Skip to Content

08. மனிதன் கண்ட நீதியும் தெய்வம் வழங்கும் நீதியும்

மனிதன் கண்ட நீதியும் தெய்வம் வழங்கும் நீதியும்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

சொற்பொழிவு ஆற்றியவர்: திருமதி வசந்தா லக்ஷ்மி நாராயணன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: நவம்பர் 24, 2014

இவற்றையெல்லாம் நேரடியாகவும் விளக்கமாகவும் கூறிய பகவான் சொல்லாமல் சொல்லியவை சூட்சுமமான பெரும் நீதிகள். அவற்றுள் ஒன்று

நல்லது, தெய்வ நீதி என்பதால் அதிகமாகக் கேட்கக் கூடாது.

எந்தச் செயலுக்கும் மூலத்தில் அனந்தம் உண்டு. பக்திக்கு அனந்தமுண்டு. பக்தி மேலிட்டால் நெஞ்சு செயலற்று லயத்தில் திளைக்கும். தெய்வ நீதி உயர்ந்தது எனில் அதை அதிகமாகப் பெற ஆசைப்பட்டால், பலன் ஆசைக்கே எழும். தெய்வ பக்திக்கு வராது. ஆசை அனந்தமானால் தெய்வ நீதி வேறொரு வாயிலாக மனித நீதியாகி அநீதியாகும். நம்மால் சமாளிக்க முடியாது. பகவான் ‘வருவதை ஏற்பது சரி, அத்துடன் நிற்பதே முறை. ஆசையை ஆண்டவன் பேராலும் கிளறக் கூடாது’ என்கிறார். அஞ்ஞானம் மனிதனுக்குப் பிரச்சனை. மனிதன் அனந்தத்தைப் பெருகிவரும் பேரானந்தமாக அனுபவிக்க இறைவன் முனைந்து ஞானத்திற்கு வரையறை ஏற்படுத்தியதால் அஞ்ஞானம் ஏற்பட்டது என்பது பூரண யோகம். அஞ்ஞானத்தை அஞ்ஞானமாக அறிந்தால் அவதிப்படும் மனிதன் தான் ஆழ்ந்த மனத்தில் ஆனந்தம் அனுபவிப்பதை அறியவில்லை. அஞ்ஞானம் தானே விரும்பி ஏற்படுத்தியது. என்மேல் திணிக்கப்பட்டதில்லை என்ற தெளிவு ஆத்ம விழிப்பு. விழிப்பு ஆத்மாவில் ஏற்பட்டபின் அஞ்ஞானம் ஆனந்தம் தரும் அவசியமில்லை. மனிதன் அஞ்ஞானத்தைக் கடந்து ஞானத்தை அடையலாம். அதன்பின் வாழ்வும், செயலும் பரிணாமமும் விரிவாகி யுகம் க்ஷணமாகும், பிரச்சனை வாய்ப்பாகும். நோய் உடல் நலமாகும். சோகம் ஆனந்தமாகும். கடன் சொத்தாகும்.

அதுவே தெய்வம் அமுல் படுத்தும் நியாயம்.

கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து நாலுபக்கமும் வேகமாகக் கலைவது (stampede) களேபரமாகும். ஆயிரக்கணக்கானவர் அடிபடுவர். நூற்றுக்கணக்கானவர் உயிரிழப்பர். பின்னல் கோலாட்டம் போல் கலையும் கூட்டம் கட்டுப்பாட்டுடன் கலைந்தால் களேபரம் கனத்து குதூகலமாகும். ஒவ்வொருவரும் ஓடி விளையாடுவது ஒழுங்கு முறையுள் வருவதால் இன்பம் பேரின்பமாகும். ஆனந்தம் பேரானந்தமாகும். உள்ளூர் டென்னிஸ் கோர்ட் விம்பிள்டன் விளையாட்டாக மாறும் வினோதம் எழும். Romance Eternal என்ற site திருமண வாழ்வு எப்படிப் படிப்படியாக உயர முடியும் என்ற சட்டங்களைக் கூறுகிறது. The Life Divine எப்படி அகந்தையும், ஆசையும் ஆத்மாவாகவும் பிரபஞ்ச ஆத்மாவான ஈஸ்வரனாகவும் மாறி சிருஷ்டியில் ஆனந்தம் வளர்கிறது எனக் கூறுகிறது. அதனால் The Life Divine-ஐ பிரபஞ்ச ஜாதகம் என்று நான் பெயரிட்டு அழைப்பதுண்டு.

அநியாயம் ஆண்டவன் நியாயம்

என்ற சொல் நான் பகவான் எழுதியவற்றை ஏராளமான அன்பர்கள் வாழ்வைக் கண்டு அறிந்த முடிவு. கிருஸ்துவ மதம் தவறு செய்பவனை மன்னிக்க வேண்டும் எனக் கூறுகிறது. எது தவறு, யார் தவறு செய்கிறார்கள், யாரை மன்னிப்பது, ஏன் மன்னிப்பது என பகவான் கேள்விகளை எழுப்புகிறார். உலகில் விரயமில்லை என்பதும், எவரும் தவறு செய்யவில்லை என்பதும், திருடனுடைய அடி திருவடி என்பதும், விபச்சாரியின் கற்பு விலை மதிக்க முடியாதது என்பதும் பகவான் எங்கோ ஓரிடத்தில் போகிற போக்கில் ஊன்றிக் கவனிப்பவர் கண்ணில் மட்டும் படும்படி எழுதுகிறார்.

