Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV                                                                  கர்மயோகி

 691) ஜீவன் முழுவதும் ஆர்வமாகிப் பெற்ற ஞானமே தன்னையறிதல் என்பது. தன்னையறிந்தவன், தான் விருப்பப்படும் எதுவாகவுமாவான்.

இன்று தன் நிலையை அறிந்தவன் எதையும் சாதிப்பான்.

       பகவத்கீதை “நீ எதுவாக வேண்டும் என ஆர்வமாக விரும்புகிறாயோ, நீ அதுவாக மாறுவாய்” என்கிறது. பூரண யோகத்தின் அடிப்படைக் கருத்தாக பகவான் வேதாந்த ஞானத்திலிருந்து ஏற்றுக் கொண்டதில் இதுவும் ஒன்று. முக்கியமானது. Synthesis of Yoga சின்தஸிஸில் 4ஆம் பாகத்தில் மூன்றாம் அத்தியாயம் முழுவதும் இக்கருத்தை விளக்குகின்றது. இக்கருத்து சிருஷ்டியின் ஆதியைத் தொடுகிறது. பரம்பொருள், பிரம்மம் (Absolute) என்பது பூவுலகை சிருஷ்டித்தது. அதன் அடிப்படை ‘அது எதுவாகவுமாக முடியும்’. உலகத்தை சிருஷ்டித்த பிரம்மம் (omnipotent) தான் எதுவாகவுமாக முடியும் என்பதால், மனிதன் தன்னுள் உள்ள பிரம்மத்தை எட்டினால் அவனாலும் அது முடியும். பூரண யோகத்தின் கருவி சரணாகதி. சரணாகதி மூலமே தன்னுள் புதைந்துள்ள பிரம்மத்தை எட்ட முடியும். திருவுருமாற்றத்திற்காக நாம் சரணாகதியைப் பின்பற்றுகிறோம்.. பகவத் கீதை மோட்சம் பெறுவதற்காக சரணாகதியைப் பின்பற்றச் சொல்கிறது. இந்தத் தத்துவத்திற்கு மறுபுறம் உண்டு.

       ஜீவன் முழுவதும் ஆர்வமாகப் பெற்ற ஞானத்தால், தான் விருப்பப்படுவதை அடைய முடியும் என்றால், இன்று நாமுள்ள நிலையை நாம் எப்படி எய்தினோம்? இதுவரை நமக்கு நடந்த நல்லவை எப்படிக் கிடைத்தன எனில், அதுவும் நாம் நம் ஆர்வத்தால் பெற்றதே என்றாகும். இதுவரை நாம் பெற்ற அதிர்ஷ்டம், வெற்றி, பேறு, சிறப்பு, புகழ் ஆகியவை நாம் நம் ஜீவனின் முழுமையால் ஆர்வமாக முயன்று பெற்றதென அறிவோம். அது உண்மையானால் நமக்கு வந்த தரித்திரம், தோல்வி, துர் அதிர்ஷ்டம், கெட்ட பெயர் ஆகியவை எப்படி வந்தன? அதுவும் நாம் ஆர்வமாக விழைந்து பெற்றவையே என்பது ஆன்மீக உண்மை. மனிதன் நல்லதை விரும்புகிறான், கெட்டதை விலக்குகிறான். அதனால் அவன் முயன்று பெற்ற நல்லதை அவன் அறிவான், ஏற்றுக் கொள்வான். அவனது ஆன்மா முயன்று ஆர்வமாக தரித்திரத்தை நாடும், தற்கொலையைத் தேடும் என அவன் அறிவதில்லை. நாம் கெட்டது என விலக்குவதை நம் ஆன்மா தேவைப்பட்டது எனத் தேடுகிறது என்பதை நாம் அறிய ஆன்ம விளக்கம் தேவை.

