Skip to Content

07.எந்தையும் தாயும்

"அன்னை இலக்கியம்"

எந்தையும் தாயும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

சியாமளாராவ்

     முதல் தேதி வந்ததுஅன்று முழுவதும் இனம் புரியாத பரபரப்பு உடல் முழுவதும் பரவியிலிருந்தது. அதுவும் அன்று அன்னை, ஸ்ரீ அரவிந்தரையும் பார்க்கப்போகிறோம்என்பதே பாகீரதிக்குள் ஒரு சிறுபெண்போல சரீரத்தில் ஒரு துள்ளல், எதிர்பார்ப்புகள். அவளே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வீடெல்லாம் இரண்டு நாட்களாய் சுத்தம் செய்வதும், பூக்களை அடுக்குவதுமாக வயதுக்கு மீறிய சுறுசுறுப்பாய் இருந்தாள்.

     மாலை, டிபன் சாப்பிட்டுவிட்டு நேரே தியானமையம் சென்றார்கள்.  நுழைவு வாசலிலேயே சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்த பெண்மணிகளைப் பார்க்கவே மனது நிரம்பியது. ஒருவர் பூக்களை அலசி, ஆராய்ந்து ஒரு கூடையில் போட, இன்னொருவர் அதை ஒரு கவரில் போட்டு, அழகுற மடித்து ஒரு பிளாஸ்டிக் கூடையில் அடுக்க, தியான மையத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு ஒருவர்,பூ பேக்கட்டைத் தர, எல்லாமே, பேச்சுக்களோ, அனாவசிய அரட்டைகளோயின்றி, ஓர் அமைதியே கோலோச்சுவதாகயிருந்து, அந்த இடமே புனிதமாக, ஒரு பக்திச் சூழலிலிருந்தது.

     எங்கு பார்த்தாலும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் தரிசனம். மனது நிரம்பியது. நடுவில் ஓர் அறையில் விஸ்வரூப தரிசனம்போல் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அமர்ந்திருந்தார்கள்.

     அதற்குமேல் பாகீரதியால் தாங்க முடியவில்லை.

    மெய் சோர, மனம் முழுவதும் அன்று, சரீரம் பூராவுமே, அவர்கள் இருவருமே, ஒவ்வொரு நரம்பிலும், தந்துகிகளிலும் அவளுள் புகுந்து கொண்டு, தங்களின் கருணையையும், அன்பையும் வாரி வழங்கினர்.

     அந்த அதிர்வை ஏற்றுக்கொள்ள பாகீரதியின் சரணாகதி மிகவும் உதவியாக இருந்ததுஆனால், இந்த மாற்றங்கள் அவளுள் நிகழ்வதும், அவளுடைய சரீரம் ஏற்றுக்கொள்வதும், அவளுக்கே, அவளே அறிய முடியாமலே நடந்தது.

     கண்களை மூடி அமர்ந்திருந்தவள், மனதின் சிந்தனைகள் நெளியும் மண்புழுக்களாக அவளுள் போராட்டமாகயிருந்ததை ஒன்றுமே அவளால் உணர முடியாதபடி அயோமயமாய் அமர்ந்திருந்த பாகீரதிக்கு, அவைகளெல்லாம் அடங்கி, ஒடுங்கி, அவளிடமிருந்து விடுபட்டுக் காணாமல் போனதும் புரியவில்லை. ஆனால், திடீரெனத் தன் சரீரம் பூராவுமாய் ஓர் அமைதி, சாந்தம் பரவுவதை சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டாள். மூடிய இமைகள் மூடியபடியே இருக்க, முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது, அவளே அறியாமல். பரவசம், பரவசம், பரவசம். சம்மணமிட்டு அமர்ந்திருந்தவளின் இரு கரங்களும் இணைந்து குவிந்திருக்க, மூடிய விழிகளுக்குள் அவளுக்கு என்ன தெரிந்ததுஎன மற்றவருக்குப் புரியவில்லைதான். ஆனால் அவளது சிரம் லேசாக அசைந்தபடியும், அதரத்தில் சிரிப்பு தவழ்ந்த படியுமிருக்க, அவளுக்கும் அன்னைக்கும் ஸ்ரீ அரவிந்தருக்குமிடையே நடப்பது என்ன?

     கௌதமும் ஒரு புறம் அதேபோல் அமர்ந்திருந்தான். நாகராஜன் ஒன்றும் புரியாமல் அன்னை, ஸ்ரீ அரவிந்தரைப் பார்த்து கை கூப்புவதும், பாகீரதியையும், கௌதமையும் பார்த்து ஒன்றும் புரியாமல் விழிப்பதுமாக அமைதியாக அமர்ந்திருந்தார். ஆனால், அவர் மனதில் எந்தவிதமான சஞ்சலமுமில்லை, அமைதியாகவேயிருந்தார் என்பதை அவரே அறியவில்லை.

     அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் பார்வை நம் மீது பட்டாலே போதுமே. நாம் நம் சாதாரணக் கண்களின் சாதாரணப் பார்வை மூலம்தான் பார்க்கிறோம்மனதிற்கு வேண்டியதைக் கேட்கிறோம். நம் விருப்பத்தை மட்டுமே எண்ணி, அன்னையின் விருப்பம் என்னஎன்பதை அறிந்து கொள்ளும் திறனற்றவர்களான நாம், நம் இச்சைக்கு இசைந்தபடி அன்னையைக் கேட்டுத் தொந்தரவு செய்கிறோம் என்பதே நிதரிசன உண்மைஅன்னையின் விருப்பத்திற்கு விட்டு விடுவோம்நம் அபிலாஷைகள் அப்போது அதிவேகமாக, ஒன்றன்பின் ஒன்றாகத் தானே நிறைவேறி வருவதை உணர்வுபூர்வமாகத் தெரிந்து கொள்ளுவோம்ஆமாம், நம் எண்ணங்களை அன்னையிடம், "சமர்ப்பணம் அம்மா'' என்று கூறி, அதை நாம் மறந்துபோனாலும் தவறேயில்லைஅன்னைக்குத் தெரியும், நமக்கு எதை முதலில் தர வேண்டும், எதை நிதானமாகத் தரவேண்டும், உடனடியாக நம் தேவை என்னஎன்பதை நம்மைவிட அன்னைக்குத்தான் தெரியும்இதுவும் நிதரிசனமான உண்மைஆனால் சாதாரண மனிதர்களாகிய நாம், நம் தேவைகளை உடனுக்குடன் அன்னை தரவேண்டுமென வேண்டுகிறோம். எப்படி? ஒருவித, நமக்கே புரியாதபடி ஒருவிதமான பிடிவாதத்துடன்தான் வேண்டுகிறோம். இதற்கு நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்ளும் சப்பைக்கட்டு என்ன தெரியுமா?  "அன்னையே, நீங்கள் எனக்கு அம்மாதானே, நாங்கள் உங்களுடைய குழந்தைகள்தாமேஉங்களுடைய குழந்தைகளுக்கு, நீங்கள் கேட்டதைத் தர மாட்டீர்களா?'' "தந்துதானே ஆகவேண்டும்' என்கிற உரிமை அப்போது நம் மனதில் திடகாத்திரமாக உட்கார்ந்திருக்கும்.  இது தவறு அன்று. நாம் குழந்தைகள்தாம். அன்னை நமக்குத் தாய்தான். தாய் என்ன செய்வாள்? நல்லதைக் குழந்தைகளுக்குத் தருவாள்அதுவும் குழந்தைகளுக்கு எவ்வெப்போது, எதெது தேவையோ அதைத் தவறாமல் ஒரு தாயால் தான் தர முடியும்.  தரமுடியும் என்பதில் மட்டுமன்று, தந்தே தீருவாள் என்பதுதான்.  அந்தச் சமயத்தில் நமக்கு அது பிடிக்காமல், வேறொன்றுக்கு அடம்பிடிப்போம்கொடுத்ததை திருப்தியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களாகிய நமக்கு இல்லவேயில்லைஅந்த மனப்பக்குவத்தை நம்மிடம் வளர்த்துக் கொண்டாலே போதுமே. அன்னை அப்பேர்ப்பட்ட குழந்தையாகிய நம்மைத் தாவி ஓடிவந்து அணைத்துக்கொள்வாரே.

