந்திருக்கு. என்னடா செய்வது? பசி வயிற்றைக் கிள்ளுகிறது. சாப்பிடாவிட்டால் இவர்கள் நம்மை ஒரே அமுக்காக அமுக்கி விடுவார்களோ?''

மெதுவாக நடு பாகத்தை மட்டும் விட்டுவிட்டு சுற்றி சுற்றி வந்து ரொட்டிகளை கிள்ளி சாப்பிட்டுவிட்டு, அந்தப் பதான் குடும்பம் பார்க்காத சமயத்தில் நடுவில் இருந்த கறியுடன் மீதி ரொட்டியைத் தூக்கி எறிந்துவிட்டு திருப்தியாய் சாப்பிட்ட பாவனையில் இருவரும் ஏப்பம் விட்டுக் காண்பித்தனர். அதைக் கவனித்த அக்குடும்பத்தைச் சேர்ந்த வயதான மூதாட்டி மெல்லியதாகச் சிரித்தாள்.

ஜிகுஜிகுவென்று தில்லி பிளாட்பாரத்தில் நுழைந்தது புகைவண்டி. சுதந்திரக் காற்றை இழுத்துவிட்ட இருவரும் அந்தப் பதான் குடும்பத்துக்கு பெரிய நன்றியைக் கூறிவிட்டு அலுவலகத்திற்கு ஓட்டம் பிடித்தனர். அந்த நாட்களில் வடக்கில் அரசு பணியில் திரும்பிய பக்கமெல்லாம் இருந்தது சுப்ரமணியன்களும், சீனுவாஸர்களுமே தான். அப்பாடா என்ற ஆனந்தத்தில் குதித்த இருவரும் முதலில் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டனர். ரிஸால் சிங்கிற்கு தாங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை M.O. செய்த பிறகே மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான் சாமிநாதன்.

"அப்பா, எவ்வளவு பெரிய adventureப்பா. அந்த இளம் வயதில் இந்த நெருக்கடியைச் சமாளித்தது greatப்பா. உங்களைக் காப்பாற்றிய அன்னைக்கு நன்றிப்பா, நன்றி'' என்றோம், இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த நாங்கள்.

ஐம்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள காலகட்டத்திற்குச் சென்று விட்டிருந்த எங்களது தகப்பனார், தன்னை உலுக்கிக் கொண்டு நிகழ் காலத்திற்கு வந்தார்.

"ஆமாம்மா, அன்று பாண்டிச்சேரி மண்ணை மிதித்தேன். அன்னையை அறிந்திருக்கவில்லை. ஆனாலும் ஒவ்வொரு இக்கட்டான நேரத்திலும் அன்னை சரியான ஆளை, சரியான இடத்திற்குச் சரியான நேரத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டு தான் இருந்திருக்கிறார். இப்பூவுலகம் தோன்றிய நாளிலிருந்தே அன்னையின் சக்தி ஏதோ ஒரு ரூபத்தில் செயல்பட்டுக் கொண்டு தானே இருந்திருக்கிறது. வாழ்க்கையின் ஸ்ருதி, லயத்தோடு ஒட்டி வாழ்ந்தால் நமக்கு அந்தச் சக்தி எந்நாளும், எந்நேரமும் உடன் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லையம்மா'' என்றவாறே சென்ற எங்களது தந்தையை நாங்கள் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.

முற்றும்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அருகே வந்து அணைத்த ஆண்டவன்,
விலகி நின்று நாமே அவனாவதைக் காண்கிறான்.

******



book | by Dr. Radut