Skip to Content

09.Pride and Prejudiceஇல் Life Divineஇன் தத்துவங்கள்

 Pride and Prejudiceஇல் Life Divineஇன் தத்துவங்கள்  

       Life Divine என்பது வாழ்வில் இறைவன் வெளிப்படுவது. வாழ்வில் எல்லா இடங்களிலும் தவறாமல் இறைவன் வெளிப்படுகிறான் என்பதே தத்துவம். வெளிப்படுவது இறைவனே என்று அவர் கூறுவதால் எல்லா வாழ்வின் நிகழ்ச்சிகளிலும் - நல்லது, கெட்டது - இறைவன் வெளிப்படுகிறான். அதனால் Life Divine தத்துவங்களை எல்லா இடங்களிலும் சொல்லமுடியும். விக்ரமாதித்தன் கதை, தென்னாலிராமன் கதை, கிராமத்துக் கதைகள், புராணங்கள், இன்றைய பத்திரிகையில் வெளிவரும் இலக்கியங்கள், இலக்கியங்களில் இருந்து அமர காவியங்கள் உள்பட Life Divineஐ விளக்க உதவும்.

       200 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் ஜேன் ஆஸ்டின் என்ற திருமணம் ஆகாத பெண்மணி எழுதிய கதை Pride and Prejudice. இந்தக் கதை வாசகர்கள் அறிந்தது. Mr. பென்னட்டினுடைய ஐந்து பெண்கள், டார்சி, பிங்கிலி, விக்காம் ஆகியவர்களைச் சந்தித்துத் திருமணம் செய்து கொண்ட வரலாறு இக்கதை. இந்தக் குடும்பம் வசதியான சிறு ஜமீன்தார் குடும்பம். Mr. பென்னட்டிற்கு 2000 பவுன் வருஷ வருமானம். அழகிற்கு பேர் போன ஒரு பெண்ணைத் தன் அந்தஸ்திற்குத் தகுதி இல்லாமல் போனாலும் திருமணம் செய்து கொண்டார். அவள் ஒரு வக்கீல் மகள். வக்கீல், டாக்டர் ஆகியவர்கள் அந்தக் காலத்தில் அந்த நாட்டில் நாகரீகம் இல்லாதவர்கள், வசதி இல்லாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள்.. Mrs. பென்னட்டிற்கு பழக்கம் பத்தாது என்பது திருணம் ஆன பிறகுதான் அவருக்குத் தெரிந்தது. எந்தச் சொற்களைக் கேட்க அவர் கூச்சப்படுவாரோ அதே சொற்களை அவள் பெருமையாகப் பேசுகிறாள். மனைவியைக் கடிந்து கொள்ளும் வழக்கம் அந்த நாட்டில் இல்லை என்பதால் மனைவியிடம் இனிமையாகப் பேசுவது மட்டும் அவர் வழக்கம். அதனால் தன்னுடைய அபிப்பிராயங்களை அதாவது அபிப்பிராய பேதங்களை அவர் அழகான சொற்களில் சொல்வது படிப்பும், பண்பும் இல்லாத பெண்ணிற்குப் புரியவில்லை. அதனால் அவள் தன்னிஷ்டப்படியே வாழ்க்கையை நடத்தினாள். அவர்களுடைய எஸ்டேட் ஆண் வாரிசு இருந்தால் தான் அவர்களுக்கு உபயோகப்படும். ஐந்து அழகான பெண்கள் பிறந்தனர். ஆண் வாரிசு இல்லை. முதற்பெண் அழகி எனப் பெயர் எடுத்தவள். அவள் பெயர் ஜேன். அடுத்தவள் அழகைவிட புத்திசாலி. அவள் பெயர் எலிசபெத். பெரிய பெண் சாது. அடுத்தவள் கலகலப்பாக இருப்பாள். அடுத்த மூன்று பெண்களும் மேரி, கிட்டி, லிடியா என்று பெயர் உடையவர்கள். லிடியா தாயாருக்குச் செல்லம். எலிசபெத் தகப்பனாருக்குப் பிடித்த பெண். மேரி அழகில்லாத பெண். இந்தக் குடும்பம் எப்பொழுதும் சந்தோஷமாக, கலகலப்பாக, குதூகலமாக, ஆரவாரமாக இருக்கும். பெண்களுக்குச் சொத்து இல்லை. தலைக்கு 50 பவுன் வருமானம் உண்டு. 23 வயதாகியும் பெரியவளுக்குக் கல்யாணம் ஆகவில்லை. கல்யாணம் ஆகவில்லை என்ற விசாரம் யாருக்கும் இல்லை. தாயாருக்கு மட்டும் பெண்களின் கல்யாணமே இலட்சியம். பெண்களே கணவரைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற பழக்கம் இருப்பதால் பெற்றோருக்குச் செய்யக்கூடியது அதிகமாக இல்லை.

       முரண்பாடு உடன்பாடு என்பது Life Divine-இன் கருத்து. இக்கதையின் ஆரம்பமே கதாநாயகன் டார்சி கதாநாயகி எலிசபெத்தை அழகற்றவள் என்று பேசுவது அவள் காதில் விழுந்து வெறுப்பான முரண்பாட்டில் ஆரம்பிக்கிறது. டார்சிக்கு எலிசபெத்தினுடைய குடும்பம் மிக மட்டமானது என்று ஆரம்பத்திலேயே தெரிந்து அக்குடும்பத்தின் மேல் வெறுப்பு ஏற்படுகிறது. அவன் பார்த்த பழக்க வழக்கங்களுக்கு எலிசபெத் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் வெகு மட்டமானவை. அதனால் வெறுப்பு ஏற்பட்டது. அந்த வெறுப்பை மீறி அவள் மீது பிரியம் ஏற்பட்டது. அவளுக்கு இவனுடைய பிரியம் தெரியவில்லை வெறுப்பு தெரிந்தது. கதையின் முடிவில் வெறுப்பான பிரியம் தான், தணியாத காதலாகி, தகுதிக்கு மீறிய வரனாக அவனை நாடி வந்து காத்திருந்து, அவள் மனம் இனிக்கப் பழகி அவளே வெட்கப்படும் அளவிற்குத் தன்னை மாற்றிக் கொண்டு தன்னை மணந்து கொள்வாளா என்று கேட்டுக் கொள்கின்றான். முரண்பாடு உடன்பாடு ஆகிறது. இது மாறிய வகை:

அளவு கடந்த டார்சியின் வெறுப்பு எலிசபெத்துடன் டான்சாட மறுத்தது.

டார்சி அவளை மனம் மாறி டான்ஸ் ஆடக் கேட்டபோது அவள் மறுத்தது.

