Skip to Content

09. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

அன்னையின் சட்டதிட்டங்களை நாமறிவோம். அறிவை நம்பாதே; வசதியைத் தேடாதே; ஆசைப்படாதே; குறை கூறாதே; புற நிகழ்ச்சிகளைப் பார்; முழுமுயற்சி எடு; உண்ணும் முன்னும், உறங்கும் முன்னும், பேசும் முன்னும், செயல்படும் முன்னும் அன்னையை நினைவுகூர்ந்து செயல்படு என்பதே அவர் சட்டங்கள். எளிய பக்தனால் ஆகக்கூடியதில்லை இது. பூரணமாக முடியவில்லை என்றால், பக்தன் ஒரு சிறிய செயலில் சோதித்துப் பார்க்கலாம். முறை எளிது. அன்னையை அழைத்து, செயலைச் சமர்ப்பணம் செய்து, அதை அன்னையின் சக்தியால் அளவிறந்து நிரப்பி, பலன் கருதாது பொறுமையாக இருப்பதே முறை. மேலும் ஒரு நிபந்தனை. மேற்கூறிய 10 விதிகளையும் ஒரு சிறு செயலில் பூர்த்தி செய்யும்பொழுது, பொதுவாக அன்னைக்கு எதிரான எதையும் செய்தல் கூடாது என்பது முக்கியமான நிபந்தனை.

இவற்றைப் பூர்த்திசெய்தால், அன்னை செயலில் தரிசனம் தருகிறார். ஜீவனற்ற செயல் உயிர் பெற்றெழும். உன் பிறந்த நாளன்று ஹர்த்தாலால் ஆசிரமம் போவது தடைப்படும்பொழுது, உன் எதிரே ஒரு டாக்ஸி வந்து நின்று உன்னை அழைத்துச் செல்கிறது. பெரும் புயலால் இலட்சக்கணக்கான சேதம் ஏற்பட்டு ரூ.50 கூட புரட்டமுடியாத நிலையில் உன்னைப் பிடித்து வலுக்கட்டாயமாக உன் பையில் ரூ.5,000/-தைத் திணிக்கிறது வாழ்க்கை. அநாதைப் பையனுக்கு முனிசிபல் சேர்மன், எடுத்துக்கட்டிக் கொண்டு, வேலை பெற்றுத் தர, உயிரைவிட்டு வேலை செய்கிறார். பிறந்த நாள் பொற்கிழி எதிர்பார்த்ததைப்போல் 24 மடங்கு பெருகுகிறது. வருஷ வருமானம் இரண்டு நாள் வேலைக்குக் கிடைக்கிறது. 8 முறை பெயிலான பரீட்சைகள் இரண்டில் ஒரே சமயத்தில் உடனே பாஸ் வருகின்றது. மோசடிக்குப் பேர்போன மக்கள் பாங்குப் பணத்தைத் தாமே முழுவதும் திருப்பிக் கொடுக்கின்றார்கள். 20 ஆண்டுகள் தேடிக் கிடைக்காத வேலை 3 நாளில் மும்மடங்கு சம்பளத்துடன் வருகிறது.

