Skip to Content

11.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் 

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

48. வெட்கத்தைக் கடந்த மனநிலையை நாடு.

கோபிகைகள் வெட்கத்தைவிட்டு கிருஷ்ணனை நாடினர்.

மனிதன் விலங்காக இருந்து மனிதனாக மாறியபொழுது முதல் பெற்ற உணர்ச்சி வெட்கம்.

இறைவனுக்கும், மனிதனுக்கும் உள்ள தடைகள் சொத்து, குடும்பம்,பாசம், தர்மம், ஆசை என்பவைவெட்கம் அவற்றைக் கடந்தது.

அனைத்தையும் விடலாம்வெட்கத்தை விட முடியாது.

அதையும் விட்டவனுக்கே இறைவன் தரிசனம் உண்டு.

இதை ஏற்கும் மனம் பெரியது.

இதே கருத்தை வாழ்வை இலட்சியமாக நடத்துபவனுக்குப் பொருத்திக் கூறுவது இக்கட்டுரை.

வெட்கப்படுபவர்க்கு மேடையில் நின்று பெறுபவையில்லை.

பலரைச் சந்திக்க உடல் வெட்கப்படுபவர்க்கு அப்பிரபலமில்லை.

அடுத்த நிலையில் உணர்ச்சியின் வெட்கம்.

பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்பதும் நாவிற்கு வெட்கப்படக் கூடிய குறை என்பது குறள். அது நம் வேதம்.

அனுசுயாவும் தன் வெட்கத்தைக் காப்பாற்றும் வகையில் திருமூர்த்திகளை வென்றாள்.

சுதந்திர இயக்கத்திற்குப் பணம் வசூல் செய்ய வெட்கப்பட்டிருந்தால் சுதந்திரம் வந்திருக்காது.

1920 வாக்கில் குடும்பப் பெண்கள் பாட, கூச்சப்படுவார்கள். நடனம் ஆடுவது என்ற பேச்சேயில்லைஅது தேவதாசிக்குரியது என்பது அன்றைய கருத்து.

ருக்மணி அருண்டேல் அதை மீறி கலையை வளர்த்ததால் இன்று நடனக்கலை வீடு தோறும் முழங்குகிறது.

எந்த இலட்சியத்தை நிலைநாட்டவும் வெட்கம் தடை.

எவரும் செய்யாதவற்றைச் செய்ய வெட்கப்படுபவருக்கு எந்த

இலட்சியமும் இல்லை.

அன்னை முறைகளும், வழிகளும் எவரும் பின்பற்றாதவை.

அவற்றுள் சிலவற்றைப் பின்பற்ற வெட்கப்பட வேண்டும்.

திருமண விழாவுக்குப் போய் வந்தபின் 1 ஆண்டு தியானம் கரையும்.  இருந்தாலும் உறவினர் அவசியம் என்பவருண்டு.

1 ஆண்டு தியானப்பலனை இழக்க விரும்பாவிட்டால் திருமணங்களுக்குப் போக முடியாதுபோகாமல் சமூகத்தில் பழக வெட்கப்பட வேண்டும்.

திருமண விழாவிலும் தியானப் பலனழியாமலிருக்கும் நிலை அரிது.

திருமணங்கட்குப் போகாவிட்டால் பலரும் பலவகையாக நினைப்பார்கள்.

அவை மானம் போகும் விஷயங்களாகவுமிருக்கும்.

"இவரை எவரும் அழைக்கமாட்டார்' எனவும் நினைப்பார்கள்.

வெட்கத்தைக் கடந்த மனநிலை வாராமல் வெளியுலகில் தைரியமாகப் பழகமுடியாது.

மனம் வெட்கத்தைக் கடந்தால், வெட்கப்படக்கூடிய நிலை எழாது.

49. விரயத்தை விலக்கு.

