Skip to Content

07. மனமாற்றம்

"அன்னை இலக்கியம்"

மனமாற்றம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

"சரி! சரி! உன்னிடத்திற்கு வா'' என்றார் குமாரி. வேறு வழியின்றி ஆஷா தன் சீட்டிற்கு வந்தாள். "உன் இடம் என்று சாசனம் செய்திருக்கிறதா?'' என்று தான் அகம்பாவமாய்க் கேட்டதும், இப்போது மிஸ் பிரியாவிடம், "உன் சீட்டிற்கு எழுந்துவா'' என்று கூறியதும் நினைத்து அவமானமாய் உணர்ந்தாள். ஆஷாவின் தோழிகள் ஒருவரையொருவர் பொருளோடு பார்த்துக்கொண்டனர். குமாரியும் அதைக் கவனிக்கத் தவறவில்லை.

வகுப்பு முடிந்து குமாரி மிஸ் வெளியேறினார். அடுத்த மிஸ் வருவதற்குள் ஒரு கலகலப்பு ஏற்பட்டது. ஆஷாமட்டும் 'உம்'மென்றிருந்தாள். இப்படிக் குமாரி மிஸ் கேட்பாரென்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மாதவியுடன் சேரவேண்டும், பிரியாவை அவளிடமிருந்து பிரிக்கவேண்டும் என்ற அவள் விருப்பம் நிறைவேறாதது எரிச்சலாயிருந்தது.

வகுப்பில் முதல் மாணவியான அவள், அன்றிலிருந்து சரியாகப் பாடத்தைக் கவனிப்பதில்லை. எல்லா ஆசிரியர்களும் அவளைக் கவனித்தனர்.

இத்தனை நாட்களாய்ப் பிரியாவை மறைமுகமாய்க் கேலிசெய்வாள். மாதவியுடன் அவள் சிநேகிதமாய் இருப்பது கண்டு அப்படிச்செய்தாள். மாதவி படிப்பிலும், பண்பிலும் நிகரற்று விளங்கினாள். எல்லா ஆசிரியர்களுக்கும் அவள் செல்லப் பெண் போலிருந்தாள்.

ஆஷாவிற்குப் பொறாமை. அவளை எதிர்க்கலாம் என்றால் மாதவி எதையும் பெரிதுபடுத்தாத பெருந்தன்மையோடிருந்தாள். எனவே, நட்புக்கொள்ள நினைத்தால், இடப்பிரச்சினை வந்துவிட்டது.

மாதவியோ, தன்னைச் சுற்றியே ஆஷாவும், பிரியாவும் சுமுகமில்லாமல் இருப்பது அறியாமல் பாடத்திலேயே கவனமாயிருந்தாள்.

சுட்டிப்பெண்ணான ஆஷா, யாருக்கும் அடங்காத ஆஷா, திடீரென சோர்ந்து போனாள். அவளுக்குப் போட்டியாக அறிவிலும், திறமையிலும் சிறந்த மாதவி அந்த வருடம், அந்த வகுப்பில் சேர்ந்தது தான் அவள் சோர்விற்குக் காரணம் என்று மற்ற மாணவிகளுக்குப் புரிந்தது. ஆனாலும், அவள் தானே சர்வாதிகாரியாய் விளங்கியதை உள்ளூர விரும்பாத தோழியர் இப்போது அவள் சோர்வுகண்டு உள்ளூர மகிழ்ந்ததால் அவளை மாற்ற ஒருவரும் முயலவில்லை.

அரையாண்டுத் தேர்வு முடிந்து மதிப்பெண் பட்டியல் வந்தது. மாதவி முதலாவது, பிரியா இரண்டாவது, ஆஷா மூன்றாவதாக வந்திருந்தனர். எல்லோர்க்கும் இது அதிர்ச்சியாயிருந்தது. எல்லா ஆசிரியர்களும் ஆஷாவைத் தனித்தனியே அழைத்து, "ஏன் படிப்பில் கவனமில்லை?'' என்று விசாரித்தனர். உள்ளே தோற்றுக்கொண்டிருந்த ஆஷா பதில் சொல்லாது இயல்பான பிடிவாத குணத்தால் நின்றாள்.