வாழ்க்கைக்குப் பல சட்டங்களுண்டு. அவை ஊர் உலக சட்டங்களிலிருந்தும், ஆண்டவன் நீதியினின்றும் மாறுபடும். வேலை செய்தால் கூலியுண்டு என்பது ஊர் அறிவது. உழைப்புக்குரியது ஊதியம். வேலைக்குரியது சாப்பாடு. ஊர் சட்டம் மாறும் நேரம் உண்டு. உலகம் ஒரு புது உலகத்தை சிருஷ்டி செய்து, வெறுங்கையுடன் வருபவனுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரிசு கொடுக்க முடிவு செய்தால், இப்பரிசை பெறுவோருக்குரிய சட்டம் பரம்பரை பரம்பரையாக உழைத்த பலன் வேறொருவருக்குப் போக வேண்டும். அந்த நேரம் அது பெரிய அநீதி, கொடுமை. ஐரோப்பாவில் பல நூறு ஆண்டுகள் பல தலைமுறைகளாக உழைத்த பலன் அனைத்தையும் முதலாளிக்குக் கொடுத்தவர் இலட்சக்கணக்கானவர்கள். 1500 A.D-யில் அமெரிக்காவைக் கண்டனர். ஐரோப்பாவில் அநாதைகளாக இருந்த பெரும்பாலோர் வீடு, மனைகளை விற்று கப்பலேறி வனாந்திரமான புது உலகம் அடைந்தனர். பட்டது பாரதம். உயிரிழந்தவர் அநேகர். அடிபட்டவர் ஆயிரம். தப்பிப் பிழைத்தவர்முன் 1000 ஏக்கர் ஆயிரமாயிரமாக விரிந்தது. எவரும், எதையும் எந்த அளவிலும் எடுத்துக் கொள்ளலாம். விபரம் தெரிந்து ஐரோப்பாவிலிருந்து நூற்றுக்கணக்காக வந்தவர் ஆயிரக்கணக்காக வந்தனர். இனாமாக ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் பயிரிட்டு உரிமை கொண்டாடினர். 100 ஆண்டிற்குப்பின் நிலம் லிமிட் செய்யப்பட்டு ஒரு சதுரமைல் - 640 ஏக்கர் - ஒருவருக்கு இனாமாக வழங்கினர். நாளாவட்டத்தில் ½ சதுர மைல் - 320 ஏக்கர் - ¼ சதுரமைல் 160 ஏக்கர் வழங்கினர். அடுத்த நூற்றாண்டில் இனாமாக நிலம் ஒருவருக்கு 100 ஏக்கர், ஒரு வேலையாளுக்கு 50 ஏக்கர் என வழங்கினர். அவர்கள் பெரும் நிலம் உடையவரானார்கள். சம்பாதிப்பது முழுவதும் சம்பாதித்தவருக்கே. எவருக்கும் எள்ளளவும் தர வேண்டியதில்லை. சர்க்கார் இல்லை. அதனால் வரியில்லை. சுதந்திரம் சுதந்திரமாக வளர்ந்தது. பயிரிட்டுப் பெற்றதை அனுபவிக்க முழு சுதந்திரம். மகசூலை விற்க நிர்ப்பந்தமில்லை. சுதந்திரமாக எவரும், எங்கும், எதையும் விற்கலாம். உழைப்பின் பலன் உழைத்தவருக்கு மட்டும் உண்டு. எதிரி என்று ஒருவரில்லை. எதிர்ப்பை உடையவனே துப்பாக்கி கொண்டு சமாளிக்க வேண்டும். உற்பத்திக்கு உரிமையுண்டு. விற்பதற்கு உரிமை- யுண்டு. காப்பதற்கு உரிமையுண்டு. பலர் வந்து தாக்கினால் அவர்களைச் சுட்டு வீழ்த்துவது சட்டம், குற்றமில்லை. அரசியல் என்பது அவரவர் இஷ்டப்படி வாழ்வது. வாழும் சுதந்திரம், பொருளாதார சுதந்திரமாகவும் அரசியல் சுதந்திரமாகவும் உருவாயின.