பொருள்கள், சக்தி, நேரம், இடம், வாய்ப்பு ஆகியவற்றின் விரயத்தை முழுவதும் விலக்கியவர் வருமானம் இரண்டு மடங்காகும்.

உண்மையில் 10 மடங்காகும்.

18 ரூபாய் 80 பைசாவுக்கு வாங்கக்கூடிய பொருளை 18 ரூபாய் 90 பைசாவுக்கு வாங்காத மனநிலை விரயத்தை விலக்குவது.

நாம் வழக்கமாகச் செய்யும் வேலைகளுக்குத் தேவைப்படும் நேரத்தைக் குறித்து அவற்றைக் குறைக்க முயல்வது ஒரு முறை.

குளிக்கும் நேரம் 25 நிமிஷமானால், எதையும் விலக்காமல் கவனமாகக் குளித்தால் 25 நிமிஷம் சுருங்கும்.  1 மாதம் கழித்து 25 நிமிஷம் 15 நிமிஷமாவது தெரியும்அந்த 10 நிமிஷம் எனக்கு என்ன செய்யும் எனக் கேட்பதைவிட 1 மாதம் இதுபோல் எல்லா வேலைகளையும் efficient திறமையாக மாற்றினால் தினமும் 11½ மணியில் முடிந்த வேலை 8½ மணியில் முடியும். அதற்குள் வருமானம் 2 அல்லது 5 மடங்கு உயர்ந்திருப்பதைக் காணலாம்.

Energy சக்தியை அப்படிக் கவனித்தால், மற்ற எல்லா விஷயங்களிலும் விரயம் அறவே விலக்கப்பட்டால் முடிவில் நம்நிலை அடுத்தக் கட்டத்திற்கு வரும். 5 ஆண்டுக்குப்பின் வரவேண்டிய பிரமோஷன் இப்பொழுது வரும். Pay scale மாறி சம்பளம் கணிசமாக உயரும்.முனிசிபல் கௌன்சிலர் பதவியை மனம் நாடும்பொழுது MLAசீட் கிடைக்கும்.

. விரயத்தை விலக்க எடுக்கும் முயற்சி முழுமுயற்சி.

. இம்முயற்சி நம் திறமையை உயர்த்துவதுடன் நம் பர்சனாலிட்டியையும் உயர்த்தும்.

. நம் மனம் உயர்ந்த அளவுக்கு வாய்ப்பு நம் சூழலில் இல்லையெனில் நம்மை வேறு இடம் கொண்டுபோகும்.

. விரயத்தை விலக்கும்பொழுது நாம் பொருள்கட்கு முடிவான கவனம் செலுத்துகிறோம்.

கவனம் கடவுளின் பொறுப்பு.

. ஒரு விஷயத்தில் கிடைக்கும் பலன் கணிசமானது.

. எல்லா விஷயங்களிலும் கிடைக்கும் பலன் மிகப்பெரியது.

. விரயம் என்பது ஒரு தலைப்பு.

பல தலைப்புகளும் சேர்ந்து தரும் பலன் பிரம்மாண்டமானது.

பலனை நாம் இன்றுள்ள நிலையைக்கொண்டு நிர்ணயிக்க முடியாது.

திறமை உடலின் முயற்சி.

விரயத்தை விலக்க மனம் முயலவேண்டும்.

மனம் உடலைவிட ஏராளமாகப் பெரியது, முக்கியமானது.

விரயம் விலகிப் பலன் பெறாதவரில்லை.

திவாலான கம்பனி விரயத்தை விலக்கினால் இலாபகரமான கம்பனியாகும்.

இது சுலபமான முறை, பெரும்பலன் தரும்.

50. அளவுகடந்த அர்த்தமற்ற விரயத்திற்கு அர்த்தம் உண்டென அறியலாம்.

விரயத்தை விலக்கும் பலனை, விரயமும் தரும்என்பது ஆன்மீகச் சட்டம்; எதிரானவை உண்மை.

