Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னையின் மகிமையே மகிமை!


கடந்த 25.12.03 அன்று பிற்பகல் சுமார் 3.15 மணியளவில் சென்னையில் இருந்து எனது சகலை, அவரது மனைவி மற்றும் அவர்களது 3 வயது பேரக்குழந்தை ஆகிய மூவரும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு எங்கள் வீட்டிற்கு வந்தார்கள்.

பஸ்ஸிலிருந்து இறங்கும்பொழுதே அவர்களது பேரனுக்கு லேசான காய்ச்சல். இறங்கியவுடனேயே மருந்துக் கடையில் crocin syrupஉம் வாங்கிக்கொண்டோம். 3 மணி நேரத்திற்கு ஒரு முறை வீதம் சுமார் 10 முறை மருந்து கொடுத்தும் காய்ச்சல் முற்றிலும் குணமாகாமல் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தது. குழந்தை படும் அவதியைப் பார்த்த எனக்கு அன்னையைத் தவிர வேறு வழியில்லை என்று சட்டெனத் தோன்றியதும், உடனே அன்னையிடம் எங்கள் பேரனுக்கு உடனடியாக காய்ச்சல் நிற்க அருள் புரிய வேண்டுமென விண்ணப்பித்தேன். என்ன ஆச்சரியம்! அதன்பிறகு எங்கள் பேரனுக்கு காய்ச்சலே இல்லை.

அவனுக்கே உரிய அட்டகாசத்துடன் எங்கள் எல்லோரையும் அவனுடன் டான்ஸ் ஆடச் செய்தான்.

அடுத்து என் மகனுக்கு 12 வயது நடக்கிறது. 7ஆம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய நண்பன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என் மகனை அவனது வீட்டிற்கு அழைத்திருக்கிறான். நல்ல நாளும் அதுவுமாக நண்பன் வீட்டிற்குச் செல்கிறானே என்பதற்காக என் மனைவி எங்கள் மகனின் விரலில் 2 கிராம் தங்க மோதிரத்தை அணிவித்து அனுப்பியிருக்கிறாள்.

அதன்பிறகு 27.12.03ஆம் தேதி காலைதான் தன் கை விரலில் அணிந்திருந்த இரண்டு கிராம் தங்க மோதிரம் காணவில்லை என்பதையறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறான். அவன் தாயார் அவ்வளவாகத் திட்டமாட்டார்கள் என்பதையறிந்த அவன், நான் கண்டபடித் திட்டுவேன் என நினைத்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். பையனைத் திட்டாதீர்கள் என்று என்னை என் மனைவி எச்சரிக்கை செய்ததால், நானும், "மோதிரம் போனால் போகட்டும், கவலைப்படாதே'' என எங்கள் ஒரே மகனைச் சமாதானம் செய்தோம்.

அவன் வழக்கமாக விளையாடும் இடங்களிலெல்லாம் தேடி இருக்கிறான். எங்கள் வீட்டுக் குளிக்கும் அறையிலிருந்து வீட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தேடிக்கொண்டிருந்தோம். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வளவு வேலையில் ஈடுபட்டு இருந்தாலும், எங்கள் அனைவரின் கண்களும் தொலைந்துவிட்ட மோதிரம் எங்கிருந்தாவது கிடைத்துவிடக்கூடாதா என ஆதங்கத்தோடு தேடின.

இந்நிலையில் அன்னையைவிட்டால் வேறு கதியில்லை என்ற எண்ணத்தில் 27.12.03 அன்றிரவு எங்கள் ஒரே மகனின் மோதிரத்தை கண்டுபிடித்து தரும்வகையில், அவனது அழுகையை நிறுத்த வேண்டி பிரார்த்தனை செய்தேன்.

இறுதியில் எங்கள் படுக்கை அறையில் கட்டிலின் அடியில் உள்ள மூட்டை முடிச்சுகளையும் அகற்றி, பெருக்கி சுத்தம் செய்து பார்த்தும் மோதிரம் கிடைத்தபாடில்லை.

இருப்பினும் என் மனதில் ஆழத்தில், அன்னையின் அருளால் கட்டாயம் மோதிரம் கிடைத்துவிடும் என்ற அசையாத நம்பிக்கை மட்டும் இருந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில்தான், 28.12.03 அன்று மாலை 4.30 மணியளவில் எங்கள் வீட்டு தையல் மிஷினில், ஏதோ துணி தைக்கும்பொருட்டு, மிஷினின் மேல் போர்த்தியிருந்த துணியை எடுத்தபொழுது, அங்கிருந்த மோதிரத்தைப் பார்த்ததும் அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டன.

கடைத்தெருவிற்கு சென்றிருந்த நான் வீடு திரும்பியதும் நடந்ததை அனைவரும் கூறியபொழுது ஒரு நிமிடம் நான் என்னையே மறந்துவிட்டேன்.

என்னைப் பொருத்தவரையில், என் பிரார்த்தனையை ஏற்று நம் அன்னையின் அருளால்தான் தொலைந்துபோன எங்கள் மகனின் மோதிரம் கிடைத்தது என்ற அசையாத நம்பிக்கையில் எனது ஆனந்தக் கண்ணீரை மிகவும் நன்றியுடன் அன்னையின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதன் அதிகபட்சம் சாதிப்பது, பக்தனுக்குக் குறைந்தபட்சச்

சாதனையாகும்

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன்னை அறிதல் (conscious) என்றால் ஆன்மாவை அறிதல் எனப்படும். தவசி நிஷ்டையில் ஆன்மாவை அறிவார். கண் திறந்து செயல்படும்பொழுது அவர் (unconscious) தன்னையறிய முடியாத நிலையிலேயே இருக்கிறார்.

நிஷ்டையில் சித்தித்தாலும் நிலையை அறியாதவர் தபஸ்வி


 


 


 


 book | by Dr. Radut