Skip to Content

06.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....) 

N. அசோகன்

181. மந்திரங்களுக்கு நிறைய ஆன்மீக சக்தி உண்டு. அவற்றைச் சரியான முறையில் நாம் உச்சரித்தோம்என்றால் அற்புதமான விளைவுகள் நிகழும். "ஜீவ மந்திரம்என்ற ஒன்றை நாம் சொன்னோம் என்றால், இறந்தவர்கள் கூட உயிர் பெறுவார்கள்" என்று அன்னை சொல்கிறார்.

182. ஓர் அறிவுரை பலிக்க வேண்டும் என்றால், கேட்பவர் அறிவுரையை ஏற்கும் மனோபாவத்துடன் அந்த அறிவுரையை வழங்குவதற்கு ஏற்ற நபரை அணுக வேண்டும்.

183. ஒருவர் கேட்காத அறிவுரையை அடுத்தவர் வழங்கினால், கேட்பவருக்கு எரிச்சல் வந்து விளைவுகள் எதிர்மாறாக இருக்கும்.

184. கண்டிப்பு தேவைப்படுகின்ற இடத்தில் வெறும் அறிவுரை பலனளிக்காது. அப்படியே கண்டிப்புச் செய்தாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்கின்ற கண்டிப்புத்தான் செல்லும்.

185. தன்னைச் சுயக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்களுக்கு அறிவுரையோ, கண்டிப்போ தேவைப்படாதுஏனென்றால் அந்தச் சுயக்கட்டுப்பாடு பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக உள்ள உணர்ச்சி வயப்பட்ட செயல்பாட்டைத் தடுக்கிறது.

186. தம்முடைய வாழ்க்கையை வீணாக்கிக்கொள்கின்றவர்கள் அறிவுரை கிடைக்காமலோ, கண்டிக்க நபரில்லாமலோ அப்படி வாழ்க்கையை வீணாக்கிக்கொள்வதில்லை. அறிவுரை கிடைத்தாலும், கண்டிக்கப் பட்டாலும், இவற்றைக் கருதாமல் உணர்ச்சி வயப்பட்டுச் செயல்படுவதால் தான் வாழ்க்கை வீணாகிறது.

187. ஆன்மீகப் புத்தகங்களிலிருந்து கிடைக்கும் குறிப்புகளை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்றால் நம்முடைய எதிர்காலத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டல் கிடைக்கும்.

188. இறைவனின் தருணம் இப்பொழுது நிலவுவதால், முன்பு சிரமப்பட்டுச் செய்த காரியங்களை இப்பொழுது சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.  வேலையின் பளுவைச் சூழல் வாங்கிக்கொள்வதால் வேலையை நாம் துவக்கி வைத்தால் மட்டும் போதும், சூழல் வேலையை முடித்துக் கொடுத்துவிடும்.

189. Life Divine புத்தகம் படைப்பின் ரகசியங்களை விவரித்துள்ளது. ஆகவே இப்புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொண்டவர்கள், தமக்குப் படைக்கும் திறனைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் கூறலாம்.

190. Life Divine, Synthesis of Yoga, Savitri ஆகிய மூன்றிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள அறிவு ஒன்றுதான்.  Life Divineஇல் தத்துவமாகவும், Synthesis of Yogaவில் யோக ரீதியாகவும், சாவித்ரியில் கவிதை நயமாகவும் ஒரே விஷயத்தை விளக்கியுள்ளார்.

191. அடக்கமும், கீழ்ப்படிதலும் ஒன்று என்று சொல்ல முடியாதுதன்னுடைய நிலைமை தாழ்ந்து இருப்பதால் அடங்கிப்போதல் கீழ்ப்படிதலாகும்ஆனால் அடக்கம் என்பது அகம்பாவம் இல்லாததால் வருவதாகும்.

192. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முனைந்து செயல்பட வேண்டும். ஆனால் ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கு அப்படி முனைந்து செயல்படுவதை விட வேண்டும்.

193. உடைமைகளை நாம் விட்டுக்கொடுப்பது சுலபம். ஆனால் அகம்பாவத்தை விடுவது அவ்வளவு சுலபமில்லைஅகம்பாவம் தானே சரணமடைவது என்பது மிகவும் ஓர் அரிய செயலாகும்.

194. நம்முடைய அகம்பாவத்தை எடுக்கச் சொல் நாம் அன்னையிடம்  கேட்கலாம். அகம்பாவம் தானே விலகாவிட்டாலும் அன்னையின் சக்திக்கு கட்டுப்பட்டு விலகும். ஆன்மா தான் நம்முடைய உண்மையான ஜீவன். அது மேலெழுந்து வந்து தான் இருக்க வேண்டிய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அகம்பாவத்தை வெளியேற்றும்படி அன்னையை உதவிக்கு அழைத்தால், அன்னை சந்தோஷமாக அகம்பாவத்தை வெளியேற்றுவார்.

195. சத்தியஜீவியத் திருவுருமாற்றம் நிகழும்பொழுது நம்முடைய சைத்தியப் புருஷனுக்கு ஒரு திட வடிவம் கிடைக்கும்என்று எதிர்ப்பார்க்கப்படுகிறதுஅப்படி சைத்தியப் புருஷன் திட வடிவம் பெறுவதுதான் சத்தியஜீவிய மனிதனுக்குக் கிடைக்கும் வடிவமாக அமையும்.

196. உருவம் இல்லாத உயிரும், உருவம் உள்ள உடம்பும் சேர்ந்து செயல்படுவது முரண்பாடான இரண்டு விஷயங்கள் உடன்பட்டுச் செயல்படுவதற்கு நல்ல உதாரணமாகும்.

197. கடவுள்களுக்குப் பூமி அளவிற்கு வடிவம் பெரிதாக இருக்கிறது.  அன்னையின் கருத்துப்படி மழை, காற்று போன்ற இவற்றிற்கும் வடிவம் உண்டுமனிதனுடைய முழு உருவம் எறும்புக்குத் தெரிவதில்லை என்பது போல மழை, காற்றுபோன்ற ஜீவன்களின் பிரம்மாண்ட வடிவமும் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

198. அன்னையின் கருத்துப்படி நாம் கிருமிகள் என்று சொல்வது தீய சக்திகளிடமிருந்து கிளம்பும் அதிர்வலைகள் திட வடிவம் பெறுவதுதான்.

199. எண்ணங்களுக்கு வடிவம் இல்லை என்றாலும், அவைகளும் உண்மையான வஸ்துக்கள்தாம்ஓர் எண்ணம் முழுமை பெறும்பொழுது எய்யப்படும் அம்பு குறியை நோக்கிச் செல்வதுபோல உருவாகிய எண்ணமும் தன்னைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு முயல்கிறது.

200. நிறம், வடிவம் சம்மந்தப்பட்ட சூட்சும உலகங்கள் இருக்கின்றன. கலைஞர்களுக்குக் கிடைக்கின்ற உள்ளெழுச்சி அந்த உலகங்களிலிருந்து தான் வருகிறது.

தொடரும்.....

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எல்லா நாகரீகங்கட்கும் பெரும்பண்புகளை உற்பத்தி செய்யும் அடிப்படை சொத்தும் சுதந்திரமும் ஆகும்மாறாகப் பெரிய நாகரீக உயர்வைநாட உயர்ந்த பண்புகளைத் தேட வேண்டும் என்றாகிறது.

சொத்தும் சுதந்திரமும், கல்வியும் பண்பாக மாற வேண்டும்.


 book | by Dr. Radut