அன்று ஆசிரியர் அறையில் 11அ வகுப்புப் பற்றிய பேச்செழுந்தது. ஆஷாவின் வீழ்ச்சியே அன்றைய பேச்சு. 'மாதவி என்ற பெண்ணின் உயர்வுக்கு முன் ஆஷாவின் சிறுமை ஆட்டங்கண்டது' என்பது தெரியவந்தது. ஆனால் குமாரி மிஸ் இதைச் சாதாரணமாய் அலட்சியப்படுத்தவில்லை. ஒரு சிறந்த திறமையுள்ள மாணவி இப்படிச் சோர்ந்து போவது குமாரிக்கு உடன்பாடில்லை. ஆஷாவை எப்படியாவது குணப்படுத்தவேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.

ரேங்க்கார்டு (rankcard) கொடுக்கும்போது மாதவிக்கு ஏகக் கைத்தட்டல். அடுத்தது பிரியாவுக்கு. ஆஷாவிற்குக் கைத்தட்டல் குறைந்தது.

ஆஷா முரட்டுப்பிடிவாதமுள்ள பெண். அவள் உடைந்து போவாளே தவிர வளைந்து கொடுக்கமாட்டாள் என்று குமாரிக்குத் தெரியும்.

"ஆஷா! மாலையில் வகுப்பு முடிந்ததும் என்னைப் பார்த்துவிட்டுப் போ'' என்றார் குமாரி மிஸ்.

"சரி மிஸ்!'' என்று கூறி உட்கார்ந்தாள்.

மாலை பள்ளி முடிந்ததும் ஆஷா, குமாரி மிஸ்ஸைப் போய்ப் பார்த்தாள்.

"ஆஷா! நீ இன்று மாலை என் வீட்டிற்கு வருகிறாயா?'' என்றார் குமாரி.

"வருகிறேன் மிஸ்!'' என்றாள் ஆஷா.

"வீட்டில் சொல்லிவிட்டு வா. 6.30க்கு வந்துவிடு. நானே உன்னை வீட்டில் கொண்டு விடுகிறேன்'' என்றார்.

பிடிவாதக்காரியான ஆஷா எப்போதும் கலகலப்பானவள். எங்குச் சென்றாலும் தன் வெற்றிக்கொடி நாட்டிவிடுவாள். ஒரு கணம் அவளால் ஆரவாரமின்றி இருக்கமுடியாது. அவள் இராசியோ என்னும்படி எல்லோரும் அவளுக்கு அடங்கிவிடுவர். ஆனால், திடீரென்று அவள் ஊமையானது வீட்டினர்க்கு வியப்பளித்தது. மகிழ்ச்சியாய்க், கலகலப்பாய்ப் பழகும் அவள் திடீரென்று எரிச்சல்பட ஆரம்பித்தது எல்லோருக்குமே வியப்பாயிருந்தது. அவள் எங்கோ தோற்றிருக்கிறாள் என்று புரிந்தது. ரேங்க்கும் மூன்றாவது. முதல் ரேங்க் மாணவி அவள். எத்தனைக் குறும்புகள் செய்தாலும் படிப்பில் வல்லவள். அதனால் கர்வமும் உண்டு. ஆனால் இப்போது மூன்றாமிடம்.

"அம்மா! நான் குமாரி மிஸ் வீட்டிற்குப் போகிறேன். அவரே திரும்பி என்னைக் கொண்டு வந்து விடுவதாய்ச் சொல்லியிருக்கிறார். கவலைப்பட வேண்டாம்'' என்று சொல்லி புறப்பட்டாள்.

குமாரி மிஸ் எங்கோ புறப்படத் தயாராகி, இவள் வருகைக்குக் காத்திருந்தார்.

"வா! ஆஷா! உன்னை எதிர்பார்த்துத்தான் காத்திருக்கிறேன்'' என்று கூறி, தன் ஸ்கூட்டரில் அவளைப் பின்னே உட்காரவைத்து அழைத்துப் போனார்.

பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு வீட்டின் முன் வண்டியை நிறுத்தினார். இறங்கிக்கொண்டாள். முன்பக்கம் மாட்டியிருந்த "காரிபேக்கை" அவளிடம் கொடுத்துவிட்டு வண்டியை ஓரமாய்வைத்துப் பூட்டினார்.