அன்னை வந்தபின் தடைகள் தகர்ந்துபோகின்றன. எனினும் பிடிவாதம், வக்ரபுத்தி, பொறுப்பின்மை அன்னையின் செயல் வேகத்தைக் குறைக்கக் கூடியவை. மின்னல் வேகத்தில் வேலை நடக்கும்பொழுது தடை ஏற்பட்டால், என்ன குறை என்று யோசனை செய்தாலும், எங்கு தடை என்று பரிசீலனை செய்தாலும் உடனே அது தென்படும். விட முடியாத பழக்கங்கள், வேண்டுமென்றே செய்யும் காரியங்கள் அத்தகைய தடைகளை உற்பத்தி செய்யும். அவற்றைக் களைந்தால் மின்னல் வேகம் தொடரும். பழைய தடைகள் ஆத்ம சமர்ப்பணத்தால் விலகும். வேண்டுமென்று செய்யும் காரியங்களை விலக்க நாமே முன்வர வேண்டும். ஒரு காரியத்தை, அதாவது ஒரு வகையான காரியத்தை (உ-ம். கடைக்குப் போவது) ஓர் அன்பர் சமர்ப்பணத்தால் அன்னையின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டால், அவருக்கு வாழ்க்கையில் வெற்றி கிட்டிவிட்டது என்று அர்த்தம். மற்ற வகையான செயல்களையும் அதேபோல் சமர்ப்பணத்தால் அன்னையின் ஆளுகைக்குள் கொண்டுவருதல் அவரைப் பொறுத்தது. அடிப்படையானது இந்த இரகஸ்யம்; மனிதனுக்குப் பிடிபடாத ஒன்று. இரகஸ்யம் கிடைத்தபின் எந்தச் செயலையும் இதனால் வெற்றி காணச் செய்யலாம். அதே முறையைப் பயன்படுத்தி எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிக்கலாம். நெடுநாளைய குறிக்கோளைப் பூர்த்தி செய்யலாம்.

ஒரு முக்கியமான கேள்வி. வழிவகை (process) தெரியும் என்பதால், பெரிய இலட்சியங்களையும் இதனால் பெற முடியும் என்றால், அதற்குரிய வலிமை எங்கிருந்து வரும்? எப்படிக் கிடைக்க முடியும்? வலிமை என்பது ஞானத்தைவிடச் சிறியது. ஞானம் மனத்தில் உதிப்பது. மனத்தைவிடச் சிறியதான பிராணனில் செயல்படுவது வலிமை. ஞானம் வழிவகையில் உள்ளது. வழிவகை புரிந்தால் ஞானம் ஏற்பட்டுவிடும். இந்த முறையை எத்தனை பெரிய திட்டத்தை நிறைவேற்றவும் பயன்படுத்தலாம். அதற்குரிய முயற்சியை விரும்பி ஏற்றுக்கொள்ளுதல் பக்தன் பங்கு. பெரியதான ஞானம் வந்தபின், சிறியதான வலிமையை அடைய பக்தன் செய்ய வேண்டியது ஒன்றுதான். தான் எடுத்துக்கொள்ளும் திட்டம் பூர்த்தியடைய முழு விருப்பத்துடனும், முழு மனத்துடனும் உழைக்க முன்வர வேண்டும்.

அன்னை உட்பட எந்தத் தெய்வத்திற்கும் இல்லாத திறன் ஒன்றுண்டு. விருப்பமில்லாத மனிதனை விருப்பத்துடன் செயல்பட வைக்கும் திறனிது. இறைவனாலும் மனிதனைக் கட்டாயப்படுத்தி அவனுக்குப் பிரியமில்லாத காரியத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.

மனிதன் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திட்டம், இலட்சியம் எவ்வளவு பெரியதானாலும் அன்னை அதைப் பூர்த்தி செய்வார்.

6. தெய்வ நம்பிக்கை

பக்தியும், நம்பிக்கையும் தெய்வ வழிபாட்டின் அஸ்திவாரங்கள். நம்பிக்கை என்ற சொல் faith என்பதைக் குறிக்கும். Belief என்ற ஆங்கிலச் சொல்லையும் நம்பிக்கை என்று மொழிபெயர்க்கலாம். ஞிணிணதிடிஞிtடிணிண என்பதையும் நம்பிக்கை என்று சொல்வதுண்டு. நான் இக்கட்டுரையில் நம்பிக்கை எனக் குறிப்பிடுவது faith என்ற பொருளில். ஸ்ரீ அரவிந்தர் இந்தத் தலைப்பில் 3 அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். ‘ஆங்கிலத்தில் faith என்ற சொல் தன் கருத்தைச் சரிவரப் பிரதிபலிக்காது; சிரத்தை (sraddha) என்ற சமஸ்கிருத சொல்லே பூரணமாகத் தன் கருத்தை வெளியிடும்; என்றாலும் வேறு வழியில்லாமல் faith என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தால் பயன்படுத்துகிறேன்’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். வழக்கில் சிரத்தை என்றால் அக்கறை (interest) என்றாகும். அடிப்படைக் கருத்துக்கும், வழக்கில் உள்ள பல்வேறு சொற்களுக்கும் பல வகையான வேறுபாடுகள் இருப்பதால், தெய்வ நம்பிக்கை என்பது என்ன என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ள ஆன்மீகக் கருத்தைச் சொல்லி, அதன் அடிப்படையிலேயே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