எல்லா நடனங்களிலும் டார்சி அவளையே கவனித்ததை ஷார்லோட் தெரிந்து எலிசபெத்திடம் சொல்லியபோதும் எலிசபெத் அதை அறியாதது.

தறுதலையான விக்காம் டார்சி மீது அபாண்டமாகப் பழி கூறியபோது எலிசபெத் பழியை நம்பி மனத்தைப் பறி கொடுத்தது.

பிங்லி ஜேனைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதை டார்சி முயன்று தடுத்தது.

அதைத் தடுக்க வேண்டி லண்டனில் ஜேன் இருப்பதை பிங்லியிடம் மறைத்தது.

ஷார்லோட் வீட்டில் எலிசபெத் இருப்பது தெரிந்து தன் வழக்கத்திற்கு மாறாக அவளை வந்து சந்தித்தது.

அவள் குடும்பத்தின் நிலையை மீறி தான் அவளை விரும்பித் திருமணம் செய்துகொள்ளக் கேட்டது.

ஜேனுடைய திருமணத்தைத் தடுத்ததும், விக்காமுடைய வாழ்க்கையைப் பாழாக்கியதும், மன்னிக்க முடியாத குற்றம், என்று எலிசபெத் குற்றம் சாட்டி உள்ளாள்.

ஒரு குற்றத்தை ஏற்றுக்கொண்டு மற்றொரு குற்றத்திற்குப் பதில் அளித்தது.

அவனுடைய சொற்கள் மனதை உறுத்தினாலும் அதிலுள்ள உண்மையை மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டு மனம் மாறி எலிசபெத் வெட்கப்பட ஆரம்பித்தது. இது அவளுக்கு ஏற்பட்ட திருஉரு மாற்றத்தின் ஆரம்பம்.

அத்தையுடன் எலிசபெத் பிம்பர்லியைப் பார்த்து மனம் மாறியது.

லிடியா ஓடிப் போனது.

லிடியாவிற்கு டார்சி உதவி செய்தது.

டார்சியும் பிங்லியும் இவர்கள் வீட்டிற்கு வந்தது.

பிங்லி ஜேன் திருமண ஏற்பாடு ஆனது.

லேடி கேதரின் எலிசபெத்தைத் திட்டியது.

லேடி கேதரின் மூலம் டார்சி எலிசபெத் மனதை அறிந்தது.

அவளுடைய நன்றியறிதலை ஏற்றுத் திருமணம் பூர்த்தியானது. .

       சொல், செயல், எண்ணம் ஆகியவற்றுள் இவர்கள் இருவரிடையே இருந்த முரண்பாடு கதையில் அதிகபட்ச முரண்பாடு. இது ஒரு சச்சரவு மூலம் அறிவு விழித்து எழுந்து தன்னிலையை உணர்ந்து தன்னிலையை விட்டுக் கொடுக்கும் மனநிலை - சரணாகதி - இருவருக்கும் ஏற்பட்டு அதன் மூலம் மனம் திருஉருமாறியதால் சூழ்நிலை மாறி சாதகமாக உருவாகி மீண்டும் வெடித்து எழுந்து இரு பெரிய நல்ல முடிவுகள் ஆயின. முரண்பாடு உடன்பாடு ஆக வேண்டும் என்ற ஸ்ரீ அரவிந்தரின் கொள்கைக்கு இது முழுவதும் பொருத்தமான உதாரணம்.

         உடலின் அசைவுகளால் ஏற்படும் உணர்வுகளை மனத்திற்குத் தாங்கிச் சென்று எண்ணமாக மாற்றி அந்த எண்ணத்திற்கு உடலைச் கட்டுப்படுத்துவது வாழ்வின் செயல் என்பது 19வது அத்தியாயமான “வாழ்வு” என்ற அத்தியாயத்தின் மையக் கருத்து. பூரணயோகத்தில் பரிணாமம் என்பது உடல், வாழ்வு, மனம் ஆகிய மேல் நிலைகளை அடைவது. அத்துடன் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அந்த நிலையின் சக்தி அதன் கீழே உள்ள எல்லா நிலைகளையும் நிரப்புவது. உடல் பரிணாமத்தால் முதல் நிலையில் வாழ்வாகிறது, பிறகு மனமாகிறது. அதேபோல் தொடர்ந்து சத்திய ஜீவியத்திற்குப் போகிறது. அப்படி போகும்போது வாழ்விற்குப் போனவுடன் வாழ்வின் சக்தி உடலில் இறங்கி வந்து நிரப்பும். அதுபோல் மனத்திற்குப் போய் மனத்தின் ஆட்சிக்கு உடல் வருவது 19வது அத்தியாயத்தில் கூறப்படுவது.

       இக்கதையில் உடலாக இருப்பது லிடியா. உணர்வாக இருப்பது எலிசபெத், பொய்யான உணர்வாக இருப்பது விக்காம். மனமாக இருப்பது டார்சி. உடலான லிடியா கட்டுக்கடங்காமல் செயல்படுகிறாள். விக்காமைத் தன்னுடன் ஓடிவரும்படி வற்புறுத்துகிறாள். விக்காமிற்குத் தன்னைத் திருமணம் செய்ய அபிப்பிராயம் இல்லை என்றோ, திருமணமே செய்து கொள்ளும் அபிப்பிராயம் இல்லை என்றோ அவளுக்குத் தெரியாது. இளமையின் வேகத்தால் அவள் செயல்படுகிறாள். அவனுடன் போய் மறைவான இடத்தில் இருக்கிறாள். இந்தச் செய்தி ஜேன் மூலம் லேம்டனில் இருக்கும் எலிபெத்திற்குப் போகிறது. எரிமலையாய் வெடிக்கிறாள். உணர்ச்சி கொந்தளிக்கிறது. உணர்ச்சி செய்யக் கூடியது ஒன்றும் இல்லை. அந்த நேரம் டார்சி அவளைத் தேடி வருகிறான். உடலின் செயலை உணர்ச்சி மனத்திற்கு கொண்டு போகும் வாயிலாக எலிசபெத் டார்சியிடம் இந்தச் செய்தியைக் கூறுகிறாள். எண்ணம் செயல்படுகிறது, முயன்று உடலைக் கண்டுபிடித்துவிட்டது. லிடியாவை கார்டினர் வீட்டிற்கு வரும்படி டார்சி அழைக்கிறான். அவள் மறுத்துவிடுகிறாள். டார்சி விக்காமைச் சந்தித்து விபரம் கேட்கிறான். அவ்வளவும் லிடியாவின் செயல் என்று புரிந்து கொள்கிறான். விக்காம் அமெரிக்கா போவதாகவும் அங்கு யாராவது பணக்காரியைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அவன் நினைப்பதை டார்சி அறிகிறான். தன்னெண்ணத்தின் வலிமையால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று வற்புறுத்தி விக்காம் கடன்களை அடைத்து அவனுக்கு ஒரு புது வேலை வாங்கிக் கொடுத்துத் தானே அருகில் இருந்து டார்சி திருமணத்தை முடிக்கிறான். இது உடல், அறிவுக்குக் கட்டுப்படுவது ஆகும். அதைச் செய்தது உணர்ச்சி.