கட்டுப்பாடு பெரும்பலன் தரும்; சுதந்திரமும் அதே பலனைத் தரும்.

விரயம் செய்தால் எப்படிப் பலன் வரும்?

விரயம் உண்மை; பலன் வரும்என்பதும் உண்மை.

பலன் அதே நிலையில் வாராது; அடுத்த நிலையில் வரும்.

MPSC எழுதி சர்க்காரில் குமாஸ்தா ஆனவன் குமாஸ்தாவாகவே ஓய்வு பெற்றான். ஓயாது சூது ஆடுவான்சம்பளம் வீட்டிற்கு வாராது. மனைவி தன் தாயார் குடும்ப ஆதரவால் கடின வாழ்வை நடத்தினாள்.

இரண்டு பெண்கள் வயதிற்கு வந்தன.

இதுவரை சிறிய உதவிகளைச் செய்த தாயார் வீட்டில் இனியும் உதவி எதிர்பார்க்கும் நிலையில்லை.

மைத்துனனே இரு பெண்கட்கும் வரன் ஏற்பாடு செய்து அவன் செலவில் தலைக்கு 100 பவுன் சீர் செய்து பெரிய இடத்தில் திருமணம் செய்து வைத்தான்.

அதன்பிறகும் சூது தொடர்ந்தது.

சூது தவறு, விரயம் தவறு என்பதை மறுக்க முடியாது.

விரயம் (போகாறு) வெளியே போவதை அதிகப்படுத்துவதால், உள்ளே வருவது அதிகப்படும் என்பது ஒரு விதிஇன்று அமெரிக்காவில் விரயமாகும் உணவுப்பண்டம் ஒரு நாட்டைக் காப்பாற்றப்போதும் என்கிறார்கள்.

போக்கு அதிகமானால், வரவு அதிகமாகும் என்பது சட்டம்.

இதை நாம் புரிந்துகொள்ளலாம், பின்பற்ற முயலுதல் சரிவாராது.

அளவுகடந்த விரயம் அளவுகடந்து அழிப்பதைக் காண்கிறோம்.

அவர்கட்கும் ஆத்மாவில் அளவுகடந்த பலன் வரும்.

தத்துவத்தை அறிவது பலன் தரும்.

பின்பற்ற முயல விரும்பினால் அவர்கள் அறிய வேண்டியவை அதிகமாக உள்ளன.

இதை அரசியலில் அதிகமாகக் காணலாம்.

முறையாக உழைத்த தொண்டர், தொண்டர் தலைவராகி, MLA ஆவதுண்டு.

எந்த முறையையும் பின்பற்றாமல் சந்தர்ப்பம் கிடைத்தால் எந்தத் தலைவரையும் துரோகம் செய்து கட்சித் தலைவனாக வந்தவர் நிலையை ஆராய அரசியலோ, மனோதத்துவமோ போதாது; ஆன்மீக வாழ்க்கை விளக்கம் தேவை.

விரயத்தால் அழிந்தவர் பலர்.

விரயத்தால் பலன் பெற்றவர் சிலர்.

அதை அதிர்ஷ்டம் என்கிறோம்.

நமக்குப் புரியாததை அதிர்ஷ்டம் என்று கூறுகிறோம்.

அப்படிப் பலன் பெறுபவரிடையே ஆழ்ந்து ஒரு நல்ல value குணம் புதைந்திருக்கும்.

Life Response படிப்பவர் இதையறியலாம்.

எந்த உண்மைக்கும் எதிரான உண்மையுண்டு என்பது இவ்விஷயத்தில் உண்மை.

முதலாளி பெற்ற அதே பலனை அவன் தொழிலாளி பெறுகிறான்.

விரயம் பெரிய சாஸ்திரம்; எளிதில் படித்து முடிக்க முடியாது.

51. நமக்குள்ள திறமையை நமக்கு மறக்குமாறு நடக்க வேண்டும் - நாமே பாராட்டினால் அது வளரும்.