       ஆன்மாவில் விழிப்பு ஏற்பட்டால், நாம் எதையும் முழு ஆர்வத்தால் பெற முடியும் என்பதும், இன்று பெற்றது அத்தனையும் ஏற்கனவே நாம் முழு ஆர்வத்தோடு தேடியவை என்றும் விளங்கும். இது ஆத்ம ஞானம். ஆத்மா இறைவனான பின் செய்யக் கூடிய யோகம் இது என்பதால், இறைவன் நம் ஆத்மாவை கருவியாக்கி பூரண யோகத்தைச் செய்கிறான் என்ற தெளிவு பூரண யோகத்தை ஆரம்பிக்கத் தேவை. மனிதன் தன் மனத்தைக் கருவியாக்கி பூவுலகில் வாழ்கிறான். விலங்கு தன் உணர்ச்சியைக் கருவியாக்கி உயிர் வாழ்கிறது. இறைவன் மனித ஆன்மாவைக் கருவியாக்கி சத்திய ஜீவனாக முயல்கிறான். அதுவே பூரண யோகம்.

****

692) இந்த ஞானம் மனம், உணர்வு, உடலில் இருக்கின்றது.

கீதையின் சாரத்தைக் கரணங்கள் அறியும்.

இந்த ஞானம் என இங்கு சொல்வது இரு பாகங்களாக உள்ளது.

1. மனம், உணர்வு, உடல் எதைப் பெற முயன்றாலும் அது கிடைக்கும்.

2. மனம், உணர்வு, உடல் இன்று பெற்றுள்ளதை இதுவரை ஆர்வமாக நாடின.

       எனக்கு இந்தக் கணக்கு வரவில்லை, கணக்கு வாராது என்ற பையன் கணிதத்தை விலக்குகிறான். வாராது என்று நினைத்தால் வாராது. வரும் என முயன்றால் வரும். எனக்குப் பயமாக இருக்கிறது. அதனால் என்னால் தனியாகப் பிரயாணம் பண்ண முடியாது எனில், இந்தப் பயத்தை ஒரு காலத்தில் நான் வேண்டும் என விரும்பினேன். அதனால் எனக்குப் பயம் வந்துள்ளது. இனி தைரியம் வேண்டும் என்று விரும்பினால் அது வரும் எனப் புரிய வேண்டும். நான் எவ்வளவு காலம் வாழ வேண்டும் என விரும்பினாலும், என் உடல் வாழும் எனவும், இந்தத் தீராத வியாதியை ஒரு சமயம் விரும்பி வேண்டினேன், அதனால் வந்துள்ளது, இன்று இது போக வேண்டும் என மீண்டும் அதேபோல் விரும்பினால் அது போய்விடும் என அறிந்து கொள்ள வேண்டும். எனக்குக் கணக்கு வரக்கூடாது, பயம் வேண்டும், வியாதி தேவை என யாராவது கேட்பார்களா எனில், கேட்பவர்களை நாம் பார்க்கலாம். அடிப்படையில் பயமும், தைரியமும் ஒன்றே, வியாதியும், ஆரோக்கியமும் ஒன்றே. ஆன்மா முழு அனுபவம் பெற தைரியம் மட்டும் போதாது. பயம் என்ற அனுபவமும் வேண்டும். அதனால் ஆன்மா ஓர் அனுபவம் பெற்று முடிந்தபின் அதற்கெதிரான அனுபவத்தை நாடுகிறது. அது தத்துவம்.

       மாற்றாம் தாயிடம் காலையிலிருந்து இரவுவரை செக்குமாடாய் உழைக்கும் ஆதரவற்ற பையனுக்கு ஓய்வு கிடையாது. படுக்கையாகப் படுத்தால்தான் ஓய்வுண்டு என்பதால், அவனது ஆழ்மனம் 1 மாதம் படுக்க வேண்டும் என விரும்பும். அது நடக்கும். தைரியமானவனைப் போர்க்களத்திற்கு அனுப்புவதுபோல் எதிரிகளைச் சமாளிக்க அனுப்பினால், அதை விரும்பாதவன எனக்குத் தைரியம் போய் பயம் வேண்டும் என விரும்பி கடைசி காலத்திலாவது, அடுத்த ஜன்மத்திலாவது அதைப் பெறுவான். அனுபவத்தில், காதால் கேட்டவை, கண்ணால் கண்ட உண்மைகளில் சில:-

திருமணத்தன்று காலையில், எந்தப் பிரச்சினையும் இல்லாதவர், இது நின்றுவிட்டால் தேவலை என்று வாய்விட்டுக் கூறுவது.

அபரிமிதமான வெற்றி திட்டத்தில் கிடைத்தபின், முதலாளி இந்தச் சரக்கு இல்லாவிட்டால் நிம்மதியாக இருக்கும் என்று அறிவிப்பது.