       ஒன்பதாவது அத்தியாயத்தில் சமுத்திரத்திற்கு நாம் முக்கியம்.. நமக்கு சமுத்திரம் முக்கியம் இல்லை. நாம் சமுத்திரத்தின் பகுதி என்று அறிந்து சமுத்திரத்திடம் நம் வாழ்வை நடத்தச் சொன்னால் நம் வாழ்வு அளவு கடந்து உயரும் என்ற கருத்து உள்ளது. இந்தக் கருத்து கதையில் எப்படி வருகிறது என்பதைக் காண்போம்.

அகந்தை நிறைந்த பார்வைக்கு சமுத்திரம் கண்ணுக்குத் தெரியாதது போல் எலிசபெத்திற்கு அவள் எந்த சமுத்திரத்தின் பகுதியோ அது தெரியவில்லை. புதியதாக நாட்டில் உருவாகும் சமுதாயத்தின் பிரதிநிதி எலிசபெத். ஓர் 20ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸில் புரட்சி நடந்து செல்வர்கள் தலை சீவப்பட்டது. பொதுமக்கள் ஆட்சிக்கு வந்தனர். அரசபீடம் அழிக்கப்பட்டது. அது இங்கிலாந்தில் நடக்க வேண்டிய காலம் இக்கதை எழுதப்பட்ட நேரம். நாட்டில் பெருமாறுதல்கள் ஏற்பட்டால் புரட்சி தவிர்க்கப்பட முடியும் என்று இங்கிலாந்து உணர்ந்த நேரம். அந்த மாறுதல்கள் பலவேறு வகைகளாக வரலாம். அவற்றுள் ஒன்று உயர்ந்த செல்வர் சாதாரண மக்களிடையே இறங்கி வந்து சம்பந்தம் செய்வது. உண்மையில் இங்கிலாந்தில் வெற்றிகரமாக இதுபோன்ற பல மாறுதல்கள் ஏற்பட்டதால் பிரான்ஸில் நடந்த புரட்சி இங்கிலாந்திற்கு வரவில்லை. எழுந்து வரும் புதுச் சமுதாயத்தின் பிரதிநிதியாகவும், தலைவியாகவும் தன் குண விசேஷத்தால் எலிசபெத் விளங்குகிறாள். அவளுக்குச் சட்டத்தைவிட நியாயம் முக்கியம். தோற்றத்தை விட விஷயம் முக்கியம். திருமணத்தைவிட அன்பு முக்கியம். இதுவே அவள் கண்கள் பளிச்சென்று இருப்பதற்குக் காரணம். காலின்ஸை அவள் திருமணம் செய்து கொண்டு இருந்திருந்தால் இவளுக்குத் திருமணப் பிரச்சினையும், குடும்பத்திற்குப் பணப் பிரச்சினையும் தீர்ந்து இருக்கும். அதை அவள் அரை க்ஷணம் கூட அனுமதிக்கவில்லை. இதுவே டார்சியைக் கவரும் பார்வை. டார்சிக்கு அவள் மீது ஏற்பட்ட பிரியம் மூலமாக நாட்டில் புரட்சியின் வேகம் வெளிவருகிறது. அவனைப் போன்ற செல்வர்கள் சுயநலமாகவும், கர்வமாகவும் இருந்ததால் பிரான்ஸில் புரட்சி ஏற்பட்டது. அவனுடைய சுயநலத்தையும் கர்வத்தையும் அழிக்க வந்தவள் எலிசபெத். தன்னுடன் நடனமாட மறுத்து அலட்சியம் செய்ததை அவள் லட்சியப் படுத்தவில்லை. அதனால் மனம் புண்படவில்லை. அந்தஸ்துள்ளவன் தன்னை ஏற்கவில்லை என்பது அவளுக்கு ஒரு பொருட்டன்று. அவனை உள்ளிருந்து உந்துவது காதல் என்று சொல்வதைவிட, நாட்டின் மறுமலர்ச்சியின் வேகம் என்று சொல்லலாம். செல்வரின் பிரதிநிதியான அவன் அவளை ஏற்கத் தயாராக இருக்கிறான். அவளுடைய சமுத்திரம் டார்சி. சமுத்திரம் அவளை ஏற்று அவள் வாழ்க்கையை நடத்தத் தயாராக இருக்கிறது. அவளுக்கு சமுத்திரம் கண்ணுக்குத் தெரியவில்லை. விலகுவதே அவள் கொள்கை. சமுத்திரமே அவளைத் தேடி வந்து ஆட்கொள்கிறது. இது ஒன்பதாவது அத்தியாயத்தின் கருத்து.

பெறுதல் பல வகையானவை. சிறிய மனிதர்கள் ஆசைபட்டுக் கேட்டுப் பெறுவது உண்டு. கேட்டுக் கிடைக்காமல் போவதும் உண்டு. கேட்டுக் கிடைத்தால் சிறியதாக இருக்கும். கேட்காமல் கிடைப்பது பெரியதாக இருக்கும். பெறுவதைவிடக் கொடுப்பது நல்லது என்பது நம்முடைய கொள்கை. ஆனால் நம் மனத்தைக் கலந்து ஆலோசனை செய்தால் கொடுப்பது பெறுவதைவிட எளிது. நல்ல மனதோடு கொடுப்பது சுலபம். பொருள் கிடைப்பது லாபம் என்றால் பெறுவது முடியும். கொடுப்பவர் மனம் இனிக்க பெறுவது மனம் உவந்துக் கொடுப்பதைவிட அரிது. அது எலிசபெத் விஷயத்தில் இல்லை. எலிசபெத் குடும்பத்தில் யாருக்குமே இல்லை. டார்சி அவர்களுக்குக் கொடுத்தது மூன்று பெரிய திருமணங்கள் என்பதைவிட அவலத்தைப் போக்கி அளவு கடந்த அந்தஸ்தைக் கொடுத்தான் என்பது பொருந்தும். எல்லா விபரங்களும் தெரிந்த பிறகு எலிசபெத் டார்சி பேசாததற்குக் கோபப்பட்டாள். குடும்பத்தில் அனைவருக்கும் எல்லா விபரங்களும் தெரிந்தபிறகு எல்லோரும் பெற்றதைப் பாராட்டினார்கள். கொடுத்தவனை பாராட்டவில்லை.