     சரசரவென்ற சத்தம் பாகீரதி, கௌதமை மெல்ல அசைய வைத்ததுநிதானமாய் விழிகளின் திரையாகிய இமைகளைத் திறந்தார்கள். பாகீரதியின் மெய் சிலிர்த்தது.  அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அவள் கண்களுக்குப் பிரகாசமாகத் தெரிந்தார்கள். வீழ்ந்து வணங்கி, சரீரம் பூராவும் ஒரு மகிழ்ச்சித் துள்ளல் ஊடுருவ மனதிருப்தியுடன் எழுந்து நடந்தாள்.

     மூவருமாய் பூக்களின் பிரசாதத்தை வாங்கியபடியே ஒருவருக்கு ஒருவர் பேசவேண்டுமென்ற எண்ணமேயில்லாமல் காரில் ஏற, கார் விரைந்து வீட்டையடைந்தது.

****

     "அம்மா.... கும்முனு வாசனை வாசல் வரைக்கும் வர்றது. என்னம்மா சமையல்?''

     உள்ளங்கையைத் தேய்த்தபடி டைனிங் டேபிளின் மேல் இருந்த தட்டை சாப்பிட வைத்துக்கொண்டபின் தண்ணீர் ஜக்கிலிருந்து தண்ணீரை டம்ளரில் ஊற்றிக்கொண்டான் கௌதம்.

     ஹோட்டலில் சாப்பிட்டு அலுத்து, மரத்துப்போன நாக்குக்கு ருசியான கைப்பக்குவத்தோடு கிடைக்கும் சமையல் நாக்கை சப்புக்கொட்டியபடி சாப்பிட வைத்தது. ஏனோ கண்கள் நிறைந்தது; நாசியும் சிவந்து விடைத்தது.

     "கௌதம், என்னப்பா... ரொம்ப காரமாயிருக்கா... நாளையில் இருந்து காரம் கம்மியா போடறேன்இந்தாப்பா.... ஜலத்தைக் குடி.கொஞ்சம் சர்க்கரைக் கொண்டு வரவா....''.

     பரிதவித்துக் கேட்கும் பாகீரதியின் வார்த்தைகளில் நொறுங்கியே போனான் கௌதம்.

     "அம்மா.... அம்மா... வேண்டாம்மா.... இந்தப் பாசம், நேசம், இது எல்லாம் எனக்குக் கூடவே கூடாதும்மாஆமாம்மா, அதையெல்லாம் துச்சமா மதிச்சு, தூசியா ஊதினவன் நான்... ம்மா.... ம்மா...''.

     பாகீரதி கௌதமின் அருகில் நின்றாள். அவன் சிரத்தையும், முதுகையும் ஆதுரமாகத் தடவினாள்அவள் கண்களிலும் நீர் ததும்பியது.

     "கௌதம்... அன்னத்தின் முன்னாடி உட்கார்ந்து அழலாமாப்பா?  நீ அன்னையைப் பத்தி நிறையப் படிச்சும் அனுபவப்பூர்வமாவும் உணர்ந்திருக்கேஅதனால மனோதிடத்தை அதிகப்படுத்திக்கோ. உணர்ச்சிவசப்படறதுல தப்பேயில்லேஆனா, அதையும் உடனே அடக்கத் தெரிஞ்சுக்கணும்பா.  "அடக்கம் அமரருள் உய்க்கும்'னு நீ படிச்சதில்லையா? எதுவானாலும் எங்கிட்டே சொல்லு, சரியா..... சரி,சரி, நாழியாயிடுத்து, சாப்பிடுப்பா....''.

     கண்களின் துளிகள் தட்டில் விழாமல் அப்படியே கண்ணுக்குள் அடக்கத் திண்டாடித்தான்போனான் கௌதம்.

     சாப்பாடு முடிந்து ஆபீசுக்குச் சென்றவனின் மனம், வழியிலேயே பலவிதமான பிரிவுகளாகப் பிரிந்து, ஒவ்வோர் இடத்திலும் முட்டி, மோதிக்கொண்டு மீண்டும் அவனுள்ளேயே புகுந்து ஆட்டம் போட்டது.

     முடியவில்லை, அடக்கத் தெரியவுமில்லை. அதனால் பாதி வழியிலேயே வீட்டை நோக்கிக் காரைத் திருப்பியவன், "ஸெல்'லேயே ஆபீசுக்கும் தகவல் அனுப்பிவிட்டான், உடல்நிலை சரியில்லாததால் அன்று லீவு வேண்டுமென. சாப்பிட்ட சாப்பாடு, வாந்தி வரும்போல் இருந்ததுதலைக்குள் பலவிதமான நினைவுகள் ஆட்டிப்படைக்க,தலைவலி மண்டையைப் பிளந்தது.

     காரை வீட்டின்முன் நிறுத்தியவன், அதற்குமேல் முடியாமல் அங்கேயே ஒக்காளித்து வாந்தியை எடுத்தான்.

     சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடி வந்த பாகீரதி, "கந்தா... கந்தா...சீக்கிரமா வாப்பா.... வா'' நடுங்கும் குரலில் பயத்தோடு கத்த, கந்தன் ஓடித்தான் வந்தான்.

     கௌதமின் நிலையைப் பார்த்து பயந்தே போனவன், சட்டெனத் தெளிந்து, தண்ணீரைக் கொணர, பாகீரதி அதை வாங்கி கௌதமின் முகத்தில் தெளித்து, சட்டையையும் தளர்த்தினாள். தன் மடியில் அங்கேயே படுக்கவைத்தபடி அவன் முகத்தைத் துடைத்தாள்.

    அவளின் இதயம், "அன்னையே சரணம், அன்னையே சரணம்' என்றுதான் துடித்தபடியிருந்ததுமெல்ல கந்தனும், பாகீரதியும் அவனைப் பிடித்துத் தூக்கியபடியே உள்ளே வந்தனர். சட்டெனப் பாகீரதி கந்தனிடம் கூறினாள், "கந்தா, ஐயாவை இங்கேயே அன்னை, ஸ்ரீ அரவிந்தர் முன்னாலேயே படுக்கவைக்கலாம்பா. அவங்களைவிட சிறந்த வைத்தியர் யாரிருக்காங்க?... ம்..... படுக்கவைப்பா.....'' கௌதமின் சரீரத்தில் படும்படியாக Life Divine புத்தகத்தை வைத்தாள் பயபக்தியுடன்.

     உணர்வற்றிருந்த கௌதமைப் படுக்கவைத்தபின், பாகீரதி தன் கரங்களைச் சுத்தம் செய்துகொண்டு, ஊதுவத்தி ஏற்றி, அன்னை, ஸ்ரீ அரவிந்தர் முன்னால் வைத்து, சம்மணமிட்டு அமர்ந்து தியானித்தாள்.

     மெல்ல அசைந்த கௌதம், உணர்வு திரும்பியதில் ஒரே ஒரு கணம், தனக்கு என்ன நடந்தது எனப் புரியாமல் திகைத்தவன், மறுகணம் புரண்ட நினைவுகளில் தன்நிலையை உணர்ந்தான். எழுந்தவன் கண்களில் பாகீரதியின் தியானம் புரிந்ததுகண்கள் நிரம்ப, நெகிழ்ச்சியுடன் தானும் வணங்கி, குளியலறைக்குள் சென்று குளித்தான். வேறு உடை மாற்றி, சத்தமின்றி தானும் தியானத்தில் அமர்ந்தான்.

     எழுந்து வணங்கினான், மனம் கசிய. அப்போதும் பாகீரதி கலையவில்லை. அவள் கண்களிலிருந்து நீர் பெருகிக்கொண்டிருந்ததுசத்தமிடாமல் நாகராஜன் அருகில் அமர்ந்தான்.

     "அப்பா, தினமும் சாப்பிட வேண்டிய மருந்து சாப்டீங்களா? கஞ்சி குடிச்சீங்களா? பசிச்சா, நான் உங்களுக்கு சாப்பாடு போடறேன், வாங்கப்பா. வாங்க....''.

     "கண்ணா.... என்னப்பா ஆச்சு? ஏன் அப்படி ஒரு வாந்தியெடுத்தே? மயங்கிப்போனே? பயந்துட்டேம்பா. நானும் "ஓம் ஸ்ரீ அரவிந்தாய நம:'' என்று சொல்ல ஆரம்பிச்சேன்எனக்கு உன்னைப்போலவோ, பாகீ மாதிரியோ, தியானமெல்லாம் செய்யத் தெரியலேஆனா,ஸ்ரீ அரவிந்தரை மட்டும் நினைச்சுண்டு வேண்டிக்கணும்னு தோணுச்சு.  அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் மாறி, மாறி இங்கிருந்தே பார்த்து வேண்டிண்டேன்அழுதேம்பா. எங்கே.... என் அழற சத்தம் கேட்டு.... கேட்டு....'' மேலே பேச்சு வராமல் விசும்ப ஆரம்பித்தவர், கௌதமைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டார்.

