Skip to Content

09.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                 (சென்ற இதழின் தொடர்ச்சி....)                       கர்மயோகி

877) அழைப்பு ஆழ்மனத்துள் சென்றால் அது நிலைக்கும். ஆழ்மனமே அழைத்தாலும் அது நடக்கும்.

நிலையான அழைப்பு ஆழ்மனத்து அழைப்பு.

அழைப்பு நிலைக்க ஆழ்மனதுள் செல்லவேண்டும்.

. அழைப்பு ஆழ்மனத்துள் செல்வதற்கும், ஆழ்மனமே அழைப்பதற்கும் உள்ள வித்தியாசம் நாம் ஒரு பெரிய குடும்பத்துள் ஒரு நாள் போய் கலந்து கொள்வதற்கும், அப்பெரிய குடும்பமே நம்மை அழைப்பதற்கும் உள்ள வித்தியாசம்.

. வாயால் Mother என்பதைப் பொதுவாக அழைப்பு எனக் கொள்கிறோம்.அதே சொல் தானே எழ பெருமாறுதல் வேண்டும். ஒரு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஆசைப்பட்டு அவர்களை அணுகி, நம்மை அழைக்க வேண்டி ஓர் அழைப்புப் பெறுவதற்கும், அவர்களே நம்மை அழைக்க விருப்பப்படுவதற்கும் உள்ள வித்தியாசம். அடுத்த, அடுத்த கட்டங்கள் உள. முடிவாக அவ்விழாவில் சொற்பொழிவு ஆற்ற நம்மை அழைப்பது, நம் சௌகரியத்தைக் கருதி விழாவை ஏற்படுத்துவது.

. வாயின் சொல், மனத்தின் எண்ணம், ஆழ்மனத்தின் உந்துதல் (impulse),நெஞ்சு கொடுக்கும் குரல், முழு நெஞ்சமும் இறைவனில் கரைந்து,கரைந்த உணர்வு காதலாகிக் குரலாக எழுவது, உடலின் உணர்வு உறவு வேண்டி அழைக்கும் குரல்*, உடல் தானே விழித்தெழுந்து மனம், ஆத்மாவை விலக்கி, சைத்தியப் புருஷனையும் விலக்கி, இறைவனுடன் Supremeநேரடியாகத் தொடர்பு கொண்டு நெஞ்சம் தழுதழுத்து எழும் குரல் பிரபஞ்சத்தில் ஆத்மாவின் அசைவாக, அலையாக சூட்சும உலகில் புரளும்.

----------------------------------------------------------------------------------------------------------------------

* பாண்டி கடற்கரையிலிருந்து புறப்பட்ட கப்பல் "ஓம்" என்று எழுப்பிய குரல் அன்னைக்குக் கேட்டதை அன்பர்கள் அறிவார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------

அதைக் கடந்த நிலைகளும் உள்ளன. அவை பூரணயோக எல்லையைக் கடந்தவை.

. அழைப்பின் இலக்கணத்துடன் அழைத்தால் அழைப்பை மறுக்க எவராலும் இயலாது.

. அழைப்பின் இலக்கணம் இலக்கியமானால் இருவரும் அன்பில் இரண்டறக் கலப்பர்.

ஆழ்மனம் என்பது sub-conscient. இது இருண்டது. இதனுள் நம் பூர்வீக ஞாபகம் முழுவதும் புதைந்துள்ளது. உலகின் பூர்வீகமே உள்ளது என்கிறார் அன்னை. இது வெளிப்பட்டால் ஆபாசம் பரவும்; பயங்கரம் நிகழும். நான் இதைப் பாதாளம்என்ற சொல்லால் குறிக்கிறேன். பாதாளம் பயங்கரமாக இல்லாமல் உலகம் முழுவதும் பரவியிருக்கலாம். அது விதிவிலக்கு. அழைப்பு உள்ளே போகும் பொழுது பயங்கரமான பாதாளம் ஒரு க்ஷணம் பவித்திரமாக மாறலாம். நான் மேலே கூறும் அழைப்பு அங்கிருந்து எழுவது.

. அந்த அழைப்பு அகிலமெங்கும் கேட்கும்.

. கேட்பது நிலைக்கும்.

. அதன்பின் அவ்வழைப்பு அமிர்தமாக மாறும்.

. அழைப்பின் தரம் உயர்ந்தால் நாம் அழைத்தாலும், அன்னை அழைத்தாலும் அழைப்பு ஒன்றே.

. அந்நிலையில் கொடுப்பது பெறுவது, பெறுவது கொடுப்பது.

. அப்பொழுது அழைப்பு அமிர்தமாகி, அன்பாகி, அனைத்துமாகும்.

. நாம ஜபம் நாடறிந்தது.

. ஜபம் வாயால் உச்சரிப்பது.

. மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டாலும் அது வாய்க்குரியது.

. அதுவே மோட்சமும் தரவல்லது.

. பலன் சொல்லைப் பொருத்ததன்று. மனதைப் பொருத்தது.

. மனத்தைவிட ஜீவனைப் பொருத்தது என்பது பொருத்தமாகும்.

. அழைப்பும், நாம ஜபமும் தோற்றத்தில் ஒன்று போன்றவை.

. அழைப்பு திருவுருமாற்ற வல்லது.

. அழைப்பில் சொல்லில்லை. சொல்லிருந்தால் அது அழைப்பாகாது.

. அழைப்பு என்பது பரிணாமத்திலுள்ள பிரம்மம், சிருஷ்டிக்கு அப்பாலுள்ள பிரம்மத்தைக் கூவி அழைப்பதாகும்.

. அது வாயாலோ, வாய்ச் சொல்லாலோ இயலாது.

. மேல்மனத்தால் செய்யக் கூடிய செயலில்லை அது.

. உள்மனத்திற்கும் அது உரியதில்லை.

. அதற்குரிய இடம் அடிமனம்.

. அடிமனத்திலும் அங்குள்ள குகையில் உள்ள சைத்தியப் புருஷனுக்குரியது.

. நிஷ்டையால் அழைப்பைச் செய்ய இயலாது.

. அழைப்புக்குரியது சமர்ப்பணம்.

. மேல்மனம் தன்னை அடிமனத்திற்குச் சமர்ப்பணம் செய்யும் சமர்ப்பணம் அது.

. The Mother என்ற நூலில் முதல் வாக்கியம் அழைப்பை விவரிக்கும்:

Call from below and the answering Grace from above.

கீழிருந்து எழும் அழைப்பும் மேலிருந்து பதில் கூறும் அருளும்

என்பது அவ்வாக்கியம்.

. இந்த யோகத்தின் சுருக்கமாக அழைப்பைக் கூறலாம்.

. தவறாதது ஒன்றுண்டு எனில் அதை அழைப்பு என்று கூறலாம்.

. அழைப்பு நெஞ்சை நிரப்பும்.

. முடிவில் ஜீவனை அன்னையால் நிரப்பும்.

. திருவுருமாற்றத்திற்குரிய "பச்சைக்கொடி" அழைப்பு.

. அழைப்பு ஆரம்பித்தால் அதற்கு முடிவில்லை. உள்ளேயுள்ள அன்னையே அதை ஏற்றுக் கொள்வது அழைப்பு பூர்த்தியாவதாகும்.

****

878) அகந்தையைப் பிரகிருதி உற்பத்தி செய்தது. சைத்தியப் புருஷன் ஆன்மாவினுடையது. அகந்தையைக் கரைத்து சைத்தியப்புருஷனை நாடுதல் எனில், நம் செயல் மையம் இயற்கையிலிருந்து ஆன்மாவுக்குப் போகிறது எனலாம். இதன் முதல் அறிகுறியாக எல்லா இயற்கைச் செயல்களும் - எண்ணம், உணர்வு - நம்மால் ஆரம்பிக்கப்படுவது நின்று

ஆன்மா ஆரம்பிப்பதற்காக நாம் காத்திருப்பதாகும்.

நம் செயல் அழிந்தால், இறைவன் செயல் சைத்தியப்புருஷன்மூலம் வெளிப்பட்டு செயல்படும்.

. தெரிந்ததை மனிதனால் செய்யாமலிருக்க முடியாது.

. தெரிந்ததைச் செய்யும்பொழுது திறமைக்குள்ள பலன் வரும்.

. தெரிந்ததைச் செய்யாமலிருக்க வேண்டும் என்பதற்குத் தேவையான

கட்டுப்பாடு மனிதனுக்கில்லை.

. பத்து பேருள்ள இடத்தில் ஒருவருக்கு ராஜீவ் காந்தியின் பெண் பெயர் நினைவு வரவில்லை என்றால், அங்குள்ள எவருக்கும் அது தெரியாத சமயம், நமக்கு அது தெரியுமானால், அதைச் சொல்லாமலிருக்க முடியாது.சொல் நம்மை மீறி எழும். அதைச் சொல்லாமலிருப்பது, தெரிந்ததைச் செய்யாமல் இருப்பது. நமக்குத் தெரிந்ததைச் செய்யாமலிருந்தால் அன்னை செயல்படுவார். அவர் சைத்தியப்புருஷன் மூலம் செயல்படுவார்.