       இரண்டாம் மூன்றாம் அத்தியாயங்களில் ஜடமும் ஆன்மாவும் ஒன்று, ஆன்மாவும் ஜடமும் ஒன்று என்று கூறியவர் ஸ்ரீ அரவிந்தர். நான்காம் அத்தியாயத்தில் இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்று கூறுகிறார். சத்திலிருந்து காலை எடுக்காமல் அசத்திற்குப் போனால் சத்தும், அசத்தும் பிரம்மத்தில் ஒன்று சேரும் என்று கூறுகிறார். இக்கதையில் விக்காம் வேண்டும், டார்சி வேண்டாம் என்பது எலிசபெத்தின் நிலை. டார்சி வேண்டும், ஜேன் வேண்டாம் என்பது கரோலின் நிலை. டார்சிக்கு எலிசபெத் வேண்டும் என்பது அவனின் மனநிலை. அது பூகம்பத்தைக் கிளப்புகிறது. டார்சி தன் நிலையை விட்டுக் கொடுக்காமல் எலிசபெத்தைத் திருமணம் செய்து கொள்ள முயன்றது வாக்குவாதத்தை எழுப்புகிறது. அவன் தன்னுடைய கர்வத்தை விட்டுக் கொடுத்து அவளை ஏற்க முயன்றபொழுது நடந்தவை இரண்டு.
 

1.மூன்று பெரிய திருமணங்கள் எலிசபெத் வீட்டில் நடந்தது.

2. இங்கிலாந்தில் புரட்சியைத் தவிர்க்கும் பாதையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

       இரண்டு, மூன்று, நான்காம் அத்தியாயங்களின் கருத்தை இந்த நிகழ்ச்சி விளக்குகிறது.

      25ஆம் அத்தியாயத்தில் உடல் இருளால் ஆனது, அதைச் சுலபமாக விட்டுக் கொடுக்காது. அதன் பிடிவாதத்திற்கு மேல் அதிகப்பட்ட உறுதியோடு ஒளி செயல்பட்டால் அதை மீற முடியும் என்ற கருத்து உள்ளது. முதன் முதலில் எலிசபெத் தன்னை அலட்சியமாக டார்சி பேசுவதைக் கேட்டாள். அந்த மாதிரி அலட்சியமாகப் பேசுவதற்குக் காரணமே அவள்மீது அவனுக்கு ஏற்பட்ட பிரியம் என்று அவளுக்குத் தெரியாது. அவனுக்கேத் தெரியாத விஷயம் அவளுக்குத் தெரியாததில் ஆச்சர்யம் இல்லை. அடுத்த டான்சில் அவன் மனம் மாறி யாருடனும் டான்ஸ் ஆடாதவன் இவளோடு டான்ஸ் ஆடப் பிரியப்படுவதை ஷார்லோட் புரிந்து கொண்டாள். எலிசபெத்திற்குப் புரியவில்லை. டார்சி மீது பிரியமுள்ள கரோலினுக்கும் புரிகிறது, வேறு எவருக்கும் புரியவில்லை. அடுத்த டான்சில் டார்சியை அவள் கரித்து கொட்டிக் கொண்டு இருக்கும் பொழுது தன்னுடன் டான்ஸ் ஆட அழைக்கிறான். நிதானம் இல்லாத நிலையில் ஏற்றுக் கொள்கிறாள். டான்சில் அவனை வேண்டும் என்றே வம்பிற்கு இழுக்கிறாள். ஏன் இவற்றையெல்லாம் செய்கிறாய் என்று அவன் கேட்ட பிறகும் அவன் தனக்கு வேண்டியது இல்லை என்ற பாணியில் பதில் சொல்கிறாள். நாளுக்கு நாள் அவள் வெறுப்பு அதிகமாகிறது. அவனுடைய ஆசையின் கவனமும் அதிகப்படுகிறது. ஷார்லோட் வீட்டிற்கு வந்து அவளைச் சந்திக்கிறான். அவன் எனக்காக வரவில்லை உனக்காகத்தான் வருகிறான் என்று ஷார்லோட் கூறுகிறாள். பெண்கள் சொந்த ஊரிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எலிசபெத்தின் அபிப்பிராயத்தைக் கேட்டு டார்சி தூரத்தில் நீ திருமணம் செய்து கொள்ளமாட்டாயா? என்று கேட்கிறான். அப்பொழுதும் அவனுக்கு அவள் மீது உள்ள ஆசை அவளுக்கு விளங்கவில்லை. லேடி காதரின் வீட்டில் தன்னையே டார்சி பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து ஏன் என்னையே உற்றுப் பார்க்கிறான் என்று கேட்கிறாளே தவிர அவன் ஆசை புரியவில்லை. மீண்டும் அவனைச் சீண்டுகிறாள். அவன் மீது இவளுக்கு உள்ள குறைகளைக் கர்னலிடம் சொல்கிறாள். உன்னைப் பார்த்தவர்கள் எந்தக் குறையும் காண முடியாது என்று டார்சி சொல்கிறான். கர்னலிடம் டார்சி தன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லி இருப்பதையும் அறிகிறாள். அவன் மனம் அறியவில்லை. அவளிடம் நேரே வந்து தணியாத வேகத்தைக் கூறுகிறான். ஜேன் திருமணம், விக்காம் சொன்னது, டார்சி திட்டுவது தெரிகிறதே தவிர அவனுடைய பிரியம் அவளுக்குத் தெரியவில்லை. இருள் தன்னை வலியுறுத்துகிறது. டார்சி ஒளியாக மேலும் வலியுறுத்துகிறான். அவள் திட்டியதால் விலகவில்லை. தான் சரி என்று விளக்க முயல்கிறான். கடிதத்தைப் படித்துவிட்டு அவனைத் திட்டுகிறாள். பிம்பர்லியில் சந்தித்து அவன் பணிவாக அவளிடம் பழகுமுன் அவனைப் பற்றி எல்லா நல்ல விஷயங்களையும் கேள்விப்படுகிறாள். அதைக் கேட்டு அவளது அத்தை எலிசபெத்திடம் பேசும்பொழுது, எலிசபெத் மனம் மாறவில்லை. நாம் ஏமாறக் கூடாது என்று கூறுகிறாள். வெளியில் வந்தபிறகு டார்சி அன்பாக மரியாதையாகப் பழகி ஆர்வமாக வழி அனுப்பி ஹோட்டலில் வந்து சந்திப்பதாகக் கூறுகிறான். தங்கையையும் பிங்லியையும் அழைத்து வருகிறான். பிம்பர்லிக்கு அழைப்புக் கொடுக்கிறான். அவள் கடுமையைக் குறைத்தாளே தவிர மனம் மாறவில்லை. லிடியா ஓடிப் போன செய்தி கேட்டு மரியாதையைக் கடந்து பிரியமாகப் பழகுகிறான். போகும் போது ஏக்கமாகத் திரும்பிப் பார்க்கிறான். அவள் மனம் அசையவில்லை. லிடியாவிற்குத் திருமணம் ஆனபிறகு இந்த விஷயத்தை டார்சியிடம் மறைத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. மனம் அன்னியமாகவே நினைக்கிறது. இவ்வளவும் செய்தது டார்சி என்று அறிந்த பிறகு வெட்கம் பீரிட்டுக் கொண்டு வருகிறது, நன்றியும் எழுகிறது. அவனை நினைத்துப் பெருமைப்படுகிறாள். ஆனால் பிரியம் வரவில்லை. அவன் பேசவில்லை என்று கோபப்படுகிறாள். பிங்லி திருமணம் முடிவான பிறகு அவன் வருவதும், அவன் நேரடியாக அவளைக் கேட்ட பிறகு நன்றிப் பெருக்கால் ஏற்றுக் கொள்கிறாள். கடைசிவரை அவன் மீது அவளுக்குப் பிரியம் என்று எழவில்லை. அவனே அவனுடைய முயற்சியினால் அவளை விடாப்பிடியாகத் தொடர்ந்து அவளுடைய விருப்பு எதிர்ப்பை மீறி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். இது ஒளி இருளை வற்புறுத்தி வெல்வதாகும். டார்சி தன்னை விரும்புகிறான் என்று தெரிந்த பின்னும் அவள் மனம் அவனை நாடவில்லை. கடைசி முறை வீட்டிற்கு வந்தபோது அவன் பேசவில்லை என்றுதான் குறைபட்டுக் கொள்கிறாள். உணர்ச்சி மேலீட்டால் அவனுக்கு பேச்சு வரவில்லை என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளுக்கு உணர்ச்சி இல்லாததால் பேச்சு வந்தது. தன் குறை தெரியாமல் அவனுக்கு இல்லாத குறையை இருப்பதாகக் கருதுகிறாள்.

