Skip to Content

09.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி

"அன்பர் உரை"

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

(இராணிப்பேட்டை தியான மையத்தில் 15.8.2003 அன்று திருமதி. வசந்தா லக்ஷ்மி நாராயணன் நிகழ்த்திய உரை)

. சட்டத்திற்குப் பதிலாக அனந்தம் பெரிய சத்தியங்களை ஏற்கும். அவை முடிவையும் பலனையும் ஆளக்கூடியவை. அவை எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப மாறுவது, சிறு மதிக்கு அர்த்தமற்றதாகத் தெரியும்.

. ஆபீசில் பணம் கொடுத்து வாங்குவது எனில் கையெழுத்துப் போட்டு வாங்குகிறோம்.

. எதையும் ரிக்கார்டில் எழுதுகிறோம். எந்த fileஐ எந்த கிளார்க் பார்ப்பது என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை நாள் குறிக்கப்பட்டு அமுலாக்கப்படுகிறது.

. வீடு சட்டத்தால் நிர்வாகம் செய்யப்படுவதில்லை.

. பிரியம், பாசம், பற்று, பொறுப்பு என்ற பெரிய சத்தியங்களுக்குக் குடும்பம் உட்பட்டது.

. இங்கு விடுமுறை கிடையாது. File ரிக்கார்ட் கிடையாது. கையெழுத்து இல்லை. யார் எதைக் கவனிப்பது என்பது இல்லை. Ofice சட்டப்படிப் பார்த்தால் பெரிய குளறுபடி வரும்.

. இதில் அனைவரும் பொறுப்பாக இருப்பார்கள், பொய் வாராது, திறமை நேர்மையால் உயரும்.

. அதேபோல் வாழ்வில் எளிய சட்டங்கள் அனந்தனின் பிரபஞ்ச வாழ்விற்கு பொருந்தாது.

. எது இங்கு முடியாதோ அது அங்கு இயல்பாக இருக்கும்.

. இன்ஸ்பெக்ஷன், ஆடிட்டிங், உட்பட முன்னறிவிப்புடன் நடக்கும். எதையும் முன்னெச்சரிக்கை இன்றி officeஇல் செய்யமுடியாது. எதிர்த்த வீட்டிற்கு வந்த பெரிய வரன் நம் வீட்டு பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டு பார்க்கப் பிரியப்படுகிறார்கள் என்றால் க்ஷணத்தில் வீடும், பெண்ணும், பணமும், மனமும் தயாராகும். நோட்டீஸ் கேட்கமாட்டோம்.

. பல பகுதிகள் சேர்ந்து முழுமையாவதை நாம் காண்கிறோம். அவற்றுள் ஒன்று முழுமையும் பகுதியானால் முழுமை முதிர்ந்து சிறக்கும்.

. தம்பி மகளுக்குத் தமக்கை முன்வந்து திருமணம் செய்ய 15 பவுன் கொடுத்தாள். செலவையும் அவளே ஏற்றுக்கொண்டாள். பெண்ணின் ஒன்றுவிட்ட அண்ணன் அன்பர். அன்பர் 2 பவுன் கொடுத்தார்.

15உம்+2உம் = 17 என்பது கணக்கு. அன்பர் 2 பவுன் கொடுத்தபின் தமக்கை 15 பவுனை 25 பவுனாக்கினாள். ஒரு ஸ்கூட்டரும் வாங்கிக் கொடுத்தாள். 15+2 = 17 என்பது வாழ்வு. 15+2 = 25 என்பது அன்னை. இது வாழ்வில் இல்லாத கணக்கு.

. எந்தச் சட்டம் ஓர் இடத்தில் செல்லாதோ, அதே சட்டம் அடுத்த இடத்தில் முழுமையாக ஏற்கப்படும்.

. இன்று கிராமத்தில் எவரும் செக்கை ஏற்கமாட்டார்கள். கொஞ்ச நாள் முன் பாங்க்கில் செக் கொடுத்தால் செக் வேண்டாம், பணம் கொடு என்பார்கள். அமெரிக்காவில் கடைகளில் பணம் கொடுத்தால் வாங்கமாட்டார்கள். செக் கேட்பார்கள். அதுவும் மாறி கிரெடிட் கார்ட் ஆகிவிட்டது.

. பகுத்தறிவின் பாதை குறுகியது. அதன் முறைகள் சிறியவை. அனந்தத்தை அறிய முற்பட்டபின் சிறிய முறைகளும் குறுகிய பாதையும் உதவா.

.படிப்பு, சொத்து, வருமானம், உறவு, பழைய வாழ்வு, ஆகியவற்றை நண்பர்கள், உறவினருடன் பேசும்போது அவர்கள் அளவோடு நிறுத்திக் கொள்வார்கள், மேலே போகமாட்டார்கள். அவர்கள் போனால் நாம் பதில் கூறும் அவசியம் இல்லை. கோர்ட்டில் நியாயம் கேட்டு வழக்காடினால் கூண்டில் நிற்கும்பொழுது எதிரி வக்கீல் இவற்றைப் பற்றி அளவில்லாமல் கேள்வி கேட்பார். நண்பர்களுக்கு உரிய அளவு எதிரி வக்கீலுக்கு இல்லை.

