Skip to Content

08.அன்பர் உரை

அன்பர் உரை”

Nov. 24th, 1926

(சென்னை மாம்பலம் தியான மையத்தில், 24-11-2001இல் திருமதி விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை)

       பூரணயோகம் பலிக்க சத்திய ஜீவியம் புவிக்கு வரவேண்டும். சத்திய ஜீவியத்திற்கு முன் (Overmind) தெய்வீக லோகம் வரவேண்டும் என்பது தத்துவம். 1904ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தர் பூரணச் சுதந்திரம் வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி, 1906ஆம் ஆண்டு அரசியலில் தீவிரமாக இறங்கி, 1910ஆம் ஆண்டு சிறையில் விஸ்வரூபம் தரிசனம் பெற்று அதே ஆண்டு புதுவை வந்தார். அன்னை 1914இல் வந்து பிறகு பிரான்ஸ் திரும்பி 1920இல் மீண்டும் வந்தார். 1926ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி பகவான் ஸ்ரீ அரவிந்தர் அன்று அவருடனிருந்த சாதகர்கள் அனைவரையும் அழைத்தார். யார் யாரைக் கூப்பிடுவது எனக் கேட்டபொழுது ‘அனைவரும்’ என்று பகவான் பதில் கூறினார். ஒருவர் விடாமல் அழைத்து வா என்றார். வந்தவர்களுடன் உட்கார்ந்து தியானம் செய்தார். உடலில் மின்சாரம் பாய்வதைப்போல் சாதகர்கள் உணர்ந்தனர். அன்னையும் பகவானும் ஒளியால் சூழப்பட்டு பிரகாசமாயினர்.

தெய்வீக மனம் அன்று பகவான் உடலில் சித்தித்தது.

       மேல் நோக்கி எழும் தவம் Overmind தெய்வீக லோகத்தை எட்டி, அதை அங்கிருந்து நகர்த்தி பகவான் ஆன்மா, மனம், உணர்வு, உடலில் இறங்கியது. அதை சாதகர்கட்ளிக்க அனைவருடனும் பகவான் தியானம் செய்தார். அடுத்த கட்டமே முடிவான கட்டம். அது 1934இல் பலிக்கும் என்று கூறியிருந்தார். பகவானுக்கு அதுவும் பலித்தது. அது சத்திய ஜீவியம். 1956இல் அது புவியில் இறங்கியது.

       Life Divine இரண்டாம் புத்தகத்தில் இரண்டாம் அத்தியாயத்தில் பிரம்மத்தின் முழுமையை பகவான் எழுதும்பொழுது, பிரம்மம் பிடிபடாதது என்றாலும், அதன் சுவடுகள் தெரியாமலில்லை என்கிறார்.

பிரம்மம் முழுமையானது. முதலில் அதன் முழுமையைக் கண்டவர் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

பகுதியான பிரம்மத்தை ரிஷிகள் சமாதியில் கண்டனர்.

பிரம்மத்திற்கு அடுத்த கட்டம் பிரபஞ்சம்.

1910இல் அலிப்பூர் சிறையில் பகவான் பிரபஞ்சத்தில் பிரம்மத்தைக் கண்டார். அனைவரையும் நாராயணனாகக் கண்டார்.

பிரபஞ்சத்திற்கு அடுத்து மனிதகுலமும், நாம் வாழும் சமூகமும் உள்ளன.

அதற்கடுத்தது குடும்பம்.

முடிவான சிறு உருவம் (individual) மனிதன்.

பிரம்மத்தை 20 அல்லது 30 வகைகளாக ரிஷிகள் வர்ணிக்கின்றனர். அவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் பிரம்மம் தெரியலாம் என்கிறார்.

சர்வம் பிரம்மம்.

மனிதன் பிரம்மம்.

தெய்வம் பிரம்மம்.

காலம் பிரம்மம்.

ஜடம் பிரம்மம்.

ஆனந்தம் பிரம்மம்.

செயல்கள் பிரம்மம்.

எண்ணம் பிரம்மம்.

உயிருள்ளவற்றில் உணர்வாக இருப்பது பிரம்மம்.

உயிரற்றவற்றில் உயிராக இருப்பது பிரம்மம்.

என்பன போன்ற கருத்துகளை மனதில் ஏற்று, மனத்தைக் கடந்த சத்திய ஜீவியத்தில் அவற்றை உணர்ந்தால், பிரம்மத்தை உணர முடியும் என்கிறார் பகவான். பிரம்மத்தை சமூகத்திற்கு ஒப்பிடலாம்.