       பிரம்மம் என்பதை ஆங்கிலத்தில் Absolute என்று சொல்கிறார்கள். ஒருவன் புத்திசாலி என்றால் ஓரளவிற்குப் புத்திசாலியாக இருப்பான். எல்லா விஷயங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் புத்திசாலியாக இருப்பது இல்லை. அது நடைமுறையில் இல்லை. அப்படி இருந்தால் அதை Absolute intelligence என்று சொல்வார்கள். அழகு என்பது பல அம்சங்களில் இருக்கும். எல்லா அம்சங்களிலும் இருக்கா. எல்லா அம்சங்களிலும் ஒருவர் அழகாக இருந்தால் அதை absolute beauty என்பார்கள். அரவிந்தர் perfect perfection என்பதை உபயோகப்படுத்துகிறார். இலக்கியங்களில், சரித்திர நிகழ்ச்சிகளில் நாம் absolute courage, absolute loyalty, absolute truthfulness ஆகியவற்றை பற்றிக் கேள்விப்படுகிறோம். . Friendship, love, work போன்றவை absolute ஆக வேண்டுமானால் அதற்கு Absolute ஸ்பர்சிக்க வேண்டும். பிரம்மம் ஒரு விஷயத்தைத் தீண்டினால் அது absolute அறிவாகும். பிரம்மத்தை வழிபடுபவன் திறமை பெற விரும்பினால் அவனுக்கு பிரம்மத்தின் திறமை வரும். அது absolute skill ஆகும்.

எந்த விஷயம் பிரம்மத்தை எட்டுகிறதோ

அதற்கு பிரம்மத்தின் சிறப்பு வந்துவிடும்.

Absolute perfection பிரம்மத்தின் சிறப்பு வர

சத்தியம் மனதில் முழுமையாக

இருக்க வேண்டும்.

       இந்தக் கதையில் திருமணமே மையக் கருத்து. திருமணம் முக்கியம், பிரியம் அதற்கு ஒரு வழி. திருமணத்திற்காக பிரியம், பிரியத்திற்காகத் திருமணம் என்பது கதையின் போக்கு. டார்சிக்கு அவள் மீது ஏற்படும் பிரியம் absolute love. சிறப்பான காதல். அவளுடைய மறுப்போ, வெறுப்போ, எதிர்ப்போ, வசவோ அவனுடைய பிரியத்தைக் குறைக்கவில்லை. அதிகப்படுத்துகிறது. டார்சியின் காதல் பிரம்மத்தால் தீண்டப்பட்ட காதல். பிரம்மத்தால் தீண்டப்பட்ட பொய், மெய் ஆகும். வெறுப்பு விருப்பாகும். தாழ்வு உயர்வாகும். கர்வம் அடக்கமாகும். குறை பாராட்டாகும். விலக்க வேண்டியது விரும்பிச் சேர வேண்டியது ஆகும் என்பதை கதையின் பல அம்சங்களில் நாம் காண்கிறோம். இந்தக் கோணத்தில் பார்த்தால் பிரம்மத்தை வாழ்வில் அறிய அன்பர்களுக்கு இக்கதை உதவும்.