     "அப்பா, ப்ளீஸ்பா.... அழாதீங்க. காருல வரும்போதே வயத்தை என்னமோ பண்ணித்து, புரியலேஎன் ஃபிரெண்ட்தான் சாப்பிட கொஞ்சம் பட்சணம் கொடுத்தான். மத்தபடி எதுவுமே சாப்டலேப்பா.அவனும் எனக்கு ரொம்ப நல்ல நண்பன். என்னமோ.... இன்னிக்கு இப்டி ஆபீசுக்குப் போக முடியாம....''.

     "எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்கப்பா. காரண, காரியம் இல்லாம அன்னை உன்னை வீட்டுக்கு வரச் செய்திருக்கமாட்டார். எதுவானாலும் மனசுல வச்சுண்டு குழம்பாதே. இதை நான் சொல்லணுமான்ன? உனக்கே தெரியுமேப்பா....'' அப்போது வந்த பாகீரதி கூறவும், அவளைப் பார்த்து,  "ஆமாம்' என்பதுபோல் தலை அசைத்து சிரித்தான்.

     சிறிது நேரத்திலேயே அவனுக்கு ஆபீஸிலிருந்து ஃபோன் வந்தது.

     "நீங்க வாராதது நல்லதாச்சுஇங்கே ஒரே அமளி, துமளி சார்.திடீர்னு இன்ஸ்பெக்ஷனுக்குன்னு வந்தாங்க. ஒண்ணுமே புரியலே.  யாருக்கும் தெரியாததால, அவங்க இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தவங்கன்னு புரியாம, அவங்கவங்க வேலையில மூழ்கியிருந்தது, அவங்களுக்குக் கோவம் வந்து கத்துனாங்க. ஆனா, உள்ளேயிருந்த நம்ம ஆபீசர் கோபாலன் ஃபோன்ல என்னமோ பேசினாரு; மறுபடியும் ஃபோன்ல பேசினாருவந்தவங்க பொய்யான ஆளுங்கன்னு போலீஸ் வந்தப்புறம் தான் தெரிஞ்சுது சார்அவங்க எதுக்கு வந்தாங்க, ஏன் வந்தாங்கன்னு ஒருத்தருக்கும் புரியலேபோலீஸ் வந்தபிற்பாடுதான், அவங்க எங்கேயோ திருடிட்டு, இங்கே ஒளிஞ்சுக்க வந்தவங்க ஆடின நாடகம்னு தெரிஞ்சுது. சார், உங்க இடத்துல ஏதோ வேலையா உட்கார்ந்திருந்த நம்ம ரத்தினம் சாருக்குத்தான் காயம். மத்தபடி அதிகமா யருக்கும் அடிபடவுமில்லே.... அந்தப் பணம் போகலே. உங்களுக்கு என்னாச்சு சார்? ஏன் வரலே?....''

     ப்யூன் ராமசாமி இவனுக்கு ஃபோன் செய்து கூறினபோது விக்கித்துத்தான் போனான் கௌதம்; அவன் விழிகள் கசிந்தபடியே அன்னையை நோக்கினஅதரம் நன்றியைக் கூறியதுஇதயமோ "அன்னையே சரணம், அன்னையே சரணம்' என்றே ஜபித்தது.

     என்றுமில்லாதபடி இன்று, தான் சாப்பிட்ட உணவிலும் எந்தவிதமானக் கோளாறுமில்லாதபடியிருந்தும், அன்னை எனக்கு வந்த ஓர் ஆபத்தை, என் உடல்நலத்திலேயே ஒரு சிறிய குறைபாட்டை வழியிலேயே தந்து, எனக்குப்பதிலாக அந்த இடத்தில் உட்கார்ந்து இருந்தவருக்கும் அதிகம் அடிபடாமல் காத்து, என்னையும் அங்கு போவதைத் தவிர்த்து, எனக்கு வரயிருந்த ஆபத்தைத் தடுத்து....

     மனம் பொங்கிப் பொங்கித் தணிந்தது.

     "அன்னையே.... உங்களுடைய இத்தனை அரவணைப்புக்கும் நான் அருகதையா? இந்தக் கேள்வி என் மனதைவிட்டு அவ்வப்போது அகலாமல் துளைக்கிறதேஎன்ன செய்வேன்? என் தவற்றை உணர்ந்து விட்டேன்ஆனால் எப்போதுமே, என் பெற்றோரின் உயிர் போகும் வரை நான் செய்த அநியாயங்கள், கொடூரங்கள், எல்லாமே சில சமயங்களில் என்னை வதைக்கிறதுஆனால் இப்போது உணர்ந்து பயனில்லை தான்உங்களைச் சரணடைந்தபின், என் மனம் எப்போதாவது அவர்களை நினைத்து சஞ்சலமடைவதைத் தடுக்க முடியவில்லையே... அன்னையே, அதற்கும் உங்களை விட்டால் வேறு யாரிருக்கிறார்கள்? வழிகாட்டுங்கள் தாயே.... வழிகாட்டுங்கள் தாயே....'

     "அம்மா..... என்னம்மா.... அம்மா.... அம்மா... நீங்க சொன்னது போலவே இன்னிக்கு ஆபீசுல ஒரு கலவரம் நடந்திருக்கு. போலீஸ் வந்துருக்காங்கஎன்னோட ஸீட்டுல உட்கார்ந்திருந்த ரத்தினம் என்கிறவரை கத்தியால குத்தியிருக்காங்க. ஆனா, அதுக்குள்ள போலீஸ் வந்து அவங்களையெல்லாம் பிடிச்சுட்டாங்களாம். ரத்தினம் சாருக்கும் நல்லவேளைப் பெரிய காயமில்லையாம்மா.... அம்மா...''.

    "அம்மாதான் சொன்னேனேப்பா.... காரண, காரியமில்லாம அன்னை எதையும் செய்யமாட்டாங்கன்னு, நீ சொல்லித்தானேப்பா நானே தெரிஞ்சுண்டேன்அம்மா இப்ப சொல்றேன், எழுந்து வா.ஹார்லிக்ஸ் கரைச்சுத் தரேன். குடிச்சுட்டு ரெஸ்டெடு, வாப்பா...''.

     பொறி தட்டியது.

     "அம்மா சொல்றேன், அம்மா சொல்றேன்' என்பதை பாகீரதி கூறவும் பொட்டிலடித்தாற்போல் கண்கள் விரிய அதிர்ந்தேபோனான் கௌதம்.  இதயத்தினுள் ஏதோ நுழைந்து பிசைந்தது. அவனுடைய தவற்றை எல்லாம் அன்னை மன்னித்துவிட்டாரா? எனக்காகத்தான் இந்த வயதான தம்பதியை எனக்குப் பெத்தவங்களாக அனுப்பி இருக்கிறாரா? அன்னையே.... அன்னையே.... இந்த நீசத்தனமானவனையும் மன்னித்து.... எத்தனை இளகிய, கனிந்த உள்ளம் உங்களுக்குஆமாம்... நீங்கள்தான் உலகத்திலுள்ளவர்களுக்கே தாயாயிற்றேஅதில், எங்கோ.... என்னை.... இந்த சின்னஞ்சிறு துளியை எடுத்து, உங்களை வணங்கச் செய்து, ஆஸ்ரயித்து, அரவணைத்து, என்னைப் பொறுப்பாக, பாதுகாக்கத் துணையாய், பெற்றவர்களைப்போல் ஒரு கணவன், மனைவியைச் சந்திக்கவைத்து, இன்று.... இன்று.... நான்... நான்... அன்னையே, என்னால் தாங்கவே முடியவில்லையே.... இத்தனை அன்பா என்மேல்இத்தனைப் பாசமா என்மேல்இத்தனை அனுதாபமா என்னிடம்என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டுவிட்டீர்களாநான் செய்த பாவங்களை என்னிலிருந்து விலக்கி விட்டீர்களா? விலக்கியேவிட்டீர்களா?.... என்னால் உங்கள் அன்பையும், ஆதரவையும், அணைப்பையும் ஏற்றுக்கொள்ள நான் அருகதையானேன்என்று நினைக்க, நினைக்க மனம் புல்லரித்து, காற்றில் பறக்கும் அளவுக்கு, கனமற்று, பாரமற்று, மயிலறகுபோல் ஆகிவிட்டேனே.... அன்னையே நன்றி.... அன்னையே நன்றி.... அன்னையே நன்றி... நன்றி.... வேறென்ன என்னால் செய்ய முடியும் அம்மா... அம்மா....'.