அவர்கள் இன்று 8,000 அல்லது 80,000 ஏக்கர் நிலம் பெற்றுள்ளனர். அவர்கள் பிள்ளைகள் செனட் மெம்பர், கல்லூரிப் பேராசிரியர், கம்பெனி முதலாளியென வாழ்கின்றனர். புது உலகம் என்று அமெரிக்கா ஏற்பட்டு 30 கோடி மக்கள் அபரிமிதமான செல்வமும், அளவுகடந்த அறிவும் பெற்று, சந்திர மண்டலம் போகவும், Internet கண்டுபிடிக்கவும், ஆண்டுதோறும் கோடீஸ்வரர் எண்ணிக்கை வளரவும் வேண்டுமானால், பல தலைமுறைகளில் சம்பாத்தியம் முழுவதும் முதலாளி அனுபவிக்க வேண்டும் என்பது வாழ்வின் சட்டம். பல மாதம், சில வருஷமாகியும் காலை முதல் மாலைவரை வேலை செய்தாலும் பட்டினியாக அரை வயிறு ஒரு வேளை சாப்பிடுவது தலைவிதி, கொடுமை. குணமாகாத வியாதி தானே குணமாகவும், ஜாதகத்திலில்லாத அதிர்ஷ்டம் உற்பத்தியாகவும், எந்த வேலையும் செய்யப் பிரியப்பட்டாலும், இல்லாமலிருப்பதும் வாழ்வில் சந்தோஷமாக அபரிமிதமாக உற்பத்தியாக வாழ்வு ஏற்படுத்திய சட்டம், ஆன்மீக உலக அமைப்பு என நமக்கும் புரியாது. புரிந்தால் ஏற்க முடியாது. ஏற்றுப் பலன் பெற்றால் அதனால் மட்டும் குறை கூறுவதை, வாய் ஓயாமல் பேசுவதை நிறுத்த முடியாது. ஆண்டவன் நம்மை மீறி, நம் தான்தோன்றித்தனத்தை மீறி செயல்பட்டே நமக்கு ‘நீதி’ வழங்க வேண்டும்.

சிறுவனுக்குப் படிப்பு வரவில்லை, பள்ளியில் கேலி, வீட்டில் தண்டனை. வசதியான குடும்பம். தகப்பனாருக்கு பையன்மீது வெறுப்பு ஏற்பட்டு ஒரு ஹாஸ்டலில் சேர்க்கிறார். அவன் மற்றவர் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள யோசனை செய்கிறான். அந்த நேரம் வந்த ஒரு புது ஆசிரியர் பையனுக்கு எழுத்து, தலை கீழே தெரிவதால் படிப்பு வரவில்லை எனக் கண்டு, பெற்றோரிடம் கூறினார். பெற்றோருக்கு வெறுப்பு வெறுப்பாகவே இருந்தது. லியனார்டோ, எடிசன், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகட்கு இருந்த குணம் அது. அது குறையில்லை. லியனார்டோ ஸ்ரீ அரவிந்தரின் முற்பிறப்பு. ஐன்ஸ்டீன் மேதை. எடிசன் டெக்னாலஜியின் மேதை என்றால், இதுவரை சிறுவன் பட்ட கஷ்டம் கொடுமையா? அநீதியா? மேதாவிலாசம், பையன் பிறந்த சூழ்நிலையில் கொடுமைக்கு வித்தாயிற்று. கொடுமையின் காரணமாக சிறுவன் பெற்ற தீவிரம் சோகம். சோகம் தீவிரம் அடைந்ததால், தீவிரம் செறிவு பெற்றது. செறிவு பெற்றது, சோகத்தின் காலம் முடிவடைந்ததைக் குறிக்கிறது. மேதாவிலாசம் பையனுக்குக் கொடுமையைக் கொடுப்பது, மேதாவிலாசம் வெளிவரும் வாழ்க்கைப் பாதை.

வாழ்வு முழுவதும் ஆண்டவன் நியாயம்.

மனத்தின் இருள் அதை அநியாயமாகக் காண்கிறது.

உலகில் நீதி, நியாயம், நல்லது மறுக்கப்படும் இடங்கள், மனித உறவு, பெற்றோர் குழந்தைகள், கணவன் மனைவி, மாமியார் மருமகள், தலைவன் தொண்டர், ஆள்பவர் ஆளப்படுபவர், இவை கணக்கிலடங்கா. ஒரு 10 ஆண்டுகள் அல்லது வாழ்நாள் முழுவதும் ஒருவரைக் கவனித்தால் அவர் பிற்காலத்தில் பெற்றதை வாழ்வின் சந்தர்ப்பம் கட்டாயமாகக் கொடுத்ததை நாம் அநீதியாக அறிவது தெரியும். பகவான் குறிப்பாகச் சொல்லியது இந்திய அடிமை வாழ்வு. அதே தத்துவத்தை அறிவு, செல்வம், செல்வாக்கு, ஞானம் போன்ற இதர இடங்களில் கண்டால்,

இன்றைய நம் அடிமை வாழ்வு நாளைய உலக சுதந்திரம்.

இன்று ஒருவர் ஏற்கும் அறியாமை நாளை உலகம் பெறும் மேதாவிலாசம்.

இன்றைய ஏழ்மை நாளைய குபேர சொத்து.

(தொடரும்)

*******

ஜீவிய மணி

இடைவிடாத அழைப்பு இடைவிடாத யோகம்.

*******



book | by Dr. Radut