       நாம் நம்மை அறிவோம். சமூகம், நாலு பேர் என்றால் அது கண்ணில் படுவதில்லை. கருத்தில் படும். சமூகமே சர்க்காரை ஏற்படுத்தியது. சர்க்கார், இராணுவத்தை ஏற்படுத்தியது, பல்கலைக்கழகங்களை நிறுவியது, போக்குவரத்தை நடத்துகிறது. நாட்டிலுள்ள அத்தனை ஸ்தாபனங்களும் சர்க்காரே, சமூகமே என்றாலும், சமூகம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

       கடையில் போய் தேங்காய் எண்ணெய் வாங்கினாலும், வேட்டி எடுத்தாலும் நமக்கு அவை தெரிகின்றன. அவை எங்கிருந்து வருகின்றன? யார் தேங்காயை எண்ணெயாக்கியது, வேட்டி எந்த ஊரில் நெய்யப்பட்டது என்பது நாமறியலாம் என்றாலும், நாம் அறிய முயல்வதில்லை. வேட்டியும், சோப்பும், கம்ப்யூட்டரும் நமக்குப் பொருள்கள். அவை செய்யப்பட்ட இடங்களை அறிய விரும்பினால் அறியலாம். செய்யப்பட்ட வகையை அறிய விரும்பினால் முயன்று அறியலாம். அவை சமூகத்தின் சுவடுகள். அச்சுவடுகள் தெரிந்தால் ஏன் இப்பொருள்கள் நமக்குக் கிடைக்கின்றன என்ற கேள்வி எழுந்தால், அதற்கு இருவகைகளாகப் பதிலுண்டு.

1. இலாபத்திற்காக விற்கிறார்கள்.

2. சேவைக்காக வருகின்றன.

நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அப்படிப்பட்ட பலன் நமக்குண்டு.

       பொருள்களின் மூலத்தை அனைவரும் அறியலாம். சிலர் அதனால் பயன்பட முடியும். வியாபாரரீதியாகவும், உற்பத்தி செய்வதால் தொழில் அளவிலும் பலன் உண்டு. இந்த ஞானம் ஒருவரை உயர்த்தும். வானளாவும் உயர்த்தவல்லது. அது அவர்கள் முயற்சியைப் பொருத்தது.

       தனி மனிதன் சுயநலமாக இருந்தால் தன்னை அறிகிறான். சுயநலம் குறைவானால், குடும்பத்தைத் தானாக உணர்ந்து சேவை செய்கிறான். குடும்பத்திலிருந்து ஊரும், உறவும், நாடும், சமூகமாக உயருகின்றன.

சமூகத்தைத் தனக்கு அடுத்த கட்டமாக அறிய உதவுவது படிப்பு; வெறும் படிப்பு உதவாது. மனம் விரிந்து பண்பால் சிறந்தால் படிப்பு மனிதனை உயர்த்தும். சமூகத்தை மனிதன் உணர்வான்.

அலிப்பூர் ஜெயிலில் அனைவரையும் ஸ்ரீ அரவிந்தர் நாராயணனாகக் கண்டது பிரபஞ்சத் தரிசனம்.

இது பூரண யோகச் சித்திக்கு முன்படி.

முடிவான கட்டம் அற்புதம் எனப்படும் சத்திய ஜீவியக் காட்சி. உலகில் நடப்பவை எல்லாம் நாயகன் செயலென மனம் கண்டு துள்ளும் அற்புதம் அது.

       முரண்பாட்டை உடன்பாடாக ஏற்கும் மனம், இப்பாதையில் அடியெடுத்து வைக்கின்றது. மருமகளை மகளாக நடத்தும் மனத்திற்கு இப்பக்குவம் உண்டு. உடல் ஊனமுற்றவர் நிறையைக் குறையாகத் தாங்கி நிலத்தில் நடப்பவர், அவர் திருவுருமாற்றத்தை ஏற்றால் மற்றவரைவிட உயர்ந்து நிற்பார் என்ற கருத்து பிரம்மத்தை உலகில் காணும் கருத்தாகும்.

       நம் வாழ்வு (Becoming) காலத்திற்கும் கர்மத்திற்கும் கட்டுப்பட்டது. தவம் (Being) காலத்தையும், கர்மத்தையும் கடந்து வாழ்வை விட்டு விலகியது. அன்னை வாழ்வு, யோக வாழ்வு, உயர்ந்த வாழ்வு என்பவை (Being of the Becoming) துறவறத்தின் தூய்மையுடன் நடத்தப்படும் இல்லறம். அந்த வாழ்வின் சுவடுகள் ஆயிரமாயிரம். ‘யோக வாழ்க்கை’ என்ற நூலில் 2000 எழுதப்பட்டுள்ளது.

       Life Divineஇல் இந்த அத்தியாயம் பிரம்மத்தின் சுவடுகளை 15 அல்லது 20 வகைகளாக விவரிக்கின்றது. அவற்றை மனத்தில் ஏற்றால் பிரம்மம் ஆன்மாவுக்குத் தட்டுப்பட்டு பிரம்ம ஞானம் சித்திக்க வழி செய்யும்.

 

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நல்ல செய்தி, கெட்ட செய்தி பரவும் வேகத்தில் பரவ ஆரம்பித்தால், சமூக உணர்வு மனத்தில் பரிணாம வளர்ச்சியை நாடும்.

சமூகம் தனக்குரிய செய்தியை விரைவாகப் பரப்பும்.

 

 



book | by Dr. Radut