     இதயத்துள் கதறல் வேகமாக எழுந்தது. ஆனால், வெளியே அமைதியாகயிருந்தாலும், கண்கள் தங்கள் வேலையைப் பொறுப்பாகச் செய்ததில், முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்ணீர் வழிந்தது.  கண்கள் திறக்கவில்லை; ஆனால் மனம் என்னும் பெட்டகமோ சத்தம் இன்றித் திறந்தேவிட்டது. அதில் அடைக்கப்பட்டிருந்த அடைசல்கள் எல்லாமே முண்டியடித்தபடி வெளியேறியது

     கண்கள் வழியாக.மனதிலிருந்த பாரமெல்லாம் அதில் கரைந்துபோனதுமனதில் இருந்த அழுக்கெல்லாம் அந்தக் கரைசலுடன் கலந்து வெளியே ஓட்டமாய் ஓடியேபோனது.

     திடீரென விதிர்த்துப்போய் கண்களைப் "படக்'கெனத் திறந்தான் கௌதம்வீடே பிரகாசமாய், வெளிச்சத்துடன் இருந்தது. அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் திருமுகங்கள் வெகுஅழகாக, ஆனந்தமாக, பெரியதாகச் சிரிப்பது புரிந்ததுஅவனறியாமலே அவன் உதடுகள் விரிய வாய்விட்டு சிரித்தான்கௌதம் அன்றிருந்து புதிய பிறவி ஆனான்.

     சட்டென பாகீரதியை நோக்கிச் சென்றான், மகிழ்வோடு. "அம்மா, ரொம்ப பசிக்கிறதும்மாஏதாவது டிபன் செய்றீங்களாம்மா. அப்பா, நீங்க சொல்லுங்க... என்ன வேணும்பா.... சொல்லுங்க.... கடைக்குப் போய் வாங்கிண்டு வரலாம், சொல்லுங்கப்பா....''.

     பாகீரதியும், நாகராஜனும் அவனையே பார்த்தார்கள். அந்தப் பார்வையில் பிரமிப்புத் தெரிந்தது.

     இத்தனை நாளும் ஏதோ ஒருவித குற்ற உணர்வில், தப்பு செய்து விட்டோமே என்கிற சுயபரிதாபத்தில் சோபையற்றிருந்த அவனது முகத்தில் எத்தனைப் பிரகாசம்! எத்தனைத் துடிதுடிப்பு! எத்தனை சந்தோஷம்! எத்தனைத் துள்ளல்! ம்மாடி.... இதெல்லாம் இத்தனை நாள் எங்குப் போய் ஒளிந்திருந்து, இன்று அப்படியே ஓடி, ஓடி வந்திருக்கிறதே....

     ஆச்சரியப்பட்டுப்போனார்கள் பாகீரதியும், நாகராஜனும். இத்தனை நாட்கள் மனதுள் அழுத்தப்பட்டிருந்த அத்தனையும் கழன்று கீழே விழுந்து மறைந்தது போலிருந்தது, அவர்களுக்குத் தெரிந்து இருக்கவில்லையென்றாலும், அவனிடம் ஏற்பட்டுள்ள மாறுதலை உணர்ந்தார்கள்அவர்கள் மனதும் நிம்மதியை எட்டியது.

     இருவருமே ஸ்ரீ அரவிந்தர், அன்னையை நோக்கி, மனதுள்ளேயே நெகிழ்ந்து, வணங்கி, நன்றி கூறினார்கள்.

     அப்போதுதான் தியான மையத்தில் ஒருவர் பேசியது குறித்து இப்போது ஞாபகம் வந்தது பாகீரதிக்கு.

     அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வணங்கியது மட்டுமல்லாமல், தன்னை அறியாமலேயே Life Divine புத்தகத்தை அவன் சரீரத்தில் வைத்தது எத்தனை நல்லதாயிற்று என உணர்ந்தாள்.

     காரணம் அன்பர் பேசிய பேச்சுக்கள்தாம். அதுவும் உண்மையில் நடந்தது அது.....

     வீட்டில் அமர்ந்திருந்த அன்பர், புயலடிக்கும்போது, வெளியே தம் பார்வையைச் சாதாரணமாகச் செலுத்த, அதிர்ந்துபோனார்ஒரு பெரிய மரம் சாய ஆரம்பித்தபோது, "தன் வீட்டின் மேல் விழும் நிலையில் இருக்கிறதே' எனத் தோன்றியதும், சட்டென்று Life Divine புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார், பக்தி உணர்வோடு. என்னே அதிசயம்! ஆமாம், அதிசயம்தான் நடந்தது; ஆனால் உண்மை, சத்தியத்தோடு நடந்தது. சாய்ந்த மரம் அப்படியே... ஆமாம், உண்மையேதான், அப்படியே நின்று, ஸ்திரமாக, ஆடாமல் நின்றே விட்டது. வீடும் தப்பியது. அன்பரின் கண்களில் அடக்க முடியாத உணர்வுக் குவியல்களால் ஆனந்தக் கண்ணீர் சுரந்தது.  மனம் விம்மி, விம்மித் தணிந்தது. Life Divineபுத்தகத்தைத் தம் கண்களில் ஒற்றிக்கொண்டார், நன்றியோடு.

      Life Divineஎன்ற புத்தகம், புத்தகம் மட்டுமன்று; உயிரும், உணர்வும் உள்ள, நம்மை இடர்கள் வரும்போது காப்பாற்றும் பாதுகாப்புக் கவசம்; சத்தியத்திற்கும், பக்திக்கும் கட்டுப்பட்டது.

     நம் வீட்டில் உடல் நலம் சரியில்லாதவர்களிருப்பின், அந்தப் புத்தகத்தை அவர் மீது படும்படி வைத்தோ, அல்லது படித்தோ, பக்தியுடன் பிரார்த்தித்தால் உடல் நலம் நிச்சயமாகச் சீராகும்இது உண்மையாக நடக்கும்.

     புத்தகங்களைச் சாதாரணமாகப் படிக்கிறோம். அவைகள் மனதில் பதிகிறதா, இல்லையாஎன்பது பற்றிய அக்கறையோ, எண்ணமோ இல்லாமல், புத்தகத்திலிருக்கும் வாசகங்கள், வாக்கியங்களில் நம் கண்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். மனது? நிச்சயமாக அதில் பதிந்திருக்காதுகண்களின் ஓட்டத்தோடு ஒட்டாமல், தன்பாட்டுக்குத் தன் ஓட்டத்தை வேறு பாதையில் தொடரும். இரண்டுக்கும் சம்பந்தமே இல்லாமல், அதனதன் பாதையில், தனித்தனியாகப் பயணித்து ஓட்டத்தைத் தொடரும்போது, எந்த ஓட்டம் ஜெயிக்கும்? ம்... ஹூம்... அது நமக்கே தெரியாதே. தெரியவும் தெரியாது, புரியவும் புரியாது.காரணம்? அப்போதிருக்கும் நம் மனநிலையைப் பொருத்தே ஓட்டத்தின் ஜெயிப்புமிருக்கும். நாமும் அதை ஏற்றுக்கொள்வோம், நம்மை அறியாமலேயே. இது, பொதுவாக எல்லாருக்கும் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளில் ஒன்றுதான்இதில் சந்தேகமேயில்லைஇதை எப்படி எதிர்கொள்வது? என்ன வழி?

     இருக்கிறதே.... வழியிருக்கிறதே..... அதுவும் நம்மிடமே புதைந்து கிடக்கிறதே. அதை நாம் உணர்ந்து, அதை உயிர்ப்பித்து, நம்முடைய மனக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால்... ம்... ஹூம்... இந்த சந்தேகமே நமக்குக் கூடாதுநம்முடைய மனக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்ற உறுதி நம்மிடம் வேண்டும். அப்போது பாருங்கள், எல்லாமே..... வெகு நன்றாய் சரியான வழியில் பீடுநடை போடும்இதுதான் உண்மையான ஜெயிப்பு.