. ஓர் அம்சத்தைக் கொண்டு முழுமையை நிர்ணயிக்க முயன்றால், யானையைப் பார்த்த குருடர்கள் ஆவோம்.

. பையன் படித்து வேலைக்கு வந்து நிறைய சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவது போற்றத்தக்கது. சம்பாத்தியம் என்பது ஓர் அம்சம். இன்று நிறைய சம்பாதிக்கிறான், குடும்பம் வசதியாக இருக்கிறது என்பது நிலையான முழு அம்சம் இல்லை. அவனும் மனிதன்; அவனுக்கும் திருமணம், குடும்பம் வந்தபிறகு அவனது சம்பாத்தியம் இன்றுபோல் கூட்டுக் குடும்பத்திற்குப் பயன்படாது.

. ஓர் அம்சத்தைப் பார்ப்பது தவறானால் முழுமையை மட்டும் பார்ப்பதும் தவறாகும். அதன் முக்கியத்துவத்தை மட்டும் பார்ப்பது தவறு. அம்சங்களையும், முக்கிய கருத்தையும், முழுமையையும் சேர்த்துப் பார்ப்பது அவசியம்.

. நன்றாகப் பாடும் பெண் படித்து நிறைய சம்பாதிக்கிறாள் எனில்

பாட்டுக்காக அவளை விரும்புவது ஓர் அம்சம். சூட்சும அறிவுடையவள் என்பது முக்கியக் கருத்துபோல் ஆகும். பெரிய குடும்பத்துப் பெண் என்பது அவளது குடும்பத்தின் முழுமையை அறிவது ஆகும். இவை மூன்றும் முக்கியமானாலும் அவை அவளது முழுமையாகாது. நேரம் வரும்போது அவள் எப்படி நடக்கிறாள் என்பது அவளுடைய முழுமையாகும்.

. ஆத்மா பிரம்மத்தின் அமைதியான அம்சம். புருஷன் ஜீவனுள்ள அம்சம். ஈஸ்வரன் அமைதியும் ஜீவனும் உள்ள அம்சம் என்றாலும் இவை அம்சங்களே. மூன்றும் சேர்ந்ததே முழுமை. அப்படி ஓர் அம்சம் இருந்து அதன் பகுதியாக இது மூன்றும் இருந்தால் அப்பெரிய அம்சமே பிரம்மம்.

. ஒரு குடும்பத்திற்குப் பணம் இருப்பது அதுபோல் ஓர் அம்சம்.

செல்வாக்கு அடுத்தது, அதுபோல் ஓர் அம்சமே. உறவும் அதைப்போலவே. சம்பந்தம் செய்யும்பொழுது இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் முடிவாகக் கருதமாட்டார்கள். பரம்பரையைக் கவனிப்பார்கள். பரம்பரையாக எந்த அளவு உயர்வு உண்டோ அந்த அளவிற்கே பணமும், செல்வாக்கும், உறவும் எடுபடும். நடப்பவை எல்லாம் நாராயணன் செயல்தான். நம் வீட்டுப் பையன் முழுப் பரீட்சைக்குப் போகவில்லை என்றபோதும் பாஸ் போட்டு விட்டார்கள். ஆனால் கடையில் சிறு சண்டை வந்தபோது அது கோர்ட்வரை போய் அபராதம் பெற்றது. சில சமயம் பெரிய தவறும் மன்னிக்கப்படுகிறது, சிறியவையும் தண்டிக்கப் படுகின்றன. செல்வாக்கு அதிகமாக இல்லாதபோதும் அந்த வார்டில் தகப்பனாரைத் தேர்ந்தெடுத்தது, பெரிய அதிர்ஷ்டம் தேடிவரும்பொழுது ஆண்டவன் செயல் வெளிப்படுகிறது. அதற்கு நமக்கு - நம் ஆத்மாவிற்கு - நமக்குள்ள தகுதியும் தெரிகிறது. நம் வீட்டுப் பையன் பெரிய இடத்துப் பையனோடு கல்லூரியில் படித்தால் அவர்கள் வீட்டுப் பெண்ணை கொடுத்துக் கம்பெனியில் டைரக்டர் ஆக்கி அமெரிக்காவிற்கு அனுப்பினால் அது அதிர்ஷ்டம் என்கிறோம்.

பகுதிகளான அறிவு, திறமை, செல்வாக்கு ஆகியவற்றின் பெருமைகளைக் கருதாமல் அவை அனைத்தும் ஒன்றுசேரும் இடமான ஜீவனில் அமைதி நிதானத்தைக் கருதியதால் பெரிய இடமும் பெரிய அதிர்ஷ்டமும் தேடிவருகின்றன என்பதை வாழ்வில் காண்கிறோம். பகுதிகளோ, பகுதிகள் சேர்ந்த முழுமையோ, முழுமை அல்ல; பிரம்மத்தின் முழுமையே முழுமை. அதனுள் எல்லாப் பகுதிகளையும் காணலாம். அது இருப்பதற்கு அடையாளம் நிதானம், பக்குவம், பவித்ரம், பொறுமை.

தொடரும்.....

*******


 



book | by Dr. Radut