Skip to Content

07. திருவுருமாற்றம் முதிர்ந்த சமர்ப்பணம்

திருவுருமாற்றம் முதிர்ந்த சமர்ப்பணம்

கர்மயோகி

பூரண யோகத்திற்குத் திருவுருமாற்றம் இன்றியமையாதது. மாற்றம் நாம் அறிந்தது. கம்பளிப்புழு கூட்டில் வளர்ந்து கம்பளிப் பூச்சியாவது உருமாற்றம். திருவுருமாற்றம் என்பது மனித சுபாவம் தெய்வ சுபாவமாவது. அவசரம் பொறுமையாக மாறுவதை அப்படிக் கூறலாம். மனிதனுடைய பொறுமை அவசரப்படாமலிருப்பது, தெய்வீகப் பொறுமை காலத்தைக் கனியச் செய்வது. சாஸ்த்திரத்தைக் கற்ற சாதகன் உற்சாகப்பட்டு உயர்ந்து மனித குரு தேவையில்லை என்ற நிலையில் ஜகத்குரு அகத்தில் அசரீரீயாகத் தோன்றி வழி நடத்தும்பொழுது அவனுடைய கடமை முடிந்து விட்டது. இனி காரியத்தை முடிக்கத் தேவையானது காலம். காலம் தேவையானால் சாதகன் காத்திருக்க வேண்டும். சாஸ்த்திர ஞானம், ஜீவனுடைய உற்சாகம் ஜகத்குருவால் அனந்தமான சக்தியை அவனுள் உற்பத்தி செய்து விட்டது. சக்தி இனி செயல்பட்டு சாதிக்க வேண்டும். சாதகனின் காரியம் சாதனை, யோகம். யோகம் க்ஷணத்தில் பூர்த்தியாகும் சக்தியை சாதகன் உள்ளே உற்பத்தி செய்து விட்டான். இந்தச் சக்தி தானே சாதிக்கும்வரை அவனுக்குப் பொறுமை வேண்டும். யுகங்கள் கடந்து சாதிக்கும் எனில் அவனுக்கு அதுவரைக் காத்திருக்கும் பொறுமை வேண்டும். அப்பொறுமை உடனே சாதிக்கும். சாதிக்கும் என அவன் அறிவானெனினும் அதை எதிர்பார்க்காத பொறுமை தேவை. இந்த யோகத்தில் வெல்ல வேண்டிய பல்வேறு அம்சங்களில் அதிக சிரமமானது எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பில்லாத பொறுமை சாதிக்கும். அந்தச் சாதனை திருவுருமாற்றமாகும்.

சம்பளம் பெற்ற டிரைவர் மறுநாள் வந்து சம்பளம் கேட்டால் சாதுவுக்கும் கோபம் வரும். சாதகனுக்குக் கோபம் வரக்கூடாது. டிரைவர் தவறு செய்கிறான் என மனம் நினைத்தால் தவறு டிரைவர் செய்யவில்லை, தவறு என்னிடம் இருக்கிறது என அறிந்து ஏற்றுக் கொண்டால் டிரைவர் நம்மிடம் நடப்பதைப் போல் நாம் அனைவரிடமும் இதுவரை நடந்தது தெரியும். தெரிவது sincerity உண்மை. தெரியாதது பொய்.தெரிந்தவருக்கு எழுவது எரிச்சல். எரிச்சல் கூடாது. தெரிந்ததை உளமார ஏற்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். முடிவு செய்த நேரம் நாம் இதுபோல் நடந்த நிகழ்ச்சி நினைவு வரும். நினைவைச் சமர்ப்பணம் செய்து நாம் செய்த தவறான காரியத்தை தலைகீழே மாற்றிச் செய்ய வேண்டும். நண்பர் திருப்பிக் கொடுத்த புத்தகத்தை மறந்து அவர் கொடுக்கவில்லை என்றது நினைவுக்கு வரும். இரண்டாம் முறையாகப் பெற்ற புத்தகத்தை அவரிடம் திருப்பித் தர வேண்டும். தந்தவுடன் திருவுருமாற்றம் செயல்பட ஆரம்பிக்கும். அது அற்புதமாகும். 1968-இல் நான் நடத்திய ‘அருள்’ என்ற பத்திரிக்கையின் நிர்வாகத்தில் இது மூன்று முறை நடந்தது. அதன் ஆசிரியர் தமிழறியாதவர். பொறுப்பு என்னுடையது. அவர் என் குரு அல்ல. தன்னையே எனக்கு குருவாகத் தானே நியமித்துக் கொண்டவர். தவற்றை விரும்பிச் செய்பவர். அதனால் மற்றவர் துடிப்பதைக் கண்டு மகிழ்பவர். அவர் தவற்றை என் தவறாக ஏற்று சமர்ப்பணத்தால் செயலைத் திருவுருமாற்ற முயன்ற பொழுது ஒருவர் பத்திரிக்கைக்கு பேப்பர் வாங்கிக் கொடுத்தார். அடுத்தவர் ஸ்டாம்பு கொடுத்தார். வேறொருவர் கவர் கொடுத்தார். இவற்றைக் கண்ட குரு அச்சாபீஸை இனாமாக அச்சடிக்க வற்புறுத்தினார். அவரும் அன்பரானதால் ஏற்றார். அன்பர் வாழ்வில் அநேக முறை அநேக அளவில் இவை நடந்துள்ளன. மனிதன் தன் தவற்றையறியான், ஏற்க மாட்டான். பிறர் தவறாக அநியாயமாக நடந்தால் நம்முள் ஆழ்மனத்திலுள்ள தவற்றின் பிரதிபலிப்பு அது என ஏற்க மனம் சம்மதிக்காது. சம்மதப்பட்டு செயல்பட்டால் இரு முறை சம்பளம் கேட்ட டிரைவர் சம்பளமில்லாமல் சர்வீஸ் செய்யும் நிலை ஏற்படும். இது திருவுருமாற்றமானால் இதற்குச் சமர்ப்பணம் அவசியம்.