       ‘பிரபஞ்ச சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி’ என்ற அத்தியாயத்தில் மனம் உலகை சிருஷ்டிக்கவில்லை. சத்திய ஜீவியம் சிருஷ்டிக்கிறது என்கிறார். இந்தக் கதையில் ஓடிப் போன லிடியா திருமணம் ஆகி வீட்டிற்கு வருகிறாள். இதை கார்டினர் செய்ததாக வீட்டில் அனைவரும் அறிவர். நடந்தது என்ன என்றால், பென்னட்டிற்கோ, கார்டினர்க்கோ விக்காமைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டு பிடித்தாலும் அவனுக்குக் கொடுக்க இவர்களிடம் பணம் இல்லை. பணமே இருந்தாலும் விக்காம் இவர்களுக்குக் கட்டுப்படுபவன் இல்லை. டார்சிக்கு விக்காமுடைய முன்னாள் வாழ்வு தெரியும். அவன் ஜார்ஜியானாவோடு ஓட முயன்றவன். அதற்குத் துணையாக இருந்தது ஜார்ஜியானாவின் ஆசிரியை அன்னா லெஸி. அவள் லண்டனில் ஒரு பெரிய வீடு எடுத்துக் கொண்டு அங்கு வாலிபர்களுக்கு ரூம் வாடகைக்குக் கொடுத்து வாழ்க்கையை நடத்துகிறாள். அங்கு வரும் வாலிபர்கள் முறையாக இருக்க மாட்டார்கள். முறை தவறியவர்கள் சேரும் இடம் அது. டார்சி அவளை சந்திக்கிறான். விக்காம் அவளைச் சந்தித்தது உண்மை என்றும் இப்பொழுது எங்கு இருக்கிறான் என்றும் தெரியாது என்று கூறிவிட்டாள். விக்காமுடைய விபரத்தைக் கொடுக்க மறுத்துவிட்டாள். இந்த மாதிரி விஷயங்கள் பெரும்பாலும் பணத்திற்கு கட்டுப்படும் என்பது உண்மை. பல சமயங்களில் கட்டுப்படாது என்பதும் உண்மை. பணத்திற்குக் கட்டுப்படாத இடங்கள் பயத்திற்குப் கட்டுப்படும். சட்டத்திற்குக் கட்டுப்படாதது மிரட்டலுக்குக் கட்டுப்படும். அவளுக்குப் பணம் கொடுத்து மிரட்டி விக்காமுடைய விலாசத்தைத் தெரிந்து கொள்கிறான். பிறகு விக்காமையும் லிடியாவையும் சந்திக்கிறான். லிடியாவை வீட்டிற்கு வரச் சொல்லி அழைக்கிறான். லிடியா மறுத்து விடுகிறாள். விக்காமைத் தனியாகச் சந்திக்கிறான். ஏன் லிடியாவை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்கிறான். அப்படித் தனக்கு ஓர் எண்ணம் இல்லை என்று விக்காம் பதில் சொல்கிறான். ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவிற்குப் போய் ஒரு பணக்காரியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொன்னான். தனக்குப் பல இடங்களிலும் கடன் ஏற்பட்டுவிட்டதால் ராணுவத்தை விட்டு வெளிவந்ததாகவும், லிடியாவிற்காக வரவில்லை என்றும் கூறினான். டார்சி அவனுக்குப் பணம் கொடுப்பதாகச் சொன்ன போதும் விக்காம் கட்டுப்படவில்லை. லிடியாவைத் திருமணம் செய்து கொண்டால் மீண்டும் வேலை வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னான். பிரைட்டனில் உள்ள கடன்கள், எலிசபெத் ஊரிலுள்ள கடன்கள் எல்லாம் அடைத்து ராணுவத்தில் புதிய வேலை வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னான். அந்த நாட்களில் இங்கிலாந்தில் அதுபோன்ற வேலைகள் விலைக்கு விற்கப்படும். சுமார் 3000 பவுன் கொடுத்து அந்த வேலையை வாங்கி, 1000 பவுன் கொடுத்துக் கடன்களை அடைத்து, லிடியாவின் பேரில் 1000 பவுன் எழுதி வைத்துத் திருமணம் செய்து கொள்ளும்படிக் கேட்டதற்கு முடியாது என்று சொல்லிவிட்டான். டார்சி செல்வன் என்பதாலும், விக்காமுடைய குறைகள் எல்லாம் டார்சிக்குத் தெரியும் என்பதாலும், சட்டத்திலும், சமூகத்திலும் டார்சிக்கு உள்ள செல்வாக்கு அவனுக்கு ஆபத்து விளைவிக்கும் என்று அவனை மிரட்டிப் பணிய வைத்தான். இத்தனையும் நம்பாமல் உடன் இருந்து திருமணத்தையும் முடித்தான். இவை எதுவும் கார்டினருக்கோ, பென்னட்டிற்கோ செய்யத் தெரியாது, முடியாது. கார்டினர் செய்து வைத்த திருமணம் என்று வீடு நம்புவதின் உண்மை டார்சி செய்து வைத்த திருமணம் என்பது ஆகும். இந்திய மரபு மனம் உலகை சிருஷ்டித்தது என்பது கார்டினர் திருமணம் செய்தார் என்பதுபோல் ஆகும். ஸ்ரீ அரவிந்தர் சத்திய ஜீவியம் உலகை சிருஷ்டித்தது என்பது டார்சி திருமணத்தைச் செய்வித்தான் என்பதுபோல் ஆகும்.

       18வது அத்தியாயம் மனம் சத்தியஜீவியம். மனம் உற்பத்தியான முறையை விளக்கி சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரிந்து மனம் உற்பத்தியாயிற்று என்கிறார். பிரிவினையால் உற்பத்தியான மனம் என்ற கருவி பிரிவினைக்கு உரிய கருவி. ஸ்ரீ அரவிந்தர் அஞ்ஞானத்தை பற்றி கூறும்போது, அஞ்ஞானம் மேலோகத்தில் இல்லை. கீழ்லோகத்திலும் மனத்தில் அஞ்ஞானம் இல்லை. வாழ்விலும் அஞ்ஞானம் இல்லை. ஜடத்திலும் அஞ்ஞானம் இல்லை என்கிறார். அதாவது மனம் வாழ்வு ஜடம் இவற்றின் அமைப்பில் அஞ்ஞானம் இல்லை என்கிறார். மனம் சத்திய ஜீவியத்தில் உற்பத்தியாகிறது. அதன் ஆதி சத்திய ஜீவியம். இதனோடு உள்ள தொடர்பை மனம் அறுக்கவேண்டிய அவசியம் இல்லை. அறுக்க முடிவு செய்தால் அஞ்ஞானம் உற்பத்தியாகும். கீழ்க்கண்டவை அஞ்ஞானத்தின் பல நிலைகள்.

1. மனம் சத்திய ஜீவியத்தினுடன் இருந்து தன் தொடர்பைத் துண்டிப்பது அஞ்ஞானத்தின் ஆரம்பம்.

2. மனம் தன்னைத் தன் செயலில் இழந்து மறப்பது, அஞ்ஞானத்திற்கு வலிமை கொடுக்கும்.

3. செயலில் இழந்தது போல் தன்னை மனத்தில் இழப்பது.

4. மனம் தன்னை வாழ்வில் இழப்பது அஞ்ஞானம் வளர்வது ஆகும்.

5. முடிவாக மனம் ஜடத்தில் தன்னை இழப்பது அஞ்ஞானம் பூர்த்தியாவது ஆகும்.