     "முடியுமா?''

     இந்தக் கேள்வியே தவறுஇந்த நான்கெழுத்துக்களில் உள்ள கேள்விக்குறியாகிய நெடில் எழுத்தை அகற்றி, மெய்யெழுத்தாக்குங்கள்இப்போது நம் மனம் எப்படி சந்தோஷிக்கிறது! ஆனந்தப்படுகிறது! துள்ளிக் குதிக்கிறது! நாமே எப்படிப் புதிய பிறவி எடுத்ததுபோல் மெய்சிலிர்த்துப்போகிறோம்என்பது கண்கூடாகத் தெரியும். 

     அதுவும், அன்னை, ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக்கொண்ட, அதுவும் மனமார, உளமார, மெய்சோர ஏற்றுக்கொண்டவர்களுக்கு உணர்ந்து,உய்விக்க முடியும் என்பதில் ஐயமேயில்லை.

     அதேதான் நடந்தது கௌதமின் வாழ்க்கையில். தவறு செய்யாத மனிதர்களேயில்லைமனிதர்கள்தாம் தவறு செய்பவர்கள்அதிலும் தவறு இல்லைகாரணம், ஒரு முறை தவற்றைச் செய்து உணர்ந்தால் தான், அதன் வீர்யம் நமக்குத் தெரியும்; புரியும்.

     சூடு பட்டுக்கொண்டால்தானே, சூட்டைப் பற்றி அறிய முடிகிறது?பிறகு எத்தனை ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுகிறோம்.  அதேதான் நம் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள். பல சம்பவங்களில், சில நம் இதயத்தைப் பிழிந்து, கசக்கி, நம்மை மூர்ச்சையடையக்கூடியதாய், வேகமாய், அதிரடியாய் தாக்குவதுதான் நிஜம்ஆனாலும் விடுபட்டு வருகிறோம். அந்த "விடுபட்டு' என்பது நடக்கத்தான் எத்தனை? இதயத்தினுள் ஆழத்தில் அழுத்தி, அழுத்தி, அதன் வாயை மூடச் செய்வதா? இல்லை, அதனுடைய ஆர்ப்பாட்டத்திற்கும், கூச்சலுக்கும், அழுகைக்கும் கட்டுப்பட்டு, அதன் காலடியில் வீழ்வதா? என்கிற இந்தப் போராட்டத்தை அனுபவிக்காதவர்களே இல்லை என்பதுதான் நிஜம்ஆமாம்.... இதுதான் சாதாரண மனிதர்களாகிய நம்முடைய வாழ்க்கையின் நடைமுறையில் நடக்கிறதுஇதை நம்மைவிட்டு ஒதுக்கும் வழியை நாம் அறியாததால் ஏற்படும் விளைவு நம்மை நாமே கசக்கிப் பிழிந்துகொண்டு, நொந்துநூல் ஆகிறோம்ஏனெனில், நம்மிடமிருந்து எவையெல்லாம் விடுபடுகின்றனவோ, அவையெல்லாம் விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு, விடுபட்டதை இழுத்து, இழுத்து, நம்மை விட்டு விலகாமல், நம்மிடமே வைத்துக் கொண்டு, துயரப்பட்டு, துவண்டுபோய், நம்மை மட்டுமல்ல, நம்மோடு இருக்கும் உற்றவர்களையும் துவண்டுபோகச் செய்கிறோம்இது தேவை அற்றது. ஆனால், அது தேவையற்றதுஎன நாம் நினைக்க வேண்டி, நம்மை நாமே தேற்றிக்கொள்ள படாதபாடு படவேண்டி இருக்கிறதுஅந்தப் படாதபாடு படவேண்டியதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள "ஒரே வழி'' இருக்கிறது. அந்த வழிதான் "அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் வழிபாட்டை நாம் மனமார ஏற்றுக்கொள்வது''.

     அது மட்டுமன்று, அன்னை, ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய புத்தகங்களைப் படித்துத் தெளிவு பெறுவது. சில, நமக்குப் புரியாமல் இருக்கலாம். அதைப் பற்றிய கவலை நமக்கு வேண்டவே வேண்டாம்நாம் படிக்கப் படிக்க, நம் மனம், நம்மிடமுள்ள கசடுகளை அகற்றி, நம்மைத் தெளிவுக்குக் கொண்டுவரும் என்பதுமட்டும் சர்வ நிச்சயம்.

     மூடனான காளிதாசன் எப்படி கவிஞன் ஆனான்? அவனுடைய மூடத்தனத்தை "காளி' பார்க்கவில்லைஅவனுடைய உண்மையான பக்தியைத்தான் பார்த்தாள் "காளி'. அதன் விளைவு "கவி காளிதாசன்'ஆனான்.

     அதேபோல்தான் கண்ணப்ப நாயனார், சிவலிங்கத்தின் கண்களில் இருந்து வழியும் ரத்தத்தைக் கண்டு, பதற்றப்பட்டு, மெய் சோர, என்ன செய்வதென அறியாது, பின் தன் ஒரு கண்ணையே பெயர்த்து, சிவலிங்கத்தின் கண்களில் வைத்தவுடன், ரத்தம் வருவது நின்றது.   இன்னொரு கண்ணிற்குத் தன் கண்ணை வைக்க, அவன் தன் காலை, லிங்கத்தின் கண்களில் வைக்க, அடையாளத்திற்கு வைத்ததை சிவனும் ஏற்றுக்கொண்டார்; காரணம் பக்தி.

     பக்தி என்பது பல வழிகளில், பலநிலைகளில் காணப்படுகிறது.ஆனால், நம் அன்னை, ஸ்ரீ அரவிந்தரிடம் நாம் காண்பதோ ஒரே விதத்தில்தான்வர்க்க பேதமேயில்லைஒரே ஒரு கட்டுப்பாடு, நம்மிடமுள்ள கெட்டவைகளை அகற்ற வேண்டும்தூய மனதோடு இருக்க வேண்டும்நம் மனதில் தெளிவை ஊட்டும், அன்னை ஸ்ரீ அரவிந்தரின் புத்தகங்களைப் படிக்க வேண்டும்படிக்கப் படிக்க நம் மனம் நிச்சயமாய்த் தெளிவுறும் என்பதில் சந்தேகமேயில்லை.

     கௌதமும் அதே போல்தான் தெளிவுற்றான்அது மட்டுமா? அவனால் காயப்பட்டு, அவனுடனேயே வந்தவர்களையும், தன் பெற்றோரைப் போல மதித்து, தன் பெற்றோர்களுக்கிழைத்த கொடுமைகளுக்கு வருந்தியவன், அதை இந்த முதியவர்களுக்குத் தான் செய்யும் கடமைகளாக எண்ணி, அன்பையும், பாசத்தையும் வஞ்சனையின்றி வாரி வழங்கினான்.

     பாகீரதியும், நாகராஜனும், கௌதமையும், அவனின் அன்பு, பாசத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார்கள்.

     காரணம், அவர்களின் அடிபட்ட மனதின் காயத்துக்கு கௌதம் மருந்தாகயிருந்ததுதான்அது மட்டுமன்று, அன்னை, ஸ்ரீ அரவிந்தரை அறிந்ததில் அவர்களின் மனக்குமுறல் வெகுவாக அடங்கியிருந்தது.  கௌதமின் வீட்டிலிருந்த அந்தப் புத்தகங்களை, தினத்திற்கும் சில பக்கங்களைப் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டார்கள்.

     சில நாட்கள் பாகீரதியும், சில பொழுதுகள் நாகராஜனும் படிப்பதை, எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தாமல் தொடர்ந்தார்கள்புரிகிறது, இல்லை என்பது பற்றி யோசிக்கவேயில்லைஅந்தப் புத்தகங்களைக் கையில் ஏந்தும்போதே பக்தியோடு, பரவசத்தோடு படித்தார்கள் மாறி,மாறி.

     "நிம்மதி' என்பது அவர்களிடம் இப்போதுதான் அண்டி வந்தது. அதைப் பூரணமாக அனுபவித்தபடி, வேண்டாததை மனதிலிருந்து "களை' எடுத்து, அன்னை, ஸ்ரீ அரவிந்தரை மனமார வேண்டியபடியும், கௌதமிற்கு இசைவாக நடந்தபடியுமாக, சீராக, அமைதியான நதியில் போகும் ஓடத்தைப்போல், எந்தவிதமான தள்ளாட்டமுமின்றி இருந்தார்கள்.