ஒரு விஷயத்தில் திருவுருமாறினால் உலகம் அவ்விஷயத்தில் மாறும். அது ஆரம்பம். உலகம் நம் உலகம். நம் உலகம் இவ்விஷயத்தில் தெய்வலோகமாக மாறிவிடும். எல்லா விஷயங்களையும் இப்படித் திருவுருமாற்ற வேண்டும். இதில் சிரமமான பகுதி எதிர்பார்ப்பது. மௌனம் சித்திக்க எதிர்பார்ப்பு மறைய வேண்டும். எதிர்பார்ப்பு அழிய மௌனம் சித்திக்க வேண்டும். இக்கட்டான நிபந்தனை. இக்கட்டான நிலைமைகள் சமர்ப்பணத்தால் தீரும். எதிர்பார்ப்பைச் சமர்ப்பணம் செய்வதற்குப் பதிலாக நம் இக்கட்டான நிலைமையைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். சிரமம். எனினும் முடியும். ஒரு நிமிஷம் முடியும். ஒரு நிமிஷம் எதிர்பார்ப்பு நின்றால், அதற்குரிய நன்றியறிதல் மனநிலையை வலுப்படுத்தும். பிடிபட்ட எதிர்பார்ப்பு மறைந்தால் சமர்ப்பணத்தை எதிர்பார்ப்பை அழிக்க முயல்வதில் செயல்படச் செய்தால், எதிர்பார்ப்பு அழியாவிட்டாலும், சமர்ப்பணம் அதை எதிர்க்கும் முயற்சியிலிருப்பதால் தெம்பு கொஞ்சம் கொஞ்சமாக வளரும். எதிர்பார்ப்பு மேலும் பிடிபடும். ஆரம்பித்த முயற்சியை ஒரு நிமிஷமும் தளர்த்தக்கூடாது. எதிர்பார்ப்பு அடங்கி சமர்ப்பணம் பலித்து மீண்டும் திருவுருமாற்றம் செயல்படும்பொழுது சற்று அதிகமானப் பலனிருக்கும். முயற்சி விடாமுயற்சியாகும். இது பல கட்டங்களைக் கடந்து பலன் தொடர்ந்து தந்து, முழுப்பலனாகி நிரந்தரமாக நிலைத்தபின், முயற்சியால் பெறும் பெரும் பலனைவிட முயற்சியைக் கைவிட்டபின் அதிகப் பலனுண்டு என்ற கருத்தைக் கருத வேண்டும். இது மௌனத்தைக் கடந்த மௌனம் போன்றது. இதுவரை நம் வாழ்வில் நடந்தவை நம் முயற்சியால் நடந்தவையல்ல. முயற்சியால் நடப்பவை சிறியவை, பகுதி. முழுமையான பெரிய காரியங்கள் நம் வாழ்வில் நடந்தவையெல்லாம் நாம் நம் முயற்சியைக் கைவிட்ட பிறகே நடந்தவை. உலக சரித்திரத்திலும், நாமறிந்த அரசியலிலும், ஊர் விவகாரங்களிலும், நம் சொந்த விஷயத்திலும் இதுவரை நடந்த பெரிய முழுமையானவை அனைத்தும் முயற்சியைக் கைவிட்ட பின்னரேயென அறிவது ஆன்மீக ஞானம். ஆத்மா (soul) தன் பிரச்சனைகளை மறந்த க்ஷணமே அனைத்தும் மறைந்தன. அதைக் கண்டு வியந்த ஆத்மாவைக் (soul) கண்டு இறைவன் கேலியாகச் சிரிப்பதை பகவான் எழுதியுள்ளார். இச்சையற்றவர்க்கு சித்திக்கும் என்பது வழக்கு. கார், ரயில் தரையில் போகும். விமானம் தரையில் போகாது. காரையும் ரயிலையும் வழியில் நிறுத்தலாம். விமானத்தை வழியில் நிறுத்த முடியாது என்பது போல பிரார்த்தனை, சமர்ப்பணம் முதல் நிலைகள். திருவுருமாற்றம் விமானம் போல. Analogy என்பதால் ஓரளவே பொருந்தும். ஒரு அம்சத்தில் மட்டும் பொருந்தும். இக்கருத்துக்களை பகவான் கூறுவதால் ஏற்றாலும் மனம் அடங்கும். புரிந்து ஏற்றால் அதிகமாக அடங்கும். புரிந்தபின் புரிவதை ஏற்காமல், பகவான் கூறுவதாலேயே ஏற்பது யோகம் செய்யும் சாதகர்க்குரிய உத்தம இலட்சணம். இக்கட்டங்கள் எல்லாம் நினைவு, சிந்தனை, மனம் என்ற அளவில் உள்ளன. ஈடுபாடு ஆழ்ந்த நேரம் நினைவு விலகும். அடுத்த உயர்ந்த கட்டத்தில் சிந்தனை அடங்கும், விலகும். முடிவாக மனமே மௌனமாகி, அடங்க, விலக சம்மதிக்கும், விலகும். அது பெரிய யோக நிலையாகும்.

