Skip to Content

06. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

72. முடிவு செய்தால் காரியம் பூர்த்தியாகும்

  • ஒரு காரியம் பூர்த்தியாக அதைச் செய்ய வேண்டும்.
  • நாமாகச் செய்யாமல் காரியம் எப்படித் தானே பூர்த்தியாகும்?
  • நாம் நினைப்பதை, முடிவு செய்வதை சந்தர்ப்பம் பூர்த்தி செய்யும்.
  • சந்தர்ப்பம் என்பது புறம், புறச் சூழல். தத்துவ பாஷையில் புறம் என்பது இடம்.
  • ஆன்மா அகம், புறமாகப் பிரிந்து, அகம் எண்ணமாகவும், புறம் இடமாகவுமாகிறது.
  • காரியம் தானே பூர்த்தியாவது, இடம் கட்டுப்படுவது, ஆன்மாவின் ஒரு பகுதி கட்டுப்படுவது.
  • ஆன்மாவின் பகுதி கட்டுப்படுவதால், பூரண யோக வாயில் திறக்கும்.
  • இதை Silent Will மௌனமான மனோ சக்தி எனப் புரிந்து கொள்ளலாம்.
  • முடிவு பூர்த்தியாவது, நினைவு பூர்த்தியாவது பெரிய ஆன்மீக நிலைகள்.
  • Encyclopedia கலைக் களஞ்சியத்தைப் பாட புத்தகமாகக் கொண்டால் எதைப் படிப்பது, எந்த வரிசையில் படிப்பது என்பதைத் தயார் செய்ய அந்த முப்பது வால்யூம்களைப் படிக்க வேண்டும். இந்தப் பெரிய வேலையை நான் மேற்கொண்டேன். Encyclopediaவை ஒரு அன்பர் பரிசாக வாங்கிக் கொடுத்தார். நான் படிக்க ஆரம்பிக்குமுன் குதர்க்கமான தலைவர் அதை எடுத்துக் கொண்டார். புதிய செட் வாங்க ஒரு வருஷம் ஆயிற்று. அது பதினைந்தாவது பதிப்பு. முப்பது வால்யூம் அமைப்பைப் பாட புத்தகமாக மாற்றி அட்டவணையை ஒரு வால்யூமாக தயாரித்தனர். எனக்கு 30 ஆண்டு வேலையை கம்பனியே எடுத்துச் செய்துவிட்டது.

    என் முடிவை கலைக் களஞ்சியமே செய்துவிட்டது.
    அந்த மாற்றம் செய்ய அவர்கள் முப்பத்திரண்டு கோடி செலவு செய்தனர்.

  • நினைவு பலிப்பது இதைக் கடந்த கட்டம்.
  • ஆழ்மனம் அந்த நாளில் நினைத்து மறந்தது, இந்த நாளில் பலிப்பது அடுத்த கட்டம்.
  • நாம் விரும்பியதையே நாம் மறந்த நிலையது.
  • கற்பனைக்கும் எட்டாதது, இப்படி ஒரு வசதி உலகிலிருப்பதே தெரியாது என்ற நிலைகளும் பலிப்பது அடுத்தது.
  • நம் நினைவு அடுத்தவர்க்குப் பலிப்பது.
  • உலகத்திற்குப் பலிப்பது.
  • உலகத்திலில்லாததை நம் எண்ணம் உலகத்திற்கு உற்பத்தி செய்வது ஆகியவை யோகியின் மன நிலைகள்.
  • உலகிலில்லாததைக் கடந்த நிலையில் சிருஷ்டியில் இல்லாததுண்டு.
  • பன்னெடுங்காலமாக இறைவன் - பிரம்மம் - "முயன்று” சூட்சுமத்தைக் கடந்த காரண லோகத்தில் சாதித்ததைப் பகவான் இறைவன் வரும் தருணம் எனக் கூறுகிறார். அந்த ஆன்மீகப் பரிசை, பிரம்மத்தின் பிரம்மாண்டமான பரிசாக உலகில் மனிதனுக்குக் கொடுக்க இறைவனே முடிவு செய்தது,

    ஸ்ரீ அரவிந்த அவதாரம்.
    அதைப் பூர்த்தி செய்ய எழுந்த இரண்டாம் அவதாரம்
    அன்னையின் அவதாரம்.
    அவர்களை அறிவதும் ஆன்மீக பாக்கியம்.
    அந்த பாக்கியத்தைக் காரியம், பணம், வசதியால்
    கணக்கிடுவது சரியில்லை.

  • உபநிஷதங்கள் எழுந்தபொழுது, "வேத பாடம் தர முடியாதது'' என உபநிஷதங்களைக் கூறுகின்றன.
    பகவத் கீதை "எந்த வேதமும், உபநிஷதமும் தர முடியாத ஆன்மீகச் செல்வம்'' எனத் தன்னை வர்ணிக்கிறது.
    கீதையின் யோகம் யோகத்தில் சிறந்த ராஜ யோகத்தைக் கடந்தது என்கிறார் பகவான்.
  • கீதையின் யோகம் வளர்ந்து வரும் நிலையில், முடிவுக்கு முன்னால் நின்று விடுகிறது எனக் கூறுகிறார்.
  • கீதை தெய்வீக மன சக்தி. அதற்கு மனித சுபாவத்தை மாற்றும் திறனில்லை என்கிறார்.
  • மகாத்மா காந்தி வாழும் இவ்வுலகில் வாழ்பவர் பாக்கியசாலிகள் என்றார் ஐன்ஸ்டீன். பகவானும் அன்னையும் வாழும் உலகில் வாழ்ந்தவர் அந்த பாக்கியம் செய்தவர்.
  • அந்த யோகம் செய்யும் தகுதி உலகிலும், வானுலகிலும் பெரிய வாய்ப்பு.
  • பிருந்தாவனம், கோகுலம், சிவ லோகம், வைகுந்தம், சொர்க்கம் என்பவை உயிருக்குரிய சொர்க்கங்கள். மனம் அதைக் கடந்தது.
    மனத்தின் நிலைகள் நான்கு. சத்திய ஜீவியம் அவற்றையும் கடந்தது. அவை மோட்சம்.
  • இது மோட்சம் திருவுருமாறிய அற்புதம்.