ஆன்மீக ஞானம் புத்தியில் பிரதிபலிப்பதால் ஏற்படும் உணர்வை நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை என்கிறார் பகவான். புத்தியில் தெளிவாக இல்லாத ஒன்று, ஆன்மாவில் இருந்து அதன் பிரதிபலிப்பு புத்தியில் ஏற்பட்டால், அதன் விளைவான உணர்வை நம்பிக்கை என்று குறிப்பிடுகிறார். ஓர் உத்தியோகத்-திற்கு விண்ணப்பம் செய்கிறோம். அங்கு தேவைப்பட்டவர் ஒருவர். 12 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். M.A. பட்டத்தில் I Class வாங்கி விண்ணப்பித்துள்ளார். இன்டர்வியூவுக்குச் சென்றபொழுது 12 பேரைப் பார்க்கிறார். அவர்களில் M.A. I Class பலர், II Class சிலர், M.Litt. ஒருவர், Ph.D. ஒருவர். இந்த உத்தியோகம் தனக்கில்லை என்று அறிவு தெளிவாகச் சொல்கிறது. ஆனால் உணர்வு மாறாக இருக்கிறது. இன்டர்வியூ முடிந்தபொழுது Ph.D. வாங்கியவரைத் தேர்ந்தெடுத்ததாக அறிவிக்கப்பட்டது. அறிவு தான் பெற்ற ஜெயத்தைப் பறை சாற்றுகிறது. எனினும் உணர்வு அசையாமல் அறிவிக்கப்பட்டது முடிவானதில்லை என்று நினைக்கிறது. உணர்வின் நிலையை வெளியே சொல்லக் கூச்சமாயிருக்கிறது. கல்லூரி வாயிலைக் கடக்கும்பொழுதும் உணர்வு தெளிவாக பழைய நிலையையே வற்புறுத்துகிறது. அறிவு அதை மூடநம்பிக்கை எனக் கேலி செய்கிறது. வெளியே வரும்பொழுது தன் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கேட்டுத் திரும்பினால் புரொபஸர் கூப்பிடுவதாகச் சொல்கிறார். அங்குச் சென்றால், ‘ஒருவரே தேவை. Ph.D. உள்ளவரை நியமித்துவிட்டோம். உங்கள் பதில் சிறப்பானதால் வேறோர் இடத்தை ஏற்படுத்தி உங்களையும் நியமிக்க முடிவு செய்திருக்கிறேன்’ என்று புரொபஸர் சொல்வதை அறிவு நம்புவதில்லை; உணர்வு பலித்து விட்டது. இதுவே நம்பிக்கை எனப்படுவது. அறிவுக்குப் புலப்படாத ஒன்றை (தெளிவாக இல்லை என்று அறிவுக்குப் புலப்படுவதை) ஆன்ம ஞானம் புரிந்துகொண்டு, புத்தியின் வழியாக ‘அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு’ என்று சொல்வதை நம்பிக்கை உணர்வு என்கிறோம். நம்பினோர் கைவிடப்படார் என்பதும் இதுவே.

தொடரும்...

*******



book | by Dr. Radut