Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/18. சமர்ப்பணம் சமர்ப்பணத்தால் மட்டுமே பூர்த்தியாகும்

  • ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதன் தத்துவம் இது.
  • சர்க்கார் சட்டம் போட்டால் அதுவே முடிவு என்பது பாமர மக்கள் கருத்து.
  • விவரம் தெரிந்தவர் சர்க்கார் போடுவது சட்டமில்லை, உத்தரவு என அறிவார்கள்.
  • உத்தரவு சட்டப்படியில்லை எனில் செல்லாது.
  • இன்றைய நிலையில் ஆயிரக்கணக்கான சர்க்கார் உத்தரவுகள் செல்லாது.
    ஆனால் அமுலில் இருக்கின்றன.
  • உத்தரவு சட்டத்திற்கு மாறானால் செல்லாது, ரத்தாகும்.
  • சட்டமே முடிவானதில்லை என்பது சமயத்தில் மந்திரிகட்கும், ஜட்ஜ், வக்கீல்கட்கும் புரியாது.
  • சட்டசபை ஏற்படுத்தும் சட்டம் சில விஷயங்களில் பார்லிமெண்ட் சட்டத்திற்கு உட்பட்டது.
  • அந்த விஷயத்தில் அது மாறுபட்டால் செல்லாது.
  • பார்லிமெண்ட் சட்டமும் அதே போல் அரசியல் நிர்ணயச் சட்டத்திற்குட்பட வேண்டும்.
  • அரசியல் நிர்ணயம் (constitution) 1950-இல் மக்களால் ஏற்படுத்தப்பட்டது.
  • அதற்கு முரணானால், அதுவே முரணானால், மக்கள் மன்றம் மட்டுமே அதைச் சீர் செய்ய முடியும்.
  • உயர்ந்த விஷயம் மாறானால், அதை உயர்ந்த விஷயத்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என்ற ஞானம் மக்கட்குண்டு.
    ‘அது ஆண்டவனே செய்ய வேண்டும்’.
    ‘அது ஆண்டவனாலும் முடியாது’ என்பது வழக்கு.
  • பொதுமக்களுக்குச் சில விஷயங்களில் உயர்ந்த ஞானம் உண்டு.
    இது அதுபோன்ற விஷயம்.
  • பிரார்த்தனையால் முடியாதது சமர்ப்பணத்தால் முடியும். சமர்ப்பணம் தடையானால் அது சரி செய்யும் சக்தியில்லை. அதைச் சரி செய்யும் சக்தி சமர்ப்பணத்திற்கே உண்டு என்பது தலைப்பு.
  • உதாரணம் :
    1) அமெரிக்கர் உதாரணம் 2) அன்பர் உதாரணம்.
    மேல்நாட்டார், குறிப்பாக அமெரிக்கர் செய்யும் முயற்சி பிரம்மப்பிரயத்தனம். அது பெரும் சமர்ப்பணத்திற்குச் சில சமயம் சமமாகும். ஒரு அமெரிக்கப் பெண்ணுக்குக் கணக்கு வராது, கூட்டல், கழித்தல் சிம்ம சொப்பனம். அவர் ஆடிட்டர் பரீட்சை எழுதப் படித்தார். எதுவும் புரியவில்லை. எதுவும் பிடிபடவில்லை. வாழ்க்கையே நரகமாயிற்று. பரீட்சை வந்தது. சிம்ம சொப்பனம். என்ன கேள்வி, என்ன பதிலெழுதினோம் எனத் தெரியவில்லை. அழுது கொண்டே வீட்டிற்குப் போனார். ரிஸல்ட் வந்தபொழுது பார்க்கத் தைரியமில்லை. பார்க்க முடியவில்லை. பார்க்காமலிருக்கவும் முடியவில்லை. நேரம் போகிறது. ஆபீஸிலிருந்து போன் வந்தது. Congratulations உங்களுக்கு முதல் இடம் வந்துள்ளது. Gold Medal உண்டு என்றார். ஒன்றும் புரியவில்லை. தலைமையாபீஸைக் கூப்பிட்டார். அது உண்மையென அறிந்து வியந்தார்.
    பெருமுயற்சியில் தகுதி மறந்து குறை மட்டும் தெரிகிறது.
    ரிஸல்ட் தகுதிக்கு வருகிறது. பெருமுயற்சி
    சமர்ப்பணத்திற்கீடானது.
  • ஒரு வேலையை அன்பர் மேற்கொள்ளும்பொழுது அது பெரியது. நமக்கும் பெரியது. நம்மால் முடியாது. பிரார்த்தனையால் மட்டுமே முடியும் எனப் பிரார்த்தனையை மேற்கொண்டால் பிரார்த்தனையால் முடியவில்லை எனக் கண்டு, சமர்ப்பணத்தை மேற்கொண்டு வழிவிட்டு பாதியில் சமர்ப்பணம் கட்டை போட்டால், அடுத்தது என்ன?
    எவரும் கைவிடும் நிலையிது.
    சமர்ப்பணம் பலிக்காவிட்டால், அடுத்தது இல்லையே எனப் புரிகிறது.