****

     காய்கறிகள் வாங்கியபடி, பாகீரதி கடைசியாக, கொத்துமல்லி, கருவேப்பிலை, இஞ்சி வாங்க அந்தக் கடையை நோக்கி நடந்தாள்.  அப்போதுதான் அது நடந்தது.

     அந்தக் கடைக்காரனுடன் பெருத்த குரலில் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள் ஒருத்திகடைக்காரனும் அதற்குமேல் கன்னா பின்னாவெனக் கூச்சல் போட்டுக் கேவலமாய் பேசிக்கொண்டு இருந்தான்.

     குரலைக் கேட்டு அதிர்ந்துபோன பாகீரதி, "வேறு எந்த வம்பும் வேண்டாம், கருவேப்பிலை, கொத்துமல்லியும் வேண்டாம்' என்று மளமளவெனத் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்இதயத்துள் பல விதமான எண்ணங்கள் முட்டி மோதினஅவ்வளவே, அத்தனையும் வெளியே தள்ளி, "ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம:'' என்னும் மந்திரத்தையே விடாமல் ஜபித்தபடியே நடையை வேகமாக்கினாள்.

     திடீரென அவள் தோள் மேல் ஒரு கை படர்ந்தது. அது மட்டும் அன்று, அவளை பலவந்தமாகத் திருப்பியது.

     திரும்பினாள் பாகீரதி. அதிர்ந்தேபோனாள் மீண்டும். எதைத் தவிர்க்க வேண்டுமென நினைத்தாளோ, அதுவே அவள் முன்னால் வந்து நின்றது.

     "என்ன, வீட்டை விட்டு ஓடிப்போனா கண்டுபிடிக்க முடியாதா? ஏன், பிள்ளைக்கும், மருமகளுக்கும் கெட்ட பெயர் வாங்கித் தரணும்னு ஏதாவது வேண்டுதலா? இதோ, கறிகாயோட நிக்கிறீங்களே.... எந்த வீட்டுல சமையல்காரியாவும், உங்க வீட்டுக்காரர் வேலைக்காரராவும் இருக்கீங்க?.... நல்ல சம்பளமா?.... நல்ல சாப்பாடா?.... ஒடம்பு ஊதி,உப்பியிருக்கே.... சே... இப்படியும் பொழைக்கிற பொழைப்பு ஒரு பொழைப்பா?..... கேவலமாயில்லே..... வெக்கமாயில்லே....''

     பேச்சுக்களையெல்லாம் விழுங்கினாள். அதை அப்படியே அன்னையிடம் சமர்ப்பித்தாள். "அன்னையே சரணம்'' என மனம் ஜபிக்க, "அன்னையே இப்போது நான் எது பேசினாலும், அவைகள் நீங்கள் பேசியவைகளாகத்தான் இருக்க வேண்டும்எதுவுமே என் இச்சைக்கு வார்த்தைகள் வெளிவரக் கூடாது. அருள்வாய் அம்மா....''.

     "என்ன, பேச்சு வரலையா? இல்லே பேசவே முடியாம வாய் அடைச்சே போச்சா?'' ஆங்காரத்துடன் வந்த வார்த்தைகள் கொடூரமாக வந்தன.

     திரும்பி நின்றாள் தைர்யமாக பாகீரதிஎதிரிருப்பவளைப் பார்த்து சிரித்தாள் மென்மையாக.

     "நீ யாரும்மா? எனக்குத் தெரியலையே...? நான், என் பிள்ளையோட இருக்கேன்நான், எங்கேயும் வேலை செய்யலையே....யாரையோ நினைச்சுண்டு, என்னோட பேசறே போலிருக்கு.நீ நினைக்குற ஆள், நானில்லேம்மா.... வரேன்....''.

     சொல்லிய பாகீரதி, திரும்பிப் பாராமல் தன் நடையைத் தொடர்ந்தாள், மனதில் எந்த சலனமுமில்லாமல்விடாமல் அன்னையைப் பற்றிமட்டுமே அவள் மனம் நினைத்தது, ஜபித்தது. கால்கள் தன்னாலேயே வீட்டை நோக்கிச் சென்றது.

     பின்னாலேயே ஓடி வந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் மடக்கினார்கள்.

     "என்ன பொண்ணும்மா நீ? அவங்களுக்குத்தான் உன்னைத் தெரியவேயில்லையே.... நீ ஏன் அவங்க பின்னால ஓடறேஅவங்க எப்போதும் இந்த மார்க்கெட்டுல வந்து வாங்கறவங்கம்மாரொம்ப நல்ல மாதிரிஇன்னிக்கு நீ புதுசா வந்துட்டு, அந்த வயசான அம்மாவை, இப்டி கேவலமா பேசறதை நாங்கல்லாம் பார்த்துகிட்டு சும்மாயிருக்கமாட்டோம்போம்மா சர்தான். நீ, இனிமே இந்த பக்கமே வரவேணாம். நாங்க யாரும் கறிகாய் உனக்கு விக்கவும்மாட்டோம்போம்மா... போ.... போ....''.

     கொஞ்சம் பயந்துதான்போனாள் அந்தப் பெண்இத்தனை பேர் தன் மாமியாருக்குப் பரிந்து, பாதுகாப்பாய் இருப்பார்களென அவள் எள்ளளவும் நினைக்கவில்லைஆனால், நல்ல இடத்தில்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறதே.... என மனம் ஒருவிதப் பொறாமையில் படபடத்தது.
 

     இந்த மாமியார் கிழவிக்கு வந்த வாழ்வைப் பாரேன். வீட்டை விட்டு துரத்தியும், நல்லா குண்டுகணக்காயிருக்காளே..... ஹூம்...நாம துரத்தினாலும் நல்ல இடம் கிடைச்சுடுத்து இந்தக் கிழங்களுக்கு....

     வீட்டின் முன் வந்து நிற்கும்வரை, பாகீரதியின் அதரம் "அன்னையே சரண''த்தைத்தான் சொல்லிக் கொண்டிருந்தது. வீட்டினுள்ளே சென்று, நேராக நின்றது அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் எதிரில்தான். கறிகாய் கூடையை கீழே வைத்துவிட்டு, அப்படியே சரிந்தவளின் கண்களிலிருந்து சரசரவெனக் கொட்டியது கண்ணீர். விம்மி விம்மி வெடித்து வந்தது அழுகை.

     தோளில் இதமாக ஒரு கை படியவும், சட்டெனத் திரும்பினாள்.

     "பாகீ.... பாகீ.... ஏன் அழறே.... என்னாச்சு? ஏதாச்சும் அடிபட்டுதா? சொல்லு.... சொல்லேன்....'' நாகராஜன் பதைபதைத்துப்போனார்.

     "இல்லே.... மார்க்கெட்டுல... அவ... அவ... வந்து என்னோட சண்டை போட்டா.... ஆனா.... அன்னைதான் என்னைக் காப்பாத்தினது''.

     "என்னம்மா... என்ன சொல்றே.... யாரு? அவன்னா.... யாரு?  சீனு பொண்டாட்டியா.....ம்.... சொல்லு.....''.

     "ஆமாம்..... அவளேதான்மார்க்கெட்டுல வந்து என்னென்னமோ பேசிட்டாங்கவெலவெலத்துப்போயிட்டேன். ஆனா, மனசுல சட்டுனு அன்னையையே நினைச்சுண்டேன்சரணம் சொல்ல ஆரம்பிச்சேன்என் திகிலெல்லாம் போயே போச்சுஅவளை யாருன்னு தெரியாதுன்னு சொன்னேன்ஆனா, அது பொய்யின்னு எனக்குத் தெரியும்.  அன்னைகிட்டே அதுக்குத்தான் இப்ப மன்னிப்புக் கேக்கறேங்கநான் இப்டி பொய் சொல்லிட்டேனே.... எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டேன்.  தாங்கலே..... தாங்கலே....'' அழுதாள் கேவியபடி.