இப்பெரிய யோக நிலையில் பூர்த்தியாவது மனம் என்ற கட்டம். அதைக் கடந்தது இதயம், உயிர் (vital) என்பது நரம்பு மண்டலம். அது அடுத்த நிலை. உடல் முடிவான நிலை. ஜீவன் இவை மூன்றும் சேர்ந்த நிலை. மனம் அடங்கினால் சொல் அழியும். இதயம் அடங்கினால் உணர்ச்சி அகலும், உயிர் விலகினால் உணர்ச்சியின் முழுமையும் அடங்கும். உடல் உணர்வு ஸ்மரணை (சொரணை) என்பது ஒரு வகையில் மனமும், உயிரும், உடலும் அடங்கிய முழுமை. இது பெரும் நிலை. அதுவும் விலகுவது முடிவான பெரிய நிலை. முடிவான பெரிய நிலை ஜீவனில் முழுமை பெறுகிறது. ஜீவனுக்குரியது என்ன? எண்ணமா? உணர்வா? உடல் உணர்வா? இவை மூன்றும் சேர்ந்த நிலைக்கு சொல்லில்லை. (Vibration of the Being) ஜீவனில் செயல்படும் ஜீவியம் என நாம் கூறலாம். அது வழக்கிலில்லை. அந்நிலையில் எதிர்பார்ப்பு அழிந்து, சமர்ப்பணம் பூர்த்தியாகி, திருவுருமாறினால் உள்ளூர் வாய்க்கால் அகண்ட காவிரியாவதைப் போலும் கங்கா நதியாக விரிவதைப் போலுமாகும். காணாமற்போன பேனா ஒரு மணியில் கிடைப்பது, பலத்த அடிபட்டு ஆனந்தமாக மாறுவது, சிறுநீரகக் கல் மறைவது, 18 வருஷமாக புத்திர பாக்கியமற்றவர் பிள்ளை பெறுவது இக்கட்டங்களை ஓரளவு பிரதிபலிக்கும். முழுமையாகப் புரிய தத்துவம் புரிந்து, திருவுருமாற்றம் ஒரு விஷயத்தில் புரிந்து நிலைத்தபின் அதன் மூலம் தத்துவம் புரிந்தால், விவரம் விளக்கமாகும். இப்படிப் புரிவது யோக பாக்கியம். 30 அல்லது 50 ஆண்டுகளில் கிடைப்பது அதிர்ஷ்டம். எதையுமே புரிய முயலாமல் எல்லாமே சித்திப்பது முடிவான கட்டத்தைக் கடந்த மூலமான கட்டமாகும். முன்னுரை, முகவுரை, முடிவுரை, முழு உரை, மூல உரையென ஏற்கனவே எழுதியிருந்தேன். The Life Divine 40 அல்லது 50 முறை படித்தவர் அது புரியுமானால் எழுதக் கூடியவை அவை. அவற்றுள் மூல உரையென்பது இந்த முடிவான கட்டத்தைக் கடந்த மூலமான கட்டத்திற்கு ஒப்பிடலாம். யோகப் பலனையும் கருதாமல் “என் சரணாகதியை அன்னை ஏற்றபின் எனக்கு ஏன் எதுவும் தேவை” யென்ற நிலைக்குரிய கருத்துகள், பயிற்சிகள் இவை. சத்தியத்தை கட்டம் கட்டமாக உயர்த்தினால் பொய் சொல்லாமல் ஒரு நிமிஷமிருக்க முடியாது எனப் புரியும். ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்ட சத்தியம் போக வழிவிடாது தடுக்கும் சுவர் பெரியது. அதுபோன்ற தடையான சுவர்கள் எங்கும் உள்ளன. குடும்பத்தை அவமானப்படுத்தும் பொய் சொல்ல முடியுமா? ஊரை எதிர்க்கும் பொய்யைச் சொன்னபின் எப்படி ஊரில் வாழ முடியும்? ஊரை வெற்றிகரமாக எதிர்த்தவரும் வீட்டை எதிர்க்க முடியாமல் திணறுவார். வீட்டை வென்றவரும் ஊர் மனத்தை வெல்ல முடியாது. பாரதத்தில் கிருஷ்ண பரமாத்மாவே பொய் சொல்லச் சொன்னார். திரௌபதி தனக்குக் கர்ணன்மீது ஆசையெனப் பேசினாள். நாம் கூறுவது அதையும் கடந்த கட்டம். அன்னை நம்புபவர் அன்னையை மட்டும் நம்பினால் ஒரு விஷயத்தைக் காண்பார். மனம் சத்தியத்தை நாடி உள்ளே தொடர்ந்து போனால் புறச்செயலும், சூழலும் லேசாக அமைதியுற்று அடங்கி எதிர்ப்பு விலகுவது தெரியும். ஆரம்ப நாட்களில் எதிர்ப்பு விரைவாக விலகி வேகமாக மறையும். போகப்போக எதிர்ப்பு மறையும் வேகம் குறைந்து எதிர்ப்பாக நிலைக்கும். அன்னையை அழைக்கும் பொழுது மட்டும் எதிர்ப்பு விலகும். இது நுட்பமான நேரம். இந்த நேரம் ஒரு துரும்பு கீழே விழுந்தாலும், தாழ்ப்பாள் லேசாக சத்தம் போட்டாலும், கரண்ட் ஒரு நிமிஷம் நின்று வந்தாலும், உருவான சூழல் கரையும். மீண்டும் உருவாக்க வேண்டும். காபிக்குப் பேர் போன ஹோட்டல் உண்டு. அங்கும் ஒரு நாள் காபி சிறப்பாக இருப்பதில்லை. ஒரு நாளும் தவறாமல் எட்டிய சிறப்பை எதிலும் நிலைநிறுத்த ஆத்மா மனத்தில் விழித்துச் செயல்பட வேண்டும். இதுவரை கூறுபவை கற்றுக் கொடுத்த சொல் பலிப்பது. ஆத்மா மனதில் விழிப்பது சொந்தமாக சொல் உள்ளிருந்து எழுவது போலாகும்.