பையில் ஒரே மல்லிகைப்பூ மணம். யாரையோ பார்க்க இங்கு வந்திருக்கிறார் போலும். ஆனால் பூக்கள் கட்டப்படாது உதிரியாய் இருந்தன.

வீட்டின் முகப்பிலேயே சாம்பிராணிப்புகை தவழ்ந்துவந்து வரவேற்றது அங்குள்ளோர் குமாரியைப் பார்த்துப் புன்னகைத்தனர். பெரிய நிலைக்கதவு திறந்திருந்தது. கதவைத் தாண்டியதும் நீண்ட, பெரிய ஹால். அதில் பெரிய இரண்டு திருவுருவப்படங்கள். அவற்றிற்கு எதிரே சீர்வரிசைபோல் அணி, அணியாக அழகிய தட்டுகளில் வகை, வகையான பூக்கள் அடுக்கப்பட்டிருந்தன. பெரிய "வாட்டர்புரூப்" விரிப்பின்மேல் இரண்டு வடிவங்களில் மலரலங்காரம். ஒன்று, வட்டவடிவில் இருந்தது. மற்றது, நட்சத்திரம் போன்ற வடிவில் இருந்தது. நறுமணப்புகையும், மலர்களின் தெய்வீக வாசமுமாய் தெய்வீக மணங்கமழ்ந்தன.

குழந்தைகள், இளம்பருவத்தினர், முதியவர் என்று பாகுபாடேதும் இல்லாது ஒருமித்து அனைவரும் செயல்பட்டனர். உள்ளே வரும் ஒவ்வொருவரும் ஏதேனும் மலர்களுடன் வருவதும், அழகுற அவற்றைச் சமர்ப்பிப்பதும், நமஸ்கரித்து அமர்வதுமாயிருந்தனர். குறிப்பாக, வாய்ப் பேச்சின்றி பார்வைகளால் அளவாகப் பேசிக்கொண்டனர்.

குமாரிமிஸ், இவள் தோளைத் தொட்டு, இவள் கவனத்தைத் திருப்பி, கையிலுள்ள மலர்களைச் சமர்ப்பிக்குமாறு சைகைசெய்தார். அவ்வளவுதான்; தன் கடந்தகணங்கள் யாவும் மறந்துபோயின. திடீரென உற்சாகம் பீறிட்டது; மலர்ச்சியானாள்.

முன்னே சென்று வட்டமும், நட்சத்திரமுமாய் அமைந்த வடிவங்களில் வெள்ளை மல்லிகையினைச் சுற்றி பார்டர் கட்டினாற்போல் அடுக்கினாள். கொண்டுவந்த பூக்கள் சரியாக அமைந்தன. ஒருமுறை அவற்றின் அமைப்பைப் பார்த்தாள். மனம் நிறைந்தது. அங்குள்ளோர் அவளைப் பார்வையால் பாராட்டினர். நமஸ்கரித்துவிட்டு குமாரியின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஹாலைப் பார்த்தாள்.