    சமர்ப்பணம் தவறினால் முடியாது என்ற நிலையில் முடியாது என்பதைச் சமர்ப்பணம் செய்யத் தோன்றாது. தோன்றினால் பலிக்கும்.
    தவறும் சமர்ப்பணம் முடிவல்ல. அதைச் சரிசெய்வது சமர்ப்பணமாகும்.
  • அன்பர் பேங்கில் (1980-இல்) கடன் கேட்க முயன்றார். அவருக்குத் தேவையானது எட்டு இலட்சம். பாங்க் ஈடில்லாமல் ஒன்றரை லட்சம் கொடுத்திருக்கிறார்கள். ஒன்றரையை இரண்டாக உயர்த்திக் கேட்கலாம் என பாங்கிற்குப் போக முயன்றபொழுது, பாங்கிலிருந்து செய்தி வருகிறது. தலைமையாபீசிலிருந்து அசிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர் வந்திருப்பதாகவும் அன்பர் கம்பெனிக்கு வருவதாகவும் செய்தி. வந்தவர் நிலைமையை அறிந்து தாராளமாக உதவி செய்ய முன்வந்து நெடுநேரம் பேசியபின் அவரே முன்வந்து எட்டு இலட்சம் கொடுப்பதாக சொல்லியதை அன்பர் ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டார். அந்த நேரம் அன்பரின் சொத்து சிக்கலிலிருப்பதால் ஐந்து இலட்சமிருந்தால் சிக்கல் தீரும் என்பதால் கம்பெனிக்கு எட்டு இலட்சம் பெறுவதைவிட ஐந்து இலட்சம் பெற்று சிக்கலை மீட்க நினைத்தார். பாங்க் சம்மதப்படும் போலிருக்கிறது. சிக்கலைத் தீர்த்தபின் சொத்தை ஈடு தர முடியும் என்பதால் கேட்கத் தயங்கினார். மானேஜரே கேட்டு விவரம் தெரிந்து அதைத் தீர்க்கும் ஸ்பெஷல் முறையால் தீர்த்து உதவி செய்ய முன்வந்தார்.
    அந்த நிலையில் அன்பர் ஐந்து இலட்சம் பெறத் தயாராகி எட்டு இலட்சத்தை மறந்தார். மானேஜர் இரண்டையும் தர முன்வந்தது அன்பருக்கு விளங்கவில்லை.
    சமர்ப்பணம் தடையான நேரம் சமர்ப்பணத்தால் அத்தடையை விலக்க வேண்டிய அன்பர் அவர் சார்பாக அன்னையே அதையும் செய்ததைக் கண்டு திகைத்தார்.
  • சமர்ப்பணம் முடிவானது.
  • முடிவான சமர்ப்பணத்திற்கு முழுமை தருவது சமர்ப்பணம்.

*******

ஜீவிய மணி

ஆன்மீகச் சட்டப்படி எல்லாக் குடும்பங்களுக்கும் உள்ள சக்தி (energy) ஒன்றே. ஒரு குடும்பம் கோடீஸ்வரக் குடும்பமாகவும், அடுத்தது வறுமை மிகுந்ததாகவும் இருந்தால், முதற்குடும்பம் தன் சக்தியைப் பணம் சம்பாதிப்பதில் செலவு செய்து வெற்றி பெற்றது. அடுத்த குடும்பத்தினர் தங்கள் சக்தியை, சண்டை, சச்சரவு, வதந்தி, போட்டி, பொறாமை, கடுமை போன்றவற்றில் செலவு செய்தனர். பணம் சம்பாதிப்பதில் தங்கள் முயற்சியை அவர்கள் செலுத்தவில்லை, செலுத்தத் தெரியவில்லை எனப் பொருள். மேற்சொன்ன குடும்பத்தினர் 11 தொழில்கள் நஷ்டமானபின், தகப்பனார் இறந்தபின், ‘நாம் முன்னுக்கு வர வேண்டும்’ என்று முடிவு கட்டினர். அதற்காக முயன்றனர். அதற்குரிய உழைப்பையும், முயற்சியையும் மேற்கொண்டனர். கஷ்டம் வந்த காலத்தில் அது குடும்பத்தைச் சிந்திக்கச் செய்கிறது. சிந்தனை சரியான வழியில் இருந்தால், அது பலிக்கும். பலித்தால் அதிர்ஷ்டம் வரும். அக்குடும்பம் இவற்றை எல்லாம் அறிந்து செய்யவில்லை. சந்தர்ப்பம் நிர்ப்பந்தம் செய்ததால் அது நடந்தது. அதிர்ஷ்டம் தோல்வியில் உள்ளது என அறிந்தால், தோல்வியை வெற்றியாக மாற்றலாம். அந்தத் தெளிவு வந்தபின் தோல்வியே அங்கு இருக்காது.

********



book | by Dr. Radut