  • சமர்ப்பணம் உயர்ந்தது.
  • பூரண சமர்ப்பணம் க்ஷணம் பலிப்பதும் யோகம் யோகத்தில் அதிர்ஷ்டமாவது.
  • அதன் மூலம் திருவுருமாற்றம் ஒரு நேரம் நடப்பது பகவான், அன்னை தரிசனம் சூட்சுமத்தில் உள்ளே பெறுவதாகும்.
  • இவற்றைக் கருதுவது விசேஷம்.
  • செய்வது பூர்வ ஜென்ம புண்ணியம்.
  • பலிப்பது சாதகராவது.
  • இதைக் கடந்த நிலையில் மனம் முழுவதும் வீடு, மனைவி, மக்கள், தொழில், பணம், ஆகியவற்றால் நிறைந்திருப்பது யதார்த்தமான நடைமுறை.
  • நடைமுறையை ஏற்று தத்துவத்தால் விளக்கம் பெற்று, வாழ்வில் நெறியாகப் பயின்று யோகம் உருவாவதைக் காணுதல் பூரண யோகப் பாதை.
  • நல்ல முறையில் சிறப்பாகச் செய்தால் மனைவியின் உத்தம குணம் தெரியும், பிள்ளையின் எதிர்கால இலட்சியம் புரியும், தொழில் தானே தன்னை உயர்ந்த கட்டங்களில் நடத்திக் கொள்வதைக் காணலாம்.
  • பெரும் தடைகள் சிறு பள்ளங்களாகி விலகும்.

*******

ஜீவிய மணி

இயலாமை தன்னை எண்ணமாக உருவகப்படுத்துவது எதிர்பார்ப்பது.

*********



book | by Dr. Radut