       மனம் உற்பத்தி ஆன பிறகு அது இரண்டு புறமும் மாறி மாறிப் பார்க்கும் திறனுள்ளது. ஒரே சமயத்தில் மனதிற்கு இருபுறமும் தெரியாது. நாம் நாணயத்தின் தலையைப் பார்க்கலாம் அல்லது பூவைப் பார்க்கலாம். இரண்டையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியாது. மனம் இருபக்கமும் மாறி மாறிப் பார்க்கும் திறன் இருக்கும்பொழுது ஒரு பக்கம் பார்க்க மறுப்பது அஞ்ஞானத்தின் ஆரம்பம். இக்கதையில் டார்சிக்கு எலிசபெத் மீது ஏற்பட்ட பிரியம் ஓரிருவருக்குத் தெரியும் போது அதை எடுத்து ஒருவர் சொல்லியபோதும் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெறுப்பையே பொருட்படுத்தி அவனுடைய பிரியத்தைப் பார்க்க மறுக்கிறாள். லூக்காஸ் அவளை அவனிடம் அறிமுகப்படுத்தி டான்ஸ் ஆட அழைக்கும்போது, அவன் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்பதைப் பார்க்க மறுக்கிறாள். அவனே வந்து அவளை டான்ஸ் ஆட அழைக்கும்போது அவனைத் திட்டிக் கொண்டு இருக்கிறாள். விக்காம் அவனுக்கு எதிரி என்று தெரிந்து அவனைப் பற்றிப் பேசி டார்சியைச் சீண்டுகிறாள். ஷார்லோட் வீட்டில் அவன் வந்து பேசும் போது பிங்லி வீட்டைக் காலிசெய்து போகலாமே என்று கூறுகிறாள். அவன் திருமணம் செய்து கொள்ள அவளைக் கேட்கும் பொழுது அவளுக்கு அவனின் ஆசை கண்ணுக்குத் தெரியவில்லை. குறைகள் மட்டும் கண்ணுக்குத் தெரிகிறது. கடைசிவரை அவனுடைய நல்ல குணத்தைப் பார்க்க மறுக்கிறாள். அவள் வேண்டும் என்றே அஞ்ஞானத்தை வலியுறுத்துகிறாள். இதுவே மனம் செயல்படும் முறை. மனமே தன் தவற்றை உணர்ந்து திருந்தி மாறி ஒவ்வொரு கட்டமாகக் கடந்து சத்திய ஜீவியத்தை அடைந்தாலொழிய அஞ்ஞானம் விடுபடாது. அதை அவள் மேற்கொண்ட பிறகு அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு ஞானத்தின் பலன் கிடைக்கிறது.

எலிசபெத் எப்படி நடந்து கொண்டு இருக்கலாம் :

       வெறுப்பு என்பது உணர்ச்சி, விருப்பும் உணர்ச்சியே. அவை அறிவைச் சேர்ந்தவை அல்ல. வெறுப்பு, விருப்பைப் பாராட்டாமல் உள்ளதைத் தெரிந்து கொள்ள முயல்வது அறிவுடைமை. அவள் அதைச் செய்யவில்லை. அவள் அறிவுடையவளாக இருந்தால், விக்காம் அழகில் மயங்கி இருந்தாலும், அவன் கூறிய அவதூறுகளை நம்பி இருந்தாலும், வாழ்க்கை அவளுக்குச் சாதகமாக இருந்ததை அவள் கண்டு கொள்ளவில்லை. இளைஞனின் அழகில் இளம்பெண் மயங்குவது இயல்பு. அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். அவன் கூறிய அபாண்டப் பொய்களை அவள் அப்படியே ஏற்றுக் கொண்டு இருக்கக் கூடாது என்று நாம் சொல்ல முடியாது. அது இயற்கை. ஆனால் வாழ்க்கை அவளுக்குச் சாதகமாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று விஷயங்களைக் கொண்டு வருகிறது. இவள் அறியாத பொழுதும் டார்சிக்கு ஆசை இருப்பதைச் ஷார்லோட் சுட்டிக் காட்டுகிறாள். அதை அவள் கருதி இருக்கலாம். அடுத்தாற்போல் டார்சியே வந்து அவளை டான்சாட அழைக்கிறான். யாருடனும் டான்ஸ் ஆடாதவன் ஏன் தன்னுடன் மட்டும் டான்ஸ் ஆட விருப்பப்படுகிறான் என்று யோசித்து இருக்கலாம். விக்காம் சொன்ன பொய்யை நம்பினாலும் கரோலின் மூலம் உண்மை வரும் போது கேட்டுக் கொண்டு இருக்கலாம். நெதர்பீல்ட் டான்ஸிற்கு விக்காம் வாராதபோது அவன் பொய் சொன்னதை பற்றி யோசனை செய்து இருக்கலாம். இவளை விட்டு Miss கிங்கிற்குப் பணம் இருக்கிறது என்று அவளை நாடிப் போனபோது அவனுடைய சாயம் முழுவதும் வெளுத்துவிட்டது. அதன் பிறகாவது யோசனை செய்து இருக்கலாம். அந்த அளவிற்கு அவளுக்குத் தெளிவு இருந்து இருந்தால் விக்காம் சொன்ன பொய் உடனே வெளிப்பட்டு இருக்கும். அவள் டார்சி மூலம் விக்காமுடைய நடத்தை முழுவதையும் தெரிந்து கொண்டு இருக்கலாம்.. பிங்லி நெதர்பீல்டை விட்டுப் போய் இருக்கமாட்டான். நிலைமை முழுவதும் மாறி இருக்கும். மனக்கசப்பு, அவமானம் வருவதற்குப் பதிலாக மனம் இனித்து இருக்கும். குடும்பத்திற்கு டார்சி, பிங்லி மூலமாக அந்தஸ்து ஏற்பட்டு இருக்கும். அவள் பின்னால் செய்த திருஉருமாற்றத்தை அறிவோடு முன்னால் செய்து இருந்தால் அவளுக்கு வந்த அதிர்ஷ்டம் அனைவருக்கும் வந்து இருக்கும்.

       நாம் பொதுவாகக் கேலியாகப் பேசுகிறோம். பேசும்போது நாம் என்ன பேசுகிறோம் என்று நமக்குத் தெரியாது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லிற்கும் ஓர் அர்த்தம் உண்டு. அதற்குரிய காரியத்தை அது தவறாது செய்துவிடும். கதையிலிருந்து சில உதாரணங்கள் :

1. எனக்கு வந்தால் ஒரு காலின்ஸ்தான் வருவான் என்று எலிசபெத் சொன்னாள்.