நாம் பாராட்டாததைப் பிறர் பாராட்டுவர்.

அழகானவர் தம்அழகை நினைந்து மகிழ்வார்.

ஏதோ காரணத்தால் தன்அழகை தான் உணருவதில்லையெனில் உலகம் அதைப் பாராட்டும்.

திறமைக்குப் பலன் உண்டு.

பலனை அதிகமாகக் கருதினால், திறமையைக் கருத முடியாது.

நாம் கருதாததைப் பிறர் கருதுவர்.

Silent will இல் நாம் கூறாததைப் பிறர் கூறுவதும், இங்கு நாம் பாராட்டாததைப் பிறர் பாராட்டுவதும் ஒன்றே.

1947 முதல் 1977 வரை இந்திய சர்க்கார் ஆயிரம் துறைகளில் முயன்று எல்லாத் துறைகளும் வெற்றிடமாக இருந்ததால், செய்ய வேண்டியவை ஏராளம்.

எவ்வளவு செய்தாலும், செய்ய வேண்டிய பாக்கி ஏராளமாக இருந்தது.

சர்க்கார் தான் செய்ததை நினைக்க நேரமில்லை.

உலகம் இந்தியா செய்தவற்றைக் கூர்ந்து கவனித்துப் பாராட்டியது.

நம்மைப் பிறர் பாராட்ட வேண்டும் எனில் எந்தத் திறமைக்காகப் பாராட்ட நாம் நினைத்தாலும், அது நம்மனத்தை விட்டகன்றால் உலகம் பாராட்டும்.

நாமே பாராட்டியபின் உலகம் பாராட்டாது.

உள்ள திறமையை எப்படி அறியாமலிருக்க முடியும்?

நம் திறமை ஒரு விஷயத்தில் 80%ஆனால் நாம் மேலும் பெற வேண்டியதை மட்டும் கருதினால், நாம் பெற்றதை நினைக்க முடியாது.

இது சிறப்பின் தன்மை.

சிறப்படைய ஒருவர் முயன்றால் அவர் முயற்சிக்கு முழுசக்தியும் செலவாகும்.

அதனால் உள்ளதைப் பாராட்ட சக்தியிருக்காது.

என்னுடைய திறமை எவர் கண்ணிலும் படவில்லையென வாழ்நாள் முழுவதும் குறைபடுபவர், திறமையேயற்றவராக இருப்பார்.

சுமார் 1 பக்கம் தவறில்லாமல் ஆங்கிலம் எழுதத் தெரியாதவர், உடனுள்ள அனைவரிடமும் தம் ஆங்கிலப் புலமையின் பெருமையைப் பறைசாற்றினார். கேட்டவர் அனைவரும் விபரம் தெரியாதவர் என்பதால் அதை ஏற்றுப் பாராட்டினர். புலமைக்குச் சோதனைக் காலம் வந்தது.

அஸ்திவார அறிவுமற்றவர் என அம்பலமானார்.

தங்கள் திறமையைத் தாங்களே வியந்துகொள்பவர் எந்தத் திறமையும் அற்றவர்களாக இருப்பார்கள்.

உலகம் நம்மைப் பாராட்ட வேண்டியது நமக்கு அவசியமில்லை.

நாம் திறமையைப் பெறுவது அவசியம்.

பெற்றதை முழுமைப்படுத்தினால் அதைப் பெறலாம்.

அம்முயற்சி பெருவெற்றி பெறும்.

நம் சக்தியனைத்தும் அதில் செலவானால் நம்மால் நம்மைப் பாராட்ட இயலாது.

நாம் அதை மறப்போம்.

நாம் மறந்ததை உலகம் ஏற்கும்.

52. சுயநலமிக்குச் சேவை செய்யாதே.

சுயநலத்தை எவரும் விரும்பமாட்டார்.

