Skip to Content

12.பணம் வசூல் செய்யக்கூடாது

பணம் வசூல் செய்யக்கூடாது

அலெக்ஸாண்டர் இந்தியாமீது படையெடுத்தபொழுது ஒரு மகானைப் பற்றிக் கேள்விப்பட்டு தம்மை வந்து பார்க்கும்படி அழைத்தார். அவர் வர மறுத்தார். அலெக்ஸாண்டர் அவரைப் போய்ப் பார்த்தார். இது துறவறத்திற்குரிய நியதி. அன்னை ஆசிரமத்திற்காகப் பணம் வசூலிக்கவில்லை. வசூலிப்பதை அவர் அனுமதிக்கவில்லை. தானே நம்மைத் தேடிவரும் பணம் நம் பக்திக்குரியது. நாமே கேட்டுப்பெறுவது நம் தேவைக்குரியது. பணம் கேட்கக்கூடாது என்பது உண்மையானால் கேட்பது சரிஎன்பதும் உண்மை. எந்த உண்மைக்கும் எதிரான உண்மையும் உண்டு என்பது பகவான் வாக்கு. அன்னைக்காகப் பணம் கேட்கக் கூச்சப்படுவது தவறுஎன்று பகவான் கூறியுள்ளார். நாம் நமக்காகக் கேட்கவில்லை, இறைப்பணிக்காகக் கேட்கிறோம். அதற்குத் தயங்குவது தவறு. கேட்காமல் பெற்றதற்கும், கேட்டுப் பெற்றதற்கும் உதாரணங்கள் உண்டு. ரூ.10,000 பொற்கிழி வசூலிக்க முனைந்தவர் கொடுக்கக் கடமைப்பட்டவர்களைமட்டும் கேட்டார். மற்றவர்க்கு பொற்கிழியைப் பற்றித் தெரியாது. கேளாமல் வசூலானது மேலும் 2,35,000.

அன்னையை ஏற்றுக் கூலி வேலையிலிருந்து கம்பனி முதலாளியானவர் அன்னையை எல்லாம் கேட்பார்; எதுவும் தரமாட்டார். 30, 40 ஆண்டுகளில் அவர் காணிக்கை எனக் கொடுத்ததில்லை. அன்னையிடம் உள்ள ஒருவர் அன்னைக்காகத் தாம் செய்யும் வேலைக்கு 2 இலட்ச ரூபாய் வேண்டுமென அன்னையைக் கேட்டார். அந்த நாட்களில் ஆசிரமத்தில் பணக்கஷ்டம் அதிகம். "நீங்கள் எனக்காகப் பணம் கொண்டுவந்தால், அந்த 2 இலட்சத்தை நான் தருகிறேன்''என்று அன்னை அவரிடம் கூறினார். அவர் காணிக்கையே கொடுத்தறியாத கம்பனி முதலாளியிடம் 2 இலட்சம் கேட்டார். 1972 ஜனவரி முதல் தேதி தாம் அப்பணத்தை அன்னைக்குக் காணிக்கையாகச் செலுத்துவதாக அம்முதலாளி கூறினார். ஜனவரி முதல் தேதி பகவான் நூற்றாண்டு ஆரம்ப வருஷம். அவர் சொன்னது 2 இலட்சம், கொடுத்தது 6 இலட்சம். ஆகஸ்ட் 15, அதே வருஷம், அதே முதலாளி 9 இலட்ச ரூபாய் காணிக்கையாகக் கொடுத்தார்.

-கேட்பது தவறு.

-மனப்பான்மை சரியானால், கேட்கக் கூச்சப்படுவது தவறு.

-கேட்காமல் 10,000 வசூல் செய்யப்போனது, கேட்காமல் 24 மடங்கு உபரியாயிற்று.

-கேட்ட 2 இலட்சம் 15 இலட்சத்தை - 7½மடங்கு - பெருக்கியது. மனம் சரியானால், செயல் சரியாக இருக்கும்.

*******



book | by Dr. Radut