15 பாக்டரி உள்ள தொழில் அதிபர் 2 கோடி இலாபம் பெறும் தொழிலை மூட வேண்டும் என அடிக்கடி அறிவிப்பது.

8 மாதத்தில் 10 லட்சம் சம்பாதித்தவர், தன் முந்தையத் தொழிலில் வருஷம் ஒரு இலட்சம் சம்பாதித்தவர் என்றதை மறந்து, இத்தொழிலை மூடினால் நல்லது என நினைப்பது.

வருமானம் என்பதே 15 வருஷமாக இல்லை, ‘பசியும் பட்டினியும் பழக்கமாய்விட்டது’ என்பவருக்கு மாதம் 3500 பரிசாக வந்தபொழுது இனி இது வேண்டாம் என்று மறுத்தவர் ஒருவர்.

100 ரூபாய் கடன் பெற முடியாதவருக்கு வலிய 10,000 ரூபாய் கடன் பெறும் அமைப்பைத் திட்டமாக அனைவருக்கும் உள்ள உரிமையாக ஏற்படுத்தியபொழுது, அனைவரும் இதை ரத்து செய்யக் கேட்டது.

****

693) தான் எதுவாகவுமாகலாம் என மனம் அறிந்தால், அது நம்பிக்கையை ஊட்டும். அதன் அடிப்படையில் ஆர்வத்தை எழுப்பலாம்.

இன்று மனம் அறிந்ததை நாளை ஜீவன் சாதிக்கும்.

       விஷயம் புரியாத மனம் குழம்பும். சந்தேகப்படும். நம்பிக்கை ஏற்படாது. அது ஒரு வேலை செய்ய வேண்டுமானால், இந்நிலையில் ஆர்வம் எழாது. விஷயம் புரிந்தால், சந்தேகம் விலகும், நம்பிக்கை ஏற்படும், அதன் வழியே ஆர்வத்தை ஏற்படுத்தி காரியத்தை முடிக்கலாம்.

       1966இல் 34 வயதான இளைஞருக்குத் திருமணம் செய்ய முனைந்தபொழுது, அவருக்கு இரு தம்பிகளும், தங்கையும் இருந்ததால், தமக்குத் திருமணம் வேண்டாம், அடுத்தவர்கட்குச் செய்யுங்கள் என்றார். அதை எப்படிச் செய்வது? காரணம் சொல்ல மறுப்பதால் 30 வயதைத் தாண்டிய இரு தம்பிகளும் 25தைக் கடந்த தங்கையும் செய்வதறியாமலிருந்தனர். இவர் ஜாதகத்தை முழுமையாக நம்புபவர். 34இல் சகடை முடிகிறது. எனவே அதன்பின்தான் திருமணமாகும் என்று ஜோஸ்யர் சொல்கிறார். 34ஆம் வயதில் 17 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு எப்படி நல்ல குடும்பம் நடத்த முடியும் என்று குழப்பமடைந்து திருமணம் வேண்டாம் என்றார். அவர் மனதிலுள்ளதை எவரிடமும் சொல்லவில்லை. தம் வீட்டில் 25 வயதைக் கடந்த பெண்ணிருப்பதும் அவர் மனத்தைத் தொடவில்லை. அப்பெண்ணுக்குச் சிறு உடற் குறையிருப்பதால் நாளாகியது என்று வைத்துக் கொண்டார். இவரை வற்புறுத்திய நண்பரிடம் தன் அபிப்பிராயத்தைச் சொன்னார். 17 வயதுப் பெண்ணை ஏன் திருமணம் செய்யவேண்டும்? 30 வயதுப் பெண்ணை பண்ணிக் கொள்ளகூடாதா என கேட்ட நண்பருக்கு, அவருடைய பதில் வேடிக்கையாக இருந்தது. 17 வயதிற்கு மேற்பட்டு பெண் திருமணமாகாமலிருக்காது என்றார்!