ஹாலின் நடுவில் எல்லோரும் பார்க்குமாறு ஒரு பெரிய கடிகாரம் பொருத்தப்பட்டிருந்தது. எல்லோர்க் கவனமும் அதை நோக்கியது. ஹாலின் சுவர்களில் இரண்டு பக்கங்களிலும் நடுவே உள்ள திருவுருவங்களின் வேறு, வேறு போஸ்கள் அழகாகப் பொருத்தப்பட்டிருந்தன. கண்களும்,இதயமும் தாமாகவே நிறைவடையும் தூய இடமாயிருந்தது அது. இது வீட்டுவிசேஷம் ஏதும் இல்லை. ஏதோவொரு வழிபாட்டுக்கூடம் என்று புரிந்து கொண்டாள் ஆஷா. மணி ஏழை (7) நெருங்கிக் கொண்டிருந்தது. மாதவியும் சில மலர்க்கொத்துகளுடன் வந்தாள். அவள் யாரையும் கவனிக்கவில்லை. மலர்களைச் சமர்ப்பித்து முன்புறத்தில் அப்படியே அமர்ந்துகொண்டாள். கடிகாரம் ஏழுமுறை ஒலித்ததும் பெரிய விளக்குகள் நிறுத்தப்பட்டு இரவு விளக்கு போன்ற சிறிய பச்சை ஒளிமட்டும் தெரிந்தது. ஓர் ஒலிநாடா மெல்லிய இசையை ஒலித்தது. அனைவரும் கண்ணைமூடி அமர்ந்திருந்தனர். ஆஷாவும் அன்று தன் மனஆரவாரங்கள் அடங்கி அமைதியாய்க் கண்மூடி, சற்றுமுன் கண்ட திருவுருவங்களையும், மலர்களையும் நினைத்தவண்ணமிருந்தாள். ஒலி நாடா நின்றது. விளக்குகள் பிரகாசித்தன. கடிகாரம் ஒரு முறை ஒலித்தது. அமைதியாக ஒவ்வொருவராய் முன்சென்று வணங்கி, மலர்களைத்தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு தட்டுகளில் இருந்த மலர்களில் அவரவர் தமக்குத் தேவையான ஒரு மலரைப் பவித்திரமாய் எடுத்துச்சென்றனர். பேச்சுகள் ஏதுமின்றி அமைதியாய்க் கலைந்தனர். ரோஸ் நிறத்தில், பொடிப்பொடியாய், கொடிபோன்ற அமைப்பில் படர்ந்து ஜாடிகளில் வைக்கப்பட்ட பூவைச் சிறிது எடுத்துக்கொண்டாள் ஆஷா.

அன்னையை நன்றியுடன் பார்த்துக்கொண்டிருந்த குமாரி, ஆஷா சுமுகம் என்ற மலரை எடுப்பதைப் பார்த்து மிகுந்த நெகிழ்ச்சியுடன் அன்னையைப் பொருள்பொதியப் பார்த்தார். கடந்த சில மாதங்களாகவே குமாரி ஸ்ரீ அன்னையுடன் உள்ளூர ஒரு தொடர்புகொண்டு அன்னையின் சாந்நித்யத்தை உணர்ந்துவந்தார்.

ஆஷாவிற்குப் பாடம், தேர்வு, தோல்வி, பகை என்ற எல்லாவுணர்வுகளும் மறைந்து, ஏதோ இனம்புரியாத அமைதியுணர்வு ஏற்பட்டது. வெளியே வந்தனர். மாதவியைக் காணவில்லை. போயிருப்பாள் போலும்.

"மிஸ்! இந்த இடத்திற்கு என்ன பெயர்? இங்கு எதற்கு வந்தோம்?'' என்றாள் ஆஷா.

"நீ எப்படி உணர்ந்தாய்?'' என்று குமாரி இவளைக் கேட்டார்.

"மிக அமைதியாக உணர்ந்தேன் மிஸ். வேறு எந்தச் சிந்தனையும் வரவில்லை'' என்றாள்.

"இந்த இடத்திற்கு ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் தியானமையம் என்று பெயர். இங்கு எதற்காக வந்தோமோ, அது உனக்குக் கிடைத்திருக்கிறது'' என்றார் குமாரி.

"மிஸ்! மாதவியும் வந்திருந்தாள், பார்த்தீர்களா?'' என்றாள் ஆர்வமாக.

"அவள் எப்போதும் வருவாள்'' என்று மிக இயல்பாகக் கூறினார் குமாரி. இங்கு உறவு முறைகள் எதற்கும் முக்கியத்துவமில்லை என்பது புரிந்தது.

"ஸ்ரீ அரவிந்தர் என்கிறீர்களே மிஸ், அவர் சுதந்திரப்போராட்ட வீரர் என்றுதானே படித்தோம்?'' என்றாள் ஆஷா.


 

தொடரும்.......

*******     

Comments

07. மனமாற்றம்Para 2       - 

07. மனமாற்றம்

Para 2       -   Line  2     -    "உம்'                      -     'உம்'
Please combine Para 4 & Para 5
Para 9       -  Line  3      -   "மாதவி என்ற      -  'மாதவி என்ற
Para 22    -   Line 2       -  "காரிபேக்கை'         -  'காரிபேக்கை'
Para 24    -   Line 5       -   "வாட்டர்புரூப்'       -  'வாட்டர்புரூப்'
Para 28    -   Line 2       -    ஹான்                   -   ஹாலின்



book | by Dr. Radut