பிறர் சுயநலத்திற்குச் சேவை செய்வது நாம் சுயநலமாக இருப்பதைவிடத் தவறு. ஏனெனில் அது வளரும்.

எதைக் கவனித்தாலும், பாராட்டினாலும் அது வளரும்.

எதுவும் அனந்தம்; சுயநலமும் அனந்தம்.

பிறர் சுயநலத்தை வளர்ப்பதால் வளர்வது சுயநலம். அது நல்லதன்று.

அப்படிச் செய்யும் சேவை அவருக்குத் தப்பபிப்பிராயம் தருகிறது.

சுயநலம் தவறன்று, சரி என்ற முடிவுக்கு அவர் வருகிறார்.

அவர் சுயநலத்தை நாம் வளர்ப்பதால், கரைய வேண்டிய நம் சுயநலம் நம்மைச் சுடும்.

வேலை செய்யாத வேலைக்காரனுக்குச் சம்பளம் கொடுத்தால்

வேலையின் மனம் புழுங்கும். அதனால் நடந்துவரும் நல்ல வேலை கெடும்.

படிக்காத மாணவர்கட்கு மார்க் போட்டு பாஸ் செய்த பேராசிரியர் தம் மகன் படிக்க மறுப்பதைக் கண்டு திகைத்தார்அவர் தவறாகப் பாஸ் போட்டதில் பலன் பெற்றவன் படிக்காதவன். அதனால் படிக்காத பழக்கம் வளர்கிறது.

அது அதிகமாகத் தன்வீட்டில் எழும் என்ற சட்டம் அவர் அறியாதது.

திருமணமானவனுடன் வாழ விரும்பினால், அந்த விருப்பம் பூர்த்தி யாகாமல் தனக்குத் திருமணமானபின் தன் எண்ணம் தன்வாழ்வில் வெளிப்படும்என அறிவதில்லை. இரண்டு திருமணம் தன்வாழ்வில் எழுவதின் அர்த்தம் புரியாது.

சுயநலம் கூர்மையானது.

கையால் தொட்ட பொருள் தன்னுடையதுஎன நினைப்பார்.

தான் வேலை செய்யும் கம்பனி தனக்கு வேண்டும்எனத் தோன்றும்.

அந்த எண்ணங்கட்குத் துணைப் போகக்கூடாது.

விலை பேசி நண்பருக்காக நிலம் வாங்கியவர் அது தனக்கு வேண்டும் என்றார்.

சுயநலத்தின் சுயரூபம் கடூரமானது.

கணவன், மனைவி, பெற்றோர், குரு, நண்பன், அண்ணன் என்பதால் சுயநலமிக்கு வேலை செய்து நஷ்டப்பட்டால், அத்துடன் விடாது.

அந்த நினைவு அழியும்வரை அது நம்மைச் சுடும்.

மனிதனால் தாங்க முடியாத அளவுக்குச் சுடும்.

யோகத்தை மேற்கொள்பவர்க்கு அது பயன்படும்.

குடும்பஸ்தனை அப்பழக்கம் அழித்துவிடும்.

தெரியாமலோ, வேறு வழியில்லாமலோ சுயநலத்திற்குச் சேவை செய்தால் அது உயிரையே எடுத்துவிடும்.

யோகி அதைச் சுயநலமிக்குச் செய்தால் சுயநலமியின் உயிர் போகும்.

உலகில் கடுமையானது இரண்டு; கயமை, சுயநலம் என்கிறார் பகவான்.

எக்காரணத்தை முன்னிட்டும் அதற்குச் சேவை செய்வது தவறு.

அண்ணனுக்காகத் திருடலாமா?

அதை விட மன்னிக்க முடியாத குற்றம் சுயநலத்திற்குச் சேவை.

நல்லதிற்கே சேவை செய்வதைவிட இறைவனுக்குச் செய்வது, சேவை செய்வது மேல் என்று கூறும்பொழுது சுயநலமிக்குச் சேவை செய்வது பாவம்; அறிவீனம்.

