Skip to Content

05.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V                                                                 கர்மயோகி

828) ஆசையால் உந்தப்படுபவன், ஆசையை வென்ற நிலை,

அவன் செயலே நம் செயலாகக்கொண்ட நிலை.

அவன் செயலே நம் செயல்.

*******

829) மிகப் பெரிய பலன் மிகச் சுருக்கமாக அமையும் வழியுண்டு. அதிகபட்ச அறிவைச் செயல்படுத்தி, கட்டுப்படுத்த முடியாத

ஆசையை, அதற்குச் சேவை செய்யச் சொல்வதே அவ்வழி.

வக்ர புத்தியை ஞானத்தால் அடக்குவது சுருக்கு வழி.

மனிதர்கள் பல வகையினர். கடமையைச் செய்யாமல் பலன் பெற ஆசைப்படுபவர்கள் உண்டு. பெரும் பலனும் வேண்டும் என நினைப்பார்கள். இதைச் செய்யவேண்டிய அவசியமில்லை. எதற்கும் அன்னையிடம் வழியுண்டு என்ற சட்டப்படி இதையும் செய்யலாம்.இது முறைக்கு அப்பாற்பட்டது. இப்படிச் சாதித்ததைப் பலனாகப் பெற்றவர் பலர். பெற்றபின் அவர் வக்ரபுத்தி மேலும் தடையை ஏற்படுத்தும். அவர்கள் அபூர்வப் பிறவிகள். அவர்களுக்குக் கையில் வந்தபின் பலன் விலகும். அதற்குரிய வழி பொதுவாகச் சுருக்கு வழி. அவ்வழி வினோதமாக இருப்பதுண்டு. சில சமயம் விபரீதமாக இருப்பதும் உண்டு.

மார்வாரி ஒருவர் தம் சொத்தை 30 ஆண்டுகட்குமுன் விற்க முயன்றார். சொத்து அவர் கூட்டாளி கையிலிருக்கிறது. ஆரம்பித்தபோதிருந்த திட்டம் நடைபெறாததில் சொத்தை விற்க முடிவு செய்தார். அன்றைய மதிப்பு 20 இலட்ச ரூபாய். சொத்தில் பிரச்சினைகள் பல இருப்பதால் எவரும் வாங்க முன்வரவில்லை. கூட்டாளியிடம் பணமில்லை. ஆனால் அவர் 10 இலட்சத்திற்கு வாங்க சம்மதித்தார். கூட்டாளி மார்வாரிக்கு இரண்டு யோசனைகள் சொன்னார்.

1) மார்வாரி ஒத்துழைத்தால் பாங்க் சொத்தின் விலையை கூட்டாளிக்குக் கடனாகக் கொடுப்பதை வாங்கிக்கொள்ளலாம்.

2) மார்வாரி சொத்தில் வரும் அத்தனை வருமானத்தையும் அவரே எடுத்துக்கொள்ள சம்மதித்தால் சில ஆண்டுகள் சொத்தின் விலை மார்வாரிக்கு வந்துவிடும்.

கூட்டாளிக்கு எந்த வகையிலும்,எந்த இலாபமும் வந்துவிடக் கூடாது என்ற வக்ர எண்ணம் மார்வாரிக்கு முக்கியமாயிற்று. 5 இலட்சத்திற்கு விற்க விளம்பரம் செய்தார். எவரும் வாங்க முன்வரவில்லை. 5 இலட்சத்திற்கு கூட்டாளிக்குக் கொடுப்பதானால், ஒரு பாங்க் பணம் தர சம்மதித்தது.மார்வாரி பாங்கிடம் போய் பணம் கொடுக்கக்கூடாது எனப் பேசினார்.பாங்க் விலகியது.

கூட்டாளி தன் நண்பர்மூலம் சொத்தை 7 இலட்சத்திற்கு விலை பேசி 50,000 ரூபாய் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் எழுதும்பொழுது,கிரயமாகும் நேரம் மார்வாரிக்கு, சொத்து கூட்டாளிக்குப் போவது தெரிந்தால் 20 இலட்சம் கேட்பார் அல்லது விற்கமாட்டேன் என்பார்.இது வக்ரம். பொதுவாகக் கிரய ஒப்பந்தம் செய்யும்பொழுது முன்பணம் கொடுப்பவர் வாங்க முடியாவிட்டால் முன்பணம் திரும்ப வாராது. கூட்டாளி, நண்பரை ஒப்பந்தத்தில் இன்னொரு நிபந்தனையைச் சேர்க்கச் சொன்னார். மார்வாரி நிலத்தை விற்க மறுத்தால், அவர் முன்பணத்தைத் திருப்பி இரட்டிப்பாகத் தரவேண்டும் என்பது நிபந்தனை. இது வழக்கத்தில்லாதது. மார்வாரிக்குப் புரியவில்லை.சிரித்தார். ஆனால் ஏற்றுக்கொண்டார். ஆறாம் மாதம் கிரயம்.