. நமக்கு முடியாத நேரம், தெரியாத நேரம் இயலாமையால் சும்மா இருக்கிறோம். அப்படிச் சும்மா இருக்கும்பொழுது அன்னை அபரிமிதமாகச் செயல்படும் நிகழ்ச்சிகள் ஏராளம். முடியாதபொழுது சும்மா இருப்பதைப் போல் முடிந்த பொழுதும் சும்மா இருப்பது கட்டுப்பாடு. அது முடிவான கட்டுப்பாடு. அது சரணாகதிக்குச் சமம்.

. அப்படியிருக்கும்பொழுது கிடைக்காதது கிடைக்கும்.

. கிடைப்பது பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கும்.

. கிடைப்பது எவ்வளவு பெரியது என்பது நம் பர்சனாலிட்டி சைஸைப் பொருத்தது.

. அமெரிக்க வரலாற்றில் அப்படிப் பெரிய மனிதர்களாக வந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். அந்த நாட்டு சூழ்நிலை இந்த மனப் போக்குக்கு ஏற்றது. $125 சம்பளமில்லாதவர் 15 அல்லது 20ஆண்டுகளில் 10 பிராஜெக்ட்டுக்கு உடையவராகி $190 மில்யன் பெறுமான கம்பனி நடத்துவது அமெரிக்காவில் நடந்த செய்தி. அங்கு இயல்பான சூழ்நிலையில் அதற்கேற்ப நடந்தவருக்கு அப்பலன் கிடைத்தது. இந்தச் சட்டத்தைப் புரிந்துகொண்டு, இதற்குரிய மனப்பான்மையுடன் இன்று இந்தியாவில் இப்படிச் செயல்படும் இளைஞருக்கு இதே பலன் உண்டு. 1989இல் 25 இலட்ச முதலுடன் தொழில் ஆரம்பித்தவர் இன்று 500 கோடி வியாபாரம் செய்வதை உலகம் அறியும்.

. "நான்" அழிந்தால் அன்னை எழுவார். நாம் - நான் அழிந்த நாம் - அகிலத்தை ஆள்வோம்.

. நம் செயல் என்பது பிரகிருதியின் செயல்.

. அது அகந்தையின் செயலாகும்.

. அகந்தையை உற்பத்தி செய்தது பிரகிருதி.

. சைத்தியப்புருஷன் ஆன்மாவின் பிரதிநிதி.

. பிரகிருதிக்கும் ஆன்மா உண்டு.

. பிரகிருதி செயல்படுவதால், அதன் ஆன்மாவும் செயல்படும்.

. அனுபவம் பிரகிருதிக்கு, அனுபவச் சாரம் ஆன்மாவுக்கு. . அந்த ஆன்மாவே சைத்தியப்புருஷன்.

. நாம் செயல்படும்வரை சைத்தியப்புருஷன் செயல்படாது.

. நாமோ, சைத்தியப்புருஷனோ இருவரில் ஒருவரே ஒரு சமயம்செயல்பட முடியும்.

. சைத்தியப்புருஷன் ஸ்ரீ அரவிந்தத்திற்கேயுரியது.

. எதுவும் ஆன்மா இல்லாமலிருக்க முடியாது.

. எனவே பிரகிருதியும் அப்படியே.

. பிரகிருதியின் ஆன்மா சாட்சியாக இருக்க முடியாது.

. அது செயலில் பங்கு கொள்ளும்.

. செயலில் பங்குகொள்வது அனுபவம்.

. அனுபவத்தின் சாரம் ஆத்ம விசாரம்.

. அனுபவம் கணத்தில் மறையும்.

. சாரம் மறையக்கூடியதில்லை.

. சாரம் சேர்ந்து உருவம் பெறும்.

. அவ்வுருவம் சைத்தியப்புருஷன் எனப்படும்.

. நாம் செயலற்றபின் ஆன்மா செயல்படும்.

. நம் செயல் அகந்தையின் செயல்.

. சைத்தியப்புருஷனின் செயல் இறைவனின் செயல்.

. அடிமனக் குகையிலுள்ள சைத்தியப்புருஷன் செயல்பட மேல்மனம் வருகிறான்.

. சைத்தியப்புருஷன் மேல்மனம் வருவது பரிணாமம்.

. பரிணாமம் இறைவனுக்கு ஆனந்தம் தருவது.

. அவ்வானந்தத்திற்காகவே சிருஷ்டி ஏற்பட்டது.

. மனத்தில் உதித்த சைத்தியப்புருஷன் வளரக்கூடியது.

. இதன் பாதை மூன்று: (1) நெஞ்சுக்குப் பின்னால் (2) ஈஸ்வரனை நோக்கிப்

போவது (3) உடலையடைவது.

தொடரும்...

**** 

ஜீவிய மணி

பரமனை நாடும் பக்தியின் பவித்திரம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியுமானால் அளவு கடந்த சக்தி உன்னுள்ளே எழும்.

கட்டுப்படும் உணர்வு பெருகி வரும் சக்தி.


 

62



book | by Dr. Radut