     "வேண்டாம் பாகீ, அழாதே. "பொய்மையும் வாய்மையிடத்த'ன்னு சொல்லியிருக்காங்கயில்லையா. நீ அனாவசியமாவோ, வேணும்னேவோ எந்தப் பொய்யையும் சொல்லலேஒருத்தரைக் கெடுக்கணும்கற கெட்ட எண்ணத்தோட பொய் சொல்லலே. அன்னைதான் உன்னை அப்டி சொல்ல வச்சிருக்கார்காரணம் உன்னை, அவகிட்ட இருந்து காப்பாத்த. உன் மனசுலயிருக்கிறதையெல்லாம்   அன்னைகிட்ட சொல்லிட்டேதானேஅதுக்கப்புறம் ஏன் மறுபடி அதையே நினைச்சு அழறேஅன்னைகிட்ட சொன்னதுமே நீ தெளிவாகணும் பாகீ.  அதுதான் அன்னைக்குப் பிடிக்கும். புரிஞ்சுண்டியா?''

     ஆச்சரியத்தில் வாய் மூடவே மறந்தாள். தன் கணவரா இப்படி பேசுவது? யார், எது சொன்னாலும், அதற்கு "சரி' என்பது தவிர வேறெதுவும் சொல்லத் தெரியாத, அதிகம் பேசவே செய்யாதவரா இப்படிப் பேசுகிறார்.

     சந்தோஷத்தில் அன்னை, ஸ்ரீ அரவிந்தரையே மெய்சோர, கரம் குவித்துப் பார்த்தாள்.

     கணவரின் கரங்களை அன்புடன் பற்றினாள். கண்களில் ஒற்றிக் கொண்டவளின் இதயம் விம்மித் தணிந்தது.

     "எனக்கு அன்னைகிட்டே பக்தியிருக்கு, பரவசமிருக்கு. ஆனா,நான் தியானம் செய்வது, வேண்டுவது, எல்லாமே எனக்காகத்தான்.  ஆனா..... ஆனா..... நீங்க.... நிஜம்மா சொல்றேன்.... ரெண்டு பேருமே தான் புத்தகங்களைப் படிச்சோம்.... மாறி, மாறி படிச்சோம்....உங்களவுக்கு நான் தெளிவாகலேன்னு நல்லாவே புரியறதுநீங்க மௌனமாயிருக்கிறதாலேயே ஒண்ணும் தெரியாதவர், பரமசாதுன்னு நினைச்சுண்டிருந்தேனே.... எத்தனை அல்பமான புத்தி எனக்கு? படிச்சதையெல்லாம் உங்க மனசு, அத்தனையையும் உள்வாங்கி இருக்கு. ஆனா, என் மனசு..... மேலோட்டமாத்தான் எடுத்துண்டு இருக்கு. எத்தனை அழகா, என்னமா எனக்குப் புரிய வச்சுட்டீங்க....அன்னை உங்களை எத்தனை அழகா சொல்ல வச்சுட்டார்.... என்னால,நிஜமாவே சந்தோஷத்தைத் தாங்கமுடியலேங்கவாங்க, ரெண்டு பேருமே சேர்ந்தாப்பல அன்னை, ஸ்ரீ அரவிந்தரை நமஸ்காரம் பண்ணி வேண்டிப்போம், வாங்க''.

     மகிழ்ச்சி சரீரம் பூராவும் பரவியிருக்க, கணவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் வணங்கினாள் பாகீரதி. மனதும் தெளிவானது; பயமும் விலகியது. அவரையே பார்த்தாள்.

     "பாகீ, அன்னையை நம்பிய பிற்பாடு, ஏன் உனக்கு இப்படி ஒரு எண்ணம்? வேண்டாம் பாகீ. உன்னை எந்த வழிக்கும் கட்டுப்பட முடியாதபடி செய்யும் சந்தேகப்பிராணியைக் கூடவே அடிமடியில் கட்டி வச்சுண்டு, அரைகுறை உணர்வோட நாம் செய்யும் எந்த வேலைகளோ, காரியங்களோ, பிரார்த்தனைகளோ, செயல்பாடுகளோ, எதுவுமே நிறைவாக இருக்க முடியாது, பாகீ..... நிறைவான பலனையும் அடைய முடியுமா, சொல்லு? ஆனா, நம்ம மனுஷ மனம் ஒத்துக் கொள்ளவே செய்யாதும்மாஎவ்வளவு பிரார்த்தனை செய்தேன்எத்தனை மலர்களை அடுக்கினேன்? என வாதம் செய்யும்; அலுத்துக் கொள்ளும்; குறை கூறும்; தவற்றை உணராது, பாகீ....

     எதையுமே நாம, "இது நியாயமா? சரியா?ன்னு யோசிக்கனும். ஆனா, நம்மகிட்டவிருக்கும் குறையே.... யோசிக்கிற திறனிருக்கும் குறைதான், முக்கியமான குறையே..... புரியறதா பாகீ.....''.

    முகவாயில் கையை வைத்து, வியந்தேபோனாள் பாகீரதி. எதுவுமே தெரியாதவர், பேச்சைக்கூட அளந்து பேசுபவர், அப்பிராணிஎன நினைத்த, தன் கணவருக்குள் எத்தனை தீர்க்கமான யோசிப்புகள்.

     "நிஜம்மா சொல்றேன். உங்களுக்குள்ள "அன்னை' நன்னா பூந்துண்டிருக்கார். ஏன் தெரியுமா? உங்க மனசுல துளிக்கூட கல்மிஷம் இல்லை; எதிர்பார்ப்பு இல்லேஎழுதாத பேப்பர் போல, சுத்தமா, வெள்ளையா, தூய்மையாயிருக்கு உங்க மனசு. அதனாலதான், உங்க பரிசுத்தத்தை ஏத்துண்டு, அன்னை உங்ககிட்டேயிருக்கார்எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு. நிஜம்மா.... இன்னிக்கு நீங்க பேசினாப்பல, கல்யாணமாகி இத்தனை நாளுகல்ல ஒரு நாள்கூடப் பேசினதுலஅதுவும், சீனுவும், அவன் பொண்டாட்டி லதாவுமா படுத்தின பாட்டுக்குக்கூட, ஒரு கடுஞ்சொல் சொன்னதில்லே.  அன்னையைப் பத்தித் தெரியாமலேயே, நீங்க அவங்களோட வழிகள்ல நடந்து வந்துருக்கீங்கஇப்ப, இந்தப் புத்தகங்களைப் படிச்சுப் படிச்சு, இன்னும் தெளிவாயிட்டீங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்குஇனிமே எதுக்குமே மனசு கலங்கப்போறதில்லேஇத நிச்சயமா சொல்றேன், சரிதானே''.

     "ரொம்ப சரி பாகீ. ஆனா, அதை எங்கிட்டே ஏன் சொல்றே? அவசியமேயில்லையே.... அதோ.... அவங்க ரெண்டு பேருமா, பெரியவங்களா, நம்மளையே பார்த்துண்டு உக்காந்திருக்கா பாரு, அவாகிட்ட சொல்லு. அவாள நமஸ்காரம் பண்ணி, அவாளோட ஆசீர்வாதத்தை வாங்கிக்கோ பாகீஅதுதான் சரிம்மாஇனிமே உனக்கும் மனசுல எந்த விதமான பயமோ, சஞ்சலமோ ஏற்படவே செய்யாது, புரிஞ்சுதா?''

     "சரி' என்பது போல தலையாட்டிய பாகீரதியின் மனதும் இப்போது நிம்மதியாகயிருந்தது. கணவரின் அனுசரணையான பேச்சு அவளுக்கு மயிலிறகானது. அதிலுள்ள தத்துவார்த்தமான பேச்சுகள், மனதை ஊடுருவிச் சென்றதுதெளிந்தாள் பாகீரதி.

****

     நாட்கள் கடந்தன. பாகீரதி, கௌதமுக்கும், நாகராஜனுக்கும் டைனிங் டேபிளில் பரிமாறிக்கொண்டிருந்தாள்.

     "அம்மா, நீங்களும் உக்காருங்கம்மா. சேர்ந்தே சாப்பிடலாம்மா. அப்புறமா, தனியா உக்காந்துண்டு, கொஞ்சமா கொறிச்சுட்டு எழுந்துடுவேள். உக்காருங்கம்மா....''

     கௌதம், பாகீரதியைப் பிடித்து இழுத்து உட்காரவைத்தான்.

     படபடவென்று கை தட்டும் சத்தம்.

     "பேஷ்.... பலே பேஷ்..... யாரோ ஒரு மூணாவது மனுஷன் வீட்டுல உக்காந்துண்டு, வெக்கமில்லாம, அவன் இழுக்கிற இழுப்புக்கு, இழுபட்டுண்டு, நன்னா சப்புகொட்டிண்டு சாப்பிடறதுக்கு வெக்கமா இல்லேஎப்டி துளிர்த்துப்போயிருக்கு பாரு சரீரம். சே.... எனக்குன்னா அவமானமாயிருக்கு.... இப்டி பார்க்க.... அசிங்கமா.....''