53. முழுச்சுயநலமிக்கு முழுமையாக ஆதரவு கொடு.

முன்கூறியதும், இதுவும் எதிரானவை. இரண்டும் உண்மை.

முழுச்சுயநலமிக்கு ஆதரவுகொடு என்றால் சுயநலம் நல்லது எனப் பொருளன்று.

நாம் சுயநலமியைத் தேடிப் போகவேண்டும் எனவும் பொருளில்லை.

நம்மைத் தேடி சுயநலமி வந்தால் அது நம் சுயநலத்தின் பிரதிபப்லிபு என்பதை ஏற்க வேண்டும். இது ஸ்ரீ அரவிந்தத்தின் அடிப்படை.

அதுவும் தவிர்க்க முடியாத உறவானால், நாம் அதைத் தவிர்க்க முயலக் கூடாது.

தவிர்த்தால், உடனே அதைவிடப் பெரிய சுயநலமி வந்து சேருவான்.

யோகச் சட்டம் என்னவென்றால், நமக்கு அமைந்துள்ள சந்தர்ப்பத்தை நாம் ஏற்று அதன் அனுபவத்தைப் பெற்றால் அது நம்மை விட்டு முடிவாகப் போய்விடும்.

சுயநலமான தம்பி, பார்ட்னர், தம்பதியிருந்தால், அவர்கள் மாற விரும்பினால் அவர்கள் சுயநலம் பூதாகாரமாக வளரும்.

எதிர்ப்பு வளர்க்கும்; ஏற்றால் அடங்கும்.

இயல்பாக உள்ள சுயநலத்தை எதிர்க்காமல் ஏற்பது விரதம்.

எதிர்க்காமல் அமைதியாக ஏற்றால் குறைந்த காலத்தில் அது விலகும்.

சுயநலமி சீக்கிரம் விலக, அவன் சுயநலத்தை எரிச்சல்படாமல்

அமைதியாக, இனிமையாக, இயல்பாக ஏற்க வேண்டும்.

அதற்குப் பொறுமை அதிகம் வேண்டும்.

அடுத்தவர் சுயநலத்தை ஏற்கிறோம் என்ற எண்ணம் அதை வளர்க்கும்.

இது நம்சுயநலம் என்ற ஞானம் பொறுமை தரும்.

பொறுமையால் நம்சுயநலம் சீக்கிரம் போகும் என்ற தெளிவு இனிமை தரும்.

முழுச் சுயநலமிக்கு முழுஆதரவு கொடுப்பது நம் முழுச் சுயநலத்தை

விரைவாக விலக்குவதாகும்.

இது சுயநலத்திற்கு மட்டும் உரிய சட்டமன்று.

நமக்குத் தேவையான குணங்களை அனுபவத்தால் பெறும் சந்தர்ப்பங்களை வாழ்க்கையும், வாழ்க்கைமூலம் அன்னையும் வழங்குகின்றார்.

அது எரிச்சல், கசப்பு, விரக்தி; எதிர்ப்பு கொடுத்தால் அனுபவம் பெறத் தகுதியற்றவர் நாம் என்றாகும்.

இயல்பாக அமைந்த சந்தர்ப்பங்களை இயல்பாக, முடிந்தால் இனிமையாக ஏற்று, அமைதியாக அனுபவித்து, ஆர்ப்பாட்டமில்லாமல் அனுப்பி வைக்க வேண்டும்.

பெற்றோர், பிள்ளைகளுக்கு இது முக்கியம்.

இதன் பெருவிசேஷம் தம்பதி.

விவாகரத்து செய்பவர் அடுத்த தம்பதி அதேபோல் மேலும் மோசமாக இருப்பதைக் காண்கின்றனர். முதலில் ரத்து செய்த அதே தம்பதியை பல ஆண்டு கழித்து மீண்டும் மணப்பது பரவலான பழக்கம்.