2. Mr. பென்னட் எலிசபெத்தை நோக்கி விக்காம் உன்னை விட்டுப் போய் விடுவான் என்று சொல்கிறார்.

3. பென்னட் கோபமாக மனைவியிடம் லிடியா வீட்டிற்குள் வரக் கூடாது என்கிறார்.

1. எலிசபெத் காலின்ஸை மறுத்துவிட்டாள். அதனால் அவனுக்கு அவள் மீது கோபம். 2000 பவுன் வருமானம் இருந்தும் எலிசபெத் தன்னை ஏற்கவில்லை என்றால் அவள் எவ்வளவு மட்டமாகத் தன்னை நினைக்கிறாள் என்று காலின்ஸ் புரிந்து கொண்டான். உன்னை எவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்றும் கூறுகிறான். அளவு கடந்த கோபத்தில் ஒருவர் இருந்தால் அவர்கள் நினைவு முழுவதும் நம்மீது இருக்கும். அந்த நேரம் அவர்கள் பெயரைச் சொன்னாலும், நினைத்தாலும் அவர்கள் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள் (life response). இவள் கேலியாகப் பேசியதை இவள் மறந்துவிட்டாள். ஆனால் இவள் சொல்லிய சொல் அவனிடம் போய் அவனை அழைத்து வந்தது. அவன் திட்டுகிறான். அத்துடன் இல்லை. அவன் எந்தச் சொற்களைச் சொல்லித் திட்டமுடியாதோ அந்தச் சொல்லைச் சொல்லக் கூடியவர்களையும் அனுப்பி வைக்கிறான். இவள் சொல்லியது ஒரு சொல், பதிலாகக் கிடைத்தது ஓராயிரம் சொல்.

2. பிங்லி, டார்சி இருவரும் லண்டனுக்குப் போய் இந்த ஆண்டு வரமாட்டோம் என்று கடிதம் எழுதியபின் வீட்டில் அனைவரும் புலம்புகின்றனர். ஜேனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் தகப்பனார் இதுபோன்ற குறுக்கீடுகள் வாழ்க்கையில் சகஜம் என்பதோடு அவைதான் வாழ்க்கைக்கு ஜீவன் அளிக்கின்றன என்று கூறுகிறார். அப்பொழுது எலிசபெத்தை நோக்கி உனக்கு அவன் மீது பிரியம், அவன் உன்னை விட்டுப் போய்விடுவான் என்கிறார். அவருக்கு விக்காம் எப்படிப்பட்டவன் என்று ஓரளவு தெரிகிறது. தன் மகள் உயர்ந்தவள் என்றும் அறிவார். எலிசபெத் விக்காமை மணப்பது அவருக்கு அபிப்பிராயம் இல்லை. கேலியாகச் சொல்கிறார், “அவன் உன்னைவிட்டுப் போய்விடுவான்” என்கிறார். அவர் சொல் பலித்தது. அவளை விட்டு போய்விட்டான்.

3. செய்வேன் என்று அடித்துச் சொல்பவர்கள் செய்யமாட்டார்கள். . முடியாது என்று வேகமாக மறுப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இது வாழ்க்கையில் பொது விதி. எவ்வளவு வேகமாக மறுத்தாரோ அதே வேகத்தோடு லிடியாவை வரவேற்க ஒத்துக்கொள்கிறார். செயல் திறமை இல்லாதவர்கள் வேகமாகப் பேசுவார்கள். செயலைத் திறமையாகச் செய்யம முடியாததால் பேச்சு வேகமாக வெளிவருகிறது. இது நாம் வாழ்க்கையில் காணும் அனுபவம். பென்னட் அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர். விக்காம் திருடன். அவன் ஆழமானவன். எப்பொழுதுமே Mr.பென்னட் போல் அவசரமாகப் பேசமாட்டான். டார்சியுடன் வளர்ந்தவன். பெம்பர்லியின் பண்பு அவனிடம் இருக்கிறது. அந்த உயர்ந்த குணம் இல்லாவிட்டாலும் அந்தப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. விக்காம் பேச்சிலிருந்து அவன் என்ன செய்வான் என்பதைச் சொல்ல முடியாது. விஷயத்தில் கெட்டிக்காரன். டார்சியைப் பற்றி எலிசபெத்திடம் பேசும்போது அவன் நல்லவன் இல்லை என்று ஒரு வார்த்தையும் அவன் வாயால் சொல்லவில்லை. பேச்சை ஆரம்பித்துப் பேசுவதுபோல் பேசுவான். அவள் தன்னுடைய அபிப்பிராயத்தை டார்சி தப்பானவன் என்று சொல்லிவிடுவாள். அதை ஆமோதிப்பானே தவிர அவன் வாயால் சொல்லமாட்டான். அவனும் இந்தச் சட்டத்திற்கு உட்பட்டவன். டார்சி எவ்வளவு நாள் தங்கி இருப்பார் என்ற பேச்சு வந்தவுடன் எலிசபெத்திடம் தான் அதற்கெல்லாம் பயப்படமாட்டேன் என்கிறான். என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்றால் டார்சி விலகட்டும், நான் விலகமாட்டேன் என்கிறான். ஆனால் நெதர்பீல்ட் டான்ஸிற்கு அவன் வரவில்லை. வாராதவன்தான் அப்படிப் பேசுவான். ஆனால் Miss கிங் விஷயத்திலும், லிடியா விஷயத்திலும், டார்சி சம்பந்தப்பட்ட வேறு விஷயங்களிலும் அவன் பேச்சில் இடம் கொடுக்கவில்லை. Mrs. பென்னட் அடித்துப் பேசுவார். அடுத்த நிமிஷம் தலைகீழாக நடப்பார். அடித்துப் பேசினால் தலைகீழாக நடக்கும் என்ற சட்டத்திற்கு Mrs. பென்னட் நல்ல உதாரணம். லண்டனில் ஜேன், பிங்லியைப் பார்க்கவில்லை என்ற போது எனக்கு அவனைப் பற்றிக் கவலை இல்லை என்று கர்வமாகப் பேசுகிறாள். சில மாதங்கள் கழித்து அவன் வீட்டிற்கு வந்தவுடன் ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டுக் கோமாளிபோல் கூத்து அடிக்கிறாள். டார்சியுடன் டான்ஸ் ஆடவேண்டாம் என்று சோகமாகப் பேசினாள். முடிவாக அவன் தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்றவுடன் அவள் மிரண்டு போய் பீதி அடைந்து பேசவே முடிவில்லை. அப்படிப்பட்டவர்கள்தாம் இப்படிப் பேசுவார்கள்.

 

****

 

 book | by Dr. Radut