Skip to Content

04.சிறு குறிப்புகள்

சிறு குறிப்புகள்”

தியானம்’

       அன்னை தான் சந்தித்த ஒருவர் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை விளக்குகிறார்.

       ஸ்ரீ அரவிந்தர் தரிசனத்திற்காக ஆசிரமம் ஆரம்பிக்கும் முன் ஒரு பழம்பெரும் தேசபக்தர் வந்தார். இவர் 50 ஆண்டுகட்கு முன் காலமான தமிழ் எழுத்தாளர்.

      “இவர் முகம் நாயின் ஜாடையாக இருக்கிறது” என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியது எவருக்கும் விளங்கவில்லை. அவர் முகம் அது போலில்லை. ஓராண்டு கழித்து அவர் வந்து ஆசிரமத்தில் கொஞ்ச நாள் - சுமார் 1 வருஷம் - தங்கியிருந்தார். அவர் வந்தவுடன் அனைவரும் அவர் முகம் ஸ்ரீ அரவிந்தர் சென்ற ஆண்டு விவரித்தது போலிருந்ததைக் கண்டனர்.


ஓராண்டிற்குப் பின் அவருடைய முகம் எப்படியிருக்கும் என்பது ஸ்ரீ அரவிந்தர் கண்டுள்ளார் என சாதகர்கள் அறிந்தனர்.

அன்னை ஒருவர் முன்பிறவியில் எப்படியிருந்தார் எனக் காண்பதுண்டு.

ஒருவருக்கு புது முகம் தரும் திறன் தியானத்திற்குண்டு.

ஒருவர் முக ஜாடைக்குப் பின் அவருடைய முன்பிறவி ஜாடை, எதிர்காலத்தில் வரும் தோற்றமிருக்கும்.

தியானம் அவற்றை முன்னுக்குக் கொண்டுவரும்.

ஒருவருடைய வாழ்வில் - கடந்தகால, எதிர்கால வாழ்வில் - இல்லாத தோற்றத்தைத் தியானம் தரவல்லது.

       தம் பிறந்த நாளன்று அன்னையை தரிசிக்க வந்த பெண்ணின் முகம் குரங்கு போலிருப்பதைக் கண்டார் அன்னை.          

       “உட்கார், தியானம் செய்வோம்” என்றார்.

       பெண் அமர்ந்து தியானம் முடித்த பொழுது அவர் முகம் அளவுகடந்த அழகும் பொலிவும் பெற்றிருந்தது அன்னைக்கே ஆச்சரியமாக இருந்தது. இவ்வழகு அவர் முகத்தில் பின்னணியிலிருந்தது என்று அன்னை அறிந்தார்.

திவ்வியமான திருமுகம் தரவல்லது தியானம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாம் கண்மூடியாக விழிப்பற்ற நிலையிலிருந்தாலும் ஜீவியம் வளர்ந்தபடியிருக்கிறது. நாம் அறியாத நிலையிலும் பின்னணியில் ஆன்மீக அனுபவங்கள் நிகழும். மேல் மனம் அறியாத நிலையில் சைத்தியப் புருஷன் வளரும். அனுபவம் சேரும், ஜீவியம் மலரும். அவற்றிற்கெல்லாம் ஒரு வரையறை உண்டு. இதுவே பொதுவான அல்லது முடிவான சட்டமாகாது.

விழிப்பற்ற நிலையிலும் ஜீவியம் விழிப்பாக வளரும்.

 

 



book | by Dr. Radut