*******

73. பழைய குறை புதிய நிறைவாவது

  • உலகில் குறையென ஏற்பட்டால், அது நீடிக்கும், வளரும், தொடரும்; அடுத்த ஜென்மத்திற்கும் வரும்.
  • குறை தீர்வது கல் அகல்யா ஆவது, அது பெரிது.
  • எழுவகை அஞ்ஞானம், எழுவகை ஞானமாவது பூரண யோகம்.
  • தொழிலாளி முதலாளியாவதுண்டு, சிஷ்யன் குருவாவதும் உண்டு.
  • முதலாளி, பழைய தொழிலாளி முதலாளியான பின் அவனிடம் தொழிலாளியாவது அரிது.
  • குரு, சிஷ்யனுக்கு சிஷ்யனாவது அரிது.
  • இவை வாழ்க்கையின் அம்சங்கள், சில அரிதானவை.
  • அஞ்ஞானம் ஞானமாவதும், குறை நிறையாவதும் ஆன்மீகத்திலும் அரிது.
  • எந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டானோ, அதே வீட்டு நடு வீட்டில் சிறப்பான விருந்தாளியாவது பெரிது.
  • இதன் தத்துவம் திருவுருமாற்றம்.
  • சிறியது தான் பெரியதென உணர்ந்து பெரியதாவது.
  • புஞ்சை நிலம் நஞ்சையாவது.
  • காலேஜ் அட்மிஷன் கிடைக்காதவன் காலேஜ் ஆரம்பித்து நடத்துவது.
  • தீமை திருவுருமாறி நன்மையாவது.
  • V.P.மேனன், படிப்பும் வேலையுமில்லாதவன், பெரிய அதிகாரியாகி கவர்னரானது அரிது.
  • V.P.மேனன் பத்து வகுப்புப் படிக்கவில்லை. சிம்லா வர உதவி கேட்டுப் பெற்று, சிம்லாவில் சர்க்கார் வேலை பெற்றுயர்ந்து, வைஸ்ராய், காரியதரிசியாகி கவர்னரானது சரித்திரம்.
  • பொதுவாக முயற்சியுடைய எந்த இளைஞனும் இந்தியன் என்பதால் பெறும் பலனிது என நம்ப முடியாது.
  • இந்தியா புண்ணிய பூமி, ஆன்மீக நாடு.
  • இந்தியர் உடலில் ஆன்மீக ஜோதியுண்டு.
  • முயற்சி, சிரமம், ஆர்வம் அதை வெளிக் கொண்டு வரும்.
  • ஜோதி தலைகாட்டினால், வேகம் அதிகமாகும்.
  • இது நம் நாட்டு இளைஞர் நிலை.
  • இது நம் மண் பெற்ற பேறு.
  • அமெரிக்க இளைஞர் பெரும் பணம் சம்பாதிக்கின்றனர்.
  • இந்தியர் பெரு"வெற்றியைப்'' பெறுவர்.
  • பணமும், சொத்தும், அந்தஸ்தும் "வெற்றி''யுள் அடங்கும்.
  • குறை அகல்வது முதல் நிலை.
  • குறை நிறைவாவது அடுத்த நிலை.
  • குறை பெருநிறைவாவது திருவுருமாற்றம்.
  • ரத்தம் வர அடித்த ஆசிரியர் தலைமையாசிரியரான பின் அடிபட்ட மாணவன் DEOவாக இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தது நிலைமைக்கு நிறைவு.
  • DEO தலைமை ஆசிரியருக்குச் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அதிகாரத்தைச் செலுத்த மறுத்தது DEOவின் ஆன்மீக வெற்றி.
  • அரசியல் தலைவர்களுக்கு எதிர்கட்சி போய் ஆளும் கட்சியானால் எழும் நிலையிது.
  • ஓடம் வண்டியிலும், வண்டி ஓடத்திலும் செல்லும் அம்சம்.
  • தகப்பன் சுவாமி என்ற நிலையும் உண்டு.
  • மனம் அடங்குவது மகோன்னதம்.
  • மனம் அடங்கியவர் பெறும் உயர்நிலைகள் இவை.
  • மோட்சத்தை விலக்கி திருவுருமாற்றம் நாடும் யோகமிது.
  • ஆன்மீக திருவுருமாற்றம் முடிவானது.
  • பணக்காரன் பிள்ளைகள் படிக்காவிட்டால் பணம் போய்விடும்.
  • படிப்பு பணத்தைப் பாதுகாக்கும்.
  • படிப்பைக் கடந்த நிலை பண்பு, பதவி, அந்தஸ்து, நாணயம்.
  • அவை பணத்தைப் பாதுகாக்கும்.

தொடரும்.....

******



book | by Dr. Radut