வருவதை ஏற்று அனுப்புவது பக்குவம்.

54. பெருமை தரும் அடக்கம் பெரியது.

அறிவில்லாதவர் அடக்கமாக இருப்பது அடக்கமாகாது.

It is the vegetarianism of a toothless tiger.

அறிவுஎன ஏற்பட்டால், அது தன்னை வெளிப்படுத்தியபடியிருக்கும்.

ஒளியால் ஒளிந்து கொள்ள முடியாது. அது தானிருப்பதை வெளிப்படுத்- தியபடியிருக்கும்இது ஒளியின் இயல்பு; அறிவும் அதைப்போன்றது.

அடக்கம் இயல்பன்று; நாகரீகம் வந்தபின் மனிதன் கற்றது.

வாழ்வு (existence ) எனில் சக்தி சலனத்தால் செயல்படுவது.

மேட்டிலிருந்து நீர் பள்ளத்திற்குப் போவதைப்போல், தெளிவான அறிவு தெளிவில்லாதவரை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது இயல்பு.

மேட்டில் நீரைத் தேக்க முயல வேண்டும். தேக்கினால் அதற்கு சக்தி (power) உண்டு. தானே தண்ணீர் மேட்டில் சேராது.

மனம் அறிவின் சிறப்பை அறிந்து, அதை வெளிப்படுத்தாமலிருப்பது நாகரீகம் என உணர்ந்து, அறிவை வெளிப்படுத்தாமலிருப்பது அடக்கம்.

வெளிப்படும் அறிவு (sharp) காரமாக இருக்கும்.

பிறர் பொருளை அபகரிக்க (extortion) அது பெரும்பயன்படும்.

வறுமையுள்ள இடத்தில் அறிவு வன்முறையை நாடும்.

தானே அடக்கம் வாராது; முயன்று பெற வேண்டும்.

நாம் அடக்கமாக இருக்கிறோம்என அறியாத அளவுக்குள்ள அடக்கமே அடக்கம்.

பரம்பரைப் பணக்காரனுக்குத் தன்செல்வம் நினைவு வாராது.

பரம்பரையாகப் பிரபலமான அந்தஸ்துடையவர்க்கு அப்பெருமையிருக்காது.

தாம் அக்குடும்பத்தினர்என அறிமுகப்படுத்திக் கொள்ளத் தோன்றாது.

அளவு கடந்து படித்தவர்க்கு தம்படிப்பின் உயர்வு நினைவு வாராது.

தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த வைஷ்ணவ வித்வான், ஈடு வியாக்கியானத்தில் பாண்டித்யம் பெற்றவர் 50 ரூபாய் சம்பளத்தில் தமிழாசிரியராக இருந்தார். தம் பாண்டித்யத்தின் பெருமை அவர் அறியாததுஅது வெளிவந்தவுடன் அவரைப் பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பதவியில் அமர்த்தி 260/- ரூபாய் சம்பளம் கொடுத்தனர்.

அடக்கம் அடக்கமானால் அது பெருமை தரும்.

பட்டம் பெறாத படிப்பின் பெருமையை உலகம் அறியாது.

தானும் அதைப் பாராட்ட மறுத்தால் அதற்குரிய பெருமை தேடிவரும். அழகு, செல்வம், அந்தஸ்து, பிரபலம், உடல்வலிமை, பாண்டித்யம் போன்றவற்றைப் பெற்றவர் அதைப் பாராட்டாமலிருப்பதுண்டு; அது அரிது. தகப்பனார் பெயர் தமிழ்நாடு முழுவதும் தெரியும் என்றாலும் தன்னை அவர் மகன் எனக் கூறி அறிமுகப்படுத்தத் தோன்றாத அடக்கம் உண்மையான அடக்கம்.

55. எதைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறோமோ, அதை விட்டுக் கொடுக்க வேண்டும்.