மார்வாரிக்குச் சொத்து வாங்குவது கூட்டாளி என்று தெரிந்து விற்க மறுத்தார். குறுக்கேயிருந்த நண்பர் புது நிபந்தனையைச் சுட்டிக்காட்டினார். சுமார் 10 நிமிஷம் கழித்து மார்வாரி போன் செய்து சொத்தை விற்கச் சம்மதித்தார்.

பணமுள்ளவன் வக்ரமானால் அடுத்தவனுக்குச் சிரமம்.

சமர்ப்பணம் அந்நிலையில் புது வழியை உற்பத்தி செய்யும்.

*******

830) வேதாந்த இரகஸ்யம், தந்திரத்தில் முடிவது அது போன்றது. பகவான் கண்ட சூட்சும இரகஸ்யமும் அது போன்றது. அதுபோல் நமக்குரியதைக் காணுவது யோக இரகஸ்யம்.

வேதாந்த இரகஸ்யம், சூட்சும இரகஸ்யம், யோக இரகஸ்யம்.

ஞானயோகம் உயர்ந்து ராஜயோகமாயிற்று. மேலும் திரிமார்க்கம் என்பது கர்மயோகம், பக்தியோகம், ஞானமார்க்கமாக எழுந்தன. இவற்றை எல்லாம் சேர்த்து (synthesis) தந்திரயோகம்அவைகளை வென்றதுபோல் கடந்தது. தந்திரயோகம் மனிதனை ஆத்மாவாகக் காண்கிறது. ஆனால் உடலில் உள்ள ஆத்மாவாகக் காண்கிறது. அதனால் தந்திரம் ஆசனம், பிராணாயாமத்தை ஏற்கிறது. குந்தளினியில் உள்ள சக்தியை எழுப்பி, அது தலையிலுள்ள சகஸ்ரதளத்தை எட்டி மோட்சம் பெறும் வழி இந்த யோகத்திற்குரியது.

நம்முடைய பூரணயோகம் ஒருவகையில் தந்திரம் போன்றதுதான். அவர்கள் குந்தளினியில் ஆரம்பித்து மேலே வருகிறார்கள். பூரணயோகம் சூட்சும இரகஸ்யத்தைக் கண்டது. அது சகஸ்ரதளத்தைத் திறந்து மேலிருந்து கீழே வருகிறது.

இந்த யோகம் இறைவனுக்குரியது. மனிதனுக்கில்லை என்றார். அது உண்மையானால் நமக்கு என்ன பங்கு? அன்னையை வழிபடுவதுதான் நமக்கு முடிவா? இறைவன் அழைப்பிருப்பது தெரிந்தால் யோகத்தை மேற்கொள்ளலாம். நம் மரபில் இறைவன் அழைப்பிருந்தால் எதைத் தொட்டாலும் கரியாகும். அப்பொழுது ஆண்டவன் சோதனை செய்கிறார் என்கிறோம். துறவறம் மேற்கொள்ளும் நிலையது.

பூரணயோகத்தில் ஒருவர் செய்யும் காரியங்கள் அனைத்தும் அபரிமிதமாகப் பூர்த்தியானால், இறைவன் அழைப்பிருப்பதாகக் கொள்ளலாம். பக்தன் வாழ்வின் வெற்றியைவிட்டு, யோகத்தை நாட அதுவே அறிகுறி. 1904இல் அரசியலில் நுழைந்த ஸ்ரீ அரவிந்தர் 1910இல் சூட்சும உலகில் சுதந்திரம் கிடைத்ததைக் கண்டு யோகத்தை மேற்கொண்டார்.

யோக இரகஸ்யம் எது? வாழ்வை முறையாக நடத்தி யோக சக்தி அங்குப் பெருவாரியாக வெளிப்படும் வகையை அறிவது யோக இரகஸ்யம். தனக்குள்ள திறமைகளை பூரணமாக வளர்த்து, உயர்த்த யோக சக்தி எப்படிப் பயன்படும் என்றறிவது மனிதனுக்கு யோக இரகஸ்யம்.

*******

831) புதிய கொள்கையை, பழைய சௌகரியத்திற்காக, பகுத்தறிவின் பேரில் மாற்றிக்கொள்வது தெய்வச் சேவையின் பெயரில் தெய்வத்தை தனக்குச் சேவை செய்ய வைக்க முயல்வது, மனிதத் திறமைகளில் சிகரம் வகிப்பது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மனிதன் செய்யும் அம்முயற்சி தன்னை ஏமாற்றுவதாகிறது.

காப்பாற்ற முயலும் மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான்.