       நண்பர் அனுபவசாலி, சகடையை நம்புபவரை அவர் சமீபத்தில் அறிந்த திருமணங்களைச் சுட்டிக்காட்டி பெண்களின் வயதென்ன? என்றார். 17, 18, 19 என்றார் பதிலிறுக்கும் வழியாக. அதெல்லாம் சொல்லும் வயதல்லவா? 30 வயதுப் பெண்ணிருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமல்லவா? என்று கேட்டபின், சிந்தனை விளக்கம் பெற்றது. 25வயதிலும் அதற்கு மேலும் பெண்கள் திருமணத்திற்கு காத்திருக்கிறார்கள் என்ற உண்மை அவருக்குப் புரிந்தது. ஒரே மாதத்தில் 30 வயதுப் பெண்ணை மணந்தார். இது வாழ்க்கை.. கீதை கூறுவது ஆன்மீகம்.

       நாம் எதுவுமாகலாம் என்பதை மனம் அறிந்து கொள்ளாமல், இதெல்லாம் நமக்கில்லை என நம்பிக்கையிழக்கிறது. . கீதை சொல்கிறது. ஸ்ரீ அரவிந்தர் அதற்கு விளக்கம் தருகிறார். விளக்கம் துல்லியமானது. அது மனத்தில் புரிந்தால், நம் நிலை வேறு. புரிந்த பின் ஆர்வம் எழும். செயல் சித்திக்கும். மலையைப் பார்த்து “வா”, எனில் வரும் என்பது விளக்கம். அதற்கு நம்பிக்கை எனப் பெயர். அந்த நம்பிக்கை பூரண யோகத்திற்கு அவசியம். அதைப் பெற மனம் தெளிவுபெறுதல் அவசியம். மனம் பெற்ற தெளிவு, நம்பிக்கை மூலம், ஆர்வத்தை எழுப்பி, காரியத்தைப் பூர்த்தி செய்யும்.

****

694) பிராணனில் இந்த ஞானமிருந்தால் சக்தி பெருகும். அதைச் செயலாற்றும் சக்தியாக மாற்றுவதே நம் கடமை.

பிராணன் ஞானம் பெற்றால், சாதனை எளிது.

       தான் எதுவாக மாற விரும்பினாலும், மாற முடியும் என்ற ஞானத்தை vital (பிராணன்) உயிர் பெற்றிருந்தால், நேரடியாக பெரிய சக்தி உற்பத்தியாகும். சக்தி (energy) உற்பத்தியானால் அதைப் பயன்படுத்தி காரியத்தை முடிப்பது நம் பங்கு.

        வாழ்வில் ஏதோ ஒரு சமயம், சந்தர்ப்ப விசேஷத்தால் இது போன்ற தெளிவு திடீரென ஏற்பட்டு பலிப்பதுண்டு. பெருஞ்செல்வம் பெற்றவர் ஆரம்ப நாளில் தம் வாழ்வில் பெருமாற்றம் ஏற்பட்டது எப்படி என எழுதுவதில் இதுபோன்ற செய்திகளிருப்பதுண்டு.

       ஒரு சிறு தொழிலதிபர் தம் கடந்த கால முயற்சியை மற்றொருவருடன் ஆராய்ச்சி செய்தபொழுது பல சுவையான கருத்துகள் எழுவதைக் கண்டார். அது சமயம், கடந்த நாட்களில் அவர் அதிகபட்சம் இலாபம் பெற்ற வருஷத்தைக் கவனிக்கும்பொழுது, அந்த ஆண்டு தற்செயலாக பாங்குக் கடன், இதர கடன்கள் அடைபட்டிருந்தன. அதைக் கண்டதும் மற்றவர் “பிறர் முதலின்றி, தொழில் நடக்கும்பொழுது, அதிகபட்ச இலாபம் வரும் என்பது சூட்சும விதி” என்றார். இது தொழிலதிபர் மனத்தில்பட்டு, செயல்பட்டு தொழில் 5 மடங்கு பெருக உதவியது.

       அன்னை பக்தர்கள் கூட்டாக ஏற்றவர் நிலையை எய்துவார்கள் என்ற ஞானம் தம் அனுபவத்திலேயே ஏற்கனவே பலித்ததை கண்ணுற்ற ஒருவர், “அப்படியானால் என் கூட்டாளி 100 கோடி வியாபாரம் செய்கிறார், நான் 3 கோடியிலிருக்கிறேன்”, என்று ஆழ்ந்து கருதிய நேரம் இந்த உண்மை அவர் பிராணனைத் தொட்டு அவரும் கூட்டாளி போலானார்.

