Skip to Content

10.இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

"அன்னை இலக்கியம்''

இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

                                                 (சென்ற இதழின் தொடர்ச்சி....)              இல. சுந்தரி

புருவங்கள் மேலெழ தன் கருத்தைப் படித்துவிட்டு ஒரு மாயப்புன்னகை வீசி மறைந்த அன்னையின் திருவுருவம் கண்முன்னே வந்தது. தவம்போலப் படித்தாள்.

"உனது நேர்மையும், சரணமும் உண்மையாகவும், முழுமையாகவும் இருக்கட்டும். உன்னை இறைவனுக்குக் கொடுக்கும்போது கோரிக்கை, நிபந்தனை ஏதுமின்றி பிடித்தமில்லாமல் முற்றிலும் கொடுத்துவிடு. அகங்காரத்திற்கோ, வேறு எந்த சக்திக்கோ எதுவும் மிஞ்சாமல் உன்னிடமிருக்கும் அனைத்தும் தெய்வ அன்னைக்கே உரிமையாகி விடட்டும்'' என்ற வரிகள் அவள் எண்ணத்தில் தங்கிவிட்டன.

அவள் ப்ரீதியுடன் முதன்முதலில் தரிசித்த அந்த அன்னை வடிவம் மீண்டும், மீண்டும் மகிழ்வூட்ட அந்த மகிழ்வுடன் உறங்கினாள். அவள் தலையை மெல்ல யாரோ வருடுவது போலுணர்ந்து தூக்கத்துடன் தன் கையால் தேடுகிறாள். மெல்லிய நீண்ட விரல்கள் அவள் கையில்பட்டது. அதைப்பற்றிக்கொண்டே எழுகிறாள். அன்னை அன்பு பொங்க நிற்கிறார். இனி உங்களை விடமாட்டேன் என்று அவர் செந்தாமரைப் பாதங்களைப் பற்றுகிறாள். அன்னை அவளைத் தூக்கி நிறுத்தி, அணைத்துக்கொள்கிறார்.

உடம்பெல்லாம் புனித நீராடிய தூய உணர்வு.

கண் விழிக்கிறாள். கடிகாரம் 4.30 மணியைக் காட்டுகிறது. மீண்டும் ஒருமுறை புத்தகத்தில் தன்னைக் கவர்ந்த அந்த வரிகளை நினைவுகூறுகிறாள். இனிமையான உணர்வுடன் மாமியோடு வீட்டு வேலைகளைச் செய்து இயல்பாக நடந்துகொள்கிறாள். மணி 9.30.

"மாமி இன்று டெஸ்ட் என்று சொன்னேனல்லவா? இந்தப் புத்தகத்தை இரவு படித்துவிட்டு காலையில் திருப்பித் தந்துவிடுவதாகச் சொல்லிவாங்கிவந்தேன். கொடுத்துவிட்டு வரட்டுமா?'' என்றாள்.

"சரி உமா! சீக்கிரம் கொடுத்துவிட்டு வந்துவிடு உமா'' என்று பரிவுடன் கூறினாள் மாமி.

"மாமி, இனி நான் வரப்போவதில்லை. என்னை மன்னித்து விடுங்கள்'' என்ற மனம் மானசீகமாய் வேண்டியது.

மணி 9.45. ப்ரீத்தி தரிசனத்திற்குப் புறப்பட்ட நிலையில் கதவைப் பூட்டிக்கொண்டிருந்தாள்.

"ப்ரீத்தி!'' என்று மெல்லிய குரலில் அழைத்த உமாவைக் கண்டு மகிழ்ந்து, "வா உமா'' என்றாள்.

"நானும் உன்னுடன் அன்னையைத் தரிசிக்க வரப்போகிறேன்'' என்றாள்.

"அப்படியா? வா, வா. வீட்டில் பர்மிஷன் வாங்கிவிட்டாயா?'' என்றாள்.

"இந்தக் கேள்விக்குப் பதிலை ஸ்ரீ அரவிந்தரே சொல்லிவிட்டார்'' என்றாள் உமா.

"என்ன உமா சொல்கிறாய்?'' என்றாள் ப்ரீத்தி.

"தெய்வ அன்னையின் அருளும், பாதுகாப்பும் உனக்குக் கிடைத்தபின் உன்னை எதுதான் தீண்டமுடியும்? அல்லது யாருக்கு நீ அஞ்சவேண்டும்? அவர் அருளின் ஒரு துளியே உன்னை எல்லா ஆபத்துக்களிலிருந்தும்,எல்லா இடர்களினூடும் உன்னைப் பத்திரமாய்த் தாங்கிச் செல்லவல்லது' என்று பகவான் கூறவில்லையா?'' என்கிறாள் உமா.

"! "தி மதர்' படித்துவிட்டாயா?'' என்றாள் ப்ரீத்தி.

"வெறுமே படிக்கவில்லை ப்ரீத்தி, அனுபவிக்கிறேன்'' என்றாள் பரவசமாய்.

"ஆகா! என்ன ஆனந்தம்! வா, உமா'' என்று அவள் கையைப் பற்றி நடக்கிறாள் ப்ரீத்தி.

தரிசன வரிசையில் கடைசியாக ப்ரீத்தியும், உமாவும் நிற்கின்றனர். அன்னையை அருகில் தரிசிக்கும் ஆனந்தத்திற்காக உமா வரிசைக் கடைசியில் காத்துக்கொண்டிருந்தாள். வரிசை நகர்ந்தது. ப்ரீத்தியும் பூக்களைப் பெற்றுக்கொண்டு நகர்ந்துவிட்டாள்.

உமாவின் வாய்ப்பு. அன்னையை, சூரிய ஒளி வீசும் அவர் பொற்பாதங்களில் தொடங்கி தரிசிக்கிறாள். முகத்தில் அந்தச் சிரிப்பு. அகங்காரத்தை கரைக்கவல்ல சிரிப்பு. அத்துடன் இணைகிறது ஜீவன்.

"அன்னையே! என்னை உம்மிடம் ஏற்கவேண்டும்'' என்று பணிவுடன் பிரார்த்திக்கிறாள்.

தலையசைத்து ஏற்கிறார். அவள் அங்கு அனுமதிக்கப்பட்டு, அறையும் கிடைத்துவிட்டது.

வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். ஸ்ரீ அன்னையின் முன் வந்து தரிசனமும் பெற்றாயிற்று. மனம் திடப்படவில்லை. "தன்னைக் காணாது தன் தாய் தவிப்பாளோ? மாமிக்குத் தான் தீங்கிழைத்துவிட்டேனோ?' என்ற மனக்குடைச்சலால் மனம் வலித்தது. ப்ரீத்திக்கு உடம்பில் கட்டி வந்தது. தனக்கோ மனதில் கட்டி வந்திருக்கிறது.

தொடரும்.....

*******


 


 book | by Dr. Radut