குடும்பம், உத்தியோகம், பணம், நாணயம் என ஏதாவது ஒன்றை மனிதன் பலமாகப் பிடித்துக்கொண்டிருப்பான். அவன் உயிர் அதிலிருக்கும். அதுவே ஜீவநாடி. அது போனால் எல்லாம் போய்விடும்நண்பன், சீட்டு,ரேஸ், வைப்பாட்டி, கருமித்தனம், நடிப்பு, பொய்க் கதையைப் பொருத்தமாகச் சொல்லுதல், உரிமையற்ற சௌகரியத்தை முழுமையாக அனுபவிப்பது, மந்திரத்திலுள்ள நம்பிக்கை, தெய்வபக்தி, பிரார்த்தனை, விருந்தினரை உபசாரம் செய்வது, வேலையைப் பவித்திரமாகச் செய்வது, உயர்ந்த தமிழ்ச் (phrases) சொற்களை உருவாக்குவது, கதை படிப்பது, T.V பார்ப்பது, பேரக்குழந்தையைப் பேணுவது, தாயார்சொல்லைத் தலைமேல் ஏற்பது, மனைவிசொல்லைத் தட்டாதது, கட்சி, கொள்கை என வாழ்வில் பல உண்டு. உயிர் போனாலும் மெய் சொல்லத் தவறுவதில்லை, உயிரைக் கொடுத்தாலும் ஒரு மெய் சொல்லக் கூடாது என்ற தீர்மானம் ஆகியவற்றுள் ஒன்றை மனிதன் ஆணித்தரமாய்ப் பிடித்திருப்பது வழக்கம்.

அன்னையை அணுக இவற்றுள் எதுவும் தடை.

மெய் உயர்ந்தது; பொய் பொல்லாதது; மெய் அன்னையை அணுக உதவும்; பொய் தடைசெய்யும்; மெய்யும் அன்னையை அணுக ஓரளவுதான் உதவும்; 80 பங்கு, 90 பங்கும் உதவும்; 100 பங்கு அணுக அதுவும் பயன்படாதுமெய்யைக் கெட்டியாகப் பிடித்து 90 பங்கு அன்னையை அணுகியபின் கெட்டியாகப் பிடித்திருப்பது தடைஎனப் புரியும்மெய் நமக்கு இயல்பாக அமையவில்லை என்பதால் கெட்டியாகப் பிடித்திருக்கிறோம்என்பது உண்மைநாம் மெய்யைக் கைவிட்டாலும், பிடித்துக்கொள்ளாவிட்டாலும், மெய் நம்மை விட்டகலவில்லை எனில்

நமது ஜீவியம் மெய்க்கு உரிய ஜீவியம் எனப்பொருள்.

. அதனால் பிடித்திருப்பது, பிடி தடை.

. எந்த நல்லதும் இயல்பாக அமைவது சரி.

. மெய்யும் அதற்கு விலக்கன்று.

. நாம் சரணாகதியை ஏற்றால், மனம் அதில் மட்டுமிருந்தால் அன்னையை அடைவோம்.

. நாம் அன்னையை அடைந்தபின், அன்னை நம்மை ஏற்று, நம்மைப் பிடித்துக் கொள்கிறார்.

. அது பேரருள்.

. அதுவும் அன்னையாவதாகாது.

. அன்னையாக நாமே மாற சரணாகதியும் தடை; இரண்டறக் கலப்பதும் ஓரளவு தடை; அன்னையே மறந்துபோவது நாம் அன்னையானதற்கு அறிகுறி.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மாவுக்கு அருளை அடையாளம் தெரியும் என்பதால் அருள் புரியும் நேரம், ஆன்மா வெளிப்படும் நேரமாகும். வெளிவரும் ஆன்மா, சைத்தியப்புருஷன். ஜீவாத்மாவால் மேலே வரமுடியாது.

அருள் செயல்படும் நேரம் ஆன்மா வெளிப்படும் நேரம்.


 


 book | by Dr. Radut