DMK பதவிக்கு வந்தபொழுது ஒரு பழம்பெரும் காங்கிரஸ்காரர் முனிசிபல் சேர்மனாக இருந்தார். அடிக்கடி முதல்வரை சந்திக்கவேண்டியிருந்தது. அதனால், "DMKயும் ஒரு காங்கிரஸ் என வைத்துக்கொள்ள வேண்டும்'' என்றார். எதிர்க்கட்சியிடம் சலுகை கேட்பவர் தம் மனத்தை இவ்விதம் திருப்தி செய்துகொள்கிறார். அன்னையிடம் வந்தவர் எவருக்கும் அன்னையின் பெருமை தெரியாததில்லை. ஆனால் தங்கள் கடந்த கால பழக்கங்களை விட மனமில்லாமல் அவற்றைப் பின்பற்றுகின்றனர். அது அவர்கள் பிரியம். அன்னை தம் கருத்துகளை எழுதியுள்ளார். அதுவும் எவர் மனமும் புண்படாதபடி எழுதுவார். கடையில் புதியதாக T.V. வந்திருந்தால், அது நமக்குப் பயன்படும். வேண்டாம் என நாம் முடிவு செய்தால் கடைக்காரன் நம்மை வற்புறுத்தப் போவதில்லை.

விஜயதசமி, கோகுலாஷ்டமி, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை அன்பர்கள் கொண்டாடுகிறார்கள். அன்னையை ஆயுத பூஜைக்கு ஆசிரமத் தொழிலாளிகள் அழைத்ததை ஏற்று வந்தார். கடும் ஜுரம் வந்தது. படுக்கையானார். தம்மைச் சுற்றியுள்ள சூழலில் ஜுரத்தின் தேவதைகள் ஆர்ப்பாட்டம் செய்வதைக் கண்டார். படுக்கையில் ஸ்ரீ அரவிந்தர் உட்கார்ந்திருந்தும் ஜுரம் குறையவில்லை. ஸ்ரீ அரவிந்தர் பெயரைச் சொன்னால் ஜுரம் பறப்பதை நாம் காண்கிறோம். அவரருகிலிருந்தும் அன்னைக்கு ஜுரம் குறையவில்லை, ஏன்? ஆயுத பூஜை தவறா? அன்னையே ஆயுதங்களை ஜீவனுள்ளவையாகக் கருதவேண்டும் என்று கூறியுள்ளார் அல்லவா? என்ன செய்கிறோம் என்பதைவிட என்ன மனநிலையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். பண்டிகைகள்

பாமரர்களுக்காக ஆதி நாளில் ஏற்பட்டது. இந்து மதத்தில் கோயில்களே பாமர ஜனங்களுக்காக ஏற்பட்டது. பாமரர் ஏதறிவார்? பாமரர் செய்வன அனைத்தும் மூடநம்பிக்கையால் செய்வது. தொழிலாளிகள் அழைப்பை மறுக்கக்கூடாது என அன்னை அதில் கலந்துகொண்டது ஜுரமாயிற்று. ஆயுத பூஜை அதில் நம்பிக்கை உள்ளவர்க்கு நல்லது செய்யும். அன்னைக்கோ, பக்தர்கட்கோ நல்லது செய்யாது. அதனால் அன்னை எந்த பக்தர் போக்கையும் ஏற்பாரே தவிர மறுத்துப் பேசுவதில்லை.

"அன்னை கோகுலாஷ்டமி கொண்டாடக் கூடாது' என்று கூறவில்லை என்பது நாம் செய்யும் தவற்றிற்கு அன்னையைத் துணை தேடுவதாகும். அது தன்னையே தான் ஏமாற்றிக்கொள்வதாகும். ஒருவர் தம்மை ஏமாற்ற விரும்பினால் எவரால் குறுக்கே நிற்கமுடியும்?

. புதிய கொள்கையை ஏற்பவர் புத்துணர்ச்சியுடன் ஏற்கவேண்டும்.

. புதிய கொள்கையைப் பழைய பழக்கத்துடன் ஏற்க முடியாது.

ஒரு காலத்தில் கோட்டு போட்டுக்கொண்டு அதன்மீது அங்கவஸ்திரம் உடுத்து, பஞ்சகச்சம் கட்டி, குடுமியும், பூசையும், நாமத்துடன் ஆபீஸுக்குப் போவது மரியாதையாக இருந்தது. இன்று அதைக் கோமாளி வேஷம் என நினைப்பார்கள்.

. புதியதை ஏற்காமலிருக்கலாம்.

அதை நாம் புரிந்துகொள்ள முடியும். புதியதை ஏற்று அதைப் பழைய கொள்கையாக மாற்றி, அதற்கு ஓர் தத்துவம் கற்பிப்பது அறிவுக்குப் பொருத்தமாகாது.

தொடரும் 

ஸ்ரீ அரவிந்த சுடர்

முழு மனம் அல்லது முழு ஜீவன் ஒரு விஷயத்தில் தொடர்ந்து அக்கரை செலுத்துவதை நாம் (seriousness) உயர்ந்த தீவிரம் என்கிறோம்.

முழு ஜீவனுடைய அக்கறை தீவிரம் எனப்படும்.


 

..

 


 

 

ஜீவிய மணி

பாமரனின் பக்தி பரிதாபமானது.book | by Dr. Radut