       செகண்டரி கிரேட் ஆசிரியர்கட்கு எலிமெண்டரி ஸ்கூலிலும் வேலை கிடைக்காத நாளில் பயிற்சியை முடிப்பவரிடம், “நீங்கள் பெறும் வேலை உங்கள் மனநிலையைப் பொறுத்தது” என்றபொழுது, தான் ஹைஸ்கூல் வேலை கிடைக்காவிட்டால், வேலைக்குப் போகப் போவதில்லை என்றார். இவ்வுண்மை மனதைத் தொட்டு பிராணனை எட்டியது. அடுத்த மாதம் உயர்நிலைப் பள்ளியில் வேலைக்குப் போனார்.

       பிராணனை இஞ்ஞானம் தொட்டவுடன், அபரிமிதமான சக்தி பெருகும். சக்தி தானே பலன் தாராது. சக்தியைச் சேகரம் செய்து, முறைப்படுத்தி, நேர்ப்படுத்தி, பலனாக மாற்றுவது நம் கடமை.

       சக்தியை உற்பத்தி செய்வது சிரமம். அதிலிருந்து பலனைப் பெறுவது சிரமமாக இருக்கக்கூடாது.

****

695) உடல் இந்த ஞானத்தைப் பெற்றால் அது உடனே செயல்படும்.

உடல் பெறும் ஞானம் சாதனையாகும்.

      உடல் எளிதில் செயல்படாது, அசையாது, நாம் சொல்வதை காதில் வாங்காது. வாங்கினாலும் தன்னிஷ்டப்படியே நடக்கும். உடல் அதன் கட்டுப்பாட்டிலேயே செயல்படும். நம் கட்டுப்பாட்டிலோ, மனத்தின் ஆதிக்கத்திலோ இயங்குவதில்லை.

     தான் செயல்படத் தயாரான க்ஷணம் உடல் புரிந்து கொள்ளும் என்கிறார் அன்னை. மனம் புரிந்து கொண்டு செயல்பட்டாலும் படும், இல்லாவிட்டாலும் இல்லை. உடலால் புரிந்து கொண்டு செயல்படாமலிருக்க முடியாது. முதலில் ஒரு விஷயத்தை - ஒரு மெஷினை ஓட்டுவது போன்ற விஷயத்தை - கற்றுக் கொண்டபின், உடலால் தாமதிக்கவே முடியாது. உடனே செய்யத் துடிக்கும். மனம் போல் பொறுமையாக இருக்காது.

       பூரண யோகத்தை எவரும் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டவர் செய்ய முன்வரவில்லை. செய்ய முன்வந்தவர்கள் செய்வதில்லை என அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் பேசிய காலத்து பகவான், “மனிதனுக்கு யோகம் என்ன தரும் என்று புரியவில்லை. புரிந்தால் அவனால் தாமதிக்க முடியாது” என்றார்.

       கடையில் ரொக்க வியாபாரம், கடனுக்கு வியாபாரம் உண்டு. கடைச் சரக்கு வாங்குபவர் மொத்த வியாபாரியிடம் கடன் பெறுவது உண்டு. சில்லரை வியாபாரிக்கு இவர் மொத்த வியாபாரியிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதற்கும், இவர் வாடிக்கைக்காரர்களிடம் இருந்து வசூலாவதற்கும் உள்ள தொடர்பைக் காண்பித்தவுடன், மொத்த வியாபாரிக்கு பாக்கி வைப்பதையே அவர் மறந்துவிட்டார். 30 நாள் தவணைக்கு மொத்த வியாபாரி கடன் கொடுத்ததை எந்தச் சில்லரை வியாபாரியும் 20 நாளில், 10 நாளில் கொடுக்க முன்வருவதில்லை. தான் பெற்ற கடனைத் திருப்பிக் கொடுத்தால், தனக்கு வசூல் சுலபமாக ஆகிறது என்று கண்டு கொண்டவுடன், பரம்பரைப் பழக்கத்தை மாற்ற மனிதன் முன் வருகிறான்.                  

        அதற்குரிய சக்தி பிராணனில் எழ, அதற்குரிய ஞானம் தேவை. உடலுக்கு அந்த ஞானம் வந்துவிட்டால் பலன் அன்றே ஏற்படும். எந்த ஞானத்தை உடல் பெற்றாலும், அதற்குரிய பலனை அது உடனே பெறும் தன்மையுடையது.

****

...தொடரும்

 



book | by Dr. Radut