     கௌதமன் சட்டென எழுந்தான்.

     "யாரு? யாரு நீங்க? எப்டி இந்த வீட்டுக்குள்ளே வந்தேள்? தெரியலே? யாரைப் பார்த்து இத்தனை கேவலமா பேசறேள்? புரியலே.... வந்தவர் வாயிலேருந்து வந்த வார்த்தைகள்.... ம்....ஹூம்..... சொல்லவோ, கேட்கவோ முடியாதபடி.... எங்களுக்கு யாரும் இப்படிப்பட்ட சொந்தக்காரளோ, ஃப்ரெண்ட்ஸோயில்லையே....  யாரு நீங்க? என்ன வேணும் உங்களுக்கு? எதுவானாலும் இங்கே அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் இருக்கிற இடம், இங்கே உரக்கவும் பேசக்கூடாது, கத்தவும் கூடாது. அனாவசியமான பேச்சே கூடாதுவாங்க, வெளியில போய் பேசலாம். அப்பா, நீங்களும் அம்மாவும் இங்கேயே இருங்க. நான், இவரோட பேசிட்டு வரேன். வாங்க சார், வாங்க''.

     "உன்னோட எனக்கென்னப்பா பேச்சு? உள்ளேருந்து அவாள அனுப்புஅவாளோடத்தான் பேசணும்.... போ.... போ....''

     "சார், நீங்க யாருன்னே தெரியாதுஉள்ளே தடதடன்னு வந்தீங்க, கன்னாபின்னான்னு பேசறீங்க. எங்களுக்கு இது பழக்கமேயில்லே. நீங்க யாரு? எதுக்கு வந்தீங்க? சொல்லுங்க. ஆனா, கத்தக்கூடாது. இந்த வீட்டுல சத்தமே கூடாது. புரிஞ்சுதா.... ம்.... இப்ப சொல்லுங்க, நீங்க யாரு?''

     "ம்..... நாங்க யாருன்னு அவங்களையே கேளுங்க....''.

     "ஏன்? நீங்களே சொல்லலாமே. ஏன் சொல்ல முடியலையா? இல்லே.... உங்களுக்கு அவா யாருன்னு தெரியலையா? ஆனா, எனக்கு நன்னா தெரியும்ஏன்னா, அவங்க என்னோட அப்பா, அம்மாஎன்னைப் பெறாத அப்பாவும், அம்மாவும்அவங்களை நான் தெய்வத்துக்குச் சமமா வெச்சு வணங்கறவன்அவங்களை ஒரு குறை சொன்னாகூட தாங்கமாட்டேன்சரி, அதெல்லாம் உங்களுக்கு எதுக்குஇப்ப சொல்லுங்க, அவங்க ஏதாவது உங்களுக்குப் பணம் தரணுமா? சொல்லுங்க, நான் தரேன். ஆனா, அவங்களை எந்த தொந்தரவும் செய்ய விடமாட்டேன். அது மட்டும் நிச்சயம். சொல்லுங்க... இப்ப, எதுக்காக அவங்களைத் தேடி வந்தீங்க... ம்.... சொல்லுங்க.... சொல்லுங்க சார்....''.

     விக்கித்து, விதிர்த்து, வியர்த்தேபோனான் வந்தவன். "இதேதுடி வம்புநாம பிரச்சனை பண்ணி, "வந்ததை வரப்படுத்திக்கோ வல்லக் காட்டு ராமான்னு' ஏதாவது பிடுங்கிண்டு போகலாம்னு பார்த்தா, பெரிய வம்பாயிடும் போலிருக்கே..... என்ன செய்யலாம்? ம்... இவனோட அப்பா, அம்மாங்கறானே..... புரியலையே....' மறுகணமே விரைப்பானான்.

     "ஆமா, அவா எனக்குத் தர வேண்டியது நிறையயிருக்கு. அதை வாங்கிண்டு போகத்தான் வந்தேன்இப்ப, மொதல் தவணையா....எனக்கு இருபத்தஞ்சாயிரம் தரணும். அதைத் தந்துட்டா நான் போறேன். தேவையானா மறுபடி வருவேன், கேப்பேன், வாங்கிண்டு தான் போவேன்''.

     திண்ணக்கமாய், திமிருடன் பேசும் அவனைப் பார்த்த கௌதமுக்கு, ஏனோ மனதில் ஒரு குறுகுறுப்பு. அங்கிருந்தே... அன்னை, ஸ்ரீ அரவிந்தரை மனதார வேண்டிப் பார்த்தான்ஐந்து வினாடிகளுக்கு இமைகளை மூடி, அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் பாதங்களை "சரணம்' சொல்லிபிரார்த்தித்தான், முழுமையான பக்தியோடு. மின்னலெனத் தோன்றியது அன்னையின் கோட்பாடுகளில் ஒன்று:

     "DISCRIMINATION'' (வேறுபாட்டை, வேறுபடுத்திக் காட்டு).

     புரிந்துபோனது. அன்னைக்கு நன்றி சொன்னான்; தைர்யம் ஆனான்.

     "சரி, இருபத்தஞ்சாயிரம் நான் தரேன்இவங்களுக்கு நீங்க கடன் கொடுத்திருந்தா, சும்மா கொடுத்திருக்கமாட்டீங்கஅதுக்கான ரசீதோ, கையெழுத்தோ, புரோநோட்டோ கொண்டு வாங்க. அதைப் பார்த்துட்டு, அவங்க எத்தனை பணம் தரணுமோ, அதை சப்ஜாடா தந்துடறேன்வட்டி கேட்டாலும் தறேன்அதைக் கொண்டுவந்து இருக்கீங்களா?''

     அதிர்ந்து, ஆடியேபோனான் வந்தவன். "இதென்ன, கிணறு வெட்ட, பூதம் புறப்பட்ட கதையானதே. சரி, இன்னும் கொஞ்சம் பேசிப் பார்க்கலாம்', பயத்தையடக்கியபடி பேசினான்.

     "ரொம்ப தெரிஞ்சவர்னு சும்மாதான் கொடுத்தேன்அப்புறமா, தேடினா, தலைமறைவாயிட்டாங்க. என்னமோ நான் செஞ்ச புண்ணியத்துல இவங்க இருக்கிற எடம் தெரிஞ்சுபோச்சு. வந்துட்டேன்....''.

     "ரொம்ப நல்லதா போச்சுயாராயிருந்தாலும் கடனாளியாக இருக்கக்கூடாதுஅப்பா, இங்கே வாங்க. இவர், ஒண்ணுமே எழுதி வாங்கிக்காம இருபத்தஞ்சாயிரம் ரூபாய் தந்ததா சொல்றார்அது சத்தியமான நிஜம்னா, நான் கொடுத்திடறேம்பா.....''.

     "இல்லே கௌதம், எனக்கு அத்தனை ரூபா கடன் வாங்கற அளவுக்கு எந்த செலவும் இல்லேஎங்க ரெண்டு பேருக்கும் பெரிய வியாதின்னும் ஒண்ணும் வரலேஅதனால, இதுவரை யார் கிட்டயும் ஒத்த ரூபாகூட கடன் வாங்கலேப்பா.... நான்தான் என் பணத்தை இவருக்குக் கொடுத்திருக்கேன்உன் அம்மாவும், ஏழெட்டு சவரன் நகைகளைக் கொடுத்திருக்காப்பா.... மத்தபடி நாங்க யார்கிட்டயும் ஒரு பைசா கடன் படலே. நீ என்ன பதில் சொல்றியோ, சொல்லி அனுப்புப்பா.... எனக்கு "ப்ரே' பண்ணணும்போலயிருக்குப்பா.... வரேன்...''.

     கண்கள் செருக, மயக்கம் வரும் நிலைக்கு ஆளானான் வந்தவன்.  வாய் பேச முடியாமல், உதடுகள் ஈரப்பசை வற்றி ஒட்டிக்கொண்டனகண்கள் பரிதாபமான பார்வையைப் பார்த்தது.

     மேலும் ஒன்றும் பேசாமல், மௌனமாய் நின்றவனை, கௌதம் வந்திருந்தவனின் தோள் மேல் கையைப் போட்டு வெளியே அழைத்துப் போனான்.


 

தொடரும்...